உக்ரேனில் "ஜனநாயகம்" - நேட்டோ எதற்காக ஒரு போர் அபாயத்தை பணயம் வைக்கிறது?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போர் குற்றவாளிகள், பாரிய கொலைகாரர்கள், சைமன் பெட்லியுரா, ஸ்டீபன் பண்டேரா மற்றும் ரோமன் ஷுகேவிச் போன்ற யூத எதிர்ப்பு மற்றும் நாஜி ஒத்துழைப்பாளர்களுக்கு பொது நினைவுச் சின்னங்களை வைப்பதுடன் மற்றும் நினைவுதினங்களையும் அரசு கொண்டாடுகின்றது. உக்ரேனில் அரசின் பாதுகாப்புக் கரத்தின் கீழ் உலகம் முழுவதிலுமிருந்து நவ-நாஜிக்களை ஒருங்கிணைத்தல், இராணுவப் பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ ஆயுதப் படைகளில் பாசிஸ்டுகளை ஒருங்கிணைத்தல் நிகழ்கின்றது. ஒரு சில தன்னலக்குழுக்கள் மற்றும் ஊழல் நிறைந்த நீதித்துறை மற்றும் அதிகாரிகளுக்கு இடையே அரசு அதிகாரத்திற்கான மாபியாக்களுக்கிடையிலானது போன்ற போராட்டங்கள் நிகழ்கின்றன. சராசரி மாத வருமானம் 412 யூரோக்கள் (ஏப்ரல் 2021) கொண்ட பாரிய சமூக சமத்துவமின்மை நிலவுகின்றது. இவைதான் உக்ரேனிய 'ஜனநாயகத்தின்' மிக முக்கிய அம்சங்களாகும். இந்த ஜனநாயகத்திற்காகத்தான் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேட்டோ கூட்டாளிகளும் அணுசக்தி கொண்ட நாடான ரஷ்யாவிற்கு எதிரான போரைப் பணயம் வைக்கின்றனர்.

மரியுபோலில் உள்ள அஷோவ் படைப்பிரிவின் கவச வாகனங்கள்[Credit: Wanderer777/CC BY-SA 4.0/Wikimedia]

'இப்போது, எப்போதும் போல, உக்ரேனியர்களின் சொந்த எதிர்காலம் மற்றும் இந்த நாட்டின் எதிர்காலத்தை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது,' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் புதன்கிழமை கியேவ் இற்கான விஜயத்தின் போது கூறினார். 'உக்ரேனிய மக்கள் 1991 இல் ஒரு ஜனநாயக மற்றும் ஐரோப்பிய பாதையைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் 2013 இல் அந்த தேர்வைப் பாதுகாக்க மைதானுக்கு சென்றனர். துரதிர்ஷ்டவசமாக, அன்றிலிருந்து நீங்கள் மாஸ்கோவிலிருந்து இடைவிடாத ஆக்கிரமிப்பை எதிர்கொண்டீர்கள். ரஷ்யா கிரிமியாவின் பிரதேசத்தை ஆக்கிரமித்து, கிழக்கு உக்ரேனில் ஒரு மோதலை உருவாக்கி, மேலும் உக்ரேனின் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் பிளவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதே போன்ற கருத்துக்கள் ஐரோப்பாவின் தலைநகரங்களில் இருந்து வருகின்றன.

அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் பொய்யாகும்.

உக்ரேன் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த சோவியத் ஒன்றியத்தை கலைக்க 1991 இல் முடிவு செய்தது 'உக்ரேனிய மக்கள்' அல்ல. ஆனால் மூன்று ஸ்ராலினிச அதிகாரிகளான போரிஸ் யெல்ட்சின் (ரஷ்யா), ஸ்டானிஸ்லாவ் ஷுஷ்கேவிச் (பெலாருஸ்) மற்றும் லியோனிட் கிராவ்சுக் (உக்ரேன்) ஆகியோராகும். அவர்கள் டிசம்பர் 7 அன்று வேட்டையாடுவதற்கு ஒரு டாச்சாவில் சந்தித்தனர், அங்கு அதிகளவு வொட்காவை அருந்திய பின்னர், 1917 அக்டோபர் புரட்சியில் இருந்து உருவாகிய அரசை கலைக்க எந்த பொது விவாதமும் இல்லாமல் முடிவு செய்தனர்.

ஒரு தசாப்தத்தில் காட்டுமிராண்டித்தனமான தனியார்மயமாக்கலைத் தொடர்ந்து, முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் அவர்களது இளைஞர் அமைப்புகளும் சமூகமயமாக்கப்பட்ட சொத்துக்களைச் சூறையாடி, உயர் வளர்ச்சியடைந்த நிலையிலிருந்த கல்வி மற்றும் சுகாதார அமைப்புமுறைகளைத் தகர்த்தன.

தன்னலக்குழுக்களின் ஆட்சி

அதைத் தொடர்ந்து தம்மை பணக்காரராக்கிய தன்னலக்குழுக்கள் இன்றும் உக்ரேனின் அரசியல் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் பொருளாதாரத்தையும் ஊடகங்களையும் கட்டுப்படுத்துவதுடன் மற்றும் நீதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தங்கள் சொந்த கட்சிகளையும் ஆயுதக்குழுக்களையும் பராமரிக்கிறார்கள்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நிதி வழங்கலுடனும் ஆலோசகர்களுடனும் உக்ரேனை ஆதரித்து வரும் ஐரோப்பிய ஒன்றியம் கூட பின்வருமாறு முடிவெடுக்கிறது: 'தன்னலக்குழுக்கள், உயர்மட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஊழல்மிக்க அரச வழக்குத்தொடுனர்கள் மற்றும் நீதிபதிகள் தங்களுக்குள் இன்னும் அரசைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் வெளிநாடுகளில் காணாமல் போகின்றது. உக்ரேன், சில விதிவிலக்குகளுடன், ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் போலவே ஒரு அரசியலமைப்பு கொண்ட அரசை அமைப்பதில் சிறிதளவே முன்னேற்றம் கண்டுள்ளது.”

கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து 'உக்ரேனில் பெரும் ஊழலை எதிர்த்துப் போராடுதல்' பற்றிய ஐரோப்பிய கணக்குபரிசோதகர்கள் நீதிமன்றத்தின் (ECA) சிறப்பு அறிக்கையை பற்றி Süddeutsche Zeitung பத்திரிகை இப்படித்தான் சுருக்கமாகக் கூறுகிறது.

உக்ரேனிய தன்னலக்குழுக்கள் தங்கள் அரசியல் நோக்குநிலையையும் சர்வதேச கூட்டணிகளையும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்கின்றன.

உதாரணமாக, நாட்டின் மிகப் பெரிய பணக்காரரான ரினாட் அக்மெடோவ் (Forbes மதிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு: 7.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) நீண்டகாலமாக ரஷ்ய சார்புடையவராகக் கருதப்பட்டார். மற்றவற்றுடன், அவர் டொனெட்ஸ்க் படுகையில் தற்போது பெருமளவில் அழிக்கப்பட்ட நிலக்கரி மற்றும் எஃகுத் தொழிலைக் கட்டுப்படுத்தினார் மற்றும் 2014 இல் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் 'பிராந்தியங்களின் கட்சி' க்கு தற்காலிகமாக துணைத் தலைவராக இருந்தார். யானுகோவிச்சின் வீழ்ச்சிக்குப் பிறகும் அவர் தனது செல்வத்தை தொடர்ந்து அதிகரித்துக் கொள்வதை அது தடுக்கவில்லை.

நான்காவது பணக்கார உக்ரேனியரான ஈகோர் கோலோமோய்ஸ்கி (1.8 பில்லியன் டாலர்கள்), தற்போதைய ஜனாதிபதியான வோலோடிமைர் ஜெலென்ஸ்கி இன் ஆதரவாளராகவும், கொள்கை வகுப்பாளராகவும் கருதப்படுகிறார். அவர் 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தின் மூலம் வெற்றி பெற்றார். '21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நிதி மோசடியில்' ஐந்து பில்லியன் யூரோக்களுக்கு மேல் தனக்குச் சொந்தமான ஒரு வங்கியைக் கொள்ளையடித்ததாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் கோலோமோய்ஸ்கி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பண்டோரா தகவல்கள் (Pandora Papers), ஜெலென்ஸ்கியும் வெளிப்படையாக இந்த மோசடி மூலம் இலாபம் அடைந்தார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அவரும் அவரது பரிவாரங்களும் மில்லியன் கணக்கான நிதி பாயும் சர்வதேச வரிப் புகலிடங்களில் பல போலிப் பெயர்களில் உள்ள நிறுவனங்களைச் சொந்தமாக வைத்துள்ளனர்.

1.6 பில்லியன் டாலர்களுடன் ஏழாவது பணக்கார உக்ரேனியரான பெட்ரோ பொரோஷென்கோ, 2014 முதல் 2019 வரை நாட்டின் ஜகாதிபதியாக இருந்தார். ரஷ்யாவிற்கு இனிப்புகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் தனது செல்வத்தை ஈட்டினார். இவர் ஜனாதிபதி யானுகோவிச்சின் கீழ் சிறிது காலம் அமைச்சராக இருந்தார், பின்னர் தீவிர தேசியவாதிகளினதும் மற்றும் மேற்கு நாடுகளின் அன்புக்குரியவராக மாறினார்.. அவர் இப்போது தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். ஜனாதிபதியாக இருந்தபோது கிழக்கு உக்ரேனில் உள்ள பிரிவினைவாதிகளுடன் அவர்களுக்கு எதிரான உள்நாட்டுப் போரைத் தூண்டும் போது அவர்களுடன் இலாபகரமான ஒப்பந்தங்களையும் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. போரோஷென்கோ இதை மறுத்து, ஒரு அரசியல் எதிர்ப்பாளரை அகற்ற விரும்புவதாக ஜெலென்ஸ்கி மீது குற்றம் சாட்டுகிறார்.

தேசியவாதம் எப்பொழுதும் தன்னலக்குழுக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கான ஒரு வழிமுறையாக சேவை செய்தது. பல தசாப்தங்களாக ஸ்ராலினிச அடக்குமுறை மற்றும் வரலாற்றின் பொய்மைப்படுத்தலுக்குப் பின்னர் அரசியல்ரீதியாக திசைதிருப்பப்பட்ட தொழிலாள வர்க்கத்தை சமூக பதட்டங்களில் இருந்து கவனத்தை திசை திருப்பவும், தேசிய மோதல்களை தூண்டிவிட்டு, பாசிச போக்குகளை ஊக்குவித்தனர். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து நிலைமை இவ்வாறே இருந்தது, ஆனால் 2014 மைதான் சதிக்குப் பின்னர் புதிய பரிமாணங்களை எடுத்தது. அப்போதிருந்து, தீவிர வலதுசாரி தேசியவாதிகள் மற்றும் பாசிஸ்டுகள் அரசு திட்டமிட்ட முறையில் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

மைதான் சதி

பிளிங்கென் கூறுவதற்கு மாறாக, மைதானில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கான தேர்வு அல்ல. மாறாக வலதுசாரி சதியாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான யானுகோவிச், ரஷ்யாவிற்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் இடையில் சூழ்ச்சிக்கையாளல் செய்து கொண்டிருந்தார். இவர், பாசிச கிளர்ச்சியாளர்களின் உதவியுடனும் வாஷிங்டன் மற்றும் பேர்லினின் வெளிப்படையான ஆதரவுடனும் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு பொரோஷென்கோவால் மாற்றீடு செய்யப்பட்டார்.

அப்போது ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலரும், இப்போது அமெரிக்க வெளியுறவுத்துறையில் மூன்றாம் இடத்தில் உள்ளவருமான விக்டோரியா நுலாண்ட், யானுகோவிச்சிற்கு எதிரான போராட்டங்களை உற்சாகப்படுத்த மைதான் சதுக்கத்திற்கு தனிப்பட்ட முறையில் சென்றார். உக்ரேனில் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா ஐந்து பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதாக அவர் பகிரங்கமாக பெருமையாக கூறினார்.

அப்போது வெளியுறவு மந்திரியாக இருந்தவரும் இன்றைய ஜேர்மனியின் சமூக ஜனநாயக$க கட்சியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், யானுகோவிச்சையே மாற்றுவது குறித்து யானுகோவிச் உடனும் எதிர்க் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த கியேவுக்கு சென்றார். அவர் பாசிச ஸ்வோபோடா கட்சியின் தலைவரான ஓலேக் தியானிபோக் (Oleh Tyahnybok) உடன் நேரடியாக இணைந்து இயங்கினார். மேற்கு உக்ரேனின் சில பகுதிகளைத் தவிர சிறிய செல்வாக்கைக் கொண்டிருந்த ஸ்வோபோடா கட்சி, இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுடன் ஒத்துழைத்து பாரிய கொலைகளில் ஈடுபட்ட உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் (OUN) பாரம்பரியத்தில் நிற்கிறது. இது நவ-நாஜி ஜேர்மன் தேசியக் கட்சியுடனும் (NP) உறவுகளைப் பேணுகிறது.

ஒரு நவ-பாசிச ஆயுதக்குழுவான Right Sector, கியேவின் மையத்தை கைப்பற்றி, உயிருக்கு பயந்த யானுகோவிச்சை ஓட ஓட விரட்டியபோது, ஸ்ரைய்ன்மையரின் ஒப்பந்தத்தின் மை கூட காய்ந்திருக்கவில்லை.

அப்போதிருந்து, அத்தகைய பாசிச ஆயுதக்குழுக்கள் நாட்டின் அரசியல் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர். அவர்கள் அரசியல் எதிர்ப்பாளர்களை பயமுறுத்துகிறார்கள் மற்றும் கிழக்கு உக்ரேனில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கு எதிராக போரை நடத்துகிறார்கள். உதாரணமாக, மே 2, 2014 அன்று, புதிய அரசாங்கத்திற்கு எதிரான 40 க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் ஒடெசா தொழிற்சங்க இல்லத்தில் கொல்லப்பட்டனர். பாசிஸ்டுகள் கட்டிடத்திற்கு தீ வைத்து, பாதிக்கப்பட்டவர்களை வெளியேற விடாமல் தடுத்தனர்.

அஷோவ் படைப்பிரிவு

கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக கட்டமைக்கப்பட்ட மற்றும் ஆயுதம் ஏந்திய சுமார் 80 அல்லது அதற்கு மேற்பட்ட தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்களில், அஷோவ் படைப்பிரிவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது, மைதானில் நடந்த நிகழ்வுகளின் போது கொலைக்காக தண்டனை அனுபவித்து வந்த சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆண்ட்ரே பிலெட்ஸ்கியால் நிறுவப்பட்டது. அஷோவ் படைப்பிரிவு நாஜிகள் மீதான அதன் அபிமானத்தை ஒருபோதும் மறைக்கவில்லை. பிலெட்ஸ்கி 'யூதர்களால் தலைமை தாங்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான உலகின் வெள்ளை நாடுகளின் சிலுவைப் போருக்கு' தனது ஆதரவை அறிவித்தார். அஷோவ் படைப்பிரிவின் சின்னங்களான ஓநாய் கொக்கி மற்றும் கருப்பு சூரியன் ஆகியவை இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் SS படைப்பிரிவால் பயன்படுத்தப்பட்டவையாகும்.

ஆயினும்கூட, இந்த ஆயுதக்குழு அரசு மற்றும் தன்னலக்குழுக்களால் நிதியளிக்கப்பட்டது மற்றும் ஆயுதமளிக்கப்பட்டது. 2014 இல் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி பொரோஷென்கோ அவர்களைப் பாராட்டி, 'இவர்கள் எங்கள் சிறந்த போர்வீரர்கள்' என்று அறிவித்தார். Biletsky தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கொண்டாடப்பட்டு 2014 இல் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதியில், உக்ரேனிய ஆயுதப் படைகளுடன் இந்த ஆயுதக்குழு உத்தியோகபூர்வமாக ஒருங்கிணைக்கப்பட்டு, அங்கு அது அதன் சொந்த படைப்பிரிவை உருவாக்கிக்கொண்டது.

'இதனால் அதற்கு உலகில் வேறு எந்த தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்களும் உரிமை கோர முடியாத அளவு ஆயுதக் களஞ்சியம் கிடைத்தது. இதில் வெடிபொருட்களின் பெட்டிகள் மற்றும் போர்க் கருவிகள் உட்பட 1,000 துருப்புக்கள் வரையில் கிடைத்தது' என்று அமெரிக்க பத்திரிகை டைம்ஸ் தெரிவித்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு பாசிச ஆயுதக்குழுக்கள் பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டது. அஷோவ் ஒரு ஆயுதக்குழு என்பதை விட மிக அதிகமான ஒன்றாகும்.

“அதற்கு சொந்த அரசியல் கட்சி உள்ளது. இரண்டு பதிப்பகங்கள், குழந்தைகளுக்கான கோடைகால முகாம்கள் மற்றும் உக்ரேனிய நகரங்களின் தெருக்களில் காவல்துறையுடன் இணைந்து ரோந்து செல்லும் தேசிய ஆயுதக்குழு என்று அழைக்கப்படும் ஒரு விழிப்புணர்வுப் படையாகும்.' அதன் இராணுவப் பிரிவில் 'குறைந்தபட்சம் இரண்டு பயிற்சி தளங்கள் மற்றும் ட்ரோன்கள் மற்றும் கவச வாகனங்கள் முதல் பீரங்கிகள் வரையிலான ஆயுதங்களின் பரந்த ஆயுதக் களஞ்சியம்' உள்ளது.

பாசிச ஆயுதக் குழுகளுக்கான அரசு அனுசரணையானது உக்ரேனை உலகெங்கிலும் உள்ள நவ-நாஜிகளால் இராணுவ பயிற்சி மற்றும் அரசியல் வலையமைப்புக்கான மையமாக மாற்றியுள்ளது. பாதுகாப்பு நிபுணரும் முன்னாள் FBI முகவருமான அலி சௌஃபான் 'கடந்த ஆறு ஆண்டுகளில் 50 நாடுகளில் இருந்து 17,000க்கும் அதிகமான வெளிநாட்டு கிளர்ச்சியாளர்கள் உக்ரேனுக்கு வந்துள்ளனர்' என்று மதிப்பிட்டதாக டைம்ஸ் மேற்கோள் காட்டுகிறது. 40 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அஷோவை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்துமாறு அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் கேட்டுக்கொண்ட போதும் அது நிராகரிக்கப்பட்டது.

அஷோவின் அரசியல் பிரிவான National Corps party, சுமார் 10,000 உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள பாசிச மற்றும் நவ-நாஜி அமைப்புகளுடன் தீவிர உறவுகளைப் பேணுகிறது. ஜேர்மனியில் உள்ள Die Rechte, Third Path மற்றும் Identitarians, இத்தாலியில் உள்ள CasaPound மற்றும் பிரான்சில் உள்ள Groupe Union Défense போன்றவற்றுடன் உறவுகளை வைத்துள்ளது.

ஸ்வஸ்திகா கொடி மற்றும் ஹிட்லர் வணக்கத்துடன் செமன்யாகா

National Corps இன் தலைமை சித்தாந்தவாதியும் சர்வதேச செயலாளருமான 34 வயதான ஒலேனா செமென்யாகா ஆவார். ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்தின் ஒரு ஆய்வு அவரை, 'உக்ரேனிய தேசியவாதத்தின் முதல் பெண்மணி' என்று அழைக்கிறது. செமென்யாகா தத்துவஞானத்தைப் படித்ததுடன் புதிய வலதுசாரிகளின் மாதிரிகளில் கவனம் செலுத்தினார். Julius Evola, Alain de Benoist, Martin Heidegger, Ernst Jünger, Carl Schmitt, Armin Mohler மற்றும் பலர் இதில் அடங்குவர். முதலில் ரஷ்ய பாசிச அலெக்சாண்டர் டுகின் இன் ஆதரவாளராக இருந்த அவர், இப்போது Identitarians மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் ஸ்டீவ் பானன் போன்ற இன அடிப்படையலான அரசுகளின் ஐரோப்பிய கூட்டணியை ஆதரிக்கிறார்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், இவருக்கு வியன்னாவில் உள்ள மனிதநேய நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக ஆறு மாத வேலை கிடைத்தது. ஸ்வாஸ்திகா கொடி மற்றும் ஹிட்லர் வணக்கத்துடன் செமன்யாகாவின் புகைப்படம் வைரலானதை அடுத்து சமூக ஊடகங்களில் சீற்றத்தின் புயல் எழுந்தபோது பல்கலைக்கழகம் அவரது ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றது.

பாசிசமும் யுத்தமும்

உக்ரேனிய அரசில் நவ-நாஜிக்கள் மற்றும் பாசிசவாதிகள் வகித்த முக்கிய பங்கு இரகசியமானது அல்ல. அவர்களைக் கண்டறிய நுண்ணறிவு விளக்கங்கள் எதுவும் தேவையில்லை, விரைவான கூகுள் தேடல் ஒன்றே அதுபற்றிய அறிய போதுமானதாகும். உக்ரேனுக்காக ரஷ்யாவிற்கு எதிரான போரை பணயத்தில் வைப்பதில் குறியாக இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தாங்கள் எதற்காக வாதிடுகிறார்கள் என்பது தெரியும். ரஷ்யாவுக்கு எதிராகவும், ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் ஒரு அரணைக் கட்ட அவர்கள் பழுப்புநிற (பாசிச) சதுப்பு நிலத்தை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்கா பல ஆண்டுகளாக உக்ரேனிய ஆயுதப் படைகளுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் ஆயுதங்களையும் பயிற்சியாளர்களையும் வழங்கி வருகிறது. 2015 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இதற்கான சட்டத்தில் கையெழுத்திட்டபோது, இது பரவலாக எதிர்பார்க்கப்பட்டபோதும் அஸோவ் படைப் பிரிவுக்கான நிதி மற்றும் இராணுவ ஆதரவை அது வெளிப்படையாக விலக்கி வைக்கவில்லை.

நியூ யோர்க் டைம்ஸ் குடிமக்களுக்கு கெரில்லா போருக்குப் பயிற்சியளிக்கப்பட்டு ஆயுதம் ஏந்துதல் மற்றும் இராணுவ அறிவுரைகள் பற்றிய விரிவான விளக்கப்பட அறிக்கைகளை பலமுறை வெளியிட்டுள்ளது.

“உக்ரேனில் குடிமக்கள் பாதுகாப்பு என்பது அறிமுகமில்லாதது அல்ல. ரஷ்ய பிரிவினைவாதிகளுக்கு எதிரான போரின் முதல் ஆண்டான 2014 ஆம் ஆண்டில், உக்ரேனிய இராணுவம் சிதைந்தபோது தன்னார்வப் படைகள் கிழக்கில் நாட்டின் படையின் முதுகெலும்பாக அமைந்தன' என்று டிசம்பர் 26, 2021 இல் ஒரு அறிக்கை கூறுகிறது. 'இந்த முயற்சி இப்போது இராணுவத்தின் ஒரு பகுதியாக புதிதாக உருவாக்கப்பட்ட பிராந்திய பாதுகாப்புப் படைகளின் பிரிவுகளாக முறையாக அமைக்கப்பட்டுள்ளது.' பயிற்சியானது நாட்டின் இராணுவம் மற்றும் 'உக்ரேனிய படையணி போன்ற தனியார் துணை இராணுவக் குழுக்களால்' மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு வலதுசாரி உள்நாட்டுப் போர் இராணுவம் உருவாக்கப்படுகிறது என்பது வெளிப்படையானது. இது எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அல்லது அவர்களின் சொந்த நாட்டில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம். இது இருந்தபோதிலும் அல்லது துல்லியமாக அதன் காரணமாகத்தான் உக்ரேனுக்கு ஆயுத விநியோகத்திற்கான அழைப்பு ஜேர்மனியிலும் மற்றும் ஐரோப்பாவிலும் கூடுதலாக உரத்துக்கேட்கின்றது. குறிப்பாக இப்போது அன்னலேனா பெயபொக் வெளியுறவு அமைச்சராக உள்ள ஜேர்மன் பசுமைக் கட்சியினர் நீண்ட காலமாக இதற்காக வாதிடுகின்றனர்.

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகளும் பாசிச ஆயுதக்குழுக்களை கட்டியெழுப்புவதும் ஒரே நிகழ்வின் இரண்டு பக்கங்களாகும். முதலாளித்துவ அமைப்பு ஒரு நம்பிக்கையற்ற நெருக்கடி நிலையில் உள்ளது. சமூக சமத்துவமின்மை முன்னொருபோதுமில்லாதளவு உச்சத்தில் உள்ளது. உலகளவில் 5.6 மில்லியனுக்கும் அதிகமானோர் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தங்கள் வருமானத்தை இழந்துள்ளபோது சமூகத்தின் உயர்மட்டத்தினர் தங்களை மிகப்பெரிய அளவில் செல்வந்தராக்கிக் கொண்டுள்ளனர். இது உக்ரேனிலும் நிகழ்ந்து உள்ளது. ஃபோர்ப்ஸ் (Forbes) இன் கூற்றுப்படி, 100 பணக்கார உக்ரேனியர்களின் செல்வம் ஒரு வருடத்தில் 42 சதவீதம் அதிகரித்து 44.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

ஆளும் வர்க்கம் எல்லா இடங்களிலும் ஒரு சமூக வெடிப்பை எதிர்பார்ப்பதுடன் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் செய்ததைப் போல், பாசிசம் மற்றும் போரினால் பதிலளிக்கின்றது. அனைத்து வகையான தேசியவாதத்தையும் நிராகரித்து, முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்ப போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கம் மட்டுமே அத்தகைய பேரழிவை நிறுத்த முடியும்.

Loading