மக்ரோன் உக்ரேனுக்கு விஜயம் செய்யும்போது ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் அச்சுறுத்தல்களை ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் உறுதிப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயபொக் ஆகியோர் உக்ரேனுக்கு விஜயம் செய்தபோது, பிரதான ஐரோப்பிய ஒன்றிய (EU) சக்திகள் உக்ரேன் நெருக்கடியில் ரஷ்யா மீது வாஷிங்டன் வைக்கும் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தன.

மக்ரோன், பெயபொக்கின் அறிக்கைகள் மற்றும் இன்னும் பரந்த அளவில் உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிரான முழு அமெரிக்க தலைமையிலான போர் உந்துதலும் ஒரு அரசியல் பொய்யை அடிப்படையாகக் கொண்டவை. உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கி மற்றும் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா ஆகியோர் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிக்கத் தயாராகவில்லை என்று அறிவித்த பின்னரும் கூட, வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உக்ரேனை ரஷ்ய படையெடுப்பில் இருந்து பாதுகாக்க அவசர மற்றும் அவநம்பிக்கையான முயற்சியில் தலையிடுவதாக கூறுகின்றனர்.

இந்த அபத்தமான பாசாங்கு, உக்ரேனில் மக்ரோன் மற்றும் பெயபொக்கின் அனைத்து அறிக்கைகளிலும் எடுத்துக்கூறப்பட்டது.

உக்ரேனின் பிராந்திய பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் ஆயுதப் படைகளின் தன்னார்வ இராணுவப் பிரிவுகள், ஜனவரி 22, 202 அன்று உக்ரேனில் உள்ள கியேவ் நகர பூங்காவில் பயிற்சி பெற்றனர். (AP Photo/Efrem Lukatsky, File)

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சிமுறை தலைமைப் பொறுப்பை வகிக்கும் மக்ரோன், கியேவில் ஜெலென்ஸ்கியுடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். ஜெலென்ஸ்கி சுருக்கமாக மக்ரோனை வாழ்த்தி, 1.2 பில்லியன் யூரோ பொருளாதார உதவிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றி தெரிவித்த பின்னர், 2014 இல் மைதான் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தற்போதைய உக்ரேனிய ஆட்சியை பதவிக்குக் கொண்டு வந்த பாசிசவாதிகளின் தலைமையிலான சதியைப் பாராட்டி ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் கடுமையான நிலைப்பாட்டை ஆமோதித்து, மக்ரோன் நீண்டதொரு உரையைத் தொடங்கினார்.

அவர் மேலும், “2013-2014 இல் மைதான் புரட்சிக்கு பின்னர், உக்ரேன் சீர்திருத்தம் மற்றும் ஜனநாயகத்திற்கான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த இலக்கை நோக்கி அணிதிரண்ட உக்ரேனிய மக்களால் இந்த தேர்வு செய்யப்பட்டது. … இந்தப் பாதை எந்த பின்னோக்கிய திருப்பமும் இல்லாத ஒன்றாகும். மைதான் போராட்டக்காரர்களுக்கும், 2014 ஆம் ஆண்டு முதல் தங்கள் தாயகத்தை பாதுகாக்க போர்முனையில் உயிர்நீத்த ஆயிரக்கணக்கான இராணுவத்தினர்களுக்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். அவர்கள் உக்ரேனுக்காக போராடினார்கள். வெளிநாட்டு சக்திகளால் ஸ்திரமற்றதாக்கும் நலன்களுக்காக, சில சமயங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான எளிமைப்படுத்தல்களையும் தவிர்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

மக்ரோன் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் உந்துதலின் பொய்களுக்கு, மைதான் சதியின் அரசியலை பொய்யாக்கும் வகையில் தனது வாதத்தை கட்டமைத்தார். கிழக்கு உக்ரேனில் கியேவ் ஆட்சிக்காக இறந்த போராடியவர்கள் வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராக போராடிய உக்ரேனிய இராணுவத்தினர் அல்ல. ஆனால் ரஷ்ய மொழி பேசும் உக்ரேனிய குடிமக்களை தாக்கிய தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாத ஆயுதக்குழுக்களாகும். அசோவ் படைப்பிரிவு போன்ற இந்தப் பிரிவுகள், கியேவில் 2014 சதிக்கு வழிவகுத்த Right Sector போன்ற தீவிர வலதுசாரி தெரு-சண்டை குழுக்களில் இருந்து உருவானவை.

மக்ரோனின் அறிக்கைகள் பிரெஞ்சு அரச தலைவர் மற்றும் தீவிர வலதுசாரி இனவெறி குழுக்களின் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரால் குறிப்பிடத்தக்க பொது ஒப்புதலுக்கு ஒப்பானது. அசோவ் படைப்பிரிவின் பாசிச அரசியல் மற்றும் சர்வதேச அளவில் நவ-நாஜி அமைப்புகளுடனான உறவுகள் மிகவும் பரவலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவை 2019 இல் அமெரிக்க FBI ஆல் கூட ஒப்புக் கொள்ளப்பட்டன. அது சார்லட்டஸ்வில்லில் நடந்த இரத்தக்களரி 2018 'வலது ஐக்கியம்' பேரணியில் ஈடுபட்ட அமெரிக்க நவ-நாஜிகளின் Rise Above இயக்கம் மற்றும் அசோவ் படைப்பிரிவின் மற்றும் அதன் தலைவர்களில் ஒருவரான ஒலேனா செமென்யாகாவின் தொடர்புகளை விவரிக்கும் அறிக்கையை வெளியிட்டது.

ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்கு ஒரு நாள் முன்பு, மக்ரோன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்தார். புட்டின் உக்ரேனிய ஆட்சியை நேட்டோவிற்குள் அனுமதிப்பதற்கு எதிராக மக்ரோனை அப்பட்டமாக எச்சரித்தார். உக்ரேன் நேட்டோவில் இணைந்தால், கிரிமியன் தீபகற்பம் போன்ற கியேவின் அதிகாரத்தில் இருந்து பிரிந்த ரஷ்ய மொழி பேசும் பகுதிகள் மீது தீவிர வலதுசாரி உக்ரேனிய ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட ஒட்டுமொத்த கூட்டணியையும் ரஷ்யாவுடன் ஒரு போருக்குள் இழுத்துவிடப்படலாம் என்று புட்டின் குறிப்பிட்டார்.

மக்ரோன் இதை கருத்தில்கொள்ளாது, கியேவ் ஆட்சியின் பாசிச ஆயுதக்குழுக்கள் உக்ரேனின் விருப்பத்தை உள்ளடக்கியுள்ளதாக கூறி ஆதரித்தார். ரஷ்யாவுடன் 'பரந்த, ஆக்கிரோஷமான, புதிய உரையாடலுக்கு' அழைப்பு விடுத்த அவர், 'டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் போன்ற பிரிவினைவாத பிரதேசத்தை கியேவுக்குத் திரும்ப கொடுக்கவும்', 'உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும்' கோரினார்.

ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயபொக், கிழக்கு உக்ரேனில் உள்ள கியேவ் ஆட்சியின் போர்முனைகளில் குண்டு துளைக்காத ஆடை மற்றும் எஃகு தலைக்கவசத்தை அணிந்து சுற்றுப்பயணம் செய்தார். அங்கு, பசுமைக் கட்சியின் இந்த முன்னணி உறுப்பினர், முன்னணியில் இருக்கும் தீவிர வலதுசாரி குழுக்களுடன் தனது ஐக்கியத்தை அறிவித்தார். 'நான் இங்கே ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்ப விரும்புகிறேன்: ஐரோப்பியர்களாகிய நாம் அனைவரும் வேறு வழியைப் பார்க்கவில்லை. இந்த மோதலில் யாருடைய தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடவில்லை. நாங்கள் உக்ரேனின் பக்கம் நிற்கிறோம்” என்றார்.

உக்ரேனில் தற்போது ரஷ்ய ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் இல்லை என்று கூறிய குலேபாவுடன் அவருடன் இருந்தபோதிலும், ரஷ்ய படையெடுப்பின் உடனடி ஆபத்துக்கு எதிராக ஜேர்மனி உக்ரேனுடன் கூட்டணியில் இருப்பதுபோல் பெயபொக் பேசினார். 'ரஷ்ய தரப்பின் இந்த ஆக்கிரமிப்பை நாங்கள் இராணுவரீதியாக தீர்க்க முடியாது,' என்று பெயபொக் கூறினார். மேலும் 'ஒவ்வொரு மேலதிக ஆக்கிரமிப்பும் ரஷ்ய தரப்புக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்' என்றார்.

பேர்லினில் நேற்று ஜேர்மன் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ், மக்ரோன் மற்றும் போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரே டுடா ஆகியோரின் இறுதி சந்திப்பில் பெயபொக்கின் கருத்துக்கள் எதிரொலித்தன. 1989 மற்றும் பேர்லின் சுவரின் வீழ்ச்சிக்குப் பின்னர் இராணுவ நிலைமை மிகவும் மோசமானது என்று டுடா கூறியபோது, 'உக்ரேனிய எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் முன்னோடியில்லாத வகையில் குவிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து,' ஷொல்ஸ் ரஷ்ய படையெடுப்புத் திட்டங்கள் 'மிகவும் கவலைக்குரியவை' என்று கூறினார். அவர் மேலும் 'ஐரோப்பாவில் ஒரு போரைத் தடுப்பதே எங்கள் பொதுவான குறிக்கோள்' என்று கூறினார்.

இது பொய்களின் ஒரு தொகுப்பாகும். ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் போரைத் தடுக்க முயற்சிக்கவில்லை, மாறாக வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்ட போர் பிரச்சாரத்தை எதிரொலிக்கின்றன. மக்ரோன், பெயபொக், டுடா மற்றும் ஷொல்ஸ் ஆகியோரின் மோசடி பாசாங்குகளால் முன்வைக்கப்படும் கேள்வி என்னவென்றால்: ஐரோப்பிய அரசாங்கங்கள் ஏன் பொய் கூறுகின்றன? என்பதாகும்.

ரஷ்யாவிற்கு எதிரான போர் வெறியை தூண்டுவது, உள்நாட்டு வர்க்க பதட்டங்களுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. நேட்டோ 2 மில்லியன் கோவிட்-19 இறப்புகளை சந்தித்துள்ளது மற்றும் ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கான புதிய நோய்த்தொற்றுகளை சந்திக்கிறது. இருப்பினும் நேட்டோ அங்கத்துவ அரசாங்கங்கள் அனைத்தும் பொது சுகாதார கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அதற்கு பதிலாக வைரஸ் பரவ அனுமதிக்கின்றன. இந்தக் கொள்கைக்கு எதிராக பெருகிவரும் சமூகக் கோபம் மற்றும் அதிக வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், நேட்டோ சக்திகள் வர்க்க மோதலை போர்க் காய்ச்சலாக திசைதிருப்ப இயங்குகின்றன.

ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரத்தை வகிக்கும் ஒரு வெறும் சாக்குப்போக்காக இருக்கும் ரஷ்ய-உக்ரேனிய எல்லைப் பகுதிகளில் இராணுவ பதட்டங்களுடன் ஒரு பரந்த, உலகளாவிய புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் நேட்டோ கூட்டணி பின்பற்றுகிறது. உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் பிற முன்னாள் சோவியத் குடியரசுகள் நேட்டோவில் இணைக்கப்பட வேண்டும் என்று கோருவதன் மூலம், நேட்டோ சக்திகள் ரஷ்யாவை அதன் எல்லைகளில் துருப்புக்கள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் மூலம் சுற்றிவளைக்கவும், தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும் அச்சுறுத்தி வருகின்றன. அண்டை நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்புக்கு திட்டம் தீட்டுவது ரஷ்யா என்று கூறி, யதார்த்தத்தை தலைகீழாக மாற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் நேட்டோ சக்திகள் இதை மூடிமறைக்கின்றன.

ரஷ்யா மீது பெரும் இராணுவ அழுத்தத்தை கொடுப்பதன் மூலம், நேட்டோ தனது அரசியலை வலதுசாரிப்பக்கம் திருப்பவும், நேட்டோவிற்கு எதிராக ரஷ்ய ஆதரவை நம்பியிருக்கும் யூரேசியா முழுவதும் உள்ள நாடுகளை தனிமைப்படுத்தவும் முயல்கிறது. சிரியாவில் உள்ள அமெரிக்க ஆதரவு 'கிளர்ச்சி' ஆயுதக்குழுக்களுக்கு எதிராக ஒரு தசாப்த கால போரில் ரஷ்யாவுடன் இணைந்துள்ள சிரியா மற்றும் ஈரான் மற்றும் இன்னும் பூச்சிய-கோவிட் கொள்கையை பின்பற்றும் ஒரு பெரிய நாடான சீனா ஆகியவை இதில் அடங்கும்.

இது சம்பந்தமாக, நியூ யோர்க் டைம்ஸ் சமீபத்தில் 'புதிய ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்புக்கான' மக்ரோனின் அழைப்புக்கு சாதகமாக கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு பொருளாதார அமைச்சர் புருனோ லு மேர் கூறியதை மேற்கோள் காட்டி, ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால் 'சீனாவுடன் முழுமையாக இணைந்திருக்கும் ரஷ்யாவா அல்லது சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் எங்காவது இருக்கும் ரஷ்யா வேண்டுமா?' என்பதாகும். மக்ரோனின் 'இறுதி நோக்கம்' 'ரஷ்யாவை ஒரு புதிய ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பில் ஒருங்கிணைப்பது. அது சீனாவை நோக்கிய அதன் திருப்பத்தை ஈடுகட்டுகிறது' என டைம்ஸ் எழுதியது.

சீனா, ஈரான் அல்லது சிரியாவுடனான அதன் உறவுகளை முறித்துக் கொள்ள ரஷ்யா மீது தீவிர இராணுவ அழுத்தத்தை கொடுக்கும் நேட்டோ கொள்கை, பிற்போக்குத்தனமானதும் பொறுப்பற்றதுமாகும். ரஷ்யாவிற்குப் பிந்தைய சோவியத் முதலாளித்துவ ஆட்சியின் மிகவும் ஆக்கிரோஷமான பிரிவுகள், முழு சுற்றிவளைப்புக்கு அஞ்சி, கிழக்கு ஐரோப்பாவில் வளர்ந்து வரும் நேட்டோ இராணுவக் கட்டமைப்பை முன்கூட்டியே நசுக்க தங்கள் இராணுவத்தைப் பயன்படுத்த முடிவு செய்து, அணு ஆயுத நாடுகளுக்கு இடையே ஒரு முழுமையான போரைத் தொடங்கலாம்.

நீண்ட காலமாக நேட்டோவிற்குள் மிகவும் மென்மையான மற்றும் குறைந்த இராணுவவாத சக்திகளாக முன்வைக்கப்பட்ட ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் பொறுப்பற்ற கொள்கைகள் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, சர்வதேச அணிதிரட்டலின் மூலம் மட்டுமே எந்தவொரு முதலாளித்துவ சக்தியினதும் போருக்கான உந்துதலையும் நிறுத்த முடியும்.

Loading