அற்புதமான இதயம்-தொற்றுநோய்க்கு எதிரான மனித சுவர்" என்பது முதலாளித்துவ அமைப்பின் மிலேச்சத்தனத்திற்கு ஐசிங் பூசும் இயக்கமாகும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) தலைமையில் செப்டம்பர் 2 முதல் உத்தியோகப்பூர்வமாக தொடங்கப்பட்ட “அற்புதமான இதயம் – தொற்று நோய்க்கு எதிரான மனித சுவர்”, கொரோனா தொற்றுநோய் சம்பந்தமாக இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கும் சமூகப் படுகொலை கொள்கை மற்றும் அதன் புறநிலை தோற்றுவாயான முதலாளித்துவ முறையின் குற்றவியல் பண்பையும் மூடிமறைத்து, தொற்றுநோய்க்கு எதிரான ஒரு உண்மையான வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு எதிராக வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு பிற்போக்கு இயக்கமாகும்.

செப்டம்பர் 2 அன்று, பிரபல நடிகர்கள் மற்றும் மருத்துவர்களை இணைத்துக்கொண்டு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “அற்புதமான இதயம்” இயக்கத்தை வழிநடத்தும் போலி-இடது மு.சோ.க. தலைவர்களில் ஒருவரான துமிந்த நாகமுவ, “கொரோனா தொற்றுநோய் முழு மனிதகுலத்தையும் ஒரு பாரதூரமான துன்பத்திற்குள் இழுத்துப் போட்டுவிட்டுள்ளது” என்றும், எனவே இதை தோற்கடிப்பது ஒரு “பொதுவான கூட்டுப் பொறுப்பு” என்றும் குறிப்பிட்டார்.

துமிந்த நாகமுவ (சிவப்புச் சட்டை), அரசாங்க அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது

மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக இலாப உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் முதலாளித்துவ முறையானது, தொற்றுநோயை முழுமையாக ஒழிப்பதற்கு அவசியமான ஒரு விஞ்ஞானபூர்வமான உலகளாவிய வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிராக நின்று, இந்த மனித துன்பத்தை அதுவே உருவாக்கிவிட்டுள்ளது, என்ற உண்மையை நாகமுவ மூடி மறைக்கின்றார். தொற்று நோயை தோற்கடிப்பது “பொது கூட்டுப் பொறுப்பாகும்” எனக கூறும் போது, இப்போது ஏற்பட்டுள்ள மனித அழிவுக்கு, “பொதுவில்” ஒட்டு மொத்த வெகுஜனங்களும் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.

நாகமுவ உட்பட “அற்புதமான இதயம்” என்ற இயக்கம் மூடி மறைக்கும் கொடூரமான உண்மை

செப்டம்பர் 26 நிலவரப்படி, இலங்கை உட்பட உலகம் முழுவதும் 4.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதுடன் மேலும் 231 மில்லியனுக்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உத்தியோகபூர்வ அறிக்கைகள் காட்டுகின்றன. ஆனாலும், உலகெங்கிலும் உள்ள தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றவாறு, கொரோனா தொற்றுநோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை, உண்மையில் குறைந்தது 15 மில்லியன் ஆகும். நிலைமை இவ்வாறானதாக இருக்கும் போது, முதலாளித்துவ ஊடகங்களோ, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் “குணமாகிவிட்டார்கள்” என்று பெருமை பேசி, “ஒருவர் நினைப்பது போல் வைரஸ் பாரதூரமானது அல்ல” என்றும் பிரச்சாரம் செய்வதற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ளன.

எனினும், இவ்வாறு “குணமாகிவிட்டதாக” கூறப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள், அல்லது கிட்டத்தட்ட அனைவருமே, கொரோனா தொற்றின் விளைவாக, நீண்டகால சிக்கல்களால் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

இந்த வைரஸ் தினமும் கிட்டத்தட்ட 10,000 பேரை கொன்று, மேலும் அரை மில்லியன் மக்களை பாதித்து உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இருந்தபோதிலும், ஒவ்வொரு நாட்டின் ஆட்சியாளர்களும், வரையறுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளைக் கூட நீக்கி, இலாபத்திற்காக தொழிற்சாலைகளையும் வேலைத் தளங்களையும் விரைவாகத் திறந்துவிட்டு வருகின்றன.

தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவதை எளிதாக்குவதற்காக பாடசாலைகளை திறந்து விடும், முதலாளித்துவ ஆட்சியாளர்கள், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மரணத்திற்குள் தள்ளி, மேலும் பெருந்தொகையானவர்களை தொற்றுக்கு உள்ளாக்கி வருகின்றது.

தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை வெற்றிகரமாக கண்டுபிடித்திருந்தாலும், இது போன்ற தடுப்பூசிகளை உருவாக்கிய அமெரிக்கா உட்பட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாடுகள், தங்களின் புவிசார் அரசியல் நலன்களுக்காக, மிகப் பெருந்தொகையான தடுப்பூசிகளை வெறுமனே குவித்து வைத்துக்கொண்டுள்ளன. இதன் விளைவாக, ஆப்பிரிக்கா உட்பட பல ஏழை நாடுகளுக்கு அத்தியாவசியமானதாக இருக்கும் தடுப்பூசிகள் கிடைக்காமல், பல பத்தாயிரக்கணக்கான மக்களை மரணத்துக்குள் தள்ளியுள்ளன.

உலகப் புகழ்பெற்ற தொற்றுநோயியல் வல்லுநர்கள், உலக ஜனத்தொகைக்கு விரைவாக தடுப்பூசி வழங்கப்படும் அதே வேளை, அத்தியாவசிய பொது சுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பாக அமல்படுத்துவதன் மூலம் தொற்றுநோயை முற்றாக ஒழிக்க முடியும் என்பதை தெளிவுபடுத்திய போதிலும், இது இடம்பெறுகின்றது.

இத்தகைய உலகளாவிய மற்றும் விஞ்ஞானப்பூர்வமான வேலைத் திட்டத்திற்கு முதலாளித்துவ அமைப்பு இயல்பாகவே விரோதமானதாகும். தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான முதலாளித்துவ தாக்குதல்களைப் போலவே, உலக முதலாளித்துவத்திற்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி, உலக சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே, போர் மற்றும் தொற்றுநோயையும் தோற்கடிக்க முடியும்.

மு.சோ.க.இன் உலகளாவிய நடவடிக்கை எனப்படுவது

முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ வர்க்கத்தையும், ஏற்பட்டுள்ள பேரழிவுக்கான பொறுப்பில் இருந்து விடுவித்துவிடும் நாகமுவ, “தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்காக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் மனித சமூகத்தின் நடவடிக்கை தேவை” என்று, மேற் கூறிய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தொற்றுநோயை ஒழிக்க உலகளாவிய விஞ்ஞானப்பூர்வமான வேலைத் திட்டத்திற்குத் தேவையான பில்லியன் கணக்கான நிதியை தேடும் போது, தொற்றுநோய்க்கு மத்தியில் கூட பெரும் இலாபங்களைக் குவித்துக்கொண்டுள்ள உலக கோடீஸ்வரர்களின் சொத்துக்களில் கைவைப்பது ஒரு புறம் இருக்க, அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு கூட இந்த 'வேலைத் திட்டத்தில்’ கிடையாது.

தொற்றுநோய் பரவல் மையமாக மாறியுள்ள போதிலும் கூட, முதலாளித்துவ இலாபத்தைப் பாதுகாக்க தொடர்ந்து செயல்படுகின்ற ஆடை தொழிற்சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருள் உற்பத்தியை மூடுவது பற்றி, நாகமுவவின் “செயல் திட்டம்” குறிப்பிடவே இல்லை. அத்தியாவசியமற்ற உற்பத்திகளை மூடுவது, இன்றியமையான பொது சுகாதார நடவடிக்கை என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

“மருத்துவமனைகளுக்கு நிறைய உதவி செய்தவர்கள் இருக்கிறார்கள்” என்றும் “நோயாளிகளை தங்களால் முடியுமானளவு கவனித்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்” என்றும் குறிப்பிடும் நாகமுவ, இந்த நடவடிக்கைகளுக்கு 'சமூக / கூட்டு / அமைப்பு ரீதியான முகத்தை வழங்குவதே” “அற்புதமான இதயத்தின்” நோக்கம் என்று கூறுகிறார். இந்த கொடூரமான தொற்றுநோய் காலத்தில், தங்களால் முடிந்தவரை கூட்டாக செயல்படுவது இயல்பான மனித பண்பாக உள்ள அதே வேளை, அந்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஒரு “ஒழுங்கமைக்கப்பட்ட முகத்தை” கொடுத்தல் என்ற பெயரில், முதலாளித்துவ முறைமையை ஒட்டுப்போட்டு பேணுவதற்காக மு.சோ.க. அந்த உணர்வுகளை சுரண்டிக்கொள்வதில் தீவிரமாக உள்ளது.

இதன் மூலம், 'மருத்துவமனை சார்ந்து உள்ள சிக்கல்களுக்கு, இடைநிலை போக்குவரத்து நடவடிக்கைகளிலும் மற்றும் கிராமப்புறங்களில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு பொருள் உதவி விநியோகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தலையீடு செய்தல்' ஆகியவற்றில் இந்த அமைப்பு கவனம் செலுத்தும் என்றும் மு.சோ.க. தலைவர் கூறினார்.

கொரோனா தொற்றுநோய் போன்ற ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினைக்கு முகம்கொடுக்க, முதலாளித்துவ அரசு முற்றிலும் இலாயக்கற்றது என்ற உண்மையை நாகமுவ வேண்டுமென்றே பேசாமல் விட்டுவிட்டார். கொரோனா போன்ற பாரிய சுகாதாரப் பிரச்சனை மட்டுமல்லாமல், ஏனைய பொதுவான தொற்றுநோயைக் கூடத் தாங்கும் அளவுக்கு வலுவான சுகாதார அமைப்பு இல்லாமை, பல தசாப்தங்களாக சுகாதாரப் பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெட்டுக்களின் நேரடி விளைவாகும்.

1934 இல் வருமான சரிவு மற்றும் விவசாய அழிவு காரணமாக தோன்றிய போசாக்கின்மையுடன் பரவி நூறாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட மலேரியா தொற்றுநோயின் போது, லங்கா சமசமாஜ கட்சியின் (ல.ச.ச.க.) இயக்கம் (1935 இல் அதிகாரப்பூர்வமாக ஒரு கட்சியாக தொடங்கப்பட்டது) முன்னெடுத்து வந்த நிவாரணத் திட்டத்திற்கு, மு.சோ.க. தற்போது முன்னெடுத்து வரும் 'வேலைத்திட்டம்' சமமானது என சில இடங்களில் கூறிக்கொள்கின்றது.

அந்த சமயத்தில், லங்கா சமசமாஜ இயக்கமானது ஒரு புரட்சிகர இயக்கமாக வளர்ந்திருக்காத அதே வேளை, முதலாளித்துவ அமைப்பை சவால் செய்வது பற்றி நினைத்து கூட பார்த்திருக்காத, மற்றும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்துடன் இணைந்த ஒரு தேசியவாத இயக்கம் மட்டுமே. அந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் இருவரான என்.எம். பெரேரா மற்றும் பிலிப் குணவர்த்தனவும், 1950களில் இருந்தே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஏகாதிபத்திய-சார்பு முதலாளித்துவக் கட்சிகளுக்குப் அணிசேர்ந்து நின்றதன் மூலம், அந்த இயக்கத்தின் பிற்போக்கு மற்றும் திவாலான தன்மையை நன்கு வெளிப்படுத்தி இருந்தனர். அந்த ல.ச.ச.க. இயக்கத்திற்கும் மு.சோ.க.இன் 'அற்புதமான இதயம்' என்றஃ இயக்கத்திற்கும் இடையில் இத்தகைய ஒற்றுமைகள் இருப்பது உண்மைதான்.

“அற்புதமான இதயம்” போன்ற இயக்கங்கள் பற்றி லெனின்

இத்தகைய வேலைத் திட்டங்கள் சம்பந்தமாக, லியோன் ட்ரொட்ஸ்கியின் யங் லெனின் (இளம் லெனின்) என்ற சிறந்த படைப்பில், மிக முக்கியமான விளக்கத்தை மேற்கோள் காட்டுவது முக்கியம் ஆகும். ரஷ்யாவில் 1891-92 பஞ்சத்தின் போது, மார்க்சிஸ்டுகளின் அனுபவத்தை பற்றி இளம் லெனின் கலந்துரையாடுகிறது.

தாராளவாதிகளும் தீவிரவாதிகளும், தாங்கள் இல்லாமல் ஜார் சர்வாதிகாரத்தால் எதுவமே செய்ய முடியாது என்பதை நிரூபிக்கும் நோக்கில், நிவராண பொருட்களை வழங்குவதற்கு ஓடினார்கள். லெனின் இதற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எடுத்தார். இது பற்றிய ட்ரொட்ஸ்கி வழங்கிய விளக்கம், இதன் போது மார்க்சிஸ்டுகள் பின்பற்ற வேண்டிய கொள்கையைக் காட்டுகிறது:

'அக்காலத்தில் மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகப் பொதுவாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு, அவர்கள் தேசிய பேரழிவை தங்களுடைய கொள்கைவழிக் கண்ணாடிகள் மூலமே பார்த்தனர் என்பதாகும். இந்த குற்றச்சாட்டு, இந்த விவாதங்களில் காணப்பட்ட தாழ்ந்த தத்துவார்த்த மட்டத்தை வெளிக்காட்டுகின்றது. உண்மை என்னவெனில், அனைத்துச் சக்திகளும் குழுக்களும், அரசியல் நிலைப்பாட்டை எடுத்தன: அரசாங்கமானது தன்னுடைய கெளரவத்தின் நிமித்தம், பஞ்சம் ஒன்று இல்லை என்று கூறியது, அல்லது அதன் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிட்டது.

“தாராண்மைவாதிகள் பஞ்சம் ஒன்று இருப்பதை வெளிப்படுத்திய அதேவேளை, தங்களுக்கும் அதிகாரத்தில் ’ஒரு துண்டை கொடுக்க’ ஜார் தயாராக இருப்பார் எனில், தாங்கள் அவரது சிறந்த ஒத்துழைப்பாளர்களாக ஆவதற்கு தயார் என்பதை சாதகமான வேலைகள் மூலம் அவருக்கு காட்டுவதில் அக்கறை காட்டினர். ஜனரஞ்சகவாதிகள் உணவு விநியோகிக்கும் இடங்களிலும், குடற்புண் காய்ச்சல் (டைபாய்ட்) மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று, மக்களின் பரிவுணர்வை வென்றெடுப்பதன் பேரில் அமைதியான மற்றும் சட்டபூர்வமான விழியை தேடுவதற்கு உழைத்தனர். பட்டினி கிடப்பவருக்கு உதவி செய்வதை மார்க்சிஸ்டுகள் எதிர்க்கவில்லை. கடல் அளவு பற்றாக்குறையை ஒரு மனிதாபிமான மேசைக்கரண்டி மூலம் தீர்த்துவிட முடியும் என்று பிரமை காட்டுவதையே அவர்கள் எதிர்த்தனர்.

“ஒரு புரட்சியாளன், ஒரு சட்டபூர்வ குழுவிலோ ஒரு உணவகத்திலோ ஒரு ஜெம்ஸ்டோவ் (கிராம சபையில்) பிரதிநிதிகளிலோ அல்லது ஒரு அதிகாரியின் பொறுப்பையோ ஏற்றுக் கொள்கிறார் என்றால், இயக்கத்தில் புரட்சியாளர் பொறுப்பை எடுத்துக் கொள்வது யார்? பிந்தைய காலத்தில் வெளியிடப்பட்ட அமைச்சரவை அறிவிப்பு மற்றும் வழிகாட்டுமுறைகள் மூலம், அரசாங்கம் பட்டினி கிடப்போருக்குக் கொடுக்கும் உதவியை பகிரங்கமாகவே அதிகரிப்பதற்கு முன்வருவதற்கான காரணமே, புரட்சியாளர்களின் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக இருந்த பீதியே ஆகும், என்பது உண்மையில் தெளிவானது. இந்த அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால், உண்மையிலேயே நிவாரணங்களை பெற்றுக்கொள்ளல் என்ற விடயத்தில், புரட்சிகரமான கொள்கையானது, நடுநிலையில் உள்ள மனிதாபிமானத்தை விட விளைபயனுள்ளது என்பது இன்னும் சக்திமிக்க வகையில் நிரூபணம் ஆயிற்று.' (Leon Trotsky, The Young Lenin, Wren Publishing, p.173.)

இந்த மேற்கோளில், “பஞ்சம்” என்ற இடத்தில் கொரோனா தொற்றையும், “தாராண்மைவாதிகள் மற்றும் ஜனரஞ்சகவாதிகள்” என குறிப்பிடப்படும் இடங்களில் முன்நிலை சோசலிசக் கட்சி என்றும், “ஜார்” என்ற இடத்தில் இராஜபக்ஷ ஆட்சியையும் பதிலீடு செய்வதன் மூலம், மு.சோ.ச. மற்றும் “அற்புதமான இதயம்” இயக்கமும் கொரோனா தொற்று நோய் சம்பந்தமாக பின்பற்றுகின்ற கொள்கையின் பிற்போக்கு தன்மையை, ஒருவர் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

அதே சமயம், மேலும் வரிச்சலுகை மற்றும் அரசாங்க சலுகைகளை எதிர்பார்த்து இத்தகைய பேரழிவு சமயங்களின் போது அற்ப நலன்புரி சேவைகளில் ஈடுபடும் கபட முதலாளிகளுக்கும் மு.சோ.க.வுக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளது என்று ஒருவர் நியாயமாக கேட்க முடியும். முதலாளித்துவ சமுதாயத்தில் மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்படும் இரண்டு சொற்களான, “மனிதாபிமானம்” மற்றும் “ஒத்துழைப்பு” என்ற மூடு திரைளைப் பயன்படுத்தி, முதலாளித்துவ முறைக்கு கைக்கூலி வேலை செய்யும் மு.சோ.க. போன்ற இயக்கங்களின் பின்னால் இழுபட்டுச் செல்லும் கலைஞர்கள் மற்றும் சிந்திக்கும் தட்டினர், நிச்சமாக இந்த மோசடியை புரிந்து கொள்ள வேண்டும்.

தொற்றுநோயை முற்றிலுமாக அழித்தல்

தற்போதைய கொரோனா தொற்றுநோய் சம்பந்தமாக, தொழிலாள வர்க்கம் ஒரு முக்கியமான பாடத்தை இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தொற்றுநோயை முழுமையாக அழிப்பதற்கு இன்றியமையாத தடுப்பூசி ஏற்றலை துரிதப்படுத்தல், அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் மற்றும் வேலைத் தளங்களை மூடுதல், சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கும், ஊழியர் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்கும் தேவையான நிதியை பில்லியன் கணக்கில் வழங்குமாறு அரசாங்கத்தை நெருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, தொற்றுநோயால் வேலை மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு உணவு மற்றும் நிதி உதவிகளை வழங்குமாறும், தொலைதூரக் கல்விக்கு அவசியமான இலவச இணைய வசதி, ஸ்மார்ட் தொலைபேசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மின்னணு உபகரணங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குமாறும் ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

கொரோனா தொற்றுநோய் சம்பந்தமாக, சர்வதேச தொழிலாள வர்க்கம் பின்பற்ற வேண்டிய சோசலிசக் கொள்கை பற்றி, உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியாகும்நூற்றுக்கணக்கான கட்டுரைகள் மற்றும் முன்னோக்குகள் விளக்குவது போல், இந்த வேலைத் திட்டம் எந்த வகையிலும் தேசியவாத எல்லைகளுக்குள், வெறுமனே முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வேலைத் திட்டத்திற்கு வரையறுக்கக் கூடியவை அல்ல. கடந்த ஆகஸ்ட் 18 அன்று, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இலங்கை ஆளும் உயரடுக்கின் கொலைகார பிரதிபலிப்பை எதிர்த்துப் போராட நடவடிக்கை குழுக்களை உருவாக்குங்கள்! என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கை, பின்வருமாறு விளக்கியுள்ளது:

“தொற்றுநோயை ஒழிப்பதற்கான போராட்டத்தில் விஞ்ஞான அறிவையும் வளங்களையும் திரட்டவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகும். அதனால்தான் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை உருவாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுத்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையிலும் தெற்காசியாவிலும் இந்தத் வேலைத் திட்டத்திற்காகப் போராடுகிறது. இந்த வேலைத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாடவும், தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுவை அமைக்கவும், இந்த சர்வதேச பிரச்சாரத்தை மேற்கொள்ள முன்வருமாறும் சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.”

Loading