மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு சதி குறித்த பிரதிநிதிகள் சபைக் குழுவின் தற்போதைய தொடர் தொலைக்காட்சி விசாரணைகளின் ஏழாவது தவணை, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2020 தேர்தலை முறியடித்து சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான தனது முயற்சியில் தீவிர வலதுசாரி பயங்கரவாதிகளை அணிதிரட்டி வன்முறையில் ஈடுபட்டதை மையப்படுத்தியது.
செவ்வாயன்று நடைபெற்ற விசாரணை, ட்ரம்பின் தேர்தல் தோல்வியை பரந்தளவு வாக்குகள் வித்தியாசத்தில் மாற்றியமைக்கும் சதித்திட்டத்திற்கு முன்னர் கூறப்பட்ட அம்சங்களை பெரிதும் எதிரொலித்தது, மேலும் அவரது சொந்த வெள்ளை மாளிகை வழக்கறிஞர்களும் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும், திருடப்பட்ட தேர்தல் என்ற அவரது கூற்றுக்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என அவரிடம் பலமுறை கூறியதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இருப்பினும், இது அவரது தீவிர வலதுசாரி கூட்டாளிகளால் பதிவிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் ட்வீட்களின் சிலிர்க்க வைக்கும் எடுத்துக்காட்டுகளை முன்வைத்தது, அதாவது ஜனவரி 6 அன்று ஒரு பாரிய பேரணிக்கு (“அங்கே இருங்கள், அது மூர்க்கமாக இருக்கும்!” என) ட்ரம்ப் அழைப்பு விடுத்தது, ஒரு குழு உறுப்பினர் கூறியது போல், அது ‘ஆயுதத்திற்கான அழைப்பு’ என்பதைக் காட்டுகிறது.
ட்ரம்ப், ஆயுதமேந்திய ஆதரவாளர்களை அமெரிக்க காங்கிரஸ் கட்டிடத்தை தாக்குவதற்கு வரவழைத்து தேர்தல் கல்லூரி வாக்கெடுப்புக்கான சான்றிதழை நிறுத்தி வைத்தது குறித்து வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் கசிடி ஹட்சின்சன் கடந்த மாதம் அளித்த சாட்சியத்தை உறுதிப்படுத்த, கடந்த வெள்ளிக்கிழமை ட்ரம்பின் வெள்ளை மாளிகை ஆலோசகர் பாட் சிப்போலோன் அளித்த எட்டு மணி நேர வாக்குமூலத்தின் சாராம்சங்களை குழு பயன்படுத்தியது.
ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர்கள், 232 க்கு 306 என்ற தேர்வுக் குழு வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த பைடெனை சந்தித்து சான்றளித்த நான்கு நாட்களுக்குப் பின்னர், டிசம்பர் 18 மாலை வரை வெள்ளை மாளிகையில் நடந்த ஆரவாரமான கூட்டம் பற்றி சிப்போலோன் விவரித்தார்.
வெள்ளை மாளிகை கூட்டத்தில், ட்ரம்பால் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஃபிளின் (ஓய்வு பெற்றவர்), சதி வழக்கறிஞர் சிட்னி பவல் மற்றும் Overstock.com இன் அப்போதைய தலைமை நிறைவேற்று அதிகாரி பாட்ரிக் பைர்ன் ஆகியோர், ட்ரம்ப் வாக்குப்பதிவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், வாக்கு மோசடி பற்றி விசாரிக்க பவலை ஒரு தனிப்பட்ட ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்றும் முன்மொழிந்தனர்.
சிப்போலோனும் வெள்ளை மாளிகையின் மற்றொரு வழக்கறிஞரும் இரகசிய கூட்டத்திற்குள் நுழைந்து திட்டத்தை கண்டித்ததுடன், தேவையான உத்தரவுகளை வெளியிடுவதிலிருந்து பின்வாங்குமாறு ட்ரம்பை கட்டாயப்படுத்தினர்.
சில மணிநேரங்களுக்குப் பின்னர், டிசம்பர் 19 அதிகாலையில், ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை ஜனவரி 6 அன்று வாஷிங்டன் டிசி க்குள் வெள்ளமென பாய்ந்து ‘வாக்குத் திருட்டை நிறுத்துங்கள்’ என்று அழைப்புவிடுக்கும் ட்வீட்டை பதிவிட்டிருந்தார். மேலும், அந்த நாள் ‘மூர்க்கமாக இருக்கும்’ என்று அவர் உறுதியளித்தார்.
இது, ஜனவரி 6 அன்றும் அதற்குப் பின்னரும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ட்ரம்பை எதிர்க்கும் மற்றவர்களுக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட கொலை உள்ளிட்ட வலதுசாரி வன்முறைக்கான அழைப்பாக இருந்தது, Proud Boys, Oath Keepers மற்றும் பிற பாசிச துணை இராணுவக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் அலெக்ஸ் ஜோன்ஸ் போன்ற தீவிர வலதுசாரி பதிவர்களின் அறிக்கைகள் மற்றும் அறிவுரைகளால் ஆவணப்படுத்தப்பட்டது.
கமிட்டி காட்டிய ட்வீட்டுகள் பின்வருமாறு: “எங்களுக்கு துப்பாக்கிச் சூடு படைகளுக்கு தன்னார்வலர்கள் தேவை.” “நாம் ஏன் அனைத்து ஜனநாயகக் கட்சியினரையும் கொல்லக் கூடாது?” “கைவிலங்குகளைக் கொண்டுவந்து சுரங்கப் பாதைகளுக்கு அருகில் காத்திருங்கள்.” “நான் துப்பாக்கிகளை நிரப்பி, உள்நாட்டுப் போரின் இரண்டாம் பாகத்திற்கு தயாராக இருக்கிறேன்.” “இது என்ன D-Day யா… எங்களுக்கு துப்பாக்கிச் சூடு படைக்கு தன்னார்வலர்கள் தேவை.”
ஜனவரி 5 அன்று ட்ரம்ப் ஆதரவாளர்களின் வாஷிங்டன் டிசி பேரணியில் பேசியவர்களில் ‘திருட்டை நிறுத்து’ இயக்கத்தின் நிறுவனர் அலி அலெக்சாண்டரும் மற்றும் அலெக்ஸ் ஜோன்ஸூம் அடங்குவர், இருவரும் புதிய ‘1776’ நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தனர்.
விசாரணையின் இரண்டாம் பகுதி இரண்டு நேரில் சாட்சிகளைக் கொண்ட குழுவைக் கொண்டிருந்தது. ட்ரம்பின் கலகக் கும்பலின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்டிடத்தை ஆக்கிரமித்த தனது ஒழுங்கீன நடத்தைக்காக சமீபத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்டீபன் அயர்ஸ், ட்ரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகளின் சமூக ஊடக இடுகைகளின் அடிப்படையில் தேர்தல் திருடப்பட்டதாக தான் நம்பியதாகவும், ஆனால் பின்னர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
2014 இல் Oath Keepers குழுவில் இணைந்தவரும் மற்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் வெளியேறும் வரை குழுவின் ஊடக நடவடிக்கைகளைக் கையாண்டவருமான, ஜேசன் வான் டேட்டன்ஹோவ், அமைப்பை ‘ஆபத்தான, இனவெறி மிக்க மற்றும் வெள்ளை மேலாதிக்கவாத’ தன்மையினது என்று அழைத்தார். யூதப் படுகொலை (Holocaust) ‘உண்மையானதல்ல’ என்று உறுப்பினர்கள் வலியுறுத்திய ஒரு விவாதத்திற்குப் பின்னர் தான் இராஜிநாமா செய்ததாக அவர் கூறினார்.
ஜனவரி 6 அன்று கிளர்ச்சி சட்டத்தை (Insurrection Act) செயல்படுத்த ட்ரம்பிற்கு Oath Keepers குழுவின் தலைவர் ஸ்டீவர்ட் ரோட்ஸ் விடுத்த அழைப்பு பற்றி கேட்கப்பட்டதற்கு, “அது ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சியாக இருந்திருக்கும்… அவர்கள் ஒரு துணை இராணுவப் படையாக மாறுவதற்கான வாய்ப்பை ட்ரம்பில் காண்கிறார்கள்” என்று டேட்டன்ஹோவ் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு எதிராக வன்முறை செய்வதாக ரோட்ஸ் பேசியதை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, டேட்டன்ஹோவ், “ஆம். இதயங்களின் இராணி போன்ற ஹிலாரி கிளின்டன் உட்பட பல்வேறு அரசியல்வாதிகளையும், நீதிபதிகளையும் வெளியேற்ற ஒரு தொகுப்பு மக்கள் அட்டைகளை நான் உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்” என்று கூறினார்.
ஜனவரி 6 அன்று அதிக இரத்தக்களரி ஏற்படாததால் அமெரிக்க மக்கள் ‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’ என்று அவர் கூறியதுடன், அடுத்த தேர்தல் என்ன கொண்டு வருமோ என தான் அஞ்சுவதாகவும் கூறினார்.
ஃபிளின் மற்றும் ரோஜெர் ஸ்டோன் உட்பட ட்ரம்பின் உள் வட்டத்திற்கும், Proud Boys மற்றும் Oath Keepers போன்ற தீவிர வலதுசாரி குழுக்களுக்கும் இடையிலான தொடர்புகளை குழு அடிக்கோடிட்டுக் காட்டியது. நவம்பர் 3, 2020 தேர்தல் மற்றும் ஜனவரி 6, 2021 தேதிகளுக்கு இடையிலான முல்லர் விசாரணை தொடர்பாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட ஃபிளின் மற்றும் ஸ்டோன் ஆகிய இருவரையும் ட்ரம்ப் மன்னித்ததாக இது குறிப்பிட்டது.
இது ஃபிளினும் பாட்ரிக் பைர்னும் Proud Boy குழுவால் பாதுகாக்கப்பட்ட புகைப்படத்தைக் காட்டியது. ஸ்டோன் அவரது ‘Friends of Stone network’ பற்றிய சிறு வீடியோ பதிவில் காட்டப்பட்டார், அதில் Proud Boys குழுவும் அடங்கும், அவர் தன்னை ‘மேற்கத்திய பேரினவாதி’ என்று அழைத்தார்.
டிசம்பர் 2020 இல் வாஷிங்டனில் நடந்த ட்ரம்ப் சார்பு அணிவகுப்பில் பேசியபோது அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய 1வது திருத்தம் பிரிட்டோரியன் துணை இராணுவக் குழுவுடனான தொடர்புகளை ஃபிளின் அறிந்திருக்கிறார். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பை வழங்குவதில் ரோட்ஸ் உட்பட Oath Keepers குழுவினரும் அந்தக் குழுவில் இணைந்து இருந்தனர்.
‘பாதுகாப்பு அமைச்சகம்’ என்று அழைக்கப்படும் அரட்டைக் குழுவையும் அந்தக் குழு மேற்கோள் காட்டியது, அதில் Proud Boys மற்றும் Oath Keerpers குழுவினர், பொலிஸ் இருப்பிடங்களைக் குறிப்பது உட்பட, ஜனவரி 6 ஆம் தேதிக்கான தந்திரோபாய திட்டங்களைப் பற்றி விவாதித்தனர்.
குழு உறுப்பினர் ஜேமி ரஸ்கின் கூறுகையில், புளோரிடா Oath Keepers பிரிவின் தலைவர் கெல்லி மெக்ஸ், ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஸ்டோனுடன் நேரடி விவாதங்களை நடத்தினார்.
குழுவால் ஆய்வு செய்யப்பட்ட வெள்ளை மாளிகை பதிவுகளின்படி, ஜனவரி 5 அன்று ட்ரம்ப் ஸ்டீபன் பானனுடன் இரண்டு முறை பேசினார். அன்று, பானன் தனது போட்காஸ்டில், பார்வையாளர்களிடம் ‘எல்லா நரகமும் நாளை அழியப் போகிறது’ என்று கூறினார்.
ஜனவரி 6 ஆம் தேதி காலை எலிப்ஸில் கூடியிருந்த கூட்டத்தை காங்கிரஸ் கட்டிடத்திற்கு அணிவகுத்துச் செல்லவும், சான்றிதழ் வழங்குவதை நிறுத்த காங்கிரஸை நிர்பந்திக்கவும் ட்ரம்ப் கடைசி நிமிடத்தில் முடிவு செய்தார் என்ற கூற்றுக்கள், காங்கிரஸின் மீதான தாக்குதலுக்கு முன்னதாகவே முடிவு எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை விசாரணை முன்வைத்தது.
ஜனவரி 2 ஆம் தேதி வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் மார்க் மெடோஸூடன், எலிப்ஸில் ஜனவரி 6 பேரணியை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த ட்ரம்பின் முன்னாள் உதவியாளர் கத்ரீனா பியர்சன் தொலைபேசியில் பேசியதன் பின்னர், “காங்கிரஸ் கட்டிடத்திற்கு அணிவகுத்துச் செல்ல அனைவரையும் அழைக்க” ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக மற்ற ஒழுங்கமைப்பாளர்களுக்கு அவர் மின்னஞ்சல் அனுப்பியதாக குழு குறிப்பிட்டது.
மேலும், மற்றொரு பேரணி ஒழுங்கமைப்பாளரான கைலி ஜேன் க்ரீமர், ஜனவரி 4 ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தியில், காங்கிரஸ் கட்டிடத்திற்கு அணிவகுத்துச் செல்லும் திட்டத்தை இரகசியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
முந்தைய கேள்விகளைப் போலவே, பல தெளிவான கேள்விகள் விசாரணையில் முற்றிலும் தவிர்க்கப்பட்டது: முழு பகலில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதியை தடுக்க ஏன் எதுவும் செய்யப்படவில்லை? ட்ரம்பில் தொடங்கி சதிகாரர்கள் அனைவரையும் ஏன் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை? பாசிச துணை இராணுவக் கொலையாளிகளின் கைகளால் பாரிய கொலைகள் நடக்கவிருக்கும் அபாயம் குறித்து ஏன் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்படவில்லை? காங்கிரஸ் கட்டிடத்தை பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? மேலும், ட்ரம்ப், ஃபிளின், கியுலியானி, பவல், பானன், ஈஸ்ட்மேன், ஸ்டோன் ஆகிய சதிகாரர்கள் இன்னும் அவர்கள் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்களா மற்றும் அடுத்த சதிக்கு தயாராக இருக்கிறார்களா?
FBI, CIA, இராணுவம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் வசம் ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு முன்னரே பாரிய உளவுத்துறை இருந்தது என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. ஜனவரி 6 அன்று பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் உட்பட, வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் ட்ரம்பை அதிகாரத்தில் தக்க வைக்கும் திட்டங்களுடன் இணையம் நிரம்பி வழிந்தது. கடந்த ஆண்டு, FBI இயக்குநர் கிறிஸ்தோபர் வ்ரே, காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்திற்கான எந்தவொரு சிறப்பு தயாரிப்புக்களுக்கும் உத்தரவாதம் அளிக்க போதுமான உளவுத்துறை இல்லை என்று காங்கிரஸூக்கு சாட்சியமளித்தார். அது ஒரு வெளிப்படையான பொய் என்பதுடன் பொய் சாட்சியமாகும்.
உண்மையில், Proud Boys குழுவின் முன்னாள் தலைவரான என்ரிக் டாரியோ ஒரு ‘செயலூக்கமிக்க’ FBI தகவல் வழங்குநராக பகிரங்கமாக அடையாளம் காணப்பட்டார். தேசத்துரோக சதி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் Proud Boy இன் மற்றொரு தலைவரான ஜோசப் பிக்ஸூம் அப்படித்தான். பாசிச வலதுசாரிகள் உளவுத்துறை அமைப்புகள் மூலம் ஆழமாக ஊடுருவியுள்ளனர், அவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வீசப்படும் சாத்தியமான ஆயுதங்களாக அதை மதிப்பிடுகின்றன.
உண்மையில், சதியை நிறுத்த பைடெனோ அல்லது ஜனநாயகக் கட்சியோ எதுவும் செய்யவில்லை. அவர்கள் ஒன்றில் மௌனம் சாதித்தனர், அல்லது முடிவைக் காணக் காத்திருக்கின்றனர். ஆத்திரமடைந்த பொதுமக்களை அணிதிரட்டி ஆட்சிக் கவிழ்ப்பை முறியடிக்க அவர்கள் எந்தவேண்டுகோளும் விடுக்கவில்லை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகளைக் கைப்பற்றுவதில் அந்தக் கும்பல் வெற்றி பெற்றிருந்தால், ஜனநாயகக் கட்சியினர் சரணடைந்து ட்ரம்பை சர்வாதிகார ஜனாதிபதியாக ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க அனுமதித்திருப்பார்கள் என்பதையே இது நிரூபிக்கிறது.
இந்த விசாரணையில், அதற்கு முந்தைய எல்லாவற்றிலும் நிகழ்ந்தது போல், ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் நவ காலனித்துவ போர் பருந்து லிஸ் செனி போன்ற அவர்களின் குடியரசுக் கட்சி கூட்டாளிகளும், அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறியும் முயற்சியை டொனால்ட் ட்ரம்ப் என்ற தீய நபரை நீக்குவதன் மூலம் காட்ட முயற்சித்துள்ளனர். அவர்கள் இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புக்களின் பாத்திரத்தை மூடிமறைக்க முற்பட்டனர், அதற்குள் ஆட்சிக் கவிழ்ப்புக்கு கணிசமான ஆதரவு இருந்தது.
ஒரு சில ட்ரம்ப் விசுவாசிகள் தலைமையிலான பென்டகன், காங்கிரஸ் கட்டிடத்தில் இருந்து கும்பலை அகற்ற D.C. தேசிய காவலர் துருப்புக்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளிக்க 199 நிமிடங்கள் காத்திருந்தது. தாக்குதலுக்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்டிட பொலிஸ் பெரும்பாலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர் என்றாலும் தாக்குதலுக்குப் பின்னர் இன்னும் அதிகமாக அவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை.
அதேபோல, ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியின் முழுத் தலைமையும் மற்றும் காங்கிரஸின் பெரும்பான்மை உறுப்பினர்களும் வகித்த முக்கிய பங்கை மறைக்க முயன்றனர். ஜனநாயகக் கட்சியினர் தங்கள் குடியரசுக் கட்சி ‘நண்பர்கள்’ மற்றும் ‘சகாக்களை’ ‘ஒற்றுமை’ மற்றும் ‘இருகட்சி’ கொள்கையை பேணுவதற்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றனர்.
கமிட்டியின் துணைத் தலைவர் செனி தனது இறுதி அறிக்கையில், தேர்தலை முறியடிப்பதற்கான வெவ்வேறு காரணங்களை மதிப்பாய்வு செய்து, “அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று உள்ளது, அது ட்ரம்ப்” என்று அறிவித்தார்.
அவரும் கமிட்டியில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும், திருடப்பட்ட தேர்தல் பொய்யையும் அதனுடன் இணைந்த சதியையும் சில குடியரசுக் கட்சி அதிகாரிகள் ஊக்குவித்ததன் பின்னர் அவர்களின் மதிப்பை உயர்த்த முயன்றனர், பென்ஸ் போன்றவர்கள் ஜனவரி 6 இல் நடந்த நேரடி ஆட்சிக்கவிழ்ப்பை தடுத்தனர் (Roe v. Wade உச்சநீதிமன்றத்தால் அகற்றப்பட்டதிலிருந்து, கருக்கலைப்பு குறித்த தேசிய அளவிலான தடைக்கு தனது ஆதரவை இவர் தெரிவித்தார்). பென்ஸூக்கு சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்று சிப்போலோன் கோரியது வீடியோ பதிவில் காட்டப்பட்டது.
ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து ட்ரம்ப் மீதான இரண்டாவது குற்றச்சாட்டு விசாரணை முன்கூட்டியே நிறுத்தப்பட்டதை மேற்பார்வையிட்ட மேரிலாந்தின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜேமி ரஸ்கின், தனது இறுதி அறிக்கையை காங்கிரஸ் கட்டிட பொலிஸை பாராட்டவும், ட்ரம்ப் “எங்கள் இரு கட்சிகளில் ஒன்றை எதேச்சதிகார பாதையில் அழைத்துச் செல்ல அச்சுறுத்துகிறார்” என்று எச்சரிக்கவும் பயன்படுத்தினார். ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பை ‘அரசியல் பேச்சின் சட்டபூர்வ வடிவம்’ என்று ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவித்த ஒரு கட்சியைப் பற்றி இது கூறப்படுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கைப்பாவை ஆட்சியின் தோல்விக்குப் பின்னர் வியட்நாமில் இருந்து வெளியேறிய புளோரிடாவைச் சேர்ந்த வலதுசாரி ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஸ்டெபானி மர்பி, தனது இறுதிக் கருத்துக்களில் கம்யூனிச எதிர்ப்பையும் தேச பக்தியையும் வலியுறுத்தியதுடன், “எனது குடும்பம் கம்யூனிச சர்வாதிகாரத்திலிருந்து தப்பியோடி வந்துவிட்டது. நான் இந்த நாட்டை நேசிக்கிறேன்” என்று அறிவித்தார்.
ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் ஜனநாயக உரிமைகளை அழிக்க தொடர்ந்து சதி செய்து வருகின்றனர் என்பது விசாரணையின் முடிவில் தெளிவாக்கப்பட்டது, முந்தைய விசாரணையைத் தொடர்ந்து குழுவின் சாட்சிகளில் ஒருவரை ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாக செனி அறிவித்தார். சாட்சிகளை சீர்குலைக்கும் இந்தச் செயலை ஆணையம் நீதித்துறைக்கு அனுப்பியதாக அவர் கூறினார்.
