புட்டினின் இணைப்பு உரையும் ரஷ்ய தேசியவாதத்தின் திவால்நிலையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இக்கட்டுரையின் ஆசிரியர் சோசலிச சர்வதேசியவாதத்தின் அடித்தளத்தில், உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்தின் பினாமி போரை எதிர்க்கும் ரஷ்யாவில் உள்ள ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர்களின் (Young Guard of Bolshevik Leninists) பிரதிநிதியாவார்.

செப்டம்பர் 30, வெள்ளியன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார். இது வாக்கெடுப்புகள் மூலம் கிழக்கு, தென்கிழக்கு உக்ரேனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் (லுகான்ஸ்க்), ஸபோரோஜியா, கெயர்சன் ஆகியவற்றை ரஷ்யாவுடன் நான்கு புதிய பிரதேசங்களாக இணைத்ததில் ஆளும் ஆட்சியின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் இருந்தது.

இந்தப் பேச்சு ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே விரிவடையும் மோதலின் ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. ஏனெனில் புட்டின் ஆட்சி இப்போது இணைக்கப்பட்ட உக்ரேனிய நிலங்களை தனக்கே சொந்தமானதாகக் கருதுவதுடன், அவற்றுக்காக மிகவும் தீவிரமாகப் போராடும். இது கார்கிவ் பிராந்தியத்தில் ஏற்பட்ட ரஷ்ய தோல்விகளை அடுத்து அறிவிக்கப்பட்ட பகுதி அணிதிரட்டல்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்

புட்டின் தனது உரையில், உக்ரேனின் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்ததை நியாயப்படுத்தி, 'மக்கள் தங்கள் விருப்பத்தை, ஒரு தெளிவான தேர்வாகச் செய்துள்ளனர்' என்றார். வாக்கெடுப்புகளின் முடிவுகள் பற்றிய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் உண்மையில் வியக்க வைக்கின்றன. அனைத்து பிராந்தியங்களிலும் 97 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைப்புக்கு வாக்களித்துள்ளனர். மேலும் வாக்குப்பதிவு மக்கள்தொகையின் மிக உயர்ந்த பங்கேற்பைக் காட்டியது.

எவ்வாறாயினும், தலைநகரம் உட்பட கிட்டத்தட்ட பாதிப் பிரதேசம் உக்ரேனிய ஆயுதப்படைகளால் கட்டுப்படுத்தப்படும்போது, ஸபோரோஜியாவில் வாக்கெடுப்பு நடத்துவது எப்படி முடிந்தது? என்று கேட்க வேண்டியது அவசியம். இதற்கு புட்டினின் ஆட்சியிடம் பதில் இல்லை. புள்ளிவிவரங்கள் மேலெழுந்தவாரியாக எடுக்கப்பட்டு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.

வாக்கெடுப்பு நடத்தப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் இது பொருந்தும். டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் பாதி பகுதி உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ளது. முழுப் பகுதியும் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே பகுதி லுஹான்ஸ்க் பகுதி. ஆனால் அங்கும், வெளியிடப்பட்ட முடிவுகளின் உண்மை பற்றிய கேள்விக்கு தெளிவு தேவை.

புட்டின் தொடர்ந்து கூறினார், “எங்கள் நிலத்தை நாங்கள் எல்லா வகையிலும் பாதுகாப்போம். அழிக்கப்பட்ட அனைத்து நகரங்களையும் நகரங்களையும் மீண்டும் கட்டியெழுப்புவோம். நாங்கள் நிறுவனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார பராமரிப்பு அமைப்புகளை உருவாக்குவோம். புட்டின் ஆட்சி மீண்டும் ஒரு அணு ஆயுதப் போரை கட்டவிழ்த்து விடுவதாக அச்சுறுத்துகிறது என்பதால் முதல் வாக்கியம் சிறப்பு கவனத்திற்குரியது.

ஒரு அணுவாயுத போர் நடந்தால், நிறுவனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவற்றின் 'வளர்ச்சி' கேள்விக்குறியாகிவிடும். கோவிட்-19 க்கு அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான பிரதிபலிப்பின் விளைவாக ரஷ்யாவில் கிட்டத்தட்ட, அதுவும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி மட்டுமே 400,000 பேர் இறந்துள்ளனர் என்பதை நினைவுபடுத்துவது போதுமானது. முன்னரே சுகாதாரப் பாதுகாப்பையும் சமூக உள்கட்டமைப்பையும் 'அபிவிருத்தி செய்வதில்' இருந்து புட்டின் ஆட்சியை தடுத்தது எது?

புட்டின் ஆட்சியின் வாக்குறுதிகளுக்கு முக்கிய காரணம், முதலாளித்துவத்தின் மோசமடைந்து வரும் நெருக்கடியின் மத்தியில், அதன் சுயாதீன நலன்களைத் தொடர அச்சுறுத்தும் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஆளும் தன்னலக்குழுவின் தீவிர பயம் ஆகும். மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கு தேசிய-பேரினவாதத்தால் பதிலளிப்பதற்கு புட்டின் ஆட்சிக்கு ஒரு உறுதியான 'உள்நாட்டு ஆதரவு' மிகவும் அவசியமாக இருப்பதால், இந்த வாக்குறுதிகள் அனைத்திற்கும் பின்னால் உள்ள முக்கிய நோக்கம் இந்த அச்சம்தான்.

'அவர்கள் எங்களை ஒரு காலனியாக பார்க்க விரும்புகிறார்கள்' என்று புட்டின் தனது உரையில் குறிப்பிடுகிறார். 'அவர்கள் சமமான ஒத்துழைப்பை விரும்பவில்லை, ஆனால் கொள்ளையடிக்க விரும்புகின்றனர்' என்றார்.

ரஷ்யாவை காலனித்துவமயமாக்கல் மற்றும் சுற்றிவளைப்பு அச்சுறுத்தல் பற்றிய புட்டினின் கருத்துக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி சரியானவை என்றாலும், அவை ரஷ்ய ஆளும் வர்க்கத்தின் இரட்டை உளவியலை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவை இரண்டும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடன் 'சமமான ஒத்துழைப்பை' எதிர்பார்க்கின்ற அதே நேரத்தில் மூலப்பொருள் வளங்கள் நிறைந்த நாட்டில் அதன் சிறப்புரிமை நிலையை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் அணுவாயுத அச்சுறுத்தல்களை கிளறுகின்றன. ஏகாதிபத்திய சக்திகள் பற்றிய கண்டனங்களால் நிரம்பிய அதே உரையில், புட்டின் 'ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள' கிரெம்ளினின் 'இணை சிந்தனையாளர்களை' பற்றியும் குறிப்பிட்டார்.

அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியம் முன்வைத்த அச்சுறுத்தலுக்கு புட்டின் தனது தேசிய-பேரினவாத பதிலுக்கு பொய்யான முற்போக்கான தொனியை வழங்க முயன்றார். உதாரணமாக, தனது உரையின் ஒரு பகுதியாக, 20 ஆம் நூற்றாண்டில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தைத் ஆரம்பித்தது ரஷ்யாதான் என்பதில் பெருமைப்படுவதாகக் கூறினார். இது 1917 அக்டோபர் புரட்சி மற்றும் லெனின் தலைமையிலான போல்ஷிவிக்குகளை மோசமானவர்களாக கண்டித்து, பிப்ரவரி 21 அன்று ஒரு உரையில் தனது படையெடுப்பை நியாயப்படுத்திய ஒரு மனிதரிடமிருந்து வரும் மிகவும் பாசாங்குத்தனமான அறிக்கையாகும்.

உண்மையில், முன்னாள் ரஷ்ய சாம்ராஜ்யத்தை ஏகாதிபத்திய சக்திகளால் சுற்றிவளைப்பதை முன்கூட்டியே தடுத்தது போல்ஷிவிக் புரட்சியும், சர்வதேச சோசலிச புரட்சிக்கான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் செம்படை நடத்திய போராட்டமுமாகும். இந்த வேலைத்திட்டம் இப்போது புட்டின் ஆட்சியால் பின்பற்றப்படும் பிற்போக்குத்தனமான தேசியவாத கொள்கைகளுடனும், நடவடிக்கைகளுடனும் அரசியல் ரீதியாக பொருத்தமற்றதாக உள்ளது.

அவரது கொள்கைகளுக்கு பொது ஆதரவை விரிவுபடுத்த முயன்று, புட்டின் பின்வருமாறு அறிவித்தார்: 'மேற்கால் கட்டப்பட்ட ஒற்றை துருவமுனை உலகம், ஜனநாயகத்திற்கு எதிரானது, பொய்யானது மற்றும் அடிவரை பாசாங்குத்தனமானது'. இது நிச்சயமாக உண்மைதான், ஆனால் இந்த மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் அம்சங்கள்தான் ரஷ்ய முதலாளித்துவ அரசின் சிறப்பியல்பான அம்சங்களுமாகும் என்பதை புட்டின் மறந்துவிடுகிறார்.

புட்டின் தொடர்ந்தார், 'உலகம் புரட்சிகர மாற்றங்களின் காலகட்டத்தில் நுழைந்துள்ளது. அவை இயல்பில் ஒரு அடிப்படையானவை. வளர்ச்சிக்கான புதிய மையங்கள் உருவாகின்றன. அவை தங்கள் நலன்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாது, அவற்றைப் பாதுகாக்கவும் தயாராக உள்ளன.' புட்டினிடமிருந்து வரும், இந்த வார்த்தைகள் ஒரு அப்பட்டமான வாயடிப்பின் தன்மையைக் கொண்டுள்ளன. ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்களை விட புரட்சிக்கு அஞ்சுபவர்களில் ரஷ்ய தன்னலக்குழுவை விட வேறு எவரும் இல்லை. எவ்வாறாயினும், போருக்கான ஆதரவை விரிவுபடுத்தும் நம்பிக்கையில், புட்டின் தனது அரசாங்கத்தை தேசிய சுதந்திரத்தின் பாதுகாவலராக சித்தரிப்பதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் மீதான மக்களின் வெறுப்பை தனக்கு சாதகமாக சுரண்டிக்கொள்ள முற்படுகிறார்.

புட்டினின் கவலை ரஷ்ய மக்களின் சுதந்திரத்தின் மீது அல்ல, மாறாக ரஷ்யாவின் இயற்கை வளங்களையும் தொழிலாள வர்க்கத்தையும் அதன் 'மேற்கத்திய பங்காளிகளின்' கருத்தை கவனத்தில் கொள்ளாமல் சுரண்டுவதற்கான ரஷ்ய தன்னலக்குழுவின் சுதந்திரம் மற்றும் உரிமையை பற்றியதாகும். உள்நாட்டுப் போரின் போது போல்ஷிவிக்குகளின் செம்படைக்கு எதிரான வெண்படைகளின் போராட்டத்தை ஆதரித்த தீவிர வலதுசாரி ரஷ்ய தேசியவாத சித்தாந்தவாதியான இவான் இலினின் இந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டி புட்டின் தனது உரையை முடித்தார்:

“எனது தாயகம் ரஷ்யா என்று நான் கருதினால், நான் அதை நேசிக்கிறேன், ரஷ்ய மொழியில் சிந்திக்கிறேன், ரஷ்ய மொழியில் பாடுகிறேன், பேசுகிறேன்; நான் ரஷ்ய மக்களின் ஆன்மீக சக்திகளை நம்புகிறேன் மற்றும் அதன் வரலாற்று விதியை எனது உள்ளுணர்வு மற்றும் எனது விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். அதன் ஆவி என் ஆவி; அதன் விதி என் விதி; அதன் துன்பம் என் துயரம்; அதன் செழிப்பு என் மகிழ்ச்சி.'

வெள்ளிக்கிழமை, உக்ரேன் நேட்டோ அங்கத்துவத்தை விரைவாக பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தமை மோதலை மேலும் அதிகரித்தது. உக்ரேனில் ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான பினாமிப் போரின் போக்கு, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது சாத்தியமான ஒரு வெளிப்படையான மோதலாக அதிகரிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும், அனைத்து முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் பைத்தியக்காரத்தனத்தை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

இறுதியில், புட்டினின் அனைத்து அறிக்கைகளும், அவர் ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கான தனது பதிலாக தேசிய-பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளார் என்பதை வலியுறுத்துகின்றன. புட்டின், ரஷ்யாவில் முதலாளித்துவ மறுசீரமைப்பு ஆட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அது வேறுவிதமாக இருக்க முடியாது. அவரது பிற்போக்குத்தனமான கொள்கைகள், ஸ்ராலினிசத்தின் தவறான, அப்பட்டமான எதிர்ப்புரட்சிக் கொள்கைகளால் சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்கு பின்னர் தோன்றிய ஆளும் ரஷ்ய தன்னலக்குழுவின் சமூக-பொருளாதார பங்கினை பிரதிபலிக்கின்றன.

ஆனால் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு புரட்சிகர மூலோபாயம் தேவைப்படுகிறது. 1917 அக்டோபர் புரட்சியின்போது போல்ஷிவிக்குகள் கடைப்பிடித்த கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே இது சாத்தியமாகும். உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே இந்தக் கொள்கைகளின் சாராம்சம். முதலாளித்துவத்தின் அனைத்து முரண்பாடுகளுக்கும், அது உருவாக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது சமூகத்தின் சர்வதேசரீதியான மறுசீரமைப்பின் கட்டமைப்பிற்குள் மட்டுமே சாத்தியமாகும். இதற்காக ஒட்டுமொத்த பொருளாதாரமும் தனியார் இலாபத்திற்காக அல்லாது சமூக தேவைகளை பூர்த்தி செய்யப்படுத்துவதற்காக மறுஒழுங்கமைக்கப்படவேண்டும்.

இது தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர தலைமையின் நெருக்கடியை தீர்ப்பது பற்றிய கேள்விக்கு நம்மைக் கொண்டுவருகிறது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் உண்மையான புரட்சிகர முன்னணிப் படையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அடிப்படையில்தான் ரஷ்யா, உக்ரேன் மற்றும் உலகம் முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்ப முடியும்.

Loading