இலங்கை பல்கலைக்கழகங்களில் அமர்த்தப்பட்டுள்ள பொலீஸ் உளவாளிகளின் அடையாளங்களை வெளிப்படுத்தி அவர்களை உடனடியாக அகற்று!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உருகுணை பல்கலைக்கழகத்தில், அரச உளவாளிகள் மாணவர்கள் வேடமிட்டு செயற்படுவதாக, அதன் தலைமை ஒழுக்காற்று அதிகாரி மங்கள சதுர டி சில்வா கடந்த வாரம் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார். இத்தகைய ஒற்றர்கள் பல்கலைக்கழகத்தில் செயற்படுவது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலாகும்.

கல்வி தனியார்மயமாக்களுக்கு எதிரான போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸ் கைதுசெய்த விதம்

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒழுக்காற்று அதிகாரியின் பேச்சின் வீடியோ காட்சிகளில் அவர் இவ்வாறு கூறுகிறார்: 'இது கட்டமைப்பின் ஒரு பகுதி. கட்டமைப்பை நடத்தி செல்ல சரியான தகவல்களைப் பெற வேண்டும். புலனாய்வு தகவல் மிகவும் முக்கியமானது. இப்போது, நீங்கள் திரும்பும் போது ஐந்து நிமிடங்களுக்குள் எனக்கு தகவல் கிடைக்குமளவு மிக வலுவான தகவல் வலையமைப்பு எங்களிடம் உள்ளது'.

மாணவர்களை பயமுறுத்திய சில்வா, “உங்களுக்கு என்றும் அவர்களை (உளவுத்துறை அதிகாரிகள்) மாணவர்கள் மத்தியில் தேடமுடியாது. நீங்கள் அதை மனதில் கொள்ள வேண்டும்' எனக் கூறினார்.

இது நீண்டகாலமாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் முழு பல்கலைக்கழக அமைப்பிற்குள்ளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பேராதனை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றிய துணைவேந்தர், 'மாணவர்கள், விரிவுரையாளர்கள், மாணவர் சங்க அதிகாரிகள்' என கிட்டத்தட்ட 35 புலனாய்வு அதிகாரிகள் இருப்பதாக கூறினார்.

அதே வருடம் செப்டம்பர் மாதத்தில், 'பகிடிவதையை தடுத்தல்' என்ற போர்வையில் அரச உளவுத்துறையையும் வேறு உளவு சேவையையும் பாதுகாப்பு அமைச்சு மட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்குள் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அரசாங்க பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன குறிப்பிட்டார்.

இதன் பொருள் தற்போது ஒவ்வொரு பல்கலைக்கழகமும் உயர் கல்வி நிறுவனமும் அரசாங்க உளவாளிகளால் நிரம்பியுள்ளன என்பதே ஆகும். இந்த உளவாளிகளின் அடையாளங்களை வெளிப்படுத்தவும் அவர்களை உடனடியாக வெளியேற்றுமாறும் பல்கலைக்கழக அதிகாரிகளை சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு கோருகின்றது. பல்கலைக்கழகங்களில் உளவாளிகளை நிலைநிறுத்துவது என்பது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் கல்வி சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு பொலிஸ் அரசின் நடவடிக்கையாகும். இத்தகைய உளவாளிகள், தங்கள் எஜமானர்களுக்கு தகவல் வழங்குவதற்கு மட்டுமல்லாமல், ஆத்திரமூட்டல்கள் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படலாம்.

விரிவுரை அரங்குகள், நூலகங்கள், ஆய்வகங்கள், விடுதிகள் மற்றும் விளையாட்டு வசதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை போன்ற முழு பல்கலைக்கழக அமைப்பும் பௌதிக மற்றும் மனித வள பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. 5,000 ரூபாய் புலமைப் பரிசில் மாணவர்களின் மாதாந்த செலவுகளுக்கு போதுமானதாக இல்லாததால் பலர் பகுதிநேர வேலைகளைச் செய்யத் தள்ளப்படுகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் இந்த பிரச்சினைகளால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பளம் மற்றும் கொடுப்பனவு வெட்டுக்கள் காரணமாக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் போராட்டங்களும் மீண்டும் எழுகின்றன.

தொற்றுநோயால் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியினால், அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சூழ்நிலையில், நவம்பரில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் எதிர்ப்புகளும் போராட்டங்களும் மீண்டும் வெடிக்கும். ஒழுங்கு கட்டுப்பாட்டாளர் சில்வா, 'கட்டமைப்பை எடுத்துச் செல்ல' என வலியுறுத்துவது, இந்த எதிர்ப்புகளை கொடூரமாக நசுக்கி பல்கலைக்கழகங்களை நடத்துவததையே ஆகும். அதற்குத் தேவையான 'சரியான தகவல்கள்' என அவர் கூறுவது, போராட்டங்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன அவர்களை யார் வழிநடத்துவார்கள்? என்பதுதான்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் பல்கலைக்கழகங்களில் பொலிஸ் உளவாளிகளை நிலைநிறுத்தும் பொலிஸ் அரச நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றன. அதே நேரம், உருகுணை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவரும் புதிய அபிவிருத்திகள், அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, 'அரச உளவாளிகளை பல்கலைக்கழகங்களுக்குள் அமர்த்துவதற்கு எதிராகப் போராடு!' என்ற சுலோகத்தின் கீழ், கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் நாம் தொடங்கிய பிரச்சாரத்தின் பொருந்தும் தன்மையை வலியுறுத்துகிறோம்.

வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்க, பல்கலைக்கழகங்களில் பொலிஸ் உளவாளிகளை அமர்த்துவது அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு கொடூர ஒடுக்குமுறையாக இருந்து வருகிறது. உருகுணை மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் நிர்வாகிகள் ஊடாக இது தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக மாணவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாட்டாளர் அச்சுறுத்துகிறார். மாணவர்களின் “வட்ஸ்அப் குழுவில்' தானும் இருப்பதாக எச்சரிக்கும் ஒழுங்கு அதிகாரி, அங்கு சில விஷயங்களை தான் அவதானித்ததாகவும் கூறுகிறார். பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் முதல் நாளிலேயே, வட்ஸ்அப் குழுக்களின் நிர்வாகிகளாகச் (அட்மின்) செயற்படும் சில மாணவர்கள் அழைத்து வரப்பட்டு, அவர்களின் 'உதவித்தொகை இரத்து செய்யப்படும்' என்றும் அவர் மேலும் கூறுகிறார். ஒழுக்காற்று அதிகாரி, தான் அவதானித்த விடயங்கள் என்னவென்று சொல்லாவிட்டாலும், அது பல்கலைக்கழகப் பிரச்சினைகளுக்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துபவையாகவே இருக்க வேண்டும்.

இந்த நடவடிக்கை, பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கான ஜனநாயக உரிமைகளை நசுக்குவதையும், அதற்குத் தேவையான அமைப்புகளை உருவாக்குவதை ஒடுக்குவதையுமே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதுமாத்திரமன்றி, பல்கலைக்கழகங்களுக்குள் அரசியல், அறிவியல், சமூகம் மற்றும் தத்துவத் துறைகளில் விவாதம் மற்றும் அவை தொடர்புடைய சுதந்திரமான சிந்தனைக்கான வாய்ப்புகளை இது கடுமையாகக் கட்டுப்படுத்தும்.

உருகுணை பல்கலைக்கழகத்தின் ஒழுக்க கட்டுப்பாட்டாளரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் வெளிப்படுத்திய தகல்வல்களின் படி, மாணவர்களும் பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களும், நாள் முழுவதும் உளவாளிகளால் கண்காணிக்கப்படும் சிறைச்சாலை போன்ற சூழலில் வேலை செய்ய வேண்டியுள்ளது. இது உருகுணை பல்கலைக்கழகத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. மாறாக முழு பல்கலைக்கழக கட்டமைப்பையும் உள்ளடக்கியதாகும்.

பூகோளத் தொற்றுநோயினால் ஆழமடைந்து வரும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியில், உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்க வெகுஜனங்களின் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் கொடூரமாக நசுக்குவதற்கு சர்வாதிகார ஆட்சி வடிவங்களை ஸ்தாபிப்பதை நோக்கித் திரும்புகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜனாதிபதி இராஜபக்ஷவும் இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கு தயாராகின்றார். அவர் ஏற்கனவே வர்க்கப் போராட்டங்களை நசுக்கக் கூடிய, அரசியல் கட்சிகளைத் தடைசெய்யக் கூடியவாறான கொடூர அதிகாரம் கொண்ட அவசரகாலச் சட்டத்தின் கீழும், பொதுச் சேவை ஊழியர்களின் வேலை நிறுத்தங்களைத் தடைசெய்யும் “அத்தியாவசியச் சேவை' கட்டளைகளின் கீழும், தமது ஆட்சியை கொண்டு செல்கிறார்.

பொலிஸ் உளவாளிகளை பல்கலைக்கழகங்களுக்குள் ஈடுபடுத்துவது, தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். அரசாங்கத்தின், கல்வியை இராணுவமயமாக்கும் மற்றும் தனியார்மயமாக்கும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது, முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) செயற்பாட்டாளர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள், ஆசிரியர்களின் ஊதியப் போராட்டத்தின் போது மிகக் கொடூரமாக அம்பலத்துக்கு வந்தது. அதை கொடூரமான முறையில் நசுக்குவதாக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் உறுதிபூண்டுள்ளனர்.

இந்த அரச அடக்குமுறையின் கீழ், நசுக்கப்படும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கக் கூடிய திறனுள்ள வரலாற்று சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். அதனாலேயே பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும் என்றும், முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ முறைமைக்கு எதிராகப் போராடுவதற்காக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் பணிக்குத் மாணவர்கள் தோள்கொடுக்க வேண்டும் என்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மீண்டும் வலியுறுத்துகிறது.

ஆனால், பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையில் இருக்கும் அ.ப.மா.ஒ. இதற்கு முற்றிலும் எதிரானதாகும். உருகுணை பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று நிர்வாகியின் கருத்து தொடர்பில் அ.ப.மா.ஒ. நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அதன் தலைவர்கள், “இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க மனித உரிமை அமைப்புகளுக்கும் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்வதாக” கூறினர். மாணவர்கள் தொழிலாளர்களின் பக்கம் திரும்புவதை தடுத்து, முதலாளித்துவ அமைப்பின் ஒரு பகுதியான மனித உரிமை அமைப்புகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் பின்னால் மாணவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்க அ.ப.மா.ஒ. மற்றும் அதற்கு தலைமை வழங்கும் முன்நிலை சோசலிசக் கட்சியும் நனவுடன் வேலை செய்கின்றன.

அ.ப.மா.ஒ. இன் மேற்கூறிய பிற்போக்குக் கொள்கைக்கு எதிராக, மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் கல்வி-சாரா மற்றும் கல்வி-சார் ஊழியர்களுடன் இணைந்து, தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கி, பின்வரும் கோரிக்கைகளின் கீழ் போராட வேண்டும்.

  • பொலிஸ் உளவாளிகளின் அடையாளத்தை வெளிப்படுத்தி அவர்களை உடனடியாக பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற்று!
  • பல்கலைக்கழகங்களில் தாம் விரும்பும் அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்கவும் அதற்கு உரிய அமைப்புகளை உருவாக்குவதற்கும் உள்ள கட்டுப்பாடுகளை அகற்று!
  • கைது செய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை உடனடியாக விடுதலை செய்!

'பல்கலைக்கழகங்களில் அரச உளவாளிகள் அமர்த்தப்படுவதை எதிர்த்துப் போராடுங்கள்!' என்ற தலைப்பில், 13 அக்டோபர் 2020 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், நாங்கள் கூறியதாவது:

“முதலாளித்துவ முறைமையின் அமைப்பு ரீதியான நெருக்கடியில் இருந்து ஊற்றெடுக்கும் இந்தத் தாக்குதல்களை, முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் அகற்ற முடியாது. எனவே, அரச அடக்குமுறையைத் தோற்கடித்து கல்விக்கான உரிமையைப் பாதுகாப்பதற்குன போராட்டம், முதலாளித்துவ அரசாங்கங்களையும் முதலாளித்துவ அமைப்பையும் தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்ட, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.”

மேற்கண்ட வேலைத் திட்டத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் பிரச்சாரங்கள், கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்ய ஐ.வை.எஸ்.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. அனைத்து மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்கவும், பல்கலைக்கழகங்களில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளைகளை உருவாக்கவும் முன்வர வேண்டும் என்றும் நாங்கள் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Loading