பார்பேடோஸ் தன்னை ஒரு குடியரசாக அறிவிக்கிறது: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தனத்தினதும் காலனித்துவத்தினதும் மரபு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2018 ஆம் ஆண்டு முதல் பார்பேடோஸின் தலைமை ஆளுனராக இருந்த டாம் சாண்ட்ரா மேசன், இதுவரை நாட்டின் தலைவராக இருந்த பிரிட்டனின் மாகாராணி எலிசபெத்துக்கு பதிலாக கரீபியன் தீவான பார்பேடோஸின் ஜனாதிபதியாக நவம்பர் 30 அன்று பதவியேற்றார்.

பிரிட்டனில் இருந்து முறையான சுதந்திரத்தின் 55 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அவரது பதவியேற்பு விழா, பார்பேடோஸ் பிரிட்டிஷ் காலனியாக மாறிய 396 ஆண்டுகளுக்குப் பின்னரும், அமெரிக்க காலனிகள் மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் நுகத்தடியை தூக்கி எறிந்த சுமார் 250 ஆண்டுகளுக்குப் பின்னரும் வந்துள்ளது.

கடந்த ஆண்டு குடியரசாகும் திட்டத்தை அறிவித்த பார்பேடோஸ், 54 உறுப்பு நாடுகளின் நெகிழ்வான சங்கமான பொதுநலவாய நாடுகள் (Commonwealth) அமைப்பிற்குள்ளேயே இருக்க வேண்டும். இவை அனைத்தும் முன்னாள் பிரிட்டிஷ் காலனிகள் மற்றும் தற்போதைய அதனை சார்ந்த நாடுகள் ஆகும். இது பிரிட்டனின் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ஆதிக்கத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா, ஜமைக்கா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியா உட்பட வெறும் 15 நாடுகள் இன்னும் இராணியை தங்கள் அரச தலைவராகக் கொண்டிருக்கின்றன. பிரெக்ஸிட்டை அடுத்து 'உலகளாவிய பிரிட்டன்' பொதுநலவாய நாடுகள் உடனான அதன் உறவுகளை மீண்டும் புதுப்பிக்கும் என்ற பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வீண் வாரத்தையாடல்களுக்கு இது முரணாக உள்ளது.

பிரித்தானிய அரியணையின் வாரிசு இளவரசர் சார்லஸ், பாடகர் ரிஹானா மற்றும் கிரிக்கெட் வீரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் ஆகியோருடன் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மிகுந்த ஆடம்பரம் மற்றும் விழாக்களுக்கு மத்தியில், முடியாட்சிக்கு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது, முடியாட்சி கொடி இறக்கப்பட்டு மாற்றப்பட்டது. மேலும் சார்லஸுக்கு பார்பேடோஸ் சுதந்திரத்திற்கான பதக்கம் வழங்கப்பட்டது. 'பார்பேடோஸ் குடியரசு கப்பல் தனது முதல் கன்னிப்பயணத்தை தொடங்கிவிட்டது'. அது எல்லா புயல்களையும் சமாளித்து, நம் நாட்டையும் குடிமக்களையும் நமக்கு முன்னால் இருக்கும் அடிவானங்களிலும் கரைகளிலும் பாதுகாப்பாக தரையிறக்கட்டும்” என்று மேசன் அறிவித்தார்.

நவம்பர் 30, 2021 செவ்வாய்க்கிழமை அன்று பார்பேடோஸின் பிரிட்ஜ்டவுனில் நடந்த ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பார்பேடோஸின் புதிய ஜனாதிபதி சாண்ட்ரா மேசன், இளவரசர் சார்லஸுக்கு பார்பேடோஸ் சுதந்திரத்திற்கான விருதை வழங்கினார். இரண்டாவது எலிசபெத் மகாராணிக்கான தனது கடமைப்பாட்டை பார்பேடோஸ் முடிவிற்கு கொண்டுவந்து அதன் காலனித்துவ கடந்தகாலத்தினை முடிவிற்கு கொண்டுவந்து மற்றும் வரலாற்றில் முதல் முறையாக குடியரசு ஆனது (AP Photo / David McD Crichlow)

பார்பேடோஸ் வரலாற்றில் பிரிட்டனின் கொடூரமான பாத்திரத்தை பற்றி சார்லஸ் ஒரு விரைவான குறிப்புடன் பின்வருமாறு கூறினார்: 'நமது கடந்த காலத்தின் இருண்ட நாட்களில் இருந்தும் மற்றும் எப்போதும் நம் வரலாற்றைக் கறைபடுத்தும் அடிமைத்தனத்தின் மோசமான கொடூரத்திலிருந்து இந்தத் தீவின் மக்கள் தங்கள் பாதையை அசாதாரணமான தைரியத்துடன் உருவாக்கினர்.”

ஆனால் சார்லஸ் எப்படி அடிமைத்தனத்தையும் பார்பேடோஸின் காலனித்துவத்தையும் பிரிட்டனின் பழமையான சாதனையில் ஒரு 'கறையாக' சித்தரிக்க விரும்பினாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அயர்லாந்தில் 1845-46 பெரும் பஞ்சம் உள்ளடங்கலான இரத்தக்களரி குற்றங்களை நிகழ்த்தியுள்ள படையணியாகும். இந்தியாவின் கொள்ளை மற்றும் பின்னர் கொடூரமான பிரிவினை, சீனாவில் அபின் போர்கள் மற்றும் கென்யாவில் Mau Mau அட்டூழியங்கள் இவற்றில் ஒரு சிலவாகும்.

பார்பேடோஸும் அடிமைத்தனமும்

ஆதிகால முதலாளித்துவக் திரட்சி என மார்க்ஸ் விவரித்ததை வழங்கிய பார்பேடோஸ், இங்கிலாந்தின் முதல் உண்மையான இலாபகரமான அடிமைச் சமூகமாகும். இது அமெரிக்காவின் காலனித்துவத்திற்கான ஏவுதளமாக மாறியது மற்றும் மேற்கு அரைக்கோளத்தில் அதன் காலனித்துவ உடைமைகள் முழுவதும் அதன் செயல்பாட்டின் முறை பிரதிபலித்தது.

ஒரு பார்பேடோஸ் வரலாற்றாசிரியரும், மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தின் தலைவருமான பேராசிரியர் ஹிலாரி பெக்கிள்ஸ், 'பார்பேடோஸ் பிரிட்டிஷ் அடிமையுடமை சமுதாயத்தின் பிறப்பிடமாகவும், பிரிட்டனின் ஆளும் உயரடுக்கினரால் மிகவும் இரக்கமற்ற முறையில் காலனித்துவப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட, 'கழித்துவிடப்பட்ட' தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையிலிருந்து தங்கள் செல்வத்தை ஈட்டினர். மேலும் இந்த பெரும் செல்வம் பிரிட்டனின் இடத்தை ஒரு ஏகாதிபத்திய வல்லரசாகப் பாதுகாத்ததோடு சொல்லொணாத் துன்பத்தை ஏற்படுத்தியது” எனக் குறிப்பிட்டார்.

முதல் பிரிட்டிஷ் குடியேற்றவாசிகள் 1625 இல் பார்பேடோஸ் வந்தடைந்தனர். ஸ்பானிய ஆய்வாளர்கள் மற்றும் நோய்களுடன் முந்தைய கொலைகாரத்தனத்தை எதிர்கொண்டதன் விளைவாக இது பெரும்பாலும் மக்கள் வசிக்காததாக இருந்தது. இந்த பவளத் தீவு, இப்பகுதியில் உள்ள மலை எரிமலை தீவுகளைப் போலல்லாமல், இது பொதுவாக தட்டையானது மற்றும் விவசாயத்திற்கு ஏற்றதாகும். ஆங்கிலேயர்கள் ஆரம்பத்தில் கூலி வேலையாட்கள் அல்லது கைதிகளை பண்ணைகளில் வேலை செய்ய பயன்படுத்தினாலும், அடிமைகள் விரைவில் முக்கிமான தொழிலாளர்களாக மாறினர்.

வில்லியம் பிளேக்கின் அடிமைத்தனத்திற்கு எதிரான காட்சி, 1793

முக்கோண வர்த்தகத்தின் (ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளுக்கு இடையிலான முக்கோணம்) ஒரு பகுதியாக, கேப்டன் ஜோன் பவல் 1627 ஆம் ஆண்டில் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து முதல் அடிமைகளை தீவுக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் மேற்கு ஐரோப்பாவிலிருந்து வந்த கப்பல்கள், துப்பாக்கிகள் ஏனைய உற்பத்தி பொருள்களையும் இப்போது நைஜீரியா மற்றும் கானா என்று அழைக்கப்படுபனவற்றிற்கு அடிமைகளுக்கு ஈடாக விற்றன. இவ்வடிமைகள் பின்னர் பார்பேடோஸிற்கும் ஏனைய கரீபியன் தீவுகளுக்கும் மதிப்பிழந்த 'நடுப்பாதை' (“Middle Passage” - பிரித்தானிர்களால் ஆபிரிக்காவிலிருந்து அட்லான்டிக் ஊடாக அமெரிக்காவிற்கு அடிமைகள் கொண்டு செல்லப்பட்டபாதை) ஊடாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அடிமைகள் விற்கப்பட்டு கப்பல்கள் கரீபியன் ஏற்றுமதி பொருட்களுடன் இங்கிலாந்துக்கு திரும்பியது. அக்கப்பல்கள், அடிமை வர்த்தகத்தின் நேரடி விளைவாக வளர்ந்த ரோயல் கடற்படையால் அதன் போட்டி சக்திகளுக்கு எதிராக பாதுகாப்பளிக்கப்பட்டது.

அடிமைகள் சிறைபிடிக்கப்பட்ட நிலைமைகள் மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நிலவறைகளில் கட்டாய அணிதிரட்டல் மற்றும் அவர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு போக்குவரத்துக்காக காத்திருக்கும் போது அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலைமை மிகவும் பயங்கரமானது, பலர் தங்களின் அறைகளிலேயே இறந்து போனார்கள். 10 முதல் 30 சதவிகிதத்தினர் அடிமைக் கப்பல்களில் இறந்தனர். அங்கு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் 100 நாள் பயணத்தின் போது தங்கள் சொந்த வாந்தி மற்றும் மலத்திற்கு இடையே சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்துடன், நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த அடிமைகள் கப்பலில் இருந்து கடலில் தூக்கி எறியப்பட்டனர். அவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு வந்ததும், விற்பனைக்கு வரும் கால்நடைகளைப் போல் சுத்தம் செய்து, ஊட்டி வளர்க்கப்பட்டு, ஏலம் விடப்படுவர், பின்னர் விற்பனை செய்ய முடியாதவை என்று கருதப்படுபவர்கள் இறக்கவிடப்பட்டு. 1636 ஆம் ஆண்டில், பார்பேடோஸில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள், அனைத்து அடிமைகளையும், அவர்களின் குழந்தைகளையும் சேர்த்து, வாழ்நாள் முழுவதும் அடிமைகளாக பிரகடனப்படுத்தும் சட்டத்தை இயற்றினர். இந்தச் சட்டங்கள் பிற்காலத்தில் பிரிட்டனிற்கு சொந்தமான ஏனைய காலனிகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஜோன் கிரீன்லீஃப் விட்டியர்ஸ் கவிதையின் பரந்த வெளியீடு, சங்கிலியில் நம் நாட்டு மக்கள்

பண்ணைகளில் நிலைமைகள் கொலைகாரத்தனமாக இருந்தன, இன்னும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வயல்களில் 18 மணிநேரம் உழைத்து, பருத்தி, புகையிலை, இஞ்சி அல்லது இண்டிகோவை தங்கள் மேற்பார்வையாளர்களின் சாட்டைகளின் கீழ் பயிரிட்டதால் இறந்தனர். ஒரு அடிமைக் கப்பலின் கேப்டன் தோமஸ் பிலிப்ஸ் பின்னர், போக்குவரத்தை தவிர்ப்பதற்காக கடலில் பாய்ந்த அடிமைகளைப் பற்றி பின்வருமாறு எழுதினார். 'எங்களுக்கு நரகத்திடம் இருந்த பயத்தை விட பார்பேடோஸைப் பற்றி அவர்களுக்கு மிகவும் பயங்கரமான பயம் இருந்தது.'

1640களில், டச்சு வணிகர்கள் பார்பேடோஸுக்கு சர்க்கரையை அறிமுகப்படுத்தினர். மேலும் பிரேசிலிய பண்ணைகளில் இருந்து பெற்ற அறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் கரும்புகளை எவ்வாறு வளர்ப்பது மற்றும் பதப்படுத்துவது என்பதை பார்பேடோஸ் பண்ணையாளர்களுக்குக் காட்டினர். 1650களில் வேர்ஜீனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட புகையிலையின் பெருக்கத்திற்குப் பின்னர், புகையிலை சாகுபடி இலாபமற்றதாக மாறியபோது, தீவு சர்க்கரை உற்பத்திக்கு திரும்பியது. சர்க்கரை ஆலைகள் வடிவில் தொழில்துறை உற்பத்தியுடன் ஒரு பெரிய தொழிலாளர் சக்தியை இணைப்பதில் தனித்துவமான ஒரு தொழிலாக இது பார்பேடோஸின் கிட்டத்தட்ட முழு காடழிப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்படுவதால், தொழில்துறை அதன் ஏற்றுமதியில் 93 சதவீதத்தை வழங்கியது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இது அடிமை வர்த்தகத்தில் பிரிட்டனை ஒரு முக்கிய பங்காளியாக மாற்றியது.

1750 வாக்கில், ஐரோப்பிய வர்த்தகத்தில் சர்க்கரை மிகவும் மதிப்புமிக்க பொருளாக மாறியது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் கரீபியன் முழுவதும் உற்பத்தி விரிவாக்கப்பட்டதால், அனைத்து ஐரோப்பிய இறக்குமதிகளில் இது ஐந்தில் ஒரு பங்காக இருந்தது. அதில் முக்கால்வாசி இலண்டனுக்கு அனுப்பப்பட்டபோது பார்பேடோஸ் அப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஐரோப்பிய காலனிகளிலும் பணக்கார நாடானது.

பிரிட்டனின் 'சூரியத்தீவுகளில்' ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிலரே உயிர்பிழைத்திருந்ததால், பண்ணை உரிமையாளர்களுக்கு உழைப்பு சக்தியை புதுப்பிக்க இன்னும் அதிகமான அடிமைகளை ஏற்றுமதி செய்ய வேண்டியிருந்தது. பார்பேடோஸில் உள்ள பண்ணைகளின் நிலைமைகள் மிகவும் பயங்கரமானவையாக இருந்தமையால், கிளர்ச்சிகளும் கிளர்ச்சிகளின் பயமும் காலனித்துவ வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருந்தன. 17 ஆம் நூற்றாண்டில் 1649, 1675 மற்றும் 1692 ஆம் ஆண்டுகளில் மூன்று பெரிய அடிமைக் கிளர்ச்சிகள் நடந்தன. இவை அனைத்தும் மிகக் கொடூரமாக அடக்கப்பட்டன. ஜமைக்காவில், மரூன்கள் என்று அழைக்கப்படும் ஓடிப்போன அடிமைகள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல தசாப்தங்களாக மலைகளில் தங்கி, தங்களால் முடிந்த இடங்களில் விவசாயம் செய்து, பண்ணைகளைத் தாக்கினர். குறுக்கறுக்கும் பாதைகளிலும், ஆபிரிக்க அடிமைத் துறைமுகங்களிலும், அவர்கள் இறங்கிய துறைமுகங்களிலும் அடிக்கடி கிளர்ச்சிகள் நடந்தன. இந்த கிளர்ச்சிகள் பரவலாகி காலனித்துவ சமூகங்களை ஸ்திரமற்றதாக்கின.

இங்கிலாந்தின் அரசர்கள் தொடக்கத்திலிருந்தே அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டு, தங்கள் கப்பல்களை வாடகைக்கு விட்டு, வருமானத்தில் ஒரு பங்கை தமதாக்கிக்கொண்டனர். இது பற்றி அரியணையின் தற்போதைய வாரிசு ஒரு விவேகமான அமைதியைக் கடைப்பிடித்தார். இந்த ஈடுபாடு 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கில உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த பின்னர் மன்னராட்சியின் ஆதரவாளர்கள் பார்பேடோஸில் தஞ்சம் புகுந்தபோது அதிகரித்தது. பின்னர், பாராளுமன்றம், மறுபதவியிலிருத்தப்பட்ட மன்னர் இரண்டாம் சார்லஸ் மற்றும் அவரது சகோதரரும் பின்னர் ஜேம்ஸ் II ஆன யோர்க் டியூக் ஆகியோரின் ஆதரவுடன், Royal Gambia Society பின்னர் the Royal African Company (RAC) என்றழைக்கப்பட்ட நிறுவனங்களூடாக அரச வியாபார நிறுவனத்திற்கு ஒரு புதிய காப்புரிமையை வழங்கியது. இவற்றில் முடியாட்சி பெரும் பங்குகளை கொண்டிருந்தது. இது தங்கம் மற்றும் அடிமைகளை உள்ளடக்கிய பெரும்பாலான மேற்கு ஆபிரிக்காவிற்கான வர்த்தகத்தின் மீது அவர்களுக்கு ஏகபோக உரிமையை அளித்து, அதிலிருந்து இலண்டன், பிரிஸ்டல் மற்றும் லிவர்பூல் துறைமுகங்கள் செழித்தன. முடியாட்சி இதிலிருந்து நேரடியாக இலாபடைந்தது. இந்த நிறுவனங்கள் முடியாட்சியின் நாணயங்களுக்கு வழங்கிய தங்கம், இத்தங்கம் எடுக்கப்பட்ட மேற்கு ஆபிரிக்க நாடு, கினியா என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

1797 ஆம் ஆண்டில், கவிஞரும் மதத்தலைவருமான வில்லியம் பாக்ஷா ஸ்டீவன்ஸ், லிவர்பூலின் பாரிய கப்பல்துறைகளுக்குச் சென்றபோது நங்கூரமிட்டிருந்த 1,200 கப்பல்களைள் கண்டு திகிலடைந்தார். அவர் தனது நாட்குறிப்பில், 'இந்த பெரிய-கட்டப்பட்ட நகரத்தின் ஒவ்வொரு செங்கற்களும் ... நீக்ரோக்களின் இரத்தம் மற்றும் வியர்வையால் இறுக்கமாக்கப்பட்டவை' என எழுதினார். இந்த சொற்றொடர் பின்னர் பல அடிமைத்தனத்தின் எதிர்ப்பாளர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேயான கடுமையான போட்டியானது தொடர்ச்சியான போர்களுக்கு வழிவகுத்தது. இது, இறுதியில் பிரிட்டன் தனது டச்சு, போர்த்துகீசியம், பிரெஞ்சு மற்றும் டேனிஷ் போட்டியாளர்களின் இழப்பில் ஆதிக்கம் செலுத்த உதவியது. அட்லாண்டிக் கடல் வழியாக ஐரோப்பிய வணிகர்களால் கொண்டுவரப்பட்ட 9-15 மில்லியன் அடிமைகளில் மிகப்பெரிய பங்கிற்கு பிரிட்டனே பொறுப்பாகும். இது 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 1776 இல், பிரிட்டனின் 13 அமெரிக்க காலனிகளுக்கு சுதந்திரம் அறிவித்தபோது, அட்லான்டிக் முழுவதற்கும் கொண்டுசெல்லப்பட்ட கணக்கிடப்பட்ட அனைத்து அடிமைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு பொறுப்பாக இருந்தது.

மொத்தத்தில் சுமார் 18 சதவிகிதம் கரீபியன் தீவுகளுக்குச் சென்றது. இது வட அமெரிக்க காலனிகளுக்கு சென்ற எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இருமடங்காகும். பிரிட்டன் அடிமை வர்த்தகத்தை ஒழித்த 1807 க்கும் 1627 க்கும் இடையில் பார்பேடோஸுக்கு அனுப்பப்பட்ட அடிமைகளின் எண்ணிக்கையின் மதிப்பீடுகள் 387,000 முதல் 600,000 வரை இருக்கும். பிரிட்டனின் அடிமை வணிகர்கள் 1630 மற்றும் 1807 க்கு இடையில் ஆபிரிக்க மக்களை வாங்குதல் மற்றும் விற்றதன் மூலம் சுமார் 12 மில்லியன் பவுண்டுகளை இலாபம் ஈட்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை இன்றைய பணத்தில் 16 பில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம்.

இதை வேறுவிதமாகக் கூறினால், இங்கிலாந்தின் கரீபியன் தீவுகளில் சுமார் ஒரு மில்லியன் அடிமைகள் ஒரு பைசா கூட கூலி இல்லாமல் உற்பத்தி, சர்க்கரை, காப்பி மற்றும் பருத்தி தொழிலில் ஆண்டுக்கு 3,000 மணிநேரம் வேலை செய்தனர். அப்போது இங்கிலாந்தின் சொந்த மக்கள் தொகை ஐந்து மில்லியனாக இருந்தது.

அதிக இலாபம் ஈட்டும் சர்க்கரை வர்த்தகம், விரைவில் பார்பேடோஸ் பிரிட்டனின் அதிக மக்கள் தொகை கொண்ட காலனியாகவும், பூமியில் அதிக மக்கள் தொகை நெருக்கமாக இருந்த இடங்களில் ஒன்றாகவும் மாறியது. இது அமெரிக்காவின் காலனித்துவத்திற்கான தொடக்கத் தளமாக மாறியது. குறிப்பாக ஜமைக்கா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள கரோலினாக்கள் வரை, அவர்களின் மேற்கு இந்திய மாதிரியான பண்ணைகள் மற்றும் அடிமைத்தனத்தை புதிய காலனிகளுக்கு இடமாற்றம் செய்து, புதிய உலகின் பிற பகுதிகளுக்கு குடியேற்றவாசிகளின் பாய்ச்சலை உருவாக்கியது. 1740களில் கரீபியன் சர்க்கரை வணிகத்தின் சார்பாக பாராளுமன்றத்தில் பிரசாரம் செய்ய பிரிட்டிஷ் வணிகர்களும் மேற்கிந்திய பண்ணை உரிமையாளர்களும் ஒன்றிணைந்து West India Interest இனை உருவாக்கியதால் இது ஒரு சக்திவாய்ந்த அரசியல் சக்தியாக மாறியது. பண்ணை உரிமையாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் சீர்குலைந்த நகராட்சிகளை வாங்க முடிந்தது. பெயரளவில் ஒரு நகராட்சி அல்லது பிராந்தியம் இரண்டு அல்லது மூன்று வாக்காளர்களை மட்டுமே கொண்டு, அவர்களுக்கு பாராளுமன்றத்தில் 40 முதல் 50 ஆசனங்களை எடுக்க முடிந்தது.

அமெரிக்க சுதந்திரப் போரில் மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் தீவிர ஆதரவாளர்களில் பார்பேடோஸ் உட்பட பிரிட்டிஷ் மேற்கிந்தியத் தீவுகளுடன் 'பழைய ஊழல்' என்ற மிகவும் பிற்போக்கு அரசியலின் இணைப்பாக பண்ணை உரிமையாளர்கள் ஆனார்கள். பின்னர் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட அமெரிக்க விசுவாசிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.

அடிமை வர்த்தகம், பிரிட்டனின் பரந்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. அதன் தொழிற்சாலைகள் மற்றும் பட்டறைகளுக்கு மூலப்பொருட்களுக்கான அணுகலை வழங்கியது. லோயிட்ஸ் இன்சூரன்ஸ் (Lloyds Insuranc), பார்க்லீஸ் வங்கி மற்றும் பாரிங்ஸ் (Barclays Bank and Barings) உள்ளிட்ட வர்த்தகத்திற்கு ஆதரவாக நிதி, வணிக, சட்ட மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தோன்றின. சில வணிகர்கள் வங்கியாளர்களாக மாறி மற்றும் அடிமை வர்த்தகத்தின் இலாபம் புதிய வணிகங்கள் மற்றும் தொழில்களின் வளர்ச்சிக்கு நிதியளித்து, உற்பத்திப் பொருட்களின் பரந்த விரிவாக்கத்தை இயலுமானதாக்கி 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனை 'உலகின் பட்டறை' ஆக்கியது.

அடிமைத்தனத்தின் ஒழிப்பு

அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சிகளில் பொதிந்துள்ள அறிவொளிமயமாக்கத்தின் கருத்துக்களான சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகள் ஆகியவை அடிமைத்தனம் பழைய ஊழலின் அடையாளமாக இருந்த காலனிகளிலும் பிரிட்டனிலும் பரவலான அடிமைத்தன எதிர்ப்பு உணர்வைத் தூண்டியது. அடிமைத்தன ஒழிப்பு ஒரு அட்லான்டிக்கிற்கு இடையிலான இயக்கமாக மாறியது. பொருளாதார ரீதியாக, அமெரிக்கப் புரட்சியானது, பிரிட்டிஷ் வணிகரீதியான அமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. அதன் தொழில்துறையானது, அமெரிக்க தெற்கின் பருத்தி-அடிமைப் பொருளாதாரத்துடன் பெருகிய முறையில் பின்னிப்பிணைந்தபோதும், 1793 இல் பருத்தி விதைகள் அகற்றும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உயரும் தொழில்துறை வர்க்கத்தை வலுப்படுத்தியது.

வரைதிரையில் Toussaint L'ouverture எண்ணெய் வர்ண உருவப்படம்

பிரெஞ்சுப் புரட்சியானது, 1791 ஆம் ஆண்டு ஹைட்டியின் முன்னாள் அடிமைகள் மற்றும் பிரெஞ்சு மற்றும் ஸ்பானியப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களின் இராணுவத் தலைவரான Toussaint L'Ouverture தலைமையிலான அடிமைக் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. இவர் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி, பிரான்சிலும் ஸ்பெயினிலும் இருந்து ஹைட்டியின் சுதந்திரத்தை பெற்றுக்கொண்டதுடன், 1804 இல் அங்கு அடிமைத்தனத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்தது.

பிரிட்டனில், வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் அடிமை ஒழிப்புக் குழுவை அமைத்து, 1787 இல் பாராளுமன்றத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஒழிப்புவாதிகளுக்கான ஆதரவு வேகமாக வளர்ந்தது. 1787 ஆம் ஆண்டில் ஜோசியா வெட்ஜ்வூட் வடிவமைத்த அவர்களின் சின்னமும் குறிக்கோளுமான, ஒரு ஆபிரிக்க மனிதன் மண்டியிட்டு, “நான் ஒரு மனிதனும் சகோதரனும் இல்லையா?” என்று கேட்பதை சித்தரிப்பது எங்கும் பரவியது.

1788ல் 100க்கும் மேற்பட்ட மனுக்களில் 10,639 கையொப்பங்களும், 1792ல் 519 மனுக்களில் 20,000 பேரும் கையொப்பங்களை வழங்கியதன் மூலம், சுமார் 75,000 மக்கள் வசிக்கும் நகரமான மான்செஸ்டர் உடன், மனுக்களை ஆதரித்து ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை ஈர்த்து, அதிகரித்துவரும் அவர்களின் தீவிரமயப்படுத்தலை பிரதிபலிக்கும்வகையில் தொழிலாளர்களுக்கு அரசியல் ஆயுதமாக மாறியது.

வில்லியம் வில்பெர்ஃபோர்ஸ் (creative commons)

முன்னாள் அடிமைகள் உட்பட ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 20,000 மக்கள் வசிக்கும் லண்டனில், ராபர்ட் மாண்டவில், தோமஸ் கூப்பர், ஜாஸ்பர் கோரி, வில்லியம் கிரீன் மற்றும் ஓட்டோபா குகோவானோ போன்ற கறுப்பின ஆர்வலர்கள் அடிமைத்தன எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர். ஒரு பத்திரிகையாளரும் மற்றும் முன்னாள் அடிமையுமான மிகவும் நன்கு அறியப்பட்ட ஓலாடோ எக்வியானோவின் (Olaudah Equiano) சுயசரிதை நடுப்பாதை பயணத்தின் துன்பங்களை அம்பலப்படுத்துகிறது. ஒரு அடிமையால் அடிமைத்தனத்தைப் பற்றிய எழுதப்பட்ட அவ்வாறான ஒரு முதல் புத்தகம் 1788 இல் வெளியிடப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் 50,000 பிரதிகள் விற்றன.

1781 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மதிப்பிழந்த சோங் (Zong) படுகொலையையும் எக்வியானோ வெளிப்படுத்தினார். அப்போது பிரிட்டிஷ் அடிமைக் கப்பலின் பணியாளர்கள் குடிநீர் பற்றாக்குறையால் 130 க்கும் மேற்பட்ட அடிமைகளாக இருந்த ஆபிரிக்கர்களை கடலில் தூக்கி எறிந்தனர். சோங்கின் உரிமையாளர்கள் அடிமைகளின் இழப்புக்காக தங்கள் காப்பீட்டாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். இதன் விளைவாக நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில் ஒன்று சில சூழ்நிலைகளில் அடிமைப்படுத்தப்பட்டவர்களைக் கொலை செய்வதற்கான சட்டபூர்வத்தன்மையை உறுதிப்படுத்தி மற்றும் இறந்தவர்களுக்காக அடிமைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டாளர்களைக் கோரியது. கேப்டன் மற்றும் குழுவினர் தவறு செய்ததைக் காட்டும் ஆதாரங்கள் காரணமாக உரிமையாளர்களுக்கு எதிராக அதற்கடுத்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சோங் படுகொலையானது நடுப்பாதையின் பயங்கரத்தின் அடையாளமாக மாறியதுடன் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அடிமையொழிப்பு இயக்கத்திற்கு ஒரு சக்திவாய்ந்த உத்வேகத்தை அளித்தது. கப்பல் உரிமையாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் கப்பலில் தூக்கி எறியப்பட்டபோது, கப்பல் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு செலுத்துவதில் இருந்து காப்பீட்டு நிறுவனங்களைத் தடைசெய்யும் சட்டத்திற்கு இது வழிவகுத்தது. 1840 இல் ராயல் அகாடமியில் காட்சிப்படுத்தப்பட்ட The Slave Ship இனை வரைந்த J M W Turner, மற்றும் சுரினாமின் கிளர்ச்சி நீக்ரோக்களுக்கு எதிராக ஐந்தாண்டு ஆய்வின் கதையை விளக்கிய வில்லியம் பிளேக், தென் அமெரிக்காவில் கிளர்ச்சிக்காக சித்திரவதை செய்யப்பட்ட அடிமைகளின் கொடூரமான துன்பத்தை சித்தரிக்கும் ஒரு அடிமை கிளர்ச்சி பற்றிய ஜோன் ஸ்ரேட்மானின் விபரணங்கள் கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் உத்வேகம் அளித்தது.

ஓலாடா எக்வியானோ

ஆயினும்கூட, 1807 இல் வில்பர்ஃபோர்ஸ் அடிமை வர்த்தகத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு முன்பு பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இது ஆரம்பத்தில் பிரெஞ்சு பொருளாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடவடிக்கையாக மறைமுகமாக காட்டப்பட்டது. இது பண்ணைகளின் நிலைமைகளை மேம்படுத்தி அடிமைத்தனத்தின் முடிவுக்கு வழிவகுக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். 1816 ஆம் ஆண்டில் பார்பேடோஸில் உள்ள பெய்லி பண்ணையில் புஸ்ஸா தலைமையிலான மூன்று நாள் கிளர்ச்சி உட்பட, காலனித்துவ ஆயுதக்குழுக்கள் சண்டையில் 800 க்கும் மேற்பட்ட அடிமைகளைக் கொன்றதுடன் மற்றும் குறைந்தது 100 பேர் பின்னர் தூக்கிலிடப்பட்டனர். மற்றும் 1823 இன் டெமராரா (இப்போது கயானா) கிளர்ச்சி பிரிட்டன் துருப்புக்களை அனுப்பினால் மட்டுமே அடிமைத்தனத்தை நிலைநிறுத்த முடியும் என்பதை தெளிவுபடுத்தியது. அதை நாடாளுமன்றம் செய்யத் தயாராக இருக்கவில்லை.

1778 இல் பிரிட்டனுக்கு வந்திருந்த ஜமைக்காவின் யூனியன் மந்திரி ரோபேர்ட் வெடர்பேர்ன் 1824 ஆம் ஆண்டில் வெளியிட்ட The Horrors of Slavery இன் புரட்சிகர அழைப்பு காலனிகளை அடைந்தது. சக கறுப்பினத்தவர்களிடம் முன்வைத்த அவரது உணர்ச்சிமிக்க மற்றும் உறுதியான குறிக்கோளாக இருந்தது: “உங்களை ஒடுக்குபவர்களிடம் கெஞ்சுவது மனித இயல்பை இழிவுபடுத்துகிறது” என்பதாகும். அமைதியின்மை தொடர்ந்து, கிறிஸ்மஸ் 1831 இன் ஜமைக்கா கிளர்ச்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதன் அடக்குமுறையில் 400 க்கும் மேற்பட்ட அடிமைகள் கொல்லப்பட்டதுடன் மற்றும் பல பிரிட்டிஷிற்கு இணக்கமற்ற அமைச்சர்கள் அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக அடித்து, தார் பூசப்பட்டு மற்றும் இறகுகள் கட்டப்பட்டனர்.

ஜோன் பிளெக்ஸ்மானால் கிட்டத்தட்ட 1804 இல் வரையப்பட்ட பிளேக்கின் உருவரைபடம்

இந்த நிகழ்வுகள், தொழிலாள வர்க்கம் தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் அவர்களின் சொந்த அவலமான வாழ்க்கை நிலைமைகளைத் தணிக்கக் கோரியும், அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பி வருகையில் பிரிட்டனில் பண்ணை உரிமையாளர்களுக்கு எதிரான மக்களின் கருத்தை மேலும் தூண்டிவிட்டன. அடிமைஒழிப்பு இயக்கத்தின் மறுமலர்ச்சியானது அடிமைத்தனத்திற்கு எதிரான இலக்கியங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மனுக்களுடன் இணைந்து வெளிப்பட்டது. 1814 ஆம் ஆண்டில், ஒரே மாதத்தில் 800 க்கும் மேற்பட்ட அடிமைத்தன எதிர்ப்பு மனுக்களில் 1.5 மில்லியன் கையெழுத்துக்கள் இடப்பட்டிருந்தன. 1826 மற்றும் 1832 க்கு இடையில், பிரபுக்கள் சபை 3,500 க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்றது.

1832 ஆம் ஆண்டின் மாபெரும் சீர்திருத்தச் சட்டத்திற்குப் பின்னர் நிறுவப்பட்ட சீர்திருத்தப்பட்ட பாராளுமன்றம், ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்காமல் அல்லது தொழிலாள வர்க்கத்திற்கு வாக்குரிமை வழங்காமல், ஆனால் பழைய அரசியல் ஒழுங்கமைப்பைக் காயப்படுத்தி, புதிய அரசியல் நலன்களை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வந்தது. அதன் முதல் செயல்களில் ஒன்றாக, அது 1833 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் அடிமைத்தனத்தை ஒழிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

எவ்வாறாயினும், அடிமைமுறை ஒழிப்புச் சட்டம் அடிமைகளை பண்ணைகளுக்குக் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியிருந்ததுடன், அவர்கள் சொந்த நிலம் வைத்திருப்பதற்கான உரிமையைக் கட்டுப்படுத்தி மற்றும் நடைமுறையில் 'தொழில் பழகுநர் பயிற்சி' என்ற வடிவில் ஆறுவருட காலத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர் வடிவத்தை வழங்கியது. மேலும், அடிமைகளை அவர்களின் முன்னாள் உரிமையாளர்களுக்கு ஒரு பைசா இழப்பீடு இல்லாமல் விடுவித்த அமெரிக்க உள்நாட்டுப் போரைப் போலன்றி, 1837 அடிமை இழப்பீடு சட்டம், West India Interest ஆதரவுக்குழுவின் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக, 40,000 அடிமை உரிமையாளர்களுக்கு சுமார் 20 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு (இன்றைய பணத்தில் சுமார் 17 பில்லியன் பவுண்டுகள்) வழங்க அங்கீகாரம் அளித்தது. அவர்களில் பலர் தங்கள் கரீபியன் பண்ணைகளில் கால் பதிக்கவே இல்லை. இது அந்த நேரத்தில் கருவூலத்தின் வரி வரவுகளில் சுமார் 40 சதவீதத்திற்கு சமமாக இருந்தது. 2008-9இல் தொழிற் கட்சி பிரதம மந்திரி கோர்டன் பிரவுன் வங்கிகளை பிணையெடுத்தது வரை பிரிட்டிஷ் வரலாற்றில் நிகழ்ந்த இந்த மிகப்பெரிய பிணையெடுப்பில் முன்னாள் அடிமைகளுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.

அடிமை உரிமையாளர்கள், வளர்ந்து வரும் பத்திர சந்தையில் முதலீடு செய்வதற்கும், பிரிட்டனில் சொத்துக்களை வாங்குவதற்கும், கலை மற்றும் கட்டிடக்கலைக்கு ஆதரவளிப்பதன் மூலம் தங்கள் உண்மை உருவத்தை மறைத்துக்கொள்வதற்கும் மரியாதையாக நாட்டிற்கு திரும்புவதற்கும் இப்பணத்தைப் பயன்படுத்தினர்.

பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம், தனது போட்டியாளர்களுக்கு எதிராக தனது இலக்கை அடையும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடவில்லை. அடிமைத்தனத்திற்கு எதிரான காவல்காரனாக தன்னை காட்டிக்கொள்ளவும், மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையை காவல்காத்து, அதன் துறைமுகங்களை முற்றுகையிட்டு, அடிமைக் கப்பல்களை கைப்பற்றி, ஆபிரிக்காவின் பிற்கால குடியேற்றத்திற்கு முன்னோடியாக பிரிட்டனின் வணிக நலன்களைப் பாதுகாப்பதற்காக அடிமைஒழிப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியது.

அடிமைத்தனத்தின் மரபும் இன்று ஏகாதிபத்திய ஆட்சியின் தாக்கமும்

அடிமைத்தனத்தின் முடிவு, முன்னாள் அடிமைகளை 12 வருட தொழிலாளர் ஒப்பந்தங்களின் கீழ் ஒப்பந்த ஊழியர்களாக விட்டுச் சென்றது. இது கரீபியனில் மிக நீண்ட காலமாகும். இதற்குப் பதிலாக பிராந்தியத்தில் மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது. சிலர் சிறிய குடிசைகளில் தங்கள் குடும்பத்தை தங்க வைப்பதற்காக ஊதியம் இல்லாமல் 45 மணிநேர வாரங்கள் வேலை செய்தனர். மற்றவர்கள் பண்ணைகளை விட்டு வெளியேறினர். உரிமையாளர்கள் ஸ்பெயின், போர்ச்சுகல், இந்தியா மற்றும் சீனாவில் தொழிலாளர்களைத் தேடும் கட்டாயத்திற்கு உட்பட்டனர். சொந்த நிலத்தில் போதிய உரிமை இல்லாத நிலையில், சிலர் அவர்களின் சொந்த வயலில் உழவு செய்தனர். வரி அதிகமாக இருந்துடன் மற்றும் பண்ணை உரிமையாளர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு வந்ததால் பலர் வேலையிழந்தனர்.

துஷ்பிரயோகமும் பறித்தல்களும் தொடர்ந்ததுடன், முன்னாள் அடிமை உரிமையாளர்களால் நேரடியாக அல்லாமல் பண்ணை உரிமையாளர்களின் சார்பாக அரசின் ஊடாக பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த பண்ணை உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தீவின் அரசியலில் தங்கள் ஆதிக்கத்தைத் தொடர முடிந்தது.

திகைப்பூட்டும் வகையில் வாக்களிக்க தேவையான உயர் வருமானத் தகுதியின்மையால் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்களைத் தவிர்க்கும் சட்டம் 1942 வரை திருத்தப்படவில்லை.

பார்பேடோஸ் பிரிட்ஜ்டவுனில் உள்ள விடுதலை சிலை

பின்னர் பார்பேடோஸ் தொழிற் கட்சியாக மாறிய பார்பேடோஸ் முற்போக்கு லீக்கால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட, விடுதலை பெற்ற அடிமைகளின் வழித்தோன்றல்கள் 1930களில் அரசியல் உரிமைகளுக்காக ஒரு இயக்கத்தைத் தொடங்கியபோது, அதன் தலைவர் கிராண்ட்லி ஆடம்ஸ் ஒரு தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராகவும் பிரிட்டிஷ் முடியாட்சி ஆதரவாளராகவும் இருந்தார். அவர் 1953 இல் பிரதமராகி 1961 வரை பதவி வகித்தார். பின்னர் அவர் செய்த சேவைகளுக்காக மகாராணியால் பட்டம் வழங்கப்பட்டார். 1966 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, 1976 மற்றும் 1985 க்கு இடையில் அவரது மகன் பார்பேடோஸின் இரண்டாவது பிரதமரானார்.

தீவின் எந்த அரசாங்கமும் அபிவிருத்தியின்மை, சார்புநிலை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதார கஷ்டங்கள் மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றிற்கான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாரம்பரியத்தை சரிசெய்ய முடியவில்லை. இன்று, இந்த சூரியத்தீவின் 'சொர்க்கத்தில்' நிலவும் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் சுற்றுலாவையும் (2019 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவீதம்), பார்பேடோஸை வரிப் புகலிடமாக பயன்படுத்தும் உலகின் பெருநிறுவனங்கள் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டை கொள்ளையடிக்கும் ஊழல்மிக்க அரசியல்வாதிகளுக்கான நிதி சேவைகள் மற்றும் நாட்டை விட்டுப் போனவர்கள் அனுப்பும் பணத்தில் தங்கியிருக்கின்றது. இந்த நடைமுறை கரீபியன் முழுவதும் மற்றும் அனைத்து ஏகாதியபத்தியங்களின் முன்னைய காலனிகளிலும் நகலெடுக்கப்படுகிறது.

சமீபத்திய உலக வங்கி அறிக்கை, உலகின் முக்கிய நிதி நிறுவனங்களின் குற்றவியல் நடைமுறைகளால் தூண்டப்பட்ட 2008-09 உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளது. அதில் இருந்து பார்பேடோஸ் ஒருபோதும் மீளவில்லை. அரசாங்கக் கடன்கள் 2008 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 சதவீதத்திலிருந்து 2017 இல் 158 சதவீதமாக உயர்ந்து, ஒரு பெரிய மந்தநிலைக்கு வழிவகுத்தது. 2018 இல் அதன் கடன்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்தியது மற்றும் அரசாங்க செலவினங்களைக் குறைத்து சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடனைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட மறுசீரமைப்புத் திட்டத்தை அமுல்ப்படுத்தியது. இதற்கு முன்னரும் கூட, வறுமையில் வாடும் பார்பேடோஸ் மக்களின் விகிதம் 2010ல் 15.1 சதவீதத்தில் இருந்து 2016ல் 17.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் சமீபகாலமாக தொற்றுநோய் ஆகிய இரண்டும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளன. 2020 இல் பொருளாதாரம் 17 சதவீதத்தால் சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐந்தில் ஒரு குடும்பம் தங்களது முக்கிய வருமான ஆதாரத்தை இழந்துவிட்டதாக அறிவித்தது. மேலும் பாரியளவிலான 40 சதவிகிதத்தினரால் தங்கள் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியவில்லை.

பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளில் தொற்றுநோயின் தாக்கம் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் வேறு எந்த அபிவிருத்தியடைந்து வளர்ந்து வரும் அல்லது வளர்ச்சி பிராந்தியத்தையும் விட அதிகமாக உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது. சமீபத்திய OECD அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளபடி, 1950களுக்கு பின்னர் ஐந்து ஆண்டுகள் பலவீனமான வளர்ச்சியைத் தொடர்ந்து, பெரும்பாலான நாடுகள் அதிகரித்துவரும் சமூக அதிருப்தியை எதிர்கொள்கையில் இந்த பிராந்தியமானது கோவிட்-19 நெருக்கடிக்குள் நுழைந்தது. 2019இல், வளர்ச்சி கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருக்கையில், இப்பிராந்தியம் முழுவதும் எதிர்ப்புகள் வெடித்தன. தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்துள்ளதுடன், சமத்துவமின்மையை விரிவுபடுத்துகிறது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொற்றுநோய் அதன் மிகக் கொடிய கட்டத்தில் இருந்தபோதிலும், இதன் அரசாங்கமும் மற்ற இடங்களிலுள்ள அதன் சகாக்களைப் போலவே இலாபத்தை பாய்ச்சுவதற்காக போலியான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இந்த பயங்கரமான நிலைமைகள், 396 ஆண்டுகள் பிரிட்டிஷ் அரசிற்கு விசுவாசமாக இருந்து குடியரசாக மாறுவதற்கான பார்பேடோஸ் அரசாங்கத்தின் முடிவுக்கான பின்னணியை வழங்குகின்றது. முதலாளித்துவத்திற்கு எதிரான எந்தவொரு இயக்கத்தையும் எதிர்த்துப் போராடவும், ஒரு சிறிய உயரடுக்கின் செல்வம் மற்றும் சலுகைகளைத் தக்கவைக்க அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடவும் தயாராகி வரும் நிலையில், அதிகரித்து வரும் சமூக அதிருப்தியின் முன்னால் மறைந்து வரும் அதன் நம்பகத்தன்மையை உயர்த்துவதற்கான முயற்சியைத் தவிர இது வேறொன்றுமில்லை. சர்வதேச வங்கிகளுக்கான சேவையில் இன்னும் கூடுதலான சந்தை அடிப்படையிலான சீர்திருத்தங்களுக்கான இழிந்த சொற்றொடரான 'புதிய ஆரம்பம்' என்ற பேச்சுடன் தொழிலாளர்களையும் மற்றும் அவர்களது குடும்பங்களையும் மயக்கமுறச்செய்யலாம் என நம்புகிறது.

பார்பேடோஸின் வரலாறு, நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டத்தின் மத்திய ஆய்வறிக்கைக்கு சக்திவாய்ந்த மறுப்பை வழங்குகிறது. அமெரிக்கப் புரட்சியானது, மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் கொடுங்கோன்மையைத் தூக்கி எறிவதற்கான முயற்சியாக இல்லாமல், பிரிட்டனின் அதிக அறிவொளி பெற்ற ஆட்சிக்கு எதிராக அடிமைத்தனத்தின் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட எதிர்புரட்சி என்று 1619 திட்டம் கூறுகிறது.

இந்த சுருக்கமான மதிப்பாய்வானது அடிமை வர்த்தகம் மற்றும் அடிமைகளை சொந்தமாக கொண்ட பண்ணைகளின் அமைப்பில் பிரிட்டன் முக்கிய பங்கு வகித்தது என்பதைக் காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கம் மற்றும் முன்னாள் அடிமைகள் மற்றும் அடிமைகளின் முயற்சிகள் ஆகியவற்றின் கலவையாக, அவர்களால் வெறுக்கப்பட்ட அமைப்பை தூக்கி எறிவதற்காக அடிமைகள் தங்கள் தளைகளை தூக்கி எறிவதற்கான அனைத்து முயற்சிகளையும் பொருளாதார நலன்கள் என்ற பெயரில் அது மிகக் கொடூரமான முறையில் நசுக்கியது.

அடிமைத்தனத்திற்கு சமமான நவீனத்துவமாக உள்ளது என்னவெனில், தொன்மையான மற்றும் நெருக்கடி நிறைந்த ஊதிய-அடிமை முறையான முதலாளித்துவ அமைப்பாகும். இது பில்லியன் கணக்கானவர்களை வறுமை மற்றும் துயரத்திற்குக்கு உள்ளாக்கி, தொற்றுநோய்க்கு சுதந்திரமான அணுகலைக் கொடுத்துள்ளது. தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுதல், முதலாளித்துவத்தை இல்லாதொழித்தல் மற்றும் ஒரு உலக சோசலிச சமுதாயத்தை ஒழுங்கமைத்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்ட ஒரு சர்வதேச புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில், முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து முற்றிலும் சுயாதீனமான ஒரு கட்சியை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே முதலாளித்துவ சுரண்டல், வறுமை, தொற்றுநோய் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் ஒருங்கிணைத்து ஐக்கியப்படுத்த முயல்கிறது. இன்றைய தீர்க்கமான அரசியல் கேள்வி கரீபியன் மற்றும் உலகம் முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைப்பதாகும்.

Loading