உள்துறை செயலர் பட்டேலின் முடிவின்படி, ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலியன் அசான்ஜூக்கு முதன்முறையாக முறையான நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை அமெரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டுமா என்பது பற்றி இறுதி கையெழுத்திட இந்த வழக்கு இப்போது பிரிட்டிஷ் உள்துறை செயலர் பிரிதி பட்டேலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

டிசம்பர் 20, 2019, வெள்ளிக்கிழமை, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் இலண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்குச் செல்லும் சிறை வேனில் உள்ளார். (Credit: AP Photo/Frank Augstein)

ஒரு ஊடகவியலாளராக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியதற்காக உளவு சட்டத்தின் கீழ் அசான்ஜ் மீது ஆயுள் தண்டனைக்கு சாத்தியமுள்ள குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஒரு குறுகிய விசாரணை நடந்தது, அப்போது தலைமை நீதிபதி போல் கோல்ட்ஸ்பிரிங், “உங்களை நாடு கடத்த வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்க உங்கள் வழக்கை உள்துறை செயலருக்கு அனுப்ப நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று விளக்கினார்.

கோல்ட்ஸ்பிரிங் இந்த முடிவை எடுக்க அவருக்கு உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது, இது அசான்ஜ் நாடு கடத்தப்படக்கூடாது என்ற அசல் தீர்ப்புக்கு எதிரான அமெரிக்க மேல்முறையீட்டை கடந்த டிசம்பரில் ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. அசான்ஜின் மனநலம் மற்றும் அவர் தற்கொலை செய்யக்கூடிய அபாயத்தைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்வது அடக்குமுறையாக இருக்கும் என்று கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட அடிப்படையில் தான் அசல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அசான்ஜின் வழக்குரைஞர்கள் பயனற்றவை என அம்பலப்படுத்தியதான அசான்ஜ் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா வழங்கிய உறுதிமொழிகளை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்து, அந்த அபாயத்தை நீக்கி, அதன் முடிவைத் திரும்பப்பெறுமாறு கீழ்நிலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

அசான்ஜின் சட்டக் குழு இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்ய முயன்றது, ஆனால் அது நிராகரிக்கப்பட்டது, அவர்கள் “பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்ட புள்ளியை” எழுப்பியுள்ளதாக உயர் நீதிமன்றம் சான்றளித்த போதிலும் இது நடந்தது.

இந்த செயல்முறையை நிர்வகிக்கும் ஒப்படைப்புச் சட்டத்தின் (2003) படி, பட்டேல் தனது முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக அசான்ஜ் தனது பரிந்துரைப்புக்களை பட்டேலுக்கு அனுப்ப அவருக்கு இப்போது நான்கு வார கால (மே 18 வரை) அவகாசம் உள்ளது, இந்த இடைப்பட்ட நேரத்தில் தற்போது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இலண்டனின் உச்சபட்ச பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறையில் அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்படுவார்.

அந்த முடிவு முன்னரே எடுக்கப்பட்ட முடிவாகும். ஒரு கும்பல் நடத்தை மற்றும் உண்மையான துன்பியல் திருப்தியுடன் அரசாங்கத்தின் எதேச்சதிகார திட்டநிரலை செயல்படுத்தும் பட்டேல், அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதில் வேறெதையும் விட மிகுந்த மகிழ்ச்சி அடைவார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களை மேம்படுத்துவதற்காக வாஷிங்டனுடனான ஒரு அடிமைத்தனமான உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அவரது வெளியுறவுக் கொள்கையால் பிரெக்ஸிட் அமைச்சரவையில் ஒரு முன்னணி நபராக உள்ளார். ஏப்ரல் 2019 இல், அப்போதைய வெளியுறவுத்துறை செயலராக இருந்த அவரது தலைவரான பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன், அசான்ஜ் தஞ்சம் புகுந்திருந்த இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து அவரை சட்டவிரோதமாகக் கைப்பற்றியதற்காக பொலிசாரை பெரிதும் வாழ்த்தினார்.

ஏப்ரல் 20, 2022, புதன்கிழமை, இலண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் ஆதரவாளர்கள் கைகளில் விளம்பரத் தட்டிகளை ஏந்தி நிற்கின்றனர். (AP Photo/Alastair Grant)

அசான்ஜின் சட்டக் குழு நாடுகடத்தலுக்கு எதிராக ஒரு விரிவான மேல்முறையீட்டைத் தயாரித்து வரும் நிலையில், கோல்ட்ஸ்பிரிங் நேற்று, “உள்துறை செயலர், சட்டப்படி அவரது முடிவை எடுக்கும் வரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்பட மாட்டாது” என்பதை உறுதிப்படுத்தினார். உலக சோசலிச வலைத் தளம் ஒரு முன்னைய கட்டுரையில் அதன் முக்கிய புள்ளிகளை சுருக்கமாகக் கூறியது:

“அசான்ஜை நாடுகடத்துவது பிரிட்டிஷ்-அமெரிக்க நாடு கடத்தல் ஒப்பந்தத்தால் தடைசெய்யப்பட்டது; அது ஒரு உரிய செயல்முறை மீதான துஷ்பிரயோகமாகும்; மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சட்டத்தின் (European Convention on Human Rights) பிரிவு 3 (மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான வகையில் கைதிகளை நடத்துவது), பிரிவு 5 (நியாயமற்ற தடுப்பு), பிரிவு 6 (நியாயமான விசாரணை மறுப்பு), பிரிவு 7 (பின்னோக்கிய நீதி) மற்றும் பிரிவு 10 (கருத்துச் சுதந்திரம்) ஆகியவற்றை மீறுவதாகும்; உண்மைகளின் தவறான விளக்கத்தின் அடிப்படையிலானது; மற்றும் மறைமுக அரசியல் நோக்கங்களுக்காக வழக்கு தொடரப்படுகிறது என்றாலும் கூட, அரசியல் குற்றத்திற்காக அசான்ஜை நாடுகடத்துவதற்கு சட்டவிரோதமாக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று அவர்கள் வாதிடுகின்றனர்.”

இந்த மேல்முறையீட்டை விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒப்புக் கொள்ளும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, மேலும் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ஏற்படுத்திய ஆபத்து மிகுந்த கவலையளிக்கிறது. எனவே இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அசான்ஜ் அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணிக்கக்கூடும்.

கடந்த மாதம் பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜை மணந்து கொண்ட அவரது மனைவி ஸ்டெலா மோரிஸ், நீதிமன்றத்திற்கு வெளியே பேசுகையில், “இன்றைய நடவடிக்கை ஒரு சம்பிரதாயமானது, ஆனால் என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு இன்னும் வயிறு வலித்தது. ஜூலியனை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கான உத்தரவில் ஒரு நீதிபதி கையெழுத்திடுகிறார். ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பொறுப்பு இங்கிலாந்துக்கு இல்லை. உண்மையில், இந்த ஒப்படைப்பை நிறுத்துவது அதன் சர்வதேச கடமைகளால் அவசியமாகிறது” என்று குறிப்பிட்டார்.

விக்கிலீக்ஸின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்ஸன் (Kristinn Hrafnsson), “16 மாதங்களுக்கு முன்பு, இந்த நீதிமன்றம் அசான்ஜை நாடுகடத்துவது அவரது உயிருக்கு ஆபத்தாக இருக்கும் என்றும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக இருக்கும் என்று முடிவு செய்தது. இப்போது அந்த மரண தண்டனையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று கூறினார்.

அசான்ஜின் உயிர் வாழ்வுக்கு விடுக்கப்படும் தெளிவான மற்றும் தற்போதைய அச்சுறுத்தல், அவரது பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சாரத்திற்கு தீவிரமாக பரிசீலிப்பதற்கான மிகுந்த அவசரத்தை உருவாக்குகிறது.

நீதிமன்றத்திற்கு வெளியே தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் ஜேர்மி கோர்பின் இருந்தார். அவர் கூட்டத்தின் முன் பட்டேல் “தனது அலுவலகத்தின் முக்கியத்துவத்தை, அவர் எடுக்க வேண்டிய முடிவின் முக்கியத்துவத்தை, அதாவது, அரசியல்வாதிகள் மற்றும் முடிவு எடுப்பவர்களிடம் வலுவான கேள்விகளை எழுப்பி, பத்திரிகையாளர்கள் திறமையாக வேலை செய்வதை விட எது ஜனநாயகமாக இருக்க முடியும்? மேலும், ஜனநாயகம் என்பது பேசும் உரிமை, அறியும் உரிமை, ஒன்றுகூடும் உரிமை, செயற்பாட்டாளராக இருப்பதற்கான உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? என்பதை பிரதிபலிப்பார்” என்று தான் நம்புவதாகக் கூறினார்.

அத்தகைய முறையீட்டிற்கு செவிசாய்க்கப்பட மாட்டாது. ஜனநாயக உரிமைகள் குறித்த பட்டேலின் கருத்துக்கள் இரகசியமானவை அல்ல; அதாவது, அவரது அதிகாரத்தின் கீழ் இப்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கொடூரமான பிற்போக்குத்தனமான தேசியம் மற்றும் எல்லைகள் மசோதா, மற்றும் காவல்துறை, குற்றம், தண்டனை மற்றும் நீதிமன்றங்கள் மசோதா ஆகியவற்றின் மூலம் அனைவருக்கும் தெரிந்ததே. புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்தை அவர் இப்போது மேற்பார்வையிட்டு வருகிறார்.

அசான்ஜின் ஆதரவாளர்கள் கோர்பினின் நிதானமான போதனைகளை நிராகரிக்க வேண்டும், மற்றும் இந்த பதினொன்றாவது மணி நேரத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும், அது மட்டுமே அவரை சிறைப்பிடித்தவர்களை அவரை விடுவிக்க கட்டாயப்படுத்த முடியும்.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு மேல்முறையீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டால், அல்லது அவரது வழக்கு அமெரிக்காவை சென்றடைந்தால், அமெரிக்க அரசாங்கத்தின் அடிப்படையற்ற மற்றும் பிற்போக்குத்தனமான குற்றச்சாட்டுக்களின் சாராம்சம் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்படும், அதாவது இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தின், அல்லது அமெரிக்காவில் உள்ள பெரும் நடுவர் மன்றத்தின் முன்னிலையில் அம்பலப்படுத்தப்படும்.

அசான்ஜின் சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது டோரி அரசாங்கம் மற்றும் பைடென் நிர்வாகத்திற்கு எதிராக மட்டுமல்ல, அவரை தனிமைப்படுத்துவதற்கு தீவிரமாக பாடுபட்ட அனைவருக்கும் எதிராக அரசியல் ரீதியாக சவால் விடுவதாகும். இங்கிலாந்தில் இது, தொழிற்கட்சி, தொழிற்சங்கங்கள், மற்றும் போலி-இடதுகள், அடையாள அரசியல் மற்றும் தாராளவாத அமைப்புகளின் பரந்த சூழல், மற்றும் அவருக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தில் இணைந்த கார்டியன் போன்ற வெளியீடுகளையும் உள்ளடக்கியதாகும். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்குற்றங்களுக்கு எதிராக அவர் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்காக அசான்ஜை ஒரு கதாநாயகனாகப் பார்க்கும் சர்வதேச அளவிலான மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த வழக்குக்கு புத்துயிரூட்டப்பட வேண்டும்.

பில்லியன் கணக்கான மக்களை கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் பட்டியினியிலும் மூழ்கடித்து, அணு ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் ஒரு மூன்றாம் உலகப் போருக்கு அச்சுறுத்துவதாக, நேட்டோ சக்திகள் உக்ரேனில் ரஷ்யா உடனான நடைமுறைப் போரை தீவிரப்படுத்தி வரும் சூழ்நிலையில், போருக்கான அசான்ஜின் எதிர்ப்பு மற்றும் உண்மைக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அரசு ஒத்துழைப்பிலிருந்து சுயாதீனமான இதழியல் ஆகியவை முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் அவசியமானவை. தணிக்கை மற்றும் போர் உந்துதலுக்கு சேவை செய்யும் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டத்தில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் பாதுகாப்பு ஒரு முக்கிய முன்னணி விஷயமாகும்.

இந்நிலையில், உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சிகளும், சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பிரச்சாரத்தை கட்டமைப்பதற்கான தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க உறுதியளிக்கின்றன.

Loading