தீவிர வலதுசாரி அரசாங்கம் பதவியேற்கும் அச்சுறுத்தலை இத்தாலி எதிர்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெனிட்டோ முசோலினி ரோம் நகரை நோக்கி அணிவகுத்து சென்று சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த இலையுதிர்காலத்தில், ஒரு நவ-பாசிசக் கட்சி இத்தாலியில் அரசாங்கத்தைக் கைப்பற்றும் சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன.

டெக்சாஸில் பிப்ரவரி 2022 CPAC மாநாட்டில் Fratelli d'Italia தலைவர் ஜியோர்ஜியா மெலோனி பேசுகிறார்

செப்டம்பர் 25 பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஏழு வாரங்கள் உள்ள நிலையில், நவ-பாசிச பிராடெல்லி டி-இத்தாலியா (Fratelli d’Italia இத்தாலியின் சகோதரர்) தீவிர வலதுசாரி லெகா மற்றும் சில்வியோ பெர்லுஸ்கோனியின் ஃபோர்ஸா இத்தாலியாவைக் கொண்ட வலதுசாரி கூட்டணி வாக்கெடுப்பில் மிகவும் முன்னிலையில் உள்ளது. 45 சதவீத வாக்குகளுடன், அது இத்தாலியின் சிக்கலான தேர்தல் முறையின் காரணமாக சுமார் 60 சதவீத இடங்களை வெல்ல முடியும். இந்த விகிதாசார பிரதிநிதித்துவமும் பெரும்பான்மை வாக்குகளின் கலவையானது பெரிய கட்சிகள் மற்றும் கட்சி கூட்டணிகளுக்கு தெளிவாக சாதகமாக உள்ளது.

மறுபுறம், வலதுசாரி கூட்டணிக்குள் பிராடெல்லி டி-இத்தாலியா 24 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளது அதைத் தொடர்ந்து 11 சதவீதத்துடன் லெகா மற்றும் 8 சதவீதத்துடன் ஃபோர்ஸா இத்தாலியா உள்ளன. எனவே, பிராடெல்லியின் 45 வயதான தலைவரான ஜியோர்ஜியா மெலோனி, அரசாங்கத் தலைவர் பதவிக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளராகக் கருதப்படுகிறார்.

முசோலினியின் பாசிச இயக்கத்துடன் உடைத்துக்கொள்ளாத வரலாற்றுத் தொடர்ச்சியில் நிற்கும் ஒரு கட்சியை மெலோனி வழிநடத்துகிறார். அதன் சின்னமான பச்சை-வெள்ளை-சிவப்பு சுடரை அதன் பதாகைகளில் தாங்கியுள்ளது. 15 வயதில் மெலோனி, முசோலினியின் மரணத்திற்குப் பின்னர் அவரது பாசிசக் கட்சிக்குப் பின் வந்த Movimento Sociale Italiano (MSI) இன் இளைஞர் அமைப்பில் சேர்ந்தார், முசோலினியின் மரணத்திற்குப் பின்னர் பல உயர்மட்ட பாசிஸ்டுகளுக்கு அரசியல் அடைக்கலம் வழங்கியது.

2008 ஆம் ஆண்டில், சில்வியோ பெர்லுஸ்கோனி 31 வயதான அவரை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக MSI இன் வாரிசு கட்சியான தேசிய கூட்டணியின் (Alleanza Nazionale) அங்கத்தவரை நியமித்தார். பெர்லுஸ்கோனியின் ஃபோர்ஸா இத்தாலியாவினுள் தேசிய கூட்டணி கலைக்கப்பட்ட பின்னர், பாசிச பாரம்பரியத்தை தொடர மெலோனி 2012 இல் ப்ராடெல்லி டி' இத்தாலியாவை நிறுவினார். இது தலைவரின் (Il Duce) இன் நினைவாக கட்சி அஞ்சலி செலுத்துவதுடன் நவ-பாசிச குண்டர்களால் ஆதரிக்கப்படுகிறது. அதன் தேர்தல் பேரணிகளில் வழக்கமாக ஹிட்லர் வணக்கத்திற்கு (Sieg Heil) இணையான இத்தாலிய 'ரோமன் வணக்கம்' அவர்களின் பிரச்சார நிகழ்வுகளில் வழக்கமாகக் காணப்படுகிறது.

தந்திரோபாய காரணங்களுக்காக முசோலினியை மெலோனி வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அவர் முசோலினியிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ளவில்லை. மாறாக, அவர் பாசிச சர்வாதிகாரியினை குறைத்துமதிப்பிட்டு, அவர் 'வரலாற்றின் உள்ளடக்கத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டும்' என்று கூறுகிறார்.

எவ்வாறாயினும், அவரது சர்வதேச கூட்டாளிகளும் அரசியல் கருத்துக்களும், மெலோனி அரசியல் ரீதியாக எங்கு நிற்கின்றார் என்பதில் சந்தேகம் எதையும் வைக்கவில்லை. அவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போற்றுவதுடன், பிராங்கோ ஆதரவாளர்களின் கட்சியான ஸ்பெயினின் வோக்ஸ் மற்றும் ஹங்கேரியின் வலதுசாரித் தலைவர் விக்டர் ஓர்பனுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகிறார். அவர் ஐரோப்பிய பழைமைவாதிகளினதும் சீர்திருத்தவாதிகளினதும் கட்சியின் தலைவராகவும் உள்ளார். அதில் போலந்து PiS, தீவிர வலதுசாரி சுவீடன் ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்பானிய வோக்ஸ் மற்றும் பிரிட்டிஷ் டோரிகள் உள்ளனர்.

அரசியல்ரீதியாக, மெலோனி வலதுசாரி தேசியவாதம், வெளிநாட்டவர் மீதான இனவெறி மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதம் ஆகியவற்றின் கலவையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 'புலம்பெயர்ந்தோரின் பாரிய படையெடுப்பு', 'எங்கள் கிறிஸ்தவ அடையாளத்தின் இஸ்லாமியமயமாக்கல்', 'LGBT ஆதரவு' மற்றும் 'பிரஸ்ஸல்ஸில் இருந்து வரும் அதிகாரத்துவம்' ஆகியவற்றுக்கு எதிராக அவர் கோபப்படுகிறார். அவர் தன்னை ஒரு தாய், ஒரு கிறிஸ்தவர் மற்றும் ஒரு இத்தாலியராக விவரித்து இந்த அடையாளங்கள் வெகுஜன இடம்பெயர்வு, பாலின அரசியல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அச்சுறுத்தப்படுவதாகக் காண்கிறார்.

ஏப்ரல் 1945 இல், பாசிச சர்வாதிகாரி முசோலினி இத்தாலிய கிளர்ச்சிக்காரர்களால் கொல்லப்பட்டு, அவரது உடல் மிலான் நகரில் பொதுமக்கள் காண தூக்கிலிடப்பட்டது. 77 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது அரசியல் வாரிசுகளில் ஒருவர் மீண்டும் இத்தாலியில் ஆட்சியைப் பிடிக்க தீவிர வாய்ப்புகள் இருப்பது எப்படி சாத்தியமானது? அதுவும் ஒரு நீண்ட பாசிச-எதிர்ப்பு பாரம்பரியம் மற்றும் ஒரு போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தைக் கொண்ட சமூக முரண்பாடுகள் ஒரு உடையும் புள்ளியை அடையும் பதட்டமாக இருக்கும் ஒரு நாட்டில்?

இந்தக் கேள்விகளுக்கான பதில் மெலோனி மற்றும் அவரது கட்சியிடம் அதிகம் இல்லை, மத்திய-இடது கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது பிற்சேர்க்கைகள் போன்றவற்றிலேயே காணக்கிடைக்கிறது. போலி-இடதுகள் நீண்ட காலமாக தீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளுக்கு மறுவாழ்வு கொடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர் மற்றும் சமீபத்தில் அவர்களின் வேலைத்திட்டத்தையும் ஏற்றுக்கொண்டனர். சமூக தாக்குதல்கள், போர், அரசின் அதிகாரத்தை அதிகரிப்பது மற்றும் தொற்றுநோய்களில் கொரோனா வைரஸை இயக்க அனுமதிக்கும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு மேலும் இன்னும் வெளிப்படையாக, அதிகரித்துவரும் எதிர்ப்பிற்கு எதிராக அவற்றை திணிக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்தாலியப் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியில் இருந்தபோதும், தொற்றுநோய் இத்தாலியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றபோதும், அனைத்துக் கட்சிகளும் —ஜனநாயகக் கட்சி (PD) மற்றும் ஐந்து நட்சத்திர இயக்கம் முதல் பெர்லுஸ்கோனியின் ஃபோர்ஸா இத்தாலியா மற்றும் தீவிர வலதுசாரி லெகாவின் தலைவர் மாத்தேயோ சால்வீனி அவரே முசோலினியைப் போற்றுகிறார். முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் மரியோ திராகியின் கீழ் இவர்கள் ஒரு 'தேசிய ஒற்றுமை' அரசாங்கத்தை அமைக்க இணைந்தார்.

சர்வதேச நிதி மூலதனத்தின் நம்பிக்கைக்குரியவரான திராகி நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தியதுடன் மற்றும் முன்னர் ரஷ்யாவுடன் நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை பேணி வந்த இத்தாலியை, நேட்டோவின் போர் நோக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். ஜனநாயகக் கட்சியினரும் தொழிற்சங்கங்களும் இதற்கான எந்த எதிர்ப்பையும் நசுக்கி, அவருடைய கொள்கைகளின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தன்மை எவ்வளவு தெளிவாகத் தெரிந்ததோ, அவ்வளவு உறுதியாக அவர்கள் திராகியை ஆதரித்தனர்.

அவர்கள் 'தேசிய ஒற்றுமை' அரசாங்கத்தில் மெலோனியையும் சேர்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் 2018 பொதுத் தேர்தலில் 4.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற ப்ராடெல்லி ஒரேயொரு எதிர்க்கட்சியாக இருக்க விரும்பியதுடன், மேலும் வேகமாக வளர்ந்தது.

ஜனநாயகக் கட்சியினர், அவர்களின் தலைவர் என்ரிகோ லெட்டாவின் கீழ், தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் வலதுசாரி வேலைத்திட்டத்துடன் நடத்தி வருகின்றனர். ஜூலை பிற்பகுதியில், இத்தாலிய நாளிதளான La Stampa சால்வீனிக்கும் ரோமில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கும் இடையே நெருங்கிய உறவுகள் இருப்பதாகக் கூறப்பட்டபோது, “சால்வீனிக்கும் புட்டினின் ரஷ்யாவுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய இன்றைய கண்டுபிடிப்புகள் கவலையளிக்கின்றன என லெட்டா அறிவித்தார். தேர்தல் பிரச்சாரம் மிக மோசமான முறையில் ஒரு பெரிய கறையுடன் தொடங்குகிறது. திராகியின் அரசை வீழ்த்தியது புட்டின்தானா என்பதை அறிய விரும்புகிறோம்” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், லெட்டா, சால்வீனியையும் அவரது தீவிர வலதுசாரி லெகாவையும் முக்கியமாக புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அவர்களின் பாசிச துவேஷங்கள் மற்றும் முசோலினியின் புகழ்ச்சிக்காக அல்ல, மாறாக ரஷ்யாவிற்கு எதிரான போர்ப் போக்கை போதுமான அளவு ஆக்ரோஷமாக ஆதரிக்கவில்லை என்பதற்காக விமர்சிக்கிறார். மறுபுறம், நேட்டோவின் தாக்குதலை பாசிசவாதிகள் ஆதரித்தவுடன், அவர் பாராட்டுகளால் அவர்களை நிறைத்திருந்தார். மெலோனியுடன் இத்தாலிய செனட்டில் கூட்டாக தோன்றி உக்ரேனுக்கு மேற்கத்திய ஆயுத விநியோகம் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ பினாமிப் போருக்கு தனது ஆதரவை தெரிவித்தபோது, லெட்டா பாசிசத் தலைவருடனான ஒரு 'அழகான தருணம்' என அதைப்பற்றி பேசினார்.

இத்தாலிய பாராளுமன்றத்தில் என்ரிகோ லெட்டா (PD) மற்றும் ஜியோர்ஜியா மெலோனி (Fratelli d’Italia) (Alberto Pizzoli/Pool photo via AP)

திராகியின் தொழிலாள வர்க்க விரோத போக்கை தீவிரப்படுத்தும் நோக்கில் ஜனநாயகக் கட்சியினர் தாங்களாகவே ஒரு கூட்டணியை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளனர். லெட்டா, இந்த மாத தொடக்கத்தில், முன்னாள் பொருளாதார மந்திரி கார்லோ கலெண்டாவின் அஜியோன் கட்சி மற்றும் முன்னாள் ஐரோப்பிய ஆணையர் எம்மா போனினோவின் Più ஐரோப்பா கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்தார். இவை இரண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் வலதுசாரி தாராளவாத அமைப்புகளாகும். சில நாட்களுக்குப் பின்னர் அவர் பசுமைக் கட்சியையும் இத்தாலிய இடது கட்சியையும் (சினிஸ்ட்ரா இத்தாலியானா) கூட்டணியில் சேர்த்தபோது, அஸியோன் மீண்டும் வெளியேறியது. அரசியல் நிபுணர்களின் கூற்றுப்படி, மத்திய-இடது கூட்டணியின் தேர்தல் வெற்றி வாய்ப்பு 'ஆகக் குறைந்தளவிற்கு' குறைத்துள்ளது.

இந்த சூழ்ச்சிகளில் சினிஸ்ட்ரா இத்தாலியானா குறிப்பாக மோசமான பாத்திரத்தை வகிக்கிறது. அதன் முக்கிய பணியானது வலதுசாரி தாக்குதலை வலுப்படுத்துவதும் அதற்கு எதிராக எந்த சமூக அணிதிரட்டலையும் தடுப்பதும் ஆகும். 2015 இல் நிறுவப்பட்ட இந்த கட்சியானது, கப்பல் உடைந்த முன்னாள் போலி-இடது கட்சிகளான Rifondazione Comunista மற்றும் Sinistra Ecologia Libertà (SEL) போன்றவற்றுக்கு ஒரு தங்குமிடமாக உள்ளது. அதன் கொள்கைகள் ஒவ்வொன்றும் பேரழிவில் முடிந்தது. 2005 மற்றும் 2008 க்கு இடையில், Rifondazione ரோமானோ புரோடியின் (PD) கீழ் 'மத்திய-இடது' அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் போர்-சார்பு மற்றும் சிக்கன போக்கானது, அரசாங்கத்தில் மெலோனியின் முதல் பங்கேற்பிற்கு வழி வகுத்தது..

2018 முதல் 2019 வரை 15 மாதங்கள் சால்வீனியுடன் ஆட்சி செய்த ஜனநாயகக் கட்சி மற்றும் ஐந்து நட்சத்திர இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் கூட சினிஸ்ட்ரா இத்தாலியானாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இக்கட்சியின் முன்மாதிரிகள் கிரேக்கத்தின் சிரிசா மற்றும் ஸ்பெயினின் பொடெமோஸ் ஆகும். இவை இரண்டும் ஆளும் கட்சிகளாக தொழிலாள வர்க்கத்தின் மீது பாரிய தாக்குதல்களை நடத்தின. சிரிசாவின் விஷயத்தில், தீவிர வலதுசாரி சுதந்திர கிரேக்கர்களுடன் (Anel) உடன் கூட்டணியாக இருந்தது. முக்கிமானது என்னவெனில் ஐரோப்பிய ஒன்றிய அளவில், Anel மெலோனியின் ப்ராடெல்லியின் அதே அரசியல் குழுவைச் சேர்ந்தது.

இத்தாலி ஒரு சமூக வெடிமருந்து கிடங்காக உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் மீதான பல தசாப்தகால தாக்குதல்கள், சமூக சமத்துவமின்மை, வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் பெருகி வருகின்றன. தொழிலாள வர்க்கத்தை பயமுறுத்துவதற்கும், சமூக பதட்டங்களை இனவெறியின் வழிகளில் செலுத்துவதற்கும், ஒரு பொலிஸ் அரசைக் கட்டியெழுப்புவதற்கும், பாதுகாப்புப் படைகளின் கடைசி தடைகளை அகற்றுவதற்கும் தீவிர வலதுசாரிகள் தேவையாக உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சால்வீனி, அவரது தீவிர வலதுசாரி கட்சியுடன் லெட்டா குழுவினருடன் அமைச்சரவை மேசையில் அமர்ந்துள்ளார். ஏற்கனவே தன்னை ஒரு எதிர்கால உள்துறை அமைச்சராகப் பார்க்கிறார். அவர் அரசாங்கத்தின் தலைவராக வருவதற்கான நம்பிக்கையையும் இன்னும் கைவிடவில்லை. சில நாட்களுக்கு முன்பு, லம்படூசா (Lampedusa) குடியேற்ற மையத்தில் பிரச்சாரத்தில் தோன்றியபோது, இத்தாலிய துறைமுகங்களில் அகதிகளை உள்வாங்குவதை முற்றிலுமாக நிறுத்துவதாக உறுதியளித்தார்.

மெலோனி இன்னும் மேலே சென்று, வட ஆபிரிக்க மத்திய தரைக்கடல் கடற்கரையில் ஒரு கடற்படை முற்றுகையை விதிக்க முன்மொழிந்தார். இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு போர் நடவடிக்கையாக இருக்கும். அரசாங்கத்தின் தலைவராக தனது முன்னோடிகளின் சமூக தாக்குதல்களைத் தொடருவேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அடுத்த சட்டமன்ற காலம் கடினமானதாக இருக்கும் என்று அவர் அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான Fox News க்கு அளித்த நேர்காணலில் கூறினார். “தேர்தல் பிரச்சாரத்தில் இத்தாலியர்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். எங்களால் வழங்க முடியாத ஒன்றை நாங்கள் உறுதியளிக்க முடியாது” என்றார்.

இந்த எல்லா காரணங்களுக்காகவும், ஐரோப்பாவின் ஆளும் வட்டங்களும் மெலோனியின் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புப் பேச்சுக்கள் இருந்தபோதிலும், ஓரளவு அனுதாபத்துடன் அவர் அரசாங்கத்தை கையகப்படுத்துவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஊடகங்கள் நவ-பாசிசவாதியைப் பற்றி மிகவும் புகழ்ச்சி தரும் படத்தை வரைகின்றன.

அவர் ஐரோப்பிய தலைநகரங்களிலும் வாஷிங்டனிலும் அதிக ஆதரவைப் பெறுகிறார். ஏனெனில் அவர் உக்ரேன் போரில் நேட்டோவின் பக்கத்தில் எவ்வித தடையுமின்றி இருக்கிறார். 'இந்த மோதல் உலக ஒழுங்கை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல்பாட்டில் பனிப்பாறையின் முனை' என்று அவர் Fox News இடம் கூறினார். 'மேற்கு நாடுகள் தோற்றால், புட்டினின் ரஷ்யாவும், ஜியின் சீனாவும் வெற்றியாளர்களாகும். மேற்கில், ஐரோப்பியர்கள் தான் அதற்கு அதிக விலை கொடுக்கின்றார்கள்' என்றார்.

மெலோனி உண்மையில் தேர்தலில் வெற்றி பெற்றால், ஐரோப்பிய தலைவர்கள் அவரைத் தங்கள் அணிகளில் இருகரம் நீட்டி வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இத்தாலியின் நிகழ்வு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. ஆளும் வர்க்கம் எல்லா இடங்களிலும் வளர்ந்து வரும் சமூக பதட்டங்கள் மற்றும் வர்க்கப் போராட்டங்களுக்கு வலதிற்கு ஒரு கூர்மையான மாற்றத்துடன் பதிலடி கொடுக்கிறது. ஸ்பெயினின் Vox, பிரான்சில் மரின் லு பென்னின் தேசிய பேரணி, ஜேர்மனியில் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) போன்ற தீவிர வலதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்தைக் கைப்பற்றத் தயாராகின்றன அல்லது அகதிகள் கொள்கைகளில் செய்வதைப் போலவே அரசாங்கங்கள் பின்பற்றும் அரசியல் பாதையை வடிவமைக்கின்றன.

இதை தொழிலாள வர்க்கம் அனுமதிக்கக் கூடாது. 1920கள் மற்றும் 1930களில் இருந்ததைப் போலவே, முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கும் வர்க்கப் போராட்டத்தின் வெடிக்கும் வளர்ச்சிக்கும் ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் பாசிசத்தின் ஆபத்தை அது நிறுத்த வேண்டும். தீவிர வலதுசாரிகளுக்கு வழியைத் தயாரித்து, அவர்கள் செய்யும் அதே தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் இதைச் செய்ய முடியாது. வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு கீழிருந்து ஒரு சுயாதீனமான வெகுஜன இயக்கம் தேவைப்படுகிறது.

சமூக மற்றும் அரசியல் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டம், தொற்றுநோய்களில் 'உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை' என்ற கொலைகார கொள்கைகளுக்கு எதிராக மற்றும் சர்வாதிகாரத்திற்கும் போருக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து வர்க்கப் போராட்டத்தின் கட்டுப்பாட்டைப் பறித்தெடுப்பதற்காக, பணியிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் சுற்றுப்புறங்களில் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களின் இறுக்கமான வலைப்பின்னலைக் கட்டியெழுப்புவது இந்தப் போராட்டத்தின் மையமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பொது எதிரிக்கு எதிராக அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கங்களை ஐக்கியப்படுத்துவதும், இத்தாலியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவைக் கட்டியெழுப்புவதும் இதற்கு அவசியமாகின்றது.

Loading