தமிழ் நாட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தம்மை விடுவிக்க கோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர்

தமிழ் நாட்டில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கும் 17 இலங்கை தமிழ் அகதிகள், தங்களை விடுதலை செய்யக் கோரி, மே 20 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், உடல் நிலை மோசமடைந்திருப்பதினால் சில உண்ணாவிரதக்காரர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ள அகதிகள் (நன்றி முகநூல்)

தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும், அவர்கள் தொடர்ச்சியாக சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராகவே இந்த அகதிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்தக் கைதிகளின் மரணப் போராட்டத்தை கணக்கில் எடுக்காமல் இருப்பதன் மூலம் இந்திய மற்றும் தமிழ்நாடு ஆளும் வர்க்கங்கள், தங்களை இலங்கை ஒடுக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்திக்கொண்டுள்ளன. இலங்கையில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்னமும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் விசாரணைகள் இன்றி டசின் கணக்கான தமிழர்கள் சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், இலங்கை ஆட்சியாளர்களின் சிங்கள இனவாத அடக்குமுறை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து உயிர் பிளைப்புக்காக அகதிகளாக தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றவர்கள் ஆவர். கடவுச் சீட்டு பெற்றுக்கொள்ள முயன்றமை, விசா முடிவடைந்த பின்னரும் இந்தியாவுக்குள் தங்கியிருந்தமை மற்றும் படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தமை போன்றவை இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.

இதற்கு முன்னரும் பல தடவை உண்ணாவிரதம் இருந்துள்ள இந்த கைதிகள், இந்திய ஆளும் வர்க்கத்துக்கு கடிதங்களும் எழுதியுள்ளனர். அவநம்பிக்கைக்குள் தள்ளப்பட்ட சிலர், தூக்க மாத்திரையை அதிகளவில் உட்கொள்ளுதல், தூக்கு மாட்டிக்கொள்ளுதல், கத்தியால் வயிற்றை கிழித்துக்கொள்ளல் மற்றும் தொண்டையை அறுத்தல் போன்ற தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டு, பின்னர் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். 2021ம் ஆண்டு, மட்டக்களப்பைச் சேர்ந்த 52 வயதான முகமது அலி என்பவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது சுகயீனமடைந்து மரணித்தார்.

இந்த கைதிகள் சிறை அதிகாரிகள் கூறும் பொய் வாக்குறுதிகளை நம்பி கடந்த போராட்டங்களை கைவிட்டிருக்கின்றனர். இந்திய ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்து தசாப்த காலங்களாக இலங்கை ஆட்சியாளர்களின் தமிழர்-விரோத யுத்தத்துக்கு ஆதரவளித்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ் நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினிடம் தங்களை விடுவிக்குமாறு மன்றாடும் பதாகையுடன் அவரின் படத்தையும் கைதிகள் ஏந்தியிருக்கின்றனர். போராட்டத்தின் 15வது நாள் அவர்கள் அவற்றை எடுத்துக்கொண்டு சிறைச்சாலைக்குள் ஊர்வலமொன்றையும் நடத்தினர்.

எவ்வாறெனினும், இனிமேலும் தமிழ் நாட்டுக்கு வரும் அகதிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும் வகையில் இதுவரையும் ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசும் உண்ணாவிரதம் குறித்து மௌனம் காத்து வரும் அதே வேளை, பொரளாதார நெருக்கடியில் மூழ்கிப் போயுள்ள ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் ஆட்சியை காப்பாற்ற நிதி மற்றும் பொருள் உதவி செய்து வருகின்றனர்.

திருச்சி சிறைச்சாலையில் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 164 அகதிகள் இவ்வாறு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 104 பேர் இலங்கை தமிழர்கள் ஆவர். இவர்களின் வழக்குகள் முடிவடைந்த நிலையிலும் சிலருக்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத நிலையிலும் இந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜோன்சன் என்ற வழக்கறிஞர் ஐபிசி தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவிக்கின்றார்.

அவர் மேலும் கூறும்போது, “இந்த அகதிகள், குற்றங்களில் ஈடுபட்டார்கள் அல்லது அவர்கள் மீது வழக்குகள் இருக்கின்றன என்று அறிந்தால் அல்லது அவர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களைப் பிடித்துக் கொண்டுபோய், சிறப்பு முகாம் என்று அழைக்கப்படும் இந்தச் சிறைச்சாலையில் தள்ளிவிடுவார்கள். இது ஒரு மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும,” என்றார்.

ஜோன்சன் கூறியவாறு, இந்த முகாமில் தமிழ் நாட்டு ஆண் ஒருவரைத் திருமணம் செய்த இரண்டரை வயது குழந்தையின் தயார் மற்றும் ஆனந்தராசா என்ற மனநலம் பாதிக்கப்பட்டவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த கைதிகள், கடந்த மார்ச் மாதம், இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜிற்கு ஒரு கடிதத்தினை எழுதி, தங்கள் விடுதலைக்கு ஆவன செய்யுமாறு கேட்டிருந்தார்கள். அதில் அவர்கள் பின்வருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

“எங்கள் குடும்பங்கள், எங்களதும் மற்றும் வேறு யாரினதும் உதவியும் இன்றி வறுமையில் வாழத் தள்ளப்பட்டுள்ளார்கள். அதனால் அவர்களும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். நாங்கள் எங்கள் விடுதலைக்காக, அமைதியான முறையில் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனாலும் எமக்கு விடுதலை இல்லை. எமது துயரத்துக்கு ஒரு முடிவு இல்லாத காரணத்தினால், நாம் எமது உயிரைக் கூட மாய்க்கும் துயர முடிவுக்கு சென்றுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தப் போராட்டத்தை நடத்துவபவர்கள் ஒரு முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் தங்களின் நிலமைகளை விளக்குகின்றார்கள்.

ஒருவர் கூறியதாவது: “நாங்கள் பலர் இங்கே பிறந்து, படித்தவர்கள். நாங்கள் கடவுச்சீட்டு எடுத்ததாகவும் அல்லது எடுக்க முயன்றதாகவும் கூறி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு, முறையான நீதிமன்ற விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறை கியூ பிரிவினரால் கைது செய்யப்பட்டு இங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றோம். எமது குடும்பங்கள் முகாம்களிலும் மற்றும் வெளிப்பதிவுகளிலும் இருக்கின்றார்கள், எங்களை விடுதலை செய்யுங்கள்”

இன்னொருவர், தனது கைகளைக் கூப்பி கெஞ்சினார். “எனது குடும்பம் முகாமில் இருக்கின்றது, எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். மூத்த மகள் மேல்படிப்பை படிக்க மிகவும் சிரம்படுகின்றாள். எனது மனைவி ஆஸ்த்மா நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் இல்லை. எங்களை எங்கள் குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள் என்று கெஞ்சிக் கேட்கின்றோம்,” என அவர் கோரினார்.

சிறைச்சாலை (தடுப்பு முகாம்) முகாம் அகதிகள், மறுவாழ்வு மையங்கள் மற்றும் வெளி இடங்களில் வாழும் அகதிகள் என மூன்று பிரிவாக இலங்கை அகதிகள் கையாளப்படுகின்றார்கள். வழக்கறிஞர் ஜோன்சனின் அண்மைய தகவல்களின்படி, மறுவாழ்வு முகாம்களில் 85,000 பேரும் மற்றும் வெளிப் பதிவுகளில் சுமார் 100,000 பேரும் வாழ்கின்றார்கள்.

இதில் சிறைச்சாலைக் கைதிகளும் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் வாழும் அகதிகளும் மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றார்கள். இவர்கள், தமிழ் நாடு பொலிஸ் மற்றும் கியூ உளவுப் பிரிவினரால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். மதுரை, ஈரோடு, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, காஞ்சிபுரம், திருச்சி மற்றும் திருவள்ளூர் உட்பட தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் 115 முகாம்களில் மக்கள் வாழ்கின்றார்கள். சிறைச்சாலைகளில் இருப்பவர்களைப் பார்ப்பதற்கான அனுமதி இலகுவில் கிடைக்காது என்று அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

1983 ஜூலையில், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான இனக்கலவரத்தினைத் தொடர்ந்தே, இலங்கையில் இருந்து தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு தப்பிச் செல்ல ஆரம்பித்தார்கள். கடல் வழியாக சென்று இராமேஸ்வரத்தில் இறங்குபவர்கள், அங்கு மண்டபம் இடைத்தங்கல் முகாமில் வைக்கப்பட்டு, பின்னர் பல பிரிவுகளாக வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த முகாம்கள் அனைத்தும், இழிந்த நிலையிலானவை ஆகும்.

பொதுச் சுகாதாரம் மற்றும் குடிசைகள் என்பன மிகவும் தரங்குறைந்த நிலையிலேயே உள்ளன. இங்கு வாழும் மக்களுக்கு எந்தவிதமான ஜனநாயக உரிமைகளோ அல்லது அடிப்படை வசதிகளோ இல்லை. பிள்ளைகளுக்கு பொருத்தமான கல்வி வசதி கிடையாது. படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு கூட அகதிகள் எனக் காரணம் காட்டி பொருத்தமான தொழில்கள் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் சுமை தூக்குதல் அல்லது ஏதாவது கூலி வேலைகளிலேயே ஈடுபடுகின்றார்கள்.

இந்தியாவில் தங்கியிருந்த, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கினை தளமாக கொண்டு செயற்பட்ட பிரிவினைவாத ஆயுத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஏதாவது குற்றங்களைச் செய்தால், அவர்களைத் தடுத்து வைப்பதற்காக என்று கூறிக்கொண்டு, 1990ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் தலமையிலான தமிழ் நாடு அரசாங்கத்தினால் இந்த தடுப்பு முகாம் என்னும் சிறைச்சாலைப் பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனாலும் சாதாரண அகதிகளே இந்த சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டார்கள்.

2009ம் மே மாதம் பத்தாயிரக்கணக்கான பொது மக்களின் படுகொலையுடன் புலிகள் கொடூரமாக தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட, அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இத்தகைய விசேட சிறை முகாம்கள் இன்னுமும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த, திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன, தமது சுய அரசியல் நலனுக்காகவும் மற்றும் தேர்தல் வெற்றிகளுக்காகவும் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்கள் பற்றி நீலிக் கண்ணீர் வடித்து வரும் அதேவேளை, அங்கிருக்கும் இலங்கை அகதிகள் மீது மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறைகளை முன்னெடுத்து வருகின்றன.

ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) உடபட, சீமானின் நாம் தமிழர் கட்சி, வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பல அரசியல் கட்சிகளும் ஏனைய தமிழ் தேசியவாத தீவிரவாத அமைப்புக்களும், அதே போல் இலங்கை தமிழ் தேசியவதக் கட்சிகெளும் இந்தியாவை “ஈழத் தமிழர்கள் தொப்புள் கொடி உறவு” என்று போலியாக பேசிக்கொண்டு, ஆளும் கட்சிகளின் ஒடுக்குமுறைக்கு ஆதரவு வழங்கி வருகின்றன.

இதேவேளை, இந்திய மற்றும் தமிழ் நாட்டு ஆட்சியாளர்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணிவரும், இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி போன்ற தமிழ் தேசியவாத மற்றும் முதலாளித்துவ கட்சிகள், அவர்களை விடுதலை செய்யுமாறு அவ்வப்போது வாய்ச்சேவை செய்வதுடன் நிறுத்திக்கொள்கின்றன.

இந்த கட்சிகள் வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு சுயாட்சியை அமைப்பதன் மூலம் மட்டுமே தென்னிந்தியாவின் பாதுகாப்பு தங்கியிருப்பதாக பிரச்சாரம் செய்வதன் மூலம், இலங்கையில் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களை தக்கவைத்துக்கொள்ள இந்தியாவின் உதவியைப் பெற முயல்கின்றன. இதன் காரணமாக நரேந்திர மோடியின் அரசாங்கம், காஷ்மீரிலும் நாடு பூராகவும் முன்னெடுக்கும் முஸ்லிம் விரோத வன்முறைகளைக் கண்டும் காணாதது போல் இருந்துவிடுகின்றன.

தமிழ் முதலாளித்துவ கட்சிகள் பரப்பும் மாயையின் காரணமாக, கோவிட்–19 தொற்று நோய் மற்றும் உக்ரேனில் நடைபெறும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ பினாமி யுத்தம் காரணமாகவும் தீவிரமடைந்துள்ள கடும் பொருளாதார நெருக்கயினால், இலங்கையில் உருவாகியுள்ள பட்டினி சூழ்நிலையால் இலங்கைத் தமிழர்கள், தங்கள் உயிரையும் பணயம் வைத்து, ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு, டசின் கணக்கில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இத்தகைய அரச அடக்குமுறை மற்றும் இந்தியாவில் மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோய்க்கும் ஆளாகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

Loading