முன்னோக்கு

அபாயகரமான புதிய கோவிட்-19 துணைமாறுபாடுகள் பாரிய இலையுதிர்-குளிர்கால எழுச்சிக்கு அச்சுறுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர் காலம் தொடங்கி ஒரு மாதத்தில், கோவிட்-19 தொற்றுநோயின் அடுத்த உலகளாவிய அலை தொடங்கிவிட்டது என்பது தெளிவாகிறது.

உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரிசோதனைகளும் தரவு அறிக்கையிடலும் அகற்றப்படும் காரணத்தால், உத்தியோகபூர்வ நோய்தொற்று புள்ளிவிபரங்கள் இப்போது பெரும்பாலும் மதிப்பற்றவையே. சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) தினசரி கோவிட்-19 நோய்தொற்றுக்களின் உண்மையான எண்ணிக்கையின் மிகத் துல்லியமான மதிப்பீடு, புதன்கிழமை உலகளவில் 21 மில்லியன் மக்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது, அதாவது செப்டம்பர் 27 அன்று 17 மில்லியன் தொற்றுநோய்கள் என்ற மிக சமீபத்திய எண்ணிக்கையில் இருந்து 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்கு மத்தியில், உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கினர் தொற்றுநோய்க்கான சரியான சிகிச்சையைக் கண்டுபிடித்துள்ளனர்: அது, அதை வெறுமனே புறக்கணித்து, மூடிமறைக்கவும் என்பதுதான். அதிகபட்சமாக, ஒளிபரப்புச் செய்திகள் மாதத்திற்கு ஒருமுறை தொற்றுநோயைப் பற்றி சுருக்கமாக செய்திகள் வழங்குகின்றன, அதே நேரத்தில் அச்சு ஊடகங்கள் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பொய்களை எதிரொலிக்கின்றன.

இந்த பிரச்சாரம் வெகுஜன நனவில் ஒரு பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் உலகளாவிய சமூகம் தற்போதைய எழுச்சியை எதிர்கொள்ள முற்றிலும் தயாராக இல்லை. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் “தொற்றுநோய் முடிந்துவிட்டது,” என்று கூறியுள்ள நிலையில், பலர் மிக அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தவறிவிட்டனர். தவறாக வழிநடத்தப்பட்ட பொதுமக்களின் கவனக்குறைவான செயல்களை கவனிக்கும்போது, பீட்டர் ப்ரூகெலின் ‘The Blind Leading the Blind’ என்ற புகழ்பெற்ற ஓவியம் தான் நினைவுக்கு வருகிறது.

ஆனால் அரசியல் தலைவர்கள் குருடர்கள் அல்ல. வன்மம் மிக்க முன்யோசனையுடன், தொற்றுநோயியல் நிபுணர்களின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை அவர்கள் புறக்கணித்துள்ளனர், மற்றும் உயிரை விட பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் இலாப நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, தீவிர வலதுசாரி பிரமுகர்கள் மக்களிடையே ஆழ்ந்த குழப்பத்தை விதைத்துள்ளனர், அதேவேளை கடந்த ஆண்டு முழுவதும் உலகெங்கிலும் உள்ள தாராளவாத அரசாங்கங்கள் தீவிர வலதுசாரிகளால் வழிநடத்தப்பட்ட கொலைகார ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ மூலோபாயத்தை வெளிப்படையாகப் பின்பற்றின. உலகம் இன்னும் ஆபத்தான சூழ்நிலைக்குள் நுழையும் போது, இந்தக் கொள்கைகளின் விளைவுகள் உணரப்படுகின்றன.

தற்போது அதிகரித்து வரும் நோய்தொற்று அலையானது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து காணப்பட்ட முந்தைய அலைகளைப் போலல்லாமல், பல விஞ்ஞானிகளுக்கு ஆழ்ந்த கவலையளிப்பதாக அது உள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் கோவிட்-19 நோய்தொற்று தடையின்றி பரவியதன் விளைவாக, ஓமிக்ரோன் மாறுபாடு வெவ்வேறு பிறழ்வு தோற்ற வடிவங்களுடன் நூற்றுக்கணக்கான துணைமாறுபாடுகளை உருவாக்கி, நிபுணர்கள் ‘variant soup’ என்று அழைத்ததை உருவாக்குகிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

மிகுந்த கவலையளிப்பது என்னவென்றால், மற்ற அனைத்து ஓமிக்ரோன் துணைமாறுபாடுகளை விடவும் அதிக நோயெதிர்ப்பு-தவிர்க்கும் திறன் மற்றும் தொற்றும் தன்மை கொண்ட உச்சபட்சம் பிறழ்வடைந்த ‘தப்பிக்கும் துணைமாறுபாடுகளின்’ தொகுப்பு உருவாவதுதான். குறிப்பாக கவலைக்குரியது, BQ.1.1, XBB போன்ற துணைமாறுபாடுகள் வரவிருக்கும் வாரங்களில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் எனக் கருதப்படுகிறது. சிங்கப்பூரில், XBB இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆதிக்கம் செலுத்தியது, மேலும் நோய்தொற்றுக்கள் மற்றும் மறுதொற்றுக்களின் பாரிய எழுச்சியை அங்கு தூண்டி வருகிறது.

இந்த இரண்டு துணைமாறுபாடுகளும் மற்றவையும் கடைசியாக எஞ்சியுள்ள Evusheld மற்றும் Bebtelovimab போன்ற மோனோக்ளோனல் ஆன்டிபாடி மருந்துகளை பயனற்றதாக்கும் என்பது, உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்களை கடுமையான நோய் தொற்றிக் கொள்ளும் மற்றும் அவர்கள் இறந்து போகும் அபாயத்திற்கு அச்சுறுத்துவதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நிபுணர்களின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று, நெடுங்கோவிட் நோய்தொற்றுக்கள் பெருகிவருவதாகும், இது உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களையும் பாதிக்கும் நீண்ட அறிகுறிகளின் பரந்த நிறமாலை ஆகும். மருத்துவத்திற்கான வாஷிங்டன் பல்கலைக்கழக பள்ளியைச் சேர்ந்த டாக்டர். ஜியாத் அல்-அலி தலைமையிலான பிரசுரத்திற்கு முந்தைய ஆய்வறிக்கை, ஒருமுறை கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, மறுதொற்று ஏற்பட்டவர்களுக்கு அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு அபாயம் இருமடங்கு அதிகமாக உள்ளது, அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அபாயம் மும்மடங்காகும், மற்றும் குறைந்தது ஒரு நெடுங்கோவிட் அறிகுறியாவது அவருக்கு ஏற்படுவதற்கும் இருமடங்கு அபாயம் உள்ளது என்பதைக் கண்டறிந்தது. ‘இரண்டாவது நோய்தொற்றுக்கு முன்னர், தடுப்பூசி போடாதவர்கள், 1 தடுப்பூசி அளவு அல்லது 2 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளை பெற்றவர்கள் உட்பட துணைக்குழுக்களில் உள்ள ஆபத்துகள் தெளிவாகத் தெரிந்தன’ என்று ஆய்வு குறிப்பிடுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், XBB துணைமாறுபாடு, சிங்கப்பூரில் மறுதொற்றுக்கள் ஆகஸ்ட் நடுப்பகுதியில் வெறும் 5 சதவிகிதமாக இருந்ததை அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் 17.5 சதவிகிதமாக தூண்டியுள்ளது, இந்த முன்னோடியில்லாத அதிகரிப்பு புதிய “தப்பிக்கும் துணைமாறுபாடுகளின்” ஆபத்துக்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

புதன்கிழமை எச்சரிக்கை செய்யும் சுருக்க செய்தியாளர் கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் (WHO) கோவிட்-19 தொழில்நுட்ப முன்னணி நிபுணர் டாக்டர். மரியா வான் கெர்கோவ், XBB துணைமாறுபாடு “குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு-ஏய்ப்பு திறனைக் காட்டுகிறது” என்று வலியுறுத்தினார். மேலும் அவர் இவ்வாறு தொடர்ந்தார்: “உலகளவில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் கடுமையான நோய் மற்றும் மரணத்தைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்வது பற்றியே நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த வைரஸ் எந்த அளவிற்கு புழக்கத்தில் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அது பிறழ்வு காண்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.”

மேலும் அவர், “நாம் இந்த வைரஸை கண்காணிக்க முடிய வேண்டும். ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கான நோய்தொற்றுக்கள் பதிவு செய்யப்படுகின்றன, ஆனால் நமது கண்காணிப்பு குறைந்துவிட்டது, பரிசோதனைகள் குறைந்துவிட்டது, வரிசைப்படுத்தல் குறைந்துவிட்டது, மேலும் அதற்கு பதிலாக, உலகெங்கிலும் உள்ள நமது நிபுணர்களின் வலையமைப்புகளுடன் இணைந்து, இவற்றை [துணைமாறுபாடுகளை] மதிப்பிடுவதில் ஒரு அமைப்பாக நமது திறன் மட்டுப்பட்டுள்ளது” என்று நிறைவு செய்தார்.

டாக்டர். கெர்கோவின் கருத்துக்கள் உலகம் முழுவதும் செயல்படுத்தப்படும் தொற்றுநோய் கொள்கைகள் மீதான பேரழிவு தரும் குற்றச்சாட்டாகும். ஏற்கனவே உள்ள தடுப்பூசிகள் கடுமையான நோய் மற்றும் இறப்பைத் தடுப்பதற்கான வாய்ப்பை தற்போதைய ‘variant soup’ தடுத்தாலும், வைரஸின் தொடர்ச்சியான பரவலானது அதற்கு பில்லியன் கணக்கான நோய் உயிர்ப்பிகளை வழங்குகிறது, அதில் அது தொடர்ந்து பிறழ்வடைந்து, மேலும் உயிருக்கு ஆபத்தான விகாரமாக உருவெடுக்கும், அதேவேளை பிறழ்வுகளைக் கண்காணிக்கும் உலக சுகாதார அமைப்பின் திறன் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் உலக சமுதாயம் வரவிருக்கும் புயலில் கண்மூடித்தனமாக பறக்கிறது என்று சொல்வது ஒரு பெரிய குறையாகும். மாறாக, இன்னும் துல்லியமான விளக்கம் என்னவென்றால், விமானி வேண்டுமென்றே விமான எந்திரத்தின் எரிபொருளைத் தூக்கியெறிந்து, தரையிறங்கும் இயக்கச் சக்கரத்தை நாசமாக்கி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை வீட்டிற்குச் செல்லும்படி கூறுவதற்கு இது ஒப்பாகும்.

பைடென் நிர்வாகத்தின் கட்டளைகளைப் பின்பற்றி, வியாழன் அன்று, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் தினசரி அறிக்கையிடலை வாராந்திர அறிக்கையிடலாக மாற்றியது. வெள்ளிக்கிழமை, நிறுவனம் இலவச முகக்கவசங்களை விநியோகிப்பதற்கான அதன் வரையறுக்கப்பட்ட திட்டத்தை அமைதியாக முடித்துக் கொண்டது. கடந்த வாரம், தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர். எரிக் ஃபீகல்-டிங், BQ.1, BQ.1.1 துணைமாறுபாடுகள் அமெரிக்கா முழுவதும் வேகமாக ஆதிக்கம் செலுத்தி வருவதைக் காட்டும் தரவை CDC நிறுத்தி வைத்துள்ளதாகவும், இப்போது அனைத்து வகைகளின் காரணமான பாதிப்பில் 11.4 சதவீதம் புதிய கூட்டு பாதிப்பை இவை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். நியூயோர்க்கில், இந்த புதிய துணைமாறுபாடுகள் அவற்றின் மிகவுயர்ந்த பாதிப்பு விகிதாச்சாரங்களை எட்டியுள்ளன, கடந்த வாரத்தில் மட்டும் கோவிட்-19 மருத்துவமனை அனுமதிப்புக்களின் அளவு 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஐரோப்பா முழுவதும் இதேபோன்ற செயல்முறைகள் தான் தொடர்கின்றன, அங்கு கோவிட்-19 நோய்தொற்றுக்கள், மறுதொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்கள் என அனைத்தும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. ஜேர்மனியில், அக்டோபர்ஃபெஸ்ட் மற்றும் அரசியல்வாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட பிற பெரிய நிகழ்வுகள் இப்போது BA.5 நோய்தொற்றுக்களின் இரண்டாவது அலையை தூண்டியுள்ளன, இது மருத்துவமனைகளை நெருக்கடியின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது. திங்கட்கிழமை முதல், நாடு முழுவதும் 680 கோவிட்-19 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன, இது இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட 60 சதவீதம் அதிகமாகும், மற்றும் நிபுணர்கள் புதிய துணைமாறுபாடுகள் ஏற்கனவே உள்ள மோசமான சூழ்நிலையை இன்னும் அதிகம் மோசமாக்கும் என்று எச்சரிக்கின்றனர். பிரான்சில், BQ.1, BQ.1.1 துணைமாறுபாடுகள் தான் இப்போதுள்ள அனைத்து நோய்தொற்றுக்களில் பெரும்பகுதியை உருவாக்கியுள்ளன, கோவிட்-19 இறப்புக்களும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.

அதிக விஞ்ஞான புரிதல் இல்லாததற்கு தவறான தகவல்கள் அளிக்கப்பட்ட பொதுமக்களை குறை சொல்லக் கூடாது. தவறான தகவல்கள் அளித்தலும் பலவீனப்படுத்தும் அவநம்பிக்கையும் தொற்றுநோய் விவகாரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, அரசாங்கத்தின் பிரச்சாரத்தை எதிர்ப்பதற்கும், இன்றுவரை சாத்தியமானதாகவும் அவசியமானதாகவும் உள்ள பூஜ்ஜிய-கோவிட் ஒழிப்பு மூலோபாயத்தின் விஞ்ஞானம் குறித்து தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் கற்பிப்பதற்கும் ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிட்டத்தட்ட சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னர், அக்டோபர் 24, 2021 அன்று, உலக சோசலிச வலைத் தளமும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-RFC) இணைந்து, தொற்றுநோயைத் தடுப்பதற்கான உலகளாவிய ஒழிப்பு மூலோபாயத்தை கோடிட்டுக் காட்டிய முன்னணி விஞ்ஞானிகளின் குழுவை ஒன்றிணைத்து ஒரு சக்திவாய்ந்த இணையவழி கூட்டத்தை நடத்தியது. 6.2 மில்லியன் அதிகப்படியான இறப்புக்களை எதிர்கொண்ட கடந்த ஆண்டின் பயங்கரமான அனுபவம், இந்த நிகழ்வை இன்னும் பெரிய முக்கியத்துவம் கொண்டதாக்கியது. தொற்றுநோயைத் தடுக்க எதுவும் செய்ய முடியாது என்ற பொய்யை இந்த இணையவழி கூட்டம் முழுமையாக மறுத்து, மில்லியன் கணக்கான உயிர்களை இன்னும் கூட காப்பாற்ற முடியும் என்பதை நிரூபித்தது.

கடந்த ஆண்டில், தொற்றுநோய் கொள்கைகளின் பொறுப்பற்ற தன்மை உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரின் களத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது, இது அணுசக்தி பேரழிவு வெடிக்க அச்சுறுத்துவதை பைடென் கூட ஒப்புக்கொண்டார். முடிவில்லாத கோவிட்-19 நோய்தொற்று அலைகளால் விளைந்த பாரிய பணியாளர் பற்றாக்குறைக்குப் பின்னர், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள் நிலைகுலைந்து போயின. உழைக்கும் வர்க்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் வரவிருக்கும் குளிர்காலம் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்.

முதலாளித்துவம் என்பது ஒரு காலாவதியான, அராஜக சமூக அமைப்பாகும், இது மனிதகுலத்திற்கு எதிர்காலத்தை வழங்காது, எனவே ஒரு திட்டமிடப்பட்ட உலக சோசலிச பொருளாதாரம் கொண்டு அது மாற்றப்பட வேண்டும். இந்நிலையில், சர்வதேச தொழிலாள வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பணி என்னவென்றால், தொற்றுநோயை நிறுத்துவதற்கும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சோசலிச அடித்தளத்தில் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒரு பாரிய உலகளாவிய இயக்கத்தை அது வளர்த்தெடுக்க வேண்டும்.

Loading