இலங்கை முன்நிலை சோசலிச கட்சி வலதுசாரி தேசியவாத குழுக்களுடனான தனது கூட்டணியை பாதுகாக்கிறது

இந்த கட்டுரை, 16 ஏப்பிரல் 2021 அன்று சிங்களத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமாகும்.

சீன மற்றும் ஜப்பானிய நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியார்மயமாக்க ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக, ஜனவரி மாதம் கொழும்பு துறைமுகத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கள் வெடித்தன. பூகோள தொற்றுநோயானது பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை தீவிரப்படுத்துவதால் தீவிரமாக்கப்பட்டுள்ள முதலாளித்துவ தாக்குதலுக்கு எதிராக, இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக, துறைமுகத் தொழிலாளர்களின் எதிர்ப்பு தலைதூக்கியது.

23 துறைமுக தொழிற்சங்கங்கள், தீவிரவாத சிங்கள-பௌத்த குழுக்களுடன் சேர்ந்து, தொழிலாளர்களின் போராட்டங்களை இந்திய-விரோத ஆர்ப்பாட்டமாக திசைதிருப்பி விடுவதற்காக, “துறைமுக கிழக்கு முனையத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம்” என்ற ஒன்றை அமைத்தன. வலதுசாரி போலி-இடது குழுவான முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), இந்த இயக்கத்திற்கு ஒரு “இடது” போர்வையை வழங்க இணைந்துகொண்டன.

முன்நிலை சோசலிச கட்சி தலைவர்களில் ஒருவரான துமிந்த நாகமுவ, எல்லே குணவன்ச பிக்குவுடன் துறைமுகம் சம்பந்தமாக ஊடக மாநாடு நடத்திய போது

இந்த பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதி இராஜபக்ஷ, இந்தியா மற்றும் ஜப்பானுடனான ஒப்பந்தத்தை நிறுத்தி, துறைமுகத்தில் ஒரு மேற்கு முனையத்தை கட்டுவதில் முதலீடு செய்வதற்காக இந்திய நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இந்த இயக்கத்திற்கு எதிராக விரிவான பகுப்பாய்வை முன்வைத்தது, பிரச்சாரம் செய்தது. 'கொழும்பு துறைமுகத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்திற்காக! இந்திய-விரோத பிரச்சாரத்தை எதிர்த்திடு! சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடு!' என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டது. 'தனியார்மயமாக்கலுக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பைப் பிளவுபடுத்துவதற்கும், இலங்கைத் தொழிலாளர்களை இந்தியாவில் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுக்கு எதிராக நிறுத்துவற்குமே தொழிற்சங்கங்களின் கடுமையான இந்திய-விரோத பிரச்சாரம் தொடங்கப்பட்டது,' என அந்த அறிக்கை விளக்கியது.

மேலும், சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த அறிக்கை, மு.சோ.க. மற்றும் அதன் தொழிலாளர் போராட்ட மையமும், கிழக்கு முனையத்தின் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தில் சேர்ந்து ஆற்றிய இழிவான வகிபாகத்தையும் அம்பலப்படுத்தியது. இந்த அம்பலப்படுத்தலால் பாதிப்புக்குள்ளான மு.சோ.க. தலைவர் துமிந்த நாகமுவ, இந்த வலதுசாரி கூட்டணியில் தன்னை ஒரு பங்காளியாக நியாயப்படுத்திக் கொள்ளும் வெறித்தனமான முயற்சியில், கட்சியின் மாலிமா (திசைகாட்டி) செய்தித்தாளுக்கு ஒரு நீண்ட நேர்காணலை வழங்கியுள்ளார்.

மாலிமா பத்திரிகையில் நேர்காணுபவர் நாகமுவவிடம் பின்வரும் கேள்வியை முன்வைத்தார் “...தொழிலாளர் போராட்ட மையம் துறைமுகங்களை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்திலும் பங்குபற்றுகிறது. இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர செயற்பட்ட பல இனவாத துறவிகள் அதைச் சுற்றி அணிசேர்ந்துள்ளனர் என்பது, துறைமுகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் முற்போக்கான மக்களின் நம்பிக்கையை அழிக்கவில்லையா? குறிப்பாக, தனியார்மயமாக்கலுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் முற்போக்கான சக்திகளை இந்திய எதிர்ப்பிற்குள் தள்ள முயற்சிக்கின்றனர் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே.”

நாகமுவ இவ்வாறு பதிலளித்தார்: “இது ஒரு ஒன்றுபட்ட செயல்முறை. ஒன்றுபட்ட செயலில் சேருபவர்களுக்கு வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்கள், வெவ்வேறு அரசியல் அபிலாஷைகள் மற்றும் வெவ்வேறு நலன்கள் உள்ளன. ஆனாலும் ஒரு நிச்சயமான நோக்கத்திற்காக உடன்பாட்டிற்கு வருகின்றனர். துறைமுக கிழக்கு முனையத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுப்பதே இந்த அமைப்பின் குறிப்பிட்ட நோக்கம் ஆகும்.”

இந்த வலதுசாரி முன்னணியை உருவாக்கியமை ஒரு 'வெற்றி' என்று அவர் பாராட்டினார்: 'ஒரு அமைப்பாக, அந்த ஒற்றுமையை நிலைநாட்ட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். எந்தவொரு குழுவோ அல்லது தனிநபரோ அதற்கு எதிராக தலையிட்டால், அதைத் தோற்கடிப்பது அமைப்பில் உள்ள அனைவரின் பொறுப்பாகும். … முடிவு தொடர்பாக கருத்து தெரிவிக்க அவசரப்பட வேண்டாம்.”

உண்மையில், இந்த 'துறைமுக கிழக்கு முனையத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம்' என்பது ஒரு வலதுசாரி போலி-இடது ஆதரவுடன் வலதுசாரி சக்திகளின் 'ஒன்றுபட்ட முன்னணி' ஆகும்.

இந்த “ஐக்கிய முன்னணியின்” உறுப்பினர்கள் யார்? ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வர்த்தக, கைத்தொழில் மற்றும் சேவை முற்போக்கு தொழிற்சங்கம், முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ,ல.சு.க,) துறைமுக தொழிலாளர் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அனைத்து இலங்கை துறைமுக தொழிலாளர் சங்கம் ஆகியவை இந்த முன்னணியை உருவாக்க முன்முயற்சி எடுத்த 23 தொழிற்சங்கங்களில் அடங்குகின்றன. ஜே.வி.பி. என்பது கொழும்பு முதலாளித்துவ ஸ்தாபனத்துடன் வலுவாக இணைக்கப்பட்ட ஒரு கட்சி ஆகும்.

முதலாளித்துவ அரசாங்கங்களின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு இந்த தொழிற்சங்கங்கள் உண்மையான எதிர்ப்பு காட்டவில்லை. கடந்த காலங்களில், இவை பயனற்ற போராட்டங்களில் தொழிலாளர்களை சிக்க வைப்பதன் மூலம், ஏனைய துறைமுக முனையங்களை தனியார்மயமாக்க உதவியுள்ளன.

தீவிர இந்திய-விரோத சிங்கள இனவாத குழுக்களின் கூட்டணியான 'தேசிய இயக்கங்களின் கூட்டும்” நாகமுவவின் இந்த 'ஐக்கிய முன்னணியில்” அங்கத்துவம் வகிக்கின்றது. எல்லே குணவன்ஸ பிக்குவின் 'தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கம்', பஹியங்கல ஆனந்தசாகர பிக்குவின் 'பாதுகாப்போம் இலங்கையை தேசிய இயக்கம்' மற்றும் 'பொதுபலசேனா' ஆகியவை இந்த 'தேசிய இயக்கங்களின் கூட்டில்' அங்கம் வகிக்கின்றன. ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்தின் பங்காளிகளான தேசிய விடுதலை முன்னணியும் பிவித்துரு ஹெல உருமயவும் கூட்டணிக்கு ஆதரவு அனுசரணை வழங்குகின்றன.

இந்த அமைப்புகள் அனைத்தும் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவையும் ஸ்ரீ.பொ.ஜ.மு. அரசாங்கத்தையும் ஆட்சிக்கு கொண்டுவர பிரச்சாரம் செய்தன. அவற்றின் ஆதரவுடன், இராஜபக்ஷ ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க விரைவாக செயல்பட்டு வருகிறார்.

மிக வெளிப்படையாக தெரிகின்ற விடயம் என்னவெனில், இந்த அமைப்புகள் அனைத்தும் மார்க்சிசத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் எதிரானவை. எவ்வாறாயினும், முன்நிலை சோசலிச கட்சியானது இந்த அமைப்புகள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாக (தற்போது தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராடுவதாக) இழிந்த முறையில் சித்தரிக்கிறது.

இலங்கை வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையை வளர்த்துக் கொண்டு சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைவதற்கு தொழிலாளர்களுக்கு உண்மையான தேவை உள்ளது. மார்க்சிச புரட்சிகர கட்சி, தனது சுயாதீனத்தை பாதுகாத்துக்கொண்டு, பாசிசம் மற்றும் சர்வாதிகாரம் போன்ற முதலாளித்துவ பிற்போக்குவாதிகளை தோற்கடிப்பதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைக்கு மட்டுமே, தொழிலாள வர்க்க அமைப்புகளின் ஐக்கிய முன்னணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கான உண்மையான தேவையை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிச கட்சியின் அழைப்புக்கும், முன்நிலைய சோசலிச கட்சியின் இழிவான ஐக்கிய முன்னணிக்கும் எந்தவிதமான பொதுவான ஒன்றும் கிடையாது. இது ஒரு வலதுசாரி பிரச்சாரத்தில் தொழிலாளர்களை சிக்கவைக்கும் பொறி மட்டுமே. இந்த வலதுசாரி குழுக்களை முறியடிப்பதற்கு தலையிடுவோரை அச்சுறுத்தும் நடவடிக்கையிலும் இந்த வலலதுசாரி குழுக்கள் ஈடுபடுகின்றன. ’துறைமுக கிழக்கு முனையத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தை' தொழிலாளர்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், முடிவு என்னவாக இருக்கும் என்று முன்கணிப்பதில் யாரும் பண்டிதராக இருக்கக் கூடாது என்றும் நாகமுவ கூறுகிறார்.

இந்த 'இயக்கத்தை' அமைக்கும் கூட்டத்தில், இந்த குழுக்களை ’சைட்டம் (SAITM) போராட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த சக்திகள்' மீண்டும் ஒன்றிணைவதாக நாகமுவ ஆர்வத்துடன் அறிமுகப்படுத்தினார். ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.இன் துறைமுக தொழிற்சங்கத் தலைவரான ஷியாமல் சுமனரத்னே, 'போராட்டத்தை இன்னும் தரமான நிலைக்கு கொண்டு செல்ல... சைட்டம் போராட்டம் போன்ற ஒரு தளத்தை கட்டியெழுப்புவதற்கு' தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டதாக வெளிப்படுத்தினார்.

சுமனரத்ன தற்போது சுற்றுலா அமைச்சராக இருக்கும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவரான பிரசன்ன ரணதுங்காவின் முன்னாள் செயலாளராக இருந்தவர். அவர் இப்போது துறைமுகத்தில் கட்சியின் பிற்போக்கு திட்டத்தை முன்னெடுக்க ஒரு தொழிற்சங்க அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசபக்தி குறித்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை குற்றம்சாட்டி, இந்த வலதுசாரி சக்திகளின் 'தேசிய பாதுகாப்பு' குறித்தும் தனக்கு அக்கறை இருப்பதாகக் கூறிய நாகமுவ, தனது கட்சித் தலைவர்களின் கடந்தகால இந்திய-விரோத மரபுகளை நினைவு கூர்ந்தார். “இலங்கை ஒரு சிறிய நாடு. அது உண்மை. 1987 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி ஜே.ஆர். ஜயவர்தனவின் கையை முறுக்கினார். ஆனால் இந்த நாட்டு மக்களின் கைகளை முறுக்க அவரால் முடியவில்லை. எனவே, கோடாபய இராஜபக்ஷவின் கையை முறுக்கலாம். ஆனால் இந்த நாட்டு மக்களின் கைகளை முறுக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி பூணுகின்றோம்” என்றார்.

புலிகளை நிராயுதபாணியாக்குவதற்கும், தமிழ் உயரடுக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை வழங்குவதற்கும் இந்திய துருப்புக்களை அழைத்து வருவதற்காக 1987 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜயவர்தன, இந்தியப் பிரதமர் காந்தியுடன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இலங்கையின் முதலாளித்துவ அரசை பாதுகாக்க ஜயவர்தனவுக்கு உதவுவதே புதுடில்லியின் நோக்கமாக இருந்தது. இந்த உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஒரு இந்திய-விரோத பாசிச பிரச்சாரத்தை முன்னெடுத்த ஜே.வி.பி., அதன் துணை இராணுவ குழுக்களை பயன்படுத்தி, தொழிலாள வர்க்க அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட, ஆயிரக்கணக்கான அரசியல் எதிரிகளை கொன்றது.

அந்த நேரத்தில், முன் வரிசை முன்நிலை சோசலிச கட்சி தலைவர்கள், ஸ்ரீ.ல.சு.க. உட்பட ஏனைய இனவாத குழுக்களின் ஆதரவுடன், ஜே.வி.பி.இன் கொலைகார இயக்கத்தை செயற்படுத்தி வந்தனர். துறைமுக பிரச்சாரத்தில், இந்த பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்தபோது, நாகமுவ தனது இந்திய- விரோத கடந்த காலத்தை உற்சாகமாக நினைவு கூர்ந்தார்.

இந்தியப் படைகள் வடக்கு கிழக்கை ஆக்கிரமித்தபோது, கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம், ஜே.வி.பி.யின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை ஒரு சாதகமாக பயன்படுத்தி, கிராமப்புறக் கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவத்தை ஈடுபடுத்தி, ஜே.வி.பி.யை அழித்து 60,000 கிராமப்புற சிங்கள இளைஞர்களைக் கொன்றது.

2009 இல், சைட்டம் போராட்டம் என்று அழைக்கப்படுவது ஜே.வி.பி.யினால் அரசியல் ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.) மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவ மாணவர் சங்கத்தால் SAITAM தனியார் மருத்துவக் கல்லூரியை ரத்து செய்யக் கோரும் ஒரு பெயரளவிலான எதிர்ப்பு இயக்கமாக தொடங்கப்பட்டது.

2011 இல், ஜே.வி.பி. பிரிந்த குழுவொன்று முன்நிலை சோசலிச கட்சியை உருவாக்கி, அது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போதிலும், அரசாங்கத்துக்கு நிர்பந்தம் செய்யும் அரசியலில் இருந்த மாறவில்லை.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவந்த ஐ.தே.க. சைட்டம்மை ஒழிப்பதாக உறுதியளித்து அதிகாரத்தைக் கைப்பற்ற அதை சுரண்டிக்கொண்டது. அவர் ஆட்சிக்கு வந்தவுடன், சிறிசேன ஆட்சியில் ஏனைய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்ததோ அது போலவே சைட்டம் சம்பந்தமான வாக்குறுதியும் குப்பையில் வீசப்பட்டது.

மாணவர் எதிர்ப்புகள் அதிகரித்தபோது, அ.ப.மா.ஒ. தனது சைட்டம் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது. ஸ்ரீ.ல.சு.க.யில் மஹிந்த இராஜபக்ஷவின் கன்னையாக இருந்த ஒன்றுபட்ட எதிர்க் கட்சியும், (இந்த கன்னையே கொண்டே பின்னர் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. உருவாக்கப்பட்டது) சிறிசேன அரசாங்கத்தின் மீதான வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள சைட்டம் பிரச்சினையையும் பயன்படுத்திக்கொண்டது.

2017 இல் அ.ப.மா.ஒ. விடுத்த அழைப்பின் பேரில், இனவாத மக்கள் ஐக்கிய முன்னணியினதும் ஒன்றுபட்ட எதிர்க் கட்சியின் தலைவராகவும் இருந்த தினேஷ் குணவர்தனவும் சிங்கள அதிதீவிரவாத ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக ரணவகவும் கூட “சைடம் போராட்ட” மேடையில் அரங்கேறினர். “தேசிய இயக்கங்களது கூட்டின்” ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் வசந்த பண்டாரவும், ஏனைய தொழிற்சங்க அதிகாரதத்துவத்தினரும் இந்த மேடைகளில் வழக்கமான பேச்சாளர்களாக இருந்தனர்.

இறுதியில், சிறிசேன அரசாங்கத்துக்கு சைட்டத்தை மூடிவிட நேர்ந்ததோடு, இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவக் கல்லூரிக்கு, அதிக கட்டணம் செலுத்தி கல்வியை முடிக்க அனுப்பப்பட்டனர். சைட்டம் போராட்டத்தின் வெற்றியாக இதை பாராட்ட விரைந்த முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் அ.ப.மா.ஒ., எதிர்கால போராட்டங்களுக்கு இதை ஒரு முன்னுதாரணமாக தம்பட்டம் அடிக்கின்றன. இருப்பினும், தற்போதைய அரசாங்கம் கல்வி தனியார்மயமாக்கலை முன்நகர்த்தி அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் அ.ப.மா.ஒ. தலைமையிலான சைட்டம் இயக்கத்தின் உண்மையான வகிபாகம் என்ன? சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், சிக்கன நடவடிக்கை மற்றும் தனியார்மயமாக்கல் உள்ளிட்ட இலவசக் கல்வி மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக தொழிலாளர் வர்க்கத்தை நோக்கி மாணவர் இயக்கத்தை வழிநடத்த போராடுகிறது. சைட்டம் இயக்கமோ அதை முழுமையாக எதிர்த்தது. இப்போது, வேறுபட்ட சூழலில், 'துறைமுக கிழக்கு முனையத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தில்' ஒன்றிணைந்து தனியார்மயமாக்கலுக்கு எதிரான சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தைத் தடுப்பதில் அதே பாத்திரத்தை ஆற்றுகின்றது.

ஜே.வி.பி. இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வெறுப்புக்கு உள்ளான சூழ்நிலையில், முன்நிலை சோசலிசக் கட்சி ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து, மார்க்சிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்டுகள் என்று காட்டிக்கொண்டு, இடது வாய்ச்சவடால் விடுத்துக்கொண்டிருந்த ஒரு பிரிவே முன்நோலை சோசலிச கட்சியை உருவாக்கியது. ஆனால், கடந்த தசாப்தத்தில், இந்த அமைப்புக்கும் மார்க்சியத்துக்கும் சோசலிசத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் அது ஜே.வி.பி. அரசியலில் இருந்து பிரிந்து செல்லவில்லை என்பதையும் நிரூபித்துள்ளது.

மனித உயிர்களை விட இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் முதலாளித்துவ முறைமை, கோவிட் -19 பூகோள தொற்றுநோயினால் எல்லையின்றி உருவாக்கி வரும் பேரழிவின் மத்தியில், புரட்சிகர எழுச்சிகளுக்கு முன்னோடியாக சர்வதேச வர்க்கப் போராட்டம் வளர்ந்து வருகிறது. இந்த நிலைமையின் கீழ், முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறியும் அவசியத்தைக் கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் சுயாதீனமாக அணிதிரட்டுவதைத் தடுக்க, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள போலி-இடது குழுக்கள் முதலாளித்துவத்துடன் கைகோர்த்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதத் தொடங்கிய முன்நிலை சோசலிசக் கட்சி, 'வேறுபாடுகள்' இருந்தபோதிலும் தொற்றுநோயைத் தடுக்க ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு தாம் ஆதரவளிப்பதாக குறிப்பிட்டது. இப்போது அது அந்த வகிபாகத்தை நிரப்புகிறது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த போலி இடது வாயளப்புகளை நிராகரித்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை கிளையான சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒரு புரட்சிகர கட்சியை கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

Loading