உக்ரேன் போரினால் மேலும் மோசமடைந்த வாழ்க்கைத் தரத்தை அழிப்பதற்கு எதிராக கிரீஸில் பொது வேலைநிறுத்தம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த கிரேக்கத் தொழிலாளர்கள் நேற்று 24 மணி நேர பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடப்பட்டது. இது நாட்டின் பெரும்பகுதியை முடக்கியது.

சுரங்கப்பாதை, டிராம், புறநகர் புகையிரதத்தில் எந்த சேவையும் இயங்காத பொது போக்குவரத்து பெரும்பாலும் ஏதென்ஸில் இயங்காது நிறுத்தப்பட்டது. காலை 9 மணி முதல் 12 மணி நேரம் மட்டுமே பேருந்துகள் இயங்கின. பேருந்து ஊழியர்கள் தங்கள் பணிமுறைகளின் தொடக்கத்திலும் முடிவிலும் இரண்டு மூன்று மணி நேர நிறுத்தத்தில் இணைந்தனர். கிரேக்கத்தின் பல தீவுகளுக்கு சேவை செய்யும் முக்கிய பங்கு வகிக்கும் போக்குவரத்து படகுகள் துறைமுகங்களில் தங்கியுள்ளன. அரசு நடத்தும் சேவைகள் மூடப்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்டன. அரசு நடத்தும் மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் அவசரகால தேவைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்தனர்.

ஏப்ரல் 6, 2022 புதன்கிழமை, கிரீஸின் மத்திய ஏதென்ஸில் 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு அணிவகுத்துச் செல்கின்றனர் (Photo/Thanassis Stavrakis)

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், மின் பொறியியலாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு பணியாளர்களின் பங்கேற்பை சட்டவிரோதமாக்கும் நீதிமன்ற தீர்ப்பை வென்ற பொது விமானப் போக்குவரத்து சேவையின் ஜனநாயக விரோத தலையீடு இல்லாவிட்டால் வேலைநிறுத்தம் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

கிரேக்கத் தொழிலாளர்களின் இயக்கம், தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் போரினால் தூண்டப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களின் அழிவால் தூண்டப்பட்ட வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய வெடிப்பின் ஒரு பகுதியாகும். சமீபத்திய வாரங்களில் இலங்கை, ஸ்பெயின், சூடான், துனிசியா மற்றும் கனடா உட்பட பல நாடுகளில் காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புக்கள் வெடித்துள்ளன.

குறிப்பாக ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் கிரீஸ் பங்கேற்பதன் மூலம் மிகவும் மோசமாகிவிட்ட எரிசக்தி விலைகள் உயர்ந்து, மில்லியன் கணக்கானவர்களின் வருமானம் குறைக்கப்பட்டுள்ளது. கிரேக்கத்தின் வருடாந்திர எரிசக்தித் தேவைகளில் நாற்பது சதவிகிதம் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு விநியோகங்களிலிருந்து வருகிறது.

சமூக ஜனநாயக PASOK தலைமையிலான மற்றும் போலி-இடது சிரிசா (2015-2019 வரை அரசாங்கத்தில்) மற்றும் பழமைவாத புதிய ஜனநாயகத்தின் (ND) அடுத்தடுத்த அரசாங்கங்களால் அதன் வாழ்க்கைத் தரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கிட்டத்தட்ட 15 ஆண்டுகால சமூக மற்றும் பொருளாதாரப் போரை அனுபவித்த தொழிலாள வர்க்கத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரேக்கத்தின் இரண்டு முக்கிய தொழிற்சங்கங்களான தனியார் துறை கிரேக்கத் தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பு (GSEE) மற்றும் பொதுத் துறை அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு (ADEDY) ஆகியவை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (KKE) அனைத்து தொழிலாளர் போராளி முன்னணியின் (PAME) கூட்டமைப்பும் இதில் பங்கேற்றது.

அனைத்து முக்கிய நகரங்களிலும் 70க்கும் மேற்பட்ட நாள் முழுவதுமான பேரணிகள் நடத்தப்பட்டன. ஏதென்ஸ் பேரணிகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். Associated Press '9,000 எதிர்ப்பாளர்கள் கிரீஸின் வடக்கே இரண்டாவது பெரிய நகரமான தெசலோனிக்கியில் அணிவகுப்பு நடத்தினர்' என்று அறிவித்தது.

ஏதென்ஸில், வெவ்வேறு கூட்டமைப்புகள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகள் தலைமையில் வெவ்வேறு சதுக்கங்களில் மூன்று பேரணிகள் நடத்தப்பட்டன.

அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளால் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்ட போரில் ND அரசாங்கத்தின் பெரும் ஈடுபாட்டைக் கண்டிக்கும் நிகழ்வைப் பயன்படுத்தி, பேரணிகளில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மில்லியன் கணக்கானவர்களின் சார்பாகப் பேசினர். கிரீஸ் பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள முக்கிய சின்டாக்மா சதுக்கத்தில் PAME பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணியை ஊக்குவிக்கும் PAME இன் சுவரொட்டியில் 'வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக', 'சம்பள பேரம் பேசுதல் மற்றும் ஊதிய உயர்வுகளுக்கு' மற்றும் 'போரில் கிரேக்கம் ஈடுபாடு வேண்டாம்' என்ற முழக்கங்கள் இருந்தன.

கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) மற்றும் அனைத்து தொழிலாளர் போராளி முன்னணி (PAME) ஆகியவை தீவிரமான தேசியவாத அமைப்புகளாகும். அதன் வரலாறு சோவியத் அதிகாரத்துவத்தின் எதிர்-புரட்சிகர குற்றங்களில் மூழ்கியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் துருப்புக்கள் நாட்டை பாசிச ஆக்கிரமித்ததையும், 1974 வரை அதிகாரத்தில் இருந்த அமெரிக்க ஆதரவு பாசிச ஆட்சிக்குழு 1967ல் அதிகாரத்தைக் கைப்பற்றியதையும் நினைவுகூரும் உறுப்பினர்களும் அவர்களது சந்ததியினரும் அதன் பிரிவினரில் அடங்குவர். PAME/KKE இன் போருக்கு எதிரான இத்தகைய அழைப்புகள் மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அவர்களின் அறிக்கைகள், கிரேக்கத்தின் 'தேசிய நலன்களை' பாதுகாக்கும் நிலைப்பாட்டில் இருந்தே எப்போதும் செய்யப்படுகின்றன.

PAME, மற்ற முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புகளைப் போலவே, ஏகாதிபத்திய-எதிர்ப்பு உணர்வு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இருக்கும் ஆளும் உயரடுக்கிற்கு எதிரான எதிர்ப்பை மிகத் தீவிரமாக அறிந்திருக்கிறது. கிரீஸ் நேட்டோவுடனான அதன் உறவுகளை ஆழப்படுத்தி, ரஷ்யாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்களுக்கு ஒரு முக்கிய தளமாக செயல்படுகிறது.

ஏப்ரல் 6, புதன்கிழமை, கிரீஸ், ஏதென்ஸில் 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர் (AP Photo/Thanassis Stavrakis)

இந்த எதிர்ப்பு உணர்வின் வலிமையினால் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒரு தந்திரோபாய மாற்றத்தை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. Press Project இணைய தளம், “அதன் பங்கிற்கு ADEDY வேலைநிறுத்த நடவடிக்கைக்கு போர்-எதிர்ப்பு தொனியைக் கொடுத்துள்ளதுடன்”, போரை உடனடியாக நிறுத்துவதற்கான அழைப்பு விடுத்துள்ளது. அது 'வாழ்க்கைச் செலவு உயர்வு, தொழிலாளர்களின் ஊதியத்தில் வெட்டுக்கள் மற்றும் அதன் தொழிலாளர்-விரோத மற்றும் நவ-தாராளமயக் கொள்கைகளைத் தொடரவதில் அதன் சொந்தப் பொறுப்பை திசைதிருப்புவதற்கு அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறது.'

பணவீக்கம் அதிவேகமாக அதிகரித்து, ஜனவரியில் 6.2 சதவீதத்திலிருந்து பெப்ரவரியில் 7.2 சதவீதமாக உயர்ந்து, கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆரம்ப தரவுகளின்படி மார்ச் மாதத்தில் 8 சதவீதத்தை எட்டியுள்ளது. பெப்ரவரியில் கிரேக்க புள்ளியியல் நிறுவனத்தின் ஆய்வில், பணவீக்கம் மின்சார விலையை 71.4 சதவிகிதம் உயர்த்தியுள்ளது என்று கண்டறிந்துள்ளது. இயற்கை எரிவாயுவின் விலை 78.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை சூடேற்றுவதற்கு எண்ணெயை நம்பியுள்ளன. இப்போது விலை 41.5 சதவீதம் அதிகமாக உள்ளது. எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய்விலை 23.2 சதவீதம் உயர்ந்துள்ளது.

பிரதம மந்திரி கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் ND அரசாங்கம் ஜனவரியில் விகிதத்தில் ஒரு சிறிய அதிகரிப்பைத் தொடர்ந்து, குறைந்தபட்ச ஊதியம் மாதம் 663 (US$723) யூரோக்களாக இருக்கும் ஒரு நாட்டில் இத்தகைய விலைகள் வெறுமனே கட்டுப்படியாகாது. ஏற்கனவே சுமத்தப்பட்ட வாழ்க்கைத் தரங்களின் பயங்கரமான குறைப்புக்கு மேல் பணவீக்கத்தின் உயரும் விகிதத்தை கருத்தில் கொண்டு, GSEE ஆல் அழைப்பு விடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தில் 13 சதவிகித அதிகரிப்பினால் இது வெறும் 751 யூரோக்களாகவே இருக்கும்.

எரிசக்தி விலை உயர்வு மற்றும் அடிப்படை பொருட்களின் விலை உயர்வு, அத்துடன் ரொட்டி மற்றும் பிற மா சார்ந்த பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை சமூக நெருக்கடியை தூண்டியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரேனில் இருந்து சுமார் 250,000 டன் மென்மையான கோதுமையை கிரீஸ் இறக்குமதி செய்கிறது, இது அதன் மொத்த கோதுமை இறக்குமதியில் 30 சதவீதமாகும். உக்ரேன் போருக்கு முன்பே, முக்கியமாக எரிபொருள் செலவுகள் காரணமாக கோதுமையின் மொத்த விலை ஏற்கனவே 2020 ஐ விட 80 சதவீதம் உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, பல்பொருள் அங்காடிகள் மாவு, எண்ணெய் மற்றும் பிற பொருட்களை வாங்கக்கூடிய அளவுக்கு கட்டுப்பாடுகளை விதித்தன.

வேலைநிறுத்தத்தின் போது Reuters இடம் 60 வயதான பொதிகள் விநியோக தொழிலாளி ஜோர்ஜியோஸ் அலெக்ஸாண்ட்ரோபொலோஸ் கூறுகையில், 'எங்கள் வாழ்க்கை இப்போது கடனில் உள்ளது. 'நான் மின்சார நிறுவனத்திற்கும் எனது வீட்டு உரிமையாளருக்கும் கடன்பட்டிருக்கிறேன், நான் கடந்த இரண்டு மாதங்கள் வாடகை செலுத்தாதுள்ளேன். கடைசி இரண்டு மின் கட்டணங்களையும் நான் செலுத்த வேண்டியுள்ளது. விரைவிலேயே நாம் அனைவருக்கும் கடனாளியாகி விடுவோம்... இப்படியே தொடர முடியாது” என்றார். உளவியலாளர் மிக்கைலிஸ் ரோகாரஸ் 'எல்லாவற்றையும் குறைக்க' தான் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் 'எங்கள் அடமான கடனை திருப்பி செலுத்துவது அல்லது கட்டணங்களை செலுத்துவது ஆகியவற்றிற்கு இடையே நாம் தேர்வு செய்ய வேண்டும். நாங்கள் அடிமட்டத்தை அடைந்துவிட்டோம்' என்றார்.

GSEE வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கையில், 'கடந்த 14 ஆண்டுகளாக, தொழிலாளர்கள் ஆழ்ந்த நெருக்கடியின் சுமையை சுமந்து வருகின்றனர். இது அனைவரின் வருமானத்தையும் வாழ்க்கையையும் பாதித்துள்ளது' எனக் குறிப்பிட்டது.

ADEDY ஏற்கெனவே கோரும் குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்திற்கு சமமான ஊதிய உயர்வு மற்றும் முதலில் 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்டு மற்றும் 2015 இல் காலாவதியாகும் 1 சதவிகிதம் மற்றும் 4 சதவிகித வருமானத்தின் வெறுக்கப்படும் ஒற்றுமை வரியை ஒழிக்க வேண்டும் என்ற தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கோரிக்கைகள் ஆழ்ந்த இழிவான தன்மையானவையாகும். ஆண்டுதோறும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு போராட்டத்தையும் நசுக்க தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து வருகின்றன.

அதன் சமூக நிலையை திட்டமிட்டுக் குறைப்பதற்கும், பெருநிறுவனங்களால் அதீத சுரண்டலுக்கும் எதிரான தொழிலாளர்களின் போராட்டம் இப்போது போர், ஏகாதிபத்தியம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான வளர்ந்து வரும் எதிர்ப்போடு ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுகின்றன.

பல வாரங்களாக, கிரேக்கத் துறைமுகமான அலெக்ஸாண்ட்ரூபோலிஸில் அமெரிக்க சரக்குக் கப்பல்களில் வந்த நேட்டோ இராணுவ கவச வாகனங்களை உக்ரேனிய எல்லைக்குக் கொண்டு செல்ல கிரேக்க இரயில்வே நிறுவனமான தெசலோனிகியில் உள்ள TrainOSE இன் தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர். அவை செலென்ஸ்கி ஆட்சியின் பயன்பாட்டிற்காக உக்ரேனிய எல்லையில் உள்ள ருமேனியா மற்றும் போலந்துக்கு அனுப்பப்படவுள்ளவையாகும். TrainOSE தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அச்சுறுத்திய போதிலும், அவர்களால் இரயிலை நகர்த்துவதற்கான உடன்பாட்டைப் பெற முடியவில்லை. இறுதியில் நிறுவனம் இரயில்களை அலெக்ஸாண்ட்ரோபோலிஸிற்கு நகர்த்த கருங்காலிகளை நியமிக்க வேண்டியிருந்தது

அறிக்கைகளின்படி, எட்டு வேலைநிறுத்தக்காரர்கள் நேற்று தெசலோனிகியில் கைது செய்யப்பட்டனர். இதில், Ta Nea நாளிதழின் படி, கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களை விடுதலை செய்யக் கோரி நேற்று மாலை நகரில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் பேரணி நடைபெற்றது.

கிரேக்கத்தில் நடவடிக்கையின் அரசியல் முக்கியத்துவம், உக்ரேனிய நவ-நாஜிக்களின் பதிலால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. அவர்கள் நேற்று 'கிரேக்கத்தில் உள்ள சிவப்பு கும்பல்களின் உறுப்பினர்களை... உக்ரேனிய தேசியவாத அமைப்புகளின் ஒரு படைப்பிரிவு இப்பிரச்சனையை ஒரேதரத்தில் தீர்க்கும்' என அறிவித்தனர்.

கிரேக்கத்தை முன்னர் ஆண்ட பாசிச ஆட்சிக்குழுவைக் குறிப்பிட்டு, 'கருப்பு அதிகாரிகளின்' (‘black colonels’) அதிகாரத்தை-விரைவாகவும் திறமையாகவும் மீண்டும் கொண்டு வருவோம்' என அவர்கள் மேலும் கூறினர்.

நேட்டோ நடவடிக்கைக்கு ஆதரவளிக்க அனைவரும் தங்கள் வாழ்க்கை நிலைமைகளை தியாகம் செய்ய வேண்டும் என்று கோரும் அரசு மற்றும் ஊடகப் பிரச்சாரத்தின் அலைகளை எதிர்கொள்கையில், Journal of the Editors இதழுக்காக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மூன்றில் இரண்டு பங்கினர் உக்ரேனுக்கான போர்த்தளவாடங்களை கொடுப்பதன் பொருள் கிரீஸை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று கூறியதாக Ta Nea தெரிவித்தது.

பெரும்பான்மையானோர் மனிதாபிமான உதவிகளை மட்டுமே அனுப்பப்படவேண்டும் என்பதை ஆதரித்தனர். 32 சதவீதம் பேர் மட்டுமே மனிதாபிமான உதவி மற்றும் போர்த்தளவாடங்கள் அனுப்பப்பட வேண்டும் என்று பதிலளித்துள்ளனர். ஒரு சற்று பெரும்பான்மையினரான 53 சதவீதத்தினர் போர் உள்நாட்டில் மட்டுப்படுத்தப்படும் என்று நம்பினர். மேலும் 40 சதவீதம் பேர் அது உலகளாவிய மோதலுக்கு வழிவகுக்கும் என அஞ்சுகின்றனர் என அது தெரிவித்தது.

Loading