உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு ஆரம்பிக்கையில், புட்டினும் ஜியும் சந்தித்தனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) இரண்டு நாள் பாதுகாப்பு உச்சிமாநாட்டின் ஆரம்பத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் நேற்று சந்தித்தனர்.

வியாழன், செப்டம்பர் 15, 2022, உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் [AP Photo/Alexandr Demyanchuk]

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது 'ஷாங்காய் ஐந்து' எனப்படுவதன் மூலம் 2001 இல் நிறுவப்பட்ட ஒரு யூரேசிய பிராந்திய அமைப்பாகும். அதில் சீனா, ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் மத்திய ஆசிய குடியரசுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான். அவர்களுடன் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. ஆப்கானிஸ்தான், பெலாருஸ் மற்றும் மங்கோலியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 'பார்வையாளர் அந்தஸ்து' பெற்றுள்ளன. இதில் ஆர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை மற்றும் துருக்கி ஆகியவை 'கலந்துரையாடல் பங்காளிகளாக' உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அங்கத்துவ நாடுகள் பூமியின் மேற்பரப்பில் நான்கில் ஒரு பங்கையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும், அதன் மக்கள்தொகையில் 40 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

எவ்வாறாயினும், உக்ரேனில் ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போரினாலும் தைவான் மீது சீனாவிற்கு எதிராக வளர்ந்து வரும் அமெரிக்க அச்சுறுத்தல்களினாலும் உச்சிமாநாடு மூழ்கடிக்கப்பட்டுள்ளது. சமர்கண்ட் உச்சிமாநாடு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ரஷ்ய துருப்புக்கள் நேட்டோ சக்திகளால் பயிற்றுவிக்கப்பட்டு, ஆயுதமயமாக்கப்பட்டு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட உக்ரேனிய துருப்புக்களின் கைகளில் பேரழிவுகரமான தோல்வியை சந்தித்தன.

ஜி உடன் உரையாடிய புட்டின், உக்ரேன் மீதான கிரெம்ளின் படையெடுப்பு மற்றும் கார்கோவில் ரஷ்ய இராணுவம் சந்தித்த தோல்வி தொடர்பான சீனக் கவலைகளை ஒப்புக்கொண்டார். 'உக்ரேன் நெருக்கடி தொடர்பாக எங்கள் சீன நண்பர்களின் நடுநிலையான நிலைப்பாட்டை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்' என்று புட்டின் கூறினார். “இது குறித்த உங்கள் கேள்விகளையும் கவலையையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். இன்றைய சந்திப்பின் போது, நிச்சயமாக எங்களின் நிலைப்பாட்டை விளக்குவோம்” என்றார்.

தைவானை ஆயுதமயமாக்கும் அமெரிக்க நகர்வுகளையும், மேலும் வாஷிங்டன் அதன் 1972 ஷாங்காய் அறிக்கையில் ஏற்றுக்கொண்ட 'ஒரே சீனா' கொள்கையை மறுத்து, தைவானை முறைப்படி சுதந்திரத்தை அறிவித்து பெய்ஜிங்குடன் முறித்துக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதை புட்டின் வெளிப்படையாகக் கண்டனம் செய்தார். 'ஒரே சீனா' என்ற கொள்கையை நாங்கள் உறுதியாக கடைபிடிக்க விரும்புகிறோம்' என்று புட்டின் கூறினார். 'தைவான் ஜலசந்தியில் அமெரிக்காவினதும் அவர்களின் கையாட்களினதும் ஆத்திரமூட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம்' என்றார்.

உலகளாவிய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் 'மாஸ்கோ-பெய்ஜிங் இணக்கம்' ஒரு 'முக்கிய பங்கு' வகிக்கிறது என்று புட்டின் வலியுறுத்தி, வாஷிங்டனை 'ஒற்றை துருவ உலகத்தை உருவாக்கும் முயற்சிகள் சமீபத்தில் முற்றிலும் மோசமான வடிவத்தைப் எடுத்துள்ளன. அவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை' என மறைமுகமாக விமர்சித்தார்.

புட்டினை 'நீண்டகால நண்பர்' என்று அழைத்த ஜி பதிலளித்தார்: 'பெரிய சக்திகளின் பங்கை ஏற்க ரஷ்யாவுடன் முயற்சிகளை மேற்கொள்ள சீனா தயாராக உள்ளது. மேலும் குழப்பத்தால் உலுக்கிய உலகில் ஸ்திரத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலை புகுத்துவதற்கு வழிகாட்டும் பாத்திரத்தை வகிக்கும்' என்றார்.

ஒரு செய்திக்குறிப்பில், சீன வெளியுறவு அமைச்சகம் பின்வருமாறு குறிப்பிட்டது: 'ஒருவருக்கொருவர் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் வலுவான பரஸ்பர ஆதரவை வழங்கவும், வர்த்தகம், விவசாயம், இணைப்பு மற்றும் பிறதுறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படும் என்று ஜனாதிபதி ஜி வலியுறுத்தினார்'.

உக்ரேன் போர் பற்றிய சீனக் கவலைகளை புட்டினின் பகிரங்கமாக ஒப்புக்கொள்வது, வாஷிங்டனும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினுள் நிலவும் பாரிய பதட்டங்களையும் அரசியல் நெருக்கடியையும் சுட்டிக்காட்டுகிறது. உக்ரேனில் நடந்த போரின் போது, பெய்ஜிங் ஒரு நுட்பமான சமநிலையை கடைபிடித்தது. அது ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க நேட்டோ அழைப்புகளை நிராகரித்த அதே நேரத்தில், சீனாவிற்கு எதிரான நேட்டோ தடைகளுக்கு ஒரு போலிக்காரணத்தை வழங்கக்கூடிய மாஸ்கோவிற்கு ஆதரவாக வெளிப்படையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

கடந்த வாரம், சீனாவின் தேசிய மக்கள் மன்றத்தின் நிலைக்குழுவின் தலைவரும், சீன அரசு வரிசையில் மூன்றாவது அதிகாரியுமான லி யுவான்ஷூ, ரஷ்யாவிற்குப் பயணம் செய்து, மாஸ்கோவிற்கு ஆதரவாக ஒரு நேரடி அறிக்கையை வெளியிட்டார். அதில் 'இப்போது உக்ரேன் பிரச்சினையைப் போலவே, அமெரிக்காவும் நேட்டோவும் நேராக ரஷ்யாவின் வீட்டு வாசலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் அதன் மக்களின் வாழ்க்கை பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் வெளிச்சத்தில், ரஷ்யா பொருத்தமானதை செய்ய வேண்டும் என்பதை சீனா புரிந்துகொள்வதுடன் மற்றும் பல முனைகளில் ஒருங்கிணைந்த ஆதரவை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கிரெம்ளினால் மோதலின் விரிவாக்கத்தைத் தவிர்க்கவும் உக்ரேனில் நேட்டோவுடனான அதன் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் எந்த தீர்வும் இல்லை என்பதால் பெய்ஜிங்கில் திரைக்குப் பின்னால் கவலைகள் பெருகி வருகின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அதன் முன்னோடியான 'ஷாங்காய் ஐந்து' சங்கம் 1996 இல் உருவாக்கப்பட்டது. இது ஏகாதிபத்தியம், ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் முதலாளித்துவ மறுசீரமைப்பு மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் நிழலின் கீழ் உருவாகியது. சோவியத் தொழிலாளர்களுக்கும் சோசலிசத்திற்கும் எதிரான சோவியத் அதிகாரத்துவத்தின் இறுதித் துரோகச் செயல் யூரேசியாவை ஏகாதிபத்திய இராணுவத் தலையீட்டிற்குத் திறந்து விட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கத்திற்குப் பின்னர், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து மத்திய ஆசிய நாடுகளில் இராணுவ தளங்களை அமைப்பதற்காக செப்டம்பர் 11 தாக்குதல்களை வாஷிங்டன் பயன்படுத்திக்கொண்டது.

இது மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றின் மூலவளங்களை சூறையாடுவதற்கும் இரத்தம் தோய்ந்த ஏகாதிபத்திய உந்துதலை கட்டவிழ்த்து விட்டது. அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஈராக், பாகிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் உக்ரேனில் இராணுவ ரீதியாக தலையிட்டுள்ளன. உக்ரேனில் 2014 இல் நேட்டோ சக்திகள் கியேவில் தீவிர வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரித்தன. அது உக்ரேனைப் பிளவுபடுத்தி தற்போதைய போரை உந்திவிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த போர்கள் மில்லியன் கணக்கான உயிர்களை பலி கொடுத்தது மற்றும் பல மில்லியன் மக்களை அகதிகளாக்கியுள்ளது.

ஆழ்ந்த அமெரிக்கப் பொருளாதாரச் சரிவும், ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலுமான இராணுவத் தோல்விகளும், யூரேசியாவில் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார செல்வாக்குடன் இணைந்து, யூரேசியா மீதான போராட்டத்தை தீவிரத்தின் ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதில், இராணுவ மற்றும் நிதிய கணிப்புகள் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வில் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ போர் தொடுப்பது என்பது, 20 ஆம் நூற்றாண்டின் உலகப் போர்களை போலவே, உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையே உள்ள தீர்க்க முடியாத முரண்பாட்டின் விளைவாகும்.

'எரிசக்தி வர்த்தகத்தில் டாலர் இல்லாத ஒரு உடன்பாடு அமெரிக்க மேலாதிக்கத்தை உடைக்கும்' என்ற தலைப்பில் செப்டம்பர் 14 அன்று சீனாவின் அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் குறிப்பிட்ட தலையங்கம், 'எரிசக்தி சந்தையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முறியடிக்க ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்' என்று ரஷ்யாவையும் சீனாவையும் கேட்டுக் கொண்டது. இது உக்ரேன் போரின் அழிவுகரமான பணவீக்க விளைவுகளையும், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதால், மற்ற நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பு உயர்ந்து, டாலரில் வர்த்தகம் செய்யப்படும் எரிபொருள்களுக்கான தற்போதைய விலை ஏற்றத்தையும் சுட்டிக்காட்டியது.

குளோபல் டைம்ஸ் பின்வருமாறு எழுதியது, “டாலர் பலமானதாக இருக்கும் என்றால் எரிபொருட்களுக்கு மற்ற நாணயங்களின் அதிக விலை செலுத்தவேண்டியிருக்கும். எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் உயரும்போது ஏனைய பொருட்களின் விலைகள் உயர்ந்து, இது உலகளவில் அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். … அமெரிக்கா தனது முந்தைய பணத்தை அச்சிட்டு வெளிவிடும் கொள்கையால் உலகிற்கு அதன் சொந்த பணவீக்க நெருக்கடியை மீண்டும் மீண்டும் ஏற்றுமதி செய்யக் காரணம், உலக அந்நியச் செலாவணி சந்தை, இருப்பு சொத்துக்கள், வர்த்தக உடன்படிக்கை ஆகியவற்றில் டாலரின் மேலாதிக்க நிலையேயாகும்”.

டாலர் அல்லாத நாணயங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு மன்றமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை பயன்படுத்துவதற்கு அது அழைப்பு விடுத்தது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சீன யுவான் மற்றும் ரஷ்ய ரூபிள் கலவையுடன் சீனா வாங்குகிறது, அதே நேரத்தில் இந்தியா ரஷ்யாவின் எரிசக்தியை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நாணயமான திர்ஹாமில் செலுத்தியுள்ளது என்று அது குறிப்பிட்டது.

அத்தகைய கொள்கைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் கசப்பான விரோதத்தை கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், டென்மார்க்கின் Saxo வங்கி, யூரேசியாவிற்கு இடையிலான வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் இருந்து மாற்றுவது டாலர் வீழ்ச்சிக்கு வழிவகுத்து, தங்கத்திற்கு எதிரான அதன் மதிப்பில் 30 சதவீதத்தை இழக்கவைக்கும் என்று கணக்கிட்டது.

சமர்கண்டில் நேற்றைய உச்சிமாநாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு, முன்னர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 'பார்வையாளர்' நாடாக இருந்த ஈரான், அடுத்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உத்தியோகபூர்வமாக இணையும் என்று அறிவித்தது. ஈரான் இரண்டு தசாப்தங்களாக அமெரிக்க போர் அச்சுறுத்தல்களையும் முடக்கும் பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொள்கின்றது. வாஷிங்டன் டாலர் மூலமான அனைத்து நிதி பரிவர்த்தனைகளிலிருந்தும் அதைத் துண்டித்தது. கடந்த ஆண்டு, ஈரான் சீனாவுடன் 25 ஆண்டுகால இராணுவக் கூட்டணியில் கையெழுத்திட்டு, இந்தியப் பெருங்கடலில் ரஷ்ய மற்றும் சீன போர்க்கப்பல்களுடன் கடற்படை பயிற்சிகளை நடத்தியது.

'ஈரான், ரஷ்யா அல்லது பிற நாடுகள் போன்ற அமெரிக்காவால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கிடையேயான உறவு, பல பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை சமாளித்து அவற்றை வலுவாக்கும்' என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சமர்கண்டில் புட்டினை சந்தித்தபோது, 'அமெரிக்கர்கள் எந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறார்களோ, அது நிறுத்தப்படும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் கருத்து தவறானது' எனக் கூறினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள பல்வேறு முதலாளித்துவ ஆட்சிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு நிலையான போராட்டத்தை நடத்தவோ அல்லது சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதின் கசப்பான மரபைத் தீர்க்கவோ தயாராக இல்லை. உக்ரேனியர்களுக்கு பல சலுகைகளை வழங்கியதற்காக சோவியத் ஒன்றியத்தை நிறுவிய போல்ஷிவிக் புரட்சியாளர்களை கண்டனம் செய்துகொண்டு உக்ரேனில் தனது மோசமான தலையீட்டைத் தொடங்கிய புட்டின் நடவடிக்கை இந்த விஷயத்தின் அப்பட்டமான எடுத்துக்காட்டு ஆகும்.

முதலாளித்துவ ஆட்சியின் கீழ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக யூரேசியாவை ஒன்றிணைப்பது சாத்தியமற்றது. உண்மையில், சமர்கண்ட் உச்சிமாநாட்டிற்கு சற்று முன்பு, இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளும் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பார்வையாளர் நாடுகளான ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவை சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் மீண்டும் போரில் மூழ்கின. இந்தியா மீதான பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து உருவாகிய தீர்க்கப்படாத சீன-இந்திய எல்லையிலான 2020 இன் மோதல்களுக்கு பின்னர், ஜி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக யூரேசியாவை ஒன்றிணைக்கும் பணி, சோசலிசத்திற்கான புதுப்பிக்கப்பட்ட போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது. இப்பகுதியில் உள்ள தொழிலாளர்களினதும் ஒடுக்கப்பட்ட மக்களின் வெகுஜன இயக்கம் மட்டுமே போரை எதிர்க்க முடியும் என்பதோடு ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தொழிலாளர்களிடையே அதிகரித்துவரும் போர் எதிர்ப்பு உணர்வு மற்றும் சமூக எதிர்ப்பிற்கு அழைப்புவிட்டு யூரேசியாவில் உருவாகி வரும் பரந்த தொழில்துறை சக்தியை தனியார் இலாபத்திற்காக அல்லாது சமூக தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்த முடியும்.

Loading