இலங்கை: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வீரசேகர முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை தூண்டிவிடுகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

“இஸ்லாமிய அரச” (ஐ.எஸ்.ஐ.எஸ்) சித்தாந்தத்தை நம்பும் எவரும் எந்த நேரத்திலும் இலங்கையை தாக்கலாம் என்ற அச்சுறுத்தலை இலங்கை எதிர்கொள்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர செப்டெம்பர் 22 அன்று பாராளுமன்றத்தில் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதை கூறினார். வீரசேகர, ஒவ்வொரு முஸ்லிமையும் சந்தேகப்பட வேண்டும் என்ற தொனியில், “அவர்களை (பயங்கரவாதிகளை) அடையாளம் காண்பது எளிதல்ல” என மேலும் கூறினார்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர

தொலைக்காட்சி நேர்காணலின் போது, இனவாத ஆத்திரமூட்டலுக்கு பேர்போன பௌத்த பிக்குவும் அதிதீவிரவாத பொதுபல சேனாவின் தலைவருமான கலாபொடஅத்தே ஞானசாரா வெளியிட்ட கருத்து குறித்து, ரஹ்மான பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். கலந்துரையாடலின் போது, 2019 உயிர்த்த ஞாயிறு நிகழ்வின் மீது, முஸ்லீம் அதிதீவிரவாதிகள் குழு நடத்திய தாக்குதலைப் போன்ற ஒரு “பயங்கரவாதத் தாக்குதல்” நெருங்கி வருவதாகவும், அவர் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவிடம் விவரங்களை வழங்கியதாகவும் ஞானசார கூறினார். இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

ஞானசாரவும் அவர் தலைமையிலான பொது பல சேனாவும் முஸ்லிம் விரோத ஆத்திரமூட்டல்களின் வரலாற்றைக் கொண்டுள்ளன. பொதுபலசேனா முஸ்லிம்கள் பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பௌத்த மதத்தையும் அதன் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதே தமது நோக்கம் என்றும் தொடர்ந்து கூறி வரும் இந்த இயக்கம் உட்பட, சிங்கள பௌத்த இனவாத குழுக்களை போஷித்து வளர்த்தமை தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய இராஜபக்ஷவின் பிற்போக்கு வகிபாகம் பேர் போனதாகும்.

பாராளுமன்றத்தில் வீரசேகர கொடுத்த பதில், தொலை காட்சியில் ஞானசார கூறிய ஆத்திரமூட்டும் கருத்தை முழுமையாக ஒப்புக் கொள்வதாகும். சிங்கள-பௌத்த இனவெறி குழுக்களையும் முதலாளித்துவ ஊடகங்களையும் ஈடுபடுத்தி மேற்கொள்ளப்படும் முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தை புதிய வடிவில் அதிகரிப்பதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது தெளிவாகிறது.

'அவர்களை அடையாளம் காணுவது இலகுவானது அல்ல' என பொலிசுக்கு பொறுப்பான அமைச்சர் வெளிப்படுத்தும் கருத்து, முஸ்லிம்களை தொடர்ந்து பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும், துன்புறுத்துவதற்கும் காவலில் வைத்து விசாரிக்கவும் ஒரு திட்டம் தயாரிக்கப்படுவதை உறுதி செய்கிறது.

எவ்வாறாயினும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், ஒரு புதிய பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து வெளிப்படுத்திய ஞானசாராவை, வாக்குமூலம் பெற பொலிஸ் நிலையமொன்றுக்கு அழைக்க மாட்டேன் என்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஞானசாரவின் அறிக்கை, முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக புனையப்பட்டது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

கொரோனா பெருந்தொற்றினால் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியின் சுமையை தங்களது முதுகின் மீது சுமத்துவதத்திற்கு எதிராக, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்ட அலையை, இனவாத தூண்டுதல்கள் மூலம் திசைதிருப்பி, அந்த போராட்டங்களை மிகக் கொடூரமான முறையில் நசுக்குவதற்கு இராணுவத்தை அடித்தளமாகக் கொண்ட சர்வாதிகாரத்தை நிறுவுவதே ஜனாதிபதி இராஜபக்ஷவின் நோக்கமாகும். அவர் ஏற்கனவே பெருந்தொகையான அரசாங்க ஊழியர்கள் மீது வேலைநிறுத்தங்கள் உட்பட வர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கும் “அத்தியாவசிய சேவைகள்” மற்றும் கொடூரமான அவசரகால நிலைமைகளின் கீழ் தமது ஆட்சியை கொண்டு செல்கிறார்.

250,000க்கும் அதிகமானவர்களின் பங்கேற்புடன் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இழுபட்டு வரும் ஆசிரியர்களின் ஊதியப் போராட்டத்தின் போதும், தொற்றுநோய் கொடுப்பனவும் போதிய சுகாதார பாதுகாப்பும் கோரும் ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்களது போராட்டத்திலும், ஆளும் வர்க்கத்தின் இனப் பிளவுபடுத்தல்களை நிராகரித்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்துள்ளதையிட்டு இராஜபக்ஷ ஆட்சி உட்பட முழு முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் திகைத்து நிற்கிறது.

தம்மீது திணிக்கப்பட்ட பேரழிவு நிலைமைகளுக்கு எதிராக ஆசிரியர்களும் சுகாதாரப் ஊழியர்க்கும் மேலதிகமாக துறைமுகம், ஆடை, மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களும் போராட்டத்தில் நுழைந்தவண்ணம் உள்ளனர். பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்துள்ளதோடு மேலும் சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக இளைஞர்களின் எதிர்ப்பு அபிவிருத்தியடைந்து வருகிறது.

தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் வர்க்க ஒற்றுமையை இன அடிப்படையில் உடைத்து, தொழிலாளர்களின் வர்க்க சக்தியை சிதைக்கும் நோக்கத்துடன் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரான ஆத்திரமூட்டல்களை உச்சத்துக்கு கொண்டு செல்ல இராஜபக்ஷ உட்பட ஆளும்வர்க்கம் தீர்மாணித்துள்ளது.

இராஜபக்ஷ, தனது ஜனாதிபதி பிரச்சாரத்தில், ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு, பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள “தேசிய பாதுகாப்பை” உறுதி செய்வதே தனது முக்கிய நோக்கம் என்று கூறிக்கொண்டே ஆட்சிக்கு வந்தார். இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவர் “தேசிய பாதுகாப்பு” என்ற சாக்குப்போக்கை பயன்படுத்திக்கொண்டு, இராணுவமயமாக்கலை ஆழப்படுத்தினார்.

270 பேரைக் கொன்று ஐநூறுக்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்திய காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதைப் பற்றி அன்றி, தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அடக்குவதற்கு இதை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பது பற்றியே இராஜபக்ஷ மாத்திரமல்ல முழு ஆளும் வர்க்கமும் கணக்குப் போட்டன. அதனால்தான் அப்போதைய சிறிசேனா-விக்கிரமசிங்க ஆட்சியின் அனைத்து தலைவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தாலும் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமது தாக்குதல்களுக்கு எதிராக அபிவிருத்தியடைந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, பாரிய மக்கள் எதிர்புக்கு முகம்கொடுத்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், உடனடியாக இந்தச் சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு இராணுவத்தை வீதிக்கு அழைத்ததோடு முஸ்லிம்களை உடல்ரீதியாகத் தாக்கிய கொடூரமான தாக்குதல்களை நடத்த அனுமதித்ததுடன் அவர்களின் சொத்துக்களை அழிக்கவும் சிங்கள இனவெறி குண்டர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

அப்போதிருந்து, முஸ்லீம் மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட தொழில் வல்லுநர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான அடக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டதோடு இராஜபக்ஷ அரசாங்கம் அதை மேலும் உக்கிரமாக்கியது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'பயங்கரவாத' குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு முன்னணி மனித உரிமை வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்னும் விளக்கமறியலில் வைக்க்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 7 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் மேரி லோவுலர், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது, அவரை மனித உரிமை வழக்குகளில் தலையிடுவதைத் தடுப்பதாகக் கூறினார். முஸ்லீம் தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட 25 வயது கவிஞர் அஹ்னாப் ஜசீம் இதுவரை குற்றச்சாட்டு இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

இந்த வேட்டையாடலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லீம்களில், மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான ஆசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதூர்தீன் ஆகியோரும் அடங்குவர். ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தாவுடன், 11 தேசிய முஸ்லிம் அமைப்புகளை கடந்த ஏப்ரல் மாதம் தடை செய்த இராஜபக்ஷ அரசாங்கம், அந்த அமைப்புகளுடன் தொடர்புள்ள எவருக்கும் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம் என்று வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.

'பாதுகாப்பு பிரிவு இத்தகைய தீவிரவாதிகளை கைது செய்யும் போதெல்லாம் (அரசாங்கத்தின் மீது) இனவாத குற்றம் சாட்டுவது தவறு' என வீரசேகர தனது பாராளுமன்ற உரையில் கூறினார். இதன் பொருள் இனவாத ஆத்திரமூட்டல்கள் தொடரும் என்பதே ஆகும்.

தமது வர்க்க ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள கொழும்பு ஆளும் உயரடுக்கு சிங்கள இனவெறியை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக பயன்படுத்தியதன் மோசமான விளைவுகளை இலங்கையின் உழைக்கும் மக்கள் அனுபவித்துள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிரான இலங்கை ஆளும் வர்க்கத்தின் இரத்தக்களரி தாக்குதல்களின் வரலாறு, கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றது. அது இறுதியில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பு அரசாங்கத்தின் பல தசாப்த கால இரத்தக்களரி யுத்தத்திற்கு வழிவகுத்ததுடன் யுத்தத்தின் இறுதி மாதங்களில் மட்டும் இலங்கை இராணுவத்தின் கொடூர தாக்குதல்களில் குறைந்தது 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மதிப்பிடுகிறது.

உள்நாட்டுப் போரின்போது வலுப்படுத்தப்பட்ட அரச அடக்குமுறை இயந்திரம், தமிழ் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக மட்டுமன்றி, அனைத்து இனத் தொழிலாளர்களுக்கும் எதிராக, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயால் ஆழ்ந்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு மாறி வருவதோடு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த நச்சுத்தனமான தேசியவாதம், இனப் பாகுபாடு மற்றும் இனவெறியையும் ஊக்குவிக்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பாசிசத்தை உயிர்ப்பிக்கும் முயற்சி அதன் ஒரு பகுதியாகும். அதிகரித்து வரும் நெருக்கடியின் கீழ், இராஜபக்ஷ ஆட்சியும் அதே திசையில் நகர்கிறது.

Loading