ஆஸ்திரியாவில் ஒரு புதிய அதிபர் பதவியேற்கிறார் ஆனால் கொள்கைகள் மாறாமல் உள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்களைக் கொண்டுள்ள ஆஸ்திரியா ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரியதொன்றல்ல. ஆனால், வியன்னாவில் சமீபத்திய அரசாங்க நெருக்கடியுடன் ஆரம்பித்த இரக்கமற்ற தன்மை, ஊழல் மற்றும் குற்றங்கள் அனைத்து மேற்கத்திய நாடுகளிலும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அடையாளமாகியுள்ளது.

புதிய கூட்டாட்சி அதிபர் அலெக்சாண்டர் ஷாலன்பேர்க்கும் அவரின் முன்னோடியான செபாஸ்டியான் குர்ஸ்(Image: BKA/Wenzel/CC BY-SA 2.0)

மத்திய அரசு அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் அவரது பழமைவாத ஆஸ்திரிய மக்கள் கட்சியின் (ÖVP) தலைமை அலுவலகத்தில் மத்திய அரசு வழக்குரைஞர் அலுவலகம் ஊழல் வழக்கு விசாரணை செய்ததைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் மத்திய அதிபர் செபாஸ்டியான் குர்ஸ் இராஜினாமா செய்தார். அதிபரும் மற்றும் அவரது நெருங்கிய சகாக்களும் ஆஸ்திரிய குடியரசின் பெயரில் ஊழல் மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிடுவதில் மிகவும் விசுவாசமற்று இருந்ததாக வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, குர்ஸும் அவரது குழுவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திரிபு செய்யப்பட்ட கருத்துக் கணிப்புகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் பரபரப்பு வெளியீட்டாளரான வொல்வ்காங் வெல்னரினால் வெளியிடப்படும் ஊடகங்களில் சிறப்பானதாக காட்டப்படும் கட்டுரைகளை பதிப்பிப்பதற்கு நிதி அமைச்சகத்தினால் நிதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரிய மக்கள் கட்சியின் தலைமைப் பதவியையும் மற்றும் நாட்டின் அதிபர் பதவியையும் 31 வயதான குர்ஸ் இனால் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது. ஆஸ்திரிய சட்டத்தின் கீழ், இத்தகைய குற்றச்சாட்டுகள் 1 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

குர்ஸ் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளபோதும் அவற்றை மறுக்கிறார். அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக அவரது பசுமைக் கட்சி கூட்டாளியானது எதிர்க் கட்சிகளுடன் இணைந்து வாக்களிக்கப் போவதாக அச்சுறுத்தியபோது அவர் இராஜினாமா செய்தார் அல்லது அவர் குறிப்பிடப்படதுபோல் 'ஒதுங்கிவிட்டார்'.

குர்ஸ் இன்னும் அரசாங்கக் கொள்கையை கட்டுப்படுத்துகின்றார். அவர் ஆஸ்திரிய மக்கள் கட்சியின் தலைவராக இருப்பதுடன் மற்றும் அவர் இராஜினாமா செய்த பின்னரும் தேசிய கவுன்சிலில் அவரது கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவியினால், அவர் தொடர்ந்தும் அரசு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

குர்ஸ் தனிப்பட்ட முறையில் தனது வாரிசாக முந்தைய வெளியுறவு மந்திரி அலெக்சாண்டர் ஷாலன்பேர்க்கையும் தேர்ந்தெடுத்தார். திங்களன்று பதவியேற்ற ஷாலன்பேர்க்கிற்கு குறுகிய காலத்தில் மூன்று நன்மைகள் உள்ளன: முதலில், அவர் குர்ஸின் விசுவாசமான அபிமானி மற்றும் ஆதரவாளர்களில் ஒருவர்; இரண்டாவதாக, அவருக்கு உள்நாட்டு அரசியல் அனுபவம் இல்லை; மூன்றாவதாக, ஒரு தொழில்முறை இராஜதந்திரியும் மற்றும் பிரபுத்துவ குடும்பத்தின் சந்ததியிலிருந்து வரும் அவர் நல்ல தொடர்புகளையும், தீவிர நற்பெயரையும் கொண்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்ததைப் போல, குர்ஸ் விசாரணையில் இருந்து தப்பித்தால் மீண்டும் வர முயற்சிப்பார் என்று அவதானிகள் கருதுகின்றனர். அந்த நேரத்தில், இபிசா (Ibiza) விவகாரம் என்று அழைக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட அவர் இராஜினாமா செய்த நான்கு மாதங்களுக்குப் பின்னர் பசுமைக் கட்சியின் ஆதரவினால் அதிபர் பதவிக்கு திரும்பினார்.

அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் விசாரணைகள், ஏனையவற்றுடன் இணைந்து மற்றொரு விசாரணையின் பகுதியாக பறிமுதல் செய்யப்பட்ட குர்ஸின் நம்பிக்கையாளர் தோமஸ் ஷ்மிட்டின் கைத்தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்ட பல உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டது. பால்ஸாக், சோலா இனை சுற்றியுள்ள அல்லது ஆஸ்திரியாவுடன் நெருக்கமாக இருக்க என்ற கார்ல் கிறவுஸ் என்னும் எழுத்தாளரின் முன்னைய நாவலுக்கான தகவல்களை அவை வழங்குகின்றன. அதில் அவர்கள் சதித்திட்டப் படைகளின் படத்தை வரைவார்கள். அதில் அவர்கள் அதிபருக்கான தங்கள் பதவி உயர்வை துல்லியமாக திட்டமிட்டு தங்கள் இலக்கை அடைய எந்த வழியிலிருந்தும் பின்வாங்க மாட்டார்கள்.

உதாரணமாக, குர்ஸ் 2013 முதல் 2017 வரை ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி (SPÖ) மற்றும் ஆஸ்திரிய மக்கள் கட்சியின் (ÖVP) பெரும் கூட்டணியில் அமைச்சராக இருந்த போதிலும் அவர் சான்ஸ்லர் கிறிஸ்டியான் கெர்ன் (SPÖ) மற்றும் துணைசான்ஸ்லரும் மற்றும் ஆஸ்திரிய மக்கள் கட்சியின் தலைவர் ரைய்ன்ஹோல்ட் மிட்டலெஹ்னர் ஆகியோருக்கு எதிராக இருவரையும் வெளியேற்ற சூழ்ச்சி செய்தார். அவரது நெருங்கிய நம்பிக்கையாளர்களில், வியன்னாவை சேர்ந்த இளம் ஆஸ்திரிய மக்கள் கட்சியின் தலைவர் ஹெர்னொட் ப்ளூமெல் மற்றும் நிதி அமைச்சகத்தின் ஒரு உயர் அதிகாரியும் அரச வரவு-செலவுத் திட்டத்துடன் தொடர்புபட்ட தோமஸ் ஷ்மிட் இருந்தனர். ஷ்மிட், ஏனையவற்றுடன் சேர்த்து போலி கருத்துக் கணிப்புகள் மற்றும் மிட்டலெஹ்னரை வீழ்த்திய ஊடக அறிக்கைகளை ஏற்பாடு செய்தார். இதே அறிக்கைகள் பொது வழக்கறிஞரால் இப்போது விசாரிக்கப்படுகின்றன.

இருவரும் குர்ஸின் அதிபரின் கீழ் உயர்வான தொழில்முறை வாழ்க்கையை அனுபவித்தனர். ப்ளூமெல் முதலில் சான்சலர் அலுவலகத்தின் தலைவராகவும் பின்னர் நிதி அமைச்சராகவும் ஆனார். ஷ்மிட் அரசு பங்குவைத்திருக்கும் நிறுவனமான Öbag இன் தலைமை பதவி வெகுமதி அளிக்கப்பட்டது. இது அவருக்கு 400,000€ முதல் 610,000€ வரை ஆண்டு வருமானத்திற்கு உத்தரவாதம் அளித்தது. அவர் Öbag இன் தலைவராக நியமிக்கப்பட்ட சூழ்நிலைகளும் இப்போது அரச வழக்கு விசாரணைக்கு உட்பட்டுள்ளன.

அந்த சமயத்தில் சதிகாரர்களின் கலந்துரையாடல்களின் விஷமத்தனத்தையும் மற்றும் அருவருப்பையும் விபரிப்பது கடினம். வரிப் பணத்தை தளர்த்துவதில் அவர் வெற்றி பெற்ற பின்னர், ஷ்மிட் ப்ளுமெலுடன் அரட்டையில் மகிழ்ச்சியடைந்தார், 'குர்ஸ் இப்போது பணத்தை மலம் கழிக்க முடியும்.' மிட்டலெஹ்னர் வழக்கமாக 'பிற்பகுதி' அல்லது 'பிண்டம்' என்று குறிப்பிடப்படுகிறார். கூட்டுத் திட்டங்கள், குறிப்பாக அவை ஒரு சமூகக் கொள்கைக் கூறுகளை கொண்டிருந்தால் கெர்ன் மற்றும் மிட்டர்லெஹ்னரின் முயற்சிகள் நாசமாக்கப்பட்டன.

வங்கியில் இருந்து கிடைக்கும் வரிவருமானத்தை முழுநாள் பள்ளிகள் மற்றும் பிற்பகல் குழந்தை பராமரிப்பில் முதலீடு செய்ய இருவரும் திட்டமிட்டபோது, ஷ்மிட் குர்ஸுக்கு 'பெரும் வெடிபொருட்கள்!' என்று எழுதினார். குர்ஸ் அதற்கு “நன்றாக இல்லை! அதை எப்படி நிறுத்த முடியும். நான் ஒரு மாநிலத்தை எதிராக தூண்ட முடியுமா? என பதிலளித்தார். ஷ்மிட் உறுதிசெய்து, 'மிட்டலெஹ்னர் அதைச் செய்தால் - கெர்னுக்கு அனைத்து கல்விப் புள்ளிகளுக்கும் 1.2 பில்லியன் யூரோக்கள் அளிப்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கும்.' அவர்களை பொறுத்தவரையில் அரசியல் இடையூறு பற்றி மட்டுமே கவலைப்பட்டனர். ஷ்மிட்டின் கூற்றுப்படி, இந்த குழப்பும் திட்டம் 'அற்புதமானது.'

இந்த சூழ்ச்சியைக் காட்டிலும் மிகவும் சுவாரஸ்யமானது என்னவெனில், Der Standard, Der Spiegel மற்றும் Falter போன்ற வெளியீடுகள் குர்ஸும் அவருடைய நம்பிக்கையாளர்களும் ஏன் வெற்றி பெற்றார்கள் என்ற கேள்வி பற்றி விரிவாக விபரித்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் திட்டங்கள், சூழ்ச்சிகள் மற்றும் குற்றவியல் துரோகமாக இருந்தாலும், அவை குறிப்பாக அசலானவையோ அல்லது அறியப்படாதவை அல்ல. இடது-தாராளவாத வாராந்திர செய்தித்தாள் Falter செப்டம்பர் 2019 இல் 'Project Ballhausplatz' என்ற தலைப்பில் குர்ஸ் மற்றும் அவரது குழுவின் சூழ்ச்சிகளைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டது. இது உள்ளக ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்த கேள்விக்கான பதில் பிரச்சனையின் மத்திக்கு இட்டுச்செல்கின்றது: அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்தின் அழுகல் நிலைக்கு. உழைக்கும் மக்களின் தேவைகளையும் நலன்களையும் ஓரளவிற்கு பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு அரசியல் கட்சி இருந்தால், குர்ஸும் அவரது சதி கும்பலும் விரைவில் தங்கள் எல்லையை அடைந்திருக்கும். ஆனால் ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட அரசியல் பிரிவுகளில் அத்தகைய கட்சி இல்லை. அவர்கள் அனைவரும் மிகவும் வலதுசாரி அரசியலை விட ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு மிகவும் பயப்படுகிறார்கள்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கிழக்கு ஐரோப்பா, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவில் முதலாளித்துவம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஊடகங்கள் 'சுதந்திரம்' மற்றும் 'ஜனநாயகம்' ஆகியவற்றின் வெற்றியை கொண்டாடின. உண்மையில், மூலதனம் அனைத்து தடுப்புகளையும் இழந்துவிட்டது. கிழக்கில், தன்னலக்குழுக்கள் சமூக சொத்துக்களைத் திருடி, வலதுசாரி ஊழல் நிறைந்த ஆட்சிகளை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். மேற்கில், ஒரு சிறுபான்மையினர் பெரும் பெரும்பான்மையினரின் இழப்பில் தன்னை செழுமப்படுத்திக் கொண்டனர். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி இப்போது ஜனநாயக அமைப்புமுறைகளுடன் பொருந்தாத பரிமாணங்களை எட்டியுள்ளது.

முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் அனைத்துக் கட்சிகளும் கூர்மையான அழுத்தத்துடன் வளர்ந்து வரும் சமூக அழுத்தங்களுக்கு வலதுபுறம் நோக்கி செல்வதன் மூலம் பதிலளிக்கின்றன. பல தசாப்தங்களாக ஆஸ்திரியாவில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியான சமூக ஜனநாயகக் கட்சி, அதனுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களைப் போலவே, சமூக எதிர் புரட்சியின் கருவியாக மாறியுள்ளது. 1987 முதல், சமூக ஜனநாயகக் கட்சி இறுதியாக 2017 இல் அதிகாரத்திலிருந்து முற்றிலும் அகற்றப்படும் வரை ÖVP உடனான கூட்டணியுடன் மட்டுமே ஆட்சி செய்தது.

அந்த நேரத்தில், குர்ஸ் வலதுசாரி தீவிரவாத சுதந்திரக் கட்சியுடன் (FPÖ) கூட்டணி அமைத்து அவர்களின் கொள்கையை செயல்படுத்தினார். மற்ற கட்சிகளிடமிருந்து எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை. துணை வேந்தரும் FPÖ தலைவருமான ஹெயின்ஸ்-கிறிஸ்டியன் ஸ்ராஹ விற்பனைக்கான ஒரு அரசியல்வாதியாக வந்ததை வெளிப்படுத்திய இபிசா (Ibiza) விவகாரத்தின் பின்னரே FPÖ உடனான கூட்டணி உடைந்தது.

பசுமைக் கட்சி பின்னர் உதவிக்கு நுழைந்து, குர்ஸ் தனது கொள்கைகளை மாற்றாமல் மீண்டும் ஆட்சிக்கு வர உதவியது. அகதிக் கொள்கையின் அடிப்படையில், ஆஸ்திரியா ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி நாடாக உள்ளது. இது அகதிகளுக்கு விரோதமாக உள்ளது. ஹங்கேரியில் வலதுசாரி ஓர்பான் ஆட்சியுடன் வியன்னா நெருங்கிய உறவைப் பேணுகிறது. 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்லது நாட்டின் மக்கள்தொகையில் 17.5 சதவீதம் பேர் வறுமையில் வாழ்கின்றனர். வேலையின்மை விகிதம் 10 சதவீதம். கோவிட்-19 தொடர்பான அதன் கொள்கையில், முன்கூட்டிய மற்றும் மனிதாபிமானமற்ற திறப்புகளைச் செயல்படுத்துவதில் ஆஸ்திரியா பலமுறை வழிநடத்தியது. இதன் விளைவாக, 763,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் 11,100 பேர் இறந்தனர்.

குர்ஸிலிருந்து ஷாலன்பேர்க்கிற்கு மாறுவது இந்தக் கொள்கைகள் தொடர்பாக எதையும் மாற்றாது. இதுவரை, புதிய அதிபர் ஒரு பிரச்சினையில் மட்டுமே தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக்கொண்டார். குடியேற்றம் என்று வரும்போது, அவர் ஒரு 'நம்பிக்கையுள்ள மனிதர்' என்று அவர் Profil இதழில் கூறினார். வெளியுறவு அமைச்சராக, மனிதாபிமானமற்ற கிரேக்க முகாமான மோரியாவில் இருந்து குழந்தைகளை மீட்பது அகதிகளை 'பங்கிடுவது பற்றி கூக்குரலிடுவதாக' அவர் கண்டனம் செய்தார்.

ஷாலன்பேர்க் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் குர்ஸுடன் தொடர்ந்தும் நெருக்கமாக பணியாற்றுவதாக வலியுறுத்தினார். ஜனநாயக அரசியலின் அடிப்படையில் வேறு எதுவும் அபத்தமானது என்று கூறினார். நிதி அமைச்சர் ஜெர்னாட் ப்ளூமெல் உட்பட குர்ஸின் அமைச்சர்கள் இன்னும் பதவியில் இருக்கிறார்கள்.

தீவிர வலதுசாரி அரசியலுக்கான ஊண்டுகோலாக ஆஸ்திரிய பசுமைக் கட்சியின் பங்கு, ஜேர்மனியில் தற்போது நடைபெற்று வரும் சமூக ஜனநாயகவாதிகள், பசுமைவாதிகள் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சியினர் (போக்குவரத்து விளக்கு கூட்டணி என்று அழைக்கப்படுவது) இடையேயான கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எதிர்கால அதிபர் ஓலாவ் ஷொல்ஸ் சமூக ஜனநாயகக் கட்சியின் வலதுபக்கத்தில் இருக்கிறார். தாராளவாத ஜனநாயகக் கட்சி கடன் தடையை தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம் தன்னை பணக்காரர்களின் செல்வத்தை பாதுகாப்பவராக காட்ட முனைகின்றது. மேலும் பசுமைக் கட்சியினர் இரு தரப்பினரையும் விஞ்சுவதற்கு முயற்சி செய்கிறார்கள்

ஒரு சர்வதேச, சோசலிச வேலைத்திட்டத்தை நோக்கிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம் மட்டுமே இந்த வலதுசாரி அரசியலை திறனுடன் எதிர்க்கமுடியும்.

Loading