Don’t Look Up விஞ்ஞானம் எதிர் மனிதகுலத்தை பயமுறுத்தும் ஒரு மரணப் பேரழிவு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இயக்கம்: ஆடம் மெக்கேய்

2020 இலையுதிர்காலத்தில் COVID-19 தொற்றுநோயின் எழுச்சியின் மத்தியில் காலநிலை மாற்றத்தின் ஆபத்துகள் குறித்து டொனால்ட் ட்ரம்புக்கு நினைவூட்டப்பட்டபோது, “உண்மையில் விஞ்ஞானத்திற்கு தெரியும் என்று நான் நினைக்கவில்லை' என்று பதிலளித்தார். காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய் ஆகிய இரண்டிலும் விஞ்ஞானபூர்வ உண்மைக்கான ட்ரம்பின் வெளிப்படையான வெறுப்பு தனிப்பட்ட ட்ரம்ப்பின் பிரதிபலிப்பல்ல மாறாக முதலாளித்துவத்தின் அறிவுசார் மற்றும் தார்மீக சீரழிவின் அறிகுறியாகும்.

நிச்சயமாக, இது தனிப்பட்ட ட்ரம்பின் கூற்றாக மட்டும் இருக்கவில்லை. அதிகரித்து வரும் பங்குச் சந்தையை அச்சுறுத்தும் தொற்றுநோய் பற்றிய உண்மைகளை மறைப்பது உட்பட, விஞ்ஞானத்தின் மீதான அவர்களின் சொந்த தாக்குதல்களுக்கு உடந்தையாக ஜனநாயகக் கட்சியினரும், தற்போதைய பைடென் நிர்வாகமும், நோய்க் கட்டுப்பாட்டு மையத்தில் (CDC) உள்ள அதன் அரசியல் அடியாட்களும் இருந்து வருகிறார்கள்.

டோன்ட் லுக் அப் இல், ஒரு இருண்ட நகைச்சுவையில் இதுபோன்ற வாழ்வும் சாவும் பற்றிய கேள்விகள் பல்வேறு அளவிலான வெற்றிகளுடன் கையாளப்படுகின்றன, இதில் விஞ்ஞானிகள் ஆறு மாதங்களில் பூமியைத் தாக்கும் வால்மீனைப் பற்றி உலகிற்கு எச்சரிக்கை செய்ய முயற்சிக்கின்றனர். பேர்னி சாண்டர்ஸின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான முன்னாள் ஆலோசகரும் ஜாக்கோபின் ஏட்டின் பங்களிப்பாளருமான டேவிட் சிரோட்டாவின் கதையில் இருந்து இந்தப் படத்தினை எழுதி இயக்கிய ஆடம் மெக்கேய், Succession, Vice, The Big Short, Anchorman ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இத் திரைப்படம் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் விஞ்ஞான-விரோத முட்டாள்தனம், குற்றவியல்தனம், அத்துடன் பெருநிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகங்களின் ஊழல் தொடர்புகளை வெளிப்படுத்திக்காட்டுகிறது.

டோன்ட் லுக் அப் படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜெனிபர் லாரன்ஸ்

உலகளாவிய COVID-19 தொற்றுநோய்க்கு முன்னர், இயக்குனர் மெக்கேய் திரைப்படத்தில் பணியாற்றத் தொடங்கியபோது, அவர் காலநிலை மாற்றத்தின் பிரச்சினையில் கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தார். எவ்வாறாயினும், முற்றிலும் தவிர்க்கக்கூடிய ஒரு பேரிழிவாக இருந்த சமூகத்தைத் தாக்கி அழித்த ஒரு வைரஸால், மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதைக் கண்ட பார்வையாளர்களிடம் படத்தின் கருப்பொருள்கள் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

டோன்ட் லுக் அப் (மேலே பார்க்காதே), தற்போது Netflix இல் மிகவும் பிரபலமான திரைப்படமாக இருந்தாலும், முழு வெற்றியடையவில்லை அல்லது திருப்திகரமாக இல்லை. இது சில சமயங்களில் சற்று முரட்டுத்தனமானதாகவும், மேலும் அதன் தொனி தளர்ச்சியுற்றும் மோசமானதாகவும் இருக்கிறது. பொது மக்களை அவமதிப்பதால் அது, படத்தினை பலவீனப்படுத்தியுள்ளது. ஆயினும்கூட, பல காட்சிகள் அவற்றின் முற்றிலும் நியாயமான அவசரம் மற்றும் ஆத்திரம் ஆகியவற்றிற்காக தனித்து நிற்கின்றன.

மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டி பட்டதாரி மாணவரும், வானியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுக்கொள்ளவிருப்பவருமான கேட் டிபியாஸ்கி (ஜெனிஃபர் லாரன்ஸ்) பின்னிரவு ஒன்றில் தொலைநோக்கி அவதானிப்புகளை மேற்கொண்டபோது, ஒரு பெரிய வால் நட்சத்திரத்தை கண்டுபிடிப்பதுடன் படம் தொடங்குகிறது. அவர் தனது கண்டுபிடிப்பினை தனது ஆலோசகரான டாக்டர். ராண்டால் மிண்டியிடம் (லியோனார்டோ டிகாப்ரியோ) கூறுகிறார், அவர் ஒரு பெரும் பாறை ஒன்று இன்னும் அரையாண்டில் பூமியைத் தாக்கும் மற்றும் கிரகம் முழுவதும் அழிவு நிகழ்வினை ஏற்படுத்தும் என்று அதிர்ச்சி தூண்டும் கணக்கீட்டை செய்கிறார்.

டாக்டர். மிண்டி, நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலக இயக்குனர், டாக்டர் டெடி ஓக்லெதோர்ப் (Rob Morgan) க்கு தெரிவிக்கிறார், அவர் ஜனாதிபதி ஜானி ஓர்லியனை (Meryl Streep) வெள்ளை மாளிகையில் சந்திக்க ஏற்பாடு செய்கிறார். பல முன்னாள் ஜனாதிபதிகளின் பாசாங்குத்தனங்கள் மற்றும் தவறுகளுடனான ஒரு கலவையை ஓர்லியன் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது.

டாக்டர். மிண்டி மற்றும் டிபியாஸ்கி ஆகியோர் ஜனாதிபதி ஓர்லியன் மற்றும் அவரது மகன் மற்றும் தலைமைப் பணியாளர் ஜேசன் ஓர்லியன் (Jonah Hill) ஆகியோருக்கு சமூகம் முகம்கொடுக்க இருக்கும் பயங்கரமான சூழ்நிலையை தெரிவிக்கும்போது, அவர்கள் அதையிட்டு அக்கறையற்றிருப்பதுடன் கேளிக்கையாக பதலளிக்கின்றனர்.

டோன்ட் லுக் அப்

டாக்டர். மிண்டி மற்றும் டிபியாஸ்கி ஆகியோர் ஜனாதிபதி ஓர்லியன் மற்றும் அவரது மகன் மற்றும் தலைமைப் பணியாளர் ஜேசன் ஓர்லியன் ஆகியோருக்கு இக்கட்டான சூழ்நிலையை விளக்கும்போது, ஜேசனால் மீண்டும் ஒருமுறை கேலி செய்யப்பட்டு தடங்கலுக்கு உள்ளாக்கப்படுகிறார். 'திருமதி ஜனாதிபதி அவர்களே, இந்த வால் நட்சத்திரத்தை நாங்கள் ஒரு கிரகக் கொலையாளி என அழைக்கிறோம்' என்று ஓக்லெதோர்ப் குறுக்கிட்டுக் கூறுகிறார்.

கடந்த இரண்டு சமீபத்திய நிர்வாகங்களை நினைவூட்டும் காட்சிகளில், வெள்ளை மாளிகை இந்த பேரழிவு யதார்த்தத்தினை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மேலும், ஜனாதிபதி இடைக்காலத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், பத்திரிகைச் செய்திகளின்படி, ஓர்லியனின் வெள்ளை மாளிகை பாலியல் ஊழலில் ஈடுபட்டு, 'முழு நெருக்கடி நிலையில்' உள்ளது.

டாக்டர். மிண்டியும் டிபியாஸ்கியும் நியூ யோர்க் ஹெரால்டுக்கு தகவலைக் கசியவிட்டனர். அதன் ஆசிரியர்கள், இணைய பாவனை அதிகரிப்பினை மற்றும் இணையத்தில் ஆர்வத்தினை தூண்டத் தவறியதால் அந்தச் செய்தியை கைவிடுகின்றனர். பிரபலங்களின் பல்வேறு கிசுகிசுக்கள் இவர்களது செய்தியை முடக்கிவிடுகின்றன. இரண்டு விஞ்ஞானிகளும் தி டெய்லி ரிப்பில், சர்க்கஸ் பாணியிலான பேச்சு நிகழ்ச்சியில் பேசுவதற்கு வரவழைக்கப்படுகிறார்கள். இது ப்ரீ எவன்டீ (Cate Blanchett) மற்றும் ஜாக் ப்ரெம்மர் (Tyler Perry) ஆகியோரால் 'பயங்கரமான செய்திகளை வெளிச்சம் போட்டு வைத்திருப்பது' என்ற நோக்கத்துடன் ஒளிபரப்பப்படுவது. அமெரிக்க தொலைக்காட்சிகளில் பரவியிருக்கும் ஆணவத்தையும் முட்டாள்தனத்தினையும் இணைத் தொகுப்பாளர்கள் இருவரும் வெளிப்படுத்திக்காட்டுகின்றனர்.

இதற்கிடையில், தொழில்நுட்ப பில்லியனர் BASH கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பீட்டர் இஷர்வெல் (Mark Rylance) வால் நட்சத்திரத்தைப் பற்றி அறிவதுடன், அதில் டிரில்லியன் டாலர்கள் மதிப்புமிக்க அரியவகைத் தாதுக்கள் இருப்பதை அறிந்து கொள்கிறார். வால் நட்சத்திரத்தைத் தாக்கியழிப்பதற்கான ஒரு விஞ்ஞான உத்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முதலில் வால் நட்சத்திரத்தில் உள்ள தாதுக்களை தோண்டி எடுக்க BASH தனது ராக்கெட்டுகளை அனுப்ப வேண்டும் என்று இஷர்வெல் வெள்ளை மாளிகையை நம்ப வைக்கிறார்.

கேட் (Kate) ஓரங்கட்டப்பட்ட நிலையில், டாக்டர். மிண்டி ராக்கெட் அனுப்பும் திட்டத்தின் முகமாக பதவி உயர்த்தப்படுகிறார் (அவரது நிலை மற்றும் ஊடக கவனத்தால் சற்று ஆச்சரியப்படுகிறார்), ஆனால் இஷர்வெல்லினால் அபிவிருத்தியடையும் பொறுப்பற்ற திட்டம் பேரழிவிற்கு வழிவகுக்கிறது. வால் நட்சத்திரம் கிரகத்தைத் தாக்கினாலும் வெள்ளை மாளிகை கவலைப்படப் போவதில்லை என்று கேட் இறுதியில் பொதுமக்களிடம் தெரிவிக்கும்போது, அது கலவரத்தைத் தூண்டுகிறது. வால் நட்சத்திரம் பூமியை நெருங்கும்போது, கேட் தனது வாழ்க்கையில் நுழையும் யூல் (Timothée Chalamet) என்ற பாதி மத சிந்தனை கொண்ட, அரைவேக்காட்டு அராஜகவாதியைச் சந்திக்கிறார்.

டோன்ட் லுக் அப் இல் தனித்துவமான சக்திவாய்ந்த மற்றும் பெருங்களிப்புடைய தருணங்கள் உள்ளன. ஜனாதிபதி ஓர்லியனுக்கு கிரகத்தை அழிக்கும் நெருக்கடி பற்றி தெரிவிக்கப்பட்டபோது, அவர் ஆரம்பத்தில் பதிலளித்தார், 'நேரடியாக விஷயத்திற்கு வருவோம். இது எனக்கு எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தும்?”

வால் நட்சத்திர அச்சுறுத்தலை எதிர்கொள்ளவதற்காக வாய்ச்சவாடலான ஒரு சூடான காற்று நிறைந்த குண்டுவீச்சு திட்டத்தை ஒரு போர்க்கப்பலில் அறிவிக்கையில், ஓர்லியன் ஒரு 'நிகழ்வு வெற்றியுடன் நிறைவடைந்த' தருணத்தையும் அனுபவிக்கிறார். மேலும் ஈராக் போரின் தொடக்கத்தில் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் செய்தது போல் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

டாக்டர். மிண்டி பின்னர் தி டெய்லி ரிப்பில் பேட்டி கொடுத்தபோது, 'கட்டுக்கடங்கா கோபம்' அடைகிறார். வால் நட்சத்திரத்தின் யதார்த்தத்தை நிராகரிக்கும் சதிக் கோட்பாட்டாளர்களுக்கு அவர் சவால் விடுக்கிறார். கேலி நிகழ்ச்சியின் முட்டாள்தனத்திற்கு பதிலளிக்கும் அபத்தமானது மிண்டிக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. “இதோ பார், பூமியை நோக்கி ஒரு பெரிய வால் நட்சத்திரம் வரப்போகிறது என்பதை நிறுவுவதன் மூலம் தொடங்குவோம். ஒரு பெரிய தொலைநோக்கி கண்ணாடி மூலம் எமது சொந்தக் கண்களால் பார்த்தபோதுதான் ஒரு வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொண்டோம். எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோது நாம் அந்த வால் நட்சத்திரத்தை திசைதிருப்பியிருக்க வேண்டும், ஆனால் நாம் அதைச் செய்யவில்லை. மாறாக அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை விமர்சித்து பொதுவெளியில் பேசியதற்காகவும், எதிர்ப்பு தெரிவித்ததற்காகவும் என்னைப் போன்ற விஞ்ஞானிகளை பணிநீக்கம் செய்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி பச்சைப் பொய் சொல்கிறார்! இந்த முழு நிர்வாகமும் புத்தியை இழந்துவிட்டது! நாம் அனைவரும் இறக்கப்போகிறோம் என்று நினைக்கிறேன்! பின்னர் அவர் சிஐஏ பயன்படுத்தும் சூழ்ச்சித்தனமான முறையில் வாயை மூடி, அவரது தலைக்கு மேல் ஒரு கருப்பு பை போர்த்தப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

யூல் ஆக சித்தரிக்கப்படும் சாலாமெட், படத்தில் பலவீனமான பாத்திரமாக இருக்கலாம். அவரும் ஏனைய இளைய கதாபாத்திரங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு அவமதிப்புடன் கருதப்படுகிறார்கள், இது ஒரு முக்கியமான பிரச்சனையாகும். அவர்களை நிலையற்றவர்களாக சித்தரிக்கப்படுவதுடன், மேலும் பொது மக்களும் கூட சமூக ஊடகங்கள் மற்றும் பிரபலங்களை பின்தொடரும் கலாச்சாரத்தினால் மிகவும் வெறித்தனமாக பீடிக்கப்பட்டவர்களாக இருப்பதாகவும் உண்மையை சிரத்தையாக எடுத்துக் கொள்ள முடியாதவர்களாக இருப்பதாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

இவை அனைத்தும், மெக்கேய் (ஆனால் வாரிசு மற்றும் பிற படங்களில், அவரது பங்களிப்புகள் வலுவானவை குறிப்பாக வைஸ்) மற்றும் குறிப்பாக சிரோட்டாவின் பார்வையில் உள்ள மிக ஆழமான குறைபாடுகளைப் பற்றி பேசுகின்றன. நேஷன் மற்றும் ஜாக்கோபின் ஆகியவற்றில் உள்ள தாராளவாத மற்றும் போலி-இடது தட்டுக்கள் மக்கள் மீதான சிரோட்டாவினது பொது இகழ்வைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இவை பேர்னி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்ட்டெஸ் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (மெக்கேய் DSA இன் உறுப்பினர்) ஆகியோரை ஆதரிக்கும் கூறுகள் ஆகும், இது ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவைத் தவிர வேறில்லை. கிளின்டனது பிரிவு மீதான தாக்குதல்கள் இதில் தெளிவாகத் தெரிகிறது, ஆனால் இறுதியில் இந்த 'இடதுகள்' ஜனநாயகக் கட்சியின் அரசியல் சுற்றுவட்டத்தில் செயல்படுபவையாகும்.

திரைக்கதை சில சமயங்களில் மோசமாக உள்ளது, மேலும் பல மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவைகள், ஒட்டுமொத்த படத்தைப் போலவே, மிகவும் ஆபாசமாகவும் மற்றும் அலுப்படிப்பதாகவும் இருக்கின்றன. ஸ்ரான்லி குப்ரிக் இன் டாக்டர் ஸ்ட்ரேஞ்சலோவ் (Dr. Strangelove 1964) மற்றும் சிட்னி லுமெட்டின் நெட்வொர்க் (Network 1976) ஆகியவற்றின் எதிரொலிகள் இருந்தாலும், எழுத்து மிகவும் தெளிவற்றதாகவும் ஒழுங்கமைக்கப் படாததாகவும் உள்ளது.

டோன்ட் லுக் அப் (2021)

டோன்ட் லுக் அப் இல் அமெரிக்காவில் இலாபத்திற்கு முன்னால் எப்படி எல்லாம் விஞ்ஞானம் அடிபணிய வைக்கப்படுகிறது என்பதை நிரூபிக்கும்போது, படத்தில் அது மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் அதிபர்கள், அரசாங்கம் மற்றும் ஊடகங்களுக்கு இடையேயான நெருக்கமான உறவு சீரற்ற முறையில் கேலி செய்யப்படுகிறது. வலதுசாரி ஊடக மிரட்டல்களும், பாசிச வகையறாக்களும் கேலி செய்யப்படுகின்றன.

படம் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது, நிக்கோலஸ் பிரிட்டெல்லின் இசை (வாரிசுக்கு ஒலிப்பதிவு செய்தவர்) மறக்கமுடியாதுள்ளது. திரைக்கதை மட்டுப்படுத்தல்கள் இருந்தபோதிலும், டிகாப்ரியோ, லாரன்ஸ், ஸ்ட்ரீப் மற்றும் பிளான்செட் ஆகியோர் தங்களால் முடிந்தவரை தங்கள் பாத்திரங்களை தீவிரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜூனியர் ட்ரம்ப் போன்று கைப்பொம்மையாக வரும் ஹில்லின் நையாண்டி நகைச்சுவைப் பாத்திரம் வேடிக்கை மிகுந்ததாக உள்ளது.

லாரன்ஸ் மற்றும் டிகாப்ரியோ, அவர்களால் முடிந்தளவுக்கு, தற்போதைய தொற்றுநோய் பிரச்சனைக்கும் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ஆபத்துகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் கண்டறிகின்றனர். Yahoo செய்தியின் படி, “உண்மையை அறிவதற்காக தமது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் தாம் கண்டறிந்த உண்மைகள் சொல்லப்படுவதை சிலர் விரும்பாததால் துடைத்துக்கட்டப்படுவதை பார்க்கும்போது மிகவும் கவலைக்கிடமாகவும் ஆத்திரமூட்டுவதகாவும் உள்ளது” என லாரன்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

'இந்தப் பிரச்சினையின் அவசரத் தன்மையைத் தெரிவிக்க முயன்று, செய்தித்தாளின் கடைசிப் பக்கத்திற்கு உட்பட்டு தங்களைப் போல் உணர்ந்த விஞ்ஞான சமூகத்தைச் சேர்ந்த, குறிப்பாக காலநிலை விஞ்ஞானிகள், நான் சந்தித்த பலரை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை இட்டு நான் நன்றியுள்ளவனாக இருந்தேன்.' என்று டிகாப்ரியோ மேலும் கூறினார்.

“பின்னர், நிச்சயமாக, இன்று கோவிட் தாக்கியது, இங்கு ஒரு புதிய விஞ்ஞானபூர்வ விவாதம் நடந்து கொண்டிருக்கிறது, குறிப்பிட்ட இந்த நிகழ்காலத்தின் ஒரு பகுதியாக வெளிவந்ததால் இது மிகவும் முக்கியமான ஒரு திரைப்படமாக இருக்கிறது.'

இதன் மட்டுப்படுத்தல்கள் பல இருந்தபோதிலும், தொற்றுநோய் பரவல் ஒரு புதிய மற்றும் கொடிய கட்டத்திற்குள் நுழைவதாலும், மில்லியன் கணக்கான மக்கள் இறந்த நிலையிலும், அரசியல் ஸ்தாபகம் விஞ்ஞானம் மற்றும் மனித உயிர்களை விட இலாபத்தினை முதன்மைப்படுத்துவதால், டோன்ட் லுக் அப் பொது மக்களிடையே பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Loading