முன்னோக்கு

காசா படுகொலை: இஸ்ரேல் போர் குற்றங்களும், அமெரிக்கப் பாசாங்குத்தனமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த மூன்று நாட்களில், இடைவிடாத இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் 16 குழந்தைகள் உட்பட குறைந்தது 45 பாலஸ்தீனியர்களைக் கொன்றதுடன், பரந்தளவில் நாசங்களை ஏற்படுத்தியது.

குறைந்த பட்சம் 400 பேர் காயமடைந்தார்கள், பலர் கடுமையாகப் படுகாயமடைந்தார்கள், பெயரளவுக்குச் செயல்படும் சில மருத்துவமனைகளும் சிகிச்சை மையங்களும் நிரம்பி வழிந்தன. இஸ்ரேலிய மற்றும் எகிப்திய இராணுவப் பாதுகாப்பு வளையம் மற்றும் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு, காசாவில் சுமார் 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வாழ்கிறார்கள். வெறும் 141 சதுர மைல்களைக் கொண்ட எல்லைக்குள் —துல்லியமாக டெட்ராய்ட் நகரத்திற்குச் சமமான ஒரு பகுதியில்— நூற்றுக் கணக்கான சக்தி வாய்ந்த குண்டுகளும் ஏவுகணைகளும் மழை போல் வீசப்பட்டுள்ளன.

மிக அதிகமாகக் குண்டு வீசப்பட்ட அண்டைப் பகுதிகளில், இங்கே இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களை இலக்கு வைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர், அவை பெரும் நாசகரமான பிரளயக் காட்சிகளாக இருந்தன, அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வெறும் பள்ளங்களாக மாற்றப்பட்டு இருந்தன, உடல் அங்கங்கள் சிதறிக் கிடந்தன. பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட, இறந்த 12 குழந்தைகளின் முகங்களைக் காட்டும் அல்-ஜசீரா காட்சித் தொகுப்பு —இங்கே காட்டப்பட்டுள்ளது— அரபு உலகம் முழுவதும் பரவியதால், அது பரந்த சீற்றத்தை உருவாக்கியது.

இந்தக் கதியை அடைந்தவர்கள் உக்ரேனிய குழந்தைகளாக இருந்திருந்தால், சிஐஏ மற்றும் வெளியுறவுத் துறையின் விசுவாசமான ஊழியர்களான அமெரிக்கப் பெருநிறுவன ஊடகங்கள், அதைச் செறிவூட்டிய செய்திகளாக வழங்கி இருக்கும். அங்கே அப்பாவி உயிர் இழப்புகளுக்கு அஞ்சலி செலுத்தவும் மற்றும் அவர்களின் இறப்புகளுக்குப் பொறுப்பானவர்களைப் படுகொலையாளர்கள் மற்றும் போர்க் குற்றவாளிகள் என்று முத்திரைக் குத்துவதற்கும் கணக்கில்லாமல் நேரம் அர்ப்பணிக்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால் இஸ்ரேலிய பிரதம மந்திரி யெயர் லாபிட் (Yair Lapid), பாதுகாப்புத் துறை அமைச்சர் பென்னி கான்ட்ஜ், மற்ற உயர்மட்ட இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படாது.

கடந்த மூன்று நாட்களில் காசா மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பதினாறு குழந்தைகள் கொல்லப்பட்டனர். பன்னிரண்டு பேரின் படம் இங்கே உள்ளது; புகைப்படங்கள் இல்லாத மூவரும், அனைத்து உடன்பிறப்புகளும் காசாவில் உள்ள அல்-ஜபலியா அகதிகள் முகாமில் இறந்தனர். முன்னதாக பெறப்பட்ட காயங்களால் திங்கள்கிழமை பிற்பகுதியில் மருத்துவமனையில் 16 வது குழந்தை இறந்தது, இன்னும் பெயரிடப்படவில்லை.

உக்ரேன் போரில் ரஷ்ய அட்டூழியங்கள் என்று கூறப்படுபவை மீதான ஊடகப் பிரச்சாரத்தில் முன்னிலையில் உள்ள நியூ யோர்க் டைம்ஸ் இந்தக் காசா குண்டுவீச்சைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கான அதன் செய்தியை இவ்விதத்தில் பின்வருமாறு தொடங்கியது: “இஸ்ரேலுக்கும் காசாவில் உள்ள ஒரு பாலஸ்தீனப் போராளிகள் குழுவுக்கும் இடையே மூன்று நாட்கள் நடந்த எல்லைத் தாண்டிய கடுமையான சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு போர்நிறுத்தம் திங்கட்கிழமையில் இருந்து மேற்கொள்ளப்படுவதாகத் தெரிந்தது, எல்லைக் கோட்டின் இரண்டு தரப்பிலும் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது,” என்று குறிப்பிட்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொடூரமாக ஆயுதமேந்தி உள்ளதும், நிராதரவான மக்கள் மீது குண்டுகளையும் ஏவுகணைகளையும் வீசும், மத்திய கிழக்கில் மிகவும் பலமாக விளங்கும், இஸ்ரேலிய இராணுவத்துடன் 'எல்லை தாண்டிய கடுமையான சண்டை' என்று கூறுவது முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இருந்தது. இதற்கிடையில், பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் (PIJ) போராளிகள் பட்டி தொட்டிகளில் தயாரித்த நூற்றுக் கணக்கான ராக்கெட்டுகளை வீசினர், கிட்டத்தட்ட அவை அனைத்துமே எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் விழுந்தன அல்லது இஸ்ரேலிய ஏவுகணைத் தகர்ப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

“இயல்பு நிலைக்குத் திரும்புதல்' என்றால், காசா மக்களைப் பொறுத்த வரையில், இது தாங்கொணா வறுமை, 50 சதவீத வேலையின்மை விகிதம் மற்றும் நொறுங்கிய உள்கட்டமைப்பு என்பதையே அர்த்தப்படுத்துகிறது, வழமையாக இதைப் புவியில் மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலை என்று தான் ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள். காசாவில் மின் உற்பத்தி ஆலைச் செயல்படுகிறது என்றாலும் கூட நாளொன்றுக்கு வெறும் 11 மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது, ஆனால் அதுவும் நிறுத்தப்பட்டது, குண்டுவீச்சால் அல்ல, மாறாக அதை இயக்க தேவையான எரிபொருள் வினியோகங்களை இஸ்ரேலும் எகிப்தும் நிறுத்தி விட்டதால் ஆகும்.

இந்த வன்முறையைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்த இராஜாங்க விவகாரங்களில் பங்கு வகித்ததற்காக எகிப்து, கட்டார், ஜோர்டான் மற்றும் பிற பிற்போக்குத்தனமான அரபு சர்வாதிகாரங்கள் மற்றும் முடியாட்சிகளுக்கு பைடென் நிர்வாகம் பாராட்டுக்களைக் கூறி, அதேவேளையில் 'கண்மூடித்தனமாக ராக்கெட் தாக்குதல்கள்' நடத்தியதற்காக இஸ்லாமிய ஜிஹாத்தைக் கண்டித்து, சுருக்கமான ஓர் அறிக்கையை வெளியிட்டது. பைடென் இஸ்ரேலுக்கான அவரின் 'நீண்டகால மற்றும் அசைக்க முடியாத' ஆதரவை மீளவலியுறுத்தியதுடன், “இந்த நெருக்கடி நெடுகிலும் பிரதம மந்திரி யெயர் லாபிட் மற்றும் அவரது அரசாங்கத்தின் ஒரே சீரான தலைமையை நான் பாராட்டுகிறேன்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

நன்கு தயாரிப்பு செய்யப்பட்ட இந்தத் தாக்குதல் தொடங்குவதற்கு வெறும் மூன்று வாரங்களுக்கு முன்னர், ஜூலை 13-15 இல் இஸ்ரேலுக்குப் பயணம் செய்திருந்த போது காசாவுக்கு எதிரான இந்தத் தாக்குதல் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தக் குண்டுவீச்சு நடவடிக்கையின் போது இஸ்ரேல் பாதுகாப்பு படை செலவிட்ட வெடிமருந்துகளை மீண்டும் வழங்க பென்டகன் இப்போது விரையும்.

பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் (PIJ) உடனான ராக்கெட் தாக்குதல்கள், மேற்கு படுகையில் இருந்த அக்குழுவின் மூத்த தலைவர் பஸ்ஸாம் அல்-ஸாதியை (Bassam al-Saadi) ஜெனின் நகரில் இஸ்ரேல் ஆகஸ்ட் 1 இல் கைது செய்து காவலில் வைத்ததால் வேண்டுமென்றே தூண்டி விடப்பட்டது. இது ஜெனினில் ஒரு திட்டமிட்ட இஸ்ரேலிய இராணுவ வன்முறை நடவடிக்கையின் பாகமாக இருந்தது, அதில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து குறைந்தது 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் மற்றும் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்து உள்ளனர்.

நவம்பர் 1 இல் நடக்க இருக்கும் பொதுத் தேர்தல் வரை தலைமை தாங்கும் ஒரு காபந்து கூட்டணி ஆட்சிக்குத் தலைமைக் கொடுக்கும் பிரதம மந்திரி லாபிட் ஆதாயமடையும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட காலம் கணக்கிடப்பட்டு இருந்ததாகத் தெரிந்தது. “தேர்தல்கள் நடக்க இருக்கின்ற நிலையில், லாபிட்டின் காசா விளையாட்டு பலன் அளித்திருப்பதாகத் தெரிகிறது,” என்று அறிவித்த Times of Israel தலையங்கம், தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை நிறுவனத்தின் இந்த முன்னாள் நிர்வாகி தேர்தல் போட்டிக்கு முன்னதாக அவரின் இராணுவச் சான்றுகளைக் காட்ட வேண்டியிருந்ததை மேற்கோளிட்டது, இந்தத் தேர்தல் போட்டியில் கடந்த ஆண்டு பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட லிகுட் கட்சி (Likud Party) கூட்டணியின் வலதுசாரி இராணுவவாதி பென்ஜமின் நெத்தெனியாஹூவிடம் இருந்து அவருக்குப் பிரதான எதிர்ப்பு வருகிறது.

காசாவில் உள்ள இரண்டு இஸ்லாமியக் குழுக்களில் சிறியதான இந்த இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பை அழிப்பதில் ஒருமுனைப்படுவது என்ற தீர்மானமே நெத்தெனியாஹூ பதவி இறங்கியதில் இருந்து கொள்கையில் கொண்டு வரப்பட்டிருந்த பிரதான மாற்றமாக இருந்துள்ளது என்று இஸ்ரேலிய பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன, இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் சம்பந்தமான அவரது அறிக்கைகளில், லாபிட், காசாவில் ஆளும் கட்சியான ஹமாஸ் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்பதைப் பத்திரிகைகள் சுட்டிக் காட்டி உள்ளன. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டுப் பிரிவின் தலைவர் ஜெனரல் Oded Basyuk சனிக்கிழமை இரவு பத்திரிகையாளர்களுக்குக் கூறுகையில், “காசாவில் உள்ள இஸ்லாமிக் ஜிஹாத் இராணுவப் படைப் பிரிவின் ஒட்டுமொத்த மூத்த பாதுகாப்பு உயர் அதிகாரிகளையும்' IDF வெற்றிகரமாகக் கொன்று விட்டதாகத் தெரிவித்தார்.

காசா மீதான மூன்று நாள் குண்டுவீச்சுக்கு அரபு ஆட்சியாளர்களின் விடையிறுப்பு, பாலஸ்தீன மக்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக அரபு மக்களின் நலன்கள் மீதான காட்டிக்கொடுப்பு மற்றும் அவர்களின் எரிச்சலூட்டும் துரோகத்திற்கு உதாரணமாக இருந்தது. பெரும்பாலான வளைகுடா ஷேக் ஆட்சிகள் சவூதி அரேபியாவின் வழியைப் பின்பற்றின, அதன் ஊடகங்கள் இஸ்லாமிக் ஜிஹாத்தை ஈரானின் ஒரு கருவியாகக் கண்டித்ததுடன், (ஐ.நா. பாதுகாப்பு அவையில் உள்ள மொத்தம் ஐந்து உறுப்பு நாடுகளும், அத்துடன் ஜேர்மனியும் சேர்ந்த) P5+1 என்றழைக்கப்படும் குழுவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கி இருப்பதற்கு இணங்க இஸ்லாமிக் ஜிஹாத் இந்த மோதலைத் தூண்டிவிட்டதாக அறிவுறுத்தின. இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் 4 இல் வியன்னாவில் மீண்டும் தொடங்கியது.

இந்தக் குற்றச்சாட்டு உலகையே புரட்டிப் போடுகிறது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் கடுமையாக எதிர்க்கும் காரணத்தால், இஸ்லாமிய ஜிஹாத் அல்ல, பெரும்பாலும் இஸ்ரேலிய ஆட்சி தான் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்க நேரம் பார்த்து இந்த மோதலைத் தூண்டி இருக்க வாய்ப்புள்ளது.

இரத்தக் கறைப் படிந்த எகிப்திய இராணுவ ஆட்சி இந்தப் போர்நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்த அதேவேளை, அது காசாவின் மேற்கு எல்லையில் அதன் இரும்பு பிடியைத் தக்க வைத்துள்ளது, 2007 இல் அப்பகுதியில் ஹமாஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அந்தப் பகுதி பெரிதும் மூடப்பட்டுள்ளது.

பாலஸ்தீன ஆணையத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஹமாஸ் அல்லது மதசார்பற்ற ஃபதாஹ் குழு போன்ற எந்த இஸ்லாமிய வகையறா ஆகட்டும், ஒவ்வொரு வகையும் பாலஸ்தீன முதலாளித்துவ தேசியவாதத்தின் இலாயக்கற்ற மற்றும் திவால்நிலையையே இந்தக் காசா இரத்த ஆறு எடுத்துக் காட்டுகிறது, அவை மேற்குப் படுகையில் இஸ்ரேலின் நியமிக்கப்பட்ட சிறைச்சாலைப் பாதுகாவலர்களாகச் செயல்படுகின்றன. ஜெருசலேம் போஸ்ட் தகவல்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் பெயரளவில் ஹமாஸை 'பயங்கரவாத குழுவாக' கருதும் அதேவேளையில், எகிப்து, கட்டார் மற்றும் ஐ.நா. மத்தியஸ்தர்கள் 'ஹமாஸ் தலைவர்களைக் காசா பகுதியின் சட்டபூர்வ ஒரே ஆட்சியாளர்களாகக் கையாள்கிறார்கள்' என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காசாவில் நிலைமை இன்னும் பதட்டமாக உள்ளது. இஸ்ரேலிய இராணுவம் காத்திருப்போர் பட்டியலில் இருந்து 25,000 படையினரை அழைத்துள்ளது, அவர்களைத் திரும்ப அனுப்பும் திட்டங்களும் இல்லை, அதேவேளையில் ஓர் இஸ்லாமிக் தலைவர் கூறுகையில், எகிப்துக்குப் பகிரங்கமாக வாக்குறுதி அளித்துள்ளவாறு, பஸ்ஸாம் அல் ஸாதி உட்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு இஸ்லாமிக் ஜிஹாத் தலைவர்களை இஸ்ரேல் இந்த வாரயிறுதிக்குள் விடுவிக்காவிட்டால், இந்த மோதல் மீண்டும் தொடங்கப்படும் என்றார்.

உலகின் பிற்போக்குத்தனம் மற்றும் இராணுவவாதத்தின் மையமாக விளங்கும் வாஷிங்டன் மத்தியஸ்தம் பேசும் 'சமாதான' பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்கட்டும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடனான தந்திரோபாயங்கள் மூலமாகவோ அல்லது எந்தவொரு பிற்போக்குத்தனமான தேசியவாத ஆட்சிகள் மூலமாகவோ கூட மத்திய கிழக்கில் இந்த தீர்க்க முடியாத இரத்தந்தோய்ந்த மோதல்களில் இருந்து வெளியே வர எந்த வழியும் இல்லை. அப்பிராந்தியம் எங்கிலுமான ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கம் மூலமாக மட்டுமே முன்னோக்கிய பாதை உள்ளது, அது ஒரு சோசலிச மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரபு, இஸ்ரேலிய, துருக்கிய மற்றும் குர்திஷ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும்.

Loading