நேட்டோ, G7 ரஷ்யாவிற்கு எதிராகவும், அதற்கு அப்பாலும் இராணுவ விரிவாக்கத்தை அச்சுறுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேட்டோ கூட்டணி, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அதன் பினாமிப் போர் மற்றும் உலகம் முழுவதும் ஏகாதிபத்திய போர்கள் மற்றும் சூழ்ச்சிகளின் பரந்த விரிவாக்கத்திற்கு தயாராகி வருகிறது. இந்த வார இறுதியில் ஜேர்மனியில் நேட்டோவின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் உலகின் செல்வந்த நாடுகளான அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா ஆகிய G7 குழுவின் வெளியுறவு மந்திரிகளின் இரண்டு உச்சிமாநாடுகளில் இது வெளிப்பட்டது.

நேற்று, பின்லாந்தும் சுவீடனும் ரஷ்யாவுக்கு எதிராக தாம் நேட்டோவில் இணைவதை உறுதி செய்தன. பின்லாந்து இந்த வாரம் அவ்வாறு செய்வதாக அறிவித்த பின்னர் சுவீடனின் ஆளும் சமூக-ஜனநாயகக் கட்சியினர் நேட்டோவில் சேர விண்ணப்பிப்பதாக அறிவித்தனர். 'நேட்டோவில் அங்கத்தவராக விண்ணப்பிப்பதை ஒத்துக்கொள்ளும் ஒரு வரலாற்று முடிவை இன்று சுவீடிஷ் சமூக ஜனநாயகக் கட்சி எடுத்துள்ளது' என சுவீடிஷ் வெளியுறவு மந்திரி ஆன் லிண்டே ட்வீட் செய்துள்ளார். பிரதம மந்திரி மாக்டலேனா ஆண்டர்சன் 'சுவீடிஷ் அங்கத்துவ விண்ணப்பத்திற்கு அதன் ரிக்ஸ்டாக்கில் (Riksdag) பரந்த நாடாளுமன்ற ஆதரவு உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாக' உறுதியளித்தார்.

அதே நேரத்தில், நேட்டோ இராணுவப் பயிற்சிகள், ரஷ்யாவின் மேற்கு எல்லை முழுவதும் விரிவடைந்தது. 'Defender Europe' பயிற்சிகள் போலந்து மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 18,000 நேட்டோ துருப்புக்களை உள்ளடக்கியது; 'Hedgehog' பயிற்சிகள், எஸ்தோனியாவில் 15,000 நேட்டோ துருப்புக்கள்; 'Wettiner Heide' பயிற்சிகள், ஜேர்மனியில் 7,500, மற்றும் 'Iron Wolf' பயிற்சிகள் லித்துவேனியாவில் 3,000 துருப்புக்களை உள்ளடக்கியுள்ளது. பின்லாந்தில், அரோ 22 பயிற்சியில் பின்லாந்தின் கவசப் படை மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், லாத்வியா மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகளின் டாங்கிகள் அடங்கும்.

ரஷ்யாவின் ஆத்திரமூட்டப்படாத படையெடுப்பிற்கு எதிராக நேட்டோ அப்பாவி உக்ரேனுக்கு உதவுகிறது என்ற உத்தியோகபூர்வ கட்டுக்கதையானது, உலகளாவிய புவிசார் அரசியலின் ஒரு தீவிர மறுஒழுங்கமைப்பை நியாயப்படுத்த நேட்டோ உக்ரேனை பயன்படுத்துவதால் கலைந்து வருகிறது. உண்மையில், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் நேட்டோ உச்சிமாநாட்டை முடித்து வைத்து தெரிவித்த கருத்துக்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்த பெப்ரவரியில் உக்ரேன் மீது படையெடுப்பிற்கு உத்தரவிடுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே, நேட்டோ ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனை ஒரு பினாமியாக ஆயுதமயமாக்கியது என்பதை தெளிவுபடுத்தியது.

'நேட்டோ முன்னெப்போதையும் விட வலிமையானது. ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் உறுதியாக ஒன்றுபட்டுள்ளன. இந்தப் போரில் உக்ரேன் வெற்றிபெற முடியும்” என்று ஸ்டோல்டன்பேர்க் கூறினார். நேட்டோ 'கூட்டாளிகள் உக்ரேனுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பாதுகாப்பு உதவிகளை உறுதிசெய்து வழங்கியுள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக, நேட்டோவும் நட்பு நாடுகளும் பல்லாயிரக்கணக்கான உக்ரேனியப் படைகளுக்கு பயிற்சி அளித்துள்ளன. இவை அனைத்தும் ஒவ்வொரு நாளும் போர்க்களத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன” என்றார்.

ஸ்டோல்டன்பேர்க், முன்னாள் அமெரிக்க இராணுவ - ஐரோப்பா தளபதி பென் ஹோட்ஜஸ் இன் கருத்துக்களை எதிரொலித்தார். அவர் உக்ரேனில், 'நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம்' என்று வாஷிங்டன் அறிவிக்க வேண்டும் என்று கூறினார். ஹோட்ஜஸ் 'ரஷ்யாவின் முதுகை உடைக்க' அழைப்பு விடுத்தார்.

இது நேட்டோ நடவடிக்கைகளின் உலகளாவிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும் என்று ஸ்டோல்டன்பேர்க் கூறினார்: “எங்கள் எதிர்வரவிருக்கும் மாட்ரிட் உச்சிமாநாட்டை பற்றியும் அமைச்சர்கள் விவாதித்தனர். ஐரோப்பாவில் புதிய பாதுகாப்பு யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் நேட்டோவின் தடுப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த முக்கியமான முடிவுகளை எடுப்போம். அடுத்ததாகவும் நீண்டகாலத்திலும் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளிகளுக்கு மேலும் ஆதரவளிக்கவும் மற்றும் நேட்டோவின் மூலோபாய போட்டியின் யுகத்திற்கான வரைபடமான எங்கள் அடுத்த மூலோபாயக் கருத்தை ஏற்றுக்கொள்வதில் ஈடுபடுவோம்”.

தற்போதைய நேட்டோ அங்கத்துவ நாடுகளுக்கு அப்பால், ஜப்பான், தென் கொரியா, பின்லாந்து, சுவீடன், உக்ரேன் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளும் ஜூன் 28-30 தேதிகளில் மாட்ரிட்டில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE)-Podemos அரசாங்கம் ஸ்பெயினின் தலைநகரை மூடுவதற்கு 25,000 கலகத் தடுப்பு போலீசாரை பயன்படுத்துவதன் மூலம் எதிர்பார்க்கப்படும் பாரிய எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும்.

சனிக்கிழமையன்று G7 வெளியுறவு அமைச்சர்களின் அறிக்கையில் புதிய நேட்டோ மூலோபாயக் கருத்தின் முன்னோட்டம் ஒன்று வந்தது. இந்த பிரம்மாண்டமான 30பக்க ஆவணம் உண்மையில் உச்சிமாநாட்டின் விவாதங்களின் சுருக்கம் அல்ல, மாறாக மிகவும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட முழு உலகத்திற்குமான கோரிக்கைகளின் ஒரு பரந்த பட்டியலாகும். இது ரஷ்யா, முன்னாள் யூகோஸ்லாவியா, இந்தோ-பசிபிக் பகுதி, சீனா மற்றும் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்கள், மியான்மர், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம், ஏமன், ஆப்பிரிக்காவின் முனை, சோமாலியா, சூடான், எத்தியோப்பியா, சஹேல், கினியா வளைகுடா நாடுகள், வெனிசுவேலா, ஹைட்டி, ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளை குறிப்பிடுகின்றது.

உக்ரேன் போர் பற்றிய G7 அறிக்கை குறிப்பாக ரஷ்யாவைத் தாண்டி, சீனா மற்றும் பெலாரஸை குறிவைக்கிறது. 'ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை செயல்படுத்துவதன் மூலம்' பெலாரஸ் போரில் 'உடந்தையாக' இருப்பதாக அது கண்டனம் செய்வதுட்டன் மற்றும் பெலாரஸ் 'அதன் சர்வதேச கடமைப்பாடுகளுக்குக் கீழ்ப்படியத் தவறிவிட்டது' என்று எச்சரிக்கிறது.

அமெரிக்க நிதித் தடைகளை எதிர்கொள்ளும் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை சீனா துண்டிக்க வேண்டும், மேலும் தென் சீனக் கடலில் அதன் உரிமைகோரல்களைக் கைவிட வேண்டும் என G7 கோருகின்றது. அது சீனாவிற்கு 'ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை இல்லாதொழிக்க வேண்டாம்' மற்றும் 'உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரை நியா#ப்படுத்துவதற்கு தகவல்களை திரிபுபடுத்துதல், தவறான தகவல் மற்றும் பிற வழிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்' என்று கட்டளையிடுகிறது. மேற்கு சீனாவின் இரண்டு மூலோபாயப் பகுதிகளான சின்ஜியாங் மற்றும் திபெத்திற்கு 'உடனடியான, அர்த்தமுள்ள மற்றும் தடையற்ற அணுகலை' ஐ.நா அதிகாரிகள் மற்றும் பிற பார்வையாளர்களுக்கு வழங்குமாறு சீனாவிடம் அது கூறுகிறது.

ரஷ்யாவை பற்றி: 'ரஷ்யா ஐ.நா. சாசனத்தை மீறியுள்ளது ... மேலும் அதன் செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சர்வதேச சட்டத்திற்கு இணங்காத செல்வாக்கு மண்டலங்கள் மற்றும் எந்தவொரு சக்தியைப் பயன்படுத்துவதையும் நாங்கள் நிராகரிக்கிறோம். இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் ரஷ்யா மாற்ற முயற்சித்த எல்லைகளை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம், மேலும் கிரிமியா உட்பட உக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் ஆதரவாக எங்கள் ஈடுபாட்டை உறுதிப்படுத்துவோம்” என G7 அறிவிக்கிறது.

நேட்டோ இங்கு முன்மொழிவது ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் உலகளாவிய வெடிப்பு ஆகும். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை 30 ஆண்டுகளில் நேட்டோவிற்கான முக்கிய இராணுவ எதிர்ப்பலத்தை அகற்றியது. அது ஒரு நவ-காலனித்துவ வெறித்தனத்திற்கு சென்றுள்ளது. இது G7 அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டினதும் பிரதேசம் அல்லது அதிகாரிகளுக்கு எதிராக குண்டுவீச்சு மற்றும் சதித்திட்டங்களை ஒழுங்கமைத்துள்ளது மற்றும் படையெடுத்தது அல்லது இராணுவ ரீதியாக ஆக்கிரமித்துள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் மாலி ஆகிய நாடுகளை தகர்த்தெறிந்த நேட்டோ போர்கள் மொத்தமாக பல மில்லியன் மக்களை பலிகொண்டுள்ளது.

நேட்டோ உக்ரேனை ஆயுதமயமாக்குவதற்கு முன்கூட்டிய படையெடுப்பின் மூலம் பதிலடி கொடுக்கும் புட்டினின் முடிவு பிற்போக்குத்தனமானது. ஆனால் ஒரு தெளிவான கருத்தைக் கூற வேண்டும். அதாவது சர்வதேச சட்டத்தை மீறியதற்காக ரஷ்யாவை நேட்டோ கண்டனம் செய்வது முற்றுமுழுதான பாசாங்குத்தனதாகும். 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க-இங்கிலாந்து சட்டவிரோத ஆக்கிரமிப்பு முதல் 2017 இல் சிரியா மீது ஒருதலைப்பட்சமாக குண்டுவீச்சு வரை, நேட்டோ அதன் போர்கள் சர்வதேச சட்டத்தால் தீர்மானிக்கப்படுகின்றன என்ற போலித்தனத்தை கைவிட்டுவிட்டது.

அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவிற்கும் அதன் புவிசார் அரசியல் அபிலாஷைகளின் வெறித்தனத்திற்கும் எதிரான நேட்டோவின் இராணுவ விரிவாக்கத்தை ஒரு அவசர எச்சரிக்கையாக தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உக்ரேனில் போர் இழுத்துச் செல்லும்போது, ரஷ்ய இராணுவம் உக்ரேனின் தெற்கு மற்றும் கிழக்கில் ரஷ்ய மொழி பேசும் பகுதிகள் மீது தனது இராணுவப் பிடியை ஒருங்கிணைக்கும்போது, நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு கட்டுப்பாடற்ற இராணுவ விரிவாக்கத்தின் ஆபத்து, முழு அணு ஆயுதப் போரில் சென்று முடிவடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஸ்டோல்டன்பேர்க் மற்றும் ஹோட்ஜஸ் கோருவது போல், ரஷ்யா-உக்ரேன் போரில் நேட்டோ 'வெற்றி பெற' அது ரஷ்யாவை நேரடியாகத் தாக்க வேண்டும் என்பது இன்னும் தெளிவாகிறது. அதன் பெரிய இராணுவம் மற்றும் ரஷ்யாவுடன் 1,300 கிமீ எல்லையுடன் பின்லாந்து நேட்டோவுடன் ஒருங்கிணைக்கப்படுவது மற்றும் ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ போர் பயிற்சிகளின் தொடர்ச்சியான பறையடிப்பு ஆகியவை அத்தகைய தற்கொலை ஆபத்துமிக்க பொறுப்பற்ற கொள்கைக்கான தயாரிப்புகள் நன்கு முன்னேறியுள்ளன என்பதைக் காட்டுகிறது.

ஒரு அணுவாயுத மூன்றாம் உலகப் போரின் பெருகும் அபாயத்திற்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டிய சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். இதில், குறிப்பாக, ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோவியத் ஒன்றியத்தை கட்டியெழுப்புவதற்கு அதனை ஐக்கியப்படுத்துவதற்கு வழிவகுத்த போல்ஷிவிக் பாரம்பரியத்தின் அடித்தளத்தில் அணிதிரட்டப்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கமும் உள்ளடங்குகின்றது.

ரஷ்யா மீதான நேட்டோ போரினால் ஏற்பட்ட பாரிய கஷ்டங்களும் துன்பங்களும் வர்க்கப் போராட்டத்தின் புரட்சிகர வெடிப்புகளுக்கு சர்வதேச அளவில் தயாரிப்புச்செய்து வருகின்றன. G7 வெளியுறவு மந்திரிகள், 'உணவு, எரிசக்தி மற்றும் நிதி தொடர்பான உலகளாவிய நெருக்கடிக்கான பிரதிபலிப்பு குழுவை' உருவாக்க அழைப்பு விடுத்தனர். 'புவிசார் அரசியல் நிலப்பரப்பு அடிப்படையில் மாறிவிட்டது. ரஷ்யாவின் தூண்டப்படாத மற்றும் முன்கூட்டிய ஆக்கிரமிப்புப் போர், உணவு, எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தை சீர்குலையச்செய்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யக் கோரி இலங்கையில் வெகுஜன இயக்கம் போன்ற உலகெங்கிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. உணவு நெருக்கடி பற்றிய G7 அறிக்கை, உணவு நெருக்கடி நூற்றுக்கணக்கான மில்லியன் உயிர்களை அச்சுறுத்துகின்றது என ரஷ்யாவைக் குற்றம் சாட்டுவது மற்றொரு அரசியல் மோசடியாகும். இதனை உருவாக்குவதில் நேட்டோ முக்கிய பங்கு வகித்தது.

அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கிகள் ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்புகளை முடக்குகின்றன. இதனால் உலக சந்தைகளில் ரஷ்யாவிற்கு அதன் தயாரிப்புகளுக்கு டாலர்களில் விலை செலுத்த முடியாது. ரஷ்யப் படையெடுப்பு உக்ரேனிய தானியத்தின் பெரும்பகுதியை உலகச் சந்தைகளை அடைவதைத் தடுக்கும் அதே வேளையில், கடுமையான நேட்டோ பொருளாதாரத் தடைகள் ரஷ்ய தானியங்கள் மற்றும் உர தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதை இயலாமல் செய்துவிட்டன. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடான லித்துவேனியாவும் பெலாருஸில் இருந்து அதன் துறைமுகங்கள் வழியாக பொட்டாஷ் ஏற்றுமதி செய்வதைத் தடுத்துள்ளது.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பெருகிவரும் போர் அச்சுறுத்தல்கள் மற்றும் உலக உணவுப் பொருட்களின் வினியோகத்தை அது பொறுப்பற்ற முறையில் அழிப்பது, பில்லியன் கணக்கான மக்களின் உயிர்வாழ்வு சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஏகாதிபத்திய போருக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்களை அரசியல் அணிதிரட்டுதல் மற்றும் ஐக்கியப்படுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

Loading