முன்னோக்கு

ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் தினசரி கோவிட்-19 அறிக்கையிடலை முடிக்கின்றன: மக்களுக்கு எதிரானதான வைரஸ் ‘தடையின்றி பரவட்டும்’ சதியை பின்பற்றுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அடுத்தடுத்த நாட்களில், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் தினசரி கோவிட் அறிக்கையிடலை திடீரென முடித்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன, இது நோய்தொற்று விகிதம், மருத்துவமனை அனுமதிப்புக்கள், தடுப்பூசிகள் மற்றும் இறப்புக்கள் பற்றிய தகவல்களை அவர்களின் மக்கள் அணுகுவதை கடுமையாகக் குறைக்கிறது. இரு நாடுகளும் அகற்றப்பட்ட வாராந்திர அறிக்கைக்கு நகரும்.

இரு நாடுகளிலும் 2022 ஆம் ஆண்டில் இறப்பு மற்றும் நோய்தொற்று விகிதங்கள் தொற்றுநோயின் முதல் இரண்டு ஆண்டுகளை விட குறைவாக இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அவர்களின் அரசாங்கங்கள் பொது சுகாதார நடவடிக்கைகளை வெற்றிகரமாக கைவிட்டுவிட்டு, இலாப நோக்குள்ள, வைரஸ் ‘தடையின்றி பரவட்டும்’ திட்டத்திற்கு திரும்பியுள்ளன.

இந்த நிலைமைகளின் கீழ், மிகக் குறைந்த பொது கட்டுப்பாடுகளே நடைமுறையில் உள்ள நிலையில், ஜனநாயக ரீதியிலான விவாதத்தின் குறிப்பு எதுவுமின்றி அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையிடல் மாற்றம் என்பது, உழைக்கும் மக்களுக்கு எதிரான சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த சதியின் தன்மையைக் கொண்டுள்ளது.

எந்தவொரு முன்னேறிய முதலாளித்துவ நாட்டிலும் தொற்றுநோய்க்கான ஒருங்கிணைந்த, பொது சுகாதாரப் பதிலின் மிகக் கடைசியான அடையாளங்கள் தலைகீழாக மாறுவதைக் குறிக்கும் வகையில் இது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆஸ்திரேலியாவில், கடந்த வெள்ளியன்றுதான் வாராந்திர அறிக்கையிடலுக்கு மாற்றம் செய்யப்பட்டது, மேலும் உள்நாட்டு ஊடகங்களில் ஒரு சில மேலோட்டமான மற்றும் விமர்சனத்திற்குள்ளாகாத அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டன. நியூசிலாந்தில், தொழிற்கட்சி பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன், எந்தவித முன்னறிவிப்புமின்றி, தினசரி அறிக்கையை நேற்று முடிப்பதாக அறிவித்தார்.

இந்த முடிவுக்கு எந்தவொரு விஞ்ஞான அல்லது மருத்துவ அடிப்படையும் கிடையாது. இது, தொடர்ந்து நிகழும் மருத்துவ அவசரநிலை மற்றும் அதைக் கண்காணிக்கும் பொது சுகாதார நிபுணர்களின் திறனைப் பற்றி அறிந்து கொள்ளும் மக்களின் உரிமை மீதான தாக்குதலாக இருப்பதால், இரு நாடுகளிலும் உள்ள கொள்கை ரீதியான தொற்றுநோயியல் நிபுணர்களால் இது கண்டிக்கப்பட்டது.

இருப்பினும், அரசாங்கங்கள் இதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. மாறாக, அவற்றிற்கு வணிக நலன்களே முதன்மையானது என்பதை வெளிப்படையாகப் பறைசாற்றுகின்றன.

ஆர்டெர்ன் வெளிப்படையாக கூறினார்: “இறுதியாக, கோவிட் கட்டுப்பாடுகளால் நமக்கும், நம் வாழ்க்கைக்கும், நமது எதிர்காலத்துக்கும் என்ன நடக்கிறது என்பதை உணர்வதை விட, பொருளாதார நடவடிக்கைகளையும் நமது மீட்சியையும் தொடர்ந்து இயக்குவதால், நாம் மீண்டும் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்கிறோம்” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உற்பத்தியையும் பெருநிறுவன இலாபங்களையும் பெருக்குவதற்கான முயற்சியில் முழு தொழிலாளர் சக்தியும் ஈடுபடுவதை உறுதி செய்ய, அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளும், வரையறுக்கப்பட்டதாக இருந்தாலும், அவை கைவிடப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்திற்கு இணங்க, சுகாதார மற்றும் வயோதிபர் பராமரிப்பு அமைப்புகளைத் தவிர, முகக்கவச பயன்பாட்டிற்கான முந்தைய அனைத்து ஆணைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதாக ஆர்டெர்ன் அறிவித்தார். கோவிட் உறுதிசெய்யப்பட்ட தனிநபர்களுடன் வாழ்பவர்களை இனி தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது நோய்தொற்றை கட்டுப்படுத்தக்கூடிய மிக அடிப்படையான கட்டுப்பாட்டிற்கு விழுந்த அடியாக உள்ளது, அதேவேளை சுகாதாரப் பணியாளர்கள் உட்பட கடைசி தடுப்பூசி ஆணைகளும் அங்கு இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கமும் இதேபோல் கோவிட் நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை ஏழு நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக குறைத்துள்ளது. தொற்றக்கூடியது என்றாலும் பாதியளவு கோவிட் நோயாளிகள் சமூகத்தில் கலந்திருக்கும் நிலை உருவாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள இந்த நடவடிக்கை, தொழிலாளர்களை இந்த கொடிய வைரஸ் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருந்தாலும் கூட, அவர்களை தொடர்ந்து வேலையில் தக்க வைப்பதையே அப்பட்டமாக நோக்கம் கொண்டுள்ளது. மேலும், உள்நாட்டு விமானங்களில் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை.

தகவல்களை வெளியிடாமல் கட்டுப்படுத்துவதன் தெளிவான நோக்கம், இந்த ஆபத்தான நடவடிக்கைகளை நியாயப்படுத்த, ‘தொற்றுநோய் முடிந்துவிட்டது,’ அல்லது குறைந்தது ‘மோசமானது நமக்கு பின்னால் உள்ளது,’ என்ற மோசடியை ஊக்குவிப்பதாகும்.

ஆனால் உண்மைக்கு மேலாக எதுவும் இருக்க முடியாது. ஆஸ்திரேலியாவில், தினசரி அறிக்கையின் கடைசி நாளான செப்டம்பர் 9 அன்று நாடு முழுவதும் 133 இறப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டு, முழு தொற்றுநோய் காலத்தின் ஆறாவது கொடிய நாளாக அது இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமான இறப்புக்கள் நிகழ்ந்தன, அதாவது 2056 பேர் வைரஸால் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

நியூசிலாந்தில், இறப்புக்கள் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் 30 க்கும் குறைவாக இருந்தது, தற்போது கிட்டத்தட்ட 2,000 ஆக உயர்ந்துள்ளது. இது ஐந்து மில்லியன் மக்கள்தொகை கொண்ட தேசத்தை மீண்டும் மீண்டும் உலகளாவிய தனிநபர் இறப்புக்களின் பட்டியலில் முதலிடத்தில் வைத்துள்ளது, அதே நேரத்தில் கொரோனா வைரஸ் நாட்டின் இறப்புக்கான முக்கிய காரணமாக உள்ளது.

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் அமெரிக்காவின் முக்கிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சார்பாக பைடென் நிர்வாகத்தால் வகுக்கப்பட்ட வரைபடத்தை அப்படியே பின்பற்றுகின்றன.

பெப்ரவரியில், அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, தினசரி கோவிட்-19 இறப்புக்களை மத்திய அரசுக்கு அறிக்கை செய்யும் மருத்துவமனைகளுக்கான அதன் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது.

அந்த நேரத்தில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மட்டுமே மாற்றத்தின் மீது கவனத்தை ஈர்க்கும், மற்றும் தொற்றுநோயால் ஏற்பட்ட பேரழிவு பற்றிய அறிவை அடக்குவதில் அதன் தொலைநோக்கு முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் ஒரே பிரசுரமாக இருந்தது. Business Insider ஊடகம் WSWS இன் பிரசுரத்தை ‘தவறான வழிநடத்தல்’ என்றழைத்தது, ஆனால் ஒரு திருத்தத்தை கூட அது வெளியிடவில்லை, அதிலும் கிட்டத்தட்ட முழு அமெரிக்காவிலும் தினசரி கோவிட்-19 அறிக்கையிடல் முடிவடைந்த நிலையில் கூட. அமெரிக்காவில் நான்கு மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்தும் தங்களின் சொந்த தினசரி கோவிட்-19 அறிக்கையிடலை முடித்துக் கொண்டுள்ளதால், நாளுக்கு நாள் உயிரிழப்புக்களை பட்டியலிடுவது சாத்தியமற்றதாகிறது.

அமெரிக்காவில் நிகழ்ந்ததைப் போல, அதே மாதத்தில் பிரிட்டனும் தனது சொந்த தினசரி அறிக்கையிடல் முறையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது. இதேபோன்ற நடவடிக்கைகள் பல நாடுகளிலும் அதிகார வரம்புகளிலும் எடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, கனடாவில், ஒன்டாரியோ மற்றும் பல மாகாணங்கள் ஏற்கனவே தங்கள் தினசரி அறிக்கையிடல் முறையை இரத்து செய்துவிட்டன.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் மாற்றம் குறிப்பாக குறிப்பிடத்தக்கது, ஏனெனில் தொற்றுநோய்க்கு முன்னர் இறப்புக்கள் மற்றும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளும் ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றன. வரம்புகளுடன் கூட, தொற்றுநோய் குறித்து இரு நாடுகளும் எடுத்த விஞ்ஞான அடிப்படையிலான நடவடிக்கைகள், மற்றும் இதுவரை அவை ஏற்றுக்கொண்ட அப்பட்டமான ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ கொள்கை ஆகியவற்றிற்கு இடையேயான இடைவெளியின் நுண்ணிய வடிவமாக அவை உள்ளன.

ஆஸ்திரேலியாவின் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள், வைரஸை ஒழிப்பதற்கான திட்டத்திற்கு அதிகம் செலவு செய்ய நேரிடும் என்ற அடிப்படையில், அத்திட்டத்தை எப்போதும் நிராகரித்தன. ஆயினும்கூட, தொழிலாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் முக்கிய பிரிவுகளின் அழுத்தத்தின் கீழ், வைரஸை மீண்டும் மீண்டும் முத்திரை குத்திய வணிக சார்பு விலக்குகளுடன் கூடிய பூட்டுதல்கள் உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அவை கட்டாயப்படுத்தப்படவில்லை. சீனாவை தவிர உலகில் தொடர்ந்து வைரஸ் ஒழிப்பை பின்பற்றும் ஒரே நாடாக நியூசிலாந்து இருந்தது.

[புகைப்படம்: உலக சோசலிச வலைத் தளம்]

தொற்றுநோயின் முதல் இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில் 400,000 க்கும் குறைவான நோய்தொற்றுக்கள் இருந்தன, மற்றும் இறப்புக்கள் 2,239 ஆக இருந்தது. நீண்ட காலத்திற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் வைரஸ் பரவுவதை நிறுத்தியது.

கடந்த டிசம்பரில் முழு ‘பொருளாதாரமும் மீளத் திறக்கப்பட்டதன்’ விளைவாக, அந்த புள்ளிவிபரங்கள் 10.1 மில்லியன் நோய்தொற்றுக்கள் மற்றும் 14,357 இறப்புக்கள் என்ற அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளன. பரிசோதனை முறைகள் செயலில் இல்லாத காரணத்தால், நாட்டின் 25 மில்லியன் மக்களில் கணிசமான பெரும்பான்மை இந்த ஆண்டு பாதிக்கப்பட்டிருக்கலாம். ‘இலேசான’ பாதிப்புள்ள கோவிட் நோயாளிகளுடன் தொடர்புடைய தீவிர நிலைமைகளின் தொகுப்பான நெடுங்கோவிட் நோய், 10 சதவிகித தொழிலாளர்களை பலவீனப்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில், கடந்த ஆண்டு அக்டோபரில் ஆர்டெர்ன் அரசாங்கம் அதன் வைரஸ் ஒழிப்புத் திட்டத்தை இரத்து செய்வதற்கு முன்பு, 5,000 க்கும் குறைவான மொத்த நோய்தொற்றுக்களும், 30 இறப்புக்களும் மட்டுமே அங்கு பதிவாகியிருந்தன. இப்போது, உத்தியோகபூர்வ நோய்தொற்றுக்கள் 1.76 மில்லியனாகவும், இறப்புக்கள் கிட்டத்தட்ட 2,000 ஆகவும் கடுமையாக உயர்ந்துள்ளன.

பெரும் ஏகாதிபத்திய அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் ஊடகங்களால் கோரப்பட்டபடி, சீனா அதன் வைரஸ் ஒழிப்பு மூலோபாயத்தை கைவிட்டால் என்ன நிகழும் என்பதற்கான எச்சரிக்கையாகவே இந்த மாற்றம் உள்ளது. அதாவது, அந்நாட்டின் 1.4 பில்லியன் மக்களில் இலட்சக்கணக்கானவர்கள் அல்லது மில்லியன் கணக்கானவர்கள் இறப்பார்கள், தொற்றுநோயின் தொடக்கத்தில் இருந்து உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள 20 மில்லியன் இறப்புக்களுடன் இதுவும் சேரும்.

சீனாவின் வைரஸ் ஒழிப்புத் திட்டத்தின் மீதான நீடித்த தாக்குதல், உலகளாவிய நிதி மற்றும் பெருவணிகத்தின் செயல்பாடுகளில் அது ஏற்படுத்திய தாக்கத்தால் மட்டுமல்ல, மாறாக மற்ற அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்படும் ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்’ என்ற கொலைவெறிக் கொள்கைக்கு மாற்றாக உள்ளது என்பதை அது நிரூபிக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் முன்னேற்றங்களும் கவனிக்கத்தக்கவை, ஏனெனில் இரு நாடுகளிலும் வைரஸ் கட்டுப்பாடின்றி பரவுவது ஒரு சமூக-ஜனநாயக அரசாங்கத்தால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

நியூசிலாந்தில், ஊடகங்களில் ஒரு துறவி போன்றவராக முன்நிலைப்படுத்தப்பட்ட ஆர்டெர்ன், அவரது அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட பாரிய நோய்தொற்று மற்றும் இறப்பை ஒன்றுமில்லாமலாக்குகிறார், அதற்கு பதிலாக ‘பொருளாதார நடவடிக்கைகளின்’ அனைத்து முக்கியத்துவத்தையும் பிரகடனப்படுத்துகிறார். ஆஸ்திரேலியாவில், தொழிற்க் கட்சி பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ், பதிவான தினசரி இறப்புக்கள் பற்றி எதுவும் கூறவில்லை, மேலும் பூட்டுதல்களுக்கு ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்று வணிகத்திற்கு உறுதியளிக்கிறார்.

இந்தப் போக்கானது, ரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்க மோதல்கள், உலகப் போருக்கான அச்சுறுத்தல், மற்றும் வரவு-செலவுத் திட்ட சிக்கனத்தை செயல்படுத்துதல் மற்றும் தொழிலாளர்களின் ஊதியங்கள், வேலைகள் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுடனான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் முன்னெப்போதும் இல்லாத ஒருங்கிணைப்புக்கு தலைமை தாங்கும் தொழிற்கட்சி அரசாங்கங்களுடன் கைகோர்த்துச் செல்கிறது.

வைரஸ் ‘தடையின்றி பரவட்டும்’ திட்டம், சமூக ஜனநாயகக் கட்சிகள் உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாசாங்குகளை முற்றிலுமாக கைவிட்டு, பெருநிறுவன நலன்களை மிகவும் ஆக்கிரோஷமாக ஆதரிப்பவர்களாக மாறிவிட்டதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மற்றும் கொடிய வைரஸை அகற்றுவதற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவ அரசாங்கங்களால் அல்லது ஒரு நாட்டில் மட்டும் நடத்தப்படமாட்டாது என்பதையும் இது நிரூபிக்கிறது.

அதற்கு பதிலாக, தொற்றுப் பரவலை படிப்படியாக நிறுத்துவதற்கும், இறுதியாக தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் தேவையான விஞ்ஞான நடவடிக்கைகளுக்கான சர்வதேச போராட்டம் தான் தேவை. இலாபத்தில் அல்லாமல், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையில் தமது நலன்களைக் கொண்டுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே, இதை செயல்படுத்தும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தியாகும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது, அதன் மறுமலர்ச்சி கண்ட வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புகள் மற்றும் வர்க்கப் போர்களின் பதாகையில் பொறிக்கப்பட வேண்டும்.

Loading