முன்னோக்கு

Sagittarius A* இன் பிம்பத்தை பெறுதல்: ஒரு அளப்பரிய விஞ்ஞானரீதியான சாதனை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழன் அன்று, Event Horizon Telescope (EHT) கூட்டுழைப்பு நமது பால் வீதியில் (Milky Way) விண்மீன் Sagittarius A* இன் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையின் படங்களை வெளியிட்டது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான தத்துவார்த்த மற்றும் பரிசோதனை வானியல் ஆய்வுகளின் உச்சகட்டமாக இது சிரமத்துடன் கண்டறியக்கூடிய வகையிலான வானியல் பொருள்களின் ஒன்றின் நேரடிக் கண்டறிதலாகும். இந்த முடிவுகள் சர்வதேச மற்றும் விஞ்ஞானரீதியான அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட சாத்தியக்கூறுகளின் ஒரு சிறந்த நிரூபணமாகவும் உள்ளன.

ஏழு கண்டங்களிலும் உள்ள 20 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 60 நிறுவனங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வானியலாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொறியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் இந்த அவதானிப்புகளை மேற்கொண்டு, தரவுகளை தொகுத்து மற்றும் அத்தகைய மகத்தான முயற்சிக்கு தேவையான தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பராமரித்தனர். Sgr A* இன் அவதானிப்புகள் 2017 இல் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஆயிரக்கணக்கான டெராபைட் தரவுகள் MIT Haystack Observatory மற்றும் Max Planck ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த அதிவேகமான கணனிகளில் சிலவற்றில் தொகுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதன் முடிவுகளை வகைப்படுத்தவும் புரிந்து கொள்ளவும் ஐந்து வருட உழைப்பு அவசியமானது.

நாசாவின் சந்திரா மற்றும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கிகளில் இருந்து X-ray மற்றும் அகச்சிவப்பு படங்கள் முறையே, பால்வீதியின் விண்மீன் மையத்தின் இந்த படத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. அவை விண்மீனின் மையத்தின் மிகப்பாரிய கருந்துளையை ஹொரைசன் தொலைநோக்கி மூலம் உருவாக்கப்பட்ட படத்தொகுப்பை முழுமையாக்கவும் விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்பட்டன. நன்றி: NASA/CXC/SAO, NASA/HST/STScI, Event Horizon Telescope Collaboration

2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இரு தசாப்தங்களுக்கும் மேலான கூட்டுத் திட்டத்தின் விளைவாக, பூமியிலிருந்து பார்க்கும் போது வானத்தில் உள்ள Sgr A* மற்றும் Messier 87 விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள இரண்டு பெரிய கருந்துளைகளின் தற்போதைய கண்டுபிடிப்பாகும். அவ்வாறு செய்ய, உலகம் முழுவதிலும் இருந்து ரேடியோ தொலைநோக்கிகளை இணைத்து, அவற்றின் கண்காணிப்பு திறன்களை ஒன்றிணைத்த கூட்டுழைப்பினால், இதுவரை நேரடியாகப் பார்க்காத வானியல் பொருட்களைப் பார்க்க முடிந்தது.

Atacama Large Millimeter Array மற்றும் சிலியில் உள்ள Atacama Pathfinder Experiment, அரிசோனாவில் உள்ள Heinrich Hertz Submillimeter தொலைநோக்கி, ஸ்பெயினில் உள்ள IRAM 30m தொலைநோக்கி, James Clerk Maxwell தொலைநோக்கி மற்றும் ஹவாயில் உள்ள Submillimeter Array மெக்சிகோவில் Large Millimeter தொலைநோக்கி மற்றும் அண்டார்டிகாவில் தென் துருவ தொலைநோக்கி ஆகியவை இறுதி வரைதலை உருவாக்க தேவையான தரவுகளை பெற்றுக்கொள்வதில் ஈடுபட்டுள்ளன.

உருவாக்கப்பட்ட வரைபடங்கள் அனைத்து வகையான பகுத்தறிவற்ற சிந்தனைக்கு எதிரான ஒரு அடியாக உள்ளது. அது மத இருட்டடிப்பு கதைகளானாலும் அல்லது பின்நவீனத்துவத்தின் மாயவாதம் மற்றும் அனைத்து 'கட்டுக்கதைகளும்' சமமாக செல்லுபடியற்றவை என்பதை வலியுறுத்துகிறது. உண்மையில் ஒரு புறநிலையான, சடத்துவ யதார்த்தம் உள்ளது, இது பௌதீகரீதியாக அறியக்கூடிய விதிகளால் ஆளப்படுகிறது.

மேலும் மேலும் ஆழமான முடிவுகள் வரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. EHT தனது சமீபத்திய கண்காணிப்பு நடைமுறையை மார்ச் மாதத்தில் நிறைவு செய்தது. இதில் மூன்று புதிய தொலைநோக்கிகள் அடங்கும். அவை இன்னும் சிறந்த படங்களை பெறுவதை அனுமதிக்கும். இப்போது கூட்டுப்பணியின் இரண்டு முக்கிய இலக்குகள் பற்றிய தரவு சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது பிரபஞ்சத்தின் ஏனைய இன்னும் கூடுதலான மர்மமான பகுதிகளை ஆராயும். குறிப்பாக பெரிய அளவிலான வாயு மற்றும் தூசி உள்ளே பாய்வதால் மிகப்பாரிய கருந்துளைகளால் உற்பத்தி செய்யப்படும் விண்மீன் அளவிலான ஆற்றல்மிக்க ஓட்டங்களை ஆராயும்.

எந்தவொரு விஞ்ஞானரீதியான கண்டுபிடிப்பையும் போலவே, EHT கண்டுபிடிப்பும் கோட்பாட்டு வானியற்பியல் மற்றும் மேம்பட்ட பொறியியலில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான முன்னோடி பணியின் விளைபொருளாகும். கருந்துளைகள் பற்றிய நவீன புரிதலின் அடிப்படையிலேயே ஐன்ஸ்டைனின் பொது சார்பியல் கோட்பாடு 1915 இல் உருவாக்கப்பட்டது. விண்மீன் மையத்தில் இருந்து ரேடியோ அலைகளை முதலில் கண்டறிவது 1930 களில் நடந்தது மற்றும் கருந்துளைக்குள் சுழலும் பொருளைக் கண்டறிய தேவையான வானியல் நுட்பங்கள் 1960 களில் உருவாக்கப்பட்டன. 1980 களில் தான் Sgr A* ஒரு கருந்துளை என்று முதன்முதலில் அனுமானிக்கப்பட்டது. மேலும் 1990கள் மற்றும் 2000களின் அவதானிப்புகள் பெரும்பாலான பிற சாத்தியங்களை நிராகரித்தன.

அதே நேரத்தில், அத்தகைய படங்களை உருவாக்குவது ஒரு சர்வதேச செயல்முறையை உள்ளடக்கியுள்ளது. கருந்துளையை பார்ப்பதற்கு தேவையான தெளிவுத்திறனை அடைவதற்கு (உண்மையில் கண்ணுக்குத் தெரியாத பொருளைச் சுற்றியுள்ள வெப்பமான வாயு), ரேடியோ தொலைநோக்கிகள் உலகின் எதிர் முனைகளில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். இது பூமியை ஒரு மாபெரும் ரேடியோ அலை உள்வாங்கியாக மாற்றி அசாதாரணமான மங்கலான சமிக்ஞைகளைக் கண்டறியக் கூடியதாக்கும்.

இத்தகைய பரந்த விஞ்ஞான முயற்சிகள் அதிகரித்தளவில் வழக்கமானதொன்றாகி வருகின்றன. Large Hadron Collider, ஈர்ப்பு அலைகளைக் கண்டறிதல், நியூட்டன்களைக் கண்டறியும் IceCube பரிசோதனை, அத்துடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு விண்வெளிப் பயணமும் வெற்றிபெற சர்வதேச முயற்சி தேவைப்படுகிறது. எதிர்மறையான ஒரு எடுத்துக்காட்டு, ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ExoMars முயற்சி, இந்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டு, அதன் பின்னர் அமெரிக்கா மற்றும் நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேனுடன் போரினால் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் விளைவாக ரஷ்யா தனது பணியில் பங்கேற்பதிலிருந்து பின்வாங்கிய பின்னர், குறைந்தபட்சம் 2028 வரை இது தொடங்கப்படாது.

சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை ஐரோப்பிய தெற்கு கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஜெனரல் சேவியர் பார்கான்ஸ் குறிப்பிட்டார். அவர் இக்கண்டுபிடிப்புகளை அறிவிக்க ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பின்வருமாறு கூறினார், 'இந்த அசாதாரண முடிவை ஒரே ஒரு தனி அமைப்பினால் அடைய முடியாது அல்லது ஒரு நாட்டின் தேசிய வானியல் அமைப்பனாலும் அடைய முடியாது. இதற்கு உலகெங்கிலும் எட்டு அலை கண்காணிப்பகங்கள் தேவையாக இருந்தது. மேலும் அந்த வலையமைப்பு ஏற்கனவே 11 ஆக விரிவடைந்துள்ளது. இவை உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ள சர்வதேச அமைப்புகளின் மூலம் கட்டமைக்கப்பட்டு, நிதியளிக்கப்பட்டு, இயக்கப்பட்டு மற்றும் ஆதரிக்கப்படுகின்றன.

இந்த கண்டுபிடிப்பு 'நாம் ஒத்துழைத்து, ஒன்றாக வேலை செய்யும்போது நாம் எதை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது என்பதை பார்கான்ஸ் குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக உலகம் அந்த திசையில் இயங்காத நாம் வாழும் காலத்தில் இதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம்”.

உண்மையில் அவ்வாறில்லைத்தான். நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலை பார்கான்ஸ் குறிப்பிடுகிறார் என்று ஒருவர் கருதலாம். இது மனிதகுலத்தை அணுவாயுத அழிவுடன் அச்சுறுத்துகிறது. அல்லது பணக்கார நாடுகள் தடுப்பூசிகள் மற்றும் பிற சிகிச்சை முறைகளை பதுக்கி வைத்துள்ளதால் உலகளவில் 20 மில்லியன் மக்களைக் கோவிட்-19 தொற்றுநோய் கொன்றது.

உலக அரசாங்கங்கள் தணிக்க எதுவும் செய்யாத மற்றும் நூற்றாண்டின் இறுதியில் உலகின் கடற்கரைகளை மூழ்கடிக்க அச்சுறுத்தும் தற்போதைய மற்றும் துரிதப்படுத்தும் காலநிலை பேரழிவையும் பார்கான்கள் குறிப்பிட்டிருக்கலாம். மேலும் பேரழிவு பற்றி அரை நூற்றாண்டுக்கும் மேலாக எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், நாடுகள் தங்கள் தேசிய முதலாளித்துவ நலன்களின் பெயரில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்க தொடர்ந்து மறுத்து வருகின்றன.

இவ்வாறான நிலைமை குறிப்பிட்ட சமூக மற்றும் அரசியல் உறவுகள் மற்றும் புறநிலை பொருளாதார நிகழ்போக்குகளின் விளைவாகும். உலக முதலாளித்துவ சந்தையில் போட்டியிடும் போட்டி தேசிய-அரசுகளாக உலகைப் பிரிப்பதே இத்தகைய பயங்கரங்களை உருவாக்குகிறது. ஒவ்வொரு நாளும் பில்லியன் கணக்கானவர்கள் எதிர்கொள்ளும் நசுக்கும் சமத்துவமின்மை மற்றும் வறுமையைப் பற்றி குறிப்பிடத்தேவையில்லை.

தீவிர விஞ்ஞான ஒத்துழைப்பு என்பது ஒவ்வொரு அரசாங்கங்களும் உமிழும் பேரினவாத மற்றும் தேசியவாத மந்திரங்களை இத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் நிராகரிப்பதற்கான குறிப்பிட்ட நனவான முயற்சியும் உள்ளடக்கியுள்ளது. இந்த அரசாங்கங்கள் இயற்கையையும் அதில் எமக்குள்ள இடத்தையும் புரிந்துகொள்வதற்கு கூடி இயங்குவதற்குப் பதிலாக இந்த விஞ்ஞானிகள் பாரிய அழிவிற்கான மிகவும் அபாயகரமான ஆயுதங்களை உற்பத்திசெய்வதை காண விரும்புகின்றன.

அதே அரசாங்கங்கள் தொற்றுநோய்களின் போது செல்வத்தின் பாரியளவிலான மறுபங்கீட்டை மேற்பார்வையிட்டன. வோல் ஸ்ட்ரீட் மற்றும் பிற நிதிச் சந்தைகளுக்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை ஒப்படைத்த, அதே நேரத்தில் பிணை எடுப்புகளுக்கு பணம் செலுத்த ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் தொழிலாளர்களை வேலைக்கு செல்லுமாறு அவை தள்ளின. உக்ரேனில் நடந்த போர் அடிப்படை உணவு தேவைகள், மற்றும் குழந்தைகளுக்கான உணவுப் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் பணவீக்கம் உயர்ந்து, உலக மக்கள் தொகையில் அதிகமான மக்களை வறுமையில் தள்ளியுள்ளது.

ஆனால் Sagittarius A* வின் பிம்பத்தை பெறுதல் போன்ற உயர்ந்த அறிவியல் சாதனைகள் சமூக அமைப்பின் மற்றொரு அடிப்படையைப் பற்றிய ஒரு பார்வையை எமக்கு அளிக்கிறது. இந்த வெற்றிக்கு வழிவகுத்த விஞ்ஞானரீதியான திட்டமிடல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு கொள்கைகள் தற்கால சமுதாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டால், போர், வறுமை, தடுக்கக்கூடிய நோய்கள் மற்றும் பிற சமூக அவலங்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

பூமியின் சுற்றுச்சூழல் விளைவுகள் அல்லது மனித உயிர்களின் விலை என்னவாக இருந்தாலும், முதலாளித்துவ வர்க்கம் தனியார் இலாபத்தைத் தொடர்ந்து குவிப்பதில் மட்டுமே உறுதியாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. முதலாளித்துவத்தை ஒட்டுமொத்தமாக தூக்கியெறிந்து, ஒரு புதிய மற்றும் உயர்ந்த சமூக ஒழுங்கான சோசலிசத்திற்கு வழியை உருவாக்கும் பொறுப்பு, சமூகத்தில் புறநிலைரீதியான புரட்சிகர மற்றும் சர்வதேச சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்திடம் விடப்பட்டுள்ளது.

Loading