கிழக்கு உக்ரேனில் பொது வாக்கெடுப்பு நிறைவடையும் நிலையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் அணுஆயுதப் போர் அச்சுறுத்தல்களை வெளியிடுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் அணுஆயுதப் போர் அச்சுறுத்தல்களை அதிகரித்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு உக்ரேனில் உள்ள நான்கு ரஷ்ய ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் — கெர்சன் (Kherson), ஷபொரிஜ்ஷியா (Zaporizhzhia), லூகன்ஸ் (Lugansk) மற்றும் டொனாட்ஸ்க்கில் (Donetsk)— வெகுஜன வாக்கெடுப்புக்கான வாக்களிப்புக் காலம் செவ்வாய்கிழமை இரவு நிறைவடைந்தது. இந்த நான்கு பிராந்தியங்களும் ரஷ்ய கூட்டமைப்பில் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை, முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியும், பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் கூறுகையில், கிழக்கு உக்ரேனில் ரஷ்யா உரிமைகோரும் பகுதிகள் உட்பட அதன் பிரதேசங்களைப் பாதுகாக்க ரஷ்யா இப்போது அணு ஆயுதங்களை நிலைநிறுத்த முடியும் என்று அச்சுறுத்தினார், இந்த அச்சுறுத்தல்கள் 'நிச்சயமாக வெறும் உளறல்கள் இல்லை' என்று அழுத்தமாக வலியுறுத்தினார்.

கார்கிவ் பிராந்தியத்தில் ரஷ்யாவின் இராணுவத் தோல்வியை அடுத்து 300,000 சேமப் படையினரை பகுதியாக அணிதிரட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்த போது, புட்டினும் கடந்த முறை மெட்வெடேவ் வலியுறுத்திய இதே போன்ற எச்சரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார். ரஷ்யா எதிர் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய ஆக்ரோஷத்தின் அளவையும், ரஷ்யாவை உடைத்து 'அழிக்கும்' ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டிய புட்டின், பின்னர், “இது வெறும் உளறல் இல்லை,” என்று குறிப்பிட்டு, கிரெம்ளின் அணு ஆயுதங்களை நாட தயாராக உள்ளது என்று மிரட்டி இருந்தார்.

பல ஆண்டுகளாக ஏகாதிபத்திய சக்திகள் தூண்டிவிட்டு தயாரித்து வந்த ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனிய போரை இன்னும் கூடுதலாக விரிவாக்குவதில் இருந்து 'அணுஆயுத பேரழிவுக்கான' சாத்தியக்கூறு நேட்டோவைத் தடுக்கும் என்று மெட்வெடேவ் நம்பிக்கை வெளியிட்டார். ஆனால் இந்த நம்பிக்கைகள் வெறும் மாயை என்பதைப் போலவே திவாலானவையும் கூட.

வாஷிங்டனும் நேட்டோவும் பின்வாங்குவதற்குப் பதிலாக, கிழக்கு உக்ரேன் பகுதிகளை அவர்கள் ரஷ்யாவின் பகுதியாக 'ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது' என்று வலியுறுத்தி உள்ளனர். நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் செவ்வாய்கிழமை ஒரு ட்வீட் பதிவில், 'உக்ரேனின் இறையாண்மைக்கு [நேட்டோவின்] அசைக்க முடியாத ஆதரவை' கூறி உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கிக்கு உறுதியளித்தார். 'மோசடி வாக்கெடுப்புக்கு' 'எந்த சட்டபூர்வத்தன்மையும் இல்லை,' 'இந்த நிலங்கள் உக்ரேன் உடையவை' என்றவர் வலியுறுத்தினார்.

'[அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தலைப்] பொருட்படுத்தாமல் எங்கள் பிரதேசத்தை மீட்பதை நாங்கள் தொடர்வோம்,” என்று வலியுறுத்தி, செலென்ஸ்கியின் ஆலோசகரான மிக்கைலோ பொடோல்யாக் மெட்வெடேவுக்குப் விடையிறுத்தார்.

உலக சோசலிச வலைத் தளம் துல்லியமாக எதை ஆபத்தான அணு ஆயுதக் கொள்கைகள் என்று விவரித்ததோ அந்த பகிரங்கமான அணு ஆயுதப் போருக்கு, மேற்கத்திய அதிகாரிகள், ரஷ்யாவுடன் இன்னும் கூடுதலாக அபாயகரமான விரிவாக்கத்திற்கு எரியூட்டுவதை நோக்கமாக கொண்ட அச்சுறுத்தல்களுடன் உணர்ச்சியற்ற அலட்சியப் போக்கைக் கலந்து விடையிறுத்து உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளிபரப்பான CBS “60 நிமிடங்கள்' நிகழ்ச்சி நேர்காணலில், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கென் கூறுகையில் உக்ரேனில் ரஷ்யா அணுஆயுதங்களை நிலைநிறுத்தினால் அது 'கடுமையான விளைவுகளைச்' சந்திக்கும் என்று அச்சுறுத்தினார்.

பிளிங்கென் கூறினார், 'விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை மாஸ்கோ எங்களிடம் இருந்து செவிமடுப்பதும், தெரிந்து கொள்வதும் மிகவும் முக்கியம், இதை நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறி உள்ளோம்,” என்றார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது 'நிச்சயமாக, அதைப் பயன்படுத்தும் நாட்டுக்குப் பேரழிவுகரமாக இருக்கும், ஆனால் அத்துடன் இன்னும் பலருக்கும் கூட பேரழிவுகரமாக இருக்கும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து திங்கட்கிழமை வரை நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய இரண்டு ஜேர்மன்-ரஷ்ய எரிவாயுக் குழாய்களில் ஏற்பட்ட மூன்று வெடிப்புகள் உறுதி செய்யப்பட்ட பின்னர், இந்த விரிவாக்கப்பட்ட அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல்கள் வந்தன. அந்த வெடிப்புகளால் பால்டிக் கடலில் மிகப் பெரியளவில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. அந்த இரண்டு எரிவாயு குழாய்வழிகளின் பெரும்பான்மை பங்குகள் ரஷ்ய அரசுக்கு சொந்தமான காஸ்ப்ரோம் நிறுவனம் வசம் இருந்தாலும், ஜேர்மன் நிறுவனங்களான வின்டர்ஷால் மற்றும் யூனிபர், பிரெஞ்சு நிறுவனமான Engie, ஆஸ்திரிய நிறுவனமான OMV மற்றும் பிரிட்டிஷ் நிறுவனம் ஷெல் ஆகிய அனைத்தும் அந்தக் குழாய்களைச் சீரமைக்க உதவின.

ஓர் அசாதாரண ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் போலந்து உறுப்பினரும் போலந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, அந்த வெடிப்புகளுக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதாக உறுதிப்பட அறிவுறுத்தினார். நீருக்கடியில் ஏற்பட்ட அந்த வெடிப்பின் படத்தை ட்வீட் செய்து, “நன்றி, அமெரிக்கா” என்று குறிப்பிட்ட சிகோர்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் பெப்ரவரி 7 பதிவை மறுபதிவு செய்தார், அதில் பைடென், “ரஷ்யா படையெடுத்தால்… பின்னர் அங்கே நோர்ட் ஸ்ட்ரீம் 2 இருக்காது. நாங்கள் அதை முடித்து விடுவோம்,” என்று அச்சுறுத்தி இருந்தார்.

ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான போர் பதட்டங்கள் காய்ச்சலின் உச்சத்தை எட்டி வருகின்ற நிலையில், 300,000 ரிசர்வ் படையினரை அணித்திரட்டுவதன் மூலம் ரஷ்ய சமூகம் கொந்தளிப்பில் தள்ளப்பட்டுள்ளது. முழுமையாக அணித்திரட்டுவதற்கும் இராணுவச் சட்டத்தைப் பிரகடனம் செய்வதற்குமான கோரிக்கைகளுக்குக் குறைவாக இருந்தாலும், இந்தப் பகுதியளவிலான அணித்திரட்டலே ஒரே இரவில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டு வருகிறது. பத்து ஆயிரக் கணக்கான ரஷ்ய சிப்பாய்களின் உயிர்களைப் பறித்துள்ளதாகவும், எஞ்சிய துருப்புகளின் மன உறுதியைக் குலைத்து விட்டதாகவும் நம்பப்படும் ஒரு போரின் பேரலையைத் திசை திருப்புவதற்கான ஒரு பெரும்பிரயத்தன முயற்சியாக இது இருக்கிறது.

போர் அனுபவமுள்ள ஆண்கள் மட்டுமே கட்டாய இராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று புட்டின் வாக்குறுதி அளித்திருந்தாலும், முதியவர்களும், ஊனமுற்றவர்களும் மற்றும் போர் அனுபவமில்லாத எண்ணற்ற இளைஞர்களும் கட்டாய இராணுவச் சேவையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். புட்டின் ஆதரவு பிரமுகர்கள் உள்ளடங்கலாக, பாரிய விமர்சனத்திற்கு முன்னால், கட்டாய இராணுவச் சேவைக்கான அறிவிப்புகளை அனுப்பிய போது 'தவறுகள்' ஏற்பட்டு இருந்ததாக இப்போது ஒப்புக் கொண்டுள்ளதுடன், அவை 'சரி செய்யப்படும்' என்று உறுதி அளித்துள்ளது.

ரஷ்ய இராணுவச் சேவைக் குறித்து நீண்ட காலமாகவே மக்கள் பரவலாக அஞ்சுகிறார்கள், ஏனெனில் இது — அமைதி காலங்களில் கூட — இராணுவச் சேவையில் இருப்பவர்கள் மீது பரவலான மற்றும் வன்முறையான சரீர ரீதியான துஷ்பிரயோகம், உணர்வு ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகத்துடன் தொடர்புப்பட்டுள்ளது, அத்துடன் இந்தச் சிப்பாய்கள் வெறுக்கத்தக்க சமூக நிலைமைகளை முகங்கொடுத்து வந்துள்ளனர். எந்த விதத்திலாவது குடும்பத்தைச் சமாளிக்க முடியும் என்கின்ற குடும்பங்கள் பாரம்பரியமாகவே அவர்கள் பிள்ளைகளை இராணுவச் சேவையில் இருந்து விலக்க முயன்று வந்தனர். ஆனால், பகுதியளவில் அணிதிரட்டுவதற்கான இந்த உத்தரவு முன்னர் தங்களை விலக்கி வைக்க முடிந்தவர்களையும் கூட பாதிக்கிறது. இந்தக் கட்டாய இராணுவச் சேவையை எதிர்ப்பவர்கள் மற்றும் தவிர்ப்பவர்கள் கடுமையான சிறை தண்டனைகளை முகங்கொடுப்பார்கள்.

நடுத்தர வர்க்கத்தின் பெரும்பான்மையினர், நாட்டை விட்டு வெளியேற வெறித்தனமாக முயன்றதன் மூலம் பகுதியளவிலான இந்த அணித்திரட்டலுக்கு விடையிறுத்துள்ளனர். பகுதியளவிலான இந்த அணிதிரட்டலைப் புட்டின் அறிவித்த உடனே, ரஷ்யர்கள் இப்போதும் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணிக்கக் கூடிய ஒரு சில நாடுகளில் இரண்டு நாடுகளான, துருக்கி மற்றும் ஜோர்ஜியாவுக்கான விமானங்கள், முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த ஒரு வாரமாக, ஃபின்லாந்து, ஜோர்ஜியா, கஜகிஸ்தான் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கான ஏறக்குறைய எல்லா எல்லை சோதனைச் சாவடிகளிலும், 24 முதல் 48 மணி வரை பல மைல்கள் தூரம் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. கஜகஸ்தானுக்கு மட்டுமே 100,000 க்கும் அதிகமானவர்கள் தப்பி ஓடினார்கள்.

ஆட்சேர்ப்பு மையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன, 25 வயதான ஒருவர் இராணுவ அதிகாரி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினார், வெளிப்படையாகவே இது அவரது நண்பரைக் கட்டாய இராணுவச் சேவையில் சேர்த்ததன் மீதான கோபமாக இருந்தது.

கட்டாய இராணுவச் சேவையில் இருந்து தப்பிக்க முயற்சிப்பவர்களை மேற்கத்திய ஊடகங்கள் உற்சாகப்படுத்துகின்றன. நியூ யோர்க் டைம்ஸூம் அமெரிக்க இராணுவ உளவுத்துறை எந்திரத்துடன் தொடர்புடைய, கடந்த தசாப்தங்களில் ஏகாதிபத்திய சக்திகள் நடத்திய ஒவ்வொரு குற்றகரமான போரையும் ஊக்குவித்து நியாயப்படுத்திய ஏனைய நிறுவனங்களும், இந்த அணிதிரட்டலுக்கு எதிராக, நடுத்தர வர்க்க அடுக்குகள் மேலோங்கிய நேட்டோ-ஆதரவு தாராளவாத எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்த போராட்டங்களையும் ஊக்கப்படுத்தி உள்ளன.

வடக்கு காகசஸில் ஆழ்ந்த வறிய முஸ்லீம்கள் நிறைந்த பகுதியான தாகெஸ்தானிலும் இந்த இராணுவ அணிதிரட்டலுக்கு எதிராக குறிப்பிடத்தக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. ஏகாதிபத்திய சார்பு பத்திரிகைகளால் பரவலாக உற்சாகப்படுத்தப்படும் இந்த போராட்டங்களும் இன துவேஷ தொனியைக் கொண்டுள்ளதாக தெரிகிறது, இந்தப் பிராந்தியத்தில் கிரெம்ளினின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் மீதான வெறுப்பு பிரிவினைவாத போக்குகளாலும் ஏகாதிபத்திய சக்திகளாலும் மிகவும் பிற்போக்குத்தனமான நோக்கங்களுக்காக நீண்டகாலமாக சுரண்டப்பட்டு வந்துள்ளது. தாகெஸ்தான் நேரடியாக செசென்யா எல்லையில் உள்ளது, செசென்யா மீது கிரெம்ளின் 1994 மற்றும் 2009 க்கு இடையே இரண்டு இரத்தக்களரியான போர்களை நடத்தி உள்ளது. தாகெஸ்தானில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் பெப்ரவரியில் இருந்து போருக்காக கட்டாய இராணுவச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய எல்லா போராட்டங்களையும் கிரெம்ளின் பாரிய கைது நடவடிக்கைகளைக் கொண்டு ஒடுக்குகிறது.

“போர் எதிர்ப்பு' என்று கூறாமல், அதன் போராட்டங்களை 'போர் வேண்டாம்' என்ற மோசடி பதாகையின் கீழ் நடத்தும் தவறான பெயர் கொண்ட 'தாராளவாத எதிர்கட்சி', உண்மையில் தன்னலக் குழு, உயர்மட்ட நடுத்தர வர்க்கம் மற்றும் அரசு எந்திரத்தின் பிரிவுகளுக்காக பேசுகிறது, ரஷ்யாவைத் துண்டாடுவது தவிர்க்கவியலாமல் தொடர்ச்சியான போர்கள் மற்றும் உள்நாட்டு போர்களை ஏற்படுத்தும் என்பதால் ஏகாதிபத்திய சக்திகள் அதற்கு தயார் செய்து வரும் நிலையில், இந்த சக்திகள் அவற்றுக்குப் பின்னால் நேரடியாக அணி சேர அறிவுறுத்துகின்றன.

இறுதியாக, தாராளவாத எதிர்கட்சியின் பின்னால் உள்ள சமூக சக்திகள், புட்டின் ஆட்சியை விட குறைவானது அல்ல, ஸ்ராலினிசம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து முதலாளித்துவ மீட்டமைப்பு செய்ததில் இருந்து இவை பிற்போக்குத்தனமாக முளைத்தவை ஆகும். கிரெம்ளினுக்கும் அதன் போருக்கும் அவர்களின் எதிர்ப்பு இடதில் இருந்து அல்ல வலதில் இருந்து வருகிறது. வெளிநாட்டு கொள்கை மீது அவர்களுக்குள் என்ன மோதல்கள் இருந்தாலும், செல்வந்தத் தன்னலக் குழுவின் எல்லா கன்னைகளும் தொழிலாள வர்க்கத்தின் மீது அவற்றின் ஆழ்ந்த வெறுப்பைக் கொண்டுள்ளன என்பதோடு, ரஷ்யாவிலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திலும் ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கம் மேலெழுவது குறித்த அச்சத்தில் உள்ளன.

ரஷ்ய மக்களில் பரந்த பெரும்பான்மையினருக்கு தப்பிப்பதற்கு உரிய பண வசதியோ அல்லது செல்வதற்கு வேறு இடங்களோ இல்லை. வாகனத் துறை போன்ற தொழில்துறையின் ஒட்டுமொத்த பிரிவுகளையும் நாசமாக்கி உள்ள மேற்கத்திய பொருளாதார போர்முறையால் பாதிக்கப்பட்டு, ரஷ்ய தொழிலாளர்கள் இப்போது உக்ரேனில் மட்டுமல்ல ரஷ்யாவுக்கு உள்ளேயே கூட கொடூரமாக உடனடியாக கொத்துக்கொத்தாக கொல்லப்படும் சாத்தியக்கூறை முகங்கொடுக்கிறார்கள்.

தாராளவாத எதிர்ப்பில் உள்ள செல்வந்தத் தன்னலக் குழு மற்றும் நடுத்தர வர்க்க சக்திகளுக்கும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிரான உறுதியான எதிர்ப்பை ஓர் உண்மையான போர்-எதிர்ப்பு இயக்கத்தால் மட்டுமே உருவாக்க செய்ய முடியும். அது, ஏகாதிபத்தியம் மற்றும் இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக சர்வதேச ரீதியில் ஐக்கியப்பட்ட ஒரு போராட்டத்திற்காக, உக்ரேனிலும் ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர்களுக்கும், குறிப்பாக அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திற்கும் முறையீடு செய்ய வேண்டும். இத்தகைய ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக, அக்டோபர் புரட்சியின் படிப்பினைகளையும் மற்றும் ஸ்ராலினிசத்தால் அந்த புரட்சி தேசியவாத அடிப்படையில் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கும் எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்க போராட்டத்தின் படிப்பினைகளையும் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். இதற்கு ரஷ்யாவிலும் உக்ரேனிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைக்க ஒரு தீர்மானகரமான அவசர போராட்டம் தேவைப்படுகிறது.

Loading