மக்ரோன்-ரூசெல் சந்திப்பு: செல்வந்தர்களின் ஜனாதிபதியுடன் "தேசிய ஐக்கிய" அரசாங்கத்திற்கு ஸ்ராலினிச PCF கலந்துரையாடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் “Ensemble” (ஒன்றாக) கூட்டணி அதன் அறுதிப் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, பிரான்சில் ஆட்சி நெருக்கடி உருவாகியுள்ளது. இப்போது மக்ரோன் தனது சமூக சிக்கன நடவடிக்கை கொள்கை மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரைத் திணிக்க பாராளுமன்ற பெரும்பான்மையை உருவாக்க நம்பகமான கூட்டாளிகளைத் தேடுகிறார். இந்த நோக்கத்துடன், அவர் செவ்வாயன்று ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) பொதுச்செயலாளர் ஃபாபியன் ரூசெல் (Fabien Roussel) ஐ சந்தித்தார்.

புதன் காலை Le Parisien உடனான ஒரு நேர்காணலில், ரூசெல் இழிந்த முறையில் மக்ரோனுடனான தனது சந்திப்பை நியாயப்படுத்த முயன்றார், அதே நேரத்தில் “செல்வந்தர்களின் ஜனாதிபதி”க்கு எதிரான தொழிலாளர்களின் கோபத்தை ஒப்புக்கொள்கையில், ஒரு Ensemble-PCF கூட்டரசாங்கத்திற்கு கதவைத் திறந்து வைத்தார்.

மக்ரோனைப் பற்றி, ரூசெல் கூறினார்: 'அவர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் அரசியலமைப்பை பரிசீலித்து வருகிறார், அதில் பங்கேற்க கட்சிகள் இருந்தால்,' அல்லது அவர் பாராளுமன்ற உரையை முன்வைக்கும்போதெல்லாம், 'ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விடையங்களின் அடிப்படையில் ஆதரவைப் பெற' முயற்சிக்கிறார்.

இரண்டு மூலோபாயங்களும் PCF மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் தலைமையிலான NUPES (புதிய ஜனரஞ்சக சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒன்றியம்) இல் உள்ள மற்ற கட்சிகளை தொழிலாள வர்க்கத்தின் மீதான மக்ரோனின் திட்டமிட்ட தாக்குதலுடன் ஒருங்கிணைப்பதை உள்ளடக்கியது. முதலாவது மூலோபாயத்தின்படி, பாராளுமன்றத்தில் 289 இடங்களுடன் பெரும்பான்மைக்கு வருவதற்கு “Ensemble” வென்ற 246 இடங்களுக்கு வெளியே கூட்டாளிகள் தேவைப்படுவார்கள். இரண்டாவது மூலோபாயத்தின்படி, எதிர்க்கட்சிகள் அவரது உரைகளுக்கு 'ஒவ்வொரு விடயங்களின் அடிப்படையில்' வாக்களித்து, பாராளுமன்றத்தில் அவரது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுப்பதைத் தவிர்ப்பதன் மூலம் அவருக்கு அமைதியாக ஆதரவளிப்பார்கள்.

இரண்டாவது விருப்பத்தேர்வை தான் விரும்புவதாகவும் ஆனால் மக்ரோனுடன் அரசாங்கக் கூட்டணிக்கு தான் திறந்திருப்பதாகவும் ரூசெல் சுட்டிக்காட்டினார். அவர் Le Parisien இடம் கூறினார்: 'இமானுவல் மக்ரோன் என்னிடம் தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒரு தீர்வா என்று கேட்டார். ... நான் உடனடியாக ஜனாதிபதியிடம் சொன்னேன்: 'உங்கள் மீது அப்படியொரு அவநம்பிக்கையான சூழல் உள்ளது, அது சாத்தியமற்றது'. அது புரிந்து கொள்ளப்படாது.'

உண்மையில், மக்ரோன்-PCF கூட்டணியை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது ரூசெல் எதிர்பார்க்கும் தடையாக இல்லை. மாறாக PCF பற்றி இதன் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் நன்றாக புரிந்துகொள்வார்கள் என்று அவர் அஞ்சுகிறார். அத்தகைய கூட்டணியை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளக்கூடிய ஒரு கட்சி ஏகாதிபத்தியத்தின் கருவியாகும். மேலும் சாத்தியமான மக்ரோன்-PCF கூட்டணிக்கு எதிராக போராடுவதற்கு, PCF மற்றும் NUPES உடன் தொடர்புடைய அனைத்துக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க எந்திரங்களுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை தொழிலாளர்கள் மீது வெளிப்படையாகத் திணிக்கும்.

உண்மையில், தொழிலாளர்களின் எதிர்வினை குறித்த பயம் இல்லையெனில், PCF மக்ரோனுடன் ஒரு புனிதமான கூட்டில் சேரும் என ரூசெல் உடனடியாகக் கூறினார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் பெத்தான் (Pétain) இன் நாஜி ஒத்துழைப்பு ஆட்சி சரிந்ததைத் தொடர்ந்து முதலாளித்துவ அரசாங்கத்தில் PCF பங்கேற்றதைக் குறிப்பிட்டு, அவர் கூறினார்: 'நாங்கள் ஏற்கனவே 1945 இல் ஜெனரால் டு கோல் உடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் பங்கேற்றோம், இது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயமல்ல.

விடுதலைப் (Libération) போராட்டங்கள் பற்றிய இந்தக் குறிப்பு, மக்ரோனுடனான சூழ்ச்சிக்கையாளல்களுக்கு ஒரு தவறான 'இடது' மறைப்பைக் கொடுக்கும் இழிந்த முயற்சியாகும்.

1945 இல், PCF புரட்சிகரமானதோ அல்லது மார்க்சிசமானதோ அல்ல, மாறாக ஸ்ராலினிசமாகவே இருந்தது. 1935ல் மக்கள் முன்னணி (Front populaire) உருவாவதற்கும் 1991ல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கும் இடையில், சோவியத் ஒன்றியத்தில் தொழிலாளர்களின் அதிகாரத்தை அபகரித்தவர்களின் ஸ்ராலினிச கூட்டாளியாக இருந்தது. பிரெஞ்சு முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அதனது தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில், விடுதலை (Libération) போராட்ட வேளையில் ஒரு புரட்சியைத் தடுத்தது, எதிர்ப்பின் பெரும்பகுதியை உருவாக்கிய மக்கி (maquis) மற்றும் தொழிலாளர் குழுக்களை அகற்றியது. மெக்சிகோவில் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதற்கான ஸ்ராலினின் சதித்திட்டத்தில் பங்கேற்ற அது, ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு போராளிகளை வேட்டையாடி கொலை செய்தது.

எவ்வாறாயினும், மக்ரோனின் இன்றைய திட்டமானது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் PCF இன் உதவியுடன் பிரான்சில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்க மார்ஷல் திட்ட உதவியுடன் நிதியளிக்கப்பட்ட சமூக சீர்திருத்தங்களுடன் எந்த தொடர்பும் கொண்டதல்ல. அது சமூக பாதுகாப்பு, பொது ஓய்வூதியம், தொழில்துறையின் தேசியமயமாக்கல் ஆகியவற்றை கொண்டிருந்தது. செல்வந்தர்களின் ஜனாதிபதியான மக்ரோனிடம் சீர்திருத்தங்கள் எதுவும் இல்லை. மாறாக, அவர் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போருக்கு நிதியளிப்பதற்காகவும், உடைமை வர்க்கங்களை பெருமளவில் வளப்படுத்துவதற்காகவும் தொழிலாளர்களைக் கொள்ளையடித்து வருகிறார்.

அனைத்து நேட்டோ ஏகாதிபத்திய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தக் கொள்கை, தீவிரமான, சர்வதேச தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தூண்டி வருகிறது. பிரிட்டனில் தேசிய இரயில் வேலைநிறுத்தம் வெறுக்கப்பட்ட போரிஸ் ஜோன்சன் அரசாங்கத்துடனான நேரடி மோதலாக மாறியுள்ளது. ஐரோப்பா முழுவதும், விமான நிலையங்களும் பராமரிப்பாளர்களும் தொற்றுநோயின் உத்தியோகபூர்வ பேரழிவு கையாளுதலின் வீழ்ச்சிக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்சிலும் சர்வதேச அளவிலும் போராட்டங்கள், பணவீக்கத்தின் மூலம் வாங்கும் சக்தியை முடக்குவதை எதிர்க்கின்றன மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் இடையே ஒரு அரசியல் மோதலைத் தயாரிக்கின்றன.

இந்த சூழலில், மக்ரோனுடன் சாத்தியமான 'தேசிய ஐக்கியத்திற்கு' ரூசெல் அணிதிரண்டது PCF இன் மற்றொரு வலதுபுறம் நோக்கிய வன்முறைத் திருப்பத்தைக் குறிக்கிறது. 1991ல் இருந்து, அது அதன் தொழிலாள வர்க்க சமூக அடித்தளத்தை இழந்தது, மக்ரோன் உருவான முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது, இன்று PCF எந்திரம் அரசு மற்றும் பெருவணிகத்தால் நிதியளிக்கப்பட்ட குட்டி முதலாளித்துவ செயற்பாட்டாளர்களால் நடத்தப்படும் வெற்றுக் கூடாகும். நிறுவப்பட்ட ஒழுங்கில் அதன் இடத்தை அச்சுறுத்தும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு தாக்குதலுக்கும் அஞ்சி, அது இயல்பாகவே ஒழுங்கின் பக்கபலமாக உள்ளது.

'மஞ்சள் சீருடை' எதிர்ப்புக்கள் தொடங்கியவுடன், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் PCF உடன் நெருக்கமாக தொடர்புடைய ஒரு தொழிற்சங்கமான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) அதிகாரத்துவம் வன்முறையாக கண்டனம் செய்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எதிரான ஸ்ராலினிச அவதூறுகளை எதிரொலித்து, PCF அதை 'ஹிட்டலெரோ-ட்ரொட்ஸ்கிஸ்ட்' (Hitléro-Trotskyste) என்று அழைத்தது, CGT இன் தலைவரான பிலிப் மார்ட்டினேஸ், 'பழுப்பு' (சுருக்கமாக, நவ-பாசிஸ்டுகள்) மஞ்சள் நிற ஆடைகளின் கீழ் மறைந்திருப்பதாக தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்.

இன்று, ரூசெல் பொலிஸுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்ததோடு, பாராளுமன்றத்தில் மரின் லு பென்னின் நவ-பாசிச தேசிய பேரணி (RN) கட்சியை மக்ரோனுக்கான முன்னணி எதிர்க்கட்சியாக மாற்ற முயற்சிக்கிறார்.

செவ்வாயன்று, உண்மையில், NUPES இன் ஐக்கிய பாராளுமன்றக் குழுவை அமைப்பதற்கான ஜோன்-லூக் மெலோன்சோனின் அழைப்பை நிராகரிக்க, PS இன் திசையில் ரூசெல் இணைந்தார். இது RN இன் 89 பேரை விட 142 பிரதிநிதிகளுடன் NUPES ஐ மக்ரோனுக்கு எதிரான முதல் எதிர்க்கட்சி குழுவாக மாற்றியிருக்கும். ஆனால் ரூசெல், மெலோன்சோனின் பொலிஸ் மீதான விமர்சனங்களால் தான் கோபமடைந்ததால் NUPES பாராளுமன்றக் குழுவை ஏற்பாடு செய்ய மறுத்ததாகக் கூறினார்.

பாரீஸ் நகரின் மையப்பகுதியில் வாகன ஓட்டிகள் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட பின்னர், பொலிசார் 'கொல்லுகின்றனர்' என்று சுட்டிக் காட்டிய மெலோன்சோனின் கருத்துக்களைக் கண்டித்த ரூசெல், NUPES இன் பெயரில் 'குறிப்பிட்ட சில கருத்துக்களில் தன்னை அடையாளம் காணவில்லை' என்று கூறினார். மெலோன்சோனின் கருத்துக்கள் பொலிஸை அவதூறு செய்வதை இலக்காகக் கொண்ட ஒரு 'கலவை' என்று அழைத்த அவர், 7.7 மில்லியன் வாக்காளர்களை ஒருங்கிணைத்திருந்த மெலோன்சோனை, இது 'பிரான்சின் ஒரு பகுதி, நகரங்களில் ஆர்வமுள்ளது, கிராமப்புறங்களில் அல்ல' என்று குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறினார்: 'எனது நாட்டில், கிராமப்புற பிரான்சில், இந்த [மெலோன்சோனின்] கருத்துக்கள் பிரெஞ்சு மக்களை புண்படுத்துகின்றன என உணர்கிறேன், அவை புரிந்து கொள்ளப்படவில்லை.'

NUPES முழுவதையும் போலவே, ரூசெல்லும் வர்க்கப் போராட்டத்திற்கும் தொழிலாள வர்க்கம் இடது பக்கம் திரும்புவதற்கும் விரோதமானவர். தங்களுக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர் வாக்காளர்களை போராட்டத்தில் அணிதிரட்ட அவர்கள் எதுவும் செய்வதில்லை. உண்மையில், அவர்கள் தொழிலாள வர்க்கத்தில் பெற்ற தேர்தல் ஆதரவைப் பற்றி அஞ்சுகிறார்கள் மற்றும் முடிந்தவரை தங்கள் வாக்காளர்களை மனச்சோர்வடையச் செய்ய முயற்சிப்பதன் மூலம் எதிர்வினையாற்றுகிறார்கள். எனவே ரூசெல், போலீஸ்காரர்களுக்கு முன்னால் முழங்காலில் தவழ்கிறார், மேலும், மக்ரோனுடன் அவர் உடந்தையாக இருப்பதைக் காட்டிக்கொள்வதன் மூலம், மக்ரோனுக்கு எதிரான ஒரே எதிர்ப்பாக லு பென் தன்னை பொய்யாகக் காட்டிக் கொள்ள ஒரு தொடக்கத்தை அளிக்கிறார்.

போர், சிக்கன நடவடிக்கை மற்றும் தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்கு எதிரான போராட்டம் சர்வதேச வர்க்கப் போராட்டத்தால் மட்டுமே நடத்தப்பட முடியும். ரூசெலின் கருத்துக்கள் ஸ்ராலினிசத்துடன் கூட்டுச் சேர்ந்த NUPES உட்பட அனைத்து அமைப்புகளின் திவால்நிலை பற்றிய மற்றொரு எச்சரிக்கையாகும். சமூகப் போராட்டங்களின் எழுச்சியின் கட்டமைப்பிற்குள், தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதன் அவசியத்தை தொழிலாளர்களை நம்பவைக்க போராடும் ஒரு முன்னணிப் படையாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியைக் (Parti de l’égalité socialiste) கட்டியெழுப்புவதுதான் இதற்கு ஒரே மாற்றாகும்.

Loading