கோவிட்-19 கொள்கைகளுக்கு எதிராக பிரெஞ்சு ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பா எங்கிலும் கோவிட்-19 நோயாளிகள் அதிகரித்து வருகின்ற நிலையில், பள்ளிகளில் பாரியளவில் நோய்தொற்றுகளுக்கு வழிவகுக்கும் அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக ஒரு சர்வதேச பாரிய இயக்கம் கட்டமைந்து வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றை பெரும் தீங்காக கையாள்வதற்கு எதிராக பிரெஞ்சு ஆசிரியர்கள் நேற்று நாடு தழுவிய ஒரு வேலைநிறுத்தம் நடத்திய நிலையில், இணையவழிக் கற்பித்தலுக்கான பாரிய ஆதரவு மற்றும் பாதுகாப்பற்ற பள்ளிகளில் படிப்பதற்கான எதிர்ப்புக்கு மத்தியில், இத்தாலிய மாணவர்களும் நாடு தழுவிய வெளிநடப்புக்கு இன்று தயாரிப்பு செய்து வருகிறார்கள்.

ஜனவரி 13, 2022 அன்று லில்லில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம். (AP Photo/Michel Spingler) [AP Photo/Michel Spingler]

அரசு 'பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் நடைமுறைகளைத் தளர்த்துகின்ற' வேளையில் 'நல்வாழ்வை அபாயகரமாக பணயம் வைப்பதாக' விமர்சித்த ஓர் அறிக்கையைச் சுற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரெஞ்சு ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்திற்குப் பாரியளவில் ஆதரவு கிட்டியது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் 72 சதவீதத்தினரும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 62 சதவீதத்தினரும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதாக பிரெஞ்சு ஆசிரியர்களின் தொழிற்சங்கங்கள் வாதிட்டன, இது பிரான்சில் ஏறக்குறைய அரைவாசி பள்ளிகளை அடைக்கச் செய்திருந்தது. எஞ்சிய பள்ளிகள் இன்றியமையா பணியாளர்களுடன் செயல்பட்டன.

பல நகரங்களில் வழமையாக திறந்திருக்க வேண்டிய பள்ளிகளை முடக்கி அங்கே போராட்டத்தைத் தொடங்கிய உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மீது பிரெஞ்சு கலகம் ஒடுக்கும் பொலிஸார் வன்முறை தாக்குதல் நடத்தினர். பாரீசில், அவர்கள் கோல்பேர்ட் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே மாணவர்களை அடித்து கலைத்தனர், ஹெலென் பௌச்சர் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே போராடிய மாணவர்களைப் பிடித்து கோபமூட்டினர். நாந்தேரில் ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே போராடிய மாணவர்கள் கூட்டத்திற்குள் பொலிஸ் காரைச் செலுத்தி, பொலிஸ் ஒரு மாணவரைக் காயப்படுத்தியது.

காலை தொழிற்சங்க நிர்வாகிகளின் சார்பில் பல பள்ளிகளில் பொதுச்சபை கூட்டங்கள் நடத்தப்பட்டப் பின்னர், மதியத்திற்கு முன்னதாக அணிவகுப்புகள் தொடங்கின. “அவர்களின் இலாபங்களுக்காக, நம் பள்ளிகள் தியாகம் செய்யப்படுகின்றன,” என்று கோஷமிட்ட ஆசிரியர்கள், கல்வித்துறை அமைச்சர் ஜோன்-மிஷேல் புளோங்கேர் க்கு எதிராக கோஷமிட்டு கூச்சலிட்டதுடன், சமூக சமத்துவமின்மைக்கு எதிரான 2018-2019 “மஞ்சள் சீருடை' போராட்டங்களின் பாடல்களைப் பாடினர். மார்சேய், லியோன், துலூஸ், போர்தோ, நீஸ், கிறனோபிள், சாம்பெர்ரி மற்றும் ஏனைய நகரங்களிலும், அத்துடன் தலைநகர் பாரீசிலும் பெரிய அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.

ஏப்ரலில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்களின் வேட்பாளர்கள், பாரீசில், அணிவகுப்பின் முன்னால் நடந்து செல்ல முயன்றனர்: சோசலிஸ்ட் கட்சியின் (PS) பாரீஸ் நகரசபை தலைவர் ஆன் இடால்கோ, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) நிர்வாகி ஸ்பேபியன் ரஸ்செல், மற்றும் 'இடது வெகுஜனவாத' கட்சி வேட்பாளர் ஜோன்-லூக் மெலோன்சோன் ஆகியோர். ஆனால் இந்த கட்சிகள் எதுவும் பாரிய நோய்தொற்றுக்கான ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கொள்கைகளுக்கு எந்தவித இடதுசாரி எதிர்ப்பையும் ஒழுங்கமைத்தவை இல்லை. உண்மையில் சொல்லப் போனால், அடிபணியா பிரான்ஸ் (LFI) இந்த கோடையில் தடுப்பூசி-எதிர்ப்பு போராட்டங்களை ஊக்குவித்தது. அவர்களின் முன்வரலாற்றின் அடிப்படையில், இந்த வேட்பாளர்கள் மீது கூட்டத்தில் பல குரோதமான கருத்துக்கள் கூறப்பட்டன.

“நீங்கள் துள்ளி குதித்தாலும் எங்களுக்கு ஒன்றும் அக்கறையில்லை,” என்று இடால்கோவை நோக்கி ஒரு போராட்டக்காரர் உரக்கக் கூறினார், அதேவேளையில் மற்றொருவர் France Info க்குப் பின்வருமாறு கூறினார்: “ஆன் இடால்கோ மற்றும் சோசலிஸ்ட் கட்சி பொதுவாகவே உண்மையில் கல்வித்துறையைப் பாதுகாக்கவில்லை. இப்போது, ஆசிரியர்களும் ஒட்டுமொத்த கல்வித்துறை உலகமும் உண்மையிலேயே கோபமாக உள்ளது. … ஆன் இடால்கோ, அவரைக் குறித்து எனக்கு ஒன்றும் கவலையில்லை,” என்றார்.

திங்கட்கிழமை இத்தாலிய பள்ளிகளின் விடுமுறைகள் முடிவுற்றதும் 'அபாயகரமாக பள்ளிக்குத் திரும்ப செய்வதற்கு' எதிராக ஸ்ராலினிச தொடர்புடைய மாணவர்கள் சங்கம் UDS நாடுதழுவிய வெளிநடப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இத்தாலியிலும் இன்று பாரிய போராட்டங்கள் கட்டவிழ்ந்து வருகின்றன. இது இந்த வார தொடக்கத்தில் பள்ளிகளுக்குத் திரும்ப செய்வதை எதிர்த்து கம்பானியா, அன்கொனா, அஸ்கொலி மற்றும் சார்டினியா பகுதிகளின் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நடத்திய வெளிநடப்புகளைத் தொடர்ந்து வருகிறது. ஒரு மாணவர் ANSA News க்குத் தெரிவித்தார்: “இணையவழிக் கற்பித்தல் என்பது சமூகமயப்படலுக்கும் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் பழகுவதற்கும் இடையூறானது என்பதில் நாங்கள் அனைவரும் உடன்படுகிறோம், ஆனால் ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமையும் நோய்தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதும் இப்போது அதை விட முக்கியமாகும்,” என்றார்.

நாடுதழுவிய மாணவர் வேலைநிறுத்தத்தை அறிவிக்கையில், UDS ஒருங்கிணைப்பாளர் Luca Redolfi இத்தாலிய அரசாங்கத்தின் மீது பழி சுமத்தினார்: “ஏறக்குறைய இரண்டாண்டு கால பெருந்தொற்றுக்குப் பின்னர், பள்ளிகள் இன்னும் தயாராக இல்லை என்பதை ஏற்க முடியாது. … பாரிய பரவலும் மற்றும் வகுப்பறைகளில் நெரிசலும் அதிகம் உள்ளது, இந்த பெருந்தொற்றைக் கையாள பள்ளிக் கட்டிடங்கள் தகுதியற்றுள்ளன, பெரும்பாலும் பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை, N95 ரக முகக்கவசங்களுக்கு உத்தரவாதமில்லை, நோயின் தடம் அறியும் முறை சீரழிந்துள்ளது,” என்றார்.

ஆனால், இணையவழிக் கற்பித்தலுக்கான அழைப்புக்கு இத்தாலிய இளைஞர்களிடையே பெரும் ஆதரவு இருக்கின்ற போதினும், UDS சங்கத்தின் Redolfi இத்தாலிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே எதிரொலித்தார்: “எவ்வாறிருப்பினும் இணையவழிக் கற்பித்தல் தீர்வாக இருக்க முடியாது, ஏனென்றால் இணையவழி கற்பித்தல் அவசர காலங்களுக்கு மட்டுமே ஒரு கருவியாக இருக்க முடியும் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது,” என்று வாதிட்டார். இந்த திவாலான வாதம் எதை விட்டுவிடுகிறது என்றால் இந்த பெருந்தொற்றே ஐரோப்பிய மற்றும் உலகளாவிய அவசரநிலை என்ற உண்மையை விட்டுவிடுகிறது.

இந்த வாரம் பிரான்சில் 2 மில்லியன் புதிய கோவிட்-19 நோயாளிகளும், இத்தாலியில் 1.2 மில்லியன், பிரிட்டனில் 1 மில்லியனும், ஐரோப்பாவில் ஒட்டுமொத்தமாக 7.7 மில்லியன் நோயாளிகள் மற்றும் 20,899 இறப்புகளும் ஏற்பட்டன. நோய்தொற்றுக்கள் ஒவ்வொரு வாரமும் 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்து வருகிறது, அரசாங்க கொள்கைகளால் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் ஐரோப்பிய மக்களில் பாதி பேருக்கும் அதிகமானவர்களுக்கு கோவிட்-19 ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் மட்டுமே முறையே 4 மில்லியன் மற்றும் 2.2 மில்லியன் கோவிட்-19 நோயாளிகள் இருக்கிறார்கள். பிரெஞ்சு மக்களில் 6 சதவீதத்தினரும் இத்தாலியர்களில் 3.6 சதவீதத்தினரும் இப்போது கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.

இத்தகைய கொடூரமான நிலைமைகள், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, நியூ யோர்க், மற்றும் போஸ்டன் அமெரிக்க ஆசிரியர்களின் போராட்டங்கள் மற்றும் இப்போது ஐரோப்பா எங்கிலுமான போராட்டங்களுடன் சேர்ந்து, சர்வதேச அளவில் போராட்டங்களையும் வேலைநிறுத்த நடவடிக்கைகளையும் தூண்டி வருகின்றன. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆரம்ப அணித்திரள்வே, பாரிய நோய்தொற்றுக்கான அரசு கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக காட்டப்படும் எந்த பாசாங்குத்தனத்தையும் கிழித்தெறிந்து விடுகிறது. ஐந்திலிருந்து ஏழு நாட்கள் என குறுகிய தனிமைப்படுத்தல் காலத்திற்குப் பின்னர் நோய்தொற்றுக்கு உள்ளாகி நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களை அரசாங்கங்கள் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கவும், அல்லது பாரியளவில் இந்த வைரஸ் அதிகரித்துள்ள போதும் மாணவர்களை கூட்டம் நிறைந்த, நோய்தொற்று ஏற்பட்ட வகுப்பறைகளில் இருக்க நிர்பந்திக்கவும் அனுமதிக்கும் நடவடிக்கைகள் பெருந்திரளான மக்களிடையே கோபத்தையும் கவலையையும் தூண்டியுள்ளது.

இது இந்த மாதம் ஐரோப்பிய மாணவர்களிடையே நடந்தப்பட்ட இரண்டு கருத்துக்கணிப்புகளில் கூடுதலாக எடுத்துக்காட்டப்பட்டது. கடந்த வாரம், பாரீசில் 10,000 சோர்போன் பல்கலைக்கழக மாணவர்களில் 78 சதவீதத்தினர், நூற்றுக் கணக்கான மாணவர்களை இந்த வைரஸ் பரவுவதற்கு உதவும் வகையில் பெரிய அறைகளில் ஒன்றாக பரீட்சை எழுத அமருமாறு நிர்பந்திக்கும் பல்கலைக்கழகத்தின் முடிவை எதிர்ப்பதாக கூறியிருந்தனர். இந்த வாரம், இத்தாலிய மாணவர்கள் வகுப்பறைகளுக்குத் திரும்பிய நிலையில், Skuola கல்வித்துறை வலைத் தளம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு இத்தாலிய மாணவர்களின் 69 சதவீதத்தினர் இணையவழி கற்பித்தலுக்கு மாறுவதை ஆதரிப்பதைக் கண்டறிந்தது.

தீர்க்கமான பிரச்சினை என்னவென்றால் இந்த பெருந்தொற்றைத் தடுக்கவும் நல்வாழ்வு மற்றும் உயிர்களைத் தனியார் இலாபத்திற்கு அடிபணியச் செய்வதைத் தடுக்கவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி பெற்று வரும் இந்த சர்வதேச இயக்கத்திற்கு என்ன அரசியல் முன்னோக்கு மற்றும் தலைமை தேவைப்படுகிறது என்பதாகும். சீரற்ற தணிப்பு கொள்கைகளும் தொழிற்சங்கங்கள் அறிவுறுத்தும் ஒரு நாள் வேலைநிறுத்தங்களும் இந்த வைரஸைத் தடுக்காது, இது காற்றில் பரவக்கூடியது என்பதோடு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் மற்றும் முன்னர் நோய்தொற்றுக்கு உள்ளானவர்களையும் இது தாக்கும். அல்லது அவை அரசாங்கங்களின் மனதையும் மாற்றிவிடாது, வங்கிகளுக்கு இலாபங்களை உருவாக்குவதற்காக தொழிலாளர்களை வேலையில் நிறுத்தவும் இளைஞர்களைப் பள்ளிக்கு அனுப்பவும் அரசாங்கங்கள் தீர்மானமாக உள்ளன.

இந்த கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான ஓர் உலகளாவிய போராட்டத்திற்காக தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் அணித்திரட்ட, ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும், பள்ளிகள், தொழிற்சாலைகள் மற்றும் வேலையிடங்களில், தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான, சாமானிய குழுக்களை ஒழுங்கமைப்பதே மாற்றீடாகும். இதற்கு, பள்ளிகளையும் அத்தியாவசியமற்ற உற்பத்தியையும் அடைத்து, விஞ்ஞானரீதியில் வழிநடத்தப்படும் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைக் கொண்டு வர, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் மொத்த தொழில்துறை பலத்தையும் ஒழுங்கமைத்த, ஓர் அரசியல் போராட்டம் அவசியப்படுகிறது.

அபாயம் என்னவென்றால் ஒரு சர்வதேச முன்னோக்கு மற்றும் வேலைதிட்டம் இல்லையென்றால், அரசியல் ஸ்தாபகம், இந்த ஒரு நாள் வேலைநிறுத்தங்களை, மக்களைத் தூக்கத்தில் ஆழ்த்தி நடவடிக்கையைத் தாமதப்படுத்த முயற்சிக்க பயன்படுத்திக் கொள்ள முடியும், உண்மையில், இன்னும் கூடுதலான பாரிய இறப்பைத் தடுக்க காலம் மிகவும் குறைவாக உள்ளது. பாரம்பரியமாக 'தீவிரக் கொள்கையாளர்கள்' என்று ஊடகங்கள் ஊக்குவிக்கும் பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கன்னைகள் அனேகமாக இதற்கான மிகவும் சரியான எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

நேற்று மாலை, பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ப்ளோன்கே உடன் ஓர் அவசர கூட்டம் நடத்தின, அத்துடன் கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெரன் உடன் காணொளி மூலமாக உரையாடின. ப்ளோன்கே இன்னும் அதிக N95 ரக முகக்கவசங்கள், பரிசோதனை கருவிகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட ஆசிரியர்களுக்கு மாற்று ஆசிரியர்களுக்கு உறுதியளித்த அதேவேளையில், மாணவர்கள் நோய்வாய்படும் வகுப்பறைகளை மூடுவதன் மூலம் பள்ளிகளில் வைரஸ் பரவலைத் தடுப்பதை மறுத்து வரும் அதன் கொள்கையை அரசாங்கம் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

ப்ளோன்கே உடனான கூட்டம் முடிந்து வெளியே வந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் தொழிற்சங்க அதிகாரி Sophie Vénétitay, போதுமான அளவுக்கு இல்லாத ப்ளோன்கே அறிவித்த கொள்கைகளை அவர் இன்னும் செயல்திறனுடன் சந்தைப்படுத்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் விரும்புவதைச் சுட்டிக்காட்டினார். அப்பெண்மணி கூறினார்: “ஒரு சில அறிகுறிகள் தான் காட்டப்படுகின்றன, ஆனால் இன்னும் நிறைய தேவை. முன்னர் நடத்திய பெரிய விவாதங்களில் எந்த பலனும் ஏற்படவில்லை என்பதால் இன்றைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்,” என்றார்.

அதேபோல, பிரான்சின் ஸ்ராலினிச தொழிற்சங்கமான தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) இரண்டு வாரங்களில், அதாவது ஜனவரி 27 இல், மற்றொரு ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால் எதுவும் செய்யப்படவில்லை என்றால், அதற்குள், இன்னும் பத்தாயிரக் கணக்கானவர்கள் இறப்பார்கள் மற்றும் பத்து மில்லியன் கணக்கானவர்கள் ஐரோப்பா எங்கிலும் கோவிட்-19 ஆல் நோய்வாய்ப்படுவார்கள்.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான, சாமானிய அமைப்புகளைச் சர்வதேச அளவில் இணைப்பதும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) ஏற்படுத்துவதும், இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான ஓர் அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுமே மாற்றீடாகும். இத்தகைய குழுக்களில் இணைவதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் உலக சோலிச வலைத் தளத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste) அழைப்பு விடுக்கிறது.

Loading