தொலைக்காட்சி விவாதத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், மெலன்சோன் நவ- பாசிச எரிக் செமூரை முன்னிலைப்படுத்தினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2022 ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதை உத்தியோகபூர்வமாக அறிவிக்காத வலதுசாரி வர்ணனையாளர் எரிக் செமூர், செப்டம்பர் 23 அன்று, பிரான்சின் அடிபணியாக் கட்சியின் (La France insoumise - LFI) தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோன் லூக் மெலோன்சோனுடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்தை நடத்தினார்.

செமூருக்கு மிகச்சிறந்த அரசியல் அடையாளம் உள்ளது. தொழில்துறை பெருநிறுவனமான Dassault Group க்கு சொந்தமான, பழமைவாத செய்தியிதழ் Le Figaro இன் தலையங்க ஆசிரியராக இவர் பணியாற்றியவர் என்பதாலும், மேலும் கோடீஸ்வரர் வன்சன் பொல்லோரே ஆல் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் CNews செய்தி சேனலில் தனது சொந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் வர்ணனையாளராக இருந்ததாலும் ஊடகங்களில் மிகவும் பிரபலமானார். 2019 ஆம் ஆண்டில், இவரது முஸ்லீம் எதிர்ப்பு கருத்துக்கள் குறித்து இன வெறுப்பை தூண்டியதாக இவர் குற்றம்சாட்டப்பட்டார். இவர், வரலாற்றாசிரியர் ராபர்ட் பாக்ஸ்டன் மற்றும் 1972 இல் வெளியிடப்பட்ட அவரது பிரபலமான படைப்பான La France de Vichy மீது கடும் விரோதம் கொண்டவர், இதற்கு எதிராக யூதர்களை விச்சியால் நாடு கடத்திய கொள்கையை செமூர் பாதுகாக்கிறார்.

2022 தேர்தலுக்கு தன்னை வேட்பாளராக இன்னும் அறிவிக்காத ஒரு அரசியல் குற்றவாளியுடன் விவாதிக்க மெலோன்சோன் எடுத்த முடிவு அரசியல் ரீதியாக வெறுக்கத்தக்கது. இருவர்களுக்கிடையிலான விவாதம் தேசிய அடையாளத்தின் பிற்போக்கு தளத்தில் முழுமையாக கவனம் செலுத்தியது, அதாவது செமூர் அவரது தீவிர வலதுசாரி ஆத்திரமூட்டலையும் வெறித்தனத்தையும் காட்ட மெலோன்சோன் களம் அமைத்துக் கொடுத்தார்.

எரிக் செமூர் மற்றும் ஜோன் லூக் மெலோன்சோன்

மெலோன்சோன் இவ்வாறு அறிவித்து விவாதத்தில் தான் பங்கேற்றதை நியாயப்படுத்தினார்: “இந்த விவாதத்தை நான் விரும்பினேன், ஏனென்றால் நாங்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளன, நானும் ஒரு வேட்பாளர் என்ற வகையில், நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கையில் பயன்படுத்த வேண்டும், அதிலும் குறிப்பாக வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி சித்தாந்தவாதியாக மாறியுள்ள ஒரு மனிதனின் அபத்தமான முன்னோக்குகளால் நாடு களங்கப்படும்போது நான் அதைச் செய்தாக வேண்டும்.” மேலும் இவர் செமூருக்கு இதை தெரிவித்தார்: “நீங்கள் எங்கள் நாட்டிற்கு ஆபத்தானவர், நீங்கள் பிரான்ஸ் பற்றி குறுகிய பார்வையை வைத்துள்ளீர்கள், நீங்கள் ஒரு இனவாதி, அதற்காக நீங்கள் தண்டிக்கப்பட்டுள்ளீர்கள்.”

இந்த குழப்பம் ஒருபுறம் இருந்தபோதிலும், முன்னாள் நண்பர்களாக இவ்விரு மனிதர்களும் உடன்பட்ட பல பகுதிகளை விவாதம் எடுத்துக் காட்டியது. கொரோனா வைரஸ் நோய்தொற்றால் 1.2 மில்லியனுக்கும் அதிகமான ஐரோப்பியர்கள் இறந்துள்ள போதிலும், கொரோனா வைரஸ் பூட்டுதல்களையும், கொரோனா வைரஸை ஒழிப்பதன் மூலம் தொற்றுநோயை தடுக்க ஏனைய பொது சுகாதார நடவடிக்கைகள் எடுப்பதையும் செமூர் கடுமையாக எதிர்த்தது பற்றி மெலோன்சோன் எதுவும் விமர்சிக்கவில்லை. மேலும் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் பிரான்சுவா ஹாலாண்ட் 2013 இல் மாலியில் போர் தொடங்கியதை அவர் ஆதரித்தது பற்றியும் இவர் விமர்சிக்கவில்லை.

“பிரான்ஸ் பல தசாப்தங்களில் மிக மோசமான சமூக மற்றும் நிதி நெருக்கடிக்குள் நுழைகிறது” என எச்சரித்து மெலோன்சோன் விவாதத்தைத் தொடங்கினார். பிரான்சில் ஏழைகளின் எண்ணிக்கை 10 மில்லியனையும், வேலையற்றவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனையும் கடந்து செல்வதைக் குறிப்பிட்டு, தொழிலாள வர்க்க கோபம் வெடிப்பதால் உருவாகும் அரசியல் தாக்கங்கள் குறித்து அவர் இவ்வாறு எச்சரித்தார்: “இதுபோன்ற சூழ்நிலை குழப்பமின்றி நகரும் என முட்டாள்களால் மட்டுமே நம்ப முடியும்.”

செம்மோர் குடியேறியவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதன் மூலம் பதிலளித்தார், குடியேற்றம் பிரெஞ்சுக்காரர்களை வெளிநாட்டினரால் 'பெரும் மாற்றத்திற்கு' இட்டுச் செல்கிறது என்று கூறிய ஒரு புத்திசாலித்தனமான அறிவுஜீவியிடமிருந்து ஒருவர் வேறெதை எதிர்பார்க்கமுடியும்.

பிரான்சின் ஐந்து மில்லியன் முஸ்லீம்களை நாடுகடத்துவதற்கான செமூரின் அச்சுறுத்தல்களை குறிப்பிட்டு இந்த பிரச்சினை குறித்து செமூருக்கு பதிலளிக்க மெலோன்சோன் முயன்றதுடன், “திரு. செமூர், நம்மில் பலர் உங்களை இதைச் செய்ய அனுமதிக்க மாட்டோம். ஒரு நெருக்கடியான சூழ்நிலையைத் தூண்டுவதற்கு திரு. செமூர் மேற்கோள் காட்டும் அதிகரித்தளவிலான புள்ளிவிபரங்கள் இந்த பிரச்சினையை சரிசெய்யாது. நீங்கள் முஸ்லீம்களை வெளியேற்ற மாட்டீர்கள், இஸ்லாத்திற்கும், பிரான்சுக்கும் இடையே ஏதோவொன்றை தேர்வு செய்ய நீங்கள் அவர்களை கட்டாயப்படுத்த மாட்டீர்கள்” என்றும் கூறினார்.

இது தொடர்பாக, மெலோன்சோனின் கடந்தகால அனைத்து இஸ்லாமிய வெறுப்பு அறிவிப்புகளை நினைவுகூர்ந்தும், அவரது பாசாங்குத்தனம் மற்றும் முரண்படும் தன்மையை குற்றம்சாட்டியும் செமூர் இவ்வாறு பதிலளித்தார்: “திரு மெலோன்சோன், இஸ்லாமிய முக்காடு இடும் பழக்கம் சுய இழிவுபடுத்தும் செயல் என்று நீங்களே ஒருமுறை கூறியுள்ளீர்கள். அந்த மெலோன்சோன் என்ன ஆனார்? […] மெலோன்சோன் மெலோன்சோனுக்கே துரோகம் செய்கிறார். 80 களில் நீங்கள் போராடிக்கொண்டிருந்த சித்தாந்தத்திற்கு மாறிவிட்டீர்கள். […] திரு. மெலோன்சோனுக்கு திரு. மெலோன்சோனே எதிராக உள்ளார். […] நீங்கள் எப்போதும் தவறு செய்கிறீர்கள், நீங்கள் எப்போதும் உங்களை மறுக்கிறீர்கள்.”

குடியேற்றத்தின் மூலம் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்க பல்வேறு கலாச்சாரங்களின் கூறுகளை ஒன்றிணைக்கும் செயல்முறை (“créolisation”) அபிவிருத்தி காண்பதை குறிப்பிட்டு, செமூருக்கு எதிராக மெலோன்சோன் பதிலளித்தார்: “நமது நாடு créolisation இன் ஒரு வடிவை வெளிப்படையாக பின்பற்றுகிறது. இது ஒன்றுகூடி வாழும் மக்களின் ஒரு பொதுவான கலாசாரம் உருவாவதே தவிர வேறொன்றுமில்லை. வெவ்வேறு கலாச்சாரங்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பொதுவான கலாச்சாரமாக உருவெடுக்கின்றது. … அதாவது மனிதர்கள் ஒன்று சேர்ந்து பொதுவான ஒன்றை உருவாக்குகிறார்கள். பிரான்சை வளர்த்தெடுத்தது எதுவென்றால், அது இந்த வரலாற்றை உருவாக்கிய மனிதகுலத்தின் இந்த மகத்தான யோசனையே.”

எவ்வாறாயினும், மெலோன்சோனின் இஸ்லாமிய வெறுப்பு நிலைப்பாடுகள், créolisation கருத்தாக்கம் என்பது செமூருக்கு எதிராக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது அல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வரலாற்று ரீதியாகக் கூறுவதானால், இது பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து எழும் முதலாளித்துவ ஜனநாயக கருத்துக்களிலிருந்து ஒரு படி பின்வாங்குவதை குறிக்கிறது. அதன்படி குடியுரிமை என்பது, பிரான்சில் வாழும், மற்றும் 1789 புரட்சியால் பிரகடனப்படுத்தப்பட்ட சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களின் உரிமையாகும். அவர்கள் விரும்பும் இடத்திற்கு செல்லவும், வேலை செய்யவும், படிக்கவும் அல்லது வாழவும் முடியும், குடியேறியவர்கள் ஒரு பொதுவான தேசிய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.

மெலன்சோனால் விரும்பப்பட்ட “créolisation” என்பது, எரிக் செமூர் பரிந்துரைத்த ஒருங்கிணைப்புக்கான சமரசமாகும், இதற்கு இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களின் “Francoisation” (பிரெஞ்சு பழக்கவழக்கங்கள் மற்றும் பிரெஞ்சு மொழியை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தல்) உம் மற்றும் முகமது போன்ற முதல் பெயர்களுக்கு தடை விதிப்பதும் தேவை, அதாவது செமூர் தன்னிச்சையாக பிரெஞ்சுக்காரர் அல்ல என அறிவிப்பார்.

20 ஆம் நூற்றாண்டில் நடந்த பாரிய கொலை தொடர்பாக விச்சி தலைவர் பிலிப் பெத்தானுக்கு ஆதரவாக செமூர் விடுத்த அறிக்கைகளையோ, 21 ஆம் நூற்றாண்டில் கொரோனா வைரஸ் நோய்தொற்று காலத்தில் பிரிட்டிஷ் மருத்துவ இதழ் “சமூக கொலை” என்று அழைத்ததற்கு செமூரின் எதிர்ப்பையோ மெலோன்சோன் கண்டிக்கவில்லை. “இனி பூட்டுதல்கள் இல்லை, உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்!” என்று அறிவித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கொள்கையைப் பாராட்டி, விஞ்ஞான அடிப்படையிலான சுகாதாரக் கொள்கையை செமூர் கடுமையாக எதிர்க்கிறார்.

மெலோன்சோனால் செமூரை தாக்க முடியவில்லை, ஏனென்றால், மெலோன்சோனும் LFI உம் மக்ரோன் அரசாங்கத்தின் “சுகாதார அனுமதிச் சீட்டு” (“health pass”) மற்றும் கட்டாய தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர், இந்த ஆர்ப்பாட்டங்கள் ஃப்ளோரியான் பிலிப்போ (Florian Philippot) மற்றும் மரியோன் மரேசால் லு பென் (Marion Marechal Le Pen) உட்பட செமூருக்கு நெருக்கமான தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகரித்துவரும் மக்கள் கோபத்தை எதிர்கொள்கையில், நவ பாசிச இராணுவ அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதான ஒரு இராணுவ ஆட்சி மாற்றத்திற்கான அபாயம் இருப்பது குறித்து, விவாதத்தின்போது மெலோன்சோன் எச்சரிக்கவில்லை. இந்த எல்லா விடயங்களைப் பொறுத்தவரை, அமைதியாக இருக்கவே அவர் விரும்பினார்.

தொழிலாள வர்க்கம் போராட விரும்புகின்ற நிலையில், பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் குற்றங்களுக்கு முற்றிலும் ஒத்துழைத்த மெலோன்சோனை அது எதிர்க்க வேண்டும் என்பதை இந்த மோசமான விவாதம் காட்டுகிறது.

செமூர் போன்ற ஒரு அரசியல் குற்றவாளி தன்னை ஒரு ஜனாதிபதி வேட்பாளராக முன்நிறுத்திக் கொள்ள முடியும் என்பது பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் பரந்த சீரழிவின் விளைவாகும், எல்லாவற்றிற்கும் மேலாக நடுத்தர வர்க்க போலி-இடது அரசியலைத் தொடர ட்ரொட்ஸ்கிசத்துடன் முறிந்த அனைத்து சக்திகளின் சீரழிவையும் வெளிப்படுத்துகிறது. உண்மையில், மெலோன்சோன் 1971 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் பியர் லம்பேரின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) முறித்துக்கொண்ட சிறிது காலத்தின் பின்னர் அவ் அமைப்பில் சேர்ந்தார். OCI, சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பிரான்சின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஆகியவற்றுக்கு இடையேயான இடதுகளின் ஐக்கியம் என்ற பேரில் உருவாக்கப்பட்ட கூட்டில் இருந்தது. பின்னர், இவர் தனது சொந்த இயக்கத்தை உருவாக்குவதற்கு முன்னர் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார்.

மே 68 பொது வேலைநிறுத்தத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி துரோகம் செய்ததால் மதிப்பிழந்துபோன அதேவேளை, முன்னாள் நாஜி ஒத்துழைப்பாளரான பிரான்சுவா மித்திரோன் தலைமையிலான PS உடனான PCF இன் கூட்டணியை OCI ஆதரித்தது. சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக முன்வைக்கப்பட்ட இந்தக் கூட்டணி, உண்மையில் ஸ்ராலினிசத்திற்கும் முதலாளித்துவ சக்திகளுக்கும் இடையிலான கூட்டணியாக ஐரோப்பிய பாசிசத்தின் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தது. PS ஒரு சமூக ஜனநாயகக் கட்சியாக இருந்தாலும், Ile d’Yuu இல் உள்ள பெத்தானின் கல்லறையை மித்திரோன் அலங்கரித்தார், மேலும் “விச்சியை புரிந்து கொள்வது அவசியம் என்று கூறினார், அந்த நேரத்தில் அவரது ஆலோசகராக மெலோன்சோன் இருந்தார்.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக, சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் சிக்கனம் மற்றும் போர் கொள்கைகளுக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பை நசுக்க மெலோன்சோன் போராடினார். ஆனால், மெலோன்சோன்-செமூர் விவாதத்தில் தெரியவந்தது போல, நாஜிக்களுடனான பிரெஞ்சு ஒத்துழைப்பின் மரபுக்கு எதிரான எந்தவொரு கொள்கை ரீதியான எதிர்ப்பையும் நிராகரிப்பதை இது உள்ளடக்கியது. உண்மையில், இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் அறிந்து வைத்திருப்பவர்கள் என்பதுடன், செமூரின் 50 வது பிறந்தநாள் விழாவில் ஒரு நண்பராக மெலோன்சோன் கலந்து கொண்டார்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து, PS மற்றும் அதன் சுற்றுவட்டத்தில் உள்ள கட்சிகளின் நிலைமை பிரான்சிலும், மற்றும் முழு ஐரோப்பாவிலும் பாரியளவில் வலதுக்கு மாறியுள்ளது. வலதை நோக்கி நகரும் முழு ஆளும் உயரடுக்கின் முன்னெப்போதுமில்லாத வன்முறைமிக்க இயக்கத்தால் தூண்டப்பட்டு, மெலோன்சோன் சார்ந்துள்ள போலி-இடது சூழல் நவ-பாசிச நிலைகளுக்கு நெருக்கமாக நகர்கின்ற நிலையில், மெலோன்சோன்-செமூரின் இந்த விவாதம் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

ஒரு வர்க்க பிளவு தொழிலாளர்களை இந்த பிற்போக்குத்தன ஆளும் உயரடுக்கிலிருந்து பிரிக்கிறது. கோவிட்-19 நோய்தொற்று காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த தவிர்க்கக்கூடிய மில்லியன் கணக்கான இறப்புக்களும், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனம் மற்றும் இராணுவவாதக் கொள்கைகளை எதிர் கொள்வதில், மெலோன்சோனால் குறிப்பிடப்பட்ட சமூக வெடிப்பு குறித்த அச்சமும் இந்த இடைவெளியின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தீவிர வலதுசாரிகளின் எழுச்சி எல்லாவற்றிற்கும் மேலாக ஆளும் உயரடுக்கால் இயக்கப்படுகிறது என்பதற்கு உண்மையில், மெலன்சோன்-செம்மோர் விவாதம் ஒரு உதாரணத்தை வழங்குகிறது.

மெலோன்சோன் செமூரை முன்னிலைப்படுத்துவது தற்போதைய ஜனாதிபதி உட்பட பல சாத்தியமுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் பொருந்தும். உண்மையில், ஜோன்-மரி லு பென் (Jean-Marie Le Pen) இன் நவ-பாசிச தேசிய முன்னணி கட்சி மீது கவனம் குவித்து வலதுசாரி வாக்குகளை பிரிப்பதன் மூலம் 1988 இல் மித்திரோன் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது, மரின் லு பென்னின் நவ-பாசிச வேட்புமனுவை எதிர்கொண்டு, மக்ரோன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறார், மக்ரோனுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுகின்ற மெலென்சோனும் அவரது கட்சியும் நவ-பாசிச வாக்குகளை பிரிப்பதற்கான சூழ்ச்சியைத் தொடங்குகின்றனர்.

உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வா-சாவா அரசியல் கேள்விகளை வாக்குப் பெட்டியின் மூலம் தீர்க்க முடியாது. மாறாக ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கு எதிராக சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் அணிதிரட்டல் மூலமே அவற்றைத் தீர்க்க முடியும். சோசலிசத்துக்காகவும், மெலோன்சோனால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஊழல் நிறைந்த போலி-இடதுகளுக்கு எதிராகவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி இந்த முன்னோக்கு உயிரூட்ட போராடுகிறது.

Loading