பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி வலதுசாரி ரோபிரேடோவின் பிரச்சாரத்தை ஆதரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் (CPP), அதன் அரசியல் நிலைப்பாட்டை பின்பற்றும் ஒரு தொடர் அமைப்புகளும், மே 2022 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு முதலாளித்துவ வேட்பாளருடன் கூட்டணி அமைக்க போராடி வருகின்றன.

பேச்சுவார்த்தைகள் மற்றும் பின் அறை ஒப்பந்தங்களுக்குப் பின்னர், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து, நவம்பர் 13 அன்று தங்கள் செனட்டர் பதவிக்கான பட்டியலை அறிவித்தனர். உத்தியோகபூர்வ வேட்பாளர்களின் இறுதி பட்டியல் பிலிப்பைன்ஸில் வரலாற்றில் மிகவும் வலதுசாரி மற்றும் பாசிச தேர்தல் பட்டியல் ஆகும்.

Makabayan poster, Neri Colmenares, Facebook, 16 November 2021

முன்னாள் சர்வாதிகாரியின் மகன் பேர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர், துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபரின் மகள் சாரா டுரேற்ற-கார்பியோ உடன் போட்டியிடுகிறார். மார்க்கோஸ் ஆட்சியின் சித்திரவதை அமைப்பின் தலைவரான பன்பிலோ லாக்ஸன் மற்றும் வலதுசாரி ஜனரஞ்சகவாத மேயரான இஸ்கோ மொரேனோ ஆகியோரும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

தற்போதைய துணை ஜனாதிபதி லெனி ரோபிரேடோ, டுரேற்றவிற்கு எதிரான முதலாளித்துவ பிரிவிற்கு தலைமை தாங்குவதுடன் மற்றும் வாஷிங்டனின் வலுவான ஆதரவைக் கொண்டுள்ளார். மார்க்கோஸ், நாட்டின் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை பெய்ஜிங்கை நோக்கி அதிகளவில் செலுத்தும் டுரேற்ற இன் கொள்கையைத் தொடர விரும்புவதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு அரசியல் அமைப்பான 1 சாம்பாயான் இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீனாவுடன் ஒத்துழைக்காமல் எதிர்க்கும் ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஒப்புதல் அளிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. 1சாம்பயன் ரோபிரேடோவைத் தேர்ந்தெடுத்தது.

ரோபிரேடோவின் பிரச்சாரம் எல்லாவற்றிற்கும் மேலாக நடுத்தர வர்க்க அடுக்குகளை நோக்கியதாக உள்ளது. அவர் பாசிச டுரேற்றவிற்கு எதிராக, ஒரு சிநேகிதபூர்வமான மற்றும் பகுத்தறிவான அரசியல் பிரமுகராக தன்னை முன்வைக்கிறார். ஆனால் சட்டம்-ஒழுங்கிற்கான கோரிக்கைகளை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருக்கிறார். அவர் அன்டோனியோ டிரில்லேன்ஸ் உட்பட பிற்போக்குத்தனமான நபர்களைக் கொண்ட ஒரு செனட்டர்கள் குழுவைக் கூட்டியுள்ளார். டிரில்லேன்ஸ் இராணுவ சதித்திட்டத்தின் முன்னணி சதிகாரராகவும், தீவிர வலதுசாரி அரசியல் கட்சியான மக்டலோவின் தலைவராகவும் பிரபலமடைந்தவராவார்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அதன் ஐம்பதாண்டு கால வரலாற்றில் ஒருபோதும் ஒரு சுதந்திரமான அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்ததில்லை. தேர்தல் சுழற்சிகள் என்பது ஆளும் உயரடுக்கின் ஒரு பிரிவினருடன் அது ஒரு கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகளாகும். இரண்டு கட்டப் புரட்சி என்ற ஸ்ராலினிச தத்துவத்தை அவர்கள் வலியுறுத்துவதுடன் மற்றும் சோசலிசத்திற்கான எந்தவொரு போராட்டத்திற்கும் முன்னதாக தேசிய மற்றும் ஜனநாயகப் பணிகள் எல்லாவற்றிற்கும் மேலாக, நிலச் சீர்திருத்தம் முதலில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். இதை ஒரு 'மார்க்சிச' முன்னோக்கு என்று பொய்யாக முன்வைத்து, முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதி இந்த முதல்கட்டத்தில் ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த அடுக்கை 'தேசிய முதலாளித்துவம்' என்று அழைக்கின்றனர். மேலும் ஒவ்வொரு தேர்தல் காலத்தின் தொடக்கத்திலும் ஆளும் வர்க்கத்தின் ஏதாவது ஒரு பிரதிநிதியின் மீது இந்த முத்திரையைப் பதிக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அது கருத்தியல் தலைமையை வழங்கும் பல்வேறு அரசியல் அமைப்புக்கள் இந்த உடன்பாட்டிலிருந்து இலாபம் ஈட்டுகின்றன. உயரடுக்கு அரசியல்வாதிகளுக்கான பிரச்சார நிதியானது பளபளப்பான பதாகைகள், பயணச் செலவுகள் மற்றும் அவர்களது ஸ்ராலினிச கூட்டாளிகளின் சம்பளம் ஆகியவற்றிற்குச் செலுத்தப்படுகிறது.

மார்க்சிசம் மற்றும் புரட்சியின் பதாகையைப் பயன்படுத்தி ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்குப் பின்னால் வெகுஜன ஆதரவைக் கொண்டு வருவதால் கடந்த அரை நூற்றாண்டு காலமாக பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி பிலிப்பைன்ஸ் அரசியலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இது கொடூரமான துரோகங்கள், பொய்கள் மற்றும் ஒரு முதலாளித்துவ நபருக்கு பின்னர் இன்னொருவரை முன்கொண்டுவரும் வரலாறாகும். பிலிப்பைன்ஸில் ஆளும் உயரடுக்கின் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி போல எந்த சக்தியும் பொறுப்பேற்கவில்லை. ஸ்ராலினிசக் கட்சி ஒவ்வொரு பெரிய சமூகப் போராட்டம், வேலைநிறுத்தம் மற்றும் எழுச்சி ஆகியவற்றில் தலையிட்டு, தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் சமூக கோபத்தை கட்சியின் முதலாளித்துவ கூட்டாளிகளின் நலன்களுக்குப் பின்னால் திசை திருப்புகின்றது.

தற்போதைய தேர்தலின் தீவிர வலதுசாரி தன்மை இந்த வரலாற்றின் நேரடி விளைவாகும். எல்லாவற்றிற்கும் மேலாக பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி தான் ரோட்ரிகோ டுரேற்ற அதிகாரத்திற்கு வருவதற்கு உதவியது. தெற்கு நகரமான டாவோவின் மேயராக அவர் பல தசாப்தங்களாக அவர்கள் அவரை ஆதரித்து தேசியளவிலான முக்கியத்துவத்தை பெற அவருக்கு உதவியதுடன் மற்றும் அவரது பாசிச, கொலைகார அரசியலை மறைத்தது. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அதன் வரலாறு முழுவதும் பிலிப்பைன்ஸ் மக்களின் வறுமை மற்றும் ஒடுக்குமுறைக்கு பிற்போக்குத்தனமான மற்றும் இனவாத தேசியவாதமே தீர்வாகும் என்ற கருத்தை வளர்த்து வந்துள்ளது. இன்று நாட்டில் நிலவும் மோசமான அரசியல் சூழலை அவர்களே சாத்தியமானதாக்கினர்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சின் அரசியலின் திவால்நிலை பரவலாக நன்கு அறியப்பட்டதும், மேலும் இது பற்றி பல தடவை குறிப்பிடப்பட்டுமுள்ளது. டுரேற்ற இற்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கும் ஆதரவை ஆவணப்படுத்தி வரலாற்றாசிரியர் ஜோசப் ஸ்காலிஸ் இனால் நிகழ்த்தப்பட்ட கடந்த ஆண்டு விரிவுரையும் மற்றும் ஸ்ராலினிச தாக்குதல்களுக்கு எதிராக அவரை பாதுகாக்கும் உலக சோசலிச வலைத் தளம் மூலமான பிரச்சாரமும், கட்சியின் பொய்களை முற்றிலும் அம்பலப்படுத்தியது.

2022 தேர்தல் காலம் திறந்தவுடன், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சின் தேசிய ஜனநாயகக் கொள்கையைப் பின்பற்றும் பல்வேறு அரசியல் குழுக்களின் குடை அமைப்பான மக்காபயான், லெனி ரோபிரேடோவுடன் கூட்டணி அமைக்க முயன்றது. மக்காபயான் செனட்டர் பட்டியல் வேட்பாளர் நேரி கோல்மனாரஸ் தீவிர வலதுசாரி மக்டலோ கட்சியுடன் இணைந்து 1சம்பாயனின் ஸ்தாபக உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில், ரோபிரேடோவின் வேட்புமனுவை மக்காபயான் ஆமோதித்தது.

அக்டோபரில், ரோபிரேடோ தனது செனட்டர் பட்டியலை அறிவித்தார். ஆனால் 'ஒதுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிக்கு' ஒரு இடத்தை ஒதுக்கிவைத்தார். மக்காபயான் கோல்மெனாரஸை அவரது பட்டியல் இடம்பெற சமூக ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார், அதற்கு பதிலாக தீவிர கம்யூனிச எதிர்ப்பு மீது நிறுவப்பட்ட ஒரு தொழிலாளர் சங்க குடை அமைப்பான சுதந்திர தொழிலாளர் கூட்டமைப்பின் (FFW) தலைவர் சோனி மட்டுலா இனை தேர்ந்தெடுத்தார்.

கோல்மனாரஸ் மற்றும் மக்காபயானின் மற்ற செனட்டர் வேட்பாளரும் கில்சாங் மாயோ யூனோ (KMU) தொழிலாளர் அமைப்பின் தலைவரான எல்மர் லாபோக், குத்துச்சண்டை வீரராக மாறிய அரசியல்வாதியான மேன்னி பாக்கியோவின் செனட்டர் பட்டியலில் விருந்தினர் இடங்களைப் பெற்றனர்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சின் நிறுவனரும் கருத்தியல் தலைவருமான ஜோஸ் மா. சிஸன் அக்டோபர் 31 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு, ரோபிரேடோ 'டுரேற்றவின் ஒரு மிருதுவான பதிப்பு' என்று அறிவித்தார். மேலும் அவர் 'மக்கள் சார்பு' மற்றும் 'தொழிலாளர் சார்பு' என்று அவர் அழைத்த பாக்கியோவின் ஜனாதிபதி பிரச்சாரத்தில் மக்காபயான் பங்கேற்றதை பாராட்டினார். பாக்கியோ சமீப காலம் வரை டுரேற்ற யின் முக்கிய ஆதரவாளராக இருந்ததுடன், மேலும் அவர் ஒரு வலதுசாரி பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். அத்துடன் மரண தண்டனையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கும், குற்றவாளிகளின் வயதை பன்னிரண்டாக குறைப்பதற்கும் உறுதிபூண்டுள்ளார்.

இருப்பினும், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, பாக்கியோ உடன் திருப்தி அடையவில்லை. நடுத்தர வர்க்க மனநிலை ரோபிரேடோவுக்குப் பின்னால் எதிர்க் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நிற்பதால், மேலும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அதை பின்பற்றும்.

உலக சோசலிச வலைத் தளம் டிசெம்பர் 1 பின்வருமாறு எழுதியிருந்தது:

ரோபிரேடோவின் கணக்கீடுகளில் முக்கியமானது பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (CPP) வரம்பற்ற சந்தர்ப்பவாதமாகும், அவர்கள் அவரது வேட்புமனுவுக்கு ஆதரவை வழங்க முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் போக்கைப் பின்பற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகளான மக்காபயான், பாயன், பாயன் மூனா ஆகியவை அவர் எந்தக் கூட்டணியையும் பகிரங்கமாக நிராகரித்தாலும், அவரது பிரச்சாரத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதை நிரூபித்துள்ளனர்.

இந்த மதிப்பீடு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 21 அன்று லெனி ரோபிரேடோ 'மிகவும் நம்பகமான எதிர்க் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்… லெனியின் பட்டியலில் நேரி [கோல்மெனாரஸ்] சேர்க்கப்படாதது நல்லதல்ல. அப்படியிருந்தும், இது டுரேற்ற மற்றும் மார்கோஸுக்கு எதிரான ஒரு கூட்டுப் போராட்டமாக இருக்க வேண்டும்... எங்களுக்கு இன்னும் ஒரு ஐக்கிய முன்னணி தேவை.' அவர் ஒரு 'டுரேற்றவின் மிருதுவான பதிப்பு' என்று மூன்று வாரங்களுக்கு முன்னரான தனது மதிப்பீட்டைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த ஆதரவு ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. நவம்பர் 16 அன்று, கோல்மனாரஸ், மக்காபயான் தனது பிரச்சாரத்திற்குத் தயாராகும் பதாகைகளின் படங்களை முகநூலில் பகிர்ந்துள்ளார். அதில் மிக முக்கியமாக இடம்பெற்ற லெனி ரோபிரேடோவின் கீழ் கோல்மெனரேஸ் மற்றும் லபோக் ஆகியோர் காணப்பட்டனர்.

அவர்களின் ஆதரவை அவர் நிராகரித்த போதிலும், மக்காபயான் இரகசியமாக ரோபிரேடோவுக்காக பிரச்சாரம் செய்ய தயாராகி வந்தது. இதே விதத்தில், அவர்கள் அதிகாரப்பூர்வமாக போட்டி வேட்பாளரான கிரேஸ் போவுடன் கூட்டணி வைத்திருந்த போதும் மக்காபயான் 2016இல் டுரேற்றவை ஆதரிக்கும் வெளியீடுகளை இரகசியமாக அச்சிட்டது.

2016 இல் மக்காபயானின் பதாகை 24 ஏப்ரல் 2016 இல் ஆயிக் கஸிலோவின் முகநூல்

நவம்பர் 26 அன்று ரோபிரேடோ உயர்மட்ட இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து உள்ளூர் கம்யூனிஸ்ட் ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேசிய பணிக்குழுவிற்கு (NTF-ELCAC) தனது ஆதரவை அறிவித்தபோது ரோபிரேடோவிற்கு அவர்கள் ஆதரவளிப்பதில் மக்காபயான் ஒரு கடுமையான தடைகளை சந்தித்தது. NTF-ELCAC 2018 இன் பிற்பகுதியில் பாரிய நிதியளிப்பு மற்றும் அடக்குமுறைக்கான ஆணையுடன் உருவாக்கப்பட்டது. அதன் அதிகாரங்களில் பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட எவரையும் பிடிவராந்து இல்லாமல் கைது செய்யும் திறன் உள்ளது. மேலும் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தப்பட்டது.

மக்காபயானும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் நடுத்தர வர்க்கக் கருத்துக்களுக்கு மிகவும் உணர்திறன் உடையவர்கள். மேலும் ரோபிரேடோவை விமர்சிப்பது இந்த சமூக அடுக்கின் கோபத்தை அவர்களுக்குச் உருவாக்கிவிடும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் NTF-ELCAC இன் அனுசரணையில் அவர்களது சொந்த அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளனர்.

2016 இல் டுரேற்ற நிர்வாகத்தின் அமைச்சரவை உறுப்பினராக பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூடி டகுய்வாலோ, ரோபிரேடோவுக்கு ஒரு பொதுக் கடிதம் எழுதினார், “அன்புள்ள VP லெனி, டுரேற்ற இன் மனித உரிமை மீறல்கள் மற்றும் மார்கோஸின் பயங்கரவாத மரபுக்கான உங்களது கடுமையான கண்டனத்திற்காக பலரைப் போலவே நானும் உங்களை ஆதரிக்கிறேன். பலரைப் போலவே, மோசமான NTF-ELCAC இல் உங்கள் நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றம் குறித்து ஒரு தெளிவுபடுத்தலை நான் விரும்புகிறேன்... விரைவில் உங்களிடமிருந்து ஒரு தெளிவுபடுத்தலைப் படிக்க விரும்புகிறேன். நன்றி.'

கோல்மெனாரஸ் இன்னும் கடுமையான பொது அறிக்கையை எழுதினார். “பல தசாப்தங்களாக நீடித்த ஆயுத மோதல்களுக்கான வேர்களுக்கு கவனம்செலுத்துவதன் மூலமும் இதனை சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதன் மூலமாகவே மட்டுமே தீர்க்கப்படும் என்ற எங்கள் கருத்தை துணை ஜனாதிபதி லெனி ரோபிரேடோ பகிர்ந்து கொள்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இந்த மோதல் வரலாற்று மற்றும் ஆழமாக வேரூன்றிய சமூக அநீதிகளிலிருந்து உருவாகிறது என்பதை அவர் அறிவார். வி.பி.லெனியின் அமைதிக்கான விருப்பத்தின் பின்னால் மக்கள் உள்ளனர். NTF-ELCAC இன் இராணுவவாத, வன்முறை மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதரிக்காமல் பிலிப்பைன்ஸின் ஆயுதப் படைகள் [AFP] உடன் அவர் நல்ல உறவைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்”.

NTF-ELCAC க்கு எந்த இடத்தையும் கொடுப்பதற்கு மக்காபயான் மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் சாமானிய உறுப்பினர்களிடையே ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. டுரேற்ற நிர்வாகம் அதனது கம்யூனிச எதிர்ப்பு குறிச்சொல்லைப் பயன்படுத்தி நல்ல பல ஆர்வலர்கள் கொல்லப்பட்டதை, நியாயப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், மக்காபயானின் தலைமை, NTF-ELCAC இற்கு ரோபிரேடோ ஆதரவை அறிவித்ததில் இருந்து அவர்கள் இன்னும் பகிரங்கமாக அவருக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், அவருக்காக இரகசியமாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளது. டிசம்பரில், முகப்புத்தகங்களின் இடுகைகள் மூலம் தெளிவாக தெரிகின்றதுபோல் ரோபிரேடோ -லாபொக்-கோல்மெனாரிஸின் சுவரொட்டிகள் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

'லெனிக்கான தொழிலாளர் தலைவர்களின் கூட்டணி (ALL4LENI)' என்ற ரோபிரேடோவுக்காக பிரச்சாரம் செய்வதற்காக ஒரு தொழிலாளர் குழுவை உருவாக்குவதில் கோல்மெனரஸும் லாபோக் உம் சோனி மாதுலாவுடன் இணைந்தனர். ALL4LENI ஒரு அறிக்கையை வெளியிட்டு, ரோபிரேடோ 'NTF-ELCAC பற்றிய தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய' அழைப்பு விடுத்தது. கோல்மெனரஸும் லாபோக் உம் All4Leni இன் தலைவர்களாக உள்ளனர்.

தற்போதைக்கு மக்காபயான் தலைமை லெனி ரோபிரேடோவுக்காக பிரச்சாரம் செய்ய விரும்புகிறது, அதே நேரத்தில் தங்கள் சொந்த உறுப்பினர்களிடம் அதைப் பற்றி பொய் சொல்கிறது என்பது தெளிவாகிறது. திங்களன்று, ஐக்கிய இராஜ்ஜியத்தில் 1 சாம்பாயானின் ஒரு பிரிவு நிறுவப்பட்டது. அதற்கு கோல்மெனரஸ், லாபோக் ஆகியோர் ரோபிரேடோ மற்றும் அந்தோனியோ ரிலானஸ் உடன் ஒளிப்பதிவு செய்தி மூலம் வாழ்த்துக்களை வழங்கினர்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு அவர்களின் உயரடுக்கு கூட்டாளிகளின் நலன்களுக்கு சேவை செய்கிறது. 2016 இல் டுரேற்ற ஆட்சிக்கு வருவதற்கு அவர்கள் உதவியதைப் போலவே, இப்போதும் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு இன்னொரு மாபெரும் துரோகத்தைச் செய்யத் தயாராகி வருகின்றனர். இதற்கான சான்றுகள் பாரியளவில் உள்ளன.

Loading