கோவிட் இறப்புக்களும் நோய்தொற்றுக்களும் அதிகரிக்கும் நிலையில், தொற்றுநோய் முடிந்துவிட்டதாக பைடென் வலியுறுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் கோவிட் இறப்புக்களும் நோய்தொற்றுக்களும் தொடர்ந்து அதிகரித்து வருகையில், தினமும் SARS-CoV-2 வைரஸால் 400 பேர் இறப்பதோடு, தினசரி புதிய நோய்தொற்றுக்கள் சராசரியாக 60,000 ஆக உள்ளது. ஒவ்வொரு அமெரிக்க மாநிலத்திலும் முறையான தினசரி அறிக்கையிடல் நிறுத்தப்பட்டுவிட்டதால், இரண்டு புள்ளிவிபரங்களும் கடுமையாக குறைத்துக்காட்டப்பட்ட எண்ணிக்கைகளாக கருதப்படுகின்றன.

ஆயினும்கூட, ஜனாதிபதி ஜோ பைடென், பெருகிவரும் இறப்புக்களும் மற்றும் அவரது கருத்துக்களை சுகாதார நிபுணர்கள் பரவலாக விமர்சிப்பதும் ஒருபுறமிருக்க, ‘தொற்றுநோய் முடிந்துவிட்டது,’ என்று தனது கூற்றைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு, ’60 நிமிடங்கள்’ என்ற CBS News நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலில் பைடென் முதலில் அறிக்கை செய்தார்.

வட அமெரிக்க சர்வதேச வாகன கண்காட்சியை நடத்தும் டெட்ராய்ட் நகர்ப்புறத்தில் உள்ள மாநாட்டு மையத்தின் விரிவான கூடத்தின் வழியாக பைடெனுடன் நடந்து செல்கையில், CBS News இன் நிருபர் ஸ்காட் பெல்லி, “திரு. ஜனாதிபதி, [இது] மூன்று ஆண்டுகளில் நடத்தப்படும் டெட்ராய்ட்டின் முதல் வாகன கண்காட்சியாகும். அப்படியானால், தொற்றுநோய் முடிந்துவிட்டதா?” என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு பைடென் சாதாரணமாக, “தொற்றுநோய் முடிந்துவிட்டது. நமக்கு இன்னும் கோவிட் பிரச்சினை உள்ளது. அது தொடர்பான பல பணிகளை நாம் இன்னும் செய்து வருகிறோம். ஆனால் தொற்றுநோய் முடிந்துவிட்டது” என்று கூறினார். மேலும் அவர், “நீங்கள் கவனித்தீர்களா, எவரும் முகக்கவசம் அணியவில்லை. எல்லோரும் நல்ல நிலையில் இருப்பது போல் தெரிகிறது. இது மாறுகிறது என்று நான் நினைக்கிறேன், மற்றும் இது ஒரு சிறந்த உதாரணமாகும்” என்று கூறினார்.

பொலிட்டிகோவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, பைடெனின் சொந்த மூத்த சுகாதார அதிகாரிகள், சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் இருந்து மட்டுமே அவரது கருத்துக்களை அறிந்தனர் என்ற நிலையில், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அவரது கருத்துக்கள் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறினர்.

பைடெனின் கருத்துக்கள் குறித்து ஆச்சரியத்தையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தும் பொது சுகாதார நிபுணர்களின் கருத்துரைகளுக்கு மத்தியில், வெள்ளை மாளிகை ஆரம்பத்தில் அவர்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டது. செவ்வாயன்று, பெரும் பணப் பங்களிப்பாளர்கள் உடனான ஜனநாயகக் கட்சியின் தேசிய குழுவிற்கான நிதி சேகரிப்பு நிகழ்வில் பேசுகையில் பைடென் சற்று பின்வாங்க முயன்றார்.

“தொற்றுநோய் ‘முடிந்துவிட்டது,’ என்ற எனது மேற்கோள் குறித்து நான் விமர்சிக்கப்பட்டேன்,” என்று குறிப்பிட்டு, அவர் தனது பேச்சு மொழியை மாற்ற முயன்றார், இன்னும் பலர் இறந்து கொண்டிருப்பதை அவர் ஒப்புக்கொண்டார், “ஆனால் அடிப்படையில் அது இருந்த இடத்தில் இல்லை” என்றார்.

‘வைரஸூடன் வாழ்வது,’ என்ற தனது சொந்தக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்களை அவர் குற்றம் சாட்ட முயன்றதுடன், பிரச்சினை அனைத்து சமூக தணிப்பு முயற்சிகளின் முடிவு அல்ல, மாறாக தனிநபர்கள் தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளத் தவறியதுதான் என்று கூறினார். மேலும், 'உங்களுக்குத் தெரியும், இறந்தவர்களில் மற்றும் இறக்கும் 5,000 பேரில் 65 முதல் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி எதுவும் போட்டுக்கொள்ளவில்லை, மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் பெறவில்லை” என்று அவர் கூறினார்.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் லியானா வென் பங்களிப்பது போன்ற பல பத்திரிகை அறிக்கைகள், கோவிட் நிரந்தரமானது என்ற வாதத்தையும், SARS-CoV-2 வைரஸை அன்றாட வாழ்வில் ஒரு நிரந்தர அங்கமாக ஏற்றுக்கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஊர்ஜிதப்படுத்தும் ஆணித்தரமான கருத்தை பாராட்டின.

பைடெனின் பொறுப்பற்ற கருத்துக்கள் குறித்த விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களின் பல விமர்சனங்கள் மற்றும் சீற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில், வென் இவ்வாறு எழுதினார், “இந்த விமர்சனங்கள் பைடெனின் வாதத்திலிருந்து எதையும் எடுத்துக்கொள்வதில்லை. அவர் சொல்வது சரிதான். பல வரையறைகளின்படி, தொற்றுநோய் முடிந்துவிட்டது. அதற்கு கொரோனா வைரஸ் இனி தீங்கு விளைவிக்காது என்று அர்த்தமல்ல; இது அவசரகால நிலையின் முடிவைக் குறிக்கிறது, கோவிட் ஒரு உள்ளூர் நோயாக உருவெடுத்துள்ளது.”

CBS இன் 60 நிமிடங்கள் நிகழ்ச்சியில் ஸ்காட் பெல்லியுடனான ஜனாதிபதி ஜோ பைடெனின் நேர்காணல் [Photo: CBS News]

இதற்கிடையில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஆசிரியர் குழு பைடெனின் கருத்துக்களின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டது, ஆனால் கோவிட் பொது சுகாதார அவசரநிலையின் உத்தியோகபூர்வ அறிவிப்பை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரியது. அவர்கள், “ஜனாதிபதி பைடென் ஞாயிறன்று, ‘தொற்றுநோய் முடிந்துவிட்டது’ என்று இறுதியாக அறிவிக்கத் துணிந்தார்…” என்று எழுதினர். அவர்கள் மேலும், “அவரது கருத்துக்கள் இந்த கட்டத்தில் நோயின் யதார்த்தத்தையும், பொது மனநிலையையும் அங்கீகரிக்கின்றன. பிரச்சினை என்னவென்றால், அவரது நிர்வாகம் இன்னும் கோவிட் பொது சுகாதார அவசரநிலை குறித்த உத்தியோகபூர்வ கண்டுபிடிப்பை கைவிடவில்லை என்பதுதான்” என்று குறிப்பிட்டனர்.

அனைவரும் இறுதியாகவும் உத்தியோகபூர்வமாகவும் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக ஏற்கனவே நினைத்ததை முடிவுக்குக் கொண்டுவருவது அதிர்ஷ்டத்திற்கு விழுந்த ஒரு வெற்றி என்ற நிலையில், பைடென் நிர்வாகத்தின் கோவிட் குழுவில் உள்ள பலரும் அவரின் வாய்மொழி ‘தவறு’ என்று கூறப்பட்டதை பாராட்டினர். எவ்வாறாயினும், ஒரு புதிய மாறுபாடு தோன்றினால், குறிப்பாக வெள்ளை மாளிகை அதன் தடுப்பூசி பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் என்பதால், இந்த நெருக்கடி முடிந்துவிட்டதாக அறிவிப்பது ஒரு அரசியல் சூதாட்டம்தான் என்று சில சந்தேகங்கள் இருந்தன.

பொலிட்டிகோவின் கருத்துப்படி, ‘கூட்டாட்சியின் கோவிட் பதிலை தொடர்ந்து தக்கவைக்க,’ எந்தவொரு கூடுதல் நிதி கோரிக்கையையும் எதிர்ப்பதில் பைடெனின் கருத்துக்கள் குடியரசுக் கட்சியினரின் கையை வலுப்படுத்தும் என்று அரசியல் ஆலோசகர்கள் கூட கவலையடைந்தனர். தொற்றுநோய் அவசரநிலையின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளை மாளிகை அதிகாரிகளை கோரியதால், அமெரிக்க அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 500 பில்லியன் டாலர் கடனில் இருந்து மாணவர் கடனாளிகளை விடுவிப்பதற்கான நிர்வாகத்தின் நியாயத்தையும் அது குறைத்துவிடும், இது கடன் வாங்குபவர்கள் கடனை திரும்பச் செலுத்துவதற்கு போதுமான பணத்தை சம்பாதிப்பதை இன்னும் கடினமாக்கியது.

குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்கா தனது மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதில் பின்தங்கியுள்ளது, இதனால் மில்லியன் கணக்கானவர்கள் தொடர்ந்து பிறழ்வடையும் மற்றும் நோயெதிர்ப்பு-தவிர்க்கும் திறனுடைய கொரோனா வைரஸால் முன்னெப்போதும் விட பாதிக்கப்படுகின்றனர். மூன்று அமெரிக்கர்களில் ஒருவர் மட்டுமே ஏதாவதொரு பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளார், மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளார். ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து பெறப்பட்ட மாதிரி கோவிட் தரவுகளின்படி, முடிந்துவிட்டதாகக் கூறப்படும் தொற்றுநோயால் ஒன்பது மாதங்களில் 181,000 இறப்புக்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக பெப்ரவரியில் உச்சத்தில் இருக்கும் கடுமையான காய்ச்சல் பருவம் குறித்த முன்கணிப்புகள் இதில் அடங்காது.

வழமை போல், பைடெனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபவுசி, பைடெனின் வார்த்தைகளுக்கும் உண்மைக்கும் இடையே உள்ள கடுமையான முரண்பாட்டை மூடி மறைக்க முயன்று, திங்களன்று இவ்வாறு கூறினார், “‘வைரஸுடன் வாழுங்கள்’ என்பதை மேற்கோள் காட்டுவோமானால் நாம் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அதாவது, ஒரு நோய்தொற்று வெடிப்பை எதிர்கொள்ளும் நிலையான பொது சுகாதார வழிமுறைகளை மீறக்கூடிய அளவிற்கு, இந்த வைரஸ் எவ்வளவு அசாதாரணமானது மற்றும் தொடர்ந்து புதிய மாறுபாடுகளாக பரிணமிக்கும் அளவிற்கு எவ்வளவு திறன் கொண்டது என்பதை நாம் இன்னும் அறிந்திருக்க வேண்டும்.”

நிர்வாகத்தின் மற்றொரு கவலை, தொடர்ச்சியாக நிகழும் வெகுஜன மரணத்தை விட, முக்கிய மருந்து நிறுவனங்களின் பங்கு மதிப்புகளுக்கு பைடெனின் வார்த்தைகளால் ஏற்பட்ட சரிவு பற்றியதாகும். மூழ்கும் கப்பலில் இருந்து எலிகள் குதிப்பது போல முதலீட்டாளர்கள் கோவிட் தடுப்பூசிக்கான முதலீடுகளில் இருந்து வெளியேறினர். பைனான்சியல் டைம்ஸின் கூற்றுப்படி, முக்கிய கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பாளர்களின் சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர் அழிக்கப்பட்டது. BMO Capital Markets நிறுவனத்தின் ஆய்வாளரான இவான் சீகர்மேன், புதிய ஈரிணைத் திறம் உடைய பூஸ்டர் தடுப்பூசிகளின் விலை ஏற்றம் குறித்த பைடெனின் கருத்துக்கள் மற்றும் கவலைகளால் பங்குகளின் வீழ்ச்சி உந்தப்பட்டது என்பதாக பைனான்சியல் டைம்ஸூக்கு தெரிவித்தார்.

‘தொற்றுநோய் முடிந்துவிட்டது’ என்ற அறிவிப்பை சுகாதார நிபுணர்கள் உன்னிப்பாக ஆராய்ந்தனர். மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் உள்ள தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் இயக்குனர், மைக்கேல் ஓஸ்டர்ஹோம், இவ்வாறு அவதானித்தார், “பொது சுகாதாரம் உண்மையில் பலரின் நம்பிக்கையை இழந்துவிட்டது, ஏனென்றால் நாம் வெவ்வேறு நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக அல்லாடுவது போல் தெரிகிறது. [மேலும்] இப்போது இங்கு ஒரு உதாரணம் உள்ளது. தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று நீங்கள் கூறினால், மக்கள் ஏன் இந்த பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற வேண்டும்?”

Scripps Research Translational Institute இன் இயக்குனர் எரிக் டோபோல், பைடெனின் கருத்துக்கள் குறித்து, “இது உண்மையாக இருக்க வேண்டும். என்ன முடிந்தது என்றால், @POTUS இன் மற்றும் நமது அரசாங்கத்தின் விருப்பம், புதிய ஈறிணைத் திறம் உடைய பூஸ்டர் தடுப்பூசிகள் பற்றிய மாயாஜால சிந்தனையுடன் முன்னோக்கிச் செல்லும் என்பதே. நெடுங்கோவிட், புதிய விகாரங்களின் தவிர்க்க முடியாத தன்மை, மற்றும் நோய்தொற்றுக்கள் மற்றும் அதன் பரவலைத் தடுப்பதற்கான நமது தற்போதைய இயலாமை ஆகியவற்றைப் புறக்கணியுங்கள் என்பதே இதன் பொருளாகும்” என்று ட்வீட் செய்தார்.

பைடெனின் அர்த்தமற்ற வாய்மொழி 'தவறுகள்', அடிக்கடி –மற்றும் கூர்மையாக என்றும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்– முக்கிய வர்க்க கேள்விகள் குறித்த ஆளும் உயரடுக்கின் அடிப்படைக் கண்ணோட்டத்தை அம்பலப்படுத்துகிறது. டெட்ராய்ட் வாகன கண்காணிப்பு நிகழ்ச்சியை சுற்றிப் பார்ப்பதும் நிலைமைகள் நல்ல முறையில் இருப்பதாக அறிவிப்பதும், மரணம் முதல் நெடுங்கோவிட் வரை சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் ஒவ்வொரு விளைவையும் தாங்கிய தொழிலாள வர்க்கத்தின் பக்கம் ஒரு கத்தியை செருகுவது போன்றதாகும். ஆனால், ‘பொருளாதாரம்’ - அதாவது, பெருநிறுவன இலாபங்கள் – ஒருபோதும் பொது சுகாதார கவலைகளை முன்னிலைப்படுத்தாது என்ற முக்கிய புள்ளியை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

‘60 நிமிடங்கள்’ நேர்காணலின் தொடக்கப் பகுதியில், பைடெனின் ‘தொற்றுநோய் முடிந்துவிட்டது’ என்ற அறிவிப்புக்கு சற்று முன்பு, அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் வாழ்க்கை தாங்க முடியாத பணவீக்க அழுத்தத்திற்குள்ளாகி இருப்பதை பொருட்படுத்தாமல், பொருளாதாரம் மற்றும் சந்தைகள் மீதான தனது நம்பிக்கை பற்றி பைடென் பேசினார். ‘நல்ல நிலையில்’ இருப்பதாக அவர் கூறியதை அடுத்து, பேட்டி இரயில்வே விவகாரம் பக்கம் திரும்பியது, அதாவது பொருளாதாரத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேசிய வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்காக, பதினொன்றாவது மணிநேரத்தில் இரயில்வே தொழிற்சங்கங்களுடன் அவரும் அவரது நிர்வாகமும் ஒரு விற்பனை ஒப்பந்தத்தை எவ்வாறு தரகு பேசி முடித்தார்கள் என்பது பற்றி பைடென் பெருமையாகப் பேசினார். தொற்றுநோய் முடிந்துவிட்டது என்பது வழமை போல் வணிகத்திற்கு திரும்புவதைக் குறிக்கிறது.

தொழிலாளர்கள் எதிர்கொண்ட மற்றும் தொடர்ந்து எதிர்கொள்ளவிருக்கும் வெளிப்படையான யதார்த்தத்திற்கு மத்தியில், நிலைமைகள் ‘நல்ல நிலையில்’ உள்ளன என்ற இரக்கமற்ற கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வது கடினமே. தினசரி புதிய கோவிட் நோய்தொற்றுக்களின் சராசரி எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 60,000 க்கும் அதிகமாக உள்ளது, இது மொத்தத்தில் குறைத்து மதிப்பிடப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். அமெரிக்காவில், இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு அடுத்ததாக இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணியாக கோவிட் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சராசரி ஆயுட்காலம் ஏறக்குறைய 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது.

ஜூலை முதல் அமெரிக்காவில் சராசரி கோவிட் இறப்பு எண்ணிக்கை 400 க்கு அதிகமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 32,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கோவிட் நோயால் இறந்துள்ளனர், மேலும் முந்தைய ஆண்டில் 360,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில், நான்கு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் மிகவும் பலவீனப்படுத்தும் நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் தங்கள் பணிகளை விட்டு நிரந்தரமாக வெளியேறியுள்ளனர். நெடுங்கோவிட் நோய் தொடர்பாக வாதிடுபவர்கள் அதை தேசிய அவசரநிலையாக அறிவிக்க வேண்டும் என்று பைடெனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனால் இவை அனைத்தும் வெறுமனே வோல் ஸ்ட்ரீட்டின் வணிகத்திற்கான விலை கொடுப்பு மட்டுமே. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஆசிரியர் குழு அவர்களின் சொந்த கரடுமுரடான மற்றும் கொடூரமான முறையில் தொற்றுநோய் பிரகடனத்தை பாதுகாக்கும் முயற்சியில், “இந்த கோடையில் ஒவ்வொரு நாளும் சுமார் 400 அமெரிக்கர்கள் கோவிட் நோயால் இறக்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் அல்லது பிற மருத்துவக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள்” என்று கூறியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களால் இனி உற்பத்தி செய்ய முடியாது என்பதால், வோல் ஸ்ட்ரீட் நிர்வாகிகள் மற்றும் அவர்களின் முதலீட்டாளர்களின் வருவாய்க்கு அவர்கள் உதவாதவர்கள் ஆவர். குறிப்பாக, உழைக்கும் மக்களிடையே ஆயுட்காலம் குறைவது நிதிப் பிரபுத்துவத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.

Loading