30,000 இலங்கை சுகாதார ஊழியர்கள் கோவிட்-19 வைரஸில் இருந்து போதிய பாதுகாப்பு இன்மையை எதிர்த்து போராடுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளுக்கு மத்தியில் மேம்படுத்தப்பட்ட கோவிட்-19 பாதுகாப்பைக் கோரி, அரசாங்கத்தின் ஜனநாயக-விரோத அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை மீறி, சுமார் 30,000 இலங்கை அரச சுகாதார ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய ரீதியில் மதிய உணவு நேரத்தில் போராட்டங்களை நடத்தினர்.

இதில் பங்குபற்றியவர்களில் தாதிமார், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவிச்சிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அடங்குவர். தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 27 அன்று ஐந்து மணி நேர வேலைநிறுத்தத்தை சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

களுபோவில வைத்தியசாலையில் தாதிமார் நடத்திய ஆர்ப்பாட்டம்

மே மாத இறுதியில் அரசாங்கத்தால் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட பல அரச துறைகளில் இலவச சுகாதார சேவையும் ஒன்றாகும். இந்தச் சட்டத்தின்படி, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் எந்தவொரு தொழிலாளிக்கும் நீண்டகால சிறைத்தண்டனை மற்றும் பெரும் அபராதம் உட்பட கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் அத்தகைய நடவடிக்கையை 'தூண்டிவிடுபவருக்கு' அல்லது 'ஊக்குவிப்பவருக்கும்' இதே தண்டனை வழங்கப்படலாம். ஆகஸ்ட் 30 அன்று, வேலைநிறுத்தங்களை தடைசெய்யவும் மற்றும் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவும் கைது செய்யவும் கூடியவாறு விரிவாக்கப்படக்கூடிய அவசரகால நிலையை ஜனாதிபதி இராஜபக்ஷ அறிவித்தார்.

இலங்கையில் சுமார் 1,103 அரச மருத்துவமனைகள் உள்ளன. நேற்றைய நடவடிக்கை, கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு வடக்கு மற்றும் தெற்கில் உள்ள போதனா மருத்துவமனை போன்ற பிரதான வைத்தியசாலைகள் உட்பட மருத்துவமனைகள் அனைத்தையும் சேர்ந்த தொழிலாளர்கள் பங்குபற்றினர்.. கராப்பிட்டிய, காலி, மாத்தறை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், பதுளை, மட்டக்களப்பு, கண்டி மற்றும் பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் இருந்தும் தொழிலாளர்கள் பங்கேற்றனர். மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் கோவிட்-19 சிகிச்சை வசதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

மதிய உணவு போராட்டத்துக்கு, 44 சுகாதார துறை தொழிற்சங்கங்களின் ஒரு பலவீனமான கூட்டணியான, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அரச தாதிமார் சங்கம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட்டமைப்பு, ஜனரஜ சுகாதார ஊழியர் சங்கம், மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த அகில இலங்கை சுகாதார ஊழியர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த இலங்கை சுதந்திர சுகாதார ஊழியர் சங்கத்தினதும் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் ஆட்சியுடன் தொடர்புடைய பொது சேவைகள் ஐக்கிய தாதிமர் சங்கம் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை.

மதிய உணவு நேர போராட்டத்தின் போது கண்டி மருத்துவமனை ஊழியர்கள்

கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்பட்ட 7,500 ரூபாய் (37 அமெரிக்க டொலர்) விசேட கொடுப்பனவையும் கொரோனாவால் அதிக வேலைச்சுமை உள்ளவர்களுக்கு சிறப்பு விடுமுறையும் வழங்குமாறு சுகாதார தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை கோருகின்றன. சுகாதார ஊழியர்கள் தங்கள் வேலைத்தளங்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தையும் அதே போல் சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் (பி.பி.இ.) வழங்க வேண்டும் என கோருகின்றனர்.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், விசேட கொடுப்பனவுகள், சம்பள உயர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கோரி, ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் சக்திவாய்ந்த போராட்டங்களையும் ஏனைய நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். ஜூன் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் முறையே 20,000 மற்றும் 50,000 சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஜூலை 1–2 தேதிகளில் இரண்டு நாள் “சுகயீன விடுமுறை” பிரச்சாரத்தை நடத்தினர். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூலை 5 அன்று, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போசாக்கு மருந்து மற்றும் உதவி மருத்துவ சேவை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இந்த நடவடிக்கைகள், அரசாங்கத்தின் ஒரு தொகை போலி வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்ட சுகாதார தொழிற்சங்கங்களால் மூடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

இந்தப் போராட்டங்களை காட்டிக்கொடுத்த பின்னரே, அரச சுகாதார வசதிகளில் ஆபத்தான மற்றும் மோசமான நிலைமைகள் சம்பந்தமாக சுகாதாரத் துறை ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்திற்கு பிரதிபலிப்பாகவே, நேற்றைய போராட்டங்களுக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

பேராதனை மருத்துவமனை ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

சோசலிச சமத்துவக் கட்சியால் (இலங்கை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சுகாதார ஊழியர் நடவடிக்கை குழுவானது, நேற்றைய போராட்டங்களில் தலையிட்டு, 'சுகாதார ஊழியர் தோழர் தோழிகளே கோரிக்கைகளை வெல்லும் போராட்டத்தை நம் கையில் எடுத்துக்கொண்டு வழிநடத்துவோம்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை விநியோகித்தது. அந்த அறிக்கையின் பகுதிகள் கீழே வெளியிடப்பட்டுள்ளன.

****

  • தொற்றுநோயால் மோசமடைந்துள்ள கடினமான வேலை நிலைமைகளின் மத்தியில், மாதாந்திர கொடுப்பனவு மற்றும் விடுமுறையும் அதே போல் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதும் எரியும் பிரச்சினையாகும்.
  • பெரும்பாலான வைத்தியசாலை வார்டுகளுக்கு பி.பி.இ. தேவையான அளவை விட மூன்றில் ஒரு பகுதியே வழங்கப்படுகின்றன. அதனால், மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாத இந்த ஆடைகளை துவைத்து மீண்டும் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இதன் விளைவாக உயிருக்கு ஆபத்தும் அதிகரித்துள்ளது. எங்கள் சொந்த அலட்சியத்தாலேயே நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று குறைகூறும் சுகாதாரதுறை நிர்வாகிகள், நோய்த்தொற்றுக்கான பொறுப்பை எங்கள் மீதே சுமத்தும் சுற்றறிக்கைகளை தவறாமல் வெளியிடுகின்றனர்.
  • தொற்றுநோயால் பாதிக்கப்படும் சுகாதார ஊழியர்கள், நோய்த்தொற்று ஏற்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு வேலைக்கு அழைக்கப்படுகின்ற அதே வேளை, நோய் தொற்று கண்டறியப்படாத தொழிலாளர்களை தொடர்ந்தும் வேலை வாங்கப்படுகின்றனர். இது ஆரோக்கியமாக உள்ள தொழிலாளர்களுக்கும் அவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் மரணகரமான விளைவுகளை கொண்டுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்தாலும், குறைந்தபட்சம் 6,000 சுகாதார ஊழியர்கள் இப்போது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்படுவதோடு சிலர் மரணித்தும் உள்ளனர்.
  • எங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை வெற்றி வரை கொண்டு செல்லும் பலமான உறுதிப்பாடு எங்களிடம் இருந்தாலும், எமது கடந்த கால போராட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளவாறு அந்த உறுதிப்பாடு மட்டும் போதாது. நாம் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களை அடையாளம் கண்டு, ஒரு விஞ்ஞானப்பூர்வமான வேலைத்திட்டத்தை பின்பற்றுவது அத்தியாவசியமானதாகும்.

ஒவ்வொரு தொழிலாளர் போராட்டத்திற்கும் அரசாங்கம் அளிக்கும் பதில், நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் எந்தவொரு கோரிக்கையையும் வழங்க முடியாது என்ற மந்திரமே ஆகும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதால் 250,000 ஆசிரியர்கள் ஊதிய அதிகரிப்பு கோரி முன்னெடுக்கும் வேலைநிறுத்தம், மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது.. சுகாதார மற்றும் கல்வி அமைச்சு உட்பட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் செலவுகளைக் வெட்டிக் குறைக்குமாறும் புதிய ஆள்சேர்ப்புகளை நிறுத்துமாறும் நிதி அமைச்சு சமீபத்தில் உத்தரவிட்டது.

தொழிற்சங்கங்கள் அடிக்கடி அரசாங்கத்துடன் மூடிய கதவுகளுக்குள் சந்திப்புகளை மேற்கொள்கின்றன. பொருளாதார நெருக்கடியின் சுமையை தங்கள் உறுப்பினர்கள் மீது சுமத்துவது எப்படி என்பது பற்றிய ஆலோசனைளையும் பேச்சுவார்த்தைகளையும் அவை நடத்துகின்றன.

அடிப்படை சம்பளத்தில் 78 சதவீத விசேட மாதாந்த கொடுப்பனவை தொற்றுநோய் காலத்தில் வழங்குமாறு கோரி, ஜூன் 11 அன்று சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை, மூன்று மாதங்களுக்கு மட்டும் வெறும் 7,500 ரூபாய் வழங்கும் அரசாங்கத்தின் பிரேரணையை ஏற்றுக்கொண்டு, சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டாக காட்டிக்கொடுத்தன. உண்மையில், அரசாங்கத்தின் வெட்டிக் குறைக்கப்பட்ட கொடுப்பனவை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டதன் காரணமாக, நாம் எமது அசல் கோரிக்கைகளை மீண்டும் எழுப்பத் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அசல் கோரிக்கையில் இருந்து மூன்றில் ஒரு பங்கை குறைத்து அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ஒரு உடன்படிக்கையை, தமது உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல், ஏற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றன.

அதே சமயம், தங்களது நியாயமான உரிமைகளுக்குகாக இப்போது போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாளர்கள் மீது பாய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த மே மாதம், அது 'அத்தியாவசிய பொது சேவைச் சட்டத்தை' அமுல்படுத்தி, இந்த உத்தரவின் கீழ் பல அரச நிறுவனங்களை கொண்டு வந்தது. இந்த ஆணையின் கீழ், தொழிற்சங்க நடவடிக்கை தடை செய்யப்பட்டுள்ளதுடன் இந்த விதிமுறைகளை 'மீறுபவர்களுக்கு' கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட உள்ளன.

கடந்த மாதம், அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காகவும், விலைக் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் என்ற சாக்குப் போக்கில், நாட்டில் தேசிய அவசரகால நிலையை பிரகடனம் செய்தது. இந்த கடுமையான சட்டம் அனைத்து தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும் எதிராக நீட்டிக்கப்படலாம்.

இந்த ஒடுக்குமுறை சட்டங்களால் ஏற்படும் ஆபத்துகளை, சுகாதாரத் துறை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் உழைக்கும் மக்களிடமிருந்து மூடி மறைக்கின்றன. தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கைகளைப் பற்றி முற்றிலும் மௌனமாக இருக்கின்றமை, அவற்றை அங்கீகரிப்பதற்கு சமம் ஆகும். ஏனெனில் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தையும் முதலாளித்துவ அமைப்பையும் பாதுகாக்கின்றன.

அதன் சர்வதேச சமதரப்பினரைப் போலவே, இராஜபக்ஷ அரசாங்கமும் பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்காகவும், அதற்கு எதிராக வளரும் போராட்டங்களை கொடூரமாக ஒடுக்குவதற்காகவும், எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்கு மாறுகின்றது.

இந்த சூழ்நிலையில், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முதலாளித்துவ ஆட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து வென்றெடுக்க முடியாது. அதனால்தான் நமது உரிமைகளுக்கான போராட்டத்தை நம் கைகளில் எடுக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களில் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை சுகாதார ஊழியர்கள் கட்டியெழுப்புவது அவசியம். இந்தக் குழுக்கள் ஜனநாயக ரீதியாக அவற்றின் உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்படும். சில மருத்துவமனைகளில் இதுபோன்ற குழுக்களை நாங்கள் ஏற்கனவே அமைத்திருந்தாலும், அவற்றை ஒவ்வொரு மருத்துவமனையிலும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்களும் அரசியல் ரீதியாகத் தயாராக வேண்டும். பொருளாதார நெருக்கடியை நம் முதுகில் சுமத்துவதில் உறுதியாக உள்ள அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கைகளை தோற்கடிக்காமல், எங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியாது. அவர்களின் நெருக்கடிக்கு நாங்கள் பொறுப்பல்ல. மனித உயிர்களை விட இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் சமூக முறைமைக்கு முடிவு கட்டும் ஒரு மாற்றுத் வேலைத் திட்டத்திற்காக நாம் போராட வேண்டும்.

இத்தகைய முன்னோக்குக்கு முற்றிலும் விரோதமாக இருக்கும் தொழிற்சங்கங்கள், தங்கள் உறுப்பினர்களின் பெருகிவரும் போர்க்குணத்தைக் கலைத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது சாத்தியம் என்ற கட்டுக் கதையின் பின்னால் தொழிலாளர்களை திசை திருப்பி விடுவதற்காக, தற்போதைய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அனைத்து தர பிரிவுகளிலும் போராட்டத்தை ஏற்பாடு செய்து, சுகாதார ஊழியர்களை ஒன்றிணைக்கவும், எங்களைப் போன்ற பொதுவான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஏனைய அனைத்து தொழிலாளர்களையும் நாங்கள் அணுக வேண்டும். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நாங்கள் உடனடியாக எங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

இந்த சுயாதீன தொழிலாளர் அமைப்புகளையும், அத்தகைய குழுக்களின் வலையமைப்பையும் உருவாக்க சுகாதார மற்றும் ஏனைய துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழு அழைப்புவிடுக்கிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை உருவாக்கும் போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும்.

Loading