ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்க பேர்லினில் ஷோல்ஸூம் மக்ரோனும் சந்தித்தனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியின் தோல்வியைக் குறிக்கும் ஆண்டு நினைவு நாளான மே 9 அன்று, ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸூம் புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் பேர்லினில் சந்தித்தனர். இரண்டு பிரச்சினைகள் அவர்களின் விவாதத்தின் மையத்தில் இருந்தன: ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மறுஇராணுவமயமாக்கல் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ நடத்தி வரும் போரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகரித்த ஈடுபாடு.

மே 9, 2022, திங்கட்கிழமை, ஜேர்மனியின் பேர்லினில் உள்ள சான்சிலர் மாளிகையில் சந்திப்பிற்கு முன்னதாக, ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் (இடது), பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை (நடுவில்) இராணுவ மரியாதையுடன் வரவேற்கிறார். (AP Photo/Michael Sohn)

மாலையில், இருவரும் உக்ரேனின் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் ஒளிரும் பிராண்டன்பேர்க் வாயிலை பார்வையிட்டனர். அப்போது ஷோல்ஸ் மற்றும் மக்ரோன் அருகே கூடி உக்ரேனிய சார்பு கோஷங்களை எழுப்ப சில நூறு ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இருவரும் பிராண்டன்பேர்க் வாயிலை இரவு நேரம் பார்வையிடுவதன் மூலம் என்ன செய்தியை வழங்க விரும்புகிறார்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘உக்ரேனுக்கு முழு ஆதரவு உண்டு’ என்பது தான் என்று மக்ரோன் பதிலளித்தார்.

அந்த நாளின் தொடக்கத்தில், ஷோல்ஸ், ரஷ்யா ஒரு ‘நிர்மூலமாக்கும் போரை’ நடத்துவதாகவும், ‘நாகரிகத்தை சிதைப்பதாகவும்’ குற்றம் சாட்டியதன் பின்னர், உக்ரேனில் ‘ரஷ்யாவால் ஆணையிடப்பட்ட எந்த சமாதானத்தையும்’ நிராகரித்து ஒரு உரை நிகழ்த்தியிருந்தார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பிற்போக்குத்தன முதலாளித்துவ ஆட்சி உக்ரேனில் போரை நடத்தி வருகிறது, ஆனால் ஷோல்ஸின் போர் உரை, ரஷ்யாவை ஒரு இனப்படுகொலை அமைப்பாக நாஜிசத்துடன் சமன்படுத்தி, அது போராடி அழிக்கப்பட வேண்டும் என்று கூறுவதானது எரிச்சலூட்டும் மற்றும் தவறான கருத்தாகும். ஷோல்ஸூம் மக்ரோனும் ஒரு இராணுவவாத திட்டநிரலை வகுப்பதற்கு இதுவே அடிப்படையாக இருந்தது.

கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், ஷோல்ஸ் மக்ரோனின் மறுதேர்வு ‘ஐரோப்பாவிற்கு ஒரு நல்ல அறிகுறி’ என்று பாராட்டினார். மேலும் அவர், “ஒரு வலுவான மற்றும் இறையாண்மை கொண்ட ஐரோப்பாவின் கட்டமைப்பிற்குள் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே நமது காலத்தின் பெரும் சவால்களை நம் நாடுகள் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்ற வகையில் நீண்டகாலமாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்தப் பாதையில் ஒன்றாக தொடர நாங்களும் விரும்புகிறோம்” என்று கூறினார்.

ஷோல்ஸ் மற்றும் மக்ரோனின் கருத்துகளின் பொருள் என்ன என்பதில் சந்தேகம் இல்லை. அதாவது, பேர்லினும் பாரிஸூம் ஐரோப்பாவை பாரியளவில் மறுஆயுதமயமாக்கவும், வாஷிங்டனில் இருந்து மிகவும் சுதந்திரமாக தங்கள் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைப் பின்தொடர்வதற்காக அதை மிகவும் சக்திவாய்ந்த முறையில் ஒழுங்கமைக்கவும் செயற்படுகின்றன. ‘அமைதியும் சுதந்திரமும்,’ ‘ஜனநாயகம்’ மற்றும் ‘சமூக நீதி’ என இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களில் மீண்டும் மீண்டும் பிரயோகித்த அனைத்து சொற்றொடர்களாலும் இந்த உண்மையை மறைக்க முடியாது.

ஷோல்ஸூம் மக்ரோனும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ பினாமி போரின் பின்னணியில் தங்கள் பலத்தைக் காட்டி கியேவிற்கு மேலும் ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்தனர். “நாங்கள் உக்ரேனுக்கு ஆதரவாக நெருக்கமாகவும் ஒன்றுபட்டும் நிற்கிறோம்,” என்று ஷோல்ஸ் கூறினார். “மனிதாபிமான நிலைப்பாட்டில் இருந்து அவர்களுக்கு நாங்கள் நிதியுதவி வழங்குகிறோம், அதேவேளை இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர எங்கள் ஆயுதங்களை வழங்கி இராணுவ ரீதியான உதவியையும் வழங்குகிறோம்” – அதாவது ரஷ்யாவை இராணுவ ரீதியாக தோற்கடிக்கத்தான் என்று ஷோல்ஸ் கூறினார்.

உக்ரேனுக்கான ஜேர்மனியின் இராணுவ ஆதரவு ‘மிகவும் தொலைநோக்குடையது’ என்று ஷோல்ஸ் விவரித்தார். மேலும் அவர், தமது நாட்டின் ஆயுத விநியோகம் என்பது, “உக்ரேனில் நிலவும் மிகவும் அவசர தேவையான, அதாவது மோதலில் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய ரஷ்ய ஆயுதங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலான, எங்கள் சொந்த பங்குகள், எங்கள் பாதுகாப்புத் துறையின் ஒத்துழைப்பு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மிகப் பரந்த உதவியாகும்” என்று கூறினார்.

தற்போது, சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் 2000 போன்ற கனரக ஆயுதங்களை வழங்குவதற்கு அப்பால், பேர்லின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ‘வளைய பரிமாற்றங்கள்’ என்றழைக்கப்படும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. உறுதியாக, இதன் பொருள், கிழக்கு ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ அங்கத்துவ நாடுகளும் சோவியத் வடிவமைத்த டாங்கிகள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குகின்றன என்பதுதான். அதற்கு பதிலாக, மேற்கத்திய மற்றும் ஜேர்மன் உற்பத்தியின் தொடர்புடைய ஆயுதங்களுடன் தொடர்புடைய ஆயுத அமைப்புகளை வழங்கும் பணியை ஜேர்மன் மேற்கொள்கிறது.

அதே நேரத்தில், ஜேர்மனியில் உள்ள உக்ரேனிய சிப்பாய்களுக்கு இந்த ஆயுத அமைப்புகளுக்கான பயிற்சியை ஜேர்மன் இராணுவம் வழங்கும். சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் 2000 பீரங்கிக்கான எதிர்கால உக்ரேனிய படைக் குழுவும், தொழில்நுட்ப வல்லுநர்களும் செவ்வாயன்று ரைன்லாண்ட் பேலட்டினேட்டில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. இதர்-ஓபர்ஸ்டீனில் (Idar-Oberstein) உள்ள ஜேர்மன் இராணுவத்தின் பீரங்கி பள்ளியில் இன்று பயிற்சி தொடங்கப்படவுள்ளது. ஜேர்மன் பாராளுமன்றத்தின் (Bundestag) விஞ்ஞான சேவையைச் சேர்ந்த ஒரு நிபுணரின் அறிக்கையின்படி, ஜேர்மன் மண்ணில் உக்ரேனிய சிப்பாய்களுக்கு பயிற்சி அளிப்பதானது சர்வதேச சட்டத்தின் கீழ் போர் பங்கேற்பைக் குறிக்கிறது.

உக்ரேனுக்கான இராணுவ ஆதரவுக்கு கூடுதலாக, ஜேர்மனி “தனது சொந்த பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த” “எதை வேண்டுமானாலும் செய்யும்” என்று ஷோல்ஸ் வலியுறுத்தினார். மே மாத இறுதியில் நடந்த ஐரோப்பிய கவுன்சிலின் ஒரு சிறப்பு உச்சி மாநாட்டில் பேசுகையில், அவர், “ஐரோப்பிய ஒன்றியத்தில் பாதுகாப்புத் துறையில் எப்படி நமது முதலீடுகளை நாம் சிறப்பாக ஒருங்கிணைத்து அவற்றை மிகவும் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை விவாதிக்க விரும்புகிறோம். இந்தச் சூழலில், பிராங்கோ-ஜேர்மன் ஆயுதத் திட்டங்களை நாம் இயல்பாகவே விரைவுபடுத்த விரும்புகிறோம்” என்று கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட “பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான மூலோபாய திசைகாட்டி,” என்பது போன்ற வெளியுறவுக் கொள்கை ஆவணங்களில் ஆபத்தில் உள்ள தொலைநோக்குத் திட்டங்கள் தெளிவாக உள்ளன. பேர்லினில், மக்ரோன் இந்த ஆவணத்தை விவரித்தார், அதாவது இது மிகவும் சுதந்திரமான ஐரோப்பிய வெளியுறவு மற்றும் போர்க் கொள்கையை நிறுவுவதற்கான முக்கிய வழிமுறையாக ஐரோப்பிய ஒன்றியத்தை “வளர்ந்து வரும் மூலோபாய போட்டியின் இந்த சகாப்தம்” மற்றும் “பெரிய புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு” சித்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதாகும்.

தேவையான திறன்களை அடைவதற்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ‘பாதுகாப்பிற்கு மேலும் சிறப்பாக செலவு செய்வதற்கும்’ மற்றும் பாரிய மறுஆயுதமயமாக்கலை மேற்கொள்வதற்கும் இந்த ஆவணம் உறுதியளிக்கிறது. மற்றவற்றுடன், “உயர்நிலை கடற்படை தளங்கள், எதிர்கால போர் விமான அமைப்புகள், விண்வெளி அடிப்படையிலான திறன்கள் மற்றும் முக்கிய போர் டாங்கிகள் என்பது போன்ற” அனைத்து செயல்பாட்டுப் பகுதிகளிலும் “கூட்டாக அதிநவீன இராணுவ திறன்களை மேம்படுத்த” இது முன்மொழிகிறது.

புதிய ஐரோப்பிய எதிர்கால எதிர்தாக்குதல் வான் அமைப்பு (Future Combat Air System-FCAS) மற்றும் பிராங்கோ-ஜேர்மன் முக்கிய தரைப்படை எதிர்தாக்குதல் அமைப்பு (Main Ground Combat System-MGCS) போன்ற மொத்தம் நூற்றுக்கணக்கான பில்லின்கள் மதிப்புள்ள சில பாரிய-திட்டங்களுக்கு இப்போது அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, பெப்ரவரி இறுதியில் ஷோல்ஸ் அறிவித்த மறுஆயுதமயமாக்கல் பொதியானது, ‘பன்னாட்டு ஆயுதத் திட்டங்களுக்கு’ மட்டும் செலவு செய்ய சுமார் 34 பில்லியன் யூரோ நிதியை வழங்குகிறது.

மக்ரோன் உடனான செய்தியாளர் கூட்டத்தில், நாஜிகளுக்குப் பிந்தைய ஜேர்மனியின் மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கல் உந்துதல் குறித்து ஷோல்ஸ் பெருமிதம் கொண்டார். பேர்லின் “அதன் பொருளாதார உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை பாதுகாப்பிற்காக நிரந்தரமாக செலவிடும். இந்த செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், ஜேர்மனிக்கு மறுசீரமைக்கப்பட்ட பாதுகாப்புத் திறனைக் கொண்டு வரவும் 100 பில்லியன் யூரோ மதிப்பிலான ஒரு சிறப்பு நிதித் திட்டத்தை தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார். மேலும் அவர், ஜேர்மனி ஏற்கனவே “மிகப்பெரிய பாரம்பரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது,” என்பதால் “நாம் அதற்கேற்ப நமது ஆயுதப் படைகளை இன்னும் பாரியளவில் பலப்படுத்தினால், நிச்சயமாக அது ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்புத் திறனில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் கூறினார்.

மக்ரோன் ஜேர்மனியின் மறுஆயுமயமாக்கலை ஆதரித்தார். “ஜேர்மனி தொலைநோக்கு முடிவுகளை எடுத்துள்ளது, நான் அதை வெளிப்படையாக வரவேற்கிறேன்,” என்று அவர் கூறினார். ஐரோப்பாவை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றுவதற்கான தனது சொந்த திட்டங்களையும் மக்ரோன் முன்வைத்தார், இதை மீண்டும் ஷோல்ஸ் ஆதரித்தார். ஐரோப்பாவிற்கு “சரியான அரசியல் மற்றும் புவிசார் அரசியல் வடிவத்தை” வழங்க, “ஒரு ஐரோப்பிய அரசியல் சமூகத்தை” கட்டமைக்க அவர் பரிந்துரைத்தார். ஜனவரி 31, 2020 அன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய கிரேட் பிரிட்டனைத் தவிர, மேற்கு பால்கன் நாடுகளும் மற்றும் உக்ரேனும் அதற்கு சாத்தியமான உறுப்பினர்கள் என மக்ரோன் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியம் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய முடிவெடுப்பில் ஒருமனதாக இருக்க வேண்டும் என்று மக்ரோன் வாதிட்டார். மேலும், “தற்போது நாம் இன்னும் கூட ஒருமனதாக முடிவு செய்யும் பொதுக் கொள்கைகளுக்கு… உதாரணமாக, நிதிக் கொள்கை அல்லது பாதுகாப்புக் கொள்கை” போன்றவற்றிற்கு “தகுதியான பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு” செல்ல அவர் முன்மொழிந்தார். இது ஐரோப்பிய கண்டத்தில் நிகழும் பெரிய அளவிலான போர் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், இராணுவத் தாக்குதல்கள் மற்றும் சமூக சிக்கனக் கொள்கைகள் குறித்து விரைவான முடிவுகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தை அனுமதிக்கும்.

உண்மையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முழு நேட்டோ கூட்டணியின் பொறுப்பற்ற போர்க் கொள்கையானது, ஒரு முழு அளவிலான நேட்டோ-ரஷ்ய அணுவாயுதப் போராக விரிவடைய அச்சுறுத்துகிறது என்பதை ஐரோப்பிய தொழிலாளர்களின் பரந்த அடுக்குகள் அறிந்திருக்கின்றன. ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பு, 76 சதவீத பிரெஞ்சு மக்கள் ரஷ்யா உடனான அணு ஆயுதப் போரின் ஆபத்து குறித்து கவலை கொண்டுள்ளதை கண்டறிந்துள்ளது. ஆயினும்கூட, ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஏகாதிபத்திய செதுக்கலில், மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கும், கொள்ளையடித்தலில் தங்கள் பங்கை கைப்பற்றுவதற்கும் முனைவதில் வெகுஜன மக்கள் கவலையையும் எதிர்ப்பையும் ஒதுக்கித் தள்ளுகின்றன.

ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு ஆளும் வர்க்கங்களுக்கிடையில் மேற்பரப்பின் கீழ், குறிப்பாக கொள்ளை எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பதில் கடுமையான பதட்டங்கள் உருவாகின்றன. கடந்த மாதம் நடந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் போது, மக்ரோனின் தீவிர வலதுசாரி போட்டியாளரான மரின் லு பென், பிராங்கோ-ஜேர்மன் கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர அச்சுறுத்தியதுடன், ஜேர்மனியை “பிரெஞ்சு மூலோபாய அடையாளத்தின் முழுமையான மறுப்பு” என்று அழைத்தார். இப்போதைக்கு இந்தப் பிளவுகளைப் பற்றி எழுதுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையானது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரானத் தாக்குதலையே சார்ந்துள்ளது. வேலையின்மை கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை குறைத்தும் மற்றும் சமூக நலன்கள் பெறுபவர்களை (RSA) அதற்காக வேலை செய்ய வைத்தும், பிரான்ஸ் நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோ மதிப்பிலான ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்பினாலும் கூட, இராணுவத்திற்கு இன்னும் பில்லியன்களை செலவிடப் போவதாக விடுக்கப்பட்ட மக்ரோனின் தேர்தல் வாக்குறுதியில் இது வெளிப்படையாக எடுத்துக்காட்டப்பட்டது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் போர்க் கொள்கைகளுக்கு எதிராகவும், மற்றும் ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காகவும் போராடுவதில், ஐரோப்பா முழுவதுமான தொழிலாளர்களை அணிதிரட்டி ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டத்தின் புறநிலை அடிப்படையை இது சுட்டிக்காட்டுகிறது.

Loading