இந்தியா: வேலைநிறுத்தம் செய்யும் மகாராஷ்டிரா போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாநில அரசாங்கத்தின் சமீபத்திய இறுதி எச்சரிக்கையை மீறுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

MSRTC தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோருகிறார்கள் (புகைப்படம்: MSRTC வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்)

70,000க்கும் மேற்பட்ட மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (MSRTC) தொழிலாளர்கள் மீண்டும் அரசாங்க உத்தரவை மீறி, இப்போது 20வது வாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைநிறுத்தத்தின் ஆரம்பத்திலேயே, ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணிமனைப் பொறியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களால் கைவிடப்பட்டனர். ஆயினும்கூட, காட்டுமிராண்டித்தனமான நிர்வாகத்தின் பழிவாங்கல்கள், வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்த நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான மகாராஷ்டிரா அரசாங்கத்தின் பெருகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தொழிலாளர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர்.

பாசிசவாத சிவசேனா, காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணி அரசாங்கத்தின் சமீபத்திய வேலைக்கு திரும்பும்படி கோரும் இறுதி எச்சரிக்கை பரந்தளவிலான பணிநீக்க அச்சுறுத்தலை உள்ளடக்கியதாக இருந்தது. மாநில போக்குவரத்து அமைச்சர் அனில் பராப் கூறுகையில், 'மார்ச் 10 ஆம் தேதிக்குள் ஒரு தொழிலாளி மீண்டும் பணியைத் தொடங்கவில்லை என்றால், அவருக்கு / அவளுக்கு வேலை தேவையில்லை என்று நாங்கள் கருதுவோம், பின்னர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.' இறுதி எச்சரிக்கையை நியாயப்படுத்திய அவர், 'வேலை நிறுத்தத்தால் போக்குவரத்து அமைப்பு பெரும் நிதி இழப்பை எதிர்கொள்கிறது' என்று கூறினார். மார்ச் 8 அன்று அவர் மாநில சட்டமன்றத்தில் வேலைநிறுத்தத்தால் MSRTC க்கு 1.74 பில்லியன் ரூபாய்கள் ($22.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவாகியுள்ளதாக கூறினார்..

போராடுவதற்கான தொழிலாளர்களின் உறுதியை பிரதிபலிக்கும் வகையில், புனே பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு வேலைநிறுத்தத் தலைவரான ஷஷிகாந்த் ஜாதவ், ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் கூறினார்: “அவர்கள் எங்கள் மீது எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்க அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் (எங்கள்) இணைப்பு கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம். ” இது ஒரு முதலாளித்துவ இலாப நோக்குடன் நடத்தப்படும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமான MSRTC ஐ மாநில அரசாங்கத்துடன் இணைக்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை குறிப்பதாக இருந்தது. ஜாதவ் தொடர்ந்தார், “நாங்களும் கடந்த நான்கு மாதங்களாக மிகவும் கஷ்டப்படுகிறோம். பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், பெரும்பாலான வீடுகளில் சாப்பிட உணவு இல்லை. ஆனாலும், நாங்கள் எங்கள் எதிர்காலத்திற்காக வேலைநிறுத்தத்தைத் தொடர்கிறோம்.”

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான கோவிட்-19 பெரும் தொற்றுநோய்களின் போது, MRSTC தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் பணிபுரிய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான அதே வேளையில், அவர்களது சொற்ப சம்பளத்தை கூட ஒழுங்கற்ற முறையில் தான் பெற்றுள்ளனர். கடந்த கோடையில் கோவிட் நோயால் நூற்றுக்கணக்கானோர் இறந்திருந்தாலும், அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் மறுத்துவிட்டது.

மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கு இணையான பணி பாதுகாப்பு மற்றும் சலுகைகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர். MSRTCயை மாநில அரசாங்கத்துடன் இணைப்பது என்பது மாநிலம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற ஏழைகளுக்கு இன்றியமையாத சேவையை வழங்கும் நகரங்களுக்கு இடையேயான பேருந்து நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக நிர்வாகம் மற்றும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களின் இணைப்புக் கோரிக்கையை எழுப்ப தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டன. தொழிலாளர்கள் போக்குவரத்து நிறுவனம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவதற்கு முன்னதாக, தொழிற்சங்கங்கள் வரவிருக்கும் வேலை நிறுத்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அறிவித்த நீதிமன்ற உத்தரவுக்கு பணிந்து, தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றன.

அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் அதிருப்தி அடையும்படியாக வேலைநிறுத்தக்காரர்கள் மீண்டும் மீண்டும் அரசாங்கத்தின் இறுதி எச்சரிக்கைகள் மற்றும் நிர்வாகத்தின் பழிவாங்கல்களை மீறியுள்ளனர். போக்குவரத்து அமைச்சர் பராப் கடந்த வாரம் மாநில சட்டமன்றத்திற்கு அளித்த அறிக்கையின்படி 2,216 வேலைநிறுத்தக்காரர்களை MSRTC பணிநீக்கம் செய்துள்ளது மேலும் 12,207 பேரை இடைநீக்கம் செய்துள்ளது.

அரசாங்க அச்சுறுத்தல்கள், நிர்வாகத்தின் பழிவாங்கல்கள் மற்றும் நிதி நெருக்கடியின் விளைவாக நவம்பர் 3 அன்று வேலையை விட்டு வெளியேறிய 92,000 தொழிலாளர்களில் சுமார் 20,000 பேர் வேலைக்குத் திரும்பியுள்ளனர். ஆனால் இது 70,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் விட்டுள்ளது. மற்றும் MSRTC யின் செயல்பாடுகளை முடக்கி உள்ளது.

MSRTC மாநில அரசாங்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை அரசாங்கம் துணிச்சலாக நிராகரித்துள்ளது, இது 'சமாளிக்க முடியாதது' என்று கூறியது. தொழிலாளர்களின் போர்க்குணமிக்க வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சூழ்ச்சியில், கடந்த நவம்பரில் ஒரு நீதிமன்றம் உடனடியாக வேலைக்குத் திரும்புவதற்கான அழைப்பையும், இணைப்புப் பிரச்சினையையும் ஆய்வு செய்ய ஒரு குழுவை மாநில அரசு நியமிக்க வேண்டும் என்ற உத்தரவையும் இணைத்தது.

எதிர்பார்த்தபடி அந்த குழு இணைப்பு கோரிக்கையை நிராகரித்துவிட்டது, இருப்பினும் இது குறித்து நீதிமன்றத்தில் இன்னும் முறையாக தெரிவிக்கப்படவில்லை. இந்த உண்மையை மேற்கோள் காட்டி, இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராக மேலும் தண்டனை நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று மும்பாய் உயர்நீதிமன்றம் மார்ச் 8 அன்று அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியது.

தொழிலாளர்களின் உறுதியும் போர்க்குணமும் அரசியல் மற்றும் பெருநிறுவன ஸ்தாபகத்தையும் அவர்களது தொழிற்சங்க அடியாட்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 'சட்டவிரோதமாக' வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை மொத்தமாக கைது செய்ய அனுமதிக்கும் கொடூரமான மகாராஷ்டிர அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (MESMA) செயல்படுத்துவதாக அரசாங்கம் பலமுறை அச்சுறுத்தியுள்ளது. ஆனால் அது இன்னும் அவ்வாறு செய்யவில்லை என்றால், இது மற்ற தொழிலாளர்களை இழுக்கக் கூடிய ஒரு பெரிய மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று அஞ்சுவதால் தான், மேலும் MSRTC வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் பிற தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள் மத்தியில் தொழிற்சங்கங்கள் மதிப்பிழந்த நிலைமைகளின் கீழ் உள்ளன. இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் உள்ளது போல், முதலாளித்துவ உயரடுக்கின் கிரிமினல் 'உயிர்களுக்கு முன் இலாபம்' என்ற தொற்றுநோய்க் கொள்கை, கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

இருந்தபோதிலும், MSRTC வேலைநிறுத்தம் பெரும் ஆபத்தில் உள்ளது, ஏனெனில் அது தொழிற்சங்கங்கள் மற்றும் தம்மை இடது கட்சிகளாக காட்டிக்கொள்பவைகளினால் திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

MSRTC தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் எதிர்கொள்பவை தான் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான தெளிவான மூலோபாயம் இல்லாத நிலையில், MSRTC நிர்வாகமும் அரசாங்கமும் வேலைநிறுத்தம் செய்பவர்களை பட்டினி போட்டு தங்கள் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து பணிய வைக்க முடியும்.

மேலும் மாற்று வழி குறித்து அவநம்பிக்கையுடன் இருக்கும்போது, நீதிமன்றங்கள் அல்லது வலதுசாரி அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியினர் தங்கள் உதவிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் MSRTC தொழிலாளர்கள் தூண்டப்படலாம். உண்மையில், முதலாளித்துவ உயரடுக்கு, அதன் அரசு நிறுவனங்கள் மற்றும் கட்சிகள் அனைத்தும் வேலைநிறுத்தத்திற்கு கடுமையான விரோதப் போக்கைக் கொண்டுள்ளன, இது முழு ஆளும் வர்க்கத்தால் பின்பற்றப்படும் தனியார்மயமாக்கல் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு சவாலாக உள்ளது

துரதிர்ஷ்டவசமாக, மார்ச் 12 அன்று, இணைப்புக் கோரிக்கை குறித்து இன்னும் சமர்ப்பிக்கப்படாத 'நிபுணர்கள் அறிக்கை' அடிப்படையில் பம்பாய் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்க வேண்டிய ஒரு நாளுக்குப் பிறகு, முசாபர் கான் என்ற 41 வயதான பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்றம் முடிவெடுப்பதில் மீண்டும் மீண்டும் தாமதம் ஏற்பட்டதால் தான் மன உளைச்சலுக்கு கான் ஆளானதாக கூறப்படுகிறது.

இரண்டு முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகள்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது CPM, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)-மற்றும் அவற்றின் அந்தந்த தொழிலாளர் துணை அமைப்புகளாக இருக்கும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஆகியவை ஒரு குறிப்பிட்ட மோசமான பாத்திரத்தை வகித்துள்ளன. இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான தீவிர வலதுசாரி மத்திய அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த இந்திய முதலாளித்துவத்தின் தனியார்மயமாக்கல் உந்துதலை எதிர்ப்பதாக ஸ்ராலினிஸ்டுகள் கூறுகின்றனர். ஆயினும்கூட, அவர்கள் MSRTC தொழிலாளர்களின் போராட்டம் பற்றிய தகவல்களை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துள்ளனர், மகாராஷ்டிரா மற்றும் இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களை அவர்களின் பாதுகாப்பிற்காக அணிதிரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

MSRTC தொழிலாளர்கள் உண்மையில் முழு தொழிலாள வர்க்கத்திற்காகவும் போராடுகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டவும், தனியார்மயமாக்கல், அபாயகரமான ஒப்பந்தத் தொழிலாளர் வேலைகள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கோவிட்டுக்கு எதிரான பாதுகாப்பு இல்லாமைக்கு எதிராகவும் தொழிலாள வர்க்க எதிர்த் தாக்குதலின் முன்னோடியாக மாற்றவும், MSRTC தொழிலாளர்கள் ஒரு சாமானிய தொழிலாளர்கள் குழுவை உருவாக்க வேண்டும். அது அனைத்து துரோகத்தனமான முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இருந்து சுயாதீனமானதாக இருக்க வேண்டும். MSRTC இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்போர் இந்த முக்கிய படியை எடுப்பதற்கு உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சாமானிய தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டமைப்பு அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளிக்கிறது.

Loading