பிரிட்டன் நிதி நெருக்கடியின் முக்கியத்துவம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒவ்வொரு நாட்டின் தொழிலாள வர்க்கமும், கடந்த மாதம் பிரிட்டனில் நடந்துள்ள அசாதாரண நிகழ்வுகளில் இருந்து உள்ளீர்த்துக் கொள்வதற்கு ஆழமான படிப்பினைகள் உள்ளன.

பெருநிறுவனங்கள் மற்றும் மிகப்பெரும் செல்வந்தர்களுக்குப் பெரியளவில் வரி குறைப்புக்களை கொண்ட ஓர் இடைக்கால வரவு-செலவு திட்டத்தை கொண்டு வந்து, செப்டம்பர் 23 இல் அதன் 'வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி' பொருளாதார திட்டநிரலை அறிவித்த லிஸ் ட்ரஸ் இன் டோரி அரசாங்கம், திக்குமுக்காடி வருகிறது.

Bank of England, Threadneedle Street, London, England [Credit: Flickr, Hongchou's Photography]

திங்கட்கிழமை, மக்கள் அவையின் கேள்வி நேரத்தில் கலந்து கொள்ளாத ட்ரஸ், கடந்த வெள்ளிக்கிழமை சான்சிலர் பதவியிலிருந்து குவாசி குவார்டெங்கை அவர் நீக்கிய பின்னர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட ஜெர்மி ஹன்ட், ட்ரஸ்ஸும் குவார்டெங்கும் கூட்டாக தயாரித்திருந்த அந்தப் பொருளாதார திட்டநிரலை அவர் கிழித்தெறிந்தபோது, அங்கே உணர்ச்சியின்றி மவுனமாக உட்கார்ந்திருந்தார்.

நிதி மூலதனத்தின் பட்டவர்த்தனமான பலத்தையும் மற்றும் அதன் சர்வாதிகாரத்தை அது பயன்படுத்தும் விதத்தையும் இந்த அனுபவம் கண்கூடான சம்பவங்களில் எடுத்துக் காட்டியுள்ளன.

இடைக்கால வரவு-செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே ட்ரஸ் திட்டத்தின் தோல்வி ஆரம்பித்து விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிராக ஸ்டெர்லிங்கின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததுடன், அரசு பத்திரங்கள் மளமளவென்று விற்கப்பட்டன, இது ஓய்வூதிய நிதிகள் முடங்கும் ஆபத்தை உருவாக்கி இருப்பதுடன், பிரிட்டனிலும் உலகெங்கிலுமான நிதி அமைப்பிலும் ஒரு மிகப் பெரிய நெருக்கடியை உண்டாக்க அச்சுறுத்தி வருகிறது.

பணச் சந்தைகளின் ஆட்சேபனை என்னவென்றால், பெருநிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் கையளிக்கப்பட வேண்டும் என்பதல்ல. அந்த நிதி, சமூகச் செலவினங்களை வெட்டுவதன் மூலம் ஒதுக்கப்படவில்லை மாறாக 70 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமான தொகைக்கு அரசு கடன் அதிகரிக்கப்பட்டிருப்பது தான் அவர்களின் ஆட்சேபணையாக உள்ளது.

ஹன்ட் வரி வெட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது மட்டுமின்றி, அரசு செலவினங்களைக் குறைத்திருந்தார், மிகவும் முக்கியமாக எரிபொருள் மானியத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து வெறும் ஆறு மாதங்களுக்குக் குறைத்திருந்தார். “பொருளாதார ஸ்திரத்தன்மையை' மீட்டமைக்க 'கண்ணீர் கலங்கும் கடினமான' முடிவுகள் வர இருப்பதாக அவர் எச்சரித்தார். எதுவும் 'பரிசீலனையில் இருந்து ஒதுக்கப்படவில்லை,” அதாவது ஓய்வூதியங்கள், சுகாதாரம், கல்வி, மற்றும் பிற சமூக சேவைகள் ஆகியவை உடனடி பரிசீலனையில் உள்ளன என்பதே இதன் அர்த்தமாகிறது.

பிரிட்டன் சம்பவங்களுக்கு அவற்றின் சொந்த தேசிய தனித்துவங்கள் இருந்தாலும், அவை வெறுமனே 'பிரிட்டிஷ்' நிலைமைகளின் விளைவல்ல. லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டது போல, தேசிய தனித்தன்மைகள் எப்போதுமே உலகளாவிய அடிப்படை செயல்முறை அம்சங்களின் 'அசல் கலவையாகும்'.

அடியிலிருக்கும் சர்வதேச செயல்முறைகள் கடந்த 35 ஆண்டுகளில் அதிகரித்த பலத்தோடு வளர்ச்சியடைந்துள்ளன என்பதோடு, உலக நிதிய அமைப்பு முறையின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் மையத்தில் உள்ளன, இந்த உலக நிதிய அமைப்பு உலக முதலாளித்துவ இலாப முறையின் எல்லா முரண்பாடுகளையும் திரண்ட வடிவில் வெளிப்படுத்துகிறது.

இதேபோன்ற ஒரு உருகுதல் அமெரிக்காவில் ஏற்படுமா என பெடரல் ரிசர்வ் மற்றும் பைடென் நிர்வாகம் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதாக நேற்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. ஒரு முறிவு 'உடனே நிகழும்' என்பதாகத் தெரியவில்லை என்றாலும் —ஆளும் வர்க்கங்களைப் பொறுத்த வரையில் உடைந்து மண்டையில் விழும் வரையில் நெருக்கடி என்பதே இருக்காது— 'அனேகமாக அது நடக்கலாம்' என்பதே பதிலாக இருந்தது என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.

இந்த அதிர்ச்சி 'பிரத்யேகமாக பிரிட்டனுக்கு' உரியது என்றாலும், 'உலகெங்கிலும் நிதிய அழுத்தத்தின் அறிகுறிகள் மேற்புறத்திற்கு வந்து கொண்டிருப்பதால் இந்த நிலைமை முன்கூட்டிய எச்சரிக்கை மணியாக இருக்குமோ என்று [இந்த மிகக் கடுமையான எதிர்வினை] உலகெங்கிலுமான பொருளாதார வல்லுனர்களுக்குத் திகைப்பை உண்டாக்கி உள்ளது,” என்று அக்கட்டுரை குறிப்பிட்டது.

நிதி நெருக்கடியின் தோற்றுவாய்களை —குறைந்தபட்சம் ஆகஸ்ட் 1971 இல் அமெரிக்க டாலரில் இருந்து தங்கத்தின் தொடர்பைத் துண்டித்து, உலகளவில் அரசு நிர்ணய நாணய முறைக்கு (global fiat currency system) மாறியதில் இருந்தாவது— நீண்ட காலம் பின்னோக்கிக் காணலாம் என்றாலும், அக்டோபர் 1987 வோல் ஸ்ட்ரீட் வீழ்ச்சி ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது, அது உலகெங்கிலும் எதிரொலித்தது.

இன்று வரையில் வரலாற்றில் மிகப் பெரிய ஒரு நாள் வீழ்ச்சியாக 22 சதவீதத்திற்கும் அதிகமான அந்த சரிவுக்கான விடையிறுப்பில், அப்போதைய அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பன், பங்குச் சந்தைக்கு தேவையான மொத்த பணப்புழக்கத்தையும் பெடரல் வழங்கும் என்று உறுதியளித்தார்.

இந்த முடிவு ஒரேயொரு முறை எடுக்கப்பட்ட முடிவல்ல. 'கிரீன்ஸ்பான் நிலைப்பாடு', அது இவ்வாறு தான் அறியப்பட்டது, நிதிச் சந்தையின் ஊகவணிக நடவடிக்கைகள் ஒரு நெருக்கடியை உருவாக்கும் போதெல்லாம், பெடரல் அதற்கு உடனே பிணை வழங்குவதற்கும், ஊகவணிகத்தைப் புதிய மட்டங்களுக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு அதிக பணம் பாய்ச்சுவதற்கும் அது நிதியச் சந்தைக்கு ஓர் உத்தரவாதமாக இருந்தது.

1990 களிலும் மற்றும் இந்தப் புதிய நூற்றாண்டின் முதல் ஆண்டுகளிலும் ஏற்பட்ட ஒவ்வொரு நிதிய சூறாவளிக்கும் இது தான் பெடரலின் விடையிறுப்பாக இருந்தது.

அதே நேரத்தில், 1930 களின் பெருமந்தநிலைக்கு விடையிறுப்பாக அறிமுகம் செய்யப்பட்ட நெறிமுறைகள் அகற்றப்பட்டன. உலகளாவிய ஊகவணிகத்தின் மையமாக மாறி இருந்த இலண்டன் நகரம், செயலற்ற பார்வையாளராக ஒதுங்கி இருந்து விடவில்லை. உண்மையில், இலண்டனில் நிலைமைகள் அதிகளவில் தளர்வாக இருந்தாலும் வோல் ஸ்ட்ரீட் அதன் நாடுகடந்த போட்டியாளர்களுடன் போட்டிய வேண்டி இருந்ததாலும் தான் அமெரிக்காவின் நெறிமுறைகள் அடிக்கடி தளர்த்தப்பட்டன என்றால் குறைவில்லை.

ஒரு நெருக்கடி ஏற்படும் சாத்தியக்கூறைத் தவிர்ப்பதற்காகவே அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட பெடரலின் நடவடிக்கைகள், முன்பினும் பெரிய பேரிடராக வெடித்த 2008 உலகளாவிய நிதி நெருக்கடிக்கான நிலைமைகளை மட்டுமே உருவாக்கின. பண வினியோகத்தை இன்னும் கூடுதலாக அதிகரிப்பதே பெடரலின் விடையிறுப்பாக இருந்தது.

அமெரிக்க அரசாங்கத்துடன் சேர்ந்து, அது பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்குப் பிணை வழங்கியதுடன், பின்னர் பென் பெர்னான்கே தலைமையில், பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடும் (quantitative easing - QE) திட்டத்தைத் தொடங்கியது, அதில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை வரலாற்றிலேயே மிகவும் குறைவாக வைக்க அரசு கடன்களைக் கொண்டு வந்தன.

பெடரல் அதன் அரசு கடன் கையிருப்பைச் சுமார் 800 மில்லியன் டாலரில் இருந்து சுமார் 4 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்தது, மலையளவு கடன் மற்றும் பாவனை மூலதனத்தை உருவாக்க வழிவகுத்த இது, மார்ச் 2009 இல் அதன் அடிமட்ட நிலையை எட்டிய நிலையில் வோல் ஸ்ட்ரீட் அதிகபட்ச உச்சத்திற்கு அதிகரித்திருந்ததில் பிரதிபலித்தது.

இதன் விளைவு என்னவென்றால், 2020 இன் தொடக்கத்தில் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட போது, அமெரிக்க அரசாங்கமும் உலகெங்கிலுமான அரசாங்கங்கள் அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகள் எடுப்பது, வோல் ஸ்ட்ரீட்டில் ஒரு சரிவை உருவாக்கி விடக் கூடாதென்று, அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுத்தன, அதுவே ஒட்டுமொத்த உலக நிதி அமைப்பு வரை விரிவாக்கப்பட்டது.

அரசு பத்திரங்கள் வாங்கப்படும் மற்றும் விற்கப்படும் நிதிச் சந்தை —உலக நிதி அமைப்பின் அஸ்திவாரமாக விளங்கும் இது— மார்ச் 2020 இல் முடங்கிய போது இந்த ஆபத்து பார்க்கப்பட்டது. பல நாட்களுக்கு, உலகின் மிகவும் பாதுகாப்பான நிதியச் சொத்திருப்பாகக் கருதப்படும் அமெரிக்க அரசு கடனைக் கூட வாங்க ஆளில்லாமல் இருந்தது.

பெடரலும் பிற மத்திய வங்கிகளும் பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடும் திட்டத்தை ஊக்க மருந்தாகப் பிரயோகித்து விடையிறுத்தன. பெடரல் மட்டுமே, ஏறக்குறைய ஒரே இரவில், அதன் நிதியச் சொத்திருப்பு கையிருப்புகளை இரண்டு மடங்குக்கும் அதிகமாக, 4 ட்ரில்லியன் டாலரில் இருந்து ஏறக்குறைய 9 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்து, எல்லா வடிவங்களில் இருந்த அரசு கடன் மற்றும் பெருநிறுவனக் கடன்களுக்குப் பொறுப்பேற்றது. மத்திய வங்கிகளால் நிதி அமைப்புக்குள் மொத்தம் சுமார் 13 ட்ரில்லியன் டாலர் பாய்ச்சிப்பட்டு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

ஆனால் வோல் ஸ்ட்ரீட்டைப் பாதுகாப்பதற்கும் நிதிய அமைப்பை 'காப்பாற்றுவதற்கும்' மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள், ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கின. கோவிட்-19 ஐ அகற்ற மறுத்ததால், விநியோகச் சங்கிலி நெருக்கடி ஏற்பட்டது. மத்திய வங்கிகளில் இருந்து ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ச்சப்பட்டதன் விளைவாக, பண்டங்கள் உட்பட எல்லா நிதி சொத்திருப்புகளிலும் நடந்த ஊகவணிகம் மிகப் பெரிய பெருநிறுவனங்களின் இலாப ஏய்ப்புகளுடன் சேர்ந்து, நான்கு தசாப்தங்களில் இல்லாத அதிகபட்ச பணவீக்க விகிதத்தைத் தூண்டியுள்ளது.

கடந்த காலத்தில் பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது ஏனென்றால், பணவீக்கம் 2 சதவீதத்திற்கும் குறைவாக மிகக் குறைவாக இருந்ததுடன், தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் ஒடுக்கப்பட்டன, இது உலகெங்கிலும் வரலாற்றிலேயே குறைவாக வேலைநிறுத்த நடவடிக்கைகள் குறைவதற்கும், தொடர்ந்து நிஜமான கூலிகளைக் குறைப்பதற்கும் வழிவகுத்தது.

நிலைமை இப்போது வியத்தகு முறையில் மாறி உள்ளது. உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரால் தூண்டிவிடப்பட்டு அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு விடையிறுப்பாக கூலி உயர்வுகளுக்கான போராட்டத்தில் நுழைந்து வருகிறார்கள். பள்ளிகள், மருத்துவமனை மற்றும் சுகாதார சேவைகள் மற்றும் தொழில்துறை முழுவதும் —பல தசாப்தங்களாக திணிக்கப்பட்டு, இந்த பெருந்தொற்றின் போது தீவிரப்படுத்தப்பட்ட— அதிகரித்தளவில் சகிக்கவியலாத வேலையிட நிலைமைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு தொழிலாளர்கள் கோரி வருகிறார்கள்.

இந்த வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி, அமெரிக்க பெடரல் தலைமையில் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கையில் ஒரு பிரதான மாற்றத்தை உருவாக்கி உள்ளது, அதேவேளையில் வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. 'பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறோம்' என்ற பதாகையின் கீழ் புதிய ஆட்சி முறை திணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய வங்கி அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளவாறு, விலைவாசிகளைக் குறைப்பதில் இது ஒன்றும் செய்யப் போவதில்லை.

1980 களின் முற்பகுதியில் வட்டி விகிதங்களை அதிகபட்சமாக உயர்த்திய பெடரல் தலைவர் பௌல் வோல்க்கரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஒரு மந்தநிலையைக் கொண்டு வருவதே நோக்கமாக உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் கூலி உயர்வுக்கான இயக்கத்தை நசுக்கி வர்க்க உறவுகளை மறுசீரமைக்க வோல்க்கர் எடுத்த நடவடிக்கைகள் 1930 களுக்குப் பிந்தைய மிகவும் ஆழமான மந்தநிலையைக் கொண்டு வந்தன.

ஆனால் கூலி உயர்வுக்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நசுக்குவது, நிதி மூலதனத்தின் ஸ்திரத்தன்மைக்கு எப்போதும் பெரும் ஆபத்தாக இருக்கும் என்பதால், எந்த விதத்திலும் அது மட்டுமே ஒரே நோக்கம் இல்லை. இந்த வர்க்கப் போர் அதைக் கடந்து செல்கிறது.

பங்கு விலைகளின் அதிகரிப்பு மற்றும் கடன் வளர்ச்சியால் மலை போல அதிகரித்து வரும் பாவனை மூலதனம் உள்ளார்ந்து தனக்குள் மதிப்பைக் கொண்டதில்லை. இறுதி பகுப்பாய்வில், அது முதலாளித்துவ உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உபரி மதிப்பின் மீது உரிமை கோருகிறது.

அகோர காட்டேரி போல நிதி மூலதனம் தின்று கொழுக்கும் உபரி மதிப்பு திரட்சியை என்ன விலை கொடுத்தாவது விரிவாக்க வேண்டும்.

இது கூலிகளை ஒடுக்குவது மட்டுமல்ல, மாறாக சமூக சேவைகளை அழிப்பதையும் உள்ளடக்கி உள்ளது, ஒட்டுண்ணித்தனமான நிதி மூலதனத்தின் நிலைப்பாட்டில் இருந்து, இது உபரி மதிப்பில் இருந்து கழித்துக் கொள்வதை உள்ளடக்கி உள்ளது இல்லையென்றால் அது அதிலிருந்து பெறுவதற்காக காத்திருக்கும்.

இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வர்க்கப் போரினது உந்துசக்தியின் அளவும் ஆழமும், உலகளாவிய அரசு மற்றும் பெருநிறுவன கடன், இப்போது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 350 சதவீதத்திற்கும் அதிகமாக அல்லது சுமார் 300 ட்ரில்லியன் டாலர் என்று கணக்கிடப்படுகிறது. இதற்கான தொகையைத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உபரி மதிப்பாக அதிகளவில் உறிஞ்ச வேண்டும் என்பதே நிதி மூலதனத்தின் கோரிக்கையாகும்.

பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கும் இது தான் பிரிட்டன் பத்திரச் சந்தை நெருக்கடியின் முக்கியத்துவம். இந்தத் திட்டநிரல் கடந்த வாரம் வாஷிங்டனில் நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் அரையாண்டு கூட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட அதன் நிதி கண்காணிப்பு அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டது.

அந்த அறிக்கையின் தலைமை ஆசிரியரான விட்டோர் காஸ்பரின் வார்த்தைகளில் கூறினால்: 'அதிக பணவீக்கம், அதிக கடன், உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் அதிகரித்த நிச்சயமின்மை என்ற சூழலில், நிதி மற்றும் பணக் கொள்கைக்கு இடையேயான ஒத்தத்தன்மை மிகவும் முக்கியமாகும் … இதன் அர்த்தம் வரவு-செலவுத் திட்டத்தை அதன் இறுக்கமான போக்கில் வைக்க வேண்டும்.”

இத்தகைய கோரிக்கைகளை மேற்கொள்ள தவறும் எந்த அரசியல் வகையறாவின் அரசாங்கமாக இருந்தாலும், அவர்கள் அதைச் செய்யும் வரை பத்திரச் சந்தைகளால் தண்டிக்கப்படுவார்கள்.

நிதி மூலதனத்தால் வழிநடத்தப்படும் ஆளும் வர்க்கங்கள் தெளிவான திட்டநிரலைக் கொண்டுள்ளன. அவர்களின் தணியாத கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிலாளர்களை வறுமையில் தள்ளுவதே அவர்களின் நோக்கமாகும். தொழிலாள வர்க்கம் அதன் மீது சுமத்தப்படும் பல்வேறு சீரழிவுகளுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிராக மற்றும் சமூகத்தின் சோசலிச மறுகட்டமைப்புக்கான தேவைக்காகவும் அது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்ற புரிதலோடு தொடங்கி, அது அதன் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தைக் கொண்டு விடையிறுக்க வேண்டும்.

Loading