போக்குவரத்தின் போதான முகக்கவச பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்து, வெள்ளை மாளிகை நிரந்தர பாரிய நோய்தொற்றுக்குக் கோருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை, பைடென் நிர்வாகம், போக்குவரத்து பாதுகாப்பு முகமை (Transportation Security Agency-TSA) வழியாக, பேருந்துகள், இரயில்கள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்தின் போதான முகக்கவச தேவைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது.

ஏப்ரல் 19, 2022, செவ்வாய்க்கிழமை, பிலடெல்பியாவில் உள்ள பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு முகக்கவசங்களை அணிந்த பயணிகள் சோதனையிடப்படுகிறார்கள். (AP Photo/Matt Rourke)

TSA இன் அறிவிப்பைத் தொடர்ந்து, யுனைட்டெட் ஏர்லைன்ஸ், அலாஸ்கா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், ஜெட் ப்ளூ ஏர்வேய்ஸ், தேசிய இரயில் மார்க்கமான ஆம்ட்ராக் மற்றும் ஏராளமான இரயில் மற்றும் பேருந்து வழித்தடங்கள் அவற்றின் முகக்கவசத் தேவையைக் கைவிட்டன.

குறைந்த ஊதியம் பெறும் ஏராளமான தொழிலாளர்கள் உட்பட, பல மல்லியன் அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்காக பொது போக்குவரத்தில் பயணம் செய்கிறார்கள் என்ற நிலையில், இந்த அறிவிப்பு மக்கள்தொகையின் பரந்த பிரிவுகளுக்கிடையில் கோவிட்-19 நோய்தொற்று வெடித்துப் பரவக்கூடிய ஆபத்தை பெரிதும் அதிகரிக்கும்.

கோவிட்-19 பரவலைத் தடுக்கும் எஞ்சிய கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முக்கிய பரப்புரையாளராக செயலாற்றிய டெல்டா ஏர்லைன்ஸ் இந்த அறிவிப்பைப் பாராட்டி, “கோவிட்-19 ஒரு சாதாரண பருவகால வைரஸாக மாறியுள்ளதால், உலகளாவிய பயணங்களை எளிதாக்கும் வகையில் அமெரிக்க முகக்கவச கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதைக் கண்டு நாங்கள் நிம்மதியடைந்தோம்” என்று அறிவித்தது.

டெல்டாவின் அறிக்கை, கோவிட்-19 இன் அச்சுறுத்தலை பொய்யாக குறைத்துக் காட்டும் நோக்கம் கொண்டிருந்தாலும், அது உண்மையில் முக்கிய அமெரிக்க பெருநிறுவனங்கள் மற்றும் பைடென் நிர்வாகத்தின் கொள்கை என்ன என்பதை வெளிப்படுத்துகிறது: அதாவது, மக்களிடையே நிரந்தர பாரிய நோய்தொற்றுக்களையும் மறுதொற்றுக்களையும் உருவாக்கும் வகையில், ஒவ்வொரு விமானம் அல்லது பேருந்து பயணமும் ரஷ்ய சூழ்ச்சி (Russian roulette) விளையாட்டாக மாறும் என்பதே.

பைடென் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பானது, BA.2 துணை மாறுபாட்டினால் நோய்தொற்றுக்கள் கடுமையாக அதிகரித்து வரும் சூழலிலும், மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) கண்காணிப்புப் பிரிவின் கூற்றுப்படி, ஒரு மில்லியன் கோவிட்-19 இறப்புக்களுடன் அமெரிக்கா உச்சத்தில் இருக்கும் சூழலிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்தின் போதான முகக்கவச கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதானது, கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் முறையாக அகற்றுவதில் எட்டப்படும் மற்றொரு மைல்கல்லாகும்.

இதன் அர்த்தம் என்னவென்றால், வேலைக்காக அல்லது குடும்பத்தைப் பார்ப்பதற்காகப் பயணம் செய்யும் அனைவருக்கும் கோவிட்-19 நோய் தொற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது, அவர்கள் கடுமையான நோய், ஊதிய இழப்பு மற்றும் மரண அச்சுறுத்தல் அல்லது நிரந்தர இயலாமை ஆகிய ஆபத்துகளை எதிர்கொள்வதோடல்லாமல், தங்களின் பாதிக்கப்படக்கூடிய அன்புகுரியவர்களுக்கு நோய்தொற்று பரவக்கூடுமோ என்ற கவலையும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட கடுமையான வரையறைக்கு பொருந்தக்கூடிய சுமார் 10 மில்லியன் அமெரிக்கர்கள் உள்ளனர். சமூகத்தின் மற்ற பிரிவினரைப் போல தடுப்பூசிகள் பலனளிக்காத இந்த பொதுப் பிரிவினர், அவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லாத ஒரு சமூகத்தில் வேலை செய்து வாழும் வாய்ப்பை எதிர்கொள்கின்றனர். அவர்கள் தங்களை முழுமையாக தனிமைப்படுத்திக் கொள்ளும் அல்லது தங்கள் சொந்த உயிரை பணயம் வைக்கும் வேதனையான தேர்வை எதிர்கொள்கிறார்கள். மேலும், பொருளாதார சூழ்நிலைகளால் வீட்டிற்கு வெளியே சென்று வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட பலருக்கு, அது மரண தண்டனையாகவே இருக்கும்.

புளோரிடா நீதிபதி கேத்ரின் கிம்பால் மிசெல்லின் (Kathryn Kimball Mizelle) அரைகுறை எழுத்தறிவுத் தீர்ப்பை, போக்குவரத்துக்கான முகக்கவசக் கட்டுப்பாடுகளை கைவிடுவதற்கான சாக்குப்போக்காக பைடென் நிர்வாகம் பயன்படுத்தியுள்ளது.

அமெரிக்க வழக்குரைஞர்கள் சங்கத்தால் ‘தகுதியற்றவர்’ என்று அழைக்கப்பட்ட போதிலும், மிசெல் டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்டவராவார், அதற்கான முதன்மை காரணம் அவர் பாசிச சித்தாந்தவாதியும் கிளர்ச்சியாளருமான ஸ்டீபன் மில்லரின் துணைவியாவார்.

முகக்கவச பயன்பாடு சுகாதார நடவடிக்கை அல்ல என்று தீர்ப்பு வாதிடுகிறது, ஏனென்றால் சுகாதார நடவடிக்கைகள் என்பவை “எதையாவது சுத்தம் செய்யும் நடவடிக்கைகளைக் குறிக்கின்றன, மாறாக எதையாவது சுத்தமாக வைத்திருக்கும் நடவடிக்கைகளை அல்ல. முகக்கவசம் அணிவது எதையும் சுத்தம் செய்யாது. அதிகபட்சமாக, இது வைரஸ் துகள்களை தடுத்து வைக்கும் அவ்வளவுதான். மாறாக இது முகக்கவசம் அணிந்த நபரையும் ‘சுத்திகரிப்பதில்லை’ அல்லது போக்குவரத்தையும் ‘சுத்திகரிப்பதில்லை’.”

இந்த வாதம் முற்றிலும் முட்டாள்தனமானது. இது, ஒரு காரில் உள்ள எண்ணெய் வடிகட்டி எண்ணெயைச் சுத்தப்படுத்தாது, தண்ணீர் வடிகட்டி தண்ணீரைச் சுத்தம் செய்யாது, அல்லது ஒரு உலை வடிகட்டி காற்றைச் சுத்தப்படுத்தாது என்று சொல்வது போன்றதாகும். பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்கும் ஒரு இரயில் காரில் உள்ள காற்றில், முகக்கவசம் அணியாத பயணிகளைக் கொண்ட இரயில் காரைக் காட்டிலும் குறைவான ஆபத்தை வெளிப்படுத்தும் வைரஸ்கள் உள்ளன என்பது வெளிப்படையானது. எனவே இது மிகவும் சுகாதாரமானது என்பது, முகக்கவசம் அணிதலை ஒரு தெளிவான சுகாதார நடவடிக்கையாக மாற்றுகிறது.

எந்தவொரு கடுமையான சட்டச் சவாலையாவது எதிர்கொண்டால் இந்த தீர்ப்பு உடனடியாக இரத்து செய்யப்படும். பைடென் நிர்வாகம் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை என்றால், அது அவசர மேல்முறையீடு செய்து, அதை இரத்து செய்வதற்கான முடிவு வரும் வரை உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்துமாறு கோரும்.

உத்தரவு அமலுக்கு வருவதைத் தடுத்து, சில மணி நேரங்களிலேயே தடையுத்தரவைப் பெற்றிருக்கலாம். அதற்கு பதிலாக, TSA உடனடியாக, “இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதால், பொதுப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து மையங்களில் முகக்கவச பயன்பாட்டிற்கான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அவசரத் திருத்தத்தை (Security Directives and Emergency Amendment) TSA இனி செயல்படுத்தாது” என்று அறிவித்தது.

செவ்வாயன்று, முகக்கவச கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்ப்பு கிடைத்து 24 மணிநேரத்திற்குப் பின்னர், வெள்ளை மாளிகை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம், ஆனால் “முகக்கவச கட்டுப்பாட்டிற்கான உத்தரவு தொடர்ந்து அவசியம் என்று CDC முடிவு செய்தால் மட்டுமே” அது நடக்கும் என்று அறிவித்தது.

மக்கள் விமானங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமா என்று கேட்டதற்கு, பைடென் தனிநபர்களை அதற்கு ஊக்குவிக்கவில்லை, மாறாக முகக்கவசம் அணிவது ‘அவர்களைப் பொறுத்தது’ என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ப்ளூம்பேர்க் கட்டுரையாளர் மேத்யூ ய்க்லேசியாஸ் (Matthew Yglesias), இந்த விஷயத்தைப் பற்றி அப்பட்டமாக, “முகக்கவச பயன்பாட்டை நீக்குவது ஜனநாயகவாதிகளுக்கான ஒரு பரிசு” என்ற தலைப்பில் குறிப்பிட்டார். அவர், “எனவே, நிச்சயமாக பைடென், பெலோசி அல்லது அவர்களது கட்சியின் ஒரு ரசிகன் அல்லாத, ட்ரம்பால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதி, திட்டநிரலில் இருந்து ஒரு மோசமான தலைப்பைப் பெறுவதில் வெற்றி பெற்றிருக்கலாம். அதற்காக, ஜனநாயகக் கட்சியினர் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்” என்று எழுதினார்.

போக்குவரத்திற்கான முகக்கவச ஆணைகளை முறியடிப்பதற்கு அமெரிக்க தன்னலக்குழுவின் இரு கட்சிகளின் தரப்பிலும் ஆதரவு இருப்பதாக ய்க்லேசியாஸ் குறிப்பிட்டார். மேலும், “அமெரிக்க செனட் கடந்த மாதம் இந்த ஆணையை முறியடிப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தியது, அது 57-40 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அதாவது பல ஜனநாயகக் கட்சியினர் ஏகமனதாக குடியரசுக் கட்சி அரசியல் கூட்டத்தில் சேர அவர்களின் தகுதியை உடைத்தது,” என்று அவர் எழுதினார். “அது வாக்கெடுப்புக்காக சபை அரங்கிற்கு வந்தால், அது அங்கே நிறைவேற்றப்பட்டது போல் தான்.”

இந்த ஆண்டின் தொடக்கத்தில், எஞ்சிய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் அகற்றுவதற்கு, கோவிட்-19 இன் ஓமிக்ரோன் மாறுபாட்டின் எழுச்சியை பைடென் நிர்வாகம் காரணமாக பற்றிக்கொண்டது, அதாவது ‘அனைவரும்’ கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கோவிட் பரவலைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டாம் என்று அது வாதிடுகின்றது.

பைடென் நிர்வாகத்தின் மூலோபாயத்தை, “இவ்வளவு காலம், ஓமிக்ரோன்: வெள்ளை மாளிகை தொற்றுநோயின் அடுத்த கட்டத்தைப் பார்க்கிறது” என்ற தலைப்பில் பெப்ரவரியில் பொலிட்டிகோ இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை விவரித்துள்ளது.

“அமெரிக்கர்களை கோவிட்-19 உடன் வாழ நிர்ப்பந்திப்பதை” நோக்கமாகக் கொண்டு “பைடென் நிர்வாகம் தொற்றுநோயின் ஒரு புதிய கட்டத்திற்கு திட்டமிடுகிறது” என்று பொலிட்டிகோ தெரிவித்துள்ளது. அதாவது நிர்வாகம், “தொடர்ந்து வைரஸ் பரவலாக இருக்கும் ஒரு சூழலில் மக்கள் வசதியாக வாழ பழகுவதற்கு ஏற்ற நனவான செய்திகளை பரப்புவதற்கு” திட்டமிடுகிறது.

பொது உணர்வை ‘நிபந்தனைக்குட்படுத்தவும்’ மற்றும் தொற்றுநோயைப் பற்றி பொதுமக்களை ‘வேறுவிதமாக உணரவைக்கவும்’, தொற்றுநோய் பற்றிய தகவல்கள் “ஒவ்வொரு நாளும் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதே சிறந்த அரசியல் உத்தி,” என பைடென் நிர்வாகம் தீரிமானித்துள்ளதாக பொலிட்டிகோ குறிப்பிட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக, பைடென் நிர்வாகம் தினசரி கோவிட்-19 அறிக்கையிடலை முறையாக நிறுத்தியது. பெப்ரவரியில், மருத்துவமனையில் நிகழும் கோவிட்-19 இறப்புக்கள் பற்றி அவர்கள் அறிக்கை செய்வதை அது நிறுத்தியது, மேலும் தினசரி அறிக்கை செய்வதை நிறுத்துவதற்கு அவர்களை ஊக்குவிக்க மாநிலங்களுடன் இணைந்து அது செயலாற்றியது. இப்போது ஏழு மாநிலங்கள் மட்டுமே தினசரி கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பற்றி அறிக்கை செய்கின்றன.

இதன் விளைவாக, அமெரிக்காவில் கோவிட்-19 நோய்தொற்றைக் கண்காணிக்க தீவிரமான வழி எதுவும் இல்லை.

செவ்வாய்க்கிழமை, பொலிட்டிகோ ஒரு தனி கட்டுரையில் குறிப்பிட்டது போல்,

நடவடிக்கைகள் தொடர்பாக பணிபுரியும் சில வல்லுநர்கள், பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்டதை விட குறைத்துக் காட்டப்படும் எண்ணிக்கை மிகக் கடுமையானது என்று நம்புகின்றனர், அதாவது ஆறு புதிய நோய்தொற்றுகளுக்கு ஒன்று வீதம் மட்டுமே அரசாங்கம் பதிவு செய்கிறது என்று ஒரு நிர்வாக அதிகாரி மதிப்பிட்டுள்ளார். இந்த தரவு இடைவெளியானது, நிலைமையின் தீவிரத்தன்மையை அரசாங்கம் எவ்வாறு துல்லியமாக பகிரங்கமாகச் செய்தியிட வேண்டும் என்பது பற்றி உள்நாட்டு கவலைகளை எழுப்பியுள்ளன. “அந்த அளவிற்கு, ‘இது கவலைப்பட வேண்டிய விஷயமா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது,’” என்று வெள்ளை மாளிகைக்கு நெருக்கமான ஒருவர் கூறினார். “ஆனால், நீங்கள் அதை பொதுமக்களிடம் சொல்ல முடியாது” என்றார்.

தொற்றுநோயின் ஆபத்துகள் பற்றி பொதுமக்களிடையே குழப்பம் இருக்குமானால், அதற்கு பைடென் நிர்வாகமும் அமெரிக்க ஊடகங்களும் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக பொதுமக்களை நம்ப வைக்கும் அவற்றின் முயற்சியில் தொற்றுநோய் தரவுகளைப் பற்றி முறையாக பொய்களைக் கூறி அவை மூடிமறைப்பது மட்டுமே காரணமாகும்.

தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவர போராடுவதில், பைடென் நிர்வாகம் அனைத்து வகையான பின்தங்கிய தன்மையையும் தீங்கு விளைவிக்கும் தனித்துவத்தையும் ஊக்குவித்துள்ளது. கடந்த ஆண்டு, முகக்கவசம் அணிவதை நிறுத்துவதன் மூலம் அமெரிக்கா “ஒரு கொடிய வைரஸிலிருந்து நாம் சுதந்திரமடைந்ததை அறிவிக்கிறது” என்று பைடென் அறிவித்தார், அதேவேளை, CDC இயக்குநர் ரோசெல் வாலென்ஸ்கி முகக்கவசம் அணிதல் “தொற்றுநோயின் ஒரு கருஞ்சிவப்பு அடையாளம்” என்று அழைத்தார்.

முகக்கவச ஆணையை அகற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் கோரமான கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் முறையாக வளர்த்தெடுக்கப்பட்ட பின்தங்கிய நிலையின் ஒரு வெளிப்பாடாகும்: அதாவது, அமெரிக்க தனித்துவம் அதன் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.

தொற்றுநோய்க்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் கொலைகார பதிலிறுப்புக்கு எதிராக, 2020 ஜனாதிபதித் தேர்தலில் மில்லியன் கணக்கான மக்கள் பைடெனுக்கு வாக்களித்தனர், காரணம், ‘விஞ்ஞானத்தைப் பின்பற்றுவோம்’ மற்றும் ‘தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவோம்’ என்று தேர்தல் வாக்குறுதிகளை அவர் வாரி வழங்கியதுதான். ஆனால், அதற்கு முற்றிலும் முரணாக, ட்ரம்பின் திட்டத்தை செயல்படுத்துவதில் ட்ரம்பை விட மிகவும் தீவிரமானவராக அவர் இருக்கிறார்.

இந்த அடிப்படை உண்மை உலக சோசலிச வலைத் தளத்தால் (WSWS) செய்யப்பட்ட மதிப்பீட்டை உறுதிப்படுத்துகிறது, அதாவது கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கும், இறுதியாக அதனை அடியோடு அழிப்பதற்கும் “தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த சர்வதேச மற்றும் ஐக்கியப்பட்ட ஒரு பாரிய இயக்கத்தின் வளர்ச்சி தேவைப்படுகிறது. இலாப நோக்கத்தால் இயக்கப்படாத மற்றும் தனிப்பட்ட செல்வக் குவிப்புக்கான வெறித்தனமான நாட்டத்திற்கு அடிமையாகாத ஒரு பாரிய இயக்கம் மட்டுமே கொள்கை மாற்றத்தை கட்டாயப்படுத்த தேவையான சமூக சக்தியை உருவாக்க முடியும்.”

உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் பரந்த மக்கள்தொகையின் நலன்களுக்காக இருந்தாலும், அவை முதலாளித்துவ நிதிய தன்னலக்குழு மற்றும் அது ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தின் நலன்களுடன் அடிப்படையில் முரண்படுகின்றன.

மே 1 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), சர்வதேச மே தின இணையவழி பேரணியை நடத்துகிறது, இது கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் போரினால் ஏற்படும் பாரிய மரணங்கள், மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு சோசலிச மூலோபாயத்திற்காக போராடும்.

Loading