முன்னோக்கு

பிரேசிலில் கோவிட்-19 நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்காக போல்சொனாரோ மீது பாரிய கொலை குற்றச்சாட்டு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோவின் விடையிறுப்பு மீது விசாரணை நடத்திய பிரேசிலிய செனட்டின் விசாரணைக் குழு (CPI) வெளியிட்ட புதன்கிழமை அறிக்கை, நூறாயிரக்கணக்கான பிரேசிலியர்களின் மரணத்திற்கு பொறுப்பான ஒரு குற்றகரமான கொள்கையை அம்பலப்படுத்தியுள்ளது.

பிரேசிலில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 600,000 க்கும் அதிகமாக இருக்கும் நிலையில், கோவிட்-19 உயிரிழப்புகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அது நோயாளிகள் எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அடுத்து 20 மில்லியனுக்கும் அதிகமாக மூன்றாவது மிகப் பெரிய எண்ணிக்கையை கொண்டுள்ளது. அத்தகைய ஒரு சோகம் தவிர்த்திருக்க முடியாததல்ல, மாறாக ஒரு கொலைபாதக மூலோபாயத்தின் முற்றிலும் எதிர்பார்க்கத்தக்க விளைவாக அது இருந்தது என்பதை செனட் விசாரணைக் குழுவின் அந்த அறிக்கை நிரூபிக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரேசிலிய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமூடிகளை அணிந்துகொண்டு, ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே கோவிட் -19 தொற்றுநோயை தனது அரசாங்கம் கையாண்டதை எதிர்க்கின்றனர். 20 அக்டோபர் 2021

அந்த விசாரணைக் குழு அதன் ஆறு மாத விசாரணையில், 66 விசாரணை அமர்வுகளில் 61 சாட்சிகளை விசாரித்தது. மொத்தம் 1,100 பக்கங்களுக்கு மேல் உள்ள அந்த அறிக்கை, போல்சொனாரோ அரசாங்கம் பாரிய நோய்தொற்று மூலம் சாத்தியமற்ற 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தை' எட்டும் வேஷத்தில், மக்களிடையே வைரஸைப் பரப்பும் ஒரு நனவான மூலோபாயத்தை எவ்வாறு பின்பற்றியது என்பதை விவரிக்கிறது.

ஆரம்பத்தில் ஒரு 'சிறிய வகை சளிக் காய்ச்சல்' என்று போல்சொனாரோ விவரித்த அந்த வைரஸ் முன்நிறுத்திய ஆபத்துக்களை இடைவிடாமல் குறைத்துக் காட்டுவது; சமூக இடைவெளி கடைபிடிப்பதில் இருந்து முகக்கவசங்கள் அணிவது வரை குறைந்தபட்ச பொது சுகாதார நடவடிக்கைகளைத் தாக்குவது; அரசாங்கத்துடன் இணைந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் கரங்களில் நூற்றுக் கணக்கான நேரடி மரணங்களுக்கு இட்டுச் சென்ற உத்தியோகபூர்வமற்ற மாற்று சிகிச்சை முறையை அதிகாரப்பூர்வமாக ஊக்குவிப்பது; தடுப்பூசிகளை இழிவுபடுத்தும் முயற்சி; அவற்றைப் பெறுவதற்கான மாநில மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளின் முயற்சிகளை நாசப்படுத்துவது; மானஸில் (Manaus) நடந்த முன்னுதாரண சம்பவத்தைப் போல, உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு உதவ மறுப்பது; இறுதியில் டீசல் கட்டுப்பாடு மீது காங்கிரஸ் சபையால் அங்கீகரிக்கப்பட்ட செலவுகளைக் கூட வேண்டுமென்றே புறக்கணித்தது என இவை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக அந்த மூலோபாயம் பின்பற்றப்பட்டது. இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையின் பக்கவாட்டில், அரசு அதிகாரிகள் அவர்களின் சொந்த பைகளில் கையூட்டுத் தொகைகளை நிரப்பிக் கொள்வதற்காக, விலை உயர்த்தப்பட்ட தடுப்பூசிகளை வாங்குவதற்கும் நேரத்தைக் கண்டிருந்தார்கள்.

போல்சொனாரோ தவிர, இன்னும் 65 நபர்களும் மற்றும் இரண்டு நிறுவனங்கள் மீதும் மொத்தம் 24 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போல்சொனாரோ மீது ஒன்பது குற்றங்கள் சுமத்தப்படுகின்றன, அவற்றில் 'பொதுவான குற்றங்கள்' எனப்படுபவை, குற்றஞ்சாட்டக்கூடிய அத்துமீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவையும் உள்ளடங்கும். முதல் வகையில் உள்ளடங்குபவை:

  • வைரஸ் பரவ செயலாற்றியதன் மூலம், அந்த தொற்றுநோயால் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது
  • சுகாதார அமைச்சகம் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் போன்ற ஏனைய அரசு பிரிவுகள் ஆணையிட்ட நடவடிக்கைகளைத் தாக்கியதன் மூலம் அல்லது அவற்றை அலட்சியப்படுத்தியதன் மூலம், சுகாதார கவனிப்பு வழிகாட்டல்களை மீறியது
  • ஹைட்ரோகுளோரோக்குயின் (hydroxychloroquine) போன்ற பொய்யான சிகிச்சைகளை ஊக்குவிக்கும், உத்தியோகபூர்வமற்ற மாற்று சிகிச்சை முறை
  • மேலே குறிப்பிட்ட குற்றங்களில் அவர் பாதையைப் பின்பற்றுமாறு அவர் ஆதரவாளர்களுக்கு இடைவிடாமல் அழைப்பு விடுத்ததன் மூலம், குற்றங்களைத் தூண்டுதல்
  • சுதந்திர வரவு-செலவுத் திட்ட நீதிமன்றத்தின் (TCU) உறுப்பினராக இருந்து, உள்ளூர் அதிகாரிகளால் இறப்புக்கள் 'அதிகமாக அறிவிக்கப்படுகின்றன' என்று கூறும் ஒரு போலி அறிக்கையைத் தயாரித்து கையெழுத்திட்டதன் மூலம், ஆவணங்களில் மோசடி செய்தல்
  • காங்கிரஸ் சபை உத்தரவிட்ட செலவினங்களைத் தடுத்ததற்காக அல்லது தாமதப்படுத்தியதற்காக, நிர்வாக முறைகேடு மற்றும் புறக்கணிப்பு குற்றங்கள்.

குற்றஞ்சாட்டக்கூடிய அத்துமீறல்களாக பெயரிடப்பட்டவை, சுகாதாரம் மற்றும் பொருளாதார நல்வாழ்வுக்கு எதிரான அரசியலமைப்பு உரிமைமீறல்கள் என்பதோடு, தனிநபர் மற்றும் சமூக உரிமைமீறல்களும் ஆகும்.

இறுதியில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன:

  • நிர்மூலமாக்கல், பிரேசிலியர்களின் பாரிய படுகொலைக்காக
  • பழங்குடி பிரேசிலியர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்களின் குறிப்பிட்ட தேவைகளை மறுப்பதற்காக, ஒரு குழுவையோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ தொந்தரவுக்கு உள்ளாக்குதல்
  • பெரும் துன்பத்தை விளைவிக்கும் அல்லது உடல்ரீதியான அல்லது மனரீதியான ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும், மனிதாபிமானமற்ற நடத்தை

முன்னாள் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சர்கள் உட்பட பல அமைச்சரவை உறுப்பினர்களும் இதே குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். உத்தியோகப்பூர்வமற்ற மாற்று சிகிச்சை மற்றும் தடுப்பூசி-எதிர்ப்பு பிரச்சாரங்களை ஊக்குவிக்க இரகசியமாக சுகாதார அமைச்சகத்துக்கு அறிவுறுத்தி 'இணை அமைச்சரவை' என்றழைக்கப்படுவதை ஒருங்கிணைத்ததற்காக, போல்சொனாரோவின் மகன்கள் எட்வர்டோ, ஃபுளோவியோ மற்றும் கார்லோஸ் —ஒருவர் காங்கிரஸ் சபை பிரதிநிதி, மற்றொருவர் செனட்டர், மற்றொருவர் நகரசபைத் தலைவர்— மீதும் அந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது. இதற்கு கூடுதலாக, நோயாளிகளுக்குத் தெரியாமலேயே அவர்களுக்கு உத்தியோகப்பூர்வமற்ற மாற்று சிகிச்சை முறைகளைக் கொண்டு கொடூரமான பரிசோதனைகள் நடத்தியதற்காக பல மருத்துவர்கள் மற்றும் வர்த்தகர்களும் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள்.

இந்த செனட் விசாரணை குழு அறிக்கை, வெறுமனே பிரேசிலின் பாசிச ஜனாதிபதி மீதான ஒரு குற்றப்பத்திரிகை மட்டுமல்ல, உலகெங்கிலுமான அரசுத் தலைவர்கள் மற்றும் ஆளும் வர்க்கங்கள் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாக நிற்கிறது.

குற்றங்களுக்குத் தீர்ப்பைத் தேடினால், இங்கிலாந்தில் போரிஸ் ஜோன்சன், இந்தியாவில் நரேந்திர மோடி, அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எண்ணற்ற பிற தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகளும் இதே போன்ற பாரிய படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த குற்றச்சாட்டுக்கள் வெள்ளை மாளிகையில் ட்ரம்பை அடுத்து வந்த ஜோ பைடெனுக்கும் நிச்சயமாக பொருந்தும், நூறு மில்லியன் கணக்கானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு, இன்னும் நூறு மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் அமெரிக்க அரசின் கைவசம் இருந்தாலும் கூட, அவர் கண்காணிப்பின் கீழ் கோவிட்-19 உயிரிழப்புகள் ட்ரம்பின் கீழ் ஏற்பட்டதை விட அதிகரித்து வருகின்றன. அதே போல, பிரேசிலின் உள்ளாட்சி அரசாங்கங்களில் உள்ள போல்சொனாரோவின் பெயரளவிற்கான எதிர்ப்பார்களும், தொழிலாளர் கட்சியின் நகரசபை தலைவர்கள் மற்றும் ஆளுநர்களும் இதேயளவுக்குப் படுகொலை கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.

இந்த பெருந்தொற்று வெடித்ததில் இருந்தே இந்த குற்றங்கள் அனைத்தையும் செய்யாத அல்லது சிலவற்றையாவது செய்திராத எந்தவொரு மிகப் பெரிய முதலாளித்துவ அரசாங்கத்தையும் நடைமுறையளவில் பெயரிடுவது நடைமுறையளவில் சாத்தியமற்றதாக இருக்கும். இது, இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் முற்றிலும் ஒழிப்பதற்குமான வழிவகைகள் மற்றும் அவசியம் பற்றிய விஞ்ஞான புரிதல் பரந்தளவில் இருக்கிறது என்பதை வைத்து பார்த்தால், இன்னும் உண்மையாகி விடுகிறது.

சீனாவுக்கு எதிரான பரந்த அமெரிக்க ஏகாதிபத்திய தாக்குதலின் பாகமாக, அகற்றும் மூலோபாயத்தைக் (elimination strategy) கைவிட ஏனைய ஏகாதிபத்திய நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணிவதற்கு முன்னர், தங்கள் பகுதிகளை நீண்டகாலமாக இந்த வைரஸில் இருந்து சுதந்திரமாக வைத்திருந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் ஏற்றிருந்த வெற்றிகரமான மட்டுப்படுத்தப்பட்ட உள்ளூர் நடவடிக்கைகளால் இது நிரூபனமாகிறது, ஆனால் அவை இப்போது அவற்றைக் கைவிட்டு வருகின்றன. சீன அதிகாரிகளே கூட விஞ்ஞான ஆலோசனையைப் பின்பற்றி, வெடிப்புகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுத்து, பெரியளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ளாமலேயே (அவற்றைத் தீர்க்க அவர்களுக்கு எந்த வழியும் இல்லை என்றாலும்), பெரிதும் வெற்றி பெற்றுள்ளனர்.

உலகெங்கிலும் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் குற்றகரத்தன்மை, இன்னும் அதிக வேகமாக தொற்றக்கூடிய உயிராபத்தான டெல்டா வகை வைரஸ் தோன்றியதற்கு அவர்கள் காட்டிய அணுகுமுறையில் இன்னும் அதிகளவில் அப்பட்டமாக அம்பலமாகி உள்ளது, இந்த புதிய வகை வைரஸ் உலகின் பெரும்பான்மை மக்கள் இன்னமும் ஒரு தவணை தடுப்பூசி கூட பெறாத நிலைமைகளின் கீழ் தடுப்பூசிகளால் மட்டுமே இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் மேலோங்கிய மூலோபாயத்தை மீறி எழுச்சி அடைந்துள்ளது.

உலகெங்கிலும் தடுக்கப்படாமல் இந்த வைரஸ் பரவல் அனுமதிக்கப்படுவது, தற்போது மனிதகுலத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என்பது மட்டுமல்ல, தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் கிடைக்கும் முன்னேற்றங்களையும் அச்சுறுத்தும் வகையில், இந்த வைரஸின் இன்னும் கடுமையான திரிபுகள் தோன்றுவதற்கான நிலைமைகளையும் உருவாக்குகிறது.

இது, பெரிதும் ஒரே விதமாக 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தை' ஊக்குவித்த மூன்று நாடுகளில் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது. பிரிட்டன், பிரேசில் மற்றும் இந்தியாவில் இந்த வைரஸ் பாரியளவில் பரவ அனுமதிக்கப்பட்டதால் ஆல்ஃபா, காம்மா மற்றும் டெல்டா வகைகள் தோன்றின, இவை உலகெங்கிலும் ஒன்றையொன்று சக்தி வாய்ந்த வகையாக மாற முந்திக் கொண்டிருக்கின்றன. பிரேசிலிய வகை வைரஸிற்கு 'காம்மா' என்று பெயரிடுவதற்கு முன்னர், போல்சொனாரோவின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் மூலோபாயத்தின் குவிமையமாக விளங்கும் மானஸ் நகரத்தின் பெயரில் அது பெயரிடப்பட்டிருந்தது, மேலும் சமீபத்திய ஓர் ஆய்வு அதன் அதிகரிப்பைத் துல்லியமாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட நோய்தொற்று மற்றும் மக்கள் நகர்வால் ஏற்பட்ட பாரியளவிலான அதிகரிப்புடன் தொடர்பு படுத்தி இருந்தது.

அந்த ஆய்வின் எழுத்தாளர்கள் குறிப்பிட்டவாறு, பிரேசிலின் கோவிட்-19 இறப்புக்களில் மூன்றில் இரண்டு பங்கை ஏற்படுத்திய காமா (Gamma) வகை, போல்சொனாரோ முன்னெடுத்த மற்றும் ஒட்டுமொத்தமாக பிரேசிலிய ஆளும் வர்க்கத்தால் ஆமோதிக்கப்பட்ட பொது சுகாதார கொள்கைகளின் ஒர்ரு நேரடி விளைவாகும்.

செனட் விசாரணைக் குழுவின் வரைவு அறிக்கையின் வெளியீடு, போல்சொனாரோவின் கொடூரமான நடவடிக்கைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று பொறுத்தமாக அழைத்ததாலும், அந்த நடவடிக்கைகளுக்காக அவர் கணக்கில் கொண்டு வரப்படுவார் என்பதை அது அர்த்தப்படுத்தாது. அந்த நடவடிக்கைகளை நெறிப்படுத்திய அரசியல் சக்திகள் எடுக்கும் நடைமுறை நடவடிக்கைகள் அந்த குற்றச்சாட்டுக்களின் முக்கியத்துவத்திற்கு முற்றிலும் நேரெதிராக உள்ளன.

அந்த அறிக்கை அடுத்த வாரம் செனட் விசாரணை குழுவின் மொத்த ஒப்புதலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அது கணக்கில் கொண்டு வருவதற்கான எந்தவொரு பாதையையும் சிக்கலுக்கு உள்ளாக்கத் தொடங்கலாம். அந்த அறிக்கை சட்டரீதியானதில்லை என்பதோடு, அதை இன்னும் பல அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும், பெயரிட்டு கூறுவதானால், ஒரு தொற்றுநோயைத் தூண்டுதல் போன்ற 'பொதுவான குற்றங்கள்' விஷயத்தில் அட்டார்னி ஜெனரலுக்கும்; குற்றஞ்சாட்டக்கூடிய அத்துமீறல்கள் விஷயத்தில் சபாநாயகருக்கும்; மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் விஷயத்தில் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் அனுப்பப்பட வேண்டும்.

அட்டர்னி ஜெனரல் மற்றும் சபாநாயகர் இருவருமே உறுதியாக போல்சொனாரோவுடன் இணைந்தவர்கள், மக்கள் சீற்றத்தை தணிக்க அவர்கள் வேண்டுமானால் சில கீழ்நிலை அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் அனுப்பலாம் என்றாலும், போல்சொனோராவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

பாதுகாப்பு மந்திரி ஜெனரல் வால்டர் பிராகோ நெட்டோ (Walter Braga Netto) போன்ற சில அமைச்சரவை உறுப்பினர்கள் மீது விசாரணையே இல்லாமல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, ஏனென்றால் விசாரணையில் விளக்கமளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டால் இராணுவம் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் கொண்டு எதிர்வினையாற்றுமோ என்று செனட்டர்கள் பயந்தார்கள். ஒரு விஷயம் நிச்சயமாக உள்ளது என்னவென்றால், போல்சொனாரோவின் கொலைபாதக கொள்கைகளில் சம்பந்தப்பட்ட இராணுவக் கட்டளையகத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் தொடர்ந்து சுதந்திரமாக அதிகாரத்தை வைத்திருப்பதிலிருந்து அந்த அறிக்கை அவர்களைத் தடுக்கப் போவதில்லை.

ஹேக் நீதிமன்றத்தில் போல்சொனாரோவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு அழுத்தமளிப்பது என்பது, செனட் விசாரணைக் குழு அறிவித்த மிகவும் தீவிர நடவடிக்கைகளில் ஒன்றான இது, திட்டவட்டமான ஒரு மோசடியாகும். அந்த அறிக்கைக்கு ஏற்பாடு செய்த செனட்டர் Renan Calheiros அறிவிக்கையில், பிரேசிலிய நீதியின் 'செயலற்றத்தன்மை' காரணமாக ஹேக் நீதிமன்றத்திற்குச் செல்வது அவசியம் என்றார். ஆனால் இந்த செயலற்றத்தன்மைக்கு பொறுப்பான சபாநாயகர் ஆர்தர் லிரா (Arthur Lira) மற்றும் அட்டார்னி ஜெனரல் அகஸ்டோ அராஸ் (Augusto Aras) ஆகியோர், Calheiros இன் பிரேசிலிய ஜனநாயக இயக்கம் (MDB) உட்பட எல்லா தரப்பினரின் ஆதரவுடன் அந்த அறிக்கை வரைவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் போல்சொனாரோ சர்வாதிகாரத்தின் கட்டளைகளின்படி செயல்படவில்லை மாறாக பொதுவான வர்க்க மற்றும் அரசியல் நலன்களில் இருந்து செயல்படுகிறார்கள் என்பதை வைத்து பார்க்கையில், நிச்சயமாக ஹேக் அந்த வழக்கை விசாரிக்காது.

போல்சொனாரோவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட குற்றங்களில் தனக்குச் சம்பந்தமில்லை என்று பிரேசில் காங்கிரஸ் கட்சியின் ஒரேயொரு உறுப்பினர் கூட கூற முடியாது என்பது தான் உண்மை.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான கோவிட் மரணங்களுக்குப் பொறுப்பான யாருமே, பாரிய மரணங்களுக்கு இட்டுச் செல்லும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தும் நனவுபூர்வமாக அந்த கொள்கையை மேற்கொண்டதற்காக கணக்கில் கொண்டு வரப்படவில்லை. பிரிட்டன் போன்று “விசாரணைகள்' நடத்தப்பட்ட ஒரு சில இடங்களில், முடிவான அறிக்கைகள் முற்றிலும் மோசடியாக உள்ளன, அவை 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைகளை நேர்மையான தவறுகள் என்றும், அவை விஞ்ஞான அறிவுரைகளின்படி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறுகின்றன.

இன்னும் அடிப்படையாக, கோவிட்-19 க்கு எதிரான 'தணிப்பு' (mitigation) மூலோபாயங்களை முயற்சித்த மற்றும் போல்சொனாரோ விடையிறுப்பின் மிகவும் பைத்தியகாரத்தனமான விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருந்த அரசியல் சக்திகள் கூட, பங்குச் சந்தைகளில் பணம் பாய்வதை உறுதிப்படுத்த இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டாயங்களுக்கு அவற்றின் கொள்கைகளை அடிபணிய செய்து, இதுவரையில் 4 மில்லியனுக்கும் அதிகமாக உத்தியோகபூர்வ உலகளாவிய மரணங்களை விலையாக கொடுத்திருந்தாலும் கூட, இவை நிச்சயமாக பரந்த குறைமதிப்பீடுகள் என்ற போதும் கூட, அவை சமூக நோயெதிர்ப்புக்காக நோய்தொற்றைப் பரப்பும் கொள்கையை அவசியமென ஏற்றுக் கொண்டன.

அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் ட்ரம்ப் மற்றும் போல்சொனாரோ என பாசிச பிரமுகர்களின் ஆளுருவில் உள்ள மிகவும் வக்கிரமான அதிவலது சக்திகளைப் பலப்படுத்தி உள்ளார்கள். அவ்விருவருமே இன்னமும் சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகளை முன்னெடுப்பதில் ஒன்றுபட்டுள்ளனர், இந்த நிகழ்ச்சிப்போக்கு பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் இத்தகைய பேரழிவுக்கு மத்தியில் அளப்பரிய சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியோடு ஜனநாயக ஆட்சி வடிவங்கள் இணங்கி இருக்க முடியாது என்பதை முடுக்கிவிடுகிறது. ஜெனரல் பிராகா நெட்டோ போன்ற இராணுவப் பிரமுகர்களை எதிர்கொள்வதில் செனட் விசாரணைக் குழுவின் கோழைத்தனம், உலகெங்கிலும் பாசாங்குத்தனமாக அதிவலதை எதிர்க்கும் முதலாளித்துவ எதிர்ப்பாளர்களின் மனோநிலைக்குச் சிறந்த முன்னுதாரணமாக நிற்கிறது.

கோவிட்-19 படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்களை சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே கணக்கில் கொண்டு வர முடியும். அது இந்த முக்கிய பணியை, இந்த பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டத்தின் பாகமாகவும் மற்றும் வேலைகள், கூலிகள், சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்கள் மூலமாக அதன் நாசகரமான விளைவுகளுக்குத் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்யும் முயற்சிகளைத் தோற்கடிக்கும் போராட்டத்தின் பாகவும் செயல்படுத்த வேண்டும். தொழிலாள வர்க்கத்திற்கு மட்டுமே, கொரோனா வைரஸை அகற்றுவதற்கு அவசியமான விஞ்ஞானப்பூர்வ கொள்கைகளைச் செயல்படுத்தும் ஆற்றலும் புறநிலைரீதியான நலன்களும் உள்ளன.

இந்த போராட்டத்தை முன்னெடுக்க, உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (IWA-RFC) இணைந்து, “இந்த பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது: முற்றிலும் அகற்றுவதற்கான விஷயம்' என்ற தலைப்பில் அக்டோபர் 24 இல் இணையவழி கலந்துரையாடல் ஒன்றை நடத்துகின்றன. இந்த இணையவழி கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுக்குமாறு நாம் நம் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரையும் வலியுறுத்துகிறோம்.

Loading