முன்னோக்கு

இயன் சூறாவளி பேரழிவு: பில்லியன்கள் போருக்கு அல்ல நிவாரணத்திற்கு தேவை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இயன் சூறாவளி புளோரிடாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, பாரிய ஆனால் இன்னும் கணக்கில் வராத எண்ணிக்கை இறப்புகளுடன் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது. புளோரிடா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் மின்சாரம் இன்றி உள்ளனர், பாரிய வெள்ளத்தால் பலர் தங்கள் வீடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இது ஒரு 'இயற்கை பேரழிவு' மட்டுமல்ல, மாநில, மத்திய அரசாங்க அதிகாரிகளின் அதிர்ச்சியூட்டும் அலட்சியத்தால் உருவானதாகும்.

இந்த சூறாவளி புதன்கிழமை ஆபத்தான வகை 4 எனக் குறிக்கப்படும் நிலச்சரிவை உருவாக்கியது, மேலும் வகை 5 க்கு கீழே உச்சபட்சமாக மணிக்கு 2 மைல் வேகத்தில் வீசும் காற்றையும் உருவாக்கியது, மேலும் தென்மேற்கு புளோரிடாவின் பெரும்பகுதி கணிசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது, முதல் சில மணிநேரங்களில் அச்சுறுத்தும் வகையில் அதிவேகத்துடன் பலத்த காற்று வீசியது. Poweroutage.us வியாழன் அன்று, முறையே ஃபோர்ட் மியர்ஸ் (Fort Myers) மற்றும் புன்டா கோர்டா (Punta Gorda) ஆகிய நகரங்கள் அமைந்துள்ள கடலோர லீ மாகாணம் மற்றும் சார்லோட் மாகாணத்தில் உள்ள அனைவரும் உட்பட, மாநிலத்தில் கிட்டத்தட்ட 2.4 மில்லியன் வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் இருந்ததாகத் தெரிவித்தது.

சூறாவளியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தென்மேற்கு மாகாணங்கள் கடந்த 25 ஆண்டுகளில் மக்கள்தொகை மற்றும் நகரமயமாக்கலில் பெரும் அதிகரிப்பைக் கண்டுள்ளன, குறிப்பாக லீ மற்றும் சார்லோட் மாகாணங்களில் மட்டும் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் தாழ்வான கடலோரப் பகுதிகளில் கட்டப்பட்ட சுற்றுப்புறங்களில் மொத்தமாக வசிக்கின்றனர், அந்தப் பகுதி புதன்கிழமை இந்த பெரும் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியது.

மலிவான நகரும் வீடுகளும் டிரெய்லர் பூங்காக்களும் குறிப்பாக பாதிக்கப்படும் வகையில் கைவிடப்பட்டன, மேலும் குடியிருப்பாளர்களை முறையாக வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எல்லாமே ‘தனிப்பட்ட பொறுப்புக்கு’ விடப்பட்டது, அதாவது, ஏழைகள், நோயாளிகள் மற்றும் படுக்கையில் இருப்பவர்கள் கூட தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர்.

குடியிருப்பாளர்களை வெளியேற்ற முறையாக முயற்சிப்பதற்கு பதிலாக, ஆர்லாண்டோவை உள்ளடக்கிய ஆரஞ்சு மாகாணத்தில் உள்ள அதிகாரிகள், நகரும் வீட்டு உரிமையாளர்களின் போதாத சரிபார்ப்பு பதிவுகளை நாடியதுடன், பறக்கும் தகவல் அளிப்பு சாதனங்கள் மூலம் சூறாவளியை சமாளிக்க குடியிருப்பாளர்களை வேறு இடங்களுக்குச் செல்லுமாறு ‘ஊக்குவித்தனர்’.

இயன் சூறாவளி புளோரிடாவின் தென்மேற்குப் பகுதியைத் தாக்கி, மத்திய புளோரிடாவில் பரந்தளவிலான வெள்ளத்தை ஏற்படுத்தியதன் பின்னர், திபகற்பத்தை மேற்கிலிருந்து கிழக்காக கடந்து அட்லாண்டிக் பெருங்கடலில் மீண்டும் எழுச்சியடைந்தது. அங்கு அது சூடான நீரில் இருந்து ஆற்றலை உள்வாங்கி வடக்கு-வடமேற்கு பகுதி நோக்கி திரும்பி வீசத் தொடங்கியது. இது வெள்ளிக்கிழமை தெற்கு கரோலினாவில் இரண்டாவது நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறப்புகள் பற்றிய முதல் மதிப்பீடுகள் – லீ மாகாணத்தின் ஷெரீப் அவரது அதிகார வரம்பில் மட்டும் ‘நூற்றுக்கணக்கானவர்கள்’ இறந்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டினார் – ஊடகங்களால் பெரிதும் மூடிமறைக்கப்பட்டது, அதாவது பேரழிவின் அளவு பற்றி அமெரிக்க மக்களை எச்சரிக்க வேண்டாம் என அவற்றிற்கு உத்தரவிடப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது.

இருப்பினும், வியாழக்கிழமை வாஷிங்டனில் உள்ள மத்திய அவசரகால மேலாண்மை அமைப்பின் (Federal Emergency Management Agency-FEMA) தலைமையகத்தில் பேசுகையில், ஜனாதிபதி ஜோ பைடென், ‘கணிசமான உயிர் சேதம் நிகழ்ந்திருக்கலாம் என்பது பற்றிய ஆரம்பகட்ட அறிக்கைகளை தான் கேட்டதாக’ கூறியதுடன், இயன் சூறாவளி ‘புளோரிடாவின் வரலாற்றில் முன்நிகழ்ந்திராத மிக மோசமான சூறாவளி’ என்று குறிப்பிட்டார்.

அது உண்மையாக மாறினால், இறப்பு எண்ணிக்கை 1928 ஆம் ஆண்டு ஓக்கிசோபீ (Okeechobee) சூறாவளியில் நிகழ்ந்த 2,500 க்கும் மேற்பட்ட உயிர் சேதத்தை விட இதில் அதிகமாக ஏற்பட்டிருக்கும். இது பெயரளவிற்கு கூறப்பட்டது, ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் புலம்பெயர்ந்த பண்ணைத் தொழிலாளர்கள், முக்கியமாக ஆபிரிக்க-அமெரிக்கர்கள் அடங்குவர், அட்லாண்டிக்கிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரை மாநிலத்தை கிழக்கில் இருந்து மேற்காகக் கடக்கும்போது சூறாவளியால் பெரிய தெற்கு புளோரிடா ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அவர்கள் மூழ்கினர்.

பைடென் ஒட்டுமொத்தமாக 67 புளோரிடா மாகாணங்களும் பேரழிவிற்குள்ளானது என்ற அறிவிப்பில் கையெழுத்திட்டார், அவை கூட்டாட்சி அவசரகால நிதியைப் பெற தகுதியுடைவை என அறிவித்தார். ஆனால் அத்தகைய எந்த உதவியும் சேதத்தின் அளவை ஈடுசெய்ய முடியாது, அதாவது நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களில் இல்லையென்றால் பல பில்லியன் டாலர்கள் நிதி தேவை இருக்கும்.

பைடென் நிர்வாகத்தின் – மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் – உண்மையான முன்னுரிமைகள் என்ன என்பது, உக்ரேன் போருக்காக 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவழிக்கும் முடிவின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, இது இந்த ஆண்டின் அனைத்து இயற்கை பேரிடர்களின் போதான மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளுக்கு செலவிடப்பட்ட நிதியை விட அதிகமாகும். வியாழக்கிழமை செனட் நிறைவேற்றிய தொடர் தீர்மானம், உக்ரேனுக்கு மேலும் 12 பில்லியன் டாலர் நிதியை வழங்கியது, அதேவேளை சூறாவளி, வெள்ளம், காட்டுத்தீ மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களின் நிவாரணத்திற்கு வெறும் 2 பில்லியன் டாலர் நிதியை மட்டுமே வழங்கியது.

தொழிலாள வர்க்கம் இந்த முன்னுரிமைகளை நிராகரித்து, உக்ரேனில் போருக்கான அனைத்து அமெரிக்க நிதி உதவிகளையும் உடனடியாக இரத்து செய்யக் கோர வேண்டும், புளோரிடாவின் சூறாவளி பேரழிவு மண்டலத்தில் இருந்து ஏற்கனவே வெளிவந்த ஏராளமான படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்து தெளிவாகத் தெரியும் அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அந்த நிதி திருப்பிவிடப்பட வேண்டும்.

நேபிள்ஸில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்ட வீடியோக்கள், அவர்களின் கொல்லைப்புறங்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பதையும், கதவுகள் பாய்ந்துவரும் தண்ணீரால் உந்தப்படுவதையும் காட்டின. ஃபோர்ட் மியர்ஸ் கடற்கரையில் உள்ள அதிகாரிகள் வியாழன் காலை, கடலோரப் பகுதிகளில் அழிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி உடல்கள் குவிந்து கிடப்பதைக் கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

போர்ட் சார்லோட்டில், HCA புளோரிடா ஃபாசெட் மருத்துவமனையில் அதன் கீழ்ப்பகுதியில் உள்ள அவசர சிகிச்சை அறை வெள்ளத்தில் மூழ்கியது, அதே நேரத்தில் கடுமையான காற்று அதன் நான்காவது மாடியின் கூரையின் சில பகுதிகளை கிழித்தது, ஒரு மருத்துவரின் கூற்றுப்படி, அதன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவ சாதனங்கள் வெளியில் தெரிந்தன. ஏராளமான ஊழியர்கள் மற்றும் செயற்கை சுவாச வசதி பொருத்தப்பட்டிருந்த சிலர் உட்பட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்ற தளங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புளோரிடாவில் ஏற்பட்ட பேரழிவு, காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் காரணமான முன்கணிக்கக்கூடிய சுற்றுச்சூழல் விளைவுகளை எதிர்கொள்வதில் முதலாளித்துவ சமூகம் சந்தித்த மற்றொரு தோல்வியின் நிரூபணமாகும். இந்த ஆண்டு மட்டும், மிசிசிப்பியின் ஜாக்சன் நகரில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையால் கழிவுநீர் அமைப்பு சீர்குலைந்த நிலையில், நூறாயிரக்கணக்கான மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்தனர், அதேவேளை முன்னோடியில்லாத வகையில் ‘வெப்பக் குவிமாடங்கள்’ மேற்கு முழுவதும் காட்டுத் தீயை எரியூட்டியது.

புளோரிடாவில், குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவரும் உட்பட, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகள், முந்தைய புயல்களின் தாக்கத்திற்குப் பின்னர், மாநிலத்தின் தயார்நிலை நெறிமுறைகள் மற்றும் கட்டிடங்களை மறுசீரமைப்பதில் எந்த முன்னேற்றமும் காணவில்லை. 2017 ஆம் ஆண்டில், இர்மா சூறாவளி தீபகற்பத்தின் வழியாக வலதுபுறம் வீசியது, இதில் கிட்டத்தட்ட 100 பேர் இறந்ததுடன், பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டில், புளோரிடாவின் பான்ஹேண்டில் குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதிகளை வகை 5 ஆக வீசிய மைக்கேல் சூறாவளி அழித்தது, இது அதிக தீவிரம் கொண்டது.

அனைத்து சமீபத்திய ‘இயற்கை’ பேரிடர்களைப் போல, இயன் சூறாவளியும் மக்களை பாதுகாப்பதற்குத் தேவையான முறையான திட்டமிடல் மற்றும் அமைப்பைப் பயன்படுத்துவதில் உள்ள முதலாளித்துவ சமூகத்தின் இயலாமை மற்றும் மனித வாழ்வின் மீதான ஆளும் வர்க்கத்தின் குற்றவியல் அலட்சியம் ஆகிய இரண்டையும் அம்பலப்படுத்தியுள்ளது.

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, புஷ் நிர்வாகம் கத்ரீனா சூறாவளி நியூ ஓர்லியன்ஸில் ஏற்படுத்திய அழிவை அலட்சியப்படுத்தி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இதில் கிட்டத்தட்ட 1,800 பேர் இறந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் நிராதரவாக கைவிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டனர், அவர்களுக்கு உணவோ, தண்ணீரோ கூட கிடைக்காமல் வீடுகளில் சிக்கி, வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வழியின்றி கூரைகளில் ஒட்டிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கொரோனா வைரஸ் காலத்தில், இந்த அலட்சியம் கொலை வெறியாக அதிகரித்துள்ளது. ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள் இரண்டும் ஒரு அலட்சியம் நிறைந்த மற்றும் குற்றவியல் பதிலுக்கு தலைமை தாங்கின, அதாவது இலாபமீட்டும் வகையில் வணிகங்கள் திறந்திருப்பதையும், பில்லியனர்கள் இன்னும் அதிக செல்வத்தை குவிக்க முடிவதையும் உறுதி செய்வதற்கு, தடுக்கக்கூடிய தொற்றுநோய்க்கு ஏற்கனவே 1 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை தியாகம் செய்ய நேரிட்டுள்ளது.

அமெரிக்க பாசிசத்தின் தலைவராக ட்ரம்பை மாற்றுவதற்கு நம்பும் புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ், ஆகக் குறைந்த கோவிட்-19 தணிப்பு நடவடிக்கைகளைக் கூட நிராகரித்தார். 7 மில்லியனுக்கும் அதிகமான நோய்தொற்றுக்களுக்கும் 81,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கும் அவர் பொறுப்பாளியாவார். ஒப்பிடுகையில், சில ஆயிரம் சூறாவளி இறப்புகளுக்கு இது பொருந்தக்கூடியது என்பதை ஒரு அடிக்குறிப்பாக கருத வேண்டும்.

பைடென் நிர்வாகத்தின் அவ்வப்போதைய ‘பச்சை’ சமிக்ஞைகள் இருந்தபோதிலும், காலநிலை மாற்றத்தின் வளர்ந்து வரும் தாக்கத்திற்கு தீர்வு காண ஜனநாயகக் கட்சியினரால் எதுவும் செய்யப்படவில்லை. இவர்கள் காலநிலை மாற்றம் குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர், ஏனென்றால் அமெரிக்க இராட்சத நிறுவனங்களின் இலாபங்களை அது குறைக்கும் அல்லது பில்லியனர்களின் செல்வத்தை அச்சுறுத்தும்.

பைடென் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியில் காலநிலை மாற்றத்தை மறுப்பவர்களை தங்கள் ‘சகாக்கள்’ மற்றும் ‘நண்பர்கள்’ என்று குறிப்பிடுவதும், அவர்களுடன் இருகட்சி ஒத்துழைப்பை நாடுகின்றன. வியாழன் அன்று, பைடென், அமெரிக்கர்கள் ‘ஒரே அணியாக ஒன்று சேர்வார்கள்’ என்பது பற்றி மேலும் பல கருத்துக்களைக் கூறினார்.

இதற்கிடையில், காலநிலை மாற்றம் உலக வெப்பநிலையை முன்னோடியில்லாத அளவிற்கு மாற்றுவதால், அசாதாரண மழை மற்றும் கொடிய புயல்கள் மிகவும் பொதுவானதாகி வருகின்றன. வெப்பமான வெப்பநிலை காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்துள்ளதானது வரலாறு காணாத மழைக்கு வழிவகுக்கிறது.

கடல் வெப்பநிலையின் அதிகரிப்பானது, வேகமும் தீவிரமும் மிக்க வலுவான புயல்களைத் தூண்டுவதாக காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இயன் சூறாவளியின் அதிகபட்ச காற்று வேகம் மூன்று மணி நேரத்திற்குள் 35 மைல் வேகம் அதிகரித்தது, சூறாவளி புளோரிடாவை புதன்கிழமை காலை நெருங்கும்போது, வகை 3 இல் இருந்து வலுவான வகை 4 ஆக அது உருவெடுத்திருந்தது.

சமூகத்தின் பரந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஓக்கிசோபீ சூறாவளி ஆயிரக்கணக்கான இறப்புக்களுக்கு வழிவகுத்த அதே சமூக நிலைமைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது முதலாளித்துவத்தின் மீதான குற்றச்சாட்டாகும்.

சுற்றுச்சூழல் பேரழிவை தடுப்பதற்கான ஒரே வழி, பெருநிறுவனங்களும் வங்கிகளும் பதுக்கி வைத்திருக்கும் டிரில்லியன் கணக்கான பணம் அபகரிக்கப்பட்டு, இலாப அமைப்பின் அராஜகம் ஒழிக்கப்பட்டு, உலக அளவில் ஒரு சோசலிச அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் வகுக்கப்படுவதாகும், அதன் மூலம் புவி வெப்பமடைவதைக் குறைக்கவும் உலக மக்களைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

Loading