ஜேர்மனியின் கூட்டாட்சித் தேர்தலும் வர்க்கப் போராட்டம் தீவிரமடைதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியின் கூட்டாட்சித் தேர்தலின் வேளையில் முன்னெப்போதுமில்லாத வகையில் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்கிறது.

பேர்லினில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவமனை ஊழியர்கள் (WSWS media)

ஜேர்மன் இரயில் தொழிலாளர்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து மூன்று முறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து பல நாட்கள் முடங்கியது. பின்னர், வேலைநிறுத்தக்காரர்களின் போர்க்குணம் அதிகரிக்கையிலும் மற்றும் இரயில் நிர்வாகம் குறைந்த சலுகைகளை அறிவித்த போதிலும் கடந்த வாரம் இரயில் ஓட்டுனர்கள் சங்கம் (GDL) திடீரென நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

உண்மையான ஊதியத்தில் கடுமையான குறைப்பை தொழிற்சங்கம் ஏற்றுக்கொண்டது. 32 மாத காலப்பகுதியில் சராசரியாக 1.8 சதவிகித அதிகரிப்பு வழங்கப்படுவதாக கூறப்படுவது வேகமாக 4 சதவீதத்தை நெருங்குகின்ற தற்போதைய பணவீக்க விகிதத்தில் பாதியை கூட ஈடுசெய்யத் தவறிவிட்டது. GDL நிறுவன ஓய்வூதிய திட்டத்தில் இரண்டு அடுக்கு முறையை அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டது. முந்தைய மேலதிக ஓய்வூதியம் அடுத்த ஆண்டு முதல் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த வாரம், ஜேர்மன் பொது சேவை தொழிற்சங்கமான வேர்டி பேர்லின், சரிட்டி மற்றும் விவாண்டஸ் ஆகிய இரண்டு முக்கிய மருத்துவமனை ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயல்கிறது. விவாண்டஸில், பொதுச் சேவைக்கான பொது ஒப்பந்தத்துடன் (TvöD) துணைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியத்தை ஒன்றிணைப்பது பிரச்சினைக்குரியதாக இருக்கையில், வேர்டி கடந்த சனிக்கிழமை தனது வேலைநிறுத்த நடவடிக்கையை முடித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.

இந்த வார இறுதியில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், செவ்வாயன்று வேர்டி 'விவாண்டஸ் நிர்வாகம் ஒரு நகர்வை மேற்கொண்டு' ஒரு புதிய சலுகையை வழங்கியதை வரவேற்றது. இது இப்போது பரிசோதிக்கப்படுகின்றது என்று விவாண்டஸ் மேற்பார்வை வாரியத்தின் துணைத் தலைவராக இருக்கும் வேர்டி பேச்சுவார்த்தையாளர் மைக்க ஜேகர் அறிவித்தார். அவர் மேலும்: 'வேலைநிறுத்தத்தை குறைக்க அனுமதிக்கும் தீர்வுகளை விரைவாக எட்டுவோம் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்' எனக் கூறினார்.

வேர்டி பேர்லினில் வேலைநிறுத்தத்தை கழுத்தை நெரிக்கின்றது. ஏனெனில் காட்டுத்தீ போல் பரவி வளர்ந்து வரும் மருத்துவமனை ஊழியர்களின் அணிதிரட்டல் குறித்து தொழிற்சங்கம் கவலை கொண்டுள்ளது. இரண்டு அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் தொழில்துறை நடவடிக்கை பல தொழிலாளர்களால் கடைசியாக சுகாதாரத் துறையில் நிலவும் சகிப்புத்தன்மையற்ற வேலை நிலைமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. இந்த நிபந்தனைகள் பல வருட ஆள்குறைப்பு, தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் இலாபம் ஈட்டும் நோக்கம் ஆகியவற்றின் விளைவாகும். மேலும் கோவிட்-19 தொற்றுநோயின் போக்கில் இது கணிசமாக மோசமடைந்துள்ளன.

அதே நேரத்தில், வேர்டி சுகாதாரத்துறையில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முற்படும் அதே வேளையில், IKEA வில் நாடு தழுவிய குறுகிய கால 'எச்சரிக்கை' வேலைநிறுத்தத்தை அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன் தளபாட நிறுவனம் ஜேர்மனியில் 18,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் சராசரி ஊதிய அளவுகள் மிகக் குறைவும் மற்றும் சமீபத்திய மாதங்களில் இலத்திரனியல்மயமாக்கல் மற்றும் வளர்ந்து வரும் இணையவழி வர்த்தகம் காரணமாக கூடுதல் பணிச்சுமையால் ஊழியர்கள் சிரமப்பட்டனர்.

பொறியியல் மற்றும் மின் துறையில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கடந்த வாரம், Siemens Energy இல் 2,600 வேலைகளை குறைக்க IG Metall தொழிற்சங்கம் ஒப்புக்கொண்டது. பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் கண்டன பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அங்கு சீமென்ஸ் தொழிலாளர்கள் தாம் போராடத் தயார் என்பதை தெளிவுபடுத்தினர். ஆனால் IG Metall மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிற்சாலை தொழிற்சங்க குழுக்களுக்கு வேலைகளைப் பாதுகாக்க ஒரு தீவிர போராட்டத்தை நடத்தும் நோக்கம் இருந்ததில்லை.

அனைத்து இடங்களிலும் இதுதான் நிலைமை. ஜேர்மன் வாகனத் தொழிலில் மட்டும் அரை மில்லியன் வேலைகள் குறைக்கப்பட உள்ளன. தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் அனைத்தையும் இல்லாதொழிக்க ஆளும் வர்க்கம் தொற்றுநோயைப் பயன்படுத்துகிறது. தொழிலாளர்கள் தங்கள் வருமானம், வாழ்வாதாரம் அல்லது அவர்களின் வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலையில், ஆளும் உயரடுக்கு தொற்றுநோயை ஒரு புதிய சுற்று செல்வமயமாக்கலுக்குப் பயன்படுத்துகிறது.

கடந்த வாரம் சார்லூயிஸில், 3,000 க்கும் மேற்பட்ட போர்ட் தொழிலாளர்கள் வேலை வெட்டுக்கு எதிராக தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த ஆண்டு 50 வது ஆண்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடிய இந்த தொழிற்சாலை, வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. தொழிற்சாலையின் 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்களில், 2,000க்கும் மேற்பட்டோர் உள்ளூர் தொழிற்சாலை தொழிற்சங்க குழு மற்றும் IG Metal இன் நெருக்கமான ஒத்துழைப்புடன் நிர்வாகத்தால் ஏற்கெனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சுரங்க மற்றும் எஃகு தொழில்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட இப்பகுதியில் உள்ள பல மக்கள் கோபமாகவும் ஆழ்ந்த கவலையுடனும் உள்ளனர். பிராந்தியத்தில் ஃபோர்ட் மிகப்பெரிய தொழில்வழங்குனராகும். இதனுடன் வாகன விநியோகத் தொழில் மற்றும் பொருளாதாரத்தின் பிற துறைகளில் ஆயிரக்கணக்கான வேலைகளும் ஆபத்தில் உள்ளன. ஆலையை பாதுகாக்க சுமார் 14,000 கையொப்பங்கள் சமீபத்திய மாதங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் போர்ட் நிர்வாகம் தனது மூடல் திட்டங்களை தொடர்ந்து இரகசியமாக வைத்திருக்கிறது. அதே நேரத்தில் IG Metall அனைத்து வாகன தொழிற்சாலைகளிலும் அனைத்து தொழிலாளர்களின் இணைந்த போராட்டத்தை நடத்த மறுக்கிறது.

அதே நிலைமை Daimler, Audi, Bosch, BMW மற்றும் Volkswagen நிறுவனங்களிலும் நிலவுகிறது. Daimler கடந்த இலையுதிர்காலத்தில் அதன் உலகளாவிய வேலை வெட்டுக்களை 15,000 இலிருந்து 30,000 ஆக இரட்டிப்பாக்குவதாக அறிவித்தது. கோடையில், கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் Continental இல் உள்ள தொழிலாளர்கள் வேலை வெட்டு அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு தொடர் ஆர்ப்பாட்டங்களுடன் போராடினர்.

உலகம் முழுவதும் எதிர்ப்பு அதிகரிக்கின்றது. வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள உலகின் நான்காவது பெரிய பாரவூர்தி உற்பத்தியாளரான அமெரிக்க வொல்வோ பாரவூர்தி வேலைநிறுத்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த கோடையில் தமது வேலைநிலைமைகளையும் ஊதியங்களையும் மோசமடைய செய்யும் ஒரு புதிய உடன்படிக்கைக்கு எதிராக மூவாயிரம் தொழிலாளர்கள் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில், IG Metall அமெரிக்க சகோதர அமைப்பான UAW ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக அவர்கள் பெரும்பான்மையுடன் வாக்களித்தனர்.

பெல்ஜியத்தில் வொல்வோ கார் தொழிலாளர்கள், நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையேயான வேலைவாரத்தை நீட்டிக்கும் ஒரு ஒப்பந்தத்தை எதிர்த்தனர். ஜூன் மாதத்தில், பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான GlaxoSmithKline இல் உள்ள தொழிலாளர்கள் தற்காலிக தொழிலாளர்கள் பணிநீக்கம் மற்றும் சமூக நலன்களுக்கான வெட்டுக்களை எதிர்த்து 11 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

துருக்கியில், Tes-Is தொழிற்சங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட மோசமான வேலை நிலைமைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான மின்துறை ஊழியர்கள் தன்னிச்சையான வேலைநிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கனடாவில், ஒன்ராறியோவின் சட்பரியில் உள்ள Vale சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் ஆதரளித்த ஒப்பந்தத்தை நிராகரித்து இரண்டு மாதங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வர்க்கப் போராட்டத்தின் இந்த வளர்ச்சி ஜேர்மனியில் தேர்தல் பிரச்சாரத்தில் தாக்கங்களைக் கொண்டுள்ளது. நாட்டின் அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும் தொழிலாளர்களிடமிருந்து வளர்ந்து வரும் எதிர்ப்பிற்கு ஒன்றாக இணைந்துகொண்டு, ஒரு பொது முன்னணியை உருவாக்குவதன் மூலம் பதிலளித்து வருகின்றன. அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு கொரோனா பிணை எடுப்பு என்று அழைக்கப்படுவதை ஆதரித்தனர். இது நூற்றுக்கணக்கான பில்லியன்களை பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கு வழங்கியது. இப்போது அவர்கள் அனைவரும் சமூக வெட்டுக்கள், சிக்கன நடவடிக்கைகள், மேலதிக கடன்படுதலை நிறுத்துதல் போன்றவற்றின் மூலம் அந்த பில்லியன்களை தொழிலாள வர்க்கத்திலிருந்து பிளிந்தெடுப்பதற்கு ஆதரவாக உள்ளனர். அதே நேரத்தில், இராணுவத்திற்கான செலவு மேலும் அதிகரிக்கப்படுகிறது.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இந்த அனைத்து கட்சி முன்னணியில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கப்படுகிறது. அவர்கள் பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். சந்தைப்பங்கு மற்றும் இலாபங்களுக்கான உலகளாவிய போராட்டத்தில் பெரிய வணிக நலன்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அதற்கான சிறந்த இடத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். அவர்கள் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக இணைந்து இயங்கினால் இலாபங்கள் மற்றும் பங்கு விலைகள் வேகமாக உயரும் என்று நிர்வாகிகளை நம்ப வைக்க விரும்புகிறார்கள்.

அவ்வாறு செய்வதன் மூலம், வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூகநிலைமைகளைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு தீவிரமான போராட்டத்தையும் ஒடுக்க அவர்கள் தொழிற்சாலை தொழிற்சங்க குழுக்கள் மற்றும் அங்குள்ள தமது பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அவர்களின் விரிவான அமைப்புகளைப் பயன்படுத்துகின்றனர். போலி எதிர்ப்புகள் உள்ளடங்கிய இந்த மூலோபாயம் விரக்தியை மட்டுமே பரப்ப உதவும். இதில் தொழிலாளர்களை ஒருவரை ஒருவர் பிரித்து ஊக்குவிக்கும் உள்ளூர் சார்ந்த பிரச்சாரங்களும் அடங்கும். தொழிற்சாலைகளில் வளர்ந்து வரும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும், அடக்கவும் தொழிற்சங்கங்களால் மேலும் மேலும் இயலாதுள்ளது.

இந்த சூழ்நிலையில், சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) தேர்தல் பிரச்சாரம் பெரும் அரசியல் முக்கியத்துவத்தை பெறுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக தலையிட்டு சுதந்திரமான நடவடிக்கை குழுக்களை உருவாக்க போராடியுள்ளது. அவ்வாறு செய்யும் போது, இந்தப் போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சர்வதேச அணிதிரளலின் ஒரு பகுதியாகும் என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தியுள்ளோம்.

உலகம் முழுவதும், தொழிலாளர்கள் ஒரே பன்னாட்டு நிறுவனங்களையும் நிதிய நலன்களையும் எதிர்கொள்கின்றனர். அதனால்தான் அவர்கள் தங்களை பிரிவுபடுத்த அனுமதிக்க முடியாது. சர்வதேச அளவில் தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தால் மட்டுமே அவர்கள் தங்கள் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க முடியும். இதற்கு தொழிற்சங்கங்களுடனான உடைவும் மற்றும் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பை (IWA-RFC) கட்டியெழுப்ப வேண்டும்.

அதே நேரத்தில், தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களுக்கு அரசியல் தலைமையை உருவாக்கவும் மற்றும் வழங்குவதற்கு அவர்களின் சொந்த கட்சி தேவை என்று நாங்கள் கூறியுள்ளோம். பெருநிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுடனான தற்போதைய மற்றும் வரவிருக்கும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு தெளிவான மற்றும் கொள்கை ரீதியான முன்னோக்கை வழங்குவதற்கான ஒரு சர்வதேச, சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரேயொரு கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

சமுதாயத்தின் அனைத்து துளைகளூடாகவும் ஊடுருவி அனைத்து நாடாளுமன்ற கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் பாதுகாக்கப்படும் இலாபத்தை அதிகரிப்பதற்கும் மற்றும் கட்டுப்பாடற்ற செல்வசெழிப்பூட்டலுக்குமான முதலாளித்துவ கொள்கைக்கு எதிராக உழைக்கும் மக்களின் தேவைகளை முன்வைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: 'வங்கிகள் மற்றும் பெரிய பெருநிறுவனங்களை கையப்படுத்தி அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைக்காமல் எந்த சமூக பிரச்சனையும் தீர்க்கப்பட முடியாது. அவர்களின் இலாபங்கள் மற்றும் செல்வம் பறிமுதல் செய்யப்பட வேண்டும் மற்றும் கடந்த ஆண்டில் அவர்களுக்கு வழங்கப்பட்ட ட்ரில்லியன்கள் திருப்பிப்பெற வேண்டும். உலகப் பொருளாதாரம் ஒரு விஞ்ஞாரீதியானதும் பகுத்தறிவுமிக்க திட்டத்தின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும்”.

Loading