கோவிட்-19: 10 மில்லியன் குழந்தைகள் தமது பெற்றோரை அல்லது பிற பராமரிப்பாளர்களை இழந்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்க மருத்துவ சங்க பத்திரிகை (Journal of the American Medical Association - JAMA) செவ்வாயன்று வெளியிட்ட ஒரு ஆய்வுக் கடிதம், உலகளவில் 10.5 மில்லியன் குழந்தைகள் கோவிட்-19 தொற்றுநோயால் தங்கள் பெற்றோரை அல்லது பிற பராமரிப்பாளர்களை இழந்துள்ளனர் என மதிப்பிடுகிறது.

நவம்பர் 9, 2021 அன்று கலிஃபோர்னியாவின் சாண்டா அனாவில் உள்ள வில்லார்ட் இடைநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி மருத்துவமனையில் ஃபைசர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்காக 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வரிசையில் காத்திருக்கிறார்கள். (AP Photo/Jae C Hong, File) [AP Photo/Jae C. Hong]

பிரிட்டன் மற்றும் பல ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏழு மருத்துவர்களைக் கொண்ட குழுவின் கடிதத்தின்படி, “நிறுவனமயமாக்கல், துஷ்பிரயோகம், அதிர்ச்சிகரமான துக்கம், மனநலப் பிரச்சினைகள், இளம் பருவ கர்ப்பம், மோசமான கல்வி முடிவுகள், மற்றும் நாள்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் உட்பட குழந்தைகளுக்கான விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.”

இந்த கண்டுபிடிப்புகள், பல நாடுகளால் வெளியிடப்பட்ட மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO), எக்னாமிஸ்ட் இதழ், மற்றும் சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) ஆகியவற்றால் சேகரிக்கப்பட்ட அதிகப்படியான இறப்புக்கள் பற்றிய புதிய புள்ளிவிபரங்களிலிருந்து பெறப்பட்டது.

மிகவும் பழமைவாதமாக விவரிக்கப்பட்டுள்ள WHO புள்ளிவிபரங்களின்படி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா உள்ளது, இங்கு 3.5 மில்லியன் குழந்தைகள் தங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பராமரிப்பாளர்களை இழந்துள்ளனர். இதில், இந்தோனேசியாவில் 660,000 மற்றும் பாகிஸ்தானில் 410,000 போன்ற பெரும் மொத்த எண்ணிக்கைகளை கொண்ட நாடுகளும் அடங்கும். மேலும், எகிப்தில் 450,000 மற்றும் நைஜீரியாவில் 430,000 உட்பட, ஆபிரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட சில நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்கு அரைக்கோளத்தில், மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன, இப்பகுதிகளின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கைகளும் மிக அதிகமாக உள்ளது.

அறிக்கையின் சுருக்கத்தின்படி, “ஆதரவை இழந்து நிற்கும் குழந்தைகளைப் பராமரிக்க சிறிதளவு நடவடிக்கைதான் எடுக்கப்படுகிறது,” மற்றும் எந்தவொரு தேசிய அரசாங்கத்தாலும் அனாதை அல்லது ஆதரவற்ற குழந்தைகளின் உண்மையான புள்ளிவிபரங்களின் அட்டவணைப்படுத்தல் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான, இலண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் ஜூலியட் அன்வின், புதனன்று Scientific American இல் வெளியிடப்பட்ட வர்ணனையில் குழுவின் கண்டுபிடிப்புக்களை விளக்கினார்:

ஒரு தொற்றுநோயியல் நிபுணராக, நான் நோய்தொற்றின் அலைகளைப் படிக்கவும், இறப்புக்களின் உயர்வு மற்றும் வீழ்ச்சியை அளவிடவும் பழகிவிட்டேன். கோவிட் நோயினால் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளின் இறப்புகள் சிக்கலுக்குள்ளாகி பின்வாங்கும் அதே வேளையில், பராமரிப்பாளர்களின் மரணத்தின் விளைவாக அனாதையாகி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை முற்றிலும் வேறுபட்டது. ஒவ்வொரு நாட்டிலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தடுக்க முடியாமல் மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. தாய், தந்தை, தாத்தா பாட்டி அல்லது பிற உறவினரின் மரணம் நிரந்தரமானது மற்றும் நீடித்தது. தொற்றுநோயின் தொடக்கத்தில் பெற்றோர் இறந்துபோன ஒரு குழந்தை இப்போதுவரை அந்த பெற்றோர் இல்லாத குழந்தையாகவே உள்ளது.

பெற்றோர் இறந்த மூன்று குழந்தைகளில் இருவர் 10 மற்றும் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், பெற்றோரை இழந்த நான்கு குழந்தைகளில் மூன்று பேர் தாயை விட தந்தையை இழந்தவர்கள் என்றும் அன்வின் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறினார்: “இருப்பினும், பாலினத்தைப் பொருட்படுத்தாமல், முதன்மை சம்பாத்தியதாரர் இறந்த குடும்பங்களில், அவர்களின் மரணத்தை திடீர் மற்றும் நீடித்த குடும்ப பொருளாதாரச் சிக்கலுடன் இணைக்கலாம், அதேசமயம் ஒரு முதன்மை சமூக உணர்வுள்ள பராமரிப்பாளரின் இழப்பு சமூக தொடர்பைக் குறைக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலக மக்கள்தொகையில் தொடர்ந்து ஏற்படுத்தும் பெரும் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு இந்த புள்ளிவிபரங்கள் கூடுதல் பரிமாணத்தை வழங்குகின்றன. அன்வின் குறிப்பிடுவது போல், பெற்றோரை இழந்த மில்லியன் கணக்கான குழந்தைகள் எப்போதும் பெற்றோரை இழந்திருப்பார்கள். இழப்பு அவர்களின் வாழ்க்கையின் நிரந்தர அம்சமாக இருக்கும், இது அவர்களுக்கு உணர்வு மற்றும் உளவியல் ரீதியான சேதத்தை ஏற்படுத்தும். மேலும் கோவிட்-19 நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இறப்புக்களின் மொத்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும்.

மேலும், நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் மில்லியன் கணக்கான குழந்தைகள் இதில் சேர்க்கப்படவில்லை, இதனால் ஒரு முதன்மை பராமரிப்பாளர் செய்யவேண்டிய முக்கியமான பணிகளை அவர் செய்ய முடியாமல் போகலாம்.

இந்த பயங்கரமான எண்ணிக்கைகளை எதிர்கொள்ளும் அமெரிக்காவில் உள்ள பைடென் நிர்வாகம் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை, எதையும் செய்யவில்லை. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) 2021 இன் பிற்பகுதியில் வெளியிட்ட ஒரு அறிக்கை, அமெரிக்காவில் கோவிட்-19 அநாதைகளின் எண்ணிக்கை 140,000 என்று மதிப்பிட்டுள்ளது. அப்போதிருந்து, அநாதைகளின் எண்ணிக்கை உயர்ந்து வந்துள்ளது, ஆனால் CDC, 2022 முழுவதும் இந்த விஷயம் பற்றி எதுவும் வெளியிடவில்லை.

அதற்கு பதிலாக, அனாதைகள் பற்றிய அறிக்கையை JAMA வெளியிட்ட அதே நாளில், வெள்ளை மாளிகை கோவிட்-19 சுருக்க செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது, தொற்றுநோயைக் கையாள்வதில் பைடெனின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பெரும் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியான பேச்சில் ஈடுபட்டுள்ள அதன் அனைத்து முன்னணி பொது சுகாதாரப் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். தொலைபேசி மாநாட்டில் பங்கேற்றவர்களில், வெள்ளை மாளிகையின் கோவிட்-19 பணிகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஆஷிஷ் ஜா; கோவிட்-19 பற்றிய பைடெனின் முதன்மை ஆலோசகர் டாக்டர். அந்தோனி ஃபவுசி; CDC இன் இயக்குநர் டாக்டர். ரோசெல் வாலென்ஸ்கி; மற்றும் சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் சேவியர் பெசேரா ஆகியோர் அடங்குவர்.

அவர்களில் எவரும் அனாதையாகிப்போன குழந்தைகள் அல்லது ஒட்டுமொத்த மக்கள்தொகை மீதான பாதிப்பு என தொற்றுநோயின் எந்த பேரழிவுகர தாக்கம் பற்றியும் பேசவில்லை. டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் போது நிகழ்ந்த கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை 400,000 உடன் ஒப்பிடுகையில், வெள்ளை மாளிகையில் பைடெனின் பதவிக் காலம் முழுவதும் தடுப்பூசிகள் கிடைத்த போதிலும் 650,000 அளவிற்கு அதிகமான மக்கள் தொற்றுநோயால் இறந்துள்ளனர் என்ற உண்மை குறித்து அவர்கள் அனைவரும் மௌனம் சாதித்தனர். தொற்றுநோய் முடிந்துவிட்டது அல்லது குறைந்தபட்சம் ’இறுதி ஆட்டம்’ நடக்கிறது என்ற தவறான பிரச்சாரத்தை மதரீதியாக கடைப்பிடிக்கும் மனநிறைவு கொண்ட செய்தியாளர் குழுவால் அவர்கள் கேள்வி கேட்கப்படவில்லை.

அமெரிக்காவில் ஏற்கனவே ஒரு மில்லியனுக்கு அதிகமாகவும் உலகளவில் 20 மில்லியனுக்கு அதிகமாகவும் மக்களை கொன்று குவித்த ஒரு வைரஸைப் பற்றி மனநிறைவை பரப்புவதற்கான வாய்ப்பை ஒருபோதும் தவறவிடாத டாக்டர் ஜா, மக்களை வீட்டிற்குள் அடைக்கும் வரவிருக்கும் குளிர்காலம், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் இலையுதிர் மற்றும் குளிர் காலங்களில் ஏற்பட்ட கோவிட்-19 நோயின் எழுச்சிக்கான சந்தர்ப்பமாக இருக்காது என்று கூறினார்.

“கோவிட்-19 நோய் காலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை எவ்வாறு சமாளிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார். “மக்கள் முன்வந்து தேவையானதைச் செய்தால், இந்த குளிர்காலத்தை நாம் மிகக் குறைவான துன்பம், மிகக் குறைவான மரணம், மிகக் குறைவான இடையூறுகளுடன் கடந்து செல்லலாம்.” இவரது மொழி இதைத்தான் வெளிப்படுத்துகிறது: மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புக்களில் மற்றொரு பாரிய எழுச்சி ஏற்பட்டால், அமெரிக்க மக்கள் ‘முன்னேற’ தவறியதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டும்.

கோவிட்-19 அமெரிக்க வாழ்வின் நிரந்தர அம்சமாக மாறிவிட்டது என்றும், பிறழ்வுகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் மக்களுக்குத் தேவைப்படும் என்றும் ஃபவுசியும் ஜாவும் வலியுறுத்தினர். “எந்தவொரு புதிய மாறுபாட்டின் தாக்கத்தையும் தவிர்த்து,” “பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு ஒரு வருடாந்திர கோவிட் தடுப்பூசி ஆண்டு முழுவதும் அதிக அளவு பாதுகாப்பை வழங்கக் கூடிய நிலையை நோக்கி நாம் நகர்கிறோம்” என்று டாக்டர் ஜா கூறினார்.

டாக்டர். ஃபவுசி கூறினார்: “பெரியளவில் வேறுபட்ட மாறுபாடு இல்லாத நிலையில், கோவிட்-19 தொற்றுநோயின் அடுத்த எழுச்சியை நாம் எதிர்நோக்குகிறோம் என்பது அதிகரித்தளவில் தெளிவாகிறது, வருடாந்திர சளிக்காய்ச்சல் தடுப்பூசியைப் போல, தற்போது மக்களிடையே பரவி வரும் விகாரங்களை தடுக்கும் வகையில் வருடாந்திரம் புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளும் பாதையை நோக்கி நாம் நகர்கிறோம்.”

இந்த வாதம் தொற்றுநோய் அச்சுறுத்தலின் தன்மையை முற்றிலும் சிதைக்கிறது. கோவிட்-19 காய்ச்சலை விட மிகவும் ஆபத்தானது என்பதுடன், பெருகிய முறையில் தொற்றும் தன்மை மற்றும் தடுப்பூசி ஏய்ப்புத் தன்மை கொண்ட மாறுபாடுகளாக மாறும் திறனை அது கொண்டுள்ளது. டாக்டர் ஜா ‘curveball’ என்று நிராகரிப்பது உண்மையில் முழுமையான உறுதியானது: தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளைத் தவிர்க்கும் புதிய வகைகளை உருவாக்க SARS-CoV-2 தொடர்ந்து பரிணாம அழுத்தங்களுக்கு உள்ளாகிறது.

இந்த பிறழ்வுகளை வளர்க்கும் சூழல் ‘வைரஸூடன் வாழ்வது’ அல்லது கோவிட்-19 ‘உள்ளூர்’ அல்லது ‘நிரந்தர’ நோய் என்று அறிவிக்கும் கொள்கையால் உருவாக்கப்படுகிறது, ஏனெனில் பில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வைரஸ் பிறழ்வடைவதற்கு போதுமான வாய்ப்பு உள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான ஒரே உண்மையான பாதுகாப்பு என்பது SARS-CoV-2 வைரஸை நீக்குவது மற்றும் ஒழிப்பது மட்டுமே, இதற்கு தடுப்பூசிகள், பரிசோதனைகள், தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், மற்றும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை தடுக்கும் தற்காலிக பூட்டுதல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முறையான பொது சுகாதார முயற்சி தேவைப்படுகிறது.

புதன்கிழமை, உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஓமிக்ரோனின் அசல் மாறுபாடான BA.1, மற்றும் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் மாறுபாடான BA.5 ஆகியவற்றின் கலவைக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட புதிய தடுப்பூசிகளுக்கு இறுதி ஒப்புதல் அளித்தது. அந்த நடவடிக்கையைப் பாராட்டவும், கோவிட்-19 தடுப்பூசி மேம்பாடு மற்றும் விநியோகத்திற்கு காங்கிரஸின் கூடுதல் நிதியுதவிக்கு முறையிடவும் பைடென் வியாழனன்று ஒரு செய்தி அறிக்கை கூட்டத்திற்கு திட்டமிட்டார், ஆனால் பிரிட்டனில் இராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததன் பின்னர் அது இரத்து செய்யப்பட்டது.

Loading