முன்னோக்கு

பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் தேர்ந்தெடுக்க்கப்பட்டமையும் ஜனநாயகத்தின் மரண ஓலமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, பெப்ரவரி 1986 இல், ஃபேர்டினண்ட் மற்றும் இமெல்டா மார்க்கோஸ் ஆகியோரின் மிருகத்தனமான ஆட்சியை வெளிப்படையாக நிராகரித்து, மணிலாவின் பிரதான பாதையான எட்சாவில் மில்லியன் கணக்கான பிலிப்பைன்ஸ் மக்கள் கூடினர். அபரிமிதமான துணிச்சலுடன், சர்வாதிகாரத்தின் டாங்கிகள் மற்றும் இராணுவ வலிமையின் முன்னே அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றனர். இது குறுகிய காலத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கொராசோன் அக்கினோவை (Corazon Aquino) ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்றும், பதினான்கு ஆண்டுகள் இராணுவ சர்வாதிகாரத்தில் நாட்டை ஆண்ட வெறுக்கத்தக்க மார்க்கோஸை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். இராணுவத்தின் ஒரு பகுதி ஜனாதிபதியிடமிருந்து அதன் ஆதரவை விலக்கிக் கொண்டதுடன், வாஷிங்டனும் அதன் ஆதரவை விலத்தியது. மார்க்கோஸ் நாட்டை விட்டு வெளியேறினார். இந்த எட்சா நிகழ்வு (Edsa event) மக்கள் சக்தி என்று அறியப்பட்டதுடன் மற்றும் மகத்தான பெருமைக்கு மூலாதாரமாக இருந்தது.

திங்கட்கிழமை, ஃபேர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 12 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவரது நெருங்கிய எதிரியைத் தோற்கடித்தார். பிலிப்பைன்ஸ் வரலாற்றில் இராணுவ சட்டத்தை ஒரு 'பொற்காலம்' என்று சித்தரித்து, தனது பெற்றோரின் சர்வாதிகாரப் பாரம்பரியத்தை மறுவாழ்வு செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தை அவர் நடத்தினார். அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய கம்யூனிச எதிர்ப்பு விழிப்புக்குழுக்களை உருவாக்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னாள் காவல்துறைத் தலைவர்களால் நடத்தப்படும் அரசியல் கட்சி உட்பட, வெளிப்படையாக பாசிச சக்திகள் அவரது மேலங்கியில் தொங்கிக்கொண்டுள்ளனர். டுரேற்ற இளைஞர் அமைப்பு (Duterte Youth), என்ற கருப்பு சீருடைகள், சிவப்புக் கைப்பட்டைகள் மற்றும் ஒரு பாசிச வீரவணக்கமுறையை கையாளும் வெளிப்படையாக ஹிட்லரின் இளைஞர் அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்று கூறப்படுபவர்களை வன்முறையுடன் ஒடுக்குவதில் உறுதியாக இருந்தனர்.

ஏப்ரல் 13, 2022 அன்று பிலிப்பைன்ஸின் கியூசான் நகரில் நடந்த பேரணியில் ஃபேர்டினாண்ட் 'பொங்பொங்' மார்க்கோஸ் ஜூனியர் (AP Photo/Aaron Favila)

தாராளவாத எதிர்க்கட்சி வேட்பாளரான லெனி ரோபிரேடோ (Leni Robredo) க்கு வாக்களித்த மில்லியன் கணக்கான பிலிப்பைன்ஸ் மக்கள் தேசிய அவமானத்துடனும் திகைப்புடனும் பெரும்பான்மையான தங்கள் நாட்டு மக்களால் மார்க்கோஸின் வெறுக்கப்பட்ட பாரம்பரியத்தை எப்படித் தளுவிக்கொள்ள முடிந்தது என்று இந்த தேர்தல் முடிவுகளைப் பார்த்தனர்?

முதலாளித்துவ ஆட்சியின் தற்போதைய உலகளாவிய நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்கம் நாட்டின் வரலாற்றில் ஒரு செறிவான வடிவத்தில் வெளிப்படுத்தப்பட்டதன் விளைவே இந்த தேர்தல் முடிவாகும்.

பிலிப்பைன்ஸின் கடந்த 150 ஆண்டுகால வரலாறு லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் தெளிவான ஆனால் சோகமான உறுதிப்படுத்தல் ஆகும். தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில், முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயகப் புரட்சியில் முற்போக்கான பாத்திரத்தை வகிக்க முடியாது என்று ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டினார். இந்தப் புரட்சியின் பணிகளில் காலனித்துவ ஆட்சியைத் தூக்கி எறிதல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் விவசாயப் பிரச்சனைக்கான தீர்வு ஆகியவை அடங்கும். வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான முதலாளித்துவ வர்க்கம், ஏகாதிபத்திய சந்தைகள் மற்றும் நிலப்பரப்புகளுடன் பிணைக்கப்பட்டு புரட்சியை திசைதிருப்பி தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் துரோகம் செய்யும். ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கு முதலாளிகளுக்கு எதிரான போராட்டம் தேவைப்பட்டது. அத்தகைய போராட்டத்தை நடத்துவதற்கு சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படும். எந்த ஒரு சோசலிசப் புரட்சியின் தலைவிதியும் அது சர்வதேச அளவில் பரவுவதிலே தங்கியிருக்கிறது.

ஆசியாவின் முதல் ஜனநாயகப் புரட்சி பிலிப்பைன்ஸில் நடத்தப்பட்டது, இது ஸ்பானிய காலனித்துவத்தைத் தூக்கியெறிந்து அதன் சொந்த அரசியலமைப்பு, பரந்த அளவிலான உரிமைகள் மற்றும் சுதந்திரப் பிரகடனம் உள்ளடங்கிய குறுகிய உயிர்வாழ்க்கையை கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் குடியரசை நிறுவியது. இந்த புரட்சியின் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில், முதலாளித்துவ வர்க்கம் குடியரசிற்கு எதிராக திரும்பி, அதன் தலைவர்களைக் கொன்றதுடன் மற்றும் போராட்டத்தை முதலில் ஸ்பானியர்களுக்கும் பின்னர் அமெரிக்கர்களுக்கும் காட்டிக்கொடுத்தது.

200,000 க்கும் அதிகமான பிலிப்பைன்ஸ் மக்களை கொன்ற கொடூரமான ஆக்கரமிப்புப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் வளர்ந்து வரும் பிலிப்பைன்ஸ் குடியரசு நசுக்கப்பட்டது. வெகுஜன வாக்குரிமை மற்றும் பொதுக் கல்வியை உள்ளடக்கிய பிலிப்பைன்ஸ் ஜனநாயகத்தின் உறுப்புகள் இரத்தக்களரியில் மூழ்கடிக்கப்பட்டன. பிலிப்பைன்ஸ் மக்கள் ஜனநாயகத்திற்கு தயாராக இல்லை என்றும், அமெரிக்காவின் 'சுயாதீனமான இணைந்துபோதல்' தேவை என்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறியது. பிலிப்பைன்ஸ் உயரடுக்கு அவர்களின் புதிய ஆட்சியாளர்களுடன் விரைவாக சமாதானம் செய்துகொண்டது. அதே நேரத்தில் பிலிப்பைன்ஸ் மக்கள் 1907 வரை நீடித்த போரில் தமது அனைத்து பலத்துடனும் போராடினர்.

புரட்சியும் அதன் பாதுகாப்பும் பிலிப்பைன்ஸ் மக்களிடையே ஜனநாயக பாரம்பரியத்தின் எல்லாவற்றிற்கும் மேலாக பேச்சு சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் சமத்துவத்தின் மீதான நம்பிக்கைக்கான ஆழமான வேர்களை விதைத்தது. எவ்வாறாயினும், இந்த பாரம்பரியத்தின் ஆவி ஒருபோதும் காகிதத்தில் பதிக்கப்படுவதைக்கூட அடையவில்லை. அமெரிக்கர்கள் இராணுவ சர்வாதிகாரத்தை சட்ட நெறிமுறையிலும் மற்றும் நீதிமன்ற விசாரணையில் இருந்து விலக்களித்த ஒரு அரசியலமைப்பை வரைந்து பிலிப்பைன்ஸ் உயரடுக்கில் இருந்த தங்கள் கூட்டாளிகளின் ஆட்சியை ஸ்திரப்படுத்தினர்.

பிந்தைய காலனித்துவ பிலிப்பைன்ஸ் அவற்றுக்கிடையே எந்தவிதமான உடலியல் மற்றும் வரலாற்று தொடர்பும் இல்லாத வெகுஜனங்களின் ஜனநாயக பாரம்பரியம் மற்றும் உயரடுக்கின் உத்தியோகபூர்வ பாராளுமன்ற அமைப்புகள் என்ற இரண்டு ஜனநாயகங்களின் நாடாக இருந்தது. 1950 களின் முற்பகுதியில் ஹக் விவசாயிகள் கிளர்ச்சியில் நிலச் சீர்திருத்தம் மற்றும் விவசாயப் பிரச்சினைக்கு தீர்வு கோரி இந்த பாரிய பாரம்பரியம் தன்னை வெளிப்படுத்தியது. இந்த உத்தியோகபூர்வமான அமைப்புக்கள் உயரடுக்கு ஆட்சியின் கருவியாக இருந்த்துடன், அவை இருக்கும் சொத்துக்களை பாதுகாப்பதில் குறியாக இருந்தன. வெகுஜன இயக்கத்தை நசுக்குவதன் மூலம் வாஷிங்டன் உத்தியோகபூர்வ அமைப்புக்களை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

பிலிப்பைன்ஸில் உத்தியோகபூர்வ ஜனநாயக அமைப்புகள் வெகுஜனங்களின் பெரும் போராட்டங்களில் இருந்து வெளிவரவில்லை, மாறாக அவற்றிற்கு எதிராக உருவானது. ஆசியாவில் 'ஜனநாயகம்' என்று அமெரிக்காவின் காட்சியறையில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள் செயற்கையானவை.

மத்திய லூசோனின் விவசாயிகள் கிளர்ச்சி செய்தபோது, ஆசியாவின் சிஐஏ இன் தலைவரான எட்வார்ட் லான்ஸ்டேல், கிளர்ச்சியை நசுக்குவதற்கு இராணுவம் மற்றும் உளவியல் ரீதியான போரை நடத்துவதை மேற்பார்வையிட்டார். அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட ரமோன் மகசேசேயை (Ramon Magsaysay) தேர்ந்தெடுத்து மற்றும் அவரது தேர்தலை திறம்பட ஒழுங்கமைத்தார். விவசாயிகள் எழுச்சியைத் தோற்கடிக்கும் இரத்தக்களரி செயல்முறையை மகசேசே மேற்பார்வையிட்டார்.

புரட்சியின் கடமைகளை செய்வதற்கு மக்கள் முனைந்தனர். முதலாளித்துவ வர்க்கம் மீண்டும் மீண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் நில உடைமையாளர்களின் பக்கம் நின்றது. இங்கே, ஸ்ராலினிசம் ஒரு முக்கிய பங்கை வகித்தது. மாஸ்கோ அதிகாரத்துவத்தின் சலுகை பெற்ற தேசிய நலன்களுக்கான சேவையில், ஸ்ராலினிசம் உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதி ஜனநாயகப் புரட்சியில் முற்போக்கான பாத்திரத்தை வகிக்கும் என்று அறிவுறுத்தியது. மேலும் தொழிலாளர்களின் பணி இந்தப் பிரிவினருடன் கூட்டணி வைப்பதாகும் என்றது. இந்த வேலைத்திட்டத்தைப் பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள முதலாளிகளுடன் சாதகமான உறவுகள் மற்றும் மேம்பட்ட வர்த்தகத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை விற்பனை செய்தனர். இது தொழிலாள வர்க்கத்திற்கு செய்த ஒரு அடிப்படையான துரோகமாகும்.

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (Partido Komunista ng Pilipinas - PKP) 1930 இல் ஸ்ராலினிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது. PKP மாஸ்கோ அதிகாரத்துவத்தின் மக்கள் முன்னணி கொள்கைக்கு இணங்க, பிலிப்பைன்ஸில் அமெரிக்க காலனித்துவ ஆட்சியை ஆதரிக்குமாறு பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியது. ஏனெனில் வாஷிங்டன் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டாளியாகக் கருதப்பட்டது. ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தைரியமாகப் போராடிய ஹக் விவசாய இராணுவம், ஜெனரல் மக்ஆர்தர் பிலிப்பைன்ஸுக்குத் திரும்பியபோது, PKP இன் அறிவுறுத்தலின் பேரில் அமெரிக்க இராணுவத்திடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தது. நிராயுதபாணியான விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர், சிலர் தூக்கிலிடப்பட்டு பாரிய புதைகுழிகளில் புதைக்கப்பட்டனர். ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்த உயரடுக்கினருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. மேலும் அவர்களது பண்ணைகள் விவசாயிகளிடமிருந்து எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஃபேர்டினாண்ட் மார்க்கோஸ் 1972 இல் இராணுவச் சட்டத்தை விதித்தார். அமெரிக்காவால் வரையப்பட்ட அரசியலமைப்பில் எழுதப்பட்ட உட்பிரிவுகளை மேற்கோள் காட்டி, முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே எழுந்த சமூகப் போராட்டங்களின் அபரிமிதமான வளர்ச்சியை நசுக்கினார். மார்க்கோஸின் எதிர்ப்பாளர்கள் உட்பட, பிலிப்பைன்ஸ் முதலாளித்துவத்தின் ஏறக்குறைய அனைத்துப் பிரிவினரிடமும் சர்வாதிகாரம் அவசியம் என்று பொதுவான ஒப்புதலளிப்பு இருந்தது. அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன், மார்க்கோஸ் இராணுவ ஆட்சியை திணிப்பதற்கு அமெரிக்கா 'இறுதிவரை' பின்வாங்காது என்று முன்கூட்டியே மார்க்கோஸிடம் தெரிவித்தார். மார்க்கோஸ் இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது, வாஷிங்டன் பிலிப்பைன்ஸுக்கு அதன் இராணுவ உதவியை மூன்று மடங்காக உயர்த்தியது.

வாஷிங்டனால் நிதியுதவி மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட இராணுவச் சட்ட அமைப்பின் தன்மை பழைய தலைமுறையின் நினைவில் நன்கு பொறிக்கப்பட்டுள்ளது: சித்திரவதை செய்யப்பட்ட சடலங்கள் மணிலா நகர்ப்புறத்தை சுற்றியுள்ள வெளிக் குழிகளில் இராணுவத்தால் வழக்கமாக அப்புறப்படுத்தப்பட்டன. அரசின் கருவூலத்தில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் திருடப்பட்டன. 70,000 பேர் பிடிவராந்து இன்றி கைது செய்யப்பட்டதுடன் இன்னும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். தந்தை அல்லது தாய்மார்கள் ஒருநாள் வீட்டிற்கு திரும்பாமல் போயினர்.

பெப்ரவரி 1986 இல் மக்கள் சக்தி வெகுஜன இயக்கம் வெறுக்கப்பட்ட கொடுங்கோலரை வெளியேற்றியபோது, கடைசி நேரத்தில் வாஷிங்டன் தலையிட்டது. ரீகனின் வெள்ளை மாளிகை மார்க்கோஸை அகற்ற உதவவில்லை என்றால், அது வாஷிங்டனின் முன்னாள் காலனியின் பிடியை இழக்க நேரிடும் என்பதை புரிந்துகொண்டது. ரீகன், மார்க்கோஸிடம் நாட்டைவிட்டு புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் மார்க்கோஸ் குடும்பம், சுவிஸ் வங்கிகளில் திருடப்பட்ட பில்லியன்களுடன், ஜனாதிபதி மாளிகையிலிருந்து வானூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டு, ஹவாயில் வசதியான வாழ்க்கைவாழ அனுமதிக்கப்பட்டது.

இது பிலிப்பைன்ஸ் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அது ஒரு புரட்சிகரமான சூழ்நிலையாகும். எதுவும் இன்னும் ஸ்திரப்படுத்தப்படவில்லை. நாடு முழுவதும் பாரிய வேலைநிறுத்தங்கள் வெடித்தன. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் (CPP) இருந்த ஸ்ராலினிஸ்டுகள்தான் 1960களில் மாவோ சேதுங்கின் வழியைப் பின்பற்ற PKP உடன் முறித்துக் கொண்டு, அக்கினோ நிர்வாகத்தில் மாயைகளை வளர்த்து, ஆளும் உயரடுக்கின் ஆட்சியை ஸ்திரப்படுத்தினர். 1986 மே தினத்தில், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஜோஸ் மரியா சிசன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் முன்னிலையில் ஜனாதிபதி அக்கினோ மற்றும் அக்கினோவின் இராணுவத் தலைவரும், மார்க்கோஸ் சர்வாதிகாரத்தின் சித்திரவதை ஆட்சியின் தலைமை சிற்பியுமான ஃபிடல் ராமோஸ் (Fidel Ramos) ஆகியோருடன் மேடையில் நின்றார். 'சர்வதேச கீதம்' அதன் போது இசைக்குழுவால் இசைக்கப்பட்டது.

நாட்டின் மிகப் பெரிய சர்க்கரைத் தோட்டத்தின் தலைவரான அக்கினோ, உண்மையான நிலச் சீர்திருத்தத்தை அமுல்ப்படுத்த விரும்பவில்லை. 1987 ஆம் ஆண்டின் முற்பகுதியில், நிலச் சீர்திருத்தத்திற்காக அவரிடம் முறையிட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அவர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தனது இராணுவத்தை துப்பாக்கிச் சூடு நடத்தக்கோரி அவர்களில் பலரைக் கொன்றார்.

உத்தியோகபூர்வ ஜனநாயக அமைப்புகளின் மறுசீரமைப்பிலிருந்து கணிசமான சீர்திருத்தங்கள் எதுவும் பெறப்படவில்லை. முதலாளித்துவ பூகோளமயமாக்கலின் முதல் அலைகளுக்கு நாடு திறக்கப்பட்டது. உண்மையான ஊதியம் சரிந்தது. ஒரு தசாப்தத்திற்குள், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது என்பது தொழிலாள வர்க்கத்தின் குடும்பங்களுக்கு தேவையான தீர்வாக மாறியது. குடும்பங்கள் உடைந்து, வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்தன.

மூன்று தசாப்த கால இடைவெளியில், தாராளவாத ஜனநாயகத்தின் மையத்தில் உள்ள ஊழல் பெருகிய முறையில் வெளிப்படையாகத் தெரிந்தது. ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவ ஆட்சியை மீண்டும் மீண்டும் ஸ்திரப்படுத்தினர், உயரடுக்கின் ஒன்று அல்லது மற்றொரு பிரிவினரின் மீது மாயைகளை வளர்த்தனர். 2016 ஆம் ஆண்டில், பாசிஸ்ட் ரோட்ரிகோ டுரேற்ற (Rodrigo Duterte) க்கு உற்சாகமான ஆதரவை அளித்தனர், அவருடைய கொச்சையான, கொந்தளிப்பான மற்றும் மிருகத்தனமான அரசியலை இடதுசாரிகளின் அரசியல் என்று கூறினர்.

ஃபேர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியரின் தேர்தல் வெற்றி இந்த நிகழ்ச்சிப்போக்கின் உச்சகட்டமும் மற்றும் உலகளாவிய நிகழ்வுகளின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடுமாகும். உலகெங்கிலும் தீவிர வலதுசாரி மற்றும் சர்வாதிகார சக்திகளின் வளர்ச்சியினதும், பாரிய சமூக நெருக்கடியின் சூழ்நிலையில் ஜனநாயக தாராளவாதம் அழுகுவதையும் காண்கிறோம்.

இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய நிகழ்ச்சிப்போக்காகும். மே 2016 இல் ரோட்ரிகோ டுரேற்றவின் தேர்தல் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு அரை வருடத்திற்கு முன்னதாக இருந்தது. இருவருமே ஜனநாயகத்தின் அடிப்படை நெறிமுறைகளை நிராகரித்து கொடுங்கோலர்களாக இருக்க விரும்பினர். மார்க்கோஸ் ஜூனியர் தேர்விற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, ட்ரம்ப் ஒரு பாசிச சதி மூலம் அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்க முயன்றார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜோ பைடென் அமெரிக்க ஜனநாயகத்தின் அமைப்புமுறைகள் இந்த தசாப்தத்தில் நிலைத்திருக்குமா என்பது நிச்சயமற்றது என அறிவித்தார்.

இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஜனநாயக தாராளவாதக் கட்சிகள் இன்றியமையாதவை. பகிரங்கமாக பாசிச சக்திகள் ஜனநாயகத்தின் கதவைத் தாக்கும் போது, தாராளவாதம் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. லெனி ரோபிரேடோ தலைவராக இருக்கும் தாராளவாதக் கட்சிதான் டுரேற்றவை பிலிப்பைன்ஸில் ஒரு தேசிய அரசியல் பிரமுகராக மாற்றியது.

ரோட்ரிகோ டுரேற்ற ஜனாதிபதியாக இருந்த கடந்த ஆறு வருடங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக போதைப்பொருளுக்கு எதிரான போர் என்ற பெயரில் கிட்டத்தட்ட 30,000 ஏழை பிலிப்பைன் வாசிகளைக் கொன்றதன் மூலம் குறிக்கப்பட்ட பல ஆண்டுகளாக வன்முறையின் பிரதிபலிப்பாக இருந்தது. ரோபிரேடோ தனது பிரச்சாரத்தில் டுரேற்றவின் போதைப்பொருள் கொள்கையைத் தொடர விரும்புவதாக அறிவித்தார், ஆனால் அவர் கொலையில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதில்லை. கொலைகார மெக்கார்தியிசத்தின் ஒரு கருவியான டுரேற்றவால் உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவை தொடரும் தனது விருப்பத்தை அவர் இதேபோல் அறிவித்தார். இறுதியில், அவர் தனது முன்னோடியின் அடக்குமுறைக் கொள்கைகளின் மிதவாத, மிகவும் கண்ணியமான, மறுபதிப்பிற்கு உறுதியளித்தார்.

ஜனவரி 6, 2021 இல் நடந்த பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் குடியரசுக் கட்சியின் சதிகாரர்களுடனான உறவை இயல்பாக்குவதற்கு அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர். அமெரிக்க ஜனநாயகத்தை கவிழ்க்க முயற்சித்த டொனால்ட் ட்ரம்ப், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உரை நிகழ்த்துகிறார். ஜனநாயகக் கட்சியினர் 2022 தேர்தல்களில் பேரழிவு தரும் தோல்வியை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். இன்னும் அவர்கள் வெகுஜன வாக்காளர்களை அணிதிரட்ட எதுவும் செய்ய மாட்டார்கள்.

பிரான்ஸ், பிரேசில், பிரித்தானியா, இந்தியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இதேபோன்ற நிகழ்வுகள் வெளிப்படுகின்றன. இந்த உலகளாவிய நிகழ்ச்சிப்போக்கை இயக்குவது உலக முதலாளித்துவத்தின் தீவிரமடைந்த நெருக்கடியாகும். பணவீக்கமும் போரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளன. 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் இறந்துள்ளனர், ஏனெனில் அவர்களின் அரசாங்கங்கள், இலாபங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்து அதன் பரவலைத் தடுக்க தேவையான அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க மறுத்துவிட்டன. உலகின் பெரும்பான்மையான மக்களால் வாழ்க்கை நிலைமைகள் தாங்க முடியாததாகிவிட்டன.

வெகுஜனங்களை அணிதிரட்ட, தாராளவாத ஜனநாயகவாதிகளிடம் தீர்வு இல்லாத இந்த சமூகப் பிரச்சனைகளைப் பற்றி நாம் உறுதியாகப் பேச வேண்டும். அவர்கள் கடந்த கால சாதனைகளைக் கூட பாதுகாக்க மாட்டார்கள். அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது; மற்ற உரிமைகள் விரைவில் பின்பற்றப்படும்.

இதுவே தீவிர வலதுசாரிகளின் எழுச்சியை தூண்டுகிறது. மார்க்கோஸின் ஜனரஞ்சகப் பொய்கள், பொற்காலத்திற்குத் திரும்புவோம் என்ற அவரது வாக்குறுதிகள், நாட்டின் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வெளிநாடுகளில் பணம் அனுப்புவதைச் சார்ந்திருக்கும் ஏழைகள்-சந்தை விற்பனையாளர்கள், மூலைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் ஈர்ப்பைக் கண்டது. ஏனெனில் அவர்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான நிலைமைகளுக்கான முக்கியமான வேறு மாற்றீடு எதையும் அவர்கள் காணவில்லை. மார்க்கோஸ் அவர்களுக்கு ஒரு வழியாக தாராளவாத ஜனநாயகத்தை பலிக்கடாவாக்கி, இராணுவச் சட்டத்தை ஒரு வழியாக காட்டுகின்றார்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் தாராளவாதக் கட்சிகளால் முற்போக்கான எதையும் வழங்க முடியாதுள்ளதுடன், கடந்த கால நலன்ககளைப் பாதுகாக்கக் கூட முடியாது. அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை பறிக்கப்படுகிறது; மற்ற உரிமைகள் விரைவில் அகற்றப்படும்.

ஜனநாயகத்தின் மரண ஓலத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சமூக சமத்துவமின்மையானது, பொதுவான சமத்துவத்தை இனியும் நிலைநிறுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு அதை வெறுமையாக்கியுள்ளது. இந்த உலகளாவிய நிகழ்ச்சிப்போக்கில் மார்க்கோஸின் தேர்தல் ஒரு மைல்கல்லாகும். அவர் பிற்போக்குத்தனத்தின் நிர்வாண ஆட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், சர்வாதிகாரத்திற்கு உறுதியளிப்பதுடன் மற்றும் பாசிசவாதிகளையும் மற்றும் அரசியல் கழிவுகளையும் அவர் தன்னுள் ஈர்க்கிறார்.

ஜனநாயக உரிமைகளின் உண்மையான பாதுகாப்பிற்கு, அவற்றின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சமூக அவலங்களை நிவர்த்தி செய்யும் ஒரு வேலைத்திட்டம் தேவைப்படுகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் சோசலிசத்திற்கான போராட்டமாக வேண்டும்.

Loading