மூன்றாம் உலகப் போருக்கான ஜேர்மனியின் தயாரிப்புகள் முழுவீச்சில் உள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் மூன்றாம் உலகப் போருக்குத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. முதல் உலகப் போரைப் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கையில், பெரும் வல்லரசுகள் போருக்குள் 'தயங்கி தயங்கி ஈடுபட்டதாக' கூறப்பட்டது, ஆனால் இப்போது அவை கண்கூடாகவே அந்த பேரழிவை நோக்கி போட்டிப்போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன.

உக்ரேன் போரானது ஜனநாயகம் மற்றும் தேசிய சுதந்திரத்தைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்டது என்ற வாதம் நாளுக்கு நாள் மிகவும் வெளிவேஷமாக நிரூபணமாகி வருகிறது. யதார்த்தத்தில், அது ரஷ்யாவின் பரந்த நிலப்பரப்பு மற்றும் வளமான கனிம வளங்களின் மீது கட்டுப்பாட்டை எடுப்பது மற்றும் பிரதான ஏகாதிபத்திய சக்திகளிடையே உலகை மறுபகிர்வு செய்வது சம்பந்தப்பட்டதாகும். உக்ரேன் போரானது பால்கன், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க போர்களின் பட்டியலில் சேர்கிறது, அவற்றின் மூலமாக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அவற்றின் உலக மேலாதிக்கத்தைப் பாதுகாக்க முயற்சித்துள்ளன.

Chancellor Olaf Scholz visiting Japanese head of government Fumio Kishida (Photo: Bundesregierung/Bergmann)

நேட்டோ அவர் நாட்டைச் சுற்றி வளைத்ததற்கு விடையிறுப்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனை இராணுவ ரீதியில் தாக்குவதற்கு எடுத்த பிற்போக்குத்தனமான மற்றும் குறுகிய நோக்குடைய முடிவு, ஒரு மிகப் பெரிய தீவிரப்பாட்டுக்கான வரவேற்கத்தக்க சாக்குபோக்கை நேட்டோவுக்கு வழங்கியது — மேலும் அது அதைத் தான் விரும்பியது.

அமெரிக்கா உக்ரேனுக்குள் ஆயுதங்களைப் பாய்ச்சி வருவதுடன், ரஷ்யாவின் 'முதுகெலும்பை முறித்து' அதை தோற்கடிக்கும் வரை விடப் போவதில்லை என்று வாக்குறுதி அளித்து வருகிறது. ஜேர்மனியோ கட்டுப்பாடின்றி மீள்ஆயுதமயப்படுத்துவதன் வழியில் முன்னர் இருந்த எல்லா தடைகளையும் நீக்க இந்த போரைப் பயன்படுத்தி வருகிறது.

ஒரு நாள் 'எச்சரிக்கைக் கோடாக' கருதப்பட்டது அடுத்த நாளே மீறப்படுகிறது. முதலாவதாக, ஜேர்மன் அரசாங்கம், முன் ஆலோசனை எதுவுமின்றி, ஆயுத வரவு செலவுத் திட்டத்தில் ஒரேயடியாக 100 பில்லியன் யூரோக்களை உயர்த்தியதுடன், போர் மண்டலங்களுக்கு ஆயுதங்கள் அனுப்புவதில்லை என்ற கோட்பாட்டையும் கைவிட்டுவிட்டது. உக்ரேனுக்கு முதலில் இலகு ரக ஆயுதங்களும் பின்னர் கனரக ஆயுதங்களும் வழங்கப்பட்டன. இதற்கிடையே, ஜேர்மன் நாடாளுமன்றத்தின் (Bundestag) விஞ்ஞானச் சேவையின் ஒரு வல்லுனர் கருத்துப்படி உக்ரேனிய சிப்பாய்களுக்கும் ஜேர்மன் மண்ணில் பயிற்சி வழங்குவது சர்வதேச சட்டத்தின் கீழ் போரில் பங்கெடுப்பதாகும் என்ற போதும், அது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்றாம் உலகப் போருக்கான ஜேர்மன் அரசாங்கத்தின் தயாரிப்புகள் ஆயுதப் படைகளை ஆயுதமயப்படுத்துவது மற்றும் உக்ரேனுக்கு இராணுவ உதவிகள் வழங்குவதோடு மட்டும் மட்டுப்பட்டு இல்லை. பொருளாதார, வெளிநாட்டு மற்றும் காலநிலை மாற்ற கொள்கையும் கூட போர் கொள்கையின் சேவையில் வைக்கப்படுகின்றன.

நிதி நாளிதழான Handelsblatt இன் முன்னாள் தலைமை ஆசிரியர் Gabor Steingart செவ்வாய்கிழமை அவரின் 'Pioneer Briefing' இல் இது குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார். ஓர் உலகப் போரை 'சமாளிப்பதற்கு' என்ன தேவை என்ற கேள்வியை அவர் சிறிதும் தயக்கமின்றி விவாதிக்கிறார்:

'மூன்றாம் உலகப் போரை நடத்துவது வெறும் ஓர் இராணுவப் பிரச்சினை அல்ல' என்றவர் பிரகடனம் செய்கிறார். இது “முதலும் முக்கியமுமாக ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகும். அதிகாரம் மற்றும் இராணுவ அணிகளில் இருந்து பொருளாதாரத்தைப் பிரித்து வைக்காமல், நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடிய திறனுள்ள போர் சாத்தியமில்லை, ஏனென்றால் ரஷ்ய இயற்கை எரிவாயுவை ஜேர்மன் சார்ந்திருப்பதில் ஏற்கனவே இதை நாம் பார்த்திருக்கிறோம்,” என்றார்.

'உலகப் போரை யார் சமாளிக்க விரும்பினாலும் அவர் முதலில் உலக வர்த்தகத்தைக் குலைத்து விட வேண்டும்' என்று ஸ்டீங்கார்ட் வலியுறுத்துகிறார். “ஜேர்மன் இராணுவத்திற்குப் பில்லியன்களை விட பொருளாதார சுதந்திரமே முக்கியமானது. ஆகவே, ஒரு தாக்குதல் சூத்திரத்தில் சிப்பாய்களும் அவர்களின் இராணுவத் தளவாடங்களையும் மட்டும் திரட்டினால் போதாது, மாறாக பொருளாதார ஆதாரவளங்களும் திரட்டப்பட வேண்டும்.”

பின்னர் அவர், 'இந்த பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால்,” 'மூன்றாம் உலகப் போரை சமாளிப்பதற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் உள்ளன' என்றார்.

துரதிர்ஷ்டவசமாக, ஸ்டீங்கார்ட் அதைக் குறித்து சரியாகவே கூறுகிறார். மூன்றாம் உலகப் போர் என்பது மனிதகுலத்தின் முடிவைக் குறிக்கும் என்றாலும், அதற்காக ஜேர்மன் அரசாங்கம் இராணுவத் தயாரிப்புகளுடன் சேர்ந்து, பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் தயாரிப்புகளையும் மும்முரமாக செய்து வருகிறது. சமீபத்திய வாரங்களில், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான போருக்காக வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மறுசீரமைக்கும் ஒரு போக்கை அது ஏற்படுத்தி உள்ளது.

உதாரணமாக, சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் பதவியேற்ற பின்னர் கிழக்கு ஆசியாவிற்கான அவரின் முதல் பயணத்தில், ஜப்பானுக்கு ஓர் ஆர்ப்பரிப்பாக விஜயம் மேற்கொண்டார். அவருக்கு முன்பிருந்த அங்கேலா மேர்க்கெல் போலல்லாமல், ஷோல்ஸ் பெய்ஜிங்கிற்குச் செல்லவில்லை, மேர்க்கெல் அவரின் 16 ஆண்டு கால பதவி காலத்தில் சீனாவுக்குப் பன்னிரெண்டு முறையும் ஜப்பானுக்கு வெறும் ஐந்து முறை மட்டுமே சென்றிருந்தார். 246 பில்லியன் யூரோ மதிப்பில், சீனாவுடனான ஜேர்மனியின் வர்த்தக அளவு ஜப்பானை விட ஆறு மடங்கு அதிகமாகும். சீனாவில் ஜேர்மனியின் நேரடி முதலீட்டு மதிப்பு, 96 பில்லியன் யூரோக்கள், ஜப்பானின் 16 பில்லியன் யூரோக்களை விட பல மடங்கு அதிகம்.

ஆனால் ஒரு பெரிய வணிகக் குழுவுடன் டோக்கியோவுக்குச் சென்ற ஷோல்ஸ், ஜப்பானுடன் நெருக்கமாக ஒத்துழைக்க ஜேர்மனி மீண்டும் பொறுப்பேற்றிருப்பதை எடுத்துக்காட்ட விரும்பினார். மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்பத் துறையிலும், ஒரு மாற்று எரிபொருள் ஆதாரமாக திரவ ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் வினியோகத்திலும் நெருக்கமாக ஒத்துழைக்க அவர் ஒப்புக் கொண்டார். ஜப்பானுடன் வழமையாக அரசு கலந்துரையாடல்களை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது, முன்னர் இது சீனாவுடன் மட்டும் நடத்தப்பட்டு வந்தது.

ரஷ்யா மற்றும் சீனாவுடன் அதிகரித்து வரும் மோதல்கள் குறித்த பேச்சுக்கள், ஷோல்ஸ் மற்றும் ஜப்பானிய அரசு தலைவர் ஃபுமியோ கிஷிடாவின் பேச்சுக்களில் முக்கிய பாத்திம் வகித்தன. ஜேர்மனியும் ஜப்பானும் இராணுவரீதியாக இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்க விரும்புகின்றன. கடந்தாண்டு ஜேர்மன் சிறிய ரக போர்க்கப்பலான பேயர்ன் ஜப்பானிய படைகளுடன் பயிற்சிகள் மேற்கொண்டிருந்த நிலையில், இந்த இலையுதிர்காலத்தில் ஆறு ஜேர்மன் போர்விமானங்கள் ஆஸ்திரேலியாவில் இராணுவ ஒத்திகைகளில் பங்கேற்க உள்ளன, இங்கிருந்து இவை ஜப்பானுக்கும் பறக்க உள்ளன.

ஜப்பானை நோக்கி அவர் நோக்குநிலை கொண்டிருக்கும் நிலையில், ஷோல்ஸ் மோசமான வரலாற்று மரபுகளைப் பின்பற்றுகிறார். இரண்டாம் உலகப் போரில், இத்தாலியுடன் சேர்ந்து, ஜப்பானும் நாஜி ஜேர்மனியுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது, அது அச்சு நாடுகள் (Axis powers) என்றழைக்கப்பட்டதில் ஒன்றாக இருந்தது. சோவியத் ஒன்றியத்தில் ஜேர்மனி ஒரு நிர்மூலமாக்கல் போரை நடத்திய போது, ஜப்பான் சீனாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் பயங்கரமான போர்க்குற்றங்களில் ஈடுபட்டது, அவற்றில் சிலவற்றுக்காக அது இன்றும் பொறுப்பேற்க மறுக்கிறது.

சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பசுமைக் கட்சியின் வெளியுறவுத்துறை மந்திரி அனலீனா பெயபொக் ஆகியோர் ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச போர் முன்னணியை வலுப்படுத்துவதில் அக்கறை காட்டுகின்ற அதேவேளையில், பசுமைக் கட்சியின் பொருளாதாரத்துறை அமைச்சர் Robert Habeck 1970 களின் ஆரம்ப காலங்களில் இருந்து வில்லி பிராண்டின் Ostpolitik காலத்திலிருந்து, அப்போதிருந்து இருந்து வரும் ரஷ்ய எரிபொருள் வினியோகங்களில் இருந்து ஐரோப்பாவை துண்டிக்கும் பணியை ஏற்றுள்ளார்.

ஏற்கனவே ஏப்ரலில் ரஷ்ய நிலக்கரி மீது இறக்குமதி தடை விதித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த வாரம் எண்ணெய் தடையாணையை முடிவு செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது, இதற்காக ஹாபெக்கிற்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும். ஜேர்மனியின் எண்ணெய் நுகர்வில் ரஷ்ய எண்ணெயின் பங்கு 36 இல் இருந்து 12 சதவீதமாகக் குறைந்துள்ளதால், ஜேர்மன் அரசாங்கம் அந்த தடைக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஹங்கேரி மற்றும் கிரீஸ் போன்ற ரஷ்ய எண்ணெய்யை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளுக்கு ஓர் இடைக்கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.

2021 இல், ஐரோப்பிய ஒன்றியம் அப்போதும் ஒரு நாளைக்கு 3.4 மில்லியன் பீப்பாய் எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களை, அதாவது அதன் தேவைகளில் கால் பங்கை, ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்து வந்தது. இவை எவ்வாறு பிரதியீடு செய்யப்படும் என்பது தெளிவாக இல்லை. இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான வெனிசுவேலா மற்றும் ஈரான் மீதும் பொருளாதாரத் தடைகள் உள்ளன. ரஷ்யா அங்கம் வகிக்கும் OPEC அமைப்பு, இதற்கேற்ற அளவு உற்பத்தியை அதிகரிக்க இதுவரை மறுத்துள்ளது.

பொருளாதாரத் தடை நிச்சயம் எரிபொருள் விலைகளை இன்னும் கூடுதலாக அதிகரிக்க வழிவகுக்கும், இவை ஏற்கனவே அதிகபட்சமாக உள்ளன என்பதோடு, பணவீக்கத்தின் முக்கிய உந்துசக்திகளில் ஒன்றாக உள்ளன. ஆகவே, இவை எல்லாம் மக்கள் மீது சுமத்தப்பட உள்ளன. இதுபோன்றவொரு நடவடிக்கை ஜேர்மனியைக் காயப்படுத்தாமல் விடாது என்பதை ஹாபெக் கூட ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் பொருளாதாரத் தடையை அவர் முக்கியமானதாக கருதுகிறார் 'ஏனென்றால், நாம் கொடுக்கும் பணத்தில் புட்டின் ஆட்சி இருப்பதற்காக ஏதோவிதத்தில் நம்மைநாமே தார்மீக குற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறோம்,” என்றார்.

மூன்றாம் உலகப் போர் தயாரிப்புக்கான மற்றும் அதை 'சமாளிப்பதற்கான' இந்த பைத்தியக்காரத்தனமான கொள்கையை ஜேர்மன் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் எல்லா கட்சிகளும், இடது கட்சி உட்பட, இதுவரை ஆதரிக்கின்றன, இடது கட்சி இரண்டாந்தர பிரச்சினைகள் மீது மட்டுமே அதன் ஆட்சேபனைகளை வெளிப்படுத்துகிறது.

இப்போது அரசாங்கத்தில் இல்லாத கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் (CDU/CSU), எந்த தயக்கமும் காட்டவில்லை. நேற்று அவர்கள், 'புதிய காலக்கட்டத்திற்கான பாதுகாப்பு' என்ற தலைப்பில் கட்டுப்பாடற்ற இராணுவவாதத்தை அறிவுறுத்தும் 'கொலோன் பிரகடனத்தை' வெளியிட்டனர்.

ஜேர்மனி 'இந்த புதிய யதார்த்தத்தின் பின்னணியில் அதன் தேசிய நலன்களை அவசரமாக வரையறுக்க வேண்டும்' மற்றும் 'அவற்றை செயல்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு தேசிய வலிமையைக் காட்ட வேண்டும்' என்று அது கூறுகிறது. 'இந்த சவாலை எதிர்கொள்ள, விரிவான இராணுவத் தகைமைகள் தேவைப்படுகின்றன, இதற்காக பலர் தியாகங்களையும் சுமைகளையும் ஏற்க வேண்டியிருக்கும்,' என்றது.

வெளிப்புற அச்சுறுத்தல்கள் மட்டுமல்ல, 'இலக்கு வைத்து தவறான தகவல்களைப் பரப்பும் பிரச்சாரங்கள் மற்றும் அனைத்து வகையான தீவிரவாதம் போன்ற' உள்நாட்டு அச்சுறுத்தல்களையும் கவனத்தில் கொண்டுள்ள ஒரு 'புதிய பாதுகாப்பு மூலோபாயத்திற்குக்' கூடுதலாக, அந்த ஆவணம் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவை மையமாகக் கொண்ட 'புதிய உலகமயமாக்கல் மூலோபாயத்தை' பரிந்துரைப்பதுடன், 'பிற நாடுகளை [அதாவது ரஷ்யா மற்றும் சீனாவை] சார்ந்திருப்பதை மறுமதிப்பீடு செய்யவும்' அறிவுறுத்துகிறது.

'உலகமயமாக்கல் மூலோபாயம் மற்றும் பாதுகாப்பு மூலோபாயம் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும், ஜேர்மனி உலகில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை அது தெளிவுபடுத்துகிறது' என்று அது குறிப்பிடுகிறது. புரியும்படி கூறுவதானால்: ஜேர்மன் பெருவணிகத்தின் உலகளாவிய நலன்களும் இராணுவ வழிவகைகளைப் பயன்படுத்துவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும், ஜேர்மனி இதை உலகளவில் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்கிறது.

Loading