முன்னோக்கு

"60 நிமிடங்கள்" நிகழ்ச்சியில் பைடென்: அமெரிக்க முதலாளித்துவம் உலகத்துடன் போரில் உள்ளது - யதார்த்தத்துடன் போரில் உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை மாலை, CBS '60 நிமிடங்கள்' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது, இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுடன் ஸ்காட் பெல்லியின் நீண்ட நேர்காணல் இடம்பெற்றது.

25 நிமிட இடைவெளியில், பைடென் தொடர்ச்சியான அசாதாரண அறிக்கைகளை வெளியிட்டார். COVID-19 தொற்றுநோய் 'முடிந்து விட்டது' என்று அவர் அறிவித்தார்; ரஷ்யாவிற்கு எதிரான போரை ஆதரிப்பதில் தனது 'உருக்குறுதி வாய்ந்த உறுதிப்பாட்டை' அறிவித்தார், அதே சமயம் இது அணு ஆயுதப் போரின் சாத்தியக்கூறுகளை ஒப்புக் கொண்டார்; மற்றும் சீனாவுடன் சாத்தியமான போருக்கு அமெரிக்க படைகளை உறுதியளித்தார்.

பைடென் கடைசியாக ஒரு தொலைக்காட்சி பத்திரிகையாளருடன் நேர்காணலுக்கு அமர்ந்து 200 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. பல விஷயங்கள் மிகவும் மாறிவிட்டது. அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனில் ரஷ்யாவுடன் போரைத் தூண்டிவிட்டன, மேலும் பாரிய இராணுவ உதவி மற்றும் நேரடி ஈடுபாடு, துருப்புக்களின் இயக்கம் மற்றும் ஏவுகணைகளை குறிவைத்தல் ஆகியவற்றை மேற்பார்வையிடுதல் மற்றும் திட்டமிடுதல் ஆகியவற்றின் மூலம் மோதலை அதிகரித்தன. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் விரிவடைந்து வரும் மூன்றாம் உலகப் போரின் குவிந்த தளமாக மாறியுள்ளன.

ஜோ பைடென் 60 நிமிடங்களுக்கு அளித்த பேட்டியில் [Photo: CBS]

பெருமளவிலான பணவீக்கம் உலகையே ஆட்டிப்படைத்துள்ளது. அடிப்படைத் தேவைகளின் விலைகள் தொழிலாள வர்க்கத்திற்கு எட்டாத அளவிற்கு உயர்ந்துள்ளன. ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் உறைபனி குளிர்காலத்தின் வாய்ப்பை எதிர்கொள்கின்றனர், இதனால் சூடாக இருக்க முடியாது; அமெரிக்காவில் தொழிலாளர்கள் வாடகை செலுத்த போராடுகிறார்கள். பங்குச் சந்தை கொந்தளிப்பாக உள்ளது, அதன் எதிர்காலம் இருண்டதாகத் தெரிகிறது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் வெளிவருகின்றன, வேகமாக வளர்ந்து வருகின்றன மற்றும் பெருகிய முறையில் அரசியல் வடிவத்தை எடுத்து வருகின்றன.

அமெரிக்க முதலாளித்துவம் யதார்த்தத்துடன் போரில் ஈடுபட்டுள்ளது, அதன் ஜனாதிபதி ஜோ பைடெனை விட வேறு எங்கும் இது வெளிப்படையாகப் பொதிந்திருக்கவில்லை. நிலைமையின் தீவிரத்தை அவர் ஒப்புக்கொண்டார், 'இது மிகவும் கடினமான நேரம். இந்த நாட்டின் வரலாற்றில் நாம் ஒரு திருப்பத்தில் இருக்கிறோம்.” அதே நேரத்தில், எந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமும் இன்றி, 'நான் நீண்ட காலமாக இருந்ததை விட மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்' என பைடென் அறிவித்தார்.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரமைகளும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் அதன் கோரமான அலட்சியமும் தொற்றுநோய் குறித்த பைடெனின் அறிக்கையில் சுருக்கமாகக் கூறப்பட்டது. ஒரு மில்லியன் அமெரிக்கர்கள் இறந்திருந்தனர். பைடென் இதில் முகம் சுளித்தார், ஆனால் அறிவித்தார், 'தொற்றுநோய் முடிந்துவிட்டது ... தொற்றுநோய் முடிந்துவிட்டது. நீங்கள் கவனித்தால், யாரும் முகக்கவசங்களை அணியவில்லை. எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.”

அமெரிக்காவில் 1 மில்லியன் COVID-19 இறப்புகள், அவற்றில் பெரும்பான்மையானவை, தடுத்திருக்கக்கூடியவை. பைடென், தனது முன்னோடியான ட்ரம்ப்பைப் போலவே, வைரஸை தனிமைப்படுத்தவும் அதன் பரவலைத் தடுக்கவும் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகள் எதையும் எடுக்க மாட்டார். இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்க வணிகங்களின் இலாபத்தை அச்சுறுத்தின. தொற்றுநோயைத் தழுவி வெகுஜன மரணத்தை ஏற்றுக்கொள்வதில், உலகின் ஆளும் வர்க்கங்களை அமெரிக்கா வழிநடத்தியுள்ளது.

இப்போது, ஒவ்வொரு வாரமும் 3,000 அமெரிக்கர்கள் COVID-19 ஆல் இறந்துகொண்டிருக்கையில், பைடென் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக அறிவிக்கிறார். அவர் தனது சொந்த குற்றவியல் கொள்கைகளின் நேரடி விளைவாக, மக்கள் முகக்கவசங்களை அணியவில்லை என்ற உண்மையை கொண்டாடுகிறார். இறப்பு மற்றும் தொற்று விகிதங்கள் பற்றிய தரவை இனி நம்பகமானதாக கருத முடியாது. இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட, நெடுங்கோவிட் இன் பயங்கரமான விளைவுகளுக்கு ஆளானவர்கள், கணக்கிடப்படாத எண்ணற்ற வரிசையில் தள்ளப்படுகிறார்கள், மேலும் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

'எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிகிறது' என்ற பைடெனின் அறிக்கை, நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களின் அனுபவத்தை அழிக்கிறது. ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 4 மில்லியன் மக்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

'தொற்றுநோய் முடிந்துவிட்டது' என்ற அசாதாரண அறிக்கை, ஈராக் போரின் ஆரம்ப கட்டங்களில் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் இழிவான 'பணி நிறைவேற்றப்பட்டது' என்ற உரையுடன் ஒப்பிடக்கூடியது —வைரஸ் பரிணாம வளர்ச்சியின் தற்போதைய மற்றும் தொடர்ச்சியான ஆபத்தையும் புறக்கணிக்கிறது. சமீபத்திய ஆய்வுகள், கோவிட்-19 இன் புதிய, மிகவும் பிறழ்ந்த மாறுபாடுகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் தோன்றி, நோய் எதிர்ப்புத் திறனிலிருந்து-தப்பிக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க ஆளும் வர்க்கம் வெகுஜன மரணத்திற்கு பழக்கப்பட்டுள்ளது. பரவலான தடுக்கக்கூடிய மரணம் அவர்கள் வாழத் தயாராக இருக்கும் ஒன்று என்பதை அவர்கள் ஆபத்தான வேகத்துடன் கற்றுக்கொண்டனர். இது அவர்களின் இராணுவவாத அச்சுறுத்தல்கள் மற்றும் வெறித்தனத்தின் பற்களைக் கூர்மைப்படுத்துகிறது.

நேர்காணலில் பைடெனின் முக்கிய அக்கறை, போரை நடத்துவதற்கான அவரது அசைக்க முடியாத உறுதியை தெளிவுபடுத்துவதாகும். ரஷ்யாவிற்கு எதிரான போரை 'நாம் செய்ய வேண்டிய அளவிற்கு' கொண்டு செல்வதற்கான வாஷிங்டனின் 'உருக்குறுதிவாய்ந்த உறுதியை' அவர் அறிவித்தார்.. 'உக்ரேனில் வெற்றி பெறுவது' என்று அவர் கூறிய குறிக்கோள், 'ரஷ்யாவை உக்ரேனில் இருந்து முழுமையாக வெளியேற்றுவது'.

உக்ரேனியர்களுக்கு ஆயுதம் அளிப்பதற்கும் மோதலை நடத்துவதற்கும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இந்த உருவாக்கம் குறிக்கிறது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் இருந்து மட்டுமல்ல, கிரிமியாவிலிருந்தும் ரஷ்யப் படைகள் திரும்பப் பெறும் வரை தொடரும். கியேவ் மற்றும் மாஸ்கோ ஆகிய இரண்டும் கிரிமியன் தீபகற்பத்தை உரிமை கொண்டாடுகின்றன. கருங்கடலுக்கான அணுகலை உத்தரவாதம் செய்வதால், இது ரஷ்யாவிற்கு ஒரு முக்கியமான இராணுவ நிலையாகும்.

புட்டின் 'மூலையில் தள்ளப்படுகிறார்' என்று பெல்லி குறிப்பிட்டார், மேலும் புட்டின் 'தந்திரோபாய இரசாயன அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை' கருத்தில் கொண்டால் அமெரிக்க ஜனாதிபதி என்ன சொல்வார் என்று பைடெனிடம் கேட்டார். பைடென் பதிலளித்தார், 'வேண்டாம். வேண்டாம். வேண்டாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எப்போதும் இல்லாத வகையில் போரின் முகத்தை மாற்றப் போகிறீர்கள்.”

வாஷிங்டனின் முழு புவிசார் அரசியல் மூலோபாயமும் இடைவிடாத பொறுப்பற்ற தன்மை கொண்டது. உக்ரேனில் ரஷ்யப் படைகளைத் தோற்கடிக்க அமெரிக்காவை அர்ப்பணிப்பதாக பைடென் முழு உலகிற்கும் முன்பாக புட்டினிடம் கூறினார், அது புட்டினை ஒரு மூலையில் தள்ளுவதாக அவர் ஒப்புக்கொண்டார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஒரு உண்மையான சாத்தியம் என்று வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறது, ஆனால் வாஷிங்டன் ஒரு அடி கூட பின்வாங்க மறுக்கிறது.

ஒரு திரையரங்கில் உலகளாவிய போரை நடத்துவதில் திருப்தியடையாமல், பைடென் தனது கவனத்தை சீனாவின் பக்கம் திருப்பினார், அங்கேயும் அவரது அறிக்கைகள் அளவிட முடியாத பொறுப்பற்றவையாக இருந்தன. தைவான், 'தனது சுதந்திரம் குறித்து அதன் சொந்த தீர்ப்பை எடுக்கும்... அது அதன் முடிவு' என்று அவர் கூறினார். ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக உலகளாவிய ஸ்திரத்தன்மையின் தூணாக இருந்த ஒரே சீனக் கொள்கையை இந்த அறிக்கை நேரடியாக சவால் செய்கிறது.

தைவானின் இறையாண்மை சுதந்திரத்தை தைவானே முடிவு செய்ய வேண்டும் என்று அறிவித்ததன் மூலம், தைவான் சீனாவின் ஒரு பகுதி என்ற கொள்கையை பைடென் தூக்கி எறிந்தார். இந்த அறிக்கையானது தைவானில் சுதந்திரத்திற்கு ஆதரவான சக்திகளின் வெளிப்படையான மற்றும் வேண்டுமென்றே ஊக்குவிப்பதாகும். பெய்ஜிங் பல தசாப்தங்களாக ஒரே சீனா கொள்கை, கிட்டத்தட்ட எல்லாவற்றையும் விட, கடுமையான விளைவுகள் இல்லாமல் கடக்க முடியாத ஒரு சிவப்புக் கோடு என்று தெளிவாக உள்ளது. தைவானின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் வலுக்கட்டாயமாக மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்று அது அறிவித்துள்ளது.

போர் பிரச்சாரம் தொடர்கிறது. முழு நேர்காணலின் மிகவும் மோசமான அறிக்கையில், சீனாவின் தாக்குதலுக்கு எதிராக தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என்று பைடென் கூறினார். “சீனப் படையெடுப்பு ஏற்பட்டால் அமெரிக்கப் படைகள், ஆண்களும் பெண்களும் தைவானைப் பாதுகாப்பார்களா” என்ற கேள்வியை பெல்லி தொடர்ந்து கேட்டார். 'ஆம்,' பைடென் அமைதியாக பதிலளித்தார்.

அமெரிக்கப் படைகள் தைவானைப் பாதுகாக்குமா என்று அறிவிக்காததன் மூலம், தைவானில் உள்ள சுதந்திர சார்புக் கூறுகளையும், பெய்ஜிங்கில் உள்ள மறு ஒருங்கிணைப்பு சார்புப் படைகளையும், மோதலின் போது வாஷிங்டன் என்ன செய்யப் போகிறது என்பதில் நிச்சயமற்ற நிலையில் விட்டுவிட்டது என்ற எண்ணம், மூலோபாய தெளிவின்மைக்கான எந்தக் கூற்றும் போய்விட்டது. சீனாவுடன் அமெரிக்கா போருக்குச் செல்லும் என்று பைடென் உறுதியளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கொள்கை மாறவில்லை என்றும், அமெரிக்கா ஒரு மூலோபாய தெளிவற்ற நிலையில் உள்ளது என்றும் வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது பைடென் நிர்வாகத்தின் ஒரு பழக்கமாகும், இது ஜனாதிபதியின் போக்கை 'தவறாக' வேண்டுமென்றே அறிவிப்பதற்கும் பின்னர் சாத்தியமான மிகவும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை திரும்பப் பெறுவதாகக் கூறுவதற்கும் ஒரு சாக்காக பயன்படுத்துகிறது.

ஏற்றுக்கொள்ள முடியாத பேரிடராக பைடென் முன்வைத்த ஒரே விஷயம். அவர் நிரந்தரமான பாரிய தொற்று அல்லது நிர்மூலமாக்கும் அணுசக்தி சாத்தியம் பற்றி அல்ல. ஆனால் ஒரு இரயில்வே வேலைநிறுத்தத்தின் சாத்தியத்தை பற்றி அவர் உரையாற்றியபோது, அவர் அதைத் மிக குறுகிய நிலையில் தவிர்த்ததாகக் கூறினார். 'உண்மையில் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தால், இந்த நாட்டில் விநியோகச் சங்கிலிகள் ஸ்தம்பிதமடைந்திருக்கும், மேலும் உண்மையான பொருளாதார நெருக்கடியை நாங்கள் கண்டிருப்போம்' என்று அவர் கூறினார்.

ஆளும் வர்க்கத்திற்கான இந்த நெருக்கடி —தொழிலாளர் வர்க்க போர்க்குணத்தின் பெருகிவரும் எழுச்சி— தவிர்க்கப்படவில்லை. தொழிற்சங்கங்களின் உதவி இருந்தபோதிலும் —அவர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதிக்கு உதவ விரைந்தனர்— அரசாங்கம் சரணடைதல் ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வெள்ளை மாளிகையில் நீடித்த பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு எந்த வகையிலும் தீர்வு காணும் உடன்பாட்டை எட்ட பைடென் தவறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதில் உறுதியாக உள்ளனர்.

வர்க்கப் போராட்டத்தின் உந்து காரணியான பொருட்களின் விலை உயர்வு பற்றிய கேள்வி வந்தபோது, பைடென் அதைத் உதறிவிட்டார். 'நாங்கள் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவோம்,' என்று அவர் உறுதியளித்தார். பணவீக்கத்தை 'கட்டுப்படுத்த' ஆளும் வர்க்கம் முயலும் முக்கிய வழி, மந்தநிலையைத் தூண்டி வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்து, தொழிலாளர்களின் அதிக ஊதியக் கோரிக்கைகளை குறைப்பதாகும்.

பைடென், நெருக்கடியை எதிர்கொள்ளும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விரக்தியை வெளிப்படுத்துகிறார் - ரஷ்யாவுடன் போரில், சீனாவுடனான போரில், தொழிலாள வர்க்கத்துடனான போரில், யதார்த்தத்துடன் போரில்.

நேர்காணலில் முன்வைக்கப்பட்ட அவரது மன உறுதி குறித்த கேள்வி இப்போது கட்டாயமாகிவிட்டது என்பது ஜனாதிபதிக்கோ அல்லது அமெரிக்க முதலாளித்துவத்திற்கோ நன்றாகப் பேசவில்லை.

வாஷிங்டன் வெகுஜன மரணத்தைத் தடுக்காது அல்லது அணு ஆயுதப் போரில் இருந்து பின்வாங்காது; அமெரிக்க முதலாளித்துவம் இந்த நோக்கங்களில் இருந்து தப்பிக்க முடியாத நெருக்கடிகளால் உந்தப்படுகிறது.

வாஷிங்டனின் கொள்கைகள் மற்றும் உத்திகள் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் பைத்தியக்காரத்தனமானவை, ஆனால் அது புரிந்துகொள்ளக்கூடிய பைத்தியக்காரத்தனம், புறநிலை காரணங்களைக் கொண்ட பைத்தியக்காரத்தனம். முதலாளித்துவம் மனிதகுலத்திற்கு வழங்குவதற்கு போர், வறுமை மற்றும் மரணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. தொற்றுநோய்க்கு அதன் இருப்பை மறுப்பதைத் தவிர வேறு எந்தத் தீர்வும் அவரிடம் இல்லை, போருக்கும் அதை விரிவாக்குவதை தவிர வேறு எந்தத் தீர்வும் இல்லை.

Loading