இலங்கை அரசாங்கம் ஆசிரியர்கள் வேலைநிறுத்த செயற்பாட்டாளர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள பொலிஸ் வேட்டையாடலை நிறுத்து!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட பொலிஸ் வேட்டையாடலை தொடங்கியுள்ளது. அரசாங்கத்தின் அற்ப ஊதிய உயர்வை நிராகரித்து, கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தம் செய்வதற்கான ஆசிரியர்களின் உறுதிப்பாட்டை தகர்ப்பதும் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதுமே இந்த வேட்டையாடலின் இலக்காகும்.

இந்த வேட்டையாடலை ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழு வன்மையாக கண்டிக்கிறது. பொலிஸ் வேட்டையாடலுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கர்ளின் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்குமாறு தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம்.

கைது செய்யப்பட்ட பல ஆசிரியர்கள் ஆகஸ்ட் 5 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டபோது

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) ஆசிரியர்களின் போராட்டங்களை ஏற்பாடு செய்தவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் இடங்கள் பற்றிய தகவல்களைக் கோரி பிரதேச செயலாளர்களுக்கு, பொலிஸ் நிலையங்கள் ஊடாக கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டங்களின் பின்னர் அந்தப் பகுதியில் கொரணா தொற்று நோயினால், மரணித்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்களையும் பொலிஸ் கேட்டுள்ளது.

தற்போது முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பாக இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக சிஐடி கூறுகிறது. சமீபத்திய போராட்டங்களில் பங்கேற்றதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் கோவிட்-19 தொற்றுநோயால் மரணித்துள்ளார்களா என்பதை கண்டறிய விசாரணை நடந்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியதாக வார இறுதி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது

நாடு முழுவதும் நடந்த ஆசிரியர் ஆர்பாட்டங்கள் கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக ஆசிரியர்கள் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஆசிரியர்களை ஒடுக்குவதற்காக பொதுஜன கருத்தை உருவாக்கவே இந்த இழிவான விசாரணை நடைபெறுகிறது.

இந்த விஷமத்தனமான பிரச்சாரம், ஆளும் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் ஒரு அங்கமான பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 28 அன்று அரசாங்கத்தின் செய்தித் தாளான சிலுமின பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, குறித்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த ஹந்தபான்கொட, போராட்டங்களில் பங்கேற்ற 25 ஆசிரியர்கள் இறந்துவிட்டதாகவும், சுமார் 400 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் சார்பில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை தாக்குவதை தினசரி வழக்கமாக்கிக்கொண்டுள்ள ஹந்தபாங்கொட, இந்த பொய்யையும் தனது வாய்சவடால்களில் சேர்த்துக்கொண்டார். அரசாங்க அமைச்சரான ரோஹித அபேகுணவர்தனவும் இந்த கருத்தையே மீண்டும் கக்கி அதை நம்பகமானதாக மாற்ற முயன்றார்.

ஆசிரியர் போராட்டமே இலங்கையில் கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதற்கு காரணம் என்று கூறுவதை விட அப்பட்டமான பொய் வேறு ஏதேனும் உள்ளதா? இராஜபக்ஷவின் அரசாங்கம், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை நிராகரித்து முன்னெடுத்துச்செல்லும் வேலைத்திட்டமே இலங்கையில் உலகளாவிய தொற்றுநோய் காட்டுத் தீ போல பரவி ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டுள்ளமைக்கு காரணம் என்பதை அறியாத யாராவது இருக்கிறார்களா? ஆசிரியர்கள் மீது திணிக்க முயற்சிக்கும் இந்த குற்றச்சாட்டை உரிய அவமதிப்புடன் கண்டிக்க வேண்டும்.

உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் தொற்றுநோய்க்கு மத்தியில், தொழிலாளர்களும் பொதுமக்களும் வேலைநிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இவை அந்நாடுகளின் ஆட்சியாளர்களின் குற்றவியல் கொள்கைகள் மற்றும் தொற்றுநோயால் அதிகரிக்கும் நெருக்கடியின் சுமை தம்மீது சுமத்தப்படுவதற்கு எதிரான போராட்டங்களாகும். ஆசிரியர்களின் வேலைநிறுத்தமானது தற்போதைய அரசாங்கம் உட்பட அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், 24 வருடங்களாக ஊதிய கோரிக்கைகளை நிராகரித்து வந்துள்ள நிலைமையிலும், தமது போராட்டங்களை ஆசிரியர் சங்கங்கள் காட்டிக்கொடுத்து வந்துள்ள ஒரு நிலைமையிலும், மற்றும் தொற்றுநோயால் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை தாங்கிக்கொள்ள முடியாத பின்னணியிலுமே தொடங்கியது.

கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள 'விசாரணையின்' கீழ் பொலிஸ் நிலையங்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 05 அன்று கொழும்பில் நடந்த இரண்டு போராட்டங்கள் தொடர்பாக மேற்கண்ட தகவல்களைக் கோரி, ஹொரண பொலிஸ் ஏற்கனவே இங்கிரிய, மதுரவெல மற்றும் மில்லனிய பிரதேச செயலாளர்களுக்கும் அப்பகுதியில் உள்ள வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் 4 அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்திற்குப் பின்னர், 44 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் வீட்டுக்குச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டனர். தொற்றுநோய் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாகவும், வீதியில் தடை ஏற்படுத்தியதாகவும் சாக்குப்போக்காகான குற்றச்சாட்டுக்களை கூறி, கொழும்பு துறைமுக பொலிஸ் அவர்களை கைது செய்தது. ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டால் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு தோன்றும் என விழிப்படைந்த காரணத்தால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கண்டியில் 26 ஆசிரியர்களும், மாத்தறையில் மூன்று ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர்களை பழிவாங்குவதில் இணைந்து கொண்ட பிரதான ஊடகங்கள், பிரதான பௌத்த பிக்குகளையும் இணைத்துக்கொண்டு, ஒரு பிற்போக்கு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் சிறுவர்களின் கல்வியை 'அழிக்கும்' என்பதும், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் போது ஊதிய உயர்வை கோருவது 'நியாயமற்றது' என்பதும் அந்த பிரச்சாரத்தில் உள்ளடங்கியுள்ளன.

திங்களன்று த ஐலண்ட் பத்திரிகை, 'வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களுக்கு விடுமுறையுடன் கூடிய சம்பளம் மற்றும் பிற விடயங்கள்' என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் பத்தியை வெளயிட்டிருந்தது. அது வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதைக் கண்டித்து ஒரு தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருந்தது.

ஆசிரியர்களைப் பிளவுபடுத்த இனவாதத்தை கிளறிவிடும் முயற்சியும் உள்ளது. கடந்த வாரம் தினமின சிங்கள நாளிதழ், 'வணக்கம் யாழ்ப்பாண டீசர்ஸ்' என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் பத்தியை வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஆசிரியர்கள் உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக இணையவழியில் தொடர்ச்சியாக கற்பிக்கிறார்கள் என்று கூறும் ஆசிரியர் பத்தி, வரும் ஆண்டுகளில் தெற்கில் கல்வியில் 'பின்னடைவு' இருக்கும் எனவும் குறிப்பிடுகிறது.

இந்த விஷமத்தனமான அறிக்கைகள் உண்மையான நிலையை தலைகீழாக காட்டுவதாகும். யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் தங்கள் சகோதரர்களுடன் சேர்ந்து ஊதியப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமன்றி, வசதிகள் இல்லாததால், தோட்டப்புற, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள், இணையவழி கல்வியில் ஈடுபடும் எண்ணிக்கை குறைந்த சதவீதத்தைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தின.

முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் இந்தப் பிரச்சாரகர்கள், தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் எதிராக இதுபோலவே எரிந்து விழுவார்.

தொற்று நோயினால் ஆழமடைந்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் சுமையை தம் மீது சுமத்துவதற்கு எதிராக போராடி வரும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கு இராஜபக்ஷ அரசாங்கம் ஒரு புதிய மட்டத்தில் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 30 அன்று உணவுப் பொருட்களை விநியோகிப்பதை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற போர்வையில் ஜனாதிபதி இராஜபக்ஷ அவசரகால நிலையை அறிவித்தார்.

நாட்டில் இந்த அவசர நிலை பிரகடனத்தின் உண்மையான நோக்கம், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் போராட்டங்களை நசுக்குவதற்காக ஜனாதிபதி சர்வாதிகார அதிகாரங்களை கையில் எடுப்பதற்கே ஆகும். அதன்படி, வேலைநிறுத்தங்களை தடை செய்தல், தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தல், அரசியல் கட்சிகளை தடை செய்தல் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இந்த அவசரகால நிலையை பயன்படுத்திக்கொள்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த அரசாங்கங்கள் எப்படி அவசரகால சட்டங்களை கட்டவிழ்த்துவிட்டன என்பது பற்றிய இரத்தக்களரி அனுபவம் தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஏழைகளுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் உள்ளது. வரலாறு காணாத பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஒரு சர்வாதிகார ஆட்சிக்கே அரசாங்கம் தயாராகி வருகிறது

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவேற்றப்பட்ட அரச சேவையின் பல துறைகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தடைசெய்து, போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குற்றவியல் தண்டனைகளை விதிக்கக் கூடிய 'அத்தியாவசிய சேவைகள் சட்டம்' இந்த வாரம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.

இந்த சூழலில் தான் தொடர்ந்து போராடும் ஆசிரியர்கள், அரசாங்கத்தால் குறிவைக்கப்படுகிறார்கள். ஆசிரியர் தொழிற் சங்கங்களோ தொழிலாள வர்க்கத்தின் ஏனயை பகுதியினரை கல்வியாளர்களின் பாதுகாப்பிற்காக அணிதிரட்டுவதை இலக்காகக் கொண்டிருக்கவில்லை. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கூறும் போது, 'அமைச்சர் அபேகுணவர்தனவின் கருத்துக்கு விளக்கம் கேட்டு, சுகாதார அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன' என்று கூறினார்.

ஆசிரியர்களின் போராட்டத்தை அற்ப “ஊதிய உயர்வு” வழங்குவதன் மூலம் தகர்ப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் போது, தொழிற்சங்கங்கள் அந்த அற்ப தொகையை ஒரேமுறையில் வழங்க கோரி, அதற்கு அடிபணிந்துள்ளதை ஏற்கனவே வெளிப்படுத்திவிட்டன.

ஆசிரியர்கள் வேட்டையாடப்படுவதற்கு எதிராக பரந்த தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை வெற்றிகொள்ள ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. முதல் கட்டமாக, ஆசிரியர் ஆர்வலர்கள் மீது கை வைக்காதே! சிஐடி விசாரணையை நிறுத்து! என கோரி அறிக்கைகளை வெளியிடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஊதியப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்கும், கல்வி உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்வதற்கும் ஒவ்வொரு பாடசாலையிலும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஆசிரியர்கள் மீதான தாக்குதலானது அரசாங்கத்தின் வெட்டுக்களுக்கு எதிராக போராடும் மீதமுள்ள விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் உட்பட உழைக்கும் மக்கள் மீதான ஒரு பரந்த ஒடுக்குமுறையின் பகுதியாகும்.

அரசாங்கத்தின் இந்த தாக்குதல்கள், ஆசிரியர்கள் உட்பட தொழிலாள வர்க்கமானது தொழிற்சங்களில் இருந்து விலகி இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான மற்றும் ஐக்கியப்பட்டஃ எதிர் தாக்குதலை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற உடனடி தேவையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறன.

Loading