ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 2,000 கோவிட் இறப்புக்களை பிரிட்டன் பதிவு செய்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டனில் போரிஸ் ஜோன்சனின் பழமைவாத அரசாங்கம் ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் முடிவுக்குக் கொண்டு வந்ததன் விளைவாகவே கோவிட்-19 இறப்புக்கள் கடுமையாக அதிகரித்து வருகின்றன.

கடந்த வாரம், கோவிட்-19 நோயால் பிரிட்டனில் கிட்டத்தட்ட 2,000 பேர் இறந்துள்ளனர், இது ஜனவரி மற்றும் பெப்ரவரி 2021 மாதங்களின் தொற்றுநோயின் உச்சத்திற்குப் பின்னர் இதுவரை நிகழாத இறப்புக்களின் மட்டங்களை எட்டியுள்ளன. 2021 இறப்புக்கள் தடுப்பூசிகள் மக்களிடம் பரவலாகக் கிடைப்பதற்கு முன்னைய காலகட்டத்தில் நிகழ்ந்தன.

பிரிட்டனில் புதன்கிழமை மட்டும் 651 பேர் இறந்ததாக பதிவானது, இது பெப்ரவரி 17, 2021 ஆம் தேதிக்குப் பின்னைய உச்சபட்ச எண்ணிக்கையாகும். வியாழக்கிழமை உயிரிழப்புக்கள் 1,984 என்பது முன்னைய வாரத்தை விட 665 இறப்புக்கள் அல்லது 50.4 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.

மே 5, 2020 அன்று இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள ராயல் பாப்வொர்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவரை மருத்துவ ஊழியர்கள் கவனிக்கின்றனர் [Credit: Neil Hall Pool via AP]

இந்த 651 எண்ணிக்கை “செயற்கையாக அதிகரித்துக் காட்டப்பட்டதாகும், ஏனென்றால் அதில் நேற்று எண்ணப்பட்டிருக்க வேண்டிய சிலரும் அடங்குவர்” என்று டெய்லி மெயில் தெரிவித்தது. ஆனால் முந்தைய நாளில் 288 இறப்புக்கள் பதிவாகியுள்ளன, என்றாலும் தரவுகள் எப்படி குறைத்துக் காட்டப்பட்டாலும் இரண்டு நாட்களின் மொத்த இறப்புக்கள் 939 ஆகும். இந்த நூற்றுக்கணக்கான இறப்புக்களைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மேலும் 350 இறப்புக்கள் அறிவிக்கப்பட்டன.

பிரிட்டனில் அதிகரித்து வரும் கோவிட் இறப்புக்கள் ஐரோப்பா முழுவதும் தொடரும் நிலையான உச்சபட்ச இறப்பு எண்ணிக்கைகளின் ஒரு பகுதியாகும், இது நாடுகளுக்கு இடையேயான பயணம் உட்பட, அனைத்துப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதன் தவிர்க்க முடியாத விளைவாகும். கடந்த இரண்டு வாரங்களில் ஒவ்வொரு கண்டத்திலும் 10,000 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒரு வருடத்தில் ஐரோப்பாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புக்கள் சேர்த்துக் கொள்ளப்படும், அதாவது இறப்பு விகிதம் தொடர்ந்து அப்படியே இருக்கும் என்ற கணக்கீட்டில், உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை சுமார் 2.3 மில்லியன் அளவிற்கு காட்டப்படும்.

இங்கிலாந்து 651 இறப்புக்களை பதிவு செய்த அதே நாளில், ஜேர்மனி 307, ரஷ்யா 267, இத்தாலி 155 மற்றும் பிரான்ஸ் 152 என்ற எண்ணிக்கைகளில் கோவிட் இறப்புக்களை பதிவு செய்தன. ஸ்பெயினில் ஏற்கனவே கோவிட் பாதிப்பால் 103,000 பேர் இறந்துள்ளனர் என்ற நிலையில், அதிகாரிகள் அந்த நாளுக்கான இறப்பு எண்ணிக்கையை வழங்கவில்லை.

இங்கிலாந்து இறப்புக்களின் அதிர்ச்சிகரமான அதிகரிப்பு பற்றி ஊடகங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை அல்லது அதை ஒரு சிறு அறிக்கையாகக் கூட மாற்றவில்லை.

வியாழக்கிழமை, தேசிய சுகாதார சேவையின் ஆலோசகர் மற்றும் கல்வியாளரான டாக்டர். டான் கோயல், “FFS, இன்று மேலும் 350 பேர் இறந்துவிட்டனர்! இந்த வாரம் 2,000 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன! இந்த இறப்பு விகிதங்கள் மற்ற தொற்றுநோய்களை விட 5 க்கும் அதிகமான மடங்காகும். இது, இங்கிலாந்தில் தடுப்பூசி விகிதங்கள் குறைந்து வரும் அனைத்து வயது வந்தவர்கள் மத்தியில் அதிகரித்தளவில் இறப்புக்களை ஏற்படுத்தும் 3 வது பெரிய கொலைகார வைரஸாக கோவிட் ஐ நிலைபெறச் செய்கிறது. முகக்கவசம் அணிதல் மற்றும் சுய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், ஊடகங்களின் பரபரப்பூட்டும் செய்திகள் எங்கே?” என்று ட்வீட் செய்தார்.

‘அவசர மருத்துவத்தைச் சேர்ந்த மருத்துவர்’ “நேற்று இங்கிலாந்தில் கோவிட் நோயால் 651 பேர் இறந்துள்ளனர். இந்த 651 எண்ணிக்கை!!! பற்றி ஊடகச் செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இது கோவிட் உடன் வாழ்வது அல்ல. மாறாக இது பூஜ்ஜிய கோவிட் கட்டுப்பாடுகளுடன் வாழ்வதாகும்” என்று பதிவிட்டிருந்தார்.

நேற்று, பாத் பல்கலைக்கழகத்தின் கணித உயிரியலாளரும், Independent Sage குழுவின் உறுப்பினருமான கிட் யேட்ஸ், “கோவிட் வீழ்ச்சி என்பது கோவிட் குறைவதாக அர்த்தமல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம். தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின் (ONS) சமீபத்திய கணக்கெடுப்பு, நோய்தொற்றுக்கள் ஜனவரி உச்சத்திற்கு நெருக்கமாக தொடர்ந்து உச்சபட்சமாக இருப்பதாகக் கூறுகிறது. தற்போது இங்கிலாந்தில் 14 பேருக்கு ஒருவர் வீதம் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இது, ஒட்டுமொத்தமாக கோவிட் நோய்தொற்றுக்கள் குறைந்து வருவதாகக் காட்டும் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் பிரதிபலிப்பாகும். அதாவது, முன்னைய ஏழு நாட்களின் நோய்தொற்றுக்கள் 328,471 க்கு அதிகமாக இருந்ததுடன் ஒப்பிடுகையில், வியாழன் வரை 217,308 நோய்தொற்றுக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், பிரிட்டனில் ஏப்ரல் தொடக்கத்திலேயே உலகளாவிய இலவச பரிசோதனைகள் நீக்கப்பட்டதால், நோய்தொற்று எண்ணிக்கைகள் பற்றிய அறிக்கைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்கப்பட வேண்டும். 30 மில்லியனுக்கும் மேற்பட்ட உழைக்கும் மக்கள் பணியிடங்களுக்குத் திரும்புவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு நோய்தொற்று இருந்தாலும் தீவிரமாக வேலை செய்ய அவர்கள் ஊக்குவிக்கப்படும் நிலையில், கோவிட் நோயின் பரவல் மிக அதிகமாக இருக்கும்.

தேசிய அளவில் பதிவான நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையில் சற்று சரிவு ஏற்பட்டிருந்தாலும், கார்டியன், “தரவுகளை பகுப்பாய்வு செய்யும் வல்லுநர்கள், நோய்தொற்றுக்கள் அவற்றின் உச்சத்தை கடந்துவிட்டதா இல்லையா என்பது பற்றி மிக விரைவில் கூறுவார்கள்… இங்கிலாந்தில் பெரும்பாலான வயதுப் பிரிவுகளில் சரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; எவ்வாறாயினும், ஏப்ரல் 9 ஆம் தேதி முடிவடையும் வாரத்தின் போக்கு, பள்ளி ஆண்டுகளில் 7 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 70 மற்றும் அதற்கு அதிகமான வயதினர் ஆகிய வயது குழுவினர் இடையே நோய்தொற்றுக்கள் பரவிய விகிதம் தெளிவாகத் தெரியவில்லை, கடைசி வாரத்தில் அவர்களிடையே 7.2 சதவீதம் பேர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது, இது இன்னும் அந்த வயதினரிடையேயான மிக உயர்ந்த மட்டமாகும்” என்று செய்தி வெளியிட்டது.

‘கோவிட் உடன் வாழ்வது’ என்பதான அரசாங்கத்தின் கொலைகார திட்டநிரலின் மையத் திட்டம், நோய் பரவல் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதாகும். எனவே, இந்த கட்டத்தில், கோவிட் பரவல் தொடர்பான ஒரே நம்பகமான ஆதாரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் மற்றும் அங்கு நிகழும் இறப்புக்களும் மட்டுமே உள்ளன.

2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இரண்டாவது அலையின் போது பதிவான எண்ணிக்கையை விட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அதற்கான முக்கிய காரணம் மக்களிடையே பாரிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டதே. ஏப்ரல் 4 ஆம் தேதி வரையிலான வாரத்தின் மருத்துவமனை அனுமதிப்புக்களை மார்ச் 28 வரையிலான வாரத்துடன் ஒப்பிடுகையில் அதில் சரிவு காணப்பட்டாலும், வியாழக்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் 100,000 பேருக்கு 19,770 பேர் வீதம் கோவிட் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மார்ச் 28, 2021 அன்று, இலண்டனில் உள்ள தேசிய கோவிட் நினைவுச் சுவர் அருகே, கோவிட் நோயால் இறந்த தங்கள் அன்புக்குரியவர் ஒருவரின் நினைவாக ஒரு குடும்பம் ரோஜாக்களையும் மெழுகுவர்த்திகளையும் கைகளில் ஏந்தி அஞ்சலி செலுத்துகிறது (WSWS Media)

கோவிட் நோய் உறுதிப்படுத்தப்பட்டு 28 நாட்களுக்குள் இறந்தவர்களைக் கணக்கிடும் அரசாங்கத்தின் நடவடிக்கையின்படி, 171,046 பேர் இறந்துள்ளனர். இறப்புச் சான்றிதழில் இறப்பிற்கான காரணம் கோவிட்-19 என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு ONS பதிவு செய்துள்ள மிகவும் துல்லியமான புள்ளிவிபரம், 191,164 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளது. i செய்திகள், “தொற்றுநோயின் தொடக்கத்தில் இருந்து இறப்புச் சான்றிதழில், கோவிட்-19 நோயால் இறந்த 10 பேரில் 9 பேருக்கு இறப்புக்கான முதன்மை காரணம் கொரோனா தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, ஒருசிலருக்கே வைரஸ் ஒரு பங்களிப்பு காரணியாக இருந்தது” என்று குறிப்பிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சீனா மற்றும் ஒருசில நாடுகளைத் தவிர, அனைத்து நாடுகளின் ஆளும் வர்க்கமும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை பின்பற்றிய நிலையில், கோவிட் நோய் உலக மக்களை பெரிதும் அழித்துவிட்டது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஐரோப்பாவில் பதிவாகியுள்ள 186 மில்லியனுக்கும் அதிகமான நோய்தொற்றுக்கள் உட்பட, உலகளவில் அரை பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அனைத்தும் 20 மில்லியனுக்கும் அதிகமான நோய்தொற்றுக்களை பதிவு செய்துள்ளன, குறிப்பாக பிரான்ஸ் 30 மில்லியனை நெருங்குகிறது.

மில்லியன் கணக்கானவர்கள் இப்போது நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் நோய்தொற்று ‘இலேசானதாக’ இருந்தாலும் கூட, பல மாதங்கள் அல்லது வருடங்களுக்கு மக்களைப் பாதிக்கக்கூடிய தொடர்ச்சியான பலவீனப்படுத்தும் நிலைமைகள் ஆகும். சில நோய்தொற்றுக்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கோவிட் ஒரு பேரழிவுகர நோய் என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, இது உடனடியாக அழிக்கப்படாவிட்டால் இதயம், மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புக்களைத் தாக்கி சேதப்படுத்திவிடும்.

நவம்பரில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 100 மில்லியன் மக்கள் நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் அடிப்படையில் உலகளவில் 237 மில்லியன் நெடுங்கோவிட் நோய்தொற்றுக்கள் உள்ளன. வெறும் நான்கு மாதங்களில் உலகளவில் நோய்தொற்றுக்கள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகியுள்ளது.

“நெடுங்கோவிட்: கண்ணுக்குத் தெரியாத பொது சுகாதார நெருக்கடி தொழிலாளர் பற்றாக்குறையைத் தூண்டுகிறது” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், பைனான்சியல் டைம்ஸ், “இங்கிலாந்தின் தொழிலாளர் சந்தை தரவு, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, நீண்டகால நோய்த்தன்மை காரணமாக வேலை செய்யாத அல்லது வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கையில் சுமார் 200,000 அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது; மேலும், கால் பகுதி இங்கிலாந்து நிறுவனங்கள், நீண்ட கால தொழிலாளர் வருகையின்மைக்கான முக்கிய காரணங்களில் நெடுங்கோவிட் நோயும் ஒன்றாகும் என்கின்றன” என்று குறிப்பிட்டது.

“உத்தியோகபூர்வ மாதாந்திர சுய-அறிக்கை நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையையும் இங்கிலாந்து வெளியிடுகிறது, இதில் மார்ச் மாதத்தில் 1.2 மில்லியன் மக்கள் குறைந்தது 12 வாரங்கள் நீடிக்கும் நெடுங்கோவிட் நோயின் அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதனால் பெரும்பாலும் பெண்கள், 35 மற்றும் 49 வயதிற்கு இடைப்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 784,000 பேர் தாங்கள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அவதிப்பட்டதாகக் கூறியுள்ளனர், மேலும் 322,000 பேர் தங்களின் அன்றாட செயல்பாடுகளை இது ‘பெரிதும்’ மட்டுப்படுத்தியதாகக் கூறினர்.”

முந்தைய வாரம் செய்தித்தாள் அறிக்கை செய்த ONS தரவு, “மதிப்பிடப்பட்ட 1.7 மில்லியன் மக்கள், அல்லது இங்கிலாந்து மக்கள்தொகையில் 2.7 சதவீதம் பேர், மார்ச் 5 நிலவரப்படி, நான்கு வாரங்களுக்கும் மேலாக நோய் அறிகுறிகளை அனுபவித்தனர் அல்லது அவை இருப்பதாக சந்தேகித்தனர் என்று பதிவு செய்துள்ளது. இது ஒரு மாதத்திற்கு முன்னைய 2.4 சதவீத த்தில் இருந்து சற்று உயர்ந்துள்ளதைக் குறிக்கிறது” என்று தெரிவிக்கறது.

என்ன விலை கொடுத்தேனும் கோவிட் நோய்தொற்றை வெடித்து பரவ அனுமதிப்பதும், தொடர்ந்து இலாபங்களைப் பெருக்குவதும், மேலும் மேலும் கொடிய கோவிட் மாறுபாடுகளுக்கு வழிவகுக்கும். அத்தகைய ஒன்று ஓமிக்ரோன் XE மாறுபாடாக இருக்கலாம், இதனால் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான நோய்தொற்றுக்கள் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளன. இது சமீபத்திய நோய்தொற்றுக்களையும் இறப்புக்களையும் பெரிதும் தூண்டிய கட்டுப்படுத்தப்படாத ஓமிக்ரோன் BA.2 துணை மாறுபாட்டின் விளைவாக எழுந்தது என்று பகுப்பாய்வு காட்டுகிறது. XE ஆனது ‘மறுசேர்ப்பு’ என்று அறியப்படுகிறது, அதாவது, BA.1 மற்றும் BA.2 துணை மாறுபாடுகளின் மரபணு பண்புகளை இது ஒருங்கிணைக்கிறது. XE முதன்முதலில் ஜனவரி 19 அன்று இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது, மேலும் மார்ச் நிலவரப்படி இங்கிலாந்தில் அதனால் 637 நோய்தொற்றுக்கள் உருவாகியுள்ளன.

BA.1 மற்றும் BA.2 துணை மாறுபாடுகளை விட XE மாறுபாடு இன்னும் அதிகம் பரவக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த மதிப்பீடு இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பால் ஆதரிக்கப்பட்டது, சமீபத்திய தரவுகளின்படி XE இன் வளர்ச்சி விகிதம் BA.2 ஐ விட 9.8 சதவீதம் அதிகமாகும்.

Loading