முன்னோடியற்ற கடும் வெள்ளம் தொடரும் நிலையில், பாகிஸ்தான் பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

காலநிலை மாற்றத்தினால் எழுந்துள்ள மற்றும் நிரூபிக்கக்கூடிய வகையில் அதனுடன் பிணைந்ததான, முன்னோடியற்ற கடும் வெள்ளம் பாகிஸ்தானை தொடர்ந்து அழித்து வருகிறது, உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை கடந்த வாரத்தில் இருந்து 250 க்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது.

வறிய தெற்காசிய நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதால் 1,391 பேர் உயிரிழந்துள்ளதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12,700 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை, பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 புதிய இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

2022 வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ள ஷாதாத்கோட், கைர்பூர் நாதன் ஷா, மடோ, ஃபரிதாபாத், மெஹர் மற்றும் பாகிஸ்தானின் சிந்துவின் பிற நகரங்களின் வான்வழி காட்சி [Photo by Ali Hyder Junejo / CC BY 4.0]

நூற்றுக்கணக்கான பாலங்களும் பிற உள்கட்டமைப்புக்களும் அழிக்கப்பட்டு, பல பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்புக்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை மொத்தமாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. மேலும், அங்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் அதிகரித்து வருகிறது.

33 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அல்லது ஒவ்வொரு ஏழு பாகிஸ்தானியரில் ஒருவர் வீதம், இடம்பெயர்ந்தவர்கள், வீடற்றவர்கள் அல்லது வெள்ளத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்று பலவிதமாக விவரிக்கப்படுகிறார்கள். இவர்களில் 16 மில்லியன் குழந்தைகள் அடங்குவர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு முன்பாகவே, கிட்டத்தட்ட பாதி மக்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாகக் கருதப்பட்டனர். மில்லியன் கணக்கான மக்கள் இப்போது தற்காலிக தங்குமிடங்களில் அல்லது எப்போதாவது பராமரிக்கப்படும் முகாம்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த இடங்களுக்கு அவசரகால பொருட்களை விநியோகிக்க முடியாததால், பலர் திறந்த வெளிகளில் உறங்குகின்றனர்.

வெள்ளத்தில் உயிர் தப்பியவர்கள் உணவு, குடி தண்ணீர், மற்றும் சுகாதாரப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். அங்கு கழிப்பறைகள் இல்லாத நிலையில், முகாமில் வசிப்பவர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளை மல ஜலம் கழிக்க பயன்படுத்தும் கட்டாயம் உள்ளது. இந்த சகிக்க முடியாத நிலைமைகளால் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 650,000 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர், அவர்களில் 73,000 பேர் இந்த மாதம் பிரசவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போதுமான சுகாதாரப் பொருட்கள் கிடைக்காததால் தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளது. தோல் தொற்றுநோய்கள் மற்றும் வயிற்றுக் காய்ச்சல் முகாம்களில் உள்ளவர்களிடையே பரவலாக பரவுவதற்கு, கழிப்பறைகள் இல்லாததே காரணமாகும். சிந்துவில் மட்டும் 134,000 க்கும் அதிகமான வயிற்றுப்போக்கு நோயாளிகளும், 44,000 மலேரியா நோயாளிகளும் இருப்பதாக பதிவாகியுள்ளது. கொசுக்களால் பரவும் மற்ற நோய்தொற்றுக்களும் அங்கு பரவுகின்றன, கராச்சியில் ஆகஸ்டில் 1,265 டெங்கு நோய்களும், செப்டம்பரின் முதல் ஐந்து நாட்களில் மேலும் 347 டெங்கு நோய்களும் பதிவாகியுள்ளன.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை கண்டறிந்து மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், ஆயுதப் படைகளிடம் பெரும்பாலும் ஒப்படைக்கப்பட்ட நிவாரணப் பணிகள் நெருக்கடியின் அளவுக்குப் பொருந்தக்கூடிய வகையில் இல்லை. நாட்டின் 160 மாவட்டங்களில் 81 மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் வரும் நாட்களில் இருக்கும் கன மழையால் வெள்ள நீர் வேகமாக குறையவும் வாய்ப்பில்லை.

தேசிய வெள்ள மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (NFRCC), புதன்கிழமை, முந்தைய 24 மணி நேரத்தில் இராணுவம் 20 ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் 30 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியபோது, வெள்ளத்தில் சிக்கித் தவித்த 217 நபர்களை மீட்டதாக தெரிவித்துள்ளது. கடற்படைகளும் விமானப்படைகளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்றாலும், மிட்புப் பணி சிறிய அளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

சமீப நாட்களில் நீர் மட்டத்தில் சிறிதளவு சரிவு ஏற்பட்டாலும், நாட்டின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான மன்சார் ஏரி, அதன் கரைகளை உடைக்கும் அபாயத்தில் உள்ளது, இது பாரிய உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய விளைவுகளைத் தடுக்க, சிந்து மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஏரியில் பல திட்டமிடப்பட்ட கூடுதல் தடுப்புகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்பார்த்தபடி, தடுப்புகள் உடைந்து அருகிலுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, பல இலட்சம் மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை, பான் சையதாபாத்தில் உள்ள அதிகாரிகள் 150,000 குடியிருப்பாளர்களையும், அங்கு தஞ்சம் புகுந்துள்ள 10,000 இடம்பெயர்ந்த மக்களையும் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்தனர்.

நாட்டின் மிகவும் வறிய மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த மாகாணமான பலுசிஸ்தானின் மாகாண அரசாங்கம், செப்டம்பர் 1 நிலவரப்படி அதன் 34 மாவட்டங்களில் 32 ‘பேரிடர் பாதிப்பை’ அடைந்துள்ளதாக விவரித்துள்ளது. வடக்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கி.மு. 2,500 க்கு முந்தைய மற்றும் உலகின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றான மொஹெஞ்சதாரோவின் இடிபாடுகளை வெள்ளம் அடித்துச் செல்லக்கூடும் என்ற அச்சம் உள்ளது. வெள்ளநீர் இதுவரை அந்த தளத்தைத் தொடவில்லை, என்றாலும் அரிதாக பெய்த கனமழையால் அது சேதமடைந்துள்ளது, பல சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. ஹரப்பா அல்லது சிந்து சமவெளி நாகரிகத்தின் மையமான மொஹெஞ்சதாரோ, ஒரு விரிவான பண்டைய வடிகால் அமைப்பைக் கொண்டுள்ள நிலையில், அது முந்தைய வெள்ளங்களில் இருந்து தப்பிக்க உதவியது. இந்த தளம் தெற்காசியாவில் சிறந்த பாதுகாக்கப்பட்ட பண்டைய நகர்ப்புற குடியேற்றப் பகுதியாக கருதப்படுகிறது.

ஆகஸ்ட் 30 அன்று, ஐக்கிய நாடுகள் சபை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்க அங்கத்துவ நாடுகளிடம் 160 மில்லியன் டாலர் நிதி வழங்குமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளது. பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், இடைப்பட்ட ஒன்றரை வாரத்தில் இந்த சொற்ப தொகை கூட திரட்டப்படவில்லை.

பெரு வணிக முஸ்லீம் லீக் நவாஸ் (PML-N) கட்சி மற்றும் மக்கள் கட்சி (PPP) கூட்டணியால் வழிநடத்தப்படும் பாகிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை என்னவென்றால், கடன் பிணை எடுப்பு தொகை வழங்கிய சர்வதேச நாணய நிதியத்தால் குறிப்பிடப்பட்ட வரம்புகளுக்குள் அது செலவினங்களைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

இன்றுவரை, அரசாங்கம் 33 மில்லியனுக்கும் அதிகமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் 70 பில்லியன் ரூபாய் அல்லது 314 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளது, அவர்களில் பலர் தங்கள் வீடுகள், பயிர்கள் மற்றும் கால்நடைகளின் அழிவை எதிர்கொண்டுள்ளனர்.

வெள்ளத்திற்கு முன்னதாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அங்கு மிக அதிக வெப்பநிலை இருந்தது, இது வழமையாக 45 டிகிரி செல்சியஸை (113 பாரன்ஹீட்) தாண்டியது மற்றும் சில இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தது. இதைத் தொடர்ந்து காலத்திற்கு முன்பாகவே பருவமழை ஆரம்பமானது, மேலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சராசரியாக மூன்று முதல் எட்டு மடங்கு மழை பெய்தது. விரிவடைந்த வெப்ப அலைகள் இமயமலை மற்றும் இந்து குஷ் மலைகளில் நீண்டகால பனிப்பாறைகள் உருகுவதை துரிதப்படுத்தியது. இது பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் என்றழைக்கப்படும் ஒரு நிகழ்வைத் தூண்டியுள்ளது, அதாவது, பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் உருவாகும் பெரிய நீர்நிலைகள் திடீரென அவற்றின் தற்காலிக கரைகளை உடைத்து மலைகளிலிருந்து கீழே பாய்ந்து தாழ்வான பகுதிகளை மூழ்கடிக்கின்றன. இந்த கொடிய திடீர் வெள்ளத்திற்கு கூடுதலாக, பனிப்பாறை ஏரி வெடிப்புக்கள் பேரழிவு தரும் நிலச்சரிவுகளைத் தூண்டியுள்ளன.

சர்வதேச காலநிலை விஞ்ஞானம் மற்றும் கொள்கை பகுப்பாய்வு அமைப்பின் காலநிலை பகுப்பாய்வுக்கான ‘தெற்காசியாவிற்கான பிராந்திய தலைவரான’ டாக்டர். ஃபஹத் சயீத் BBC இடம், பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவுகர வெள்ளம் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு விடுக்கப்பட்ட ‘ஒரு முழுமையான எச்சரிக்கை அழைப்பு’ என்று கூறினார். “இவை அனைத்தும் உலகம் 1.2 செல்சியஸ் அளவிற்கு வெப்பமடையும் போது நடக்கின்றன. அதை விட வெப்பமயமாதல் பாகிஸ்தானில் பலருக்கு மரண தண்டனை போன்றதாகும்.”

செப்டம்பர் 1 அன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதற்கு முன்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க உலகளாவிய சக்திகள் தொடர்ந்து மறுத்து வருவது பற்றி பேசினார். உக்ரேன் போர் மீது தான் ‘அதிக கவனம் இருப்பதாக’ குட்டெரெஸ் கூறினார். “ஆனால் மக்கள் மற்றொரு போர் இருப்பதை மறந்துவிடுகிறார்கள் – அதாவது, இயற்கையின் மீது நாம் நடத்தும் போர், மற்றும் இயற்கை திருப்பி தாக்குகிறது, மற்றும் காலநிலை மாற்றம் நமது கிரகத்தின் அழிவை வேகப்படுத்துகிறது என்பதை மறக்கிறார்கள். நமது காலத்தின் வரையறுக்கும் பிரச்சினையாகவுள்ள பருவநிலை மாற்றத்தை சமாளிக்க வணிகத்தை வழமையாக அணுகும் முறையை பின்பற்றுவது தூய தற்கொலையை போன்றதாகும்” என்கிறார்.

இத்தகைய சுத்தமான வாய்மொழி எதிர்ப்புக்கள் பெரும் வல்லரசுகளின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை.

காலநிலை மாற்றத்திற்கான பயனுள்ள நடவடிக்கைகளைத் தடுப்பதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளதைப் பற்றி குட்டெரெஸ் குறிப்பிடவில்லை. இந்த வாரம், வாஷிங்டன் பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 மில்லியன் டாலர் நிதியுதவிக்கு உறுதியளித்துள்ளது, இது பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஒரு டாலருக்கு குறைவான நிதியுதவியாகும். இந்த அற்பத் தொகை, ஏற்கனவே இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததும் மற்றும் பேரழிவுகரமான அணுசக்தி போர் வெடிப்பை தூண்ட அச்சுறுத்துவதுமான, ரஷ்யாவிற்கு எதிரான போரை விரிவுபடுத்துவதற்காக உக்ரேனுக்கு அமெரிக்கா பாய்ச்சியுள்ள பல பில்லியன் டாலர் இராணுவ உதவியுடன் ஒப்பிடுகையில் இது மிக மிக சொற்பமானதே.

கடந்த வாரம், பாகிஸ்தான் அரசாங்கம் வெள்ளச் சேதம் 10 பில்லியன் டாலர் என மதிப்பிட்டது, ஆனால் பேரழிவின் அளவு தெளிவாகத் தெரிந்ததால், அந்த மதிப்பீடு பெரியளவில் மேல்நோக்கி திருத்தப்பட்டது. அதன் புதிய மதிப்பீடு 30 பில்லியன் டாலர் அல்லது பாகிஸ்தானின் 47 பில்லியன் டாலர் தேசிய வரவு செலவுத் திட்டத்தில் 60 சதவிகிதத்திற்கு அதிகமாகும். பாகிஸ்தானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, 5,700 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளன, 240 க்கும் மேற்பட்ட பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன, மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்புக்கள் அடித்துச் செல்லப்பட்டன அல்லது பெரிதும் சேதமடைந்துள்ளன. 18,000 பள்ளிகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று UNICEF கூறுகிறது.

நாட்டின் இரண்டாவது பெரிய மாகாணமான சிந்துவில் கிட்டத்தட்ட 80 சதவிகித பயிர்கள் நாசமாகிவிட்டதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகஸ்ட் 29 அன்று அறிக்கை செய்தது. இதில் பருத்திப் பயிர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா பருத்தி பாகிஸ்தானின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பொருளாகும் மற்றும் நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி வருமானம் தரக்கூடிய பாகிஸ்தானின் ஜவுளித் தொழிலுக்கு அது இன்றியமையாததாகும்.

உலகெங்கிலும் உள்ள நாடுகளைப் போலவே பாகிஸ்தானும் எரிபொருள் மற்றும் பிற விலை உயர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பயிர்களின் அழிவால் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தையும் அது எதிர்கொள்ளும். இந்த மாத தொடக்கத்தில், பணவீக்க விகிதம் எப்போதும் இல்லாத அளவிற்கு 45.5 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக பாகிஸ்தான் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய பணவீக்க இயக்கி, எரிசக்தி தயாரிப்புகளுக்கான மானியங்கள் நீக்கப்பட்டதில் இருந்து உருவானது, இது விண்ணை முட்டும் விலை உயர்வை ஏற்படுத்தியது. கடந்த வாரம் 1.16 பில்லியன் டாலர் கடனை பாகிஸ்தானுக்கு வழங்கிய சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அரசாங்கம் எரிவாயு விலையை மேலும் 53 சதவிகிதம் அதிகரித்தாக வேண்டும். மேலும், Dawn பத்திரிகையின் படி, பெட்ரோலிய பொருட்கள் மீதான பொது விற்பனை வரியை புதுப்பிக்கவும் மற்ற விலை மானிங்களைக் குறைக்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலை உயர்வு மட்டும் அரசாங்கத்திற்கு 786 பில்லியன் ரூபாய் கூடுதல் வருவாயைத் தரும், இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உதவ இஸ்லாமாபாத் உறுதியளித்த தொகையை விட 10 மடங்கு அதிகமாகும்.

இதற்கிடையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் ஆப்கானிஸ்தானுக்கான உணவு விநியோகத்தை சீர்குலைத்து, நிலத்தால் சூழப்பட்ட அந்த நாட்டில் பேரழிவு தரும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் கடுமையாக்குகிறது. மேலும், பாகிஸ்தானில் 1.3 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் வாழ்கின்றனர், அவர்களில் 420,000 பேர் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Loading