முன்னோக்கு

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டுவீச்சு, குழந்தைகள் வேண்டுமென்றே கொல்லப்பட்டனர்

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனத்தை "பொதுமக்கள் இறப்பு கோப்புகள்" ஆவணப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை, நியூயோர்க் டைம்ஸ் பொதுமக்கள் இறப்பு கோப்புகள் (Civilian Casualty Files) என்ற முக்கிய புலனாய்வு அறிக்கையை வெளியிட்டது. இது நூற்றுக்கணக்கான இரகசிய பென்டகன் ஆவணங்களுடன், ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுவிட்டன என்பதை வெளிப்படுத்தியதுடன், இராணுவம் இதை திட்டமிட்டு மூடிமறைத்துள்ளதயும் காட்டியது.

பொதுமக்கள் இறப்பு கோப்புகள் விரிவான போர்க்குற்றங்களுக்கு சான்றாகும். ஒபாமா மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், குழந்தைகள் உட்பட பொதுமக்களை அமெரிக்க இராணுவம் வேண்டுமென்றே கொன்றது என்பதை அவை வெளிப்படுத்துகின்றன. பென்டகன் ஆவணங்கள் அச்சுறுத்தும்வகையில் மனித வாழ்க்கையின் மீதான ஒரு அவமதிப்பை வெளிப்படுத்துகின்றன.

Columbia Graduate School of Journalism இன் உதவிப் பேராசிரியரும் முதன்மை ஆசிரியரும் புலனாய்வாளருமான அஸ்மத் கான் இவ்விடயத்தை வெளிக்கொணர ஐந்து ஆண்டுகள் செலவிட்டார். பென்டகனின் உள் ஆய்வு செயல்முறையின் அறிக்கைகளுக்காக தகவல் சுதந்திரச் சட்டம் (FOIA) கோரிக்கைகளை அப்பெண்மணி தாக்கல் செய்தார். இந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதும், பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க மத்திய கட்டளையகத்திற்கு எதிராக ஆவணங்களை வெளியிடக் கோரி வழக்குத் தாக்கல் செய்தார்.

மே 15, 2017 அன்று ஒரு ஈராக்கிய சிறுவன் தனது பாரமான பொருட்களை இடிபாடுகளூடாக கொண்டு செல்கிறான்.(AP Photo/Maya Alleruzzo)

வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் தாக்கப்பட்டதாக வெளி தகவல்களிலிருந்து அமெரிக்க இராணுவம் ஒரு குற்றச்சாட்டைப் பெற்றால், பொதுவான மறுஆய்வு செயல்முறை தொடங்கப்பட்டு இறுதி அறிக்கை வெளியிடப்படும். செப்டம்பர் 2014 மற்றும் ஜனவரி 2018 க்கு இடையில் ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்கள் பற்றி 2,866 அறிக்கைகள் வெளியிடப்பட்டன. பொதுமக்கள் இறப்பு கோப்புகளுக்கு முன்பு, 'ஒரு டசினுக்கும் சற்று அதிகமாக' வெளியிடப்பட்டது. டைம்ஸ் பத்திரிகைக்கு 1,311 அறிக்கைகள் வழங்கப்பட்டன. அவற்றில் நூற்றுக்கணக்கானவை இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழப்புகள் பதிவாகிய அறிக்கைகளை 100க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று தப்பிப்பிழைத்தவர்களை நேர்காணல் செய்து கான் அவ்விடங்களின் வழங்கப்பட்ட சாட்சியங்களை சரிபார்த்தார். 'பொதுமக்கள் உயிரிழப்புகள் பற்றிய பல குற்றச்சாட்டுகள் தவறாக நிராகரிக்கப்பட்டன ... [மற்றும்] பொதுமக்களின் மரணங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டாலும் கூட, அவை பெரும்பாலும் குறிப்பிடத்தக்க அளவில் கணக்கிடப்படவில்லை' என்று அவர் கண்டறிந்தார்.

எடுத்துக்காட்டாக, ஜூலை 2016 இல் வடக்கு சிரியாவில் உள்ள டோக்கார் என்ற குக்கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவரது விசாரணையில் கண்டறியப்பட்டது. அமெரிக்க இராணுவம் ISIS ஐ குறிவைத்ததாகக் கூறியது. ஆனால் அதில் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள் என்பதற்கான ஆதாரங்களை எதிர்கொண்டபோது, 24 பேரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டது.

டோக்கரில் படுகொலை செய்யப்பட்ட இராணுவ அறிக்கை 'அலட்சியம் அல்லது தவறுக்கான எந்த ஆதாரமும் இல்லை' மற்றும் 'மேலும் நடவடிக்கை எதுவும்' தேவையில்லை எனக் கண்டுபிடித்தது. உயிர் பிழைத்தவர்கள் யாருக்கும் பணம் வழங்கப்படவில்லை. இதுவே அனைத்து அறிக்கைகளிலும் உள்ள மாதிரியாகும். இவை அனைத்தும் ஒரு பாரிய மூடிமறைப்பை காட்டுகின்றன.

எந்த ஒரு அறிக்கையிலும் தவறு இருப்பதாகக் கண்டறியப்படவில்லை அல்லது ஒழுங்கு நடவடிக்கைக்கான பரிந்துப்பும் இல்லை. பல சந்தர்ப்பங்களில், 'அவ்வாறான தாக்குதலை நடத்திய பிரிவே அதை விசாரித்து முடித்தது. 'டைம்ஸ் உடன் அநாமதேயமாகப் பேசிய ஒரு ட்ரோன் பதிவுகளின் ஆய்வாளர், 'உயர் அதிகாரிகள் 'கேமராக்களை வேறு ஏதாவது திசையை நோக்கி திருப்பச் சொல்வார்கள்'. ஏனெனில் 'மோசமான இலக்கைத் தாக்கியுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும்.'' பல சந்தர்ப்பங்களில் 'உபகரணப் பிழை' என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அதாவது காட்சிகள் எதுவும் பதியப்படவில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

'ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அவர்களில் பல குழந்தைகளின் மரணங்களை' அவர்கள் வெளிக்கொணர்ந்ததாக டைம்ஸ் அறிவித்துள்ளது. பென்டகன் அறிக்கைகளில் உள்ள தகவல்கள், பொதுமக்கள் உயிரிழந்த 27 சதவீத விமானத் தாக்குதல்களில் குழந்தைகள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் எனக் குறிப்பிட்டது. கான் இனால் தளத்தில் செய்யப்பட்ட சரிபார்ப்பில் இந்த எண்ணிக்கை 62 சதவீதம் என்று கண்டறியப்பட்டது.

கான் தனது கண்டுபிடிப்புகளை சுருக்கமாகக் பின்வருமாறு கூறினார்: “5,400 பக்கங்களுக்கும் அதிகமான பதிவுகளில் இருந்து வெளிப்படுவது என்னவெனில் ஒரு கூட்டுக்கொலையை அமைப்புரீதியாக தவிர்க்கமுடியாதது என ஏற்றுக்கொள்வதாகும். இராணுவத்தின் தர்க்கத்தில், ஒரு தாக்குதல், குடிமக்களுக்கு எவ்வளவு கொடியதாக இருந்தாலும், அது ஒழுங்காக முடிவெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் வரை ஏற்றுக்கொள்ளத்தக்கது. அத்துடன் பொதுமக்களின் ஆபத்துடன் இராணுவ ஆதாயத்தின் விகிதாசாரத்தை பார்க்கையில் தொடர் கட்டளைகளுக்கு இணங்கியிருக்கின்றது.

இன்னும் வெளிப்படையாகச் சொல்வதானால், அமெரிக்க இராணுவம் வேண்டுமென்றே குழந்தைகள் உட்பட பொதுமக்களைக் கொல்லத் தேர்வுசெய்து, ஒவ்வொரு அறிக்கையிலும் குறிப்பிடும் மிருகத்தனமான தந்திரோபாயக் கணக்கீட்டை பயன்படுத்துகிறது என்பதை அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு அறிக்கையும் அதிகாரத்துவ கிறுக்கெழுத்துகள் மற்றும் கொச்சைப்படுத்தல்களின் உறுமலின் கலவையை வெளிப்படுத்துகிறது. வாஷிங்டன் மத்திய கிழக்கு மக்களை தனது ஆதிக்கத்திற்கான பாதையில் கிடக்கும் கழிவுப்பொருட்களாகக் கருதுகிறது.

கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் 'சாய்ந்து' இருப்பதாக அறிக்கைகளில் மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக 'கட்டிடம் சாய்ந்து 4/1/3' என்று குறிப்பிடப்பட்டால் நான்கு ஆண்கள், ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளைக் கொண்ட கட்டிடமாகும் என அர்த்தப்படும். வெடிகுண்டு பகுதியில் இருந்து தப்பி ஓடுபவர்கள் 'பாய்ந்தோடி' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பின்னர் ட்ரோன்களால் வேட்டையாடப்பட்டு சுடப்படுகிறார்கள்.

மொசூலில் ஆளில்லா விமானங்களை இயக்குவோரின் கலந்துரையாடல் தகவல்தொடர்புகளின் ஒரு பதிவு, குழந்தைகள் இருப்பதை அறிந்த ஒரு கட்டிடத்தின் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, தங்கள் ட்ரோன்களுக்கு எவ்வளவு 'விளையாட்டு நேரம்' இருப்பதாக கேட்டனர். ஏனெனில் அந்த இடம் உண்மையில் 'தாக்கப்பட்ட' இடமாகும். மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 8 பொதுமக்கள் அதில் கொல்லப்பட்டனர்.

இந்த பதிவுகள் பின்னர் ஊடுருவமுடியாத அதிகாரத்துவ சுருக்கெழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன: 'ஒரு பொதுமக்கள் பாதிப்பு (CIVCAS) சம்பவம் நடந்தது.' ஒவ்வொரு அறிக்கையிலும் மூன்று சாத்தியமான கண்டுபிடிப்புகள் உள்ளன. அதனுடன் 'விபத்து அறிக்கை நம்பகமானது, மேலும் விசாரணை நடத்தவும்'; 'இது நம்பகமானது, இருப்பினும் நான் எந்த விசாரணையையும் நடாத்தவில்லை'; மற்றும் 'இது நம்பத்தகுந்ததல்ல' என்று மூன்றுவகையான வரையறைகள் உள்ளன.

தற்செயலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அறிக்கை, 'கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 25 என்று நான் முடிவு செய்கிறேன்.' கண்டுபிடிப்பு? நம்பகமானது, மேலும் விசாரணை இல்லை எனக் குறிப்பிடுகின்றது.

தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'நம்பகரமானதாக இல்லை' எனக் கருதப்படும் ஒரு அறிக்கை ஆகஸ்ட் 16, 2017 அன்று ரக்காவில் குழந்தைகள் உட்பட 6 முதல் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டது. ஒன்றரைப் பக்க அறிக்கை அந்தக் குற்றத்தை நிராகரிக்கிறது. ஒரு தேடுதலை கட்டுப்படுத்துவதற்காக அன்று பல வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, எனவே நம்பகத்தன்மையை பற்றி மதிப்பிடுவது நியாயமற்றது என்று அறிவிக்கப்பட்டது.

பென்டகன் அறிக்கைகளை ஆய்வு செய்கையில், அமெரிக்க இராணுவம் ஏதாவது ஒரு இலக்கிற்காக எத்தனை பொதுமக்களை கொல்லலாம் என்ற ஒரு கணக்கீட்டைப் பயன்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

மார்ச் 20, 2017 அன்று, வாஷிங்டன், சிரியாவின் டபாகாவில் உள்ள அடர்ந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை அறிந்திருந்தும் வெடிகுண்டு வீசியது. அந்த அறிக்கை கூறுகிறது, “இந்த இலக்கைத் தாக்குவதால் எதிர்பார்க்கப்படும் இராணுவ மதிப்பு, இலக்கின் செயல்பாட்டின் அடிப்படையில் [திருத்தப்பட்ட] உயிரிழப்பு வரம்பினால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது என்று இலக்கு நிச்சயதார்த்த ஆணையம் [TEA] தீர்மானித்தது. ... மக்கள் தொகை அடர்த்தி அட்டவணை கணிப்புகளிலிருந்து பெறப்பட்டு ... [திருத்தப்பட்ட] கூட்டு சேதம் மதிப்பிடப்படுகிறது. ஏற்றுக்கொள்ளக்கூடிய இறப்பு எண்ணிக்கை தெளிவாக குறிப்பிடமுடியாத'போரில் ஈடுபடாத மற்றும் பொதுமக்கள் இறப்பு மதிப்பை (NCV)' தாண்டக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது. அதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

எவ்வாறாயினும், பொதுமக்களைக் கொல்வதற்கான தேர்வு வெறுமனே மதிப்பிடப்பட்ட சராசரி மரணம் தொடர்பானதல்ல. அமெரிக்க இராணுவம் வேண்டுமென்றே அவர்கள் கேமராவில் பார்த்த குழந்தைகள் மீது குண்டுகளை வீசத் தேர்ந்தெடுத்ததாக அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. 'மனிதர்களின் இழப்புஎண்ணிக்கை' பற்றிய தனது கட்டுரையின் ஒரு குறிப்பாக சக்திவாய்ந்த பகுதியில், கான் எப்படி அமெரிக்க இராணுவம் தெரிந்தே கூரையில் விளையாடும் குழந்தைகளின் மீது குண்டுவீசி, 11 பேர் கொண்ட குடும்பத்தைக் கொன்றது என்பதை விவரிக்கிறார். அங்கு ISIS இன் பிரசன்னம் இருக்கவில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாரிய காட்டுமிராண்டித்தனத்தினை பொதுமக்கள் இறப்பு கோப்புகளில் இருந்து ஒருவர் புரிந்துகொள்கிறார். ஒன்றன் பின் ஒன்றான வான்வழித் தாக்குதலினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், குடும்பங்கள் மற்றும் வீடுகள் அழிக்கப்பட்டன.

பாக்தாத்தின் வடக்கே ஒரு அடுக்குமாடி வளாகத்தில் அமெரிக்க குண்டுகளால் தீப்பிடித்து 70 பேர் கொல்லப்பட்டனர். இதனால் 'இடம்பெயர்ந்தோர் முகாமில்' இருக்கும் ஒரு வயதான பெண்ணை கான் நேர்காணல் செய்தார். அவர் தனது 3, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று பேரக்குழந்தைகள் தீயில் இறந்ததாகத் தெரிவித்தார். 'வெடிபொருட்கள்' இருந்த வெள்ளை பைகள் ஒரு பருத்தி ஆலையில் இருந்து எடுக்கப்பட்டவை என நிரூபிக்கப்பட்டது; ஒன்பது தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஒரு வான் தாக்குதலில் “அடையாளம் காணமுடியாத கனமான பொருளை” சுமந்து சென்ற மனிதன் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இது 'குறுகிய உயரம் கொண்ட நபர்' என்று பின்னர் தெரியவந்தது. அவர்களினால் எரிக்கப்பட்ட ஒரு குழந்தையை தந்தை தூக்கிச் செல்லப்பட்டதை பென்டகன் இவ்வாறு விவரிக்கிறது. ISIS இலிருந்து தப்பியோடிய குடும்பத்தின் வாகனத்தின் மீதான வான்வழித் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அதில் தாய் 'இன்னும் தனது கைக்குழந்தையை மடியில் வைத்திருந்த நிலையில் இருக்கையில் எரிக்கப்பட்டார்'.

ஜனவரி 2017 இல் மொசூலில் அவர்கள் தங்கியிருந்த பள்ளி துல்லியமான வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியபோது குசே சாத்தின் மனைவி, நான்கு வயது மகன் மற்றும் 14 மாத மகள் உட்பட எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர் டைம்ஸிடம் “இங்கு நடந்தது விடுதலை அல்ல. இது மனிதகுலத்தின் அழிவு” என்று கூறினார்.

இராணுவத்தால் இதுவரை வெளியில் விடப்பட்ட அறிக்கைகள் ஈராக் மற்றும் சிரியாவுக்கானவையாகும். ஆப்கானிஸ்தான் தொடர்பாக எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவம் இழிவான முறையில் வெளியேறிய பின்னரே கான் அங்கு பொதுமக்களின் உயிரிழப்புகளைக் கண்டறியத் தொடங்கினார். அவர் எழுதுகிறார், 'அமெரிக்காவின் மிக நீண்ட போர், பல வழிகளில், மிகக் குறைவான வெளிப்படைத்தன்மையானது. பல ஆண்டுகளாக, இந்த கிராமப்புற போர்க்களங்கள் பெரும்பாலும் அமெரிக்க செய்தியாளர்களால் அடையமுடியாததாக இருந்தன. ஆனால் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கானிஸ்தானின் உள்பகுதிகள் திறக்கப்பட்டன. ஒரு கிராமத்தில் மட்டும் “சராசரியாக, ஒவ்வொரு குடும்பமும் ஐந்து குடிமக்களைக் கொண்ட குடும்ப உறுப்பினர்களை இழந்தது. இந்த இறப்புகளில் பெரும்பாலானவை விமானத் தாக்குதல்களால் ஏற்பட்டவை”.

ஜனாதிபதி பராக் ஒபாமா 2016 இல் 'நாங்கள் வரலாற்றில் மிகத் துல்லியமான விமானத் தாக்குதலை நடத்துகிறோம்' என பெருமையடித்தார். இதில் ஓரளவு உண்மை இருக்கிறது. மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை வாஷிங்டன் படுகொலை செய்தமை இலக்கு வைப்பதில் இருக்கும் தொழில்நுட்ப துல்லியமின்மையின் விளைவு அல்ல. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தந்திரோபாய நோக்கங்களுக்குத் தடையாக இருந்தால், யாரையும் —குழந்தைகளைக் கூட— கொல்வதற்கு இரத்தம்தோய்ந்த முறையில் கணக்கிடப்பட்ட விருப்பத்தை இது வெளிப்படுத்துகிறது.

பொதுமக்கள் இறப்பு கோப்புகள், மத்திய கிழக்கில் வாஷிங்டனின் போர்கள் தடையற்ற தொடர் போர்க்குற்றங்களை வெளியிட்ட மிக முக்கியமான அம்பலப்படுத்தலாகும். ஜூலியன் அசாஞ்ச் மூலம் முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட காட்டுமிராண்டித்தனம் உண்மையில் அமெரிக்கப் ஏகாதிபத்தித்தின் அடித்தளம் என்பதை இது நிரூபிக்கிறது. இதை ஆவணப்படுத்துவதில் அசாஞ்சிடம் இருந்த கொள்கைரீதியான தைரியத்திற்கு பதிலாக, அவருக்கு துன்புறுத்தல் மற்றும் சிறைவாசத்துடன் திருப்பிக் கொடுக்கப்பட்டது. அவர் அம்பலப்படுத்திய குற்றவாளிகளே அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முற்படுகின்றனர்.

ஒபாமா, ட்ரம்ப் மற்றும் அவர்களது உயர்மட்ட இராணுவத் தளபதிகளுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கும், பொதுமக்களால் ஒரு வீரனாக புகழப்படும் ஜூலியன் அசாஞ்சை விடுவிப்பதற்கும் டைம்ஸில் வெளியிடப்பட்ட உள்ளடக்கம் போதுமான ஆதாரமாக உள்ளது.

இருப்பினும், பொதுமக்கள் இறப்பு கோப்புகளில் காணப்படும் அதிர்ச்சியூட்டும் எண்கள் ஒரு மிகக் குறைத்து மதிப்பிடப்பட்டதாகவே உள்ளது. ஏனெனில் கான் இனால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் ஒரு பகுதியை மட்டுமே ஆவணப்படுத்த முடிந்தது. சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க குண்டுகளால் உருவாக்கப்பட்ட இடிபாடுகள் இந்த அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை விட அதிகமான பொதுமக்களின் சடலங்களை மூடியிருக்கின்றன.

டைம்ஸ் அறிக்கை முழு அமைதியுடன் வரவேற்கப்பட்டது. இதுபற்றி ஒரு செனட் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அமெரிக்க ஆளும் வர்க்கத்தை ஒரு அதிர்ச்சியின் பாசாங்கினால் கூட எழுப்ப முடியாது. ஏனெனில் அவர்கள் அமெரிக்காவில் பாரியளவிலான மரணத்தை தீவிரமாக மேற்பார்வையிடுகின்றனர்.

மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாக வாஷிங்டனின் கொலைவெறிக் கொள்கைகளுக்கும், அமெரிக்காவிற்குள் மனித உயிர்கள் மீது அமெரிக்க முதலாளித்துவத்தின் முழுமையான அலட்சியத்திற்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. ஒரேவிதமான காட்டுமிராண்டித்தனமான கணக்கீடுகள் இங்கு இயங்குகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குள், அமெரிக்காவில் 800,000 பேர் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர். ஆனால் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க ட்ரம்ப் அல்லது பைடென் எதுவும் செய்ய மாட்டார்கள். அத்தியாவசியமற்ற அனைத்து பணியிடங்கள் மற்றும் பள்ளிகளை மூடும் விஞ்ஞானரீதியில் அவசியமான நடவடிக்கைகள், மக்களுக்கு வழங்குவதற்கான பெருமளவிலான மானியங்கள் இலாபத்தின் உற்பத்தியை பாதிக்கும் எனக் கூக்குரலிடப்படுகின்றது.

தங்கள் நலன்களை பாதுகாக்கும் இராணுவ மேல்தட்டினரைப் போலவே, முதலாளிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உயிரிழப்பு எண்ணிக்கையை கணக்கிட்டு குழந்தைகளை குறிவைக்கிறார்கள். பாரியளவிலான மரணம் என்பது, அவை நிதியச் சந்தைகளின் தடையற்ற வளர்ச்சியை உறுதி செய்யும் வரை ஆளும் வர்க்கத்திற்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது மட்டுமல்லாது அவர்கள் அதை வரவேற்றக்கூட செய்வார்கள்.

Loading