பிரிட்டிஷ் பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் இராஜினாமா—பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு புரட்சிகர நெருக்கடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டிஷ் பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் பதவியேற்று வெறும் 45 நாட்களில் இராஜினாமா செய்திருப்பது பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தினது ஆட்சி நெருக்கடியை ஒரு புதிய தீவிரத்திற்கு கொண்டு வந்துள்ளது. பிரிட்டிஷ் அரசியல் ஒரு புரட்சிகர சூழ்நிலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகவும் குறுகிய காலமே பிரதம மந்திரியாக பதவியில் இருந்த ட்ரஸ், பழமைவாத அரசாங்கத்தின் பரந்த முறிவின் பாகமாக வீழ்ச்சி அடைந்துள்ளார். அடுத்த வார இறுதிவாக்கில், பிரிட்டன் வெறும் இரண்டு மாதங்களில் மூன்று பிரதம மந்திரிகளைக் கொண்டதாக ஆகிவிடும்.

பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் தனது இராஜினாமா உரையை No10 டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு வெளியே, அக்டோபர் 20, 2022 அன்று வழங்குகிறார் [Photo by Simon Dawson/No 10 Downing Street / CC BY-NC-ND 2.0]

அவர் இராஜினாமாவைத் தொடர்ந்து புதன்கிழமை மாலை மக்களவையில் சச்சரவான காட்சிகள் இருந்தன, பிளவு மீதான வாக்குகள் அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா வாக்குகளாக இடப்படுகிறதா என்பதில் டோரி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. சபையின் துணை கொறடா கிரெய்க் விட்டேக்கர், “நான் சரியான கோபத்தில் இருக்கிறேன், இனியும் சீரழிய விட மாட்டேன்,” என்று உரத்தக் குரலில் கத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. தலைமை கொறடா வெண்டி மோர்டன் அந்த தருணத்திலேயே இராஜினாமா செய்ததாகவும், மறுபரிசீலனை செய்யுமாறு ட்ரஸ் அவருடன் மன்றாடியவாறு அறையிலிருந்து அவரைப் பின்தொடர்ந்து சென்றதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அவர்களின் சக உறுப்பினர்களில் சிலர் அரசாங்கத்திற்காக வாக்களிக்க 'வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டு' வருவதாக கூறுகிறார்கள்.

வெறும் சில மணி நேரங்களுக்கு முன்னர், வாயில் வந்ததைப் பேசும் வலதுசாரி உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மன், “பிரகடன பொறுப்புறுதிகளைக் கௌரவிப்பதற்கான இந்த அரசாங்கத்தின் பொறுப்புறுதி மீது [அவருக்கு] தீவிர கவலைகள்' இருப்பதாக குறிப்பிட்டு, தலைமைத்துவத்துக்கு ஒரு சவாலாகச் சித்தரிக்கப்பட்ட கடுமையான ஓர் இராஜினாமா கடிதத்தை வழங்கி இருந்தார்.

12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னர், இன்னமும் பெரும்பான்மையோடு 71 ஆசனங்களைக் கொண்டுள்ள பிரிட்டனின் முக்கிய முதலாளித்துவக் கட்சியில் ஏற்பட்டுள்ள இத்தகைய பகிரங்கமான குழப்பம், அணுஆயுதப் போராக மாற அச்சுறுத்தி வரும் ரஷ்யா உடனான ஒரு போர் மற்றும் வாழ்க்கை தரங்களில் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சிக்கு மத்தியில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மீதுள்ள மிகப் பெரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்களின் விளைவாகும்.

வெவ்வேறு சூழ்நிலைகளில், இந்த ஆளும் கட்சியில் நிலவும் பதட்டங்களைத் தணிக்கவும் அல்லது அதைப் பிரதியீடு செய்யவும் மற்றும் நாடாளுமன்றத்தில் பிற்போக்குத்தனமான அணிவகுப்புக்குச் சற்று நியாயமான உணர்வைக் கொண்டு வரவும் நீண்ட காலத்திற்கு முன்னரே ஒரு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால் மிகவும் கட்டுப்பாடான நாடக பாணியில் அரங்கேற்றும் ஒரு விவகாரமாக இருந்தாலும் கூட ஒரு நாடாளுமன்ற தேர்தல் வெகுஜன போராட்டம் மற்றும் எதிர்ப்பைக் கட்டவிழ்த்து விடும் சாத்தியக்கூறால் ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. கூடுதல் எரிபொருள் விலைகள், வீட்டுச் செலவுகள் மற்றும் உணவு செலவுகள் ஆண்டுக்கு ஆயிரக் கணக்கான பவுண்டுகளுடன் குடும்பங்களை அச்சுறுத்துகின்றன, இரயில்வே, தபால் துறை, தொலைதொடர்பு, கல்வி மற்றும் கவுன்சிலின் நூறு ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் தூண்டப்பட்டு வருகின்றன.

ஒரு தேர்தலைத் தவிர்க்க பெரும்பிரயத்தனத்தில் உள்ள டோரி கட்சி, போரிஸ் ஜோன்சனை நீக்கிய அரண்மனை ஆட்சிக் கவிழ்ப்பு சதியை விட அதிக அப்பட்டமான மற்றொரு சதி மூலமாக ட்ரஸைப் பிரதியீடு செய்ய திட்டமிட்டு வருகிறது. வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக டோரி கட்சி உறுப்பினர்கள் மின்னணு முறையில் வாக்களிக்க ஒரு வெற்றியாளரை நிறுத்தும் நம்பிக்கையில், வேட்பாளர்களுக்கு வாக்குச்சீட்டில் இடம் பெற அவர்களுக்கு 100 சக உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.

இது உறுதியாகவில்லை. முன்னாள் சான்சிலர் ரிஷி சுனக் பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஆனால் புதிய சான்சிலர் ஜெர்மி ஹன்ட் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலர் பென் வாலெஸ் அதைச் செய்ய ஏற்கனவே சம்மதித்துள்ள நிலையில், பென்னி மோர்டான்ட் ஒதுங்கிக் கொள்ள ஒப்புக் கொள்கிறார் என்பதே இதன் அர்த்தமாகிறது. இது ட்ரஸின் நண்பரான மிகக் குறைந்த வரியில்லா சுதந்திரச் சந்தைப்படுத்துனர்கள் பிரேவர்மென் மற்றும் கெமி பேடெனோக் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பிளவுபட்ட வலதுக்கு எதிராக சுனக்கைக் கொண்டு வந்து நிறுத்தும். ஆனால் சம்பவங்களின் அசாதாரண ஒரு திருப்பமாக, உறுப்பினர் வாக்குகளில் ஜோன்சனால் ஜெயிக்க முடிந்தால் அவர் விருப்பத்திற்கு உரியவராக எழுந்து வருகிறார்.

வாலஸ் மற்றும் ஹன்ட் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பது, பிரிட்டனுக்கு மட்டுமல்ல மாறாக அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கும், பணயத்தில் உள்ள அரசியல் பிரச்சினைகளைப் பற்றிய பலமான சமிக்ஞையாக உள்ளது.

ட்ரஸ் புதன்கிழமை பதவியிழப்பை முகங்கொடுத்து இருந்ததால், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரில் பிரிட்டனின் தொடர்ச்சியான பங்களிப்புக்கு உத்தரவாதங்கள் வழங்க பென்டகன் உடனான ஓர் அவசரக் கூட்டத்தில் வாலெஸ் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். அந்த விவாதங்கள் 'வெளிப்படையாகவே தொலைபேசியில் பேச முடியாத' வகையில் இருந்ததாக வெளியுறவுத் துறைச் செயலர் ஜேம்ஸ் க்ளெவெர்லி விவரித்தார்.

செப்டம்பர் 23 இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் ட்ரஸ் செய்த நிதி ஒதுக்கீடுகள் இல்லாத வரி வெட்டுக்களுக்கு விடையிறுப்பாக, பிரிட்டிஷ் பொருளாதாரம் உள்ளடங்கிய உலகளாவிய நிதிய தன்னலக் குழுக்களுக்கு அக்டோபர் 31 இல் வழங்குவதற்காக, ஹன்ட், பொருளாதார முகப்பில், கடுமையான செலவின வெட்டுக்களைக் கொண்ட ஒரு நிதி அறிக்கையைத் தயாரித்து வருகிறார்.

ட்ரஸின் இராஜினாமாவினால் ஏதேனும் எதிர்மறை பொருளாதார தாக்கம் ஏற்படுமா என்று ஜனாதிபதி பைடெனிடம் கேட்கப்பட்ட போது, சிதறிப் பரவும் எதுவும் 'பாதிப்பு கொண்டதாக இருக்காது' என்றவர் கூறினார். அப்பெண்மணி 'ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு நல்ல பங்காளியாக இருந்ததாகவும், பிரிட்டிஷ்காரர்கள் அவர்களின் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்,” என்று வலியுறுத்தினார். “உக்ரேன் மீதான அதன் போரில் ரஷ்யாவைக் கணக்கில் கொண்டு வருவதில்' ட்ரஸின் 'பங்களிப்புக்காக' வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று அவருக்கு நன்றி கூறியதுடன், “பிரிட்டன் அரசாங்கத்துடன் நெருக்கமான கூட்டுறவை' தொடர உறுதியளித்தது.

தொழிற்சங்க அதிகாரத்துவமும் தொழிற் கட்சியும் வர்க்கப் போராட்டத்தைத் தொடர்ந்து ஒடுக்காமல் இருந்திருந்தால், இந்த மக்கியவெல்லியன் சூழ்ச்சிகள் (Machiavellian) எதுவும் சாத்தியமாகி இருக்காது.

வரவிருக்கும் மாதங்களில் இரண்டு மில்லியன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய அல்லது அதன் மீது வாக்களிக்கத் தயாராக இருப்பதாக புதன்கிழமை Independent பத்திரிகை குறிப்பிட்டது — இந்த ஓர் இயக்கம் இப்போது வெஸ்ட்மின்ஸ்டரில் சீரழிந்து கொண்டிருக்கும் அரசாங்கம் ஒருபுறம் இருக்கட்டும், எந்தவொரு அரசாங்கத்தையும் பதவியிலிருந்து கீழிறக்கி விட முடியும்.

ஆனால் இதற்கு பதிலாக, வேலைநிறுத்த நடவடிக்கையைக் கோரும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே அணிதிரட்டப்பட்டு, வெவ்வேறு பிரச்சினைகளுக்காக வெவ்வேறு நாட்களில் நடவடிக்கையில் இறங்க பிரித்து விடப்படுகிறார்கள்.

தொழிற் கட்சி தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மருடன் தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) நெருக்கமாக ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறது, அவர் இந்த கொந்தளிப்பான நெருக்கடியில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதன்மை நபராக செயல்பட்டு வருகிறார்.

ஒரு பொதுத் தேர்தலுக்கான அவரது அழைப்பு, இப்போது மற்ற ஒவ்வொரு நாடாளுமன்றக் கட்சியாலும் எதிரொலிக்கப்படுகின்ற நிலையில், அது தவிர்க்க முடியாததாக ஆகும் போது வேறொரு அரசாங்கத்திற்குச் சுமூகமாக கைமாற்றுவதைச் செய்ய தொழிற் கட்சிக்கு ஒரு பரிந்துரையாக உள்ளது, இது டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் 'தேசபற்றான கடமையை' கௌரவிக்கவும் மற்றும் அவர்கள் கட்சியை விட 'தேசத்தை' முன்னிறுத்தவும் முடிவெடுத்தால் மட்டுமே ஒரு தேர்தல் சாத்தியம் என்பதை அவர் 'ஏற்றுக் கொண்டதில்' இருந்தே முன்னுதாரணமாக எடுத்துக் காட்டப்படுகிறது.

ஸ்டார்மரின் வடிவம் என்னவென்றால், அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி பைடென் அமெரிக்காவில் இரயில்வே தொழிலாளர்கள் மீது கடுமையான ஓர் ஒப்பந்தத்தை திணித்து வருவதைப் போன்ற மற்றும் ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) சான்சிலர் ஓலஃப் ஷோல்ஷ் நூறு ஆயிரக் கணக்கான இரசாயன ஆலைத் தொழிலாளர்கள் மீது கடுமையான சம்பள வெட்டுக்களைத் திணித்து வருவதைப் போன்ற ஒரு வகையான, அரசாங்கம், பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையேயான ஒரு பெருநிறுவன கூட்டணி வடிவில் உள்ளது. ட்ரஸ் இராஜினாமா செய்த அன்றைய நாள் தொழிற் கட்சி தலைவர் TUC காங்கிரஸில் கூறுகையில், “புட்டின் போன்ற சர்வாதிகாரிகளிடம் இருந்து' பிரிட்டனை பாதுகாப்பது உட்பட 'தேசத்திற்கு உண்மையான ஒரு கூட்டு உடன்படிக்கையில்' தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுடன் தொழிற் கட்சி செயல்பட வேண்டும் என்றார்.

ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தின் கீழ் விஷயங்கள் நல்ல விதமாக இருக்கும் என்ற வாக்குறுதிகளைப் பயன்படுத்தி, பரிசீலனைகளில் இருந்து வேலைநிறுத்தங்களை விலக்கி வைத்து தலைமையின் மாற்றத்திற்குத் தயாரிப்பு செய்யுமாறும், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் திட்டநிரலைத் தொழிற் கட்சி நடைமுறைப்படுத்துவதற்காக தொழிலாள வர்க்கம் மீது பொலிஸ் வேலைகளைத் தொடருமாறும் ஸ்டார்மர் தொழிற்சங்கங்களுக்கு கூறி வந்தார்.

டோரி கட்சிக்குள் எந்தத் தீர்வும் காணப்படவில்லை என்றால் ஒரு பொதுத் தேர்தலைத் தவிர்க்க, “தேசிய நலன்களை' கொண்டு நியாயப்படுத்தப்படும், தொழிற் கட்சி மற்றும் டோரி அமைச்சர்களின் ஒரு தேசிய அரசாங்கமே நிஜமான ஒரு சாத்தியக்கூறாக உள்ளது.

ட்ரஸ்ஸின் இராஜினாமாவிற்கு விடையிறுத்து, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு ட்வீட் செய்தார், “ஆறு வாரங்கள் பதவியில் இருந்த லிஜ் ட்ரஸின் இராஜினாமா, பிரிட்டன் வர்க்க ஆட்சியின் அடிப்படை நெருக்கடியின் வளர்ச்சியை கூடுதலாக உறுதிப்படுத்துகிறது. மார்க்சிஸ்டுகள் விளக்கி உள்ளதைப் போல, ஆளும் வர்க்கத்தால் பழைய பாணியில் ஆட்சி செய்ய முடியாத போது ஒரு புரட்சிகரமான சூழல் உருவாகிறது.

“இந்த கட்டத்தில், ஆளும் வர்க்கத்தால் ஆட்சி செய்யவே முடியவில்லை. அதன் உயிர்பிழைப்பு இப்போது தீவிர பிளேயரிசவாதியான கீர் ஸ்டார்மர் தலைமையில் உள்ள தொழிற் கட்சியின் ஆற்றலையும், போர்குணத்துடன் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் குரல்வளையை நெரிக்க தொழிற்சங்க எந்திரத்தையும் சார்ந்துள்ளது.

'ஒரு புரட்சிகர நெருக்கடியின் மற்றொரு இன்றியமையா கூறுபாடு — அதாவது தொழிலாள வர்க்கம் பழைய பாணியில் நிச்சயமாக வாழ முடியாது என்பதும் உள்ளது. இந்த நெருக்கடியில் அதன் தலையீடு தான் இப்போது முக்கியமான பிரச்சினையாகும். ஒரு பொதுத் தேர்தலுக்கான கோரிக்கை, சுயாதீனமான வெகுஜன நடவடிக்கைக்கான அழைப்புகளை நோக்கி திருப்பி விடப்பட வேண்டும்.”

ஒவ்வொன்றும், டோரி மற்றும் தொழிற் கட்சி சதிகாரர்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டைச் சார்ந்துள்ளது.

ஜோன்சனுக்கு எதிரான முதல் அரண்மனை ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குள் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதன் மூலம், தொழிலாளர்களின் நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு பொதுத் தேர்தலுக்காக போராடுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இரும்புப் பிடியை உடைப்பதற்கும், முடிவெடுக்கும் அதிகாரத்தை எங்கே இருக்க வேண்டுமோ அங்கே அதாவது தொழிற்சாலை களத்தில் இருக்கச் செய்யவும், சாமானியத் தொழிலாளர் குழுக்களைத் தேர்ந்தெடுக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்யும். அனைத்திற்கும் மேலாக, உலகப் போர் கொள்கை ஆளும் வர்க்கத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாலும், அதன் தாக்கங்கள் பரந்தளவில் புரிந்து கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் அஞ்சுவதாலும் ஆளும் வர்க்கத்தின் கன்னை மோதல்களுக்குள் பேசப்படாமல் இருக்கும் இந்த உலகப் போர் கொள்கையை நாங்கள் அம்பலப்படுத்த முயல்வோம். ஒரு தேர்தலை நாங்கள் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்கப் பயன்படுத்துவோம்.

Loading