இலங்கையின் நீண்டகால ட்ரொட்ஸ்கிசவாதி விஜே டயஸ் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சனிக்கிழமை, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தலைவர் மறைந்த தோழர் விஜே டயஸ் அவர்களுக்கு இறுதி மரியாதையை செலுத்துவதற்காக குடும்ப உறுப்பினர்கள், தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொழும்பில் உள்ள பொரளை மயானத்தில் கூடியிருந்தனர்.

தோழர் விஜே டயஸின் பூதவுடல் தாங்கிய பேழை இருதிச் சடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது [Photo: WSWS]

விஜேயின் உடல் வைக்கப்பட்டிருந்த பேழை, சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்ட சுமார் 500 பேர் கலந்து கொண்ட, இரண்டு கிலோமீட்டர் நீளமான கம்பீரமான அணிவகுப்புடன் மலச்சாலையில் இருந்து, மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பேரணி பூராவும் சர்வதேச கீதம் ஒலிபரப்பபட்டது.

விஜே டயஸ், தனது 81 வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஜூலை 27 அன்று, காலையில் ஏற்பட்ட பாரிய மாரடைப்பு காரணமாக இறந்தார். அவரது பூதவுடல், இறுதி அஞ்சலி செலுத்த விரும்புபவர்களுக்காக, வியாழக்கிழமை காலை முதல் கொழும்பு பொரளையில் உள்ள ஜயரத்ன ரெஸ்பெக் ஹோம் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது.

அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க) ஸ்தாபக உறுப்பினராக இருந்தார். 1987 டிசம்பரில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக ஸ்தாபக பொதுச் செயலாளரான கீர்த்தி பாலசூரியவின் அகால மறைவுக்குப் பின்னர், கட்சியின் பொதுச் செயலாளராக இடைவிடாது பொறுப்பு வகித்தார். கடந்த மே மாதம், கட்சியின் புதிதாக உருவாக்கப்பட்ட தலைவர் பதவிக்காகும் விஜே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

மூன்று நாட்களாக, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட தீவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கிட்டத்தட்ட 2,000 பேர் அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர். தீவிரமான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து இடையூறுகளுக்கு மத்தியிலும் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பெருந்தோட்ட மாவட்டங்களில் இருந்தும் குழுவினர் இறுதி நிகழ்வுக்காக வந்திருந்தனர்.

இறுதி ஊர்வலத்தின் ஒரு பகுதி [Photo: WSWS]

பல தனியார் அதே போல், அரச தொலைக்காட்சி அலைவரிசைகள், தோழர் விஜேயின் ஒளிப்படங்களுடன் அவரது மரணம் மற்றும் இறுதி நிகழ்வு பற்றியும் அவரது அரசியல் பங்கு பற்றிய சுருக்கமான கருத்துக்களையும், தங்களின் பிரதான செய்திகளில் ஒளிபரப்பியிருந்தன. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவரும் பிரதான செய்தித்தாள்களும் விசேட செய்திகளை வெளியிட்டன. இவை அனைத்தும் டயஸை ட்ரொட்ஸ்கிசத்திற்காக தனது முழு வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சளைக்காத போராளி என்று குறிப்பிடுகின்றன. அவை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடனான, சோசலிச சமத்துவக் கட்சியின் உறவு பற்றியும் குறிப்பிட்டிருந்தன.

பரவலாக விநியோகிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாளான டெய்லி மிரர், 'பழம்பெரும் ட்ரொட்ஸ்கிசவாதி விஜே டயஸ் காலமாகிவிட்டார்' என அதன் செய்திக்கு தலைப்பிட்டிருந்தது. 'இலங்கை ட்ரொட்ஸ்கிசத்தின் சின்னம் மறைந்துவிட்டது,' என ஸ்ரீலங்கா மிரர் அறிவித்தது.

கட்சி அங்கத்தவர்கள் சிவப்பு ஆடை அணிந்து வழிநடத்திய இறுதி உர்வலம் வீதியோரங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. 'நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் தோழர் விஜே டயஸ் அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலி' என வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு பதாகை, அவரது புகைப்படத்துடன் இறுதி ஊர்வலத்திற்கு முன்னால் தாங்கிச் செல்லப்பட்டது. சுகாதாரம், கல்வி மற்றும் பெருந்தோட்ட நடவடிக்கை குழுக்களின் அனுதாபச் செய்திகளைக் கொண்ட பதாகைகளும எடுத்துச் செல்லப்பட்டன.

சோசலிச சமத்துவக் கட்சியின் முகநூல் பக்கத்தில் முழு இறுதி ஊர்வலமும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, அதனை அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா, மத்திய கிழக்கு உட்பட மற்றும் பல நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 1,000 பேர் பார்த்துக்கொண்டிருந்தனர். இதுவரை, 3,000 பேர் இந்த வீடியோவைப் பார்வையிட்டுள்ளனர். அத்தோடு, கிட்டத்தட்ட 450 பேர் தமது முகநூல் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சியின் சகோதரக் கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் தங்கள் இரங்கல் செய்திகளையும் புரட்சிகர அஞ்சலியையும் இணைத்து கருத்துத் தெரிவித்திருந்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் நீண்ட கால உறுப்பினரும், உலக சோசலிச வலைத் தளத்தின் இலங்கை தேசிய ஆசிரியரும், டயஸின் மிக நெருங்கிய தோழருமான கே. ரட்நாயக்க கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 1964 இல் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்தபோது, சோசலிச சர்வதேசியவாத கொள்கைகளை லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) காட்டிக் கொடுத்ததை அடுத்து, 1968 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) ஸ்தாபிக்கப்பட்டதை பற்றி அவர் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.

“1968ஆம் ஆண்டு காலப்பகுதியை நாம் திரும்பிப் பார்க்கும்போது, அரசியல் ரீதியாக அது மிகவும் எளிதான காலம் அல்ல. பாராளுமன்ற பாதை வழியாக சோசலிசம் என்ற திவாலான, பிற்போக்கு கூட்டணி அரசியலின் அலை பரவி வந்தது. அந்த நேரத்தில் மாவோவாதம், காஸ்ட்ரோவாதம், குவேராவாதம் மற்றும் ஆயுதப் போராட்டம் ஆகியவை சர்வதேச அளவில் அரசியல் நாகரீகமாக இருந்தன. மார்க்சிசமும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரமும் நிராகரிக்கப்பட்டன. இந்த சித்தாந்தங்கள் இலங்கையில் எதிரொலித்ததன. 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக ஸ்தாபகர்களான கீர்த்தி, விஜே மற்றும் ஏனைய தோழர்கள் இந்த மார்க்சிச-விரோத தத்துவங்களை நிராகரித்து, அனைத்துலகக் குழுவால் மட்டுமே பாதுகாக்கப்பட்ட மார்க்சிசத்தின் தொடர்ச்சியான ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படையில் கட்சியை கட்டியெழுப்பினர்.”

விஜேயின் மரணம் இலங்கைப் பிரிவிற்கும் அனைத்துலகக் குழுவிற்கும் பெரும் இழப்பாகும் என்று கூறிய ரட்நாயக்க மேலும் கூறியதாவது: 'ஆனால், அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த ட்ரொட்ஸ்கிச முன்னோக்கிற்காக இடைவிடாமல் போராடுவதன் மூலம் அவரைக் கௌரவிப்பதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.' கடந்த மூன்று மாதங்களாக இலங்கையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களை விஜே மிகவும் நம்பிக்கையுடன் பார்த்தார் என்றும், அந்த அபிவிருத்திகளுக்கு மத்தியில் சோசலிச சமத்துவக் கட்சியை அரசியல் ரீதியாக ஆயுதமயப்படுத்தி வழிநடத்த தனது வாழ்வின் கடைசி நிமிடம் வரை அர்ப்பணிப்புடன் இருந்தார் என்றும் அவர் விளக்கினார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் இலங்கை தேசிய ஆசிரியர் கே. ரட்னாயக்க [Photo: WSWS]

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், இணைய வழி மூலம் கூட்டத்தில் உரையாற்றினார். தோழர் விஜேயின் உடல் அடக்கம் செய்யப்படும்போது, நான் கொழும்பில் இருக்க முடியாமல் போனதையிட்டு வருத்தம் தெரிவித்து தனது கருத்துக்களை அவர் தொடங்கினார். டயஸின் இறுதி ஊர்வலத்தில் கூடியிருந்த அனைவரும், 'தாங்கள் வரலாற்றின் முன்னிலையில் இருப்பதை அறிவார்கள்' என்று நோர்த் கூறினார். 'ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் அறுபது வருடங்களாக விஜே டயஸ் ஒரு மகத்தான பாத்திரத்தை வகித்தார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்க முடியும்' என அவர் தொடர்ந்தார்.

விஜே மற்றும் குறிப்பிடத்தக்க இளம் ட்ரொட்ஸ்கிச காரியாளர்கள், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபிக்கும்போது, 'நீரோட்டத்திற்கு எதிராக நீந்த வேண்டியிருந்தது' என்று நோர்த் கூறினார். ஆனால் விஜே, கீர்த்தி மற்றும் அவர்களது தோழர்கள், “வரலாற்று உண்மையின் சக்தி, நான்காம் அகிலத்தின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் சரியான தன்மை மற்றும் இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் வாழும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுடனேயே அவ்வாறு செயற்பட்டார்கள்,' என நோர்த் குறிப்பிட்டார்.

டேவிட் நோர்த்தின் புகழஞ்சலியின் முழு பகுதி இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை அமைப்பதில் டயஸ் ஆற்றிய முக்கிய பங்கை விவரித்தார். டயஸ், கீர்த்தி பாலசூரியாவுடன் இணைந்து, லங்கா சம சமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக்கொடுப்பின் மூலவேர் தேசிய ரீதியில் அன்றி, சர்வதேச அளவில் பப்லோவாத திருத்தல்வாதத்திலேயே உள்ளது என்பதை தெளிவுபடுத்திய அனைத்துலகக் குழுவின் அரசியல் வழிகாட்டல் மற்றும் தீர்க்கமான தலையீட்டை புத்திசாலித்தனமாக கிரகித்துக்கொண்டார், என்று அவர் விளக்கினார்.

இலங்கையில் அபிவிருத்தியடைந்து வரும் தற்போதைய வர்க்கப் போராட்டத்திற்கு தலமை தாங்குவற்காக, கட்சியை தயார்படுத்துவதற்கு தோழர் விஜே மிகவும் ஆர்வத்துடன் உழைத்தார் என சோசலிச சமத்துவக் கட்சி துணைச் செயலாளர் சமன் குணதாச விளக்கினார். அவர் தனது கடைசி நாட்களில் விஜேயின் அயராத முயற்சிகளுக்கு புகழஞ்சலி செலுத்தினார். இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் மூன்றாவது தேசிய மாநாட்டில் அவர் செயலூக்கத்துடன் ஈடுபட்டமை மற்றும் 'தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக சோசலிச மாநாட்டிற்காக' என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அண்மைய தீர்க்கமான அறிக்கையை வரைவதில் அனைத்துலகக் குழுவுடன் இணைந்து அவர் பணியாற்றியமையையும் சமன் சுட்டிக்காட்டினார். விஜே செய்தது போலவும், அவர் விரும்பியது போலவும் நான்காம் அகிலத்திற்கான போராட்டத்தை கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்று உறுதியளித்து சமன் தனது உரையை முடித்தார்.

தமிழில் பேசிய சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா கூறியதாவது: 'நான் கட்சியில் சேர்ந்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 1976 இல் விஜேயை யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன். அவர், லெனினின் என்ன செய்ய வேண்டும்? என்ற புத்தகத்தின் அடிப்படையில் தத்துவார்த்த வகுப்புக்களை நடத்துவதற்காக அங்கே வந்திருந்தார். தொழிலாள வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கம் என்றும் சோசலிச நனவை ஒரு புரட்சிகரக் கட்சியால் மட்டுமே வழங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு மார்க்சிச கட்சியின் பங்கை அவர் வலியுறுத்தினார். 45 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் கூறியது எவ்வளவு உறுதிப்படுத்தப்பட்டது என்பதை நாம் பார்க்கின்றோம்…

எம். தேவராஜா

“எண்ணற்ற தேசியவாத போக்குகளுக்கு மத்தியில், கீர்த்தி தலைமையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுதிப்பாடான இளம் தோழர்களுடன் சேர்ந்து, தோழர் விஜே, தொழிலாள வர்க்கம்தான் சர்வதேச புரட்சிகர வர்க்கம் என்ற புரிதலின் அடிப்படையில் சர்வதேச கொள்கைகளுக்காக உறுதியாகப் போராடினார். நாம், தோழர் விஜேயின் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்க்க எம்மை அர்ப்பணிக்க வேண்டும்.”

விஜேயின் பன்னிரெண்டு வயது பேத்தி ஜனார்த்தி, அவரது குடும்பத்தின் சார்பாக கூட்டத்தில் உரையாற்றினார். தாத்தா என்னைப் பற்றி தொடர்ந்து அக்கறை கொண்ட ஒரு அற்புதமான மனிதர் என்றும், அவரைப் பற்றி எல்லோரும் சொன்னதுபோல், அவர் போலவே உறுதியாக இருக்க என்னைத் தூண்டியது என்றும் அவர் கூறினார். 'தொழிலாளர்களின் புரட்சியை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளின் மத்தியிலும், அவர் தனது குடும்பத்திற்காகவும், எனக்காகவும் நேரம் ஒதுக்கினார்,' என்று அவர் கூறினார். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு உறுப்பினரும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கபில பெர்னாண்டோ கூறியதாவது: “பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலும், பொதுக் கல்வி, இளைஞர் வேலையின்மை மற்றும் பிற கலாச்சார நடவடிக்கைகள் மீதான தாக்குதல்கள் பற்றி வலைத் தளத்துக்கு கட்டுரைகள் எழுதுவதற்கும், இளைஞர் இயக்கத்தில் உள்ள அனைத்து தோழர்களும் தோழர் விஜேவிடமிருந்து மகத்தான வழிகாட்டுதலைப் பெற்றுள்ளனர்.' சில சந்தர்ப்பங்களில், அவர் தனது பரந்த அறிவையும் அரசியல் கூர்மையையும் கொண்டு, இளைஞர் இயக்கத்தை வளர்ப்பதற்குத் தேவையான பகுப்பாய்வை தானே எழுதினார்.

1986 ஆம் ஆண்டு, இலவசக் கல்வியை பாதுகாக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சிலாபத்தில் வைத்து விஜே கைது செய்யப்பட்டதை கபில நினைவு கூர்ந்தார். அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையின் ஒரு பகுதியாக, அவர் கட்சி உறுப்பினர்கள் இருவருடன் ஆறு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

'இளைஞர் இயக்கத்தில் உள்ள நாங்கள் அனைவரும் அவருடன் பணியாற்றியதை ஒரு பெரிய பாக்கியமாக கருதுகிறோம்,' என்று அவர் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர [Photo: WSWS]

சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர நிறைவுரை ஆற்றினார். லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான போராட்டத்தில் ஆரம்பித்து, ட்ரொட்ஸ்கிச சோசலிச சர்வதேசியவாத கொள்கைகளுக்கான தோழர் விஜேயின் அர்ப்பணிப்பானது அவரது அரசியல் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் தொடர்ந்தது, என்றார். “இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் மோசமான தன்மை காரணமாக, எங்கள் கட்சி 1968 முதல் 1996 வரை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமாகவும் அதன் பின்னர் சோசலிச சமத்துவக் கட்சியாகவும் எதிர்கொண்ட அனைத்து இடர்பாடுகளுக்கு மத்தியிலும் அவர் அந்தக் கொள்கைகளுக்காக தயக்கமின்றி, அடங்காத தைரியத்துடன் போராடினார்.”

சிங்கள-தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்தை முன்னெடுப்பதில் விஜேயின் தலைமையின் தீர்க்கமான தன்மையை விளக்கிய ஜயசேகர, 'கொழும்பு அரசாங்கத்தின் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகவும், அத்துடன் விடுதலைப் புலிகளின் தமிழ் பிரிவினைவாதத்துக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தில் தோழர் விஜே மிகவும் உறுதியாக தன்னை அர்ப்பணித்தார்,” எனத் தெரிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியை, இலங்கையில் வெகுஜனப் புரட்சிகரக் கட்சியாகவும், சர்வதேச அளவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் கட்டியெழுப்புவதன் மூலமும், அவர் தனது இளைமைக் காலம் முதல் அர்ப்பணித்திருந்த சோசலிச சர்வதேசியவாதத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமும் தோழர் விஜேக்கு அவருக்குத் தகுதியான மரியாதை வழங்கப்படும்.”

சர்வதேச கீதத்துடன் இறுதி ஊர்வலம் நிறைவடைந்தது [Photo: WSWS]
Loading