இலங்கையில் 1953 வெகுஜன எழுச்சியின் (ஹர்த்தால்) படிப்பினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் 67 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 12, 1953 அன்று 'ஹர்த்தால்' (வேலை நிறுத்தம் மற்றும் சிறு வணிகங்களின் பொது நிறுத்தத்துடன் இணைந்த வேலைநிறுத்தம்) என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு வெகுஜன கிளர்ச்சியெழுச்சி வெடித்தது. இது தீவின் ஆளும் வர்க்கத்தை அதன் மூலம் வரை உலுக்கியதோடு ஒரு அரசியல் திருப்புமுனையைக் குறித்து நின்றது.

ஒரு உண்மையான புரட்சிகர தலைமை, அதாவது மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச கட்சி இல்லாததால், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கத்தால் அந்த எழுச்சி தோற்கடிக்கப்பட்டது. இன்று புரட்சிகரப் போராட்டங்களுக்கு தயாராகி வரும் தொழிலாள வர்க்கத்திற்கு இந்த கசப்பான அனுபவம், சக்திவாய்ந்த பாடங்களைக் கொண்டுள்ளது.

சர்வதேச அளவில், 1953-ம் ஆண்டு கொந்தளிப்பான வருடமாகும். சோவியத் அதிகாரத்துவத்தால் நிறுவப்பட்ட ஸ்ராலினிச அரசாங்கங்களுக்கு எதிராக ஜூன் மாதம் கிழக்கு ஜேர்மனி மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில் தொழிலாளர்களின் எழுச்சிகள் வெடித்தன. பின்னர் ஆகஸ்டில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நான்கு மில்லியன் பிரெஞ்சு தொழிலாளர்களின் இரண்டு வார கால பொது வேலைநிறுத்தம் வெடித்தது.

1952 இல் இலங்கையின் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சரவை

இலங்கை (அப்போது சிலோன்) கடும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டது. 1950ல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று வருட இரத்தக்களரி வாய்ந்த கொரியப் போரினால், ஸ்திரத்தன்மை சீர்குலைந்ததின் காரணமாக இரப்பர் மற்றும் தேயிலை ஏற்றுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

உறுதியான பெரும்பான்மையுடன் ஓராண்டுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த UNP அரசாங்கம், ஜூலை 1953 இல் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அது நாட்டின் முக்கிய உணவான அரிசிக்கான மானியத்தை நீக்கி, விலையை மூன்று மடங்கு உயர்த்தியது. இது சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்தியது, பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவை முடிவுக்கு கொண்டுவந்தது மற்றும் சுகாதாரம் உட்பட பிற சமூக திட்டங்களுக்கான செலவினங்களைக் குறைத்தது, அதே நேரத்தில் இரயில்வே போக்குவரத்து மற்றும் அஞ்சல், தொலைபேசி மற்றும் தந்தி சேவைகளுக்கான கட்டணங்களையும் உயர்த்தியது.

நிதி அமைச்சர் ஜே. ஆர். ஜெயவர்த்தன, 'நாட்டின் அபிவிருத்தித் திட்டத்திற்கு நிதியளிக்கும் பணத்தைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால், அரசாங்கம் உணவு மானியத்தை நீக்க வேண்டியிருந்தது' என்றார். அவர் சிடுமூஞ்சித்தனமாக ஏழைகளிடம் கூறினார்: 'உங்கள் உணவை நீங்களே பயிரிட்டுக் கொள்ளுங்கள்.' அதே நேரத்தில், பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் பிற கையூட்டுகளை அவர் அறிவித்தார்.

வாழ்க்கை நிலைமைகளில், பல ஆண்டுகளாக கொதித்துக்கொண்டிருந்த தாங்கமுடியாத தாக்கங்கள் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் அதிருப்தியைத் தூண்டியது. 1948 இல், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு நீண்டகாலமாக அடிமையாக இருந்த இலங்கை ஆளும் உயரடுக்கு, மேம்பட்ட சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்காக உழைக்கும் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களை நசுக்குவதற்காகவே சுதந்திரம் என்பதனை ஆதரித்தது.

இந்த 'சுதந்திரத்திற்கு' பின்னர், UNP அரசாங்கம் நூறாயிரக்கணக்கான இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை இரத்து செய்தது. இது தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாக பிரித்து முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்க கணக்கிடப்பட்ட இழிந்த நடவடிக்கையாகும்.

ஜூலை 23, 1953 அன்று, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு உருவாகிய நிலையில், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறங்களில் கணிசமான ஆதரவைப் பெற்ற லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), ஆகஸ்ட் 12 அன்று ஒரு நாள் போராட்டத்தை அறிவித்தது.

லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர் என்.எம். பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகிறார்

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CP) மற்றும் லங்கா சம சமாஜக் கட்சியிலிருந்து பிரிந்த வலதுசாரி தேசியவாதக் குழுவான புரட்சிகர சம சமாஜக் கட்சி (Viplavakari LSSP - VLSSP), ஆகியவை இப்போராட்டத்தில் இணைந்தன.

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையைப் சுரண்டிக் கொள்வதற்காக எதிர்க் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்த போதிலும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை. அதிகரித்து வந்த அதிருப்தியை சுரண்டிக் கொள்ளும் முயற்சியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 1951 இல் UNP இல் இருந்து பிளவுபட்டு, S.W.R.D. பண்டாரநாயக்கா தலைமையில் உருவாக்கப்பட்டது. தமிழ் முதலாளித்துவ உயரடுக்கின் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்த போதிலும், அதில் பங்கேற்கவில்லை.

ஆகஸ்ட் 12 அன்று, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் கைகளில் விஷயங்களை எடுத்துக் கொண்டனர். பொலிஸாரை எதிர்கொள்வதற்காக, தலைநகர் கொழும்பிலுள்ள ஒவ்வொரு நுழைவாயிலையும் தடுக்கும் வகையில், தடுப்புகளை கட்டினார்கள். கிருலப்பனை பாலத்திற்கு அருகில் உள்ள வீதியின் குறுக்கே உள்ள ஒரு தடுப்பில், 80 பொலிஸ் காவலர்களுக்கு எதிராக மக்கள் போராடினர்.

கம்பிகள் துண்டிக்கப்பட்டு, கொழும்பு மற்றும் பிற பிராந்தியங்களுக்கு இடையிலான தந்தி, தொலைபேசி மற்றும் பிற தொடர்பாடல் இணைப்புகள் தடை செய்யப்பட்டன. சில இடங்களில் மரப்பாலங்கள் அகற்றப்பட்டன, மற்ற சிறிய பாலங்கள் டைனமைட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டன. போக்குவரத்து மற்றும் தபால் சேவைகள் நிறுத்தப்பட்டன. சில இரயில் தண்டவாளங்கள் ஒரு மைல் அல்லது அதற்கு மேல் அகற்றப்பட்டன மற்றும் சில இரயில்கள் நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்ன.

பீதியடைந்த யூ.என்.பி அமைச்சரவை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த எச்.எம்.எஸ் நியூஃபவுண்ட்லேண்ட் (HMS Newfoundland) என்ற பிரிட்டிஷ் போர்க்கப்பலில் கூடியது. அது அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதோடு, போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட்டுத்தள்ளுவதற்கான உத்தரவுடன் இராணுவத்தை அழைத்தது. தொழிலாள வர்க்க கட்சிகளின் அலுவலகங்கள் மற்றும் அச்சகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, ஊரடங்கு உத்தரவை விதித்து, சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக மரண தண்டனையையும் அறிமுகப்படுத்தியது.

கொழும்பிலும் மற்றும் தெற்கு, மேற்கு பிராந்தியங்களில் உள்ள கிராமப்புறங்களிலும் ஒன்பது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பொலிசார் சுட்டுக் கொன்றனர், மேலும் 175 எதிர்ப்பாளர்களை கடுமையாக காயப்படுத்தினர்.

லங்கா சம சமாஜக் கட்சி போராட்டத்தை நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், ஒரு நாளுக்கு அழைப்புவிடப்பட்ட ஆர்ப்பாட்டம் சில பகுதிகளில், குறிப்பாக கொழும்பு புறநகர் மற்றும் தெற்கு பகுதிகளில் தொடர்ந்தன.

லங்கா சம சமாஜக் கட்சி எந்த நடவடிக்கையையும் ஏற்பாடு செய்யவுமில்லை அல்லது பாதுகாப்புக் குழுக்களைக் கட்டுவதற்கு அழைப்பு விடுக்கவுமில்லை. ஆயினும்கூட, முந்தைய தசாப்தத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் தீவிரமாக இருந்த பகுதிகளில் எதிர்ப்புகள் வெடித்தன. அந்த நேரத்தில், உலக ட்ரொட்ஸ்கிச கட்சியான நான்காம் அகிலத்தின் இலங்கைப் பிரிவாக லங்கா சம சமாஜக் கட்சி இருந்தது, ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கோரிக்கைகளைச் சுற்றி பாராளுமன்றவாதம் மற்றும் தொழிற்சங்கவாதத்தை நோக்கி அது அதிகளவில் நோக்குநிலை கொண்டிருந்தது.

1942 இல் நான்காம் அகிலத்தின் ஒரு பிரிவாக இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி (BLPI) ஸ்தாபிக்கப்பட்டு, இலங்கை உட்பட இந்திய உப-கண்டம் முழுவதும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்திற்காகப் போராடியது. எவ்வாறாயினும், N.M. பெரேரா மற்றும் பிலிப் குணவர்த்தன தலைமையிலான ஒரு சந்தர்ப்பவாதப் பிரிவு BLPI யில் இருந்து பிரிந்து 1940 களின் நடுப்பகுதியில் LSSP இன் பதாகையின் கீழ் ஒரு தேசியவாத வேலைத்திட்டத்திற்குத் திரும்பியது.

BLPI, இந்த பிளவின் அனைத்து முக்கியமான அரசியல் பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, 1950ல் LSSP உடன் இணைந்தது. இந்தியாவில் BLPI இன் பிரிவு முன்னதாக இந்திய தேசியவாத சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்திருந்தது. இந்த இணைப்புகள் BLPI ஐ கலைப்பதற்கு வழி அமைத்தது. இது, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சம்பிரதாய சுதந்திரம் உட்பட, தொழிலாள வர்க்க எழுச்சிகளை முறியடிப்பதற்கு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சோவியத் ஆட்சிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட தீர்வுகளுக்கு அடிபணிந்ததாக இருந்தது.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில், நான்காம் அகிலத்தில் வெளிப்பட்ட மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேலின் திருத்தல்வாதப் போக்குடன் இணைந்து, LSSP, ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து மேலும் விலகிச் சென்றது. இந்த போக்கு ஸ்ராலினிச சோவியத் அதிகாரத்துவத்திற்கு ஒரு முற்போக்கான பாத்திரம் இருப்பதாக காரணம் காட்டி, சுயாதீனமான புரட்சிகரக் கட்சிகளை கட்டியெழுப்பும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை கைவிட்டதால் எழுந்தது. அரை-காலனித்துவ நாடுகளில், நான்காம் அகிலத்தின் பிரிவுகளை முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுடன் இணைக்க அவர்கள் முன்மொழிந்தனர்.

1953 நவம்பரில் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச தலைவர் ஜேம்ஸ் பி. கனன் இந்த கலைப்புவாதத்தை நிராகரிக்க அழைப்பு விடுத்த பகிரங்க கடிதத்தை LSSP எதிர்த்ததோடு, மேலும் பப்லோவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) சேரவும் மறுத்தது. பப்லோவை விமர்சித்த போதிலும், லங்கா சம சமாஜக் கட்சி பப்லோவாத சர்வதேச செயலகத்திலேயே இருந்தது.

லங்கா சம சமாஜக் கட்சியின் தேசியவாத சறுக்கல் 1953 ஹர்த்தாலில் அதன் பாத்திரத்தில் வெளிப்படுத்தப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் ஆவணம் விளக்கியது போல்:

அடுத்துவந்த லங்கா சம சமாஜக் கட்சியின் புனைகதைகள், 1953 ஹர்த்தாலை பயன்படுத்தி கட்சியின் புரட்சிகர பண்பை வெளிப்படுத்துவதற்காக இருந்தன. உண்மையில், அந்த வெகுஜன இயக்கத்துக்கு லங்கா சம சமாஜக் கட்சி தலைமையை வழங்கவில்லை... ஒரு நீண்ட கட்டுரையில், ஹர்த்தாலானது “தொழிலாளர்-விவசாயிகள் கூட்டணியின் அடையாளத்தைக் கொண்ட” வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய கட்டம் என கொல்வின் ஆர். டி சில்வா தெரிவித்தார். ஆனால், “ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை இராஜினாமா செய்து புதிய பொதுத் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கவே” இப்போது போராட வேண்டும் என அவர் அந்தக் கட்டுரையை முடித்தார். லங்கா சம சமாஜக் கட்சி அதன் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான ஒரு உதவிப் பொருளாக மட்டுமே ஹர்த்தாலை நோக்கியது. இதன் விளைவாக, வெகுஜன எதிர்ப்பு உணர்வை பண்டாரநாயக்காவால் பயன்படுத்திக்கொள்ள முடிந்ததோடு, அவர் குறிப்பாக லங்கா சம சமாஜக் கட்சியின் தலைமைத்துவமின்மையினால் குழம்பிப்போயிருந்த சிங்கள கிராமப்புற மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றார்.

கொல்வின் ஆர். டி சில்வா

லங்கா சம சமாஜக் கடசி பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்மொழிந்த போது, போராட்டத்தின் தீவிரம் ஆளும் உயரடுக்கின் கணிசமான பிரிவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் யூ.என்.பி.க்கு மாற்று முதலாளித்துவக் கட்சியாக பண்டாரநாயக்கவின் ஸ்ரீ.ல.சு.க.வுக்குப் பின்னால் தங்கள் ஆதரவை வழங்கினர். பண்டாரநாயக்காவின் 'சிங்களம் மட்டும்' கொள்கையானது சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாக முன்மொழிந்ததோடு, ஹர்த்தாலின் போது வர்க்க ஐக்கியத்தை வெளிப்படுத்திய தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக தமிழ் விரோத இனவாதத்தையும் அது தூண்டியது.

லங்கா சம சமாஜக் கட்சி வெகுஜனப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததோடு, 1956 பாராளுமன்றத் தேர்தலில் SLFP பதவியேற்கவும் வழி வகுத்தது. ஹர்த்தாலில் இருந்து ஒரு புரட்சிகர பாடம் எடுப்பதற்கும் அல்லது நிகழ்வை சுயவிமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்வதற்கும் மாறாக, லங்கா சம சமாஜக் கட்சி அரசியல் ரீதியாக வேகமாக பின்வாங்கியது.

S.W.R.D. பண்டாரநாயக்கா

உண்மையில், லங்கா சம சமாஜக் கட்சி 1956 தேர்தலின் போது ஸ்ரீ.ல.சு.க.வுடன் 'போட்டியில்லா' உடன்படிக்கையில் நுழைந்ததுடன், 1956 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் அதன் சிம்மாசன உரைக்கு வாக்களித்து, ஸ்ரீ.ல.சு.க அரசாங்கத்திற்கு 'பொறுப்புள்ள ஒத்துழைப்பு' என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. VLSSP இன் தலைவர் பிலிப் குணவர்தன, SLFP அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக நுழைந்தார்.

சர்வதேச ரீதியில், பப்லோவாதிகள் லங்கா சம சமாஜக் கட்சியின் பின்வாங்கலை மூடி மறைத்து, 1964 இன் பெரும் காட்டிக்கொடுப்புக்கான நிலைமையை உருவாக்கினர். மற்றொரு தொழிலாள வர்க்க எழுச்சியை எதிர்கொண்ட போதிலும், LSSP யானது, சிறிமா பண்டாரநாயக்கவின் SLFP தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் 1964 இல் நுழைந்து கொண்டது. அந்தச் செயலின் மூலம், LSSP இறுதியாக சர்வதேச சோசலிசக் கோட்பாடுகளை முற்றிலுமாக கைவிட்டு, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நசுக்குவதற்கு ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் மந்திரிப் பதவிகளை ஏற்றுக்கொண்டது.

அன்றிலிருந்து பல தசாப்தங்களாக தமிழ் எதிர்ப்பு வகுப்புவாதம் மற்றும் உள்நாட்டுப் போர் உட்பட, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் எதிர்கொள்ளும் பயங்கரமான நிலைமைகள், இந்த வரலாற்று காட்டிக்கொடுப்பின் விளைவாகும்.

இன்று உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி மற்றும் இலங்கையில் அதன் கூர்மையான வெளிப்பாட்டின் பின்னணியில் 1953 ஹர்த்தாலில் இருந்து தொழிலாள வர்க்கம் படிப்பினைகளைப் பெற வேண்டும். கோவிட்-19 தொற்றுநோய் உலகளாவிய வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது, இதில் கடந்த காலத்தின் படிப்பினைகளை ஒருங்கிணைப்பது மிக முக்கியமானது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாளர்களின் தைரியம், அச்சமின்மை மற்றும் போர்க்குணம் எதுவாக இருந்தாலும், அது மட்டுமே தொழிலாளி வர்க்கம் ஆட்சியைப் பிடிக்க போதுமானதல்ல என்பதை ஹர்த்தால் அறிவுறுத்தியுள்ளது. அதற்கு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு புரட்சிகர கட்சி தேவை. இலங்கை பற்றிய, லங்கா சம சமாஜக் கட்சியின் சீரழிவு மற்றும் காட்டிக்கொடுப்பு உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அனைத்து வரலாற்று அனுபவங்களையும் முழுமையாக ஒருங்கிணைக்க வேண்டும்.

லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் வரவிருக்கும் புரட்சிகரப் போராட்டங்களுக்கு இன்றியமையாத அடிப்படையை வழங்குகிறது. இது காலதாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில், தொழிலாள வர்க்கம் மட்டுமே கிராமப்புற ஏழைகளின் தலைமையை எடுத்துக் கொண்டு ஒரு சோசலிசப் புரட்சியின் மூலம் ஜனநாயகப் பணிகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பதை நிறுவிக்காட்டியுள்ளது. இதன் அர்த்தமானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளையும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகும்.

Loading