அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து ஜூலியன் அசான்ஜ் செய்த மேல்முறையீட்டை இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ், உளவுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்காவிற்கு அவரை நாடு கடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டை விசாரிக்க இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அசான்ஜின் சட்டக்குழுவின் மேல்முறையீடுகளைத் தடுத்து இறுதி முடிவை வழங்க, இந்த வழக்கு இப்போது உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலுக்கு அனுப்பப்படும்.

பட்டேலிடம் மனுவை சமர்பிக்க அசான்ஜிற்கு நான்கு வாரங்கள் உள்ளன. இது பிசாசிடம் கருணை கேட்பதற்கு சமமாகும். மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இதை தடுக்க, ஒவ்வொரு விடயத்திலும் அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக இருக்கும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தீர்ப்பையும் அவர் குறுக்கு மேல்முறையீடு செய்ய முற்படலாம். இத்தீர்ப்பின் மூலம் அது இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ், மே 1 2019 அன்று நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார் (AP Photo/Matt Dunham, File)

கடந்த ஏப்ரலில் அவரது வழக்கறிஞர்கள் அத்தகைய மேல்முறையீட்டிற்கான அடிப்படையை கோடிட்டுக் காட்டினார்கள். இது தைரியம்மிக்க ஊடகவியலாளர் மீதான போலி-சட்ட ஏமாற்று மீதான குற்றச்சாட்டாக உள்ளது. அமெரிக்க-இங்கிலாந்து ஒப்படைப்பு ஒப்பந்தத்தால் தடைசெய்யப்பட்ட அரசியல் குற்றத்திற்காக அசாஞ்சினை ஒப்படைப்பது சட்டவிரோதமாக நிறைவேற்ற முனையப்படுகிறது என்று வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். அதாவது உரிய வழக்குமுறையின் துஷ்பிரயோகம்; மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டின் பிரிவு 3 (மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான சிகிச்சை), பிரிவு 5 (நியாயமற்ற தடுப்பு), பிரிவு 6 (நியாயமான விசாரணை மறுப்பு), பிரிவு 7 (காலங்கடந்த நீதி) மற்றும் மனித உரிமைக்கான ஐரோப்பிய உடன்பாட்டின் பிரிவு 10 (கருத்துச் சுதந்திரம்) இனை மீறுதல்; உண்மைகளை தவறான விளக்கமளிப்பதை அடிப்படையாக கொள்ளல்; மற்றும் மறைமுக அரசியல் நோக்கங்களுக்காக தொடரப்படுகிறது.

அசான்ஜின் சட்டக்குழுவும் அவர்கள் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

அசான்ஜின் உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளது. எந்த மேல்முறையீடும் வழங்கப்பட வாய்ப்பில்லாததுடன், மேலும் இது போன்ற முறையான சட்ட உரிமைகள் மற்றும் வழக்குகள் கூட கருத்திலெடுக்கப்படாது என்பது உறுதியாகின்றது. அசான்ஜின் வழக்கு எப்பொழுதும் CIA ஆல் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சட்டவிராதமான படுகொலை-பின்தொடரும் நடவடிக்கையின் 'சட்டத்' தொடர்ச்சியாகவே இருந்து வருகிறது. இது அசான்ஜை ஏதோ ஒரு வழியில் தனது நன்மைக்காக மௌனமாக்க முயல்கிறது.

காலவரிசை இப்போது வியத்தகு முறையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. அசாஞ்சின் வழக்கை விசாரணைக்கு எடுப்பதைக்கூட அது மறுத்திருப்பது மிகவும் அசாதாரணமானது. கீழ் உயர் நீதிமன்றம் ஜனவரி 24 அன்று 'பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டப் புள்ளி' அசான்ஜால் எழுப்பப்பட்டது என்று உறுதிப்படுத்தியது. இது திடீரென மேல்முறையீட்டை பரிசீலிக்க உச்ச நீதிமன்றத்தை தூண்டியது.

கேள்விக்குரிய சட்டப் புள்ளி என்னெவென்றால்: 'எந்தச் சூழ்நிலையில் கீழ் முதல் நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்படாத உத்தரவாதத்தை ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் கையளிப்பதைக் கோரும் அரசாங்கத்திடம் இருந்து பெற முடியும்.' இந்த மட்டுப்படுத்தப்பட்ட காரணங்களுக்காக கூட, இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தாலும் மற்றும் அந்தத் துறையில் உள்ள சட்ட நிபுணர்களால் விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டியதாகக் கருதப்பட்டது.

கடந்த மாதம், மிகவும் மதிக்கப்படும் லண்டன் சட்ட நிறுவனமான Bindmans இன் வழக்கின் அறிக்கையை விக்கிலீக்ஸ் மேற்கோள் காட்டியது: 'நாடுகடத்தலுக்குப் பின்னர் மனித உரிமை மீறல்கள் குறித்த நீதிமன்றத்தின் கவலைகளைத் தணிக்க வடிவமைக்கப்பட்ட தாமதமான உத்தரவாதங்கள் பற்றிய விடயத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை நாடுகடத்தலை நடைமுறைப்படுத்துபவர்கள் பெரிதும் வரவேற்கிறார்கள். ஏனெனில் இது நாடுகடத்தியதன் பின்னர் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினையாகலாம். குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக மோசமான வரலாற்றைக் கொண்ட அரசாங்களால் இந்த உறுதி வழங்கப்படும் போது.'

எவ்வாறாயினும், நீதிமன்ற விதிமுறைகள் மூலம் செல்லவும், அசாஞ்சின் உண்மையான விளக்கத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும் விருப்பம் கொடுக்கப்பட்ட பின்னர், நீதிபதிகள் அதற்குப் பதிலாக ஒரு நிராகரிப்பை வழங்கினர்: 'ஒரு விவாதத்திற்குரிய சட்டப் புள்ளியை விண்ணப்பம் எழுப்பாததால், மேல்முறையீடு செய்வதற்கான அனுமதி மறுக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது'.

இதன் அர்த்தம் தெளிவாக உள்ளது: பாசாங்குகளுக்கான நேரம் முடிந்துவிட்டது, அசான்ஜ் விரைவில் கையாளப்பட வேண்டும்.

இது பிரித்தானிய அரசின் உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். இது உச்ச நீதிமன்றத் தலைவர் லோர்ட் ரீட் மற்றும் துணைத் தலைவர் லோர்ட் ஹாட்ஜ் பிரபு பிரிக்ஸ் ஆகியோருடன் சேர்ந்து நிறைவேற்றப்பட்டது. உக்ரேனில் மறைமுகமான மோதலின் மூலம் நடத்தப்படும் நேட்டோ-ரஷ்யா போர், அணு ஆயுத சக்திகளுக்கு இடையே நேரடியான இராணுவ மோதலுக்கு இன்னும் நெருக்கமாக நகர்கிறது. இது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சக்திவாய்ந்த தூண்டுதலாக செயல்பட்டதுடன் அசான்ஜ் ஏன் அமைதியாக்கப்பட வேண்டும் என்பதை ஆளும் வர்க்கத்திற்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ரஷ்யாவுடனான நேட்டோவின் போருக்கான உந்துதல், ஏகாதிபத்திய சக்திகளின் கொள்ளையடிக்கும் அபிலாஷைகளை மறைத்து, உக்ரேனிய மக்களுக்கான மனிதாபிமான அக்கறையின் விளைவு என அவர்களின் தலையீட்டை காட்டுவது ஒரு பரந்த பிரச்சார நடவடிக்கையை நம்பியுள்ளது. அரசாங்கத்தின் கருத்தினை பெருநிறுவன ஊடகங்களால் கடமையுடன் மீண்டும் மீண்டும் கூறப்படுவதுடன், அவற்றின் தலையங்கப் பக்கங்கள் ரஷ்ய எதிர்ப்பு அலைக்கு திறந்துவிடப்பட்டு மற்றும் இராணுவ மோதலுக்கு அழைப்பு விடுகின்றன.

அசாஞ் ஒரு தசாப்த காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அழிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தில் உள்ளது. ஏனெனில் அவர் இந்த கூடியுழைக்கும் 'ஊடகத்துறையின்' ஒரு அறிவிக்கப்பட்ட எதிரியாக இருந்து மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளின் கட்டுப்பாடற்ற குற்றவியல், காட்டுமிராண்டித்தனம் மற்றும் போலித்தனத்தை அச்சமின்றி அம்பலப்படுத்தினார். விக்கிலீக்ஸ் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாரிய பொதுமக்கள் உயிரிழப்புகள், இரு நாடுகளிலும் சித்திரவதை மற்றும் கொலைப் படைகளின் பயன்பாடு, குவாண்டனாமோ விரிகுடாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனம் மற்றும் உலகளவில் ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் ஊழலுக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கியது ஆகியவற்றை அம்பலப்படுத்தியது.

ரஷ்யப் படையெடுப்பிற்குப் பின்னர், விக்கிலீக்ஸின் ட்விட்டர் கணக்கு, அசான்ஜ் உடனான ஒரு நேர்காணலின் ஒளிப்பதிவை மீண்டும் மீண்டும் வெளியிட்டது. அதில் அவர், “கடந்த ஐம்பது ஆண்டுகளில் தொடங்கிய கிட்டத்தட்ட ஒவ்வொரு போரும் ஊடகங்களின் பொய்களின் விளைவாகும்... மக்கள் விரும்பியும் திறந்த கண்களுடனும் ஒரு போருக்குச் செல்லவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

விக்கிலீக்ஸால் கையகப்படுத்தப்பட்ட மற்றும் 2010 இல் வெளியிடப்பட்ட இரகசிய அமெரிக்க இராஜதந்திர தகவல்தொடர்புகளுக்கான இணைப்புகளையும் இந்த கணக்கு வெளியிட்டுள்ளது. இதில் தற்போதைய சிஐஏ இயக்குனரும் அப்போதைய மாஸ்கோவுக்கான தூதுவரான வில்லியம் பேர்ன்ஸ் எழுதிய 2008 குறுந்தகவல்கள், உக்ரேனின் நேட்டோ உறுப்புரிமை குறித்து ரஷ்யாவின் ஆழ்ந்த மூலோபாய கவலைகள் குறித்தும், அவ்வாறு நிகழுமானால் ஒரு உள்நாட்டுப் போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது என எச்சரித்தது.

மற்றொரு ட்வீட், 'ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு தசாப்த கால எரிவாயு போர்கள் பற்றி அமெரிக்க தூதரக தகவல்களில் (2008) குறிப்பிடப்பட்டிருந்ததை' இணைத்திருந்தது.

'முதல் துப்பாக்கிச் சூட்டை யார் சுடுகின்றார்' என்பதை விட, உக்ரேனில் போரின் தோற்றம் பற்றிய ஆழமான பார்வையை ஊக்குவிக்கும் இந்த வகையான விமர்சன சிந்தனை இப்போது துரோகத்தனமான, புட்டின் சார்பு ஐந்தாவது படையின் வேலை என்று முத்திரை குத்தப்படுகிறது. உண்மையில், அமெரிக்க ஜனநாயகக் கட்சி மற்றும் இங்கிலாந்தில் உள்ள கார்டியன் செய்தித்தாள் தலைமையிலான “ரஷ்ய கைக்கூலி” சூனிய வேட்டையின் முதல் இலக்குகளில் அசாஞ்சும் ஒருவர். இவை மாஸ்கோவை நோக்கி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு மூர்க்கமாக நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்று கோரியதுடன் தொடர்புபட்டவையாகும்.

ஒரு தனிநபர் என்ற அசாஞ்சிற்கு அப்பால், அவரது துன்புறுத்தல் நேட்டோவிற்கும் போருக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் மீது ஒரு பரந்த ஒடுக்குமுறையை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த அக்டோபரில் அமெரிக்க அரசாங்கத்தின் உயர் நீதிமன்ற மேல்முறையீட்டிற்கு முன்னதாகவே, உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது: “ஆரம்பத்தில் இருந்தே, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தமது கடந்தகால குற்றங்களை மறைக்கவும் எதிர்காலத்தில் புதியவற்றை தயாரிக்கவும் ஏகாதிபத்திய போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இராஜதந்திர சூழ்ச்சிகள் மற்றும் பாரிய அரச கண்காணிப்பு பற்றிய முக்கியமான அறிக்கைகளைத் தடுப்பதற்கு ஒரு எச்சரிக்கையாகவும் முன்னுதாரணமாகவும் அசான்ஜை அழிக்க முயன்றனர்”.

அந்த புதிய குற்றம், ரஷ்யாவிற்கு எதிரான குற்றவியல் மற்றும் ஆபத்தான ஆத்திரமூட்டலின் வடிவத்தை எடுத்துள்ளது. இது உக்ரேன் மீதான அதன் ஆக்கிரமிப்பைத் தூண்டும் நோக்கத்துடன் இருந்தது மற்றும் அணு ஆயுதங்களுடன் போராடும் ஒரு மூன்றாம் உலகப் போரை நோக்கி கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் உள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கம் அவர்களின் குற்றம்மிக்க அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான அவசரத் தேவையை எதிர்கொண்டுள்ளது.

அசான்ஜினை அவர்கள் கையாளும் முறையானது, ரஷ்யாவில் போர்-எதிர்ப்பு போராட்டத்தை புட்டின் அரசாங்கம் நசுக்குவது பற்றிய ஏகாதிபத்திய சக்திகளின் கண்டனங்களின் முழுப்பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்த் திட்டங்களுக்கு எதிரான எந்தவொரு தீவிரமான எதிர்ப்பும் அதே மிருகத்தனமான வழிமுறைகளால் எதிர்கொள்ளப்படும் என்பதை இது நிரூபிக்கிறது.

பிரிட்டிஷ், அமெரிக்க, ரஷ்ய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கம் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போர்வெறியர்களைத் தூக்கியெறிவதற்கும் வர்க்கப் போராட்டத்தின் பொதுவான சோசலிச முன்னோக்கில் அணிதிரட்டப்பட வேண்டும். அசான்ஜை விடுவிப்பதற்கான பிரச்சாரம் அந்த போரிட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

Loading