அமெரிக்காவும் ரஷ்யாவும் ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த கோடையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்ட 'மூலோபாய ஸ்திரத்தன்மை' பற்றிய கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை மாலை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் தொடங்கியது. இரண்டு உயர்மட்ட பிரதிநிதிகளின் தலைவர்களான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் வெண்டி ஷெர்மன் மற்றும் துணை ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் ஆகியோர் ஆரம்ப வேலை இரவு விருந்துக்காக சந்தித்தனர். உண்மையான பேச்சுவார்த்தை திங்கட்கிழமை தொடங்கியது.

ஜனவரி 10, 2022 திங்கட்கிழமை, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் வெண்டி ஷெர்மனுடன் பாதுகாப்புப் பேச்சுக்களுக்காக ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் மற்றும் அவரது பிரதிநிதிகள் வந்துள்ளனர்(Denis Balibouse/Pool via AP)

இருதரப்பு பேச்சுக்களுக்கு முன்னதாகவே, அவை ஒரு சுமுகமான நடவடிக்கை அல்ல, ஆனால் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் போர் தயாரிப்புகளில் மேலும் ஒரு கட்டத்தை தொடங்கும் என்பது ஏற்கனவே தெளிவாக இருந்தது.

பல வாரங்களாக உக்ரேன் மீது இராணுவத் தாக்குதலை ரஷ்யா திட்டமிடுவதாகக் நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி மற்றும் Nord Stream 2 குழாய்திட்டம் நடைமுறைக்கு வருவதை அனுமதிக்க மறுப்பது முதல் ரஷ்யாவை உலகளாவிய நிதி பரிவர்த்தனை அமைப்பான SWIFT இல் இருந்து விலக்குவது வரை பாரிய எதிர் நடவடிக்கைகளினால் அச்சுறுத்தியது. இந்தத் திட்டம் படிப்படியாக மோதலை அதிகரிப்பதற்காக அல்ல, ஆனால் உடனடி பதிலடிக்காக என அமெரிக்க வெளியுறவுத்துறை விளக்கமளித்தது.

ரஷ்யா தனது பங்கிற்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை கோரியது. டிசம்பர் நடுப்பகுதியில், மாஸ்கோ இரண்டு வரைவு ஒப்பந்தங்களை சமர்ப்பித்தது. அதில் நேட்டோவின் விரிவாக்கத்தை நிராகரிக்கவும், கிழக்கு ஐரோப்பா, காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவில் இராணுவ நடவடிக்கைகளை கைவிடவும் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தன.

வாஷிங்டன் உடனடியாக அத்தகைய விட்டுக்கொடுப்புகளில் கையெழுத்திடப் போவதில்லை என்றும் எந்த 'சிவப்பு கோடுகள்' ஐயும் ஏற்கப்போவதில்லை என்றும் தெளிவுபடுத்தியது. ஆயுதக் கட்டுப்பாடுகள், ஏவுகணைகளை நிலைநிறுத்தல் மற்றும் இராணுவப் பயிற்சிகளின் பரஸ்பர கட்டுப்பாடுகள் பற்றி விவாதிக்க அது தயாராக இருப்பதாக அறிவித்தது.

1987 இல் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட குறுகிய மற்றும் இடைத்தூர ஏவுகணைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்திய INF உடன்படிக்கை, 2019 இல் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் ஒருதலைப்பட்சமாக இரத்து செய்யப்பட்டது.

ஒரு உடன்படிக்கைக்கு அமெரிக்காவின் எதிர்ப்பு இருந்தபோதிலும், வாஷிங்டனும் மாஸ்கோவும் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்த்து ஒரு ஒப்பந்தத்தை எட்டக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கையாக இருந்தது.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை செய்தித் தொடர்பாளர் ஜோசப் பொரெல் உக்ரேனுக்கு விஜயம் செய்தபோது, 'நாம் இனி யால்டா காலகட்டத்தில் இல்லை' என்று கூறினார். யால்டாவில் பெரும் வல்லரசுகள் 1945 இல் ஐரோப்பாவைப் பங்கிட்டுக்கொண்டன. உக்ரேன் ஐரோப்பாவின் ஒரு பகுதியாகும், மேலும் ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் விவாதிக்கும்போது ஐரோப்பிய ஒன்றியம் பார்வையாளராக இருக்க முடியாது என்றார்.

பிரெஞ்சு பாதுகாப்பு நிபுணர் பிரன்சுவா கைஸ்பூர்க் இது பற்றி பின்வருமாறு புகார் கூறினார். 'இது எங்கள் பாதுகாப்பு, ஆனால் நாங்கள் அங்கு இல்லை.' ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தோல்வி மற்றும் சீனாவில் அதன் மூலோபாய கவனம் ஆகியவற்றை தொடர்ந்து ஜனாதிபதி பைடென் இன்னும் நிலையாக இருக்கிறாரா என்று ஐரோப்பியர்கள் கவலை கொண்டுள்ளனர். நவம்பரில் நடைபெறும் இடைக்காலத் தேர்தல்களால் பைடென் கணிசமாக பலவீனமடையக்கூடும் என்றும், 2024ல் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

ஜேர்மன் அதிகாரிகளும் இதே போன்ற புள்ளிகளை முன்வைத்தனர். பசுமைக் கட்சியின் வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயபொக் வாஷிங்டனுக்கான தனது முதல் பயணத்தின் போது ஐரோப்பா இல்லாமல் ஐரோப்பாவில் பாதுகாப்பு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்று எச்சரித்தார்.

ஜெனிவாவில் உரையாடலுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டவுடன், Süddeutsche Zeitung பத்திரிகையில்உள்ள வெளிநாட்டு விவகாரம் பற்றிய நீண்டகாலத் தலைவர் ஸ்டீபன் கோர்னேலியஸ், “இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமானால், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பெரிய அவமானத்திற்குத் தயாராக வேண்டும்: ஐரோப்பாவின் அரசுகளின் பாதுகாப்பு பற்றிய மாநாடு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இல்லாமல்' என எழுதினார்.

ஐரோப்பா, உக்ரேன் மற்றும் பெலாருஷ்ய எதிர்ப்பு ஆகியவை 'மாஸ்கோவிலும் வாஷிங்டனிலும் உள்ள இரண்டு மனிதர்களால் பழைய ஆடைக்குள் இருக்க கட்டாயப்படுத்த அனுமதிப்பதை விட, அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு பற்றிய அவர்களின் சுய விளக்கத்தில் தெளிவாக உள்ளன' என்று கோர்னேலியஸ் வலியுறுத்தினார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து முக்கால் நூற்றாண்டில் ஐரோப்பாவை ஒரு பேரழிவுகரமான போரில் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கும் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அதிகரித்து வரும் மோதல், கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் முதலாளித்துவ மறுசீரமைப்பின் விளைவுகளின் பேரழிவு மீதான குற்றச்சாட்டாகும்.

கடந்த சோவியத் ஜனாதிபதி மிக்கைல் கோர்பச்சேவ் ஏகாதிபத்திய சக்திகளை அரவணைத்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தை கலைத்ததில் இருந்து, நேட்டோ இராணுவ ரீதியாக ரஷ்யாவை இன்னும் நெருக்கமாக சுற்றி வளைத்துள்ளது. கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசுகளை இராணுவமயமாக்குவதில்லை என்ற உறுதியான வாக்குறுதிகள் இருந்தபோதிலும், வார்சோ ஒப்பந்தத்தின் பல முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பால்டிக் சோவியத் குடியரசுகள் இப்போது நேட்டோவில் உறுப்பினர்களாக உள்ளனர். நேட்டோ தொடர்ந்து ரஷ்ய எல்லையில் இராணுவ பயிற்சிகளை நடத்தி வருவதுடன், மேலும் சில நாட்களில் ரஷ்யாவை தாக்கக்கூடிய விரைவு தாக்குதல் படையை அமைத்துள்ளது.

2014 இல் ரஷ்யாவின் இராணுவச் சுற்றி வளைப்பு ஒரு புதிய கட்டத்தை எட்டியது. அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய சக்திகள் உக்ரேனில் ஒரு சதியை ஏற்பாடு செய்தபோது, அங்கு ஒரு மேற்கு சார்பு ஆட்சியை பாசிச கிளர்ச்சியாளர்களின் உதவியுடன் அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. அப்போதிருந்து, ரஷ்யாவுடன் 2,300கி.மீ நீள எல்லையைக் கொண்ட நாடு, அமெரிக்காவிடமிருந்து மொத்தம் 2.5 பில்லியன் டாலர் இராணுவ உதவியைப் பெற்றுள்ளது. செக் குடியரசு, போலந்து, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய சக்திகளும் மற்றும் குறிப்பாக துருக்கியும் நாட்டுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளன.

ஜேர்மனியில், தற்போதைய பொருளாதார விவகார அமைச்சரும் பசுமைக் கட்சியின் இணைத் தலைவருமான ரொபேர்ட் ஹேபெக், ஒரு வருடத்திற்கு முன்பு உக்ரேனிய இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்குமாறு அழைப்பு விடுத்தார். ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்கு மிக்க நபரான வொல்வ்காங் இஸ்ஷிங்கர், கடந்த ஆண்டு இறுதியில் Süddeutsche Zeitung பத்திரிகையின் ஒரு விருந்தினர் பகுதி இடுகையில், 'உக்ரேனின் பாதுகாப்புத் திறன்களின் 'அதிகரிப்பு' பற்றி விவாதம் பேர்லினுக்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது. பேர்லின் ஒதுங்கியிருக்கக்கூடாது என அறிவித்தார்.

கியேவில் உள்ள ஆட்சி, போட்டி தன்னலக்குழுக்களால் வழிநடத்தப்படுவதுடன், அங்கு பரவலான சமூக அவலத்திற்குப் பொறுப்பாகும். இது இயல்பாகவே ஸ்திரமற்றுள்ளதுடன், எனவே மிகவும் ஆபத்தானதாகும். அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அது மீண்டும் மீண்டும் தேசியவாத ஆத்திரமூட்டல்களை நாடுகிறது. இது போரின் ஆபத்தையும் அதிகரிக்கிறது.

2014 ஆட்சிக் கவிழ்ப்பில் பதவிக்கு வந்த முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ, அவருக்குப் பின் வந்த வோலோடிமிர் ஜெலென்ஸ்கியால் தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் குறிவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளால் கட்டுப்படுத்தப்படும் கிழக்கு உக்ரேனில் இருந்து தடைசெய்யப்பட்ட நிலக்கரி விநியோகம் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

தன்னலக்குழுக்களின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி புட்டினின் ரஷ்ய ஆட்சி, போர் அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கு எதையும் முன்வைக்கவில்லை. அது இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளுக்கு இடையில் ஊசலாடுகிறது. அதே சமயம் போர் அச்சுறுத்தலை நிறுத்தும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் முறையிடுவதற்கு முற்றிலும் இயலாமல் உள்ளது.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு கூடுதலாக, இந்த வாரம் ஜெனீவாவில் பல சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. நேட்டோ-ரஷ்யா குழு இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக புதன்கிழமை மீண்டும் கூடும். அதைத் தொடர்ந்து வியாழன் அன்று உக்ரேன் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அமைப்பான ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் நிரந்தர குழுவின் (OSCE) கூட்டம் இடம்பெறவுள்ளது. ஆனால் இந்த சந்திப்புகள் எதுவும் போர் ஆபத்தை குறைக்காது. போரானது இறுதியில் உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசமைப்பு முறைக்கும் மற்றும் உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் முதலாளித்துவ தனியார் சொத்துடமைக்கும் இடையிலான உலக முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் இருந்து விளைகிறது.

அதிகரித்து வரும் பூகோள அரசியல் மோதல்கள் மற்றும் சமூக சமத்துவமின்மை மற்றும் அதன் கொலைகார கோவிட்-19 கொள்கைக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே, போர் மற்றும் சர்வாதிகாரத்தைத் தவிர வேறு வழி எதையும் காணவில்லை. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கிய சோசலிச எதிர்ப்பு மட்டுமே அத்தகைய பேரழிவைத் தடுக்க முடியும்.

Loading