முன்னோக்கு

லியோன் ட்ரொட்ஸ்கியும் 20 ஆம், 21 ஆம் நூற்றாண்டுகளின் புரட்சிகர மூலோபாயமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 20, 1922 அன்று லியோன் ட்ரொட்ஸ்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மாஸ்கோ அமைப்பின் அங்கத்தவர்களுக்கு முன்னர் தனது சிறந்த அரசியல் உரைகளில் ஒன்றை நிகழ்த்தினார். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நவம்பர் 5, 1922 இல் தொடங்கிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் நான்காவது மாநாட்டின் தொடக்கத்தை எதிர்பார்த்து இந்த உரை வழங்கப்பட்டது.

தொழிலாளர் சபைகளுக்கு (சோவியத்துகளுக்கு) அதிகாரத்தை மாற்றி, வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசை உருவாக்கிய போல்ஷிவிக் கட்சியின் தலைமையிலான தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய 1917 அக்டோபர் புரட்சியின் ஐந்தாவது ஆண்டு நிறைவுடன் இந்த மாநாடும் ஒன்றுகூடிவந்தது. போல்ஷிவிக் வெற்றியானது கம்யூனிஸ்ட் (மூன்றாவது) அகிலத்தின் உருவாக்கத்திற்கு ஒரு மகத்தான உத்வேகத்தை அளித்தது. இது மார்ச் 1919 இல் அதன் முதல் காங்கிரஸை நடத்தியது. அந்த நேரத்தில் போல்ஷிவிக் ஆட்சி முற்றுகையின் கீழ் இருந்தது. புரட்சியின் கழுத்தை நெரிக்க உலக ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடனான எதிர்ப்புரட்சிப் படைகளுக்கு எதிராக போராடியது. ஆனால் 1922 அளவில், எதிர் புரட்சி படைகள் செம்படையால் தோற்கடிக்கப்பட்டன. அதன் முதன்மைத் தளபதியான லியோன் ட்ரொட்ஸ்கியை விட சோவியத் ஒன்றியத்துக்குள் அரசியல் அதிகாரமும் கௌரவமும் உள்ளவர்களில் லெனின் மட்டுமே மேலோங்கியிருந்தார்.

லியோன் ட்ரொட்ஸ்கி

தொழிலாளர்களின் அரசு தப்பிப்பிழைத்தாலும் போல்ஷிவிக் ஆட்சியானது அக்டோபர் புரட்சிக்கு முந்திய மூன்று ஆண்டுகால உலகப் போரின் பொருளாதார அழிவு மற்றும் கூடுதல் மூன்று ஆண்டுகால உள்நாட்டுப் போரின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், சோவியத் ஆட்சியானது பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற முன்னேறிய முதலாளித்துவ நாட்டில் அல்லாது பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பின்தங்கிய ரஷ்யாவில் நிறுவப்பட்டது.

1917 அக்டோபர் புரட்சிக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை விரிவுபடுத்தியதில் தொழிலாள வர்க்கம் ஒரு பின்தங்கிய நாட்டில் அதிகாரத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தார். ஆனால் ட்ரொட்ஸ்கியோ, லெனினோ, அல்லது போல்ஷிவிக் கட்சியோ சோசலிசத்தை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய ஒரு தேசிய அரசின் எல்லைக்குள் கட்டியெழுப்ப முடியும் என்று நம்பவில்லை.

ரஷ்யாவில் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதை அவர்கள் ஒழுங்கமைத்தபோதும், லெனினும் ட்ரொட்ஸ்கியும் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியின் தலைவிதி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை பொறுத்தது என்று வலியுறுத்தினர். போல்ஷிவிக்குகளின் அரசியல் கணப்பீடுகளில் உலக சோசலிசப் புரட்சியை மத்தியில் இருத்தியமை கற்பனாவாத பகல் கனவின் வெளிப்பாடு அல்ல. 1914-1918 உலகப் போர், ஒரு உலக அமைப்பாக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்து வெளிப்பட்டது. இது பொருளாதார நெருக்கடியையும் சமூக மோதல்களையும் துரிதப்படுத்தியதுடன் தீவிரப்படுத்தியது. இது மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா முழுவதும் பரவிய போர்க்குணமிக்க மற்றும் வெளிப்படையான புரட்சிகர தொழிலாள வர்க்க போராட்டங்களின் பாரிய அலையை உருவாக்கியது.

ஆனால் ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிற நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் புரட்சிகர அலைக்கு எதிராக கடுமையாகப் போராடின. இதனால் சோவியத் ஒன்றியம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர் அரசாகவே இருந்தது. இது போல்ஷிவிக் ஆட்சியை சோவியத் ஒன்றியத்திற்குள் புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்க நிர்ப்பந்தித்தது. இது சோவியத் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக முதலாளித்துவ நடவடிக்கைகளின் மட்டுப்படுத்தப்பட்ட புதுப்பித்தல்களை ஏற்றுக்கொண்டது.

1921 ஆம் ஆண்டு கம்யூனிச அகிலத்தின் 3வதுமாநாட்டில்ட்ரொட்ஸ்கி

1921 ஆம் ஆண்டு கம்யூனிச அகிலத்தின் மூன்றாவது மாநாட்டில், லெனினும் ட்ரொட்ஸ்கியும் முக்கிய பாத்திரங்களை வகித்த ரஷ்ய பிரதிநிதிகள் குழு, புதிதாக நிறுவப்பட்ட ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளை தொழிலாள வர்க்கத்தில் தங்கள் ஆளுமையை நிலைநிறுத்த ஒரு நீடித்த போராட்டத்தை நோக்கி திருப்பிவிட போராடினர். இந்த மறுநோக்குநிலையும் அரசியல் கற்பித்தலும் நான்காவது காங்கிரசின் போதும் தொடர வேண்டி இருந்தது.

ட்ரொட்ஸ்கியின் அக்டோபர் 20 உரை, புதிய கம்யூனிச அகிலம் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய ஒரு அசாதாரண பகுப்பாய்வாகும். நான்காவது மாநாட்டுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் அந்த உரையில் கையாளப்பட்ட பல பிரச்சினைகள், மாநாட்டில் ட்ரொட்ஸ்கி வழங்கிய சிறப்புமிக்க மூன்று மணி நேர அறிக்கையில் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டன. அந்த ஒரு நாளில், நவம்பர் 14, 1922 அன்று ட்ரொட்ஸ்கி ஒன்பது மணி நேரம் உரையாற்றினார். முதலில் ஜேர்மன் மொழியிலும், பின்னர் பிரெஞ்சு மொழியிலும், இறுதியாக ரஷ்ய மொழியிலும் தனது அறிக்கையை வழங்கினார்.

உலக ஏகாதிபத்தியத்தின் முன்னேறிய மையங்களில் இல்லாமல் பின்தங்கிய ரஷ்யாவில் தனது முதல் பெரிய வெற்றியை அடைந்த உலக சோசலிசப் புரட்சியின் முரண்பாடான வளர்ச்சியை ட்ரொட்ஸ்கி ஆய்வு செய்தார்.

அமெரிக்கா போன்ற முன்னேறிய நாட்டோடு ஒப்பிடும்போது, ரஷ்யாவில் புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கின் அடிப்படை வேறுபாட்டை அவர் குறிப்பிட்டார். ரஷ்யாவில் இருந்த பாரிய பிரச்சனை அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல, மாறாக முதலாளித்துவ அரசு தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரத்தை பாதுகாப்பதுதான் பெரும் பிரச்சனையாக இருந்தது.

முன்னேறிய நாடுகளில், அதிகாரத்தை கைப்பற்றுவது மிகவும் கடினமானதாக இருக்கும், ஏனெனில் 'முதலாளித்துவம் மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டும் அனுபவம் வாய்ந்ததாகவும் இருந்தது. ஏனெனில் அங்கு குட்டி முதலாளித்துவ வர்க்கம் பெரிய முதலாளித்துவ பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டு, அதன் விளைவாக, மிகவும் சக்திவாய்ந்ததாகவும் அனுபவம் வாய்ந்ததாகவும் இருந்தது. …”

ரஷ்ய ஆளும் வர்க்கம் தூக்கியெறியப்படுவதை திகிலுடன் கண்ட நிலையில், முன்னேறிய நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகர சோசலிச இயக்கத்தை அழிக்க 'எதிர்ப்புரட்சிக் கும்பல்களை' ஆயுதபாணியாக்குகிறது என தீர்க்கதரிசனமாக ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்.

இத்தாலியில் முசோலினியின் எழுச்சியின் அர்த்தத்தை விளக்கிய ட்ரொட்ஸ்கி, பாசிசத்தை 'நாட்டினை அடித்துச்சென்ற பாரிய வேலைநிறுத்த அலைகளால், செப்டம்பர் 1920 நாட்களில் அது அனுபவித்த அச்சத்திற்கு முதலாளித்துவ வர்க்கம் செய்த பழிவாங்கலும் பழிதீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையும்' என்று விவரித்தார்.

ஆனால் புரட்சிகர இயக்கம் ஏன் தோல்வியடைந்து பாசிசத்தின் எழுச்சிக்கு வழிவகுத்தது? 'அங்கு எது இல்லாமல் இருந்தது?' என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார். ட்ரொட்ஸ்கி கூறினார்: “அரசியல் முன்நிபந்தனை, அகநிலை முன்நிபந்தனை அதாவது, பாட்டாளி வர்க்கத்தால் நிலைமையை அறிந்துகொள்வது இல்லாதிருந்தது என்றார்.

'அங்கு இல்லாதிருந்தது, ஒரு எழுச்சிக்கான அமைப்புரீதியான, தொழில்நுட்பரீதியான தயாரிப்பு, தூக்கியெறிதல், அதிகாரத்தை கைப்பற்றுதல் மற்றும் பலவற்றிற்காக நிலைமையை பயன்படுத்திக்கொள்ள முடியாதிருந்த பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலுள்ள ஒரு அமைப்பாகும். அதுதான் அங்கு இல்லாது இருந்தது”.

பெரும் சமூக-பொருளாதார மற்றும் வரலாற்று செயல்முறைகளின் தவிர்க்க முடியாத மற்றும் முழுமையாக கணிக்கக்கூடிய முடிவை வலியுறுத்திய இயந்திரவியல் சம்பிரதாயவாதத்தை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். 'வரலாற்று சக்திகளின் இயங்கியலில்', மார்க்சிச கட்சியின் செல்வாக்கு மற்றும் தலைமையில் தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கை தீர்க்கமானது.

லெனினும் இடதுபக்கம், ட்ரொட்ஸ்கியும்

கம்யூனிச அகிலத்தின் (கொமின்டேர்ன் என்றும் அழைக்கப்படுகிறது) நான்காவது மாநாட்டில் லெனின் கடைசியாக கலந்து கொண்டார். அவர் ஏற்கனவே தனது அரசியல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவிருந்த தொடர்ச்சியான பக்கவாதங்களின் முதல் தாக்கத்தை அனுபவித்தார். ஒரு மாதம் கழித்து, 1922 டிசம்பரில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குள் ஏற்பட்ட அரசியல் மோதல் 1923 அக்டோபரில் இடது எதிர்ப்பை ஸ்தாபிக்க வழிவகுத்தது. ஸ்ராலினின் எழுச்சியால் எடுத்துக்காட்டப்பட்ட அதிகாரத்துவமயமாக்கலும் அரசியல் பிற்போக்குத்தனமும் நிரந்தரப் புரட்சியின் மூலோபாயத்தையும் உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கையும் நிராகரிக்க வழிவகுத்து, 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற மார்க்சிச-விரோத தேசியவாத வேலைத்திட்டத்தையும் ஏற்றுக்கொண்டது.

சோசலிச சர்வதேசியவாதம் இந்த தேசியவாதத்தால் தூக்கியெறியப்பட்டமை கம்யூனிச அகிலத்திற்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் சோவியத் ஒன்றியத்துக்குமே பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியது. டிசம்பர் 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர சாராம்சத்தினதும், ஒரு தேசியவாத பாதையினால் சோசலிசத்தை அடையலாம் என்பதுடன் தொடர்புடைய அனைத்து கருத்தாக்கங்களின் இறுதி அழிவுகரமான நிரூபணமாகும்.

ஆயினும்கூட, ட்ரொட்ஸ்கியின் மாபெரும் தத்துவார்த்தப் பணியின் மரபு, அவர் 1938 இல் நிறுவிய நான்காம் அகிலத்தால் தொடரப்பட்டு, இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டின் புரட்சிகர சோசலிச வரலாற்றில் ட்ரொட்ஸ்கி உயர்ந்த நபராக இருக்கிறார். அக்டோபர் 20, 1922 இன் உரை அவரது அரசியல் சிந்தனையின் சிறந்த முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட இந்த உரைக்கு இன்னும் வயதாகவில்லை. (ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட இந்த உரை அதன் உயிரோட்டத்தை இழந்துவிடவில்லை) இதற்கு ஒரு சொற்களஞ்சியத்தைப் பார்ப்பது கூட அவசியமில்லை. இதில் ட்ரொட்ஸ்கி பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்கிறார். அவை மிகவும் நவீன சொற்களில் புரிந்துகொள்ளக்கூடியவை. புரட்சிகரத் தலைமையின் இன்றியமையாத முக்கியத்துவம், உலக முதலாளித்துவ நெருக்கடியின் இயக்கவியல், பாசிசத்தின் அரசியல் முக்கியத்துவம் மற்றும் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான புரட்சிகர மாற்றத்தில் புறநிலை மற்றும் அகநிலை காரணிகளுக்கு இடையிலான உறவு ஆகியவை ட்ரொட்ஸ்கியின் அறிக்கையில் கையாளப்பட்டுள்ளன.

மேலும், ஒரு குறிப்பிடத்தக்க தற்செயல் நிகழ்வாகத் தோன்றக்கூடிய வகையில், ட்ரொட்ஸ்கி சரியாக லிஸ் ட்ரஸின் மோசமான பிரதமர் பதவியிழப்பின் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அதிகாரத்தில் இருந்து திடீரென வீழ்ச்சியடைந்த பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் லொயிட் ஜோர்ஜ் அக்டோபர் 19, 1922 அன்று விரைவான வீழ்ச்சியின் தாக்கங்கள் குறித்தும் கவனம் செலுத்துகிறார். நிச்சயமாக, லொயிட் ஜோர்ஜின் ஆறு வருட தலைமையை லிஸ் ட்ரஸ்ஸின் ஆறு வார கேலிக்கூத்துடன் ஒப்பிட முடியாதுதான். ஆனால் பிரிட்டனில் முதலாளித்துவ ஆட்சியின் உடனடி முறிவு மற்றும் ஒரு புரட்சிகர நெருக்கடியின் வளர்ச்சியின் அறிகுறியாகவே ட்ரொட்ஸ்கி ட்ரஸ்சின் கேலிக்கூத்தை விளக்கியிருப்பார் என்று கற்பனை செய்வது கடினம் அல்ல. இந்த நெருக்கடியில் தொழிலாள வர்க்கத்திற்குள் தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கும் பிற்போக்குத்தனமான தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் செல்வாக்கை முறியடிப்பதற்கும் மார்க்சிஸ்டுகளுக்கான ஒரு மகத்தான வாய்ப்பை ட்ரொட்ஸ்கி கண்டிருப்பார்.

ஏகாதிபத்தியத்தின் மரண வேதனையின் சகாப்தத்தில் சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தையும் தந்திரோபாயங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை கவனமாக ஆய்வு செய்வது அவசியம். ட்ரொட்ஸ்கிசம் என்பது 21 ஆம் நூற்றாண்டின் மார்க்சிசமாகும்.

Loading