குறைந்தது 46 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் கொதிக்கும் டெக்சாஸ் வெப்பத்தில் டிரக் டிரெய்லரில் இறந்து கிடந்தனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தற்கால அமெரிக்காவில் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பாரிய உயிரிழப்பு நிகழ்வு இல்லாமல் ஒரு நாள் கூட கடந்ததில்லை. திங்கட்கிழமை மாலை, டெக்சாஸின் சான் அன்டோனியோவில் உள்ள பரபரப்பான மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில், ஒரு அரை-டிரக் டிரெய்லர் நிரம்ப சிலர் இறந்து கிடந்ததும், சிலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூன் 27, 2022, திங்கட்கிழமை, சான் அன்டோனியோவில், பல சடலங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அரை-டிரக் டிரெய்லரின் காட்சியை காண விடாமல் பொலிசார் தடுக்கின்றனர். [AP Photo/Eric Gay] [AP Photo/Eric Gay]

மத்திய அமெரிக்காவில் உள்ள ஸ்திரமற்ற பொருளாதார நிலைமைகள் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாரம்பரிய சுரண்டலில் இருந்து தப்பியோடிய ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை டிரக் ஏற்றிச் சென்றது. ஜனாதிபதி ஜோ பைடெனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் விதித்துள்ள குடியேற்ற எதிர்ப்பு கட்டுப்பாடுகளின் காரணமாக புலம்பெயர்ந்தோர் இரகசியமாக அமெரிக்காவிற்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதுவரை, உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 46 ஆக உள்ளது, ஆனால் இது உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 16 பேர் பல்வேறு உடல்நிலைகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்க வரலாற்றில் இது மிக மோசமான நிகழ்வாகும். 2003 ஆம் ஆண்டில் டெக்சாஸின் விக்டோரியாவில் ஒரு டிரக் டிரெய்லரில் 19 பேர் மூச்சுத் திணறி இறந்தது தான் குடியேற்றவாசிகள் மூச்சுத் திணறி இறந்த இரண்டாவது மிகப்பெரிய நிகழ்வாக இருந்தது, இப்போதைய உயிரிழப்பு அதிலிருந்து இரட்டிப்பாக உள்ளது.

திங்கட்கிழமைக்கு முன்னதாக, சான் அன்டோனியோவில் வெப்பநிலை 103 டிகிரி ஃபாரன்ஹீட்டை (40 செல்சியஸ்) எட்டியது. டிரெய்லரில் இறந்தவர்கள் உயிர் தப்பிக்க போராடி தங்கள் கடைசி நிமிடங்களை எப்படி கழித்தார்கள் என்பதை கற்பனை செய்வது கடினமே. டிரெய்லர் கண்டிபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒரு நபர், “இப்போது அதில் குழந்தைகள் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்” என்று நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார். பெரும்பாலும் குடும்பங்கள் ஒன்றாக பயணம் செய்கின்றன.

டிரெய்லரைக் கண்டுபிடித்த பின்னர், பொலிசாரும் எல்லைக் காவல்படையும் இராணுவத் தரமுள்ள வெப்பம்-தேடும் உபகரணங்களைப் பயன்படுத்தி, தப்பியோட முயன்ற புலம்பெயர்ந்தோரைத் தேடுவதற்கும் தடுத்து வைப்பதற்கும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பாசிச டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பாரிய மக்கள் எதிர்ப்பின் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடென் நிர்வாகம் தான் இந்த சமூக குற்றத்திற்கு பொறுப்பாகும், ஆனால் அவரது நிர்வாகம், புலம்பெயர்ந்தோர் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தி வருகிறது, ட்ரம்ப் பதவியில் இருந்த ஏதேனும் ஒரு வருடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை விட அதிக புலம்பெயர்ந்தோரை 2021 இல் அது கைது செய்துள்ளது. பைடென் இந்த ஆண்டு சுமார் 2 மில்லியன் புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் வேகத்தில் இருக்கிறார், இது ஒரு புதிய சாதனையாகும். இரண்டு நாட்களுக்கு முன்னர், ICE கைதுகள் மீதான அனைத்து முந்தைய கட்டுப்பாடுகளையும் பைடென் முடிவுக்குக் கொண்டு வந்தார், மேலும், கைதுக்கான ஆவணத்தை அல்லது எத்தனை ஆண்டுகள் அவர்கள் அமெரிக்காவில் இருந்திருக்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல் புலம்பெயர்ந்தோரை கைது செய்யுமாறு முகவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆபிரிக்காவின் வடக்குக் கடற்கரையில் உள்ள மெலில்லாவின் ஸ்பானியப் புறக்காவல் பகுதிக்குள் நுழைய முயன்ற ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர் மீது ஸ்பானிய மற்றும் மொராக்கோ எல்லைப் பொலிசார் கொடூரமான கைகலப்புத் தாக்குதல் நடத்திய 24 மணிநேரத்திற்குப் பின்னர் டெக்சாஸில் டிரெய்லர் கண்டுபிடிக்கப்பட்டது. குறைந்தது 36 பேர் இறந்துள்ளனர், சிலர் பொலிசாரால் தாக்கப்பட்ட பின்னர் இறந்தனர், சிலர் எல்லைப்புற முள்வேலியில் தொங்கி இறந்தனர், சிலர் பொலிஸ் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலால் இறந்தனர்.

இரண்டு குற்றங்களும் அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் மனிதாபிமான காரணங்களுக்காக உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக போரை நடத்துவதாக கூறும் அவற்றின் பொய்யை அம்பலப்படுத்துகின்றன. இதே குற்றங்கள் ரஷ்யாவில் நடந்திருந்தால், ஏகாதிபத்திய அரசாங்கங்கள், அணுசக்தி பேரழிவால் உலகை அச்சுறுத்தும் ஒரு போரை மேலும் தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்துவதற்கான சாக்குப்போக்காக அவற்றைப் பயன்படுத்தியிருக்கும்.

அமெரிக்காவின் அரசியல் ஸ்தாபகம் சான் அன்டோனியோவில் நடந்த இந்த வெகுஜன மரண நிகழ்வை குடியேற்றத்தை மேலும் ஒடுக்குவதை நியாயப்படுத்த பயன்படுத்தும் என்பது ஏற்கனவே தெளிவாக உள்ளது. தனது மாவட்டத்தில் சடலங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, டெக்சாஸ் குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் டோனி கோன்சலேஸ் (Tony Gonzales), குடியேற்றம் “சட்டவிரோதத்தை ஊக்குவிக்கிறது மற்றும் நமது தெற்கு எல்லையில் முழுமையான குழப்பத்தை உருவாக்குகிறது” என்று ட்வீட் செய்திருந்தார்.

நிகழ்விற்குப் பின்னர், கோன்சலேஸ், ஜனநாயகக் கட்சியினரை போதுமான அளவு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். ட்ரம்பின் பாசிச ஆதரவாளரான டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott), மரணத்திற்கு பைடெனைக் குற்றம்சாட்டி, இவ்வாறு ட்வீட் செய்தார்: “அவை, அவருடைய திறந்த எல்லைக் கொள்கைகளின் விளைவாகும். மேலும், அவர் சட்டத்தை அமல்படுத்த மறுத்ததன் கொடிய விளைவுகளையே அவை காட்டுகின்றன.”

பெருநிறுவன ஊடகங்கள், எல்லையில் இராணுவ பாணியிலான அடக்குமுறையை செயல்படுத்துமாறு கோருவதையும் மற்றும் டிரெய்லரை ஓட்டிச் சென்ற அந்த குற்றவாளி அதை வெப்பத்தில் கைவிட்டுச் சென்றதை கண்டிப்பதையும் மாறிமாறி செய்கின்றன.

ஆனால், கடத்தல்காரர்களின் இருப்பு என்பது, அடிப்படையில் குற்றம் சாட்டப்படும் அமெரிக்க அரசாங்கத்தின் இரு கட்சி எல்லைக் கொள்கைகளின் ஒரு குற்றவியல் துணை தயாரிப்பாகும்.

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி பில் கிளின்டனால் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க-மெக்சிகோ எல்லை இராணுவமயமாக்கலுக்கு முன்னர் இதுபோன்ற மரணங்கள் நிகழவில்லை. 1990 களில் கிளின்டன், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஆதரவுடன், ‘Operation Gatekeeper’ மற்றும் ‘Operation Hold-the-Line,’ போன்ற திட்டங்களை இயற்றினார், அதாவது, நகர்ப்புற கடக்கும் பகுதிகளை இராணுவமயமாக்குவதும், குடியேறுபவர்களை வாழத் தகுதியற்ற பாலைவனங்களை கடக்க கட்டாயப்படுத்துவதும் இதன் நோக்கமாக இருந்தது.

2006 ஆம் ஆண்டில், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்தின் கீழ், காங்கிரஸ் பாதுகாப்பான வேலிகள் சட்டத்தை (Secure Fences Act) நிறைவேற்றியது, இது நூற்றுக்கணக்கான மைல்களுக்கு எல்லைத் தடைகள் கட்டமைக்கப்படுவதை எளிதாக்கியதுடன் எல்லையை மேலும் இராணுவமயமாக்கியது. இந்த சட்டத்திற்கு ‘ஆம்’ என்று வாக்களித்தவர்களில் அப்போதைய செனட்டர்களான ஜோசப் பைடென், ஹிலாரி கிளின்டன், பராக் ஒபாமா, ஜோன் மெக்கெய்ன் மற்றும் சார்லஸ் ஷூமர் ஆகியோர் அடங்குவர்.

2010 ஆம் ஆண்டில், ஒபாமா நிறைவேற்றிய ஒரு சட்டம், எல்லையில் கப்பற்படை ட்ரோன்களை நிலைநிறுத்தியதுடன், குடியேறுபவர்களைத் தடுப்பதற்கு அல்லது கைது செய்வதற்காக 1,500 தேசிய காவல்படையினரை எல்லைக்கு அனுப்பியது. 2018 ஆம் ஆண்டில், ட்ரம்ப் தேசிய காவல்படையை எல்லையில் நிலைநிறுத்துவதற்கு நிதியளிப்பதற்காக காங்கிரஸால் ஒதுக்கப்பட்ட பணத்தை சட்டவிரோதமாக திருப்பியபோது ஜனநாயகக் கட்சி குழப்பமடைந்தது. பைடென் நிர்வாகம், அனைத்து புகலிட விண்ணப்பதாரர்களுக்கும் தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமலில் வைத்திருந்தது, மேலும் ட்ரம்பின் மெக்சிகோவில் தங்கியிருத்தல் கொள்கையையும் தொடர்ந்து பின்பற்றியது, இது அனைத்து அகதிகளும் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்தது.

டிரெய்லர் தென்மேற்கு சான் அன்டோனியோவில் கண்டுபிடிக்கப்பட்டது, அங்கிருந்து ஒரு மைல் தொலைவில், கிட்டத்தட்ட சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஜூலை 17, 2017 அன்று, ஒரு அரை-டிரக் டிரெய்லரின் பின்புறத்தில் நீரிழப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ஒன்பது புலம்பெயர்ந்தவர்கள் இறந்து கிடந்தனர். அந்த நேரத்தில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இவ்வாறு எழுதியது:

பல தசாப்த கால பொருளாதார சுரண்டல் மற்றும் போரின் அழுத்தத்தின் கீழ் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களால் உலகம் நிரம்பி வழிகிறது. 2015 ஆம் ஆண்டின் ஐ.நா. அறிக்கையின்படி, உலகில் 65.3 மில்லியன் அகதிகள் உள்ளனர், இது ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.

அகதிகள் நெருக்கடி என்பது முதலாளித்துவ அமைப்பின் விளைபொருளாகும், அதற்கு சோசலிச தீர்வு தேவை. மூலதனம் எல்லைகளைத் தாண்டிச் செல்வதற்கும், மனிதர்கள் தேசிய எல்லைகளைத் தாண்டி ஓடிப்போகும் சிரமத்திற்கும் இடையிலான முரண்பாடு வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை. இணையம், மொபைல் போன்கள் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைந்த விநியோக இணைப்புகளின் வருகையின் மூலம் உலகப் பொருளாதாரம் பெருகிய முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்படுவதால், ஜனநாயக நாடுகள் என்று அழைக்கப்படும் ஆளும் வர்க்கங்கள், லியோன் ட்ரோட்ஸ்கி கூறியது போல், ‘சுங்கச் சுவராலும், பயோநெட்டுகளின் தொகுப்பாலும்’ தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.

‘இடதுசாரி’ முழக்கங்களை தேசியவாத விஷத்துடன் சமரசம் செய்யும் முயற்சிகளை சோசலிஸ்டுகள் நிராகரிக்கின்றனர். இங்கிலாந்தில் ஜெர்மி கோர்பின் மற்றும் அமெரிக்காவில் பேர்னி சாண்டர்ஸ் போன்ற நபர்கள் 'குடியேற்றத்தை நியாயமான முறையில் கையாளுதல்' (கோர்பினின் தொழிற் கட்சி அறிக்கை) பற்றி பேசும் போதும், மற்றும் ‘அமெரிக்காவில் உள்ள அனைவரையும் ஏழைகளாக்கும்’ (வோக்ஸ் உடனான சாண்டர்ஸின் பேட்டி, ஜூலை 18, 2015) திறந்த எல்லைகள் என்ற ‘வலதுசாரி முன்மொழிவை’ கண்டிக்கும் போதும், அவர்களின் முதலாளித்துவ சார்பு கண்ணோட்டத்தை பறைசாற்றுகின்றனர்.

சோசலிஸ்டுகள் உலகத்தை தேசிய அரசுகளாகப் பிரிப்பதை எதிர்க்கிறார்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் சர்வதேச தன்மைக்கு இசைவாக உலகின் புவியியல் அமைப்புக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

Loading